Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மழைக்கால மேகங்கள்!-1

Advertisement

praveenraj

Well-known member
Member

மழைக்கால மேகங்கள்!
கோயம்புத்தூர் சந்திப்பு, மணி இரவு பத்து மணி.

இரவு பத்து ஐம்பதுக்கு புறப்படவிருக்கும் கோவை டு சென்னை விரைவு ரயிலுக்காக வந்தவர்கள் அடித்துப்பிடித்து ஜெனரல் கம்பார்ட்மெண்டில் இருக்கையைப் பிடித்து அமர்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. புறப்பட தாமதமானதால் உணவை பார்சல் வாங்கிக்கொண்டு வந்திருந்தவர்கள் அதைப் பிரித்து உண்ண ஆரமித்தனர். தன் எதிரே இருந்தவரின் முகத்தில் எந்த உணர்வுகளும் இல்லாமல் போக அவர் என்ன நினைக்கிறார் என்று புரியாது தவித்தான் பொன்வண்ணன். இட்லியைப் பிரித்தவன் அதற்கு சாம்பாரை ஊற்றும் முன் தன்னிடமிருந்த சக்கரையை எடுத்து அவனுக்கு நீட்டினார் கிரிஜா. ஏனோ அதைப் பார்த்ததுமே அவன் முகம் அஷ்டகோணலாக மாற அவனை தீர்க்கமாகப் பார்க்கும் அன்னையிடம் ஏதும் பேச முடியாமல் அந்த சக்கரையைத் தொட்டு இரண்டு வாய் வைத்தவனுக்கு மேற்கொண்டு சாப்பிட பிடிக்கவில்லை. இரண்டு இட்லியோடு நிறுத்திக்கொண்டவனை முறைத்தவர்,

"ஒழுங்கா எல்லாத்தையும் சாப்பிட்டு முடிகிற வண்ணா..." என்றவரின் குரலில் அப்பட்டமாகவே கடுமை குடிகொண்டிருந்தது.

"நானும் ஒரு வாரமா இதைத்தான் சாப்பிடுறேன். எனக்கு சாப்பிடவே பிடிக்கல..."

"ஊருக்குப் போனதும் நம்ம வைத்தியரிடம் ஒரு முறை காட்டிட்டா எல்லாம் சரியாகிடும். அது வரை உனக்குப் பத்திய சாப்பாடு தான்"

"அம்மா அதான் டாக்டரே சரியாகிடுச்சினு சொல்லிட்டாரே?"

"உனக்கு எதுவும் தெரியாது. அம்மா சொல்றதை மட்டும் செய்" என்றவர் மேற்கொண்டு அவனிடம் பேச்சுக்கொடுக்க விரும்பாது தன் உணவில் கவனம் செலுத்த அவரிடம் எதிர்த்துப் பேசவும் மனமில்லாமல் அவர் சொல்வதைக் கேட்கவும் பிடிக்காமல் திண்டாடினான் பொன்வண்ணன்.

சிறுவயதில் பிடிக்காததை அவனிடம் கொடுத்தால் அதைச் சாப்பிடாமல் தட்டில் கோலம் போட்டு பொழுதைக் கழிப்பான். சிறிது நேரத்தில் மனம் பொறுக்காமல் கிரிஜா அவனுக்கு ஊட்டி விடுவார். ஒருவேளை இதைப்பற்றி ஜெயசீலன் அறிந்துகொண்டால் உடனே ஹோட்டலில் இருந்து பரோட்டாவோ சப்பாத்தியோ வந்துவிடும். சமயங்களில் பரோட்டா சாப்பிட திட்டமிட்டு வேண்டுமென்றே தந்தை வரும் வரை தட்டில் கோலம் போட்டுக்கொண்டிருப்பான். ஒரே மகனென்று அதிகப்படியான செல்லம் கொடுத்து வளர்த்தது தவறோ என்று யோசனையில் இருந்தார் கிரிஜா.

"அம்மா ட்ரைன் எடுக்கப் போறாங்க. நான் போய் எதாவது புக்ஸ் வாங்கிட்டு வரேன்..." என்று அவன் எழ,

"ஒழுங்கா படுத்து ரெஸ்ட் எடு வண்ணா. இப்போ தான் உன் உடம்பே கொஞ்சம் பரவாயில்லாம இருக்கு. டாக்டர் என்ன சொன்னாருனு ஞாபகம் இருக்கா? கண்ட நேரத்துக்குச் சாப்பிட்டு ஒழுங்கா தூங்காம உன் உடம்பு ரொம்ப கெட்டுப் போயிருக்காம். உன்னைத் திரும்ப பழைய படி மாத்தணும் வண்ணா. எனக்குனு இருக்குறது நீ ஒருத்தன் மட்டும் தான்..." என்று இறுதியில் அவர் வார்த்தை உள்ளே போக,

"ம்மா நான் என்ன கேட்டுட்டேன்னு நீ இப்போ ஒப்பாரி வெக்க ஆரமிச்சுட்ட? இதுக்குத் தான் நான் இங்கேயே இருக்கேன்னு சொன்னேன். இதெல்லாம் சும்மா மா. ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்திருந்தாலே எல்லாம் சரியாகி இருக்கும். உன்னால நான்..." என்றவன் அவர் தற்போது பேசியதற்கே அவர் இமைகளில் தேங்கியிருந்த நீரைக்கண்டு ஏதும் பேசாமல் கீழே இறங்கி சில ஆங்கில நாவல்களை வாங்கி வந்தான்.

'ஏங்க நான் கொஞ்சம் முன்னாடியே இவனை ஊருக்குக் கூட்டிட்டுப் போயிருக்கணுமோ? இல்ல தேனு சொன்ன மாதிரி நான் இவன் கூடவே வந்து தங்கியிருக்கணுமோ?' என்று ஏக்கப் பெருமூச்சினை விட்டவர் அதற்குள் புறப்பட தயாரான ரயில் தனது அறைகூவலை விடுக்கவும் இன்னும் உள்ளே வராமல் இருந்த மகனை எண்ணி அஞ்சியவர் இருக்கையிலிருந்து எழுந்து வாயிற்கதவை நோக்கி வரவும் பொன்வண்ணன் ரயிலில் ஏறவும் சரியாக இருந்தது.
"என்னம்மா ஏதாவது வேணுமா?" என்று கேட்டவனிடம் பதிலளிக்காமல் ரெஸ்ட் ரூமிற்குள் சென்றார் கிரிஜா. பின்னே அவனைக் காணாமல் பரிதவித்தவரின் உணர்வுகளைக் கூடப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கும் மகனை எண்ணி அழாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.
அங்கிருந்து அவர் இருக்கைக்கு வருவதற்குள் தான் வாங்கிவந்த பிஸ்கட் பேக்கட்டை பிரித்து உண்டு கொண்டிருந்த மகனைக் கண்டு என்ன சொல்வதென்று புரியாமல் அப்படியே நின்றார் கிரிஜா.

"ஏம்மா தூக்கம் வருதா என்ன? நான் வேணுனா அப்பர் பர்த்க்கு ஷிப்ட் ஆகிடட்டுமா?"
"இப்போ தானே இட்லி சாப்பிட்ட? மணி பதினொன்னு ஆகப் போகுது. இப்போ போய் எதுக்கு பிஸ்கட் சாப்பிடுற? நான் இருக்கும் போதே நீ இப்படி எல்லாம் செஞ்சா நான் இல்லாத அப்போ நீ எப்படி இருந்திருப்ப?" என்றவரின் குற்றம் சாட்டும் பார்வை ஏனோ பொன்வண்ணனுக்கு எரிச்சலை மூட்ட கோவமாக அப்பர் பர்த் நோக்கி ஏறினான்.

அன்னையால் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு தன்னுடைய படிப்புக்கும் வாழ்க்கை முறைக்கும் துளியும் பொருத்தமில்லாத ஒரு பட்டிக்காட்டுக்குச் (அவனைப் பொறுத்த வரை அது பட்டிக்காடு தான்) சென்று கொண்டிருக்கிறான். இது மட்டுமா? அவன் இவரால் நிறைய இழந்துவிட்டதாக எண்ணி கோவத்திலும் இருக்கிறான்.

ஒன்று தன்னை மிரட்டி காரியம் சாதிப்பது இல்லை என்றால் அழுது எமோஷனல் அட்டாக் செய்ய வேண்டியது என்று அன்னையின் செயல்களை எண்ணி உள்ளுக்குள் புலம்பினான். ஏதேதோ யோசனையில் படுத்தவனுக்கு அடுத்த சில மணித்துளிகளில் உறக்கம் தழுவியிருக்க கீழே அவன் அன்னைக்கோ தன் தலை மீது இருக்கும் பாரத்தை எண்ணி உறக்கம் வராமல் தவித்தார்.

பொன்வண்ணனுக்கு இருபத்தி ஒன்பது வயது முடியும் தருவாயில் இருக்கிறது. முப்பதுக்குள் திருமணம் முடித்துவிட வேண்டும் என்று கனவு வேறு கண்டிருந்தார் கிரிஜா. இன்னும் தெளிவாகச் சொல் வேண்டுமென்றால் இருபத்தி ஐந்தில் அவனுக்காகப் பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்கியும் விட்டார். ஆனால் திருமணத்தைப் பற்றிப் பேச்சை எடுக்கும் போதே திடமாக அவன் மறுத்துவிட கொஞ்சம் விட்டுப் பிடிப்போம் என்று காத்திருந்தவருக்கு அவனது காதல் ஒரு அதிர்ச்சியாக வந்திருக்க அதற்குப் பிறகு என்னென்னவோ நடந்து இன்றும் திருமணம் ஆகாமலே இருக்கிறான். அப்போது கிரிஜாவுக்கு வெங்கடேஷின் நினைவு வர கடந்த வாரம் அவனுக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது என்றும் அதுவும் மூத்த மகளுக்குப் பிறகு மகன் பிறந்த மகிழ்ச்சியில் தன் வீட்டிற்கு வந்து தண்டோரா போட்டுச் சென்ற சசிகலா இறுதியில் பொன்வண்ணனைப் பற்றி எள்ளலாகப் பேசி கிரிஜாவின் மனத்தாங்கலை மேலும் அதிகப்படுத்திச் சென்றது தான் தற்போது அவர் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு யோசனைக்கிடையில் அவரையும் அறியாமல் மேலே பார்க்க அங்கே தனக்கிருக்கும் கவலையில் நூற்றில் ஒரு பங்கு கூட இல்லாமல் நிம்மதியாக உறங்கும் மகனை எண்ணி அழுவதா இல்லை சிரிப்பதா என்று புரியாமல் இருந்தார் கிரிஜா.

எவ்வளவு நேரமென்று தெரியாமல் அப்படியே இருந்த கிரிஜா மணி பனிரெண்டை நெருங்கிவிட்டது என்று அறிந்து தன்னுடைய செல்போனை எடுத்து தான் ஒருமணிக்கு வைத்திருந்த அலாரம் சரியாக இருக்கிறதா என்று மீண்டுமொரு முறை சரி பார்த்துவிட்டு கண்களை மூடினார்.

பின்னே இரவு நேரத்தில் கோவைக்கும் சென்னைக்கும் மத்திமமான சேலத்தில் இறங்கியாக வேண்டுமே? பஸ் என்றால் கூட கண்டக்டர் கூப்பிட்டு இறக்கிவிடுவார். ரயிலில் நாமாகவே தானே இறங்கிக்கொள்ள வேண்டும்? தங்களது கம்பார்ட்மெண்டில் விளக்குகள் முழுவதும் அணைக்கப்பட்டுவிட நெஞ்சில் அணையாத ஒரு நெருப்புடன் மகனது எதிர்காலத்தை குறித்து யோசனையில் மூழ்கினார் கிரிஜா ஜெயசீலன்.


பெரும்பாலான தமிழ்நாட்டு மாணவர்களைப்போல் பள்ளிப்படிப்பை முடித்ததும் ஏன் எதற்கு என்ற கேள்வி கேட்காமல் பெற்றோர்கள் சொன்ன இன்ஜினியரிங் அப்ளிகேஷனை பூர்த்தி செய்து கவுன்செல்லிங் நாளுக்காகக் காத்திருக்க பனிரெண்டாவதில் நல்ல மதிப்பெண் எடுத்ததால் இரண்டாவது நாளே கவுன்செல்லிங் சென்றவன் கோவையின் மிகப் பிரபலமான ஜி.சி.டியில் சிவில் இன்ஜினியரிங் சேர்ந்தான். ப்ளஸ் டூவில் கஷ்டப்பட்டு படித்து நல்ல மதிப்பெண் எடுத்தால் காலேஜ் எல்லாம் ஜாலி என்று பெற்றோர் கூறியதை உண்மையென நம்பி சென்றவனுக்கு இன்ஜினியரிங் தன்னுடைய பவரை காட்டியது. இருந்தும் பெரிய சேதாரம் ஏதும் இல்லாமல் இரண்டு அரியர் பேப்பரையும் முடித்து காலேஜ் கேம்பஸ் இன்டெர்வியூவில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தான். இன்ஜினியரிங் முடித்தால் சினிமாவில் காட்டுவதைப்போல் வைட் காலர் ஜாப் கிடைக்கும் என்று ஏமாற அவனுக்கோ சைட் என்ஜினியராக பணி கிடைத்தது. கைநிறைய சம்பாதிக்கலாம் என்ற அவனது கனவெல்லாம் வேலைக்குச் சேர்ந்த இரண்டாவது மாதத்திலே மேற்படி செலவுக்கு அன்னையிடம் கேட்ட நொடியே சுக்கு நூறாக உடைந்தது. கல்லூரி காலத்தில் எந்த ஐடி கம்ப்யூட்டர் சைன்ஸ் மாணவர்களை பழம் என்று சொல்லி சிவில் தான் கெத்து மத்ததெல்லாம் வெத்து என்று கோஷமிட்டானோ இன்று அவர்கள் ஏ சி ரூமில் ஐடி டூடாக முப்பது ப்ளஸ் சம்பளம்(எல்லாம் ஆயிரங்களில்) வாங்குகிறார்கள் என்றும் இவனோ மாதம் ஒன்பதாயிரம் ரூபாய்க்கு வெயிலில் நின்று சிரமப்படுகிறான் என்று உணர்ந்த தருணம் வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிந்து கொள்ள ஆரமித்தான். வேலைக்குச் சேர்ந்த இரண்டு மாதத்தில் வீட்டிற்குச் சென்றவனின் தோற்றம் கண்ட கிரிஜா ரத்தக் கண்ணீரே வடித்தார். பின்னே கல்லூரி முதலாம் ஆண்டில் படிக்கும் போது அவன் தந்தையான ஜெயசீலனுக்கு ஜாண்டிஸ் வந்துவிட அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டதன் வினையாக மூன்று பேராக இருந்த அந்தக் குடும்பம் இன்று கிரிஜா மற்றும் பொன்வண்ணன் ஆகிய இரண்டு உறுப்பினர்களையே உள்ளடக்கியுள்ளது.
அதன் பின் அந்த வேலையை விடுமாறு கிரிஜா சொன்ன அறிவுரையை அப்படியே கேட்டவன் எம்.இ ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் சேர்ந்தான். இம்முறை தொடக்கத்திலிருந்தே நன்றாகப் படித்தவன் இரண்டாம் ஆண்டு படிப்பை முடித்ததும் ஒரு பிரபல கட்டுமான நிறுவனத்தில் ஜூனியர் என்ஜினியராக சேர்ந்து அத்துடன் தன் படிப்புக்குத் தேவையான சாப்ட்வெர் கோர்ஸையும் கற்றுத்தேர்ந்தான். அதன் நீட்சியாக இன்று கோவையில் கொடிகட்டிப் பறக்கும் சஞ்சீவி கன்ஸ்ட்ரசன்ஸ் என்னும் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் என்ஜினீயராக வேலையில் இருக்கிறான். சாரி சாரி நேற்று வரை வேலையில் இருந்தான். இன்று அவன் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு அன்னையுடன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் வெள்ளிமலை என்னும் கிராமத்திற்குப் பயணித்துக்கொண்டிருக்கிறான்.

வெள்ளிமலை என்றதும் குமரி மாவட்டத்தில் இருக்கும் வெள்ளி மலை என்று எண்ணிவிட வேண்டாம். இது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சுற்றுலா தலமான வெள்ளிமலை. பெரியார் நீர்வீழ்ச்சி, கல்வராயன் மலை, மேகம் அருவி, கவியம் ஃபால்ஸ் முதலியவற்றை உள்ளடக்கியுள்ள ஒரு சிறிய கிராமம். சுமார் ஐம்பது அறுபது வீடுகளே இருக்கும் ஊரது. மலைகளின் இடுக்கில் ஹேர்ப்பின் பெண்ட் சாலைகள் சராசரிக்கும் குறைவான வெப்பநிலையோடு ஒரு குட்டி மலை பிரதேசமாகவே இன்றும் இருக்கிறது.
ஊட்டி கொடைக்கானல் ஏற்காடு அளவுக்கு குளிர்ச்சியாக இல்லாவிட்டாலும் சுற்றிலும் மலை அருவிகள் காடுகள் ஆகியவை இருப்பதால் அங்கு இதமான சீதோஷ்ணமே ஆட்சி செய்யும். விவசாயம் தான் பிரதான தொழில். அதுபோக சீசன் சமயத்தில் வரும் சுற்றுலா வாசிகளால் கொஞ்சம் களைக்கட்டும். அதற்கு அருகே கரியகோவில் என்னும் இடம் இருக்கிறது. இது இந்தச் சுற்று வட்டாரத்தில் பிரசித்திப்பெற்ற திருத்தலமாகும். அது போக இந்த இடத்தில் சில காஃபி எஸ்டேட்டும் உள்ளது. இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் இன்றைய பெருநகரங்களில் இருக்கும் மாசு, தண்ணீர் தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல், வானுயர் கட்டிடங்கள், மால் தியேட்டர் பப் முதலிய எதுவும் தங்களை நெருங்கி விடா தூரத்தில் இயற்கை இயற்கையாக இயற்கை அன்னையின் மடியில் தவழ்ந்து துள்ளித் திரியும் ஒரு அழகிய பிரதேசம்.

பொன்வண்ணனுக்கு இங்கு வருவதில் இருக்கும் முக்கிய பிரச்சனையே இது தான். இறுதியாக பனிரெண்டாம் வகுப்பு விடுமுறையில் நீண்ட நாட்களை இங்கு செலவிட்டான். கிட்டதட்ட பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு. அதன் பிறகு எப்போதாவது விடுமுறைக்கு ஒன்றிரண்டு நாட்கள் வருவான். பொங்கல் தீபாவளி சமயத்தில் இன்னும் ரெண்டு நாட்கள் சேர்ந்து தங்குவான். அதும் கல்லூரி முடித்த பிறகு அவன் இங்கே வருவதே பொங்கலுக்கும் தீபாவளிக்கும் தான்.

ஒரு பத்து நிமிடம் தொடர்ந்து இடி முழங்கினாலே அவ்வூரில் மின்சாரம் துண்டிக்கப்படும். ஃபோர் ஜி முடிந்து ஃபைவ் ஜியை நோக்கி சென்றுகொண்டிருக்கும் இன்றைய தலைமுறையில் அங்கு கிடைப்பதோ டூ ஜி தான். எவ்வளவு தேடினாலும் அதே இருநூறு சொச்சம் முகங்கள் தான். ஏ.பி.டி மேக்ஸ்வெல்(கிரிக்கெட் வீரர்கள்) போல் அடிப்பவர்களுக்கு மத்தியில் வாழ்ந்தவன் டிராவிட் புஜாரா போல் அடிப்பவர்களுக்கு மத்தியில் வாழ வேண்டும் என்பதே அவன் கவலை. ஆனால் பொன்வண்ணன் ஒன்றைக் கணிக்க தவறிவிட்டான். இருபது ஓவர்கள் ஆடுவதற்கு வேண்டுமென்றால் ஏ.பி.டி மேக்ஸ்வெல் பாணி ஆட்டம் பொருந்தலாம். ஆனால் ஒருநாளைக்கு தொன்னூறு ஓவர்கள் வீதம் ஐந்து நாட்களுக்கு ஆடுவதற்கு டிராவிட் புஜாரா தான் தேவை. அது போல் வாழ்க்கையின் சின்ன சின்ன சந்தோஷங்களுக்கும் வெற்றிகளுக்கும் ஈசல் போல் அற்ப நொடி வாழ்வதற்கும் வேண்டுமென்றால் பரபரப்பான அதிரடி வாழ்க்கை முறை ஒத்து வரலாம். பூரண வாழ்க்கையை அனுபவித்து வாழ ஆமை போல் நின்று நிதானமாக தான் வாழவேண்டும். ஈசலின் ஆயுட்காலமோ ஒன்றிரண்டு நாட்கள் தான். ஆனால் ஆமைக்கோ இருநூறு ஆண்டுகள்.
பொன்வண்ணன் இங்கே தங்காததற்கு அவன் அப்பாவின் நினைவுகள் தான் காரணம் என்று முதலில் கிரிஜாவும் எண்ணிக்கொண்டிருந்தார் தான். ஆனால் அவரது எண்ணமெல்லாம் ஒரு காலை பொழுதில் கானலாய் மறைந்து போனது. எல்லா வருடமும் தந்தையின் நினைவுநாளுக்கு பொன்வண்ணன் வெள்ளிமலையில் ஆஜராகிவிடுவான். ஆனால் இரண்டாண்டுக்கு முன் அவன் வராததைக் காட்டிலும் அதற்கு அவன் சொன்ன காரணம் தான் கிரிஜாவை அதிகம் வருத்தமடைய செய்து விட்டது. காரணம் - நிஹாரிகா.

ஏதேதோ எண்ணச் சூழலில் சிக்கித் தவித்த கிரிஜாவுக்கு அவர் செல் போன் அலாரம் சிறிது முக்தி அளிக்க எழுந்தவர் மேலே பொன்வண்ணனைப் பார்க்க அவனோ இப்போதும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். ஏனோ அவனது நடவடிக்கைகளை நினைக்கையிலே ஆற்றாமையும் எரிச்சலும் புதுப்பானை பொங்கல் போல் பொங்கி வழிந்தது. அதை ஒன்றுதிரட்டி அவன் தோள்பட்டையில் ஒன்று வைத்ததும் துள்ளி எழுந்தான் வண்ணன்.

"டைம் ஆகிடுச்சு. ரெடி ஆகு. நமக்கு ஒன்றரைக்கு சின்ன சேலத்துக்கு ட்ரெயின் இருக்கு. ரெஸ்ட் ரூம் போறதுனா போயிட்டு வா..." என்றவர் முகம் அலம்ப சென்றுவிட்டார். பின் வண்ணனும் தயாராகி சேலம் சந்திப்பில் இறங்கியவர்கள் சிறிது நேரத்தில் சின்ன சேலத்திற்கு ட்ரைன் ஏறினார்கள். விடியற்காலை மூன்று மணிக்கு சின்ன சேலத்தில் இறங்கி வெள்ளிமலைக்கான பேருந்திற்காக காத்திருந்த நேரத்தில் பொன்வண்ணன் வாய்க்குள்ளே முனக,

"நம்ம அவசரத்துக்கு எல்லாம் நடக்காது. வாழ்க்கையில பொறுமையும் நிதானமும் ரொம்ப அவசியம்..." என்னும் நேரத்தில் அவர்களுக்கான பேருந்து வந்து விட அதில் ஏறினார்கள்.(மழை வருமோ?)
இதுல மூணு ஹீரோயின்ஸ். சரிதா, தூரிகா, நிஹாரிகா. யாரு ஜோடின்னு கண்டுபிடிங்க பார்ப்போம்?
clue ஹீரோயின் பேர்ல 'ரி' வரும்
 
இது புதுக்கதையா ப்ரோ ??

கதை சூப்பரா இருக்கு..... அதைவிட நீங்க கொடுத்த க்ளூ ரொம்பபபப சூப்பரா இருக்கு ???
 
இது புதுக்கதையா ப்ரோ ??

கதை சூப்பரா இருக்கு..... அதைவிட நீங்க கொடுத்த க்ளூ ரொம்பபபப சூப்பரா இருக்கு ???
Thank you so much ?. கதையொட முடிவுரைக்கு முன்னுரையிலே clue கொடுக்க தனி guts வேணுமில்ல?? கதை படிச்சு முடிச்சிட்டு review சொல்லுங்க.i'm waiting ??
 
Top