Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 29

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் இருபத்தி ஒன்பது:


மரபு வேலி 28 - AUDIO BOOK - கேட்டு மகிழுங்கள் - CLICK HERE



“என்ன சிரிப்பு?” என்று ரோஷமாய் அங்கையற்கண்ணி கேட்கவும்,
“இதென்ன, சிரிப்பு வந்தது சிரிச்சேன்”

“ம்ம், என் பின்னே சுத்தினவன் எவனையும் கண்டுகிட்டது இல்லை. அதுல எவனாவது ரொம்ப எனக்கு சாபம் விட்டிருப்பான் போல, நீ பார் உன் புருஷன் பின்ன சுத்துவன்னு. அது தான் பளிச்சிடுச்சு போல” என்று கடுப்பாக சொன்னாள்.

“உன் பின்னே சுத்தினாங்களா யார் எல்லாம்?” என்று கதை கேட்கும் பாவனையில் ஆரம்பிக்க,

“நான் உங்க கிட்ட சொன்னதில்லையா” என்று அவள் சந்தேகமாய் கேட்டாள்.

“சொன்னதில்லை” என்றான் சின்சியராய்.

“அதெல்லாம் நிறைய, ஸ்கூல்ல, காலேஜ்ல, அதையும் விட அண்ணன் ஐஏஎஸ் பேட்ச் மேட் ஒருத்தன், ஷப்பா, பைத்தியம் மாதிரி சுத்தினான். மனோக்கு அப்பாக்கு அம்மாக்கு எல்லாம் தெரியும், பொண்ணு கேட்டு வந்தான்”

“எனக்கு பிடிக்கலை சொன்னா, ஏன் பிடிக்கலைன்னு நிக்கறான்”

“அம்மாடி அவனை சாமாளிக்கறதுக்குள்ள. மனோ கூட ரொம்ப நல்லவன்ன்னு சர்டிபிகேட் கொடுத்தான். சொல்லிட்டு மனோ அடி வாங்கினான் என் கிட்ட”

“சரி ஏன் பிடிக்கலை?”

“அவனைன்னு இல்லை, எனக்கு யாரையும் பிடிச்சது இல்லை. இவனை மாதிரி ஒருத்தனை கல்யாணம் பண்ணனும்னு எனக்கு தோணினதேயில்லை”

“எனக்கு அப்படி யார் மேலயாவது இன்ட்ரஸ்ட் இருக்கு, இல்லை இப்படி தான் ஹஸ்பன்ட் வேணும்னு ட்ரீம் இருக்குன்னு இருந்திருந்தா, எங்கப்பா என் வாழ்க்கைக்கு அவர் முடிவெடுத்து இருக்க மாட்டார்”

“எங்கப்பா மாதிரி எல்லாம் யாரையும் பார்க்க முடியாது. ஐ லவ் ஹிம் சோ மச் .அவர் சொன்னாருன்னு தான் உங்களை கல்யாணம் பண்ணினேன்” என்று விட்டாள்.

பிறகு வேகமாய் நிமிர்ந்து அவன் தப்பாக எடுத்துக் கொள்வானோ என்று பார்க்க,

“அது தானே நிஜம், எனக்கு கோபமில்லை” என்றவன் “நிறைய பேர் கல்யாணம் அப்படி தான் நடக்கும்” என்றான் சிரித்துக் கொண்டே.

“நீங்க இல்லை நான் யாரை கல்யாணம் பண்ணியிருந்தாலும் பேச தான் செய்வேன். அது என்னோட இயல்பு. எனக்கு தெரியும் உங்களுக்கு எல்லோர் முன்னமும் பேசினா கோபம் வந்துடும்னு, ஆனாலும் அது வந்துடுது”

“நீங்க கண்டுக்காதீங்க” என பெரிய மனதாய் சொல்ல,

“இது வேறையா” என்றான் சிரித்துக் கொண்டே.

“ம்ம், அது தானா வருது. நான் என்ன பண்ணட்டும், உங்களை கீழ இறக்கன்னு பேசலை” என்றாள் பரிதபமாய்.

“சரி விடு, நீ பேசும் போது எனக்கு கோபம் வந்தா, தனியா இருக்கும் போது இப்படி என்னை சமாதானாம் பண்ணிக்கோ”

“அதெல்லாம் முடியாது, நீங்க என்னை பண்ணலை, அதனால நானும் உங்களை பண்ணலை” என்று பேச,

“அம்மா தாயே, உங்கப்பா பெரிய புத்திசாலி. என்னை தவிர எவனும் உன்னை சமாளிக்க முடியாதுன்னு தெரிஞ்சு வெச்சு என் தலையில உன்னை கட்டிட்டார்”

“என்னது” என சண்டையை அங்கை ஆரம்பிக்க,

“வாயை மூடுடி” என்று அதற்கான வேலைகளை செய்தான், வேறு வழியே இல்லாமல்.

அவன் விடவும், திரும்ப பேச ஆரம்பிக்க. திரும்ப ஒரு இதழ் முற்றுகை.

விடவும், திரும்ப பேச ஆரம்பிக்க, அவளை தடுக்காமல் பார்க்க ஆரம்பித்தான். அவனின் பார்வையில் தடுமாறியவள் நிறுத்த,

“கிஸ் வேணும்னா கேளு இல்லை நீயே பண்ணிக்கோ. அதை விட்டுட்டு எதுக்கு இப்படி?” என புருவம் உயர்த்தினான்.

“அய்யே பெரிய கண்டுபிடிப்பு” என்று அவனின் நெஞ்சினில் முகம் புதைத்து கொள்ள,

“இன்னும் வேணுமா? போதுமா!” என்றவனின் ரகசிய கேள்விக்கு,

“எனக்கு தூக்கம் வரலை” என்றாள் அவளும் ரகசிய பதிலாய்.

இப்படியாக அவர்களின் காதல் வாழ்க்கையும் சண்டை வாழ்க்கையும் அமோகமாய் சென்றது.

அது வரை ராஜராஜனுக்கு உதவுவதற்காய் மில்லை பார்த்தவள், இப்போது அவளுமே இன்னும் கருத்தாய் பார்க்க ஆரம்பித்தாள்.

அதாகப் பட்டது அவளுடைய வேலையாக்கிக் கொண்டாள்.

ஆம்! ராஜன் யோசனையை அவனால் செயல் வடிவம் கொடுக்க பல சமயம் இயலாத போது அங்கையற்கண்ணி அதற்கு வடிவம் கொடுத்தாள்.

சில சமயம் உள்ளுக்குள் பயம் வரும், அவனின் ஈகோவை சீண்டி விடுவேனோ இல்லை தன்னை கீழாய் நினைத்துக் கொள்வானோ என்று.

இல்லை, இல்லை, இல்லவே இல்லை! ராஜராஜனுக்கு வியப்பு அவளின் திறன் கண்டு. அவனுக்கு பெருமையே!

“நீ இங்க இருக்க வேண்டியவளே இல்லை” என்பான் பல சமயம்.
மற்றவர்கள் முன் அதிக கவனத்துடன் இருக்க கற்றுக் கொண்டாள் அங்கையற்கண்ணி.

இதோ இன்று அவர்களின் வயலில் அறுவடை, ஆண்கள் மட்டுமல்ல பெண்கள் எல்லோரும் கூட அங்கே தன் இருந்தனர்.

ஒரு சின்ன திருவிழா போல தான் இருந்தது.
ஊரிலிருந்து ஆண்மக்கள், பெண்மக்கள் எல்லோரும் வந்திருக்க அன்பழகனும் ராஜலக்ஷ்மியும் கூட வந்திருந்தனர். மனோவும் கரிஷ்மாவும் ஒரு சுற்றுபயணத்தில் இருக்க, இதோ விகாஸும் ஸ்ருஷ்டியும் அத்தை வீட்டில்.

யானை கட்டிப் போரடிக்கும் விளைச்சல் இல்லையென்றாலும் நல்ல விளைச்சல், எல்லோரும் மேற்பார்வையில் இருக்க, இறங்கி வேலை செய்தது தமிழ்செல்வனும் ராஜராஜனும் தான்.

வயலில் இறங்கி வேலை செய்தனர். சுவாமிநாதன் நிற்க, அவரின் வயதை கருத்தில் கொண்டு தமிழ்செல்வன்னும் ராஜராஜனும் விடவில்லை.

தமிழ்செல்வனும் சிறிது சோர்வை காண்பிக்க, அங்கை அவரின் அருகில் வந்தவள் “நீங்க உட்காருங்க மாமா, அப்பா பார்த்துக்குவார்” என்றாள்.

பின்னே அன்பழகனின் கண்கள் அந்த வயலில் தான். அவரின் தோழன் அது. அதையே பார்த்திருந்தார். பின்னே அரை டவுசர் காலத்தில் இருந்து இந்த மண்ணில் தானே புரண்டு கொண்டிருப்பார்.

அங்கையற்கண்ணி சரியாக அவரின் உணர்வை படித்து விட்டவள் ,
தமிழ்செல்வன் பதில் சொல்லும் முன்னமே “பா, நீங்க பாருங்க மாமா உட்காரட்டும்” என்று விட்டாள்.

அன்பழகன், அவரின் முகத்தினில் அப்படி ஒரு பரவசம்!
மற்ற ஆண்மக்கள் எல்லாம் வேடிக்கையே. அவர்கள் வயலில் எல்லாம் இறங்கவில்லை. ஆனால் அவர்களின் மக்களை ராஜராஜன் விடவில்லை. “வாங்கடா பசங்களா” என்று அவர்களை இறக்கி இருந்தான்.

நாச்சியும் வாசுகியும் தில்லையும் உணவை மேற்பார்வை பார்த்தனர்.
எல்லோரையும் மேற்பார்வை பார்த்தது அங்கையற்கண்ணி.

ஆம்! ராஜராஜனின் உழைப்பின் சின்ன இனுக்கும் வீணாக விடுவதில்லை.

சின்ன ஓய்வில் வயலில் இருந்து மேலே ஏறினான். உடனே அவனின் அருகில் சென்றவள் “எதுவும் வேணுமா?” என்றாள்.

“ஒன்றும் வேண்டாம்” என்பது போல தலையசைத்தவன், “எதுக்கு மாமாவை வயல்ல இறக்கி விட்ட” என்றான்.

“அய்யோடா, எங்கப்பா கண்ணு பூராவும் இங்க வேலைல தான். யாரும் கூப்பிட மாட்டாங்களான்னு ஏதோ பொண்ணை சைட் அடிக்கிற மாதிரி ஏங்கி ஏங்கி பார்கறார். அது தான் அனுப்பி விட்டேன்”

“அந்த பக்கம் போய் பார்த்துட்டு வர்றேன்” என்று அவன் வேறு பக்கம் கிளம்ப,

“பொறுமையா வாங்க, இங்க நானும் அப்பாவும் இருக்கோம்” என்று சொல்லியனுப்பினாள்.

அங்கிருந்த பைக் எடுத்தவன் அண்ணன்களின் பார்வையில் இருந்த வேறு பக்கம் பார்க்க சென்றான்.

சென்ற முறை வீட்டினர் அனைவரும் பூஜைக்கு வந்த போது பரிதாபமான தோற்றத்தில் இருந்த ராஜராஜன் இப்போது இருக்குமே தோற்றமே வேறு.

ராஜராஜசோழனின் தோற்றத்தில் இருந்தான். செல்வம் கொடுத்த பொலிவா, இல்லை அங்கை கொடுத்ததா, வகையறுக்க முடியாது. இரண்டுமே சேர்ந்திருந்தது.

மூன்றே மாதத்தில் ஆளே மாறியிருந்தான்!

இப்படியாக வேலைகள் முடிய, தலையில் கட்டிய தலைப்பாகையை அவிழ்த்து இடுப்பில் கட்ட போனான் பூஜைக்காக.

“இருங்க” என்ற அன்பழகன், “நான் பண்றேன்” என்று அவரின் துண்டை இடுப்பில் கட்ட,

ராஜராஜன் மீண்டும் தலைப்பாகையை கட்டிக் கொள்ள “எனக்கு” என்று விகாஸ் வந்து நிற்க, அவனிற்கும் கட்டி விட்டான். அதனை பார்த்த அவனின் அண்ணன் மக்களும் “சித்தப்பா எங்களுக்கு” என்று வந்து நிற்க அவர்களுக்கும் கட்டி விட்டான்.

இப்படியாக குடும்ப சகிதமாக பூஜைக்கு நிற்க அன்பழகன் பூஜை செய்தார்.

அவர் தான் இங்கிருந்து போகும் வரை செய்வார், அதன் பொருட்டே இப்போது வாங்கிக் கொண்டார்.

“உங்கப்பா இன்னைக்கு தான் அங்கை நிம்மதியா தூங்குவார்” என்று ராஜலக்ஷ்மி சொல்ல அங்கையின் முகத்தில் புன்னகை.

இப்போது ராஜராஜனின்றி அவளுக்கு வாழ்க்கை கிடையாது என்றாலும் இந்த திருமணமே அவருக்காக தானே!

அவளுடைய பிடித்தம் பார்த்திருந்தாள் இன்னும் கூட அவளுக்கு திருமணம் நடந்திருக்காது என்பது வேறு விஷயம்.

அங்கை யோசனையில் இருக்க எல்லோரும் முன் சென்று கண் ஒற்றிக் கொள்ள, அவள் இருந்த இடத்தை விட்டு அசையவேயில்லை.

அருகில் வந்த ராஜராஜன் அவன் கைகளால் ஆரத்தி தொட்டு அவளின் கண்களில் ஒற்றினான். அதன் பின்னே திடுக்கிட்டு சுற்றம் பார்த்தாள்.
எல்லோரும் அவளையே பார்க்க “என்ன யோசனை அப்படி?” என்றான்.

“அப்பாவை பார்த்தேன், ஏதோ யோசனை ஓடிச்சு” என்று அவனுக்கு மட்டும் கேட்குமாறு சொல்ல,

“என்ன அவருக்காக தான் இந்த கல்யாணம்ன்னு யோசிச்சியா?” என்றான் இலகுவாகவே அவளுக்கு மட்டும் கேட்குமாறு.

“ம்ம்” என்று தலையசைத்தாள் திடமாகவே. பின் “கூட இன்னொன்னும் தோணிச்சு. அதை உங்களால சொல்ல முடியுமா?” என்றாள்.

“ம்ம், இப்படி கல்யாணம் பண்ணலைன்னா, என்னை யாருக்காவது பிடிக்குமான்னு யோசிச்சிருப்ப” என்றான் அவளை வம்பிழுக்கும் விதமாக.

அவளோ அது புரியாமல் “அப்படி யோசிக்கலை, எனக்கு யாரையும் பிடிச்சிருக்குமான்னு யோசிச்சேன்” என்று சொல்ல,

அவளை பார்த்து குறும்பாய் புன்னகைத்தான்.

“ஏய், நீங்க போட்டு வாங்கினீங்களா, உங்களை..” என்று அவளையும் மீறி அவனின் புஜத்தில் அடிப்பது போல முகத்தை தூக்கி வைத்து குத்த, பின் சுற்றம் உணர்ந்து வேகமாய் கை எடுத்தாள்.

குறும்பாய் சிரித்து கொண்டே அவன் நகர்ந்து விட, “ஸ்ருஷ்டி வந்து என்ன அத்தை?” என்று நின்றாள்.

“மாமாவை போய் அடி” என்று சொல்லிக் கொடுக்க,

அது சமத்தாய் மாமாவிடம் சென்று “தூக்கு” என்று சொல்ல, அவன் தூக்கியதும் கன்னத்தில் அவளின் தளிர் கைகளால் அடித்தாள்.

அதை வாங்கிக் கொண்டவன் “உங்க அத்தைக்கு இப்போ நான் உனக்கு குடுக்கறதை போய் குடு” என்று சொல்லி ஸ்ருஷ்டியின் கன்னத்தில் முத்தமிட்டு அவன் வேலையை பார்க்க சென்று விட,

அவளும் அத்தையிடம் போய் “தூக்கு” என்று அதனை கொடுக்க,
அந்த காட்சியே பார்க்க கவிதையாய் இருந்தது. எல்லோரும் இல்லையென்றாலும் பலர் பார்த்தனர்.

“டேய், என்ன படம் ஓட்டராண்டா இவன்” என்று கௌரிஷங்கரும் நந்தகுமாரும் பேசி சிரித்துக் கொண்டனர்.

அதன் உணர்வு சிறிதுமின்றி ராஜராஜன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தான்.



ஆக்கமும் எழுத்தும்
மல்லிகா மணிவண்ணன்
 
Top