Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மூவிலை - 3 | வினைப்பயன் & இலச்சினை | கிருஷ்ணா பச்சமுத்து | திகில் நாவல்

Advertisement

writerkrishna

Member
Member
மூவிலை - 3
| வினைப்பயன் & இலச்சினை |
- கிருஷ்ணா பச்சமுத்து
1172

| வினைப்பயன் |

அக்டோபர் 26, 2018. முன்னிரவு.

" இது ஒரு பொன் மாலைப் பொழுது " முடிந்து பல பாடல்களை இளையராஜா சண்முகவேலுக்காக பாடி இப்போது "சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி " என மனதை பரவசப்படுத்திக்கொண்டிருந்தார். அம்பாசிடர் திருப்போரூரை கடந்து சிறுதாவூர் நோக்கி பயணப்பட்டது. வட்டச்செயலாளர் சுப்பிரமணி மயக்க நிலையிலேயே இருந்தார். சண்முகவேலின் முகம் தெளிவாக இருந்தது. தான் செய்கின்ற வேலையில் முனைப்புடன் இருந்தார்.

ஒரு சில வாகனங்களே சாலையில் ஓடின. அதுவும் சிறுதாவூர் கடந்து காட்டூர் வனப்பகுதி நோக்கி போகையில் சாலைக்கு பளு குறைந்திருந்தது. அம்பாசிடர் மட்டுமே சென்றது. சாலையின் வலப்புறம் மரங்கள் அடர்ந்து, கானகம் கரும்போர்வை போர்த்திக்கொண்டது. உள்ளே இருப்பது, உற்று நோக்கினாலும் தெரிவது கடினம். நேராய் இரண்டு கி.மீ கடந்தவுடன் ஒரு விதமான, நல்ல வாசனை காற்றின் வழி நாசியை எட்டியது. அடுத்த சில வினாடிகளில் அம்பாசிடர் பச்சை நிற வாயிற்கதவு முன் நின்றது. காவலாளி உடனே ஓடி வந்து காலம் தாமதியாமல் கதவை திறந்தான். உள்ளே நுழைந்தவுடன் நேராய், சற்று தொலைவில் அந்த பங்களா தெரிந்தது. சாலையின் இருபுறமும் பூஞ்சோலை மணம் கமழ்ந்தது.

அம்பாஸிடர் வீட்டு வாயில் வந்ததும், எதிர்பார்த்தவளாய் சண்முகவேல் எதிரே வந்து நின்றாள், அவர் மனைவி பவளம். அவளின் முகத்தில் பதற்றமில்லாததால், வீட்டில் வேறு எவரும் இல்லையென்பதும் ப்ரணிதா உறங்கிவிட்டாள் என்பதையும் புரிந்துகொண்டு நேரே ஆகவேண்டிய வேலையை ஆரம்பித்தார்.

இருவரும் சுப்ரமணியை தூக்கிக்கொண்டு வீட்டின் கூடத்திற்கு வந்தனர். வலப்புறமிருந்த பூஜையறையுனுள் நுழைந்து இடப்புறம் திரும்பினார்கள். ஒரு செடி முளைப்பதை மரத்தில் ஓவியமாய் தீட்டியிருந்தார்கள். அதனை திறந்து, விளக்குகளுக்கு மின்னூட்டி, இருவரும் படிவழியே கீழிறங்க, இரண்டு சுழற்சிக்கு பின் பாதை, ஒரு சிறிய கதவின் முன் முடிந்தது. இருவரும் சுப்ரமணியுடன் கதவைத்திறந்து உள்நுழைந்தார்கள்.



|இலச்சினை |

நவம்பர் 18 , 2018. முன்னிரவு !

காவலர் செந்திலடமிருந்து இன்னொரு மனித எலும்புகள் கிடைத்த செய்தி கேட்டவுடன் சிலவினாடிகள் உறைந்துபோனார் மதன்ராஜ். பின்னர் சுதாரித்துக்கொண்டு, "செந்தில்... அங்க விழுந்திருக்குற எல்லா மரக்குழிகளையும் தோண்ட சொல்லுங்க.. சுந்தரத்தையும் நைட் இங்க வரச்சொல்றேன். ரெண்டு பேரும் பாத்துக்கோங்க.." அலைபேசியில் செந்திலுக்கு பதிலளித்துவிட்டு ஆணையரை அழைக்க தொடங்கினார்.

இரவு முழுக்க பணி தொடர்ந்தது. அவ்வப்போது லேசான தூறலுடன் மழை குறுக்கிட்டாலும் வைகறை மூன்று மணிக்கு அனைத்து குழிகளும் தோண்டப்பட்டு வேலை முடிந்திருந்தது. இதுவரை மொத்தம் பதினொன்று மனித எலும்புகள் கிடைத்திருந்தன. மேலும் சில காவலர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். சுந்தரம் குழிகளில் கிடைத்த அனைத்து பொருட்களையும் தனித்தனி நெகிழிப்பைகளில் எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டு, காலையில் ஆய்வுக்கு அனுப்ப தயாராக வைத்திருந்தார். வைகறை 4.30 மணியளவில் சுந்தரமும் செந்திலும் மற்ற காவலர்களை பணியில் விட்டு உறங்க சென்றனர்.

நவம்பர் 19 , 2018. காலை !

மதன்ராஜ் காலை ஏழரை மணிக்கு சண்முகவேல் இல்லமான பசுந்தோகைக்கு வந்தார். சுந்தரமும் செந்திலும் மணி எழிற்கே வந்துவிட்டார்கள். மதன்ராஜ் வந்ததும் மயிலப்பனை அழைத்துவருமாறு செந்திலிடம் கூற முயல, மயிலப்பனே எதிர்பட்டார்.

"இப்போ ஏதாவது வேலையா போறீங்களா?"

"இல்ல சார்.. யாரு வந்துருக்காங்கனு ஐயா பாக்க சொன்னாங்க. அதான் "

"சரி என் கூட வாங்க.." அழைத்துவிட்டு, வீட்டின் இடது பக்கமாக நடக்க தொடங்கினார்.

வீட்டைச்சுற்றி பாதை அமைத்து, மழைநீர் எங்கும் தேங்காமல் கிணற்றிற்கு செல்வதற்கு ஏற்ப வழிவகை செய்யப்பட்டிருந்தது.

"நீங்க வேலைக்கு வர்றதுக்கு முன்னாடியே இங்க எல்லா மரங்களும் வச்சாச்சுல..?"

"எல்லா மரங்களும் இல்லையா.. வீட்டை சுத்தி இருக்கிறதெல்லாம் வச்சாச்சுங்க.. மத்ததெல்லாம் நானும் அய்யாவும் வச்சதுங்கய்யா.. நான் பொறந்த ஊர்ல நிலத்தை வித்து தொழில் பண்றேன்னு எல்லாம் நஷ்டமாகி பொண்டாட்டி செத்து, குழந்தையும் இல்லாததால நமக்கென்னன்னு எதோ ஒரு பஸ் ஏறி இங்க வந்து தெய்வ செயலாக அய்யாவை பாத்தேன். வேல கொடுத்து நண்பனா பாத்துக்கிட்டார். ஆனா ஒரு வருஷம் தான் என்கூட இருந்தார்." சொல்லிக்கொண்டிருந்த போதே அவர் விழிகள் மடை திறந்து நீருக்கு வழிவிட்டன.

"நான் இவ்வளவு உங்ககிட்ட கேக்கவே இல்லையே..!"

"எனக்கு இங்க நடக்குறது பாத்து, 'நம்ம ஐயாவோட நிலத்துல இப்படியா'னு ரொம்ப மனசு ஒரு மாதிரி இருந்துச்சு.... சோறு கூட இறங்கல" தழுதழுத்தார்.

"உங்க அய்யாவுக்கு முன்னாடி இந்த நிலத்தை யார் வச்சிருந்தா?"

"அது எனக்கு தெர்ல சார்... சண்முகம் அய்யாக்கு தெரிஞ்சாலும் தெரிஞ்சுருக்கலாம் .."

வீட்டை ஒரு சுற்று சுற்றி மீண்டும் வாயிலுக்கு வந்திருந்தனர்.

"அவர் உள்ளதான இருக்கார் ?"

"ஆமா சார்..."

இருவரும் உள்ளே செல்ல, கூடத்தில் சண்முகவேல் தேநீரோடு அமர்ந்திருந்தார்.

"நான் தான் எனக்கு தெரிஞ்சத ஏற்கனவே சொல்லிட்டனே..! கொஞ்ச சீக்கிரமா இதுக்கு ஒரு எண்டு கார்டு போடுங்க.. அப்பா ஆசையா வாழ்ந்த இடம்.. இதுல இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்திருக்க வேணாம்." வேதனையுடன் சண்முகவேல் முடித்தார்.

"என்ன..? எல்லாரும் என் மைண்ட அப்டியே ரீட் பண்றீங்க...! பட் நான் கேட்க வந்தது, 'உங்க அப்பாவோட ரூம பார்க்கலாமா?' அவ்வளவுதான்." சிரித்தார் மதன்.

"கூட்டிட்டு போங்கண்ணே..." சொல்லிவிட்டு அருகிலிருந்த சாளரத்தின் வழியே விழியினை தேட விட்டார் சண்முகவேல். வேதனை இன்னும் முகத்திலிருந்து கலையவில்லை.

மயிலண்ணன் ஓடிப்போய் அறைத் திறவுகோலை எடுத்து வந்து, "இந்த பக்கமா சார்..." எனச்சொல்லி வலப்பக்கமாக சென்று அச்சிறு அறைக்கதவை திறந்தார். பின்தொடர்ந்தார் மதன்.

உள்ளே நுழைந்தவுடன் பத்தடி தள்ளி இன்னொரு கதவு இருந்தது. இடப்பக்க சுவற்றில் விதையொன்று முளைவிட்டு, மண்விட்டு மேலெழும்புவதாய் வண்ண ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. வலப்பக்கம், மேலெழும்பும் படிக்கட்டுச் சுருளின் வாயிலிருந்தது. எதிர்ப்பட்ட கதவினை திறக்கச்சென்ற மயிலப்பனிடம்,

"இந்த படி எங்க போகுது?"

"மேல ஒரு ரூம் இருக்கு சார்.. அவர் அதிகமா அங்க தான் இருப்பார். பெட்ரூம் கீழ இருக்கு.."

"இங்க போலாம்" சொல்லிவிட்டு முன்னே சென்றார் மதன்.

இரண்டு சுருளில் தன்னை முடித்துக்கொண்டு வெளிக்கு வழிவிட்டது, அந்த படிக்கட்டுச் சுருள். மேலே வந்தவுடன் நீர்ப் பருகிய காற்று குப்பென்று மதனின் முகம் கடக்க, குளிர் அவரின் பாதம் வரைப் பரவியது. சுற்றிப்பார்த்தார். கண்கண்ட தூரம் வரை பசுமை. ஆனால் நிறைய மரங்கள் மரணித்திருந்தன. வேதனை லேசாய் அவரைப்பற்றுமுன், திடீரென எதையோ கண்டது போல் முகத்தில் ஒரு விழிப்பு வந்தது. மதனுக்கு நேரே, அவர்கள் தோண்டிய அத்தென்னந்தோப்பு இருந்தது. மனித எலும்புகள் கிடைத்த ஒவ்வொரு குழிகளும் ஒரு குறியீட்டால் குறிக்கப்பட்டிருந்தது. தோப்பின் இடப்புறமிருந்து ஒவ்வொரு குறியீட்டின் வழியே கற்பனைக்கோட்டை துவங்கி, அனைத்து குறியீடுகளையும் இணைத்துப் பின் துவக்கப் புள்ளியில் முடித்தார். சில இடங்களில் குறியீடுகளுக்கிடைப்பட்ட தூரம் மற்றவற்றை நோக்கும்போது அதிகமாக இருந்தன. காரணம் கண்டார். இடையில் சில மரங்கள் விழாதிருந்தன. அந்த இடத்தில் குழி தோண்டப்படவில்லை. விழாத மரங்களை குறியீட்டுப் புள்ளிகளாக்கி, மீண்டும் கற்பனைக் கோடு வரைந்தார். மிகச்சரியாய் அனைத்துப் புள்ளிகளும் பொருந்தி, ஒரு இலையின் வடிவம், மதன் கண்முன்னே நின்றது.





தொடரும்...

அடுத்த அத்தியாயம் 23 ஜூன் 2020 அன்று!
`````````````````````````````````````````````````````````````````````
இந்த அத்தியாயம் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.
பகிருங்கள்! விமர்சியுங்கள்! மதிப்பீடளியுங்கள்!
ஆதரவிற்கு நன்றிகள்!!!
*வினை மட்டுமே உயிர்*
- கிருஷ்ணா பச்சமுத்து
 
Top