Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாப்பிள்ளைக்கு வந்த யோகமடா‌ - 4

Advertisement

Viswadevi

Active member
Member
Hi friends thanks for your lovely comments ❤️ and support

1814

அத்தியாயம் -4

நாட்கள் வேகமாக செல்ல… ஹரிணியின் பிறந்தநாளும் நெருங்கியிருந்தது.

எப்போதுமே, ஹரிணி பிறந்தநாள் வருகிறது என்றால், எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று பெரிய லிஸ்ட்டே வைத்திருப்பாள்.

அவளுடைய காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரையும் பார்ட்டிக்கு அழைப்பாள்.

ஆனால் இந்த வருடம், கூட்டம் சேர்க்க வேண்டாம் என்று, அவளே யாரையும் இன்வைட் பண்ணவில்லை.

'ஆனாலும் ஏதோ ஒன்று அவளிடம் குறையுதே, 'என்று மங்கை யோசித்துக் கொண்டிருந்தாள்.

"என்னம்மா யோசனை பலமா இருக்கு. எந்த கோட்டையை பிடிக்க இந்த யோசனை?" என தனது தாயின் தோளை குலுக்கினான் அரவிந்த்.

ஹாங் என யோசனையிலிருந்து விடுபட்ட மங்கை, "என்னடா வேணும் உனக்கு?"

"ம், எனக்கு எதுவும் வேண்டாம் மா... நீ என்ன யோசிச்சிட்டு இருக்கே?"

"அது ஒன்னுமில்லை டா… ஹரிணியை பத்தி தான் யோசிட்டு இருந்தேன்…"

"குட்டிமாக்கு என்ன?" என குழப்பத்துடன் வினவ…

"அது ஒன்னுமில்லை டா… அவ பிறந்தநாள் வந்தா, எப்படி எல்லாம் கொண்டாடணும் என்று ப்ளான் போட்டுட்டே இருப்பா… இப்ப என்னவென்றால் யாருக்கு வந்தோ விருந்தோ, என்று சிவனேனு இருக்கிறா…

நாளைக்கு பார்ட்டிக்கு என்ன மெனு சொல்லலாம் என்று அப்பா, அவக் கிட்ட கேட்டார். உங்க இஷ்டப்படி செய்யுங்க டாடி என்று சொல்லிட்டு போயிட்டே இருக்கிறா… ஷாப்பிங்கும் டெய்லி போயிட்டே இருப்பா… இப்போ என்னன்னா, இங்க வந்த மறுநாள் போனதோட சரிடா…"

அதுவரை தன் தாய் கூறியதை கவலையுடன் கேட்டவன், கடைசியாக மங்கை கூறியதை கேட்டு, அடக்கமாட்டாமல் நகைக்க ஆரம்பித்தான் அரவிந்த்.

"டேய் அரவிந்த்…"

"ஐயோ! மா… அவ தான் ஒரு மாதத்திற்கு பண்ண வேண்டிய ஷாப்பிங்க ஒரே நாளில் முடிச்சிட்டாளே… நம்ம கடையோட, ஒன் டே ப்ராபிட்ட ஸ்வாகா பண்ணிட்டா… இதுல டெய்லி ஷாப்பிங் பண்ணவில்லை என்று வேற உனக்கு கவலை… "

"டேய் போடா… குழந்தையை கிண்டல் பண்ணுவதே உனக்கு வேலையாக போய் விட்டது… நம்ம கடையில அவளுக்கும் ஈகுவல் ஷேர் இருக்கு தெரியும் தானே… அதுவும் இல்லாமல் இப்பொழுது பொண்ணுங்களுக்கும் சொத்துல உரிமை இருக்கு என்று சட்டம் சொல்லுது தெரியுதா…"

"தெய்வமே நீங்க நல்லா நியூஸ் பாக்குறீங்க, பேப்பர் எல்லாம் படிக்கிறீங்க என்று தெரியுது. சட்டத்தில் இல்லை என்றாலும், என் தங்கைக்கு எல்லாவற்றிலும் உரிமையுண்டு. முதல்ல அவளை கடைக்கு வர சொல்லுங்க படிச்சிட்டு, இப்படி கடைக்கு வராமல் இருக்குறா…"

"இப்ப தானே கல்யாணம் ஆகி இருக்கு… கொஞ்ச நாள் கழித்து வருவா டா… இப்போ என் கவலை என்னவென்றால், நாளைய பார்ட்டிக்காக, அவளோட புகுந்த வீட்டில் எல்லோர்க்கும் டிரஸ் எடுத்துட்டு வந்தால்ல, அதை இன்னும் கொண்டு போய் கொடுக்கல... எல்லாரையும் இன்னும் இன்வைட் பண்ணல... என்னதான் பண்றது இந்த பொண்ணு வச்சிக்கிட்டு… "

"சரி மா… நீ கவலைப்படாதே, டிபன் எடுத்து வை… நான் போய் அவளக் கூட்டிட்டு வர்றேன்… நான் கடைக்கு போகறதுக்கு முன்பு, அவளை அவங்க வீட்டில் விட்டுட்டு போறேன். அவ பொறுமையாக வரட்டும்" என்றவன் விடுவிடுவென மாடிக்கு சென்று ஹரிணியின் அறைக் கதவை தட்டினான்.

ஒன்றும் பதில் வராமல் இருக்கவே, மெல்ல உள்ளே நுழைந்தான்.

அவளோ, ஏதோ யோசனையுடன் அமர்ந்து இருக்க…

அரவிந்த் அவளை உலுக்கினான்…

"அரவிந்தை பார்த்தவுடன் பதற்றத்துடன் எழுந்து என்ன அண்ணா?" என…

"ஒன்றும் இல்லை டா… நீ என்ன யோசிச்சிட்டு இருக்கிற…"

"ஏதும் இல்லைணா… அம்மா கூப்பிட்டாங்களா?" என பேச்சை மாற்ற‌…
அவளை யோசனையுடன் பார்த்த

அரவிந்த், "ஆமாம் அம்மா உன்னை சாப்பிடக் கூப்பிட்டாங்க…"

"லூசாண்ணா நீ, இதுக்கு ஒரு ஃபோன் பண்ணியிருக்கலாம்… இதற்காகவா திரும்பவும் மாடி ஏறி வந்த?"

"சொல்ல மாட்ட நீ… நான் எத்தனை ஃபோன் பண்ணியிருக்கேன் பார்" என முறைத்துக் கொண்டே சொல்ல…

"நாக்கை கடித்தவள் சாரிணா ஃபோனை சைலண்ட்ல போட்ருக்கேன். நீ போண்ணா… நான் இதோ வந்துடுறேன், என்றவள் அவசரமாக தலைவாரினாள்."

" ஹரிணி அப்புறம்,உன் மாமியார் வீட்டுக்கு போகணுமா… நான் கடைக்கு போகும் போது ட்ராப் பண்ணவா?

"ம் சரிண்ணா."என மெல்லிய குரலில் கூறினாள்.
இதுவரை இருந்த உற்சாகம் வடிந்தது. 'அவளது குழப்பத்திற்கு காரணம், அவளது ஆருயிர் கணவர் தான் காரணம். ஆம், அவள் நந்தனை உயிருக்கு உயிராக நேசிக்கிறாள். அவளது தோழியின் வாயிலாக அவனைப் பற்றி அனைத்தும் அறிவாள். ஆனால் அவனுக்கு, அவளைப் பிடிக்குமா?என்பது அவளுக்கு புரியவில்லை. ஒரு நேரம் பிரியமாக இருப்பவன், சில நேரம் எல்லாருக்கும் முன்பு அலட்சியப்படுத்துவான்‌. இதோ, அம்மா வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகிறது. ஒரு ஃபோன் கால் இல்லை. இதோ, இன்று அங்கு செல்ல வேண்டும், எப்படி அவனை ஃபேஸ் செய்வது என்று தான் தெரியவில்லை. இதற்காகவே பிறந்தநாளிற்கு அழைப்பதை தள்ளிப் போட்டாள். இனி தவிர்க்க முடியாது' என நினைத்தவள் பெருமூச்சுடன் கீழே இறங்கினாள்.

"வா ஹரிமா… உனக்காக அம்மா பொங்கல் செய்து இருக்கிறேன். சூடா இருக்கு சாப்பிடுமா… சாப்பிட்டுட்டு மாமியார் வீட்டுக்கு எடுத்து போக வேண்டிய திங்க்ஸ்ஸெல்லாம் பேக் பண்ணி வச்சு இருக்கீயா?... "

"ம் எல்லாம் ரெடியா இருக்கு ‌மா."

"சரி மா… சாப்பிட்டு விட்டு அண்ணாவோட போயிட்டு வா… லஞ்ச்க்கு வந்திருவியா…"

"தெரியவில்லை மா… அத்தை விட மாட்டாங்க… மாமாவையும் பார்க்கணும்ல, இந்நேரம் கடைக்கு போய் இருப்பாங்க… எப்படியும் ஈவினிங் ஆகிவிடும். சரி மா நான் கிளம்புறேன்." என்றவள், கைக் கழுவி விட்டு லக்கேஜ்ஜை எடுத்துக்கொண்டு வெளியே காத்திருந்த அரவிந்தோடு புறப்பட்டாள்.

அவர்களது கார் உள்ளே நுழைந்ததோ, இல்லையோ வாகினி ஓடி வந்து ஹரிணியை கட்டிக் கொண்டாள்.

"ஹேய் ஹரிணி எப்படிடி இருக்குற? ஓ, சாரி... சாரி... அண்ணி எப்படி இருக்கீங்க? அம்மா பேர் சொல்லி கூப்பிடக் கூடாது என்று சொல்லியிருக்காங்க… " என்றவள் அப்போது தான் அங்கு நின்றுக் கொண்டிருந்த அரவிந்தை பார்த்ததைப் போல, "அச்சோ வாங்கத்தான் உங்களை கவனிக்கவே இல்லை." என அரவிந்தைப் பார்த்துக் கூறி கண்ணடித்தாள்.

'அவளது தைரியத்தைப் பார்த்து வியந்தவன், அடிப்பாவி என வாயசைத்தான். பின்னே இவர்கள் வருவதைத் தான் இவன் ஃபோன் பண்ணி அவளுக்கு
சொல்லியிருந்தானே. இல்லையென்றால் அவள் வெளியே வந்து காத்திருக்க மாட்டாளே. அவர்களது நகைக்கடைக்கு அல்லவா கிளம்பியிருப்பாள். ம் நல்லா நடிக்கறா…' என மனதிற்குள் எண்ணியவன் வெளியேவோ, இல்லை இனி எனக் கூற வந்தவன் தொண்டையை செருமிக் கொண்டு, கடைக்கு டைமாயிடுச்சு இன்னொரு நாள் வரேன் வாகினி எனத் தடுமாறி முடித்தான்.

இவர்களது பேச்சையும், ரகசியப் பார்வைகளையும், தடுமாற்றத்தையும் கவனிக்காமல் தன் போக்கில் காரிலிருந்து லக்கேஜ்களை எடுத்துக் கொண்டிருந்தாள் ஹரிணி.

அப்போது தான், தன் அண்ணன் கிளம்புவதை கவனித்தவள், "ஏன் ணா உள்ள வரவில்லையா?" என வினவ.

"இல்லை டா… கோயம்புத்தூர் மில்லில் இருந்து ஆள் வருவாங்க… பதினொரு மணிக்கு மீட்டிங்…"

"ஓ… சொல்லியிருந்தால் நானே வந்திருப்பேனே. சரி ணா நீ கிளம்பு…" என்று அனுப்பியவள் தோழியுடன் உள்ளே நுழைந்தாள்.

அதற்குப் பிறகு நேரம் அங்கிருந்த பெண்களுக்கு இறக்கை கட்டி பறந்தது. ஆண்கள் கடைகளுக்குச் சென்று விட சற்றுப் பொறுத்து தான் வாகினி கடைக்குச் செல்லுவாள். யாமினிக்கு கடைக்கு செல்வதில் நாட்டம் இல்லை.

அவள் வீட்டில் அவளுடைய அத்தையுடன், வீட்டு நிர்வாகத்தில் கவனம் செலுத்தினாள்.

வீட்டில் உள்ள நான்கு பெண்களும் ஹரிணி எடுத்துட்டு வந்து இருந்த லக்கேஜ்களை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வாகினி தான், "ஏன் அண்ணி… ஒரே பிங்க் கலர்லேயே பர்ச்சேஸ் பண்ணியிருக்க யாருக்கு?"என விசாரிக்க…

" நாளைக்கு என்னோட பர்த்டே. ஈவினிங் பார்ட்டி ஏற்பாடு பண்ணியிருக்காங்க. அதுக்கு தான் எல்லோருக்கும் டிரஸ் எடுத்திருக்கேன். ஒரே கலர் தீம் செலக்ட் பண்ணியிருக்கேன் . பிடிச்சிருக்கா அத்தை என அவர்களுக்கு எடுத்த பிங் நிற சாஃப்ட் சில்க் சேரியையும், அதே நிறத்தில் அவளுடைய மாமாவிற்கு எடுத்த குர்த்தாவையும் காட்ட… "

"சூப்பர் டா… எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... இந்த கலர் என்கிட்ட இல்லாத கலர் செம்மையா இருக்குடா" என ஜானகி ஆர்ப்பரித்தாள்.

புன்னகையுடன் ஹரிணி, அவர்கள் மூவருக்கும் எடுத்திருந்த லாங் ஃப்ராக்கை காட்ட… வாகினி வாவ் என…
யாமினியோ, யோசனையுடன் இருந்தாள்.

அவளது யோசனையைப் பார்த்த ஹரிணி, " ஏன் கா… உங்களுக்கு பிடிக்கவில்லையா… ஒன்றுமே சொல்லலை. " என…

" ஸ்டைல் லுக் பொட்டிக்ல எடுத்தது தானே… யுனிக்கா நல்லா இருக்கு.
என்னுடைய யோசனையே வேற… நந்தனுக்கு இந்த கலர் பிடிக்காது என்று நினைக்கிறேன்…"

"ஓ… அவருக்கு பிடிக்காதா…" என முணுமுணுத்தவளின் கைகளில், அவனுக்காக எடுத்திருந்த மெரூன் கோட், பிங்க் நிற ஷர்ட் வீற்றிருந்தது.

" அண்ணி... அண்ணனுக்கு இந்த கலர் பிடிக்காது என்று உங்களுக்கு எப்படி தெரியும்?"என வாகினி கேட்க…

"போன வருஷம் தீபாவளிக்கு ஒரு பிங்க் கலர் லெஹங்கா போட்டிருந்தியே, அப்போ இந்த கலரெல்லாம் ஏன் எடுக்கிற… இது உனக்கு நல்லா இல்லை என்று சொல்லி, நந்து திட்டினானே... அப்புறம் புடவைக் கட்டினியே ஞாபகம் இல்லையா"

"ஆமா… ஹரிணி" என வாகினி தடுமாற…

"நான் அவன் கிட்ட பேசுறேன்… முதல் முதலாக நம்ம ஹரிமா எடுத்திருக்கிறா… எதுவும் சொல்லாதீங்க… இதெல்லாம் எடுத்து வைத்து விட்டு பேசிட்டு இருங்க… குடிக்க ஜுஸ் குடுத்து விடுறேன்" எனக் கூறிய ஜானகி கிட்சனுள் நுழைந்தாள்.

அதற்குப் பிறகு என்ன, மூவரும் கீழே இருந்த அறையினுள் நுழைந்து கொட்டம் அடித்தனர்.

மதிய உணவின் போது, தன் மாமாவையும் பார்த்து நாளைய பார்ட்டிக்கு அழைத்து விட்டாள். இன்னும் தன்னில் சரி பாதியான கணவனை மட்டும் காணவில்லை.அவனுக்கு இன்று வேலை அதிகம் போல், இன்னும் மதிய உணவிற்கே வரவில்லை.

பொறுத்துப் பொறுத்து பார்த்த வாகினி,"ஹரிணி… அண்ணா வந்தா அம்மா கூப்பிடு வாங்க, நீ வா என தனதறைக்குள் மீண்டும் அழைத்துச் சென்றாள். யாமினி ஏற்கனவே தனது அறைக்கு சென்று விட்டிருந்தாள்."

நீண்ட நாட்களுக்கு பிறகு, குழப்பம் இல்லாமல் ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்த ஹரிணி, இப்பொழுது மீண்டும் குழப்பத்தோடு இருந்தாள். வாகினி முடிந்தவரை பேச்சு கொடுத்து அவளது மனதை மாற்ற முயற்சித்தாள். பலன் தான் இல்லை. இது வேலைக்காகாது என்று அவள் உறங்க ஆரம்பித்து விட… ஹரிணி பழைய நினைவுகளில் ஆழ்ந்தாள். திடீரென நந்தனின் குரல் கேட்கவும் வேகமாக, வெளியே வந்தவள், அவனின் பேச்சைக் கேட்டு சிலையென சமைந்தாள்.

தொடரும்….
 
Top