Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மஞ்சள் வெயில் மாலையிலே!-5

Advertisement

praveenraj

Well-known member
Member
அஜய் ரத்தோரின் வழக்கில் இதயன் உத்தரவிட்டு இருந்ததைப்போல் அன்று மாலை ரத்தோர் பயணித்த கேப் பற்றி தகவல்களைச் சேகரித்திருந்தான் மிஹிர். அதன் ஓட்டுனரை விசாரிக்க வேண்டி கமிஷ்னர் அலுவலகத்திற்கு அவனை வரவழைத்திருக்க அப்போது தான் உள்ளே வந்த இதயன் கண்களால் அங்கிருந்த உதவியாளர் ஜான்சி ராணிக்குக் கட்டளையிட மிஹிர் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய காத்திருந்தான்.

"உங்க பேர் என்ன மிஸ்டர்?"

"நாசர் மேடம்..."

"எத்தனை வருஷமா இந்தத் தொழில் செய்யுறீங்க?"

"பத்தாவது முடிச்சதும் படிப்பு வரல. அப்படியே என்னை ஒரு லாரில க்ளீனரா சேர்த்து விட்டாங்க. பதினெட்டு வயசுல லைசென்ஸ் எடுத்தேன். கொஞ்ச வருஷம் லாரில ஓடுனேன். உடம்பு ஒத்துக்கல. அதான் வாடகை கார் ஓட்டுறேன். இப்போ மூணு வருஷமா இந்த ஓலா கேப்ல ஓட்டிட்டு இருக்கேன்" என்று நாசர் சொல்ல சொல்ல இதயன் அவனுடைய உடல் மொழிகளை மட்டுமே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். ஒரு வேளை ரத்தோர் கடத்தப்பட்டிருந்தால் அதற்கு இவனும் ஏன் உடந்தையாக இருந்திருக்க கூடாது என்ற சந்தேகமும் இதயனிடம் இருக்கிறது. பிறகு சம்பவம் நடந்த தேதியையும் நேரத்தையும் குறிப்பிட்டு அந்தப் பயணத்தைப் பற்றி விசாரிக்க முதலில் யோசித்தவர் பிறகு சிந்தை வந்தவராக,"யாரு அந்த போட்டோகாரரயா கேக்குறீங்க?" என்றார் நாசர்.

"உங்களுக்கு ரத்தோர் சாரை முன்னமே பரிட்சயமா?" என்ற மிஹிருக்கு,

"யாருங்க ரத்தோர்? ஓ அந்த போட்டோகாரர் பேர் ரத்தோரா? அதெல்லாம் இல்லைங்க. அன்னைக்கு தான் அவரை நான் முதல பார்த்ததா ஞாபகம். ஏங்க அவருக்கு என்ன ஆச்சு?" என்ற நாசருக்கு,

"உங்க வண்டியில அவர் ஏறுனது தான் எங்களுக்கு அவரைப் பற்றித் தெரிஞ்ச கடைசி இன்பர்மேசன். அவர் ஐஞ்சு நாளா மிஸ்ஸிங். அதான் உங்களைக் கூப்பிட்டு விசாரிக்குறோம்" என்ற ஜான்சியின் பார்வை இப்போது நாசரை சந்தேகமாகப் பார்க்க,

"ஐயோ மேடம். சத்தியமா எனக்கும் அதுக்கும் எந்த தொடர்பும் இல்ல. நானே கடன் தொல்லையில குடும்பத்தை நடத்த திண்டாடிட்டு இருக்கேன். இந்த பெட்ரோல் விலை வேற கண்ணு மண்ணு தெரியாம ஏறிட்டுப் போகுதேன்னு கவலையில இருக்கேன். எனக்கு ஒன்னும் தெரியாதுங்க. சத்தியமா நான் அப்பாவி" என்று அவர் பதற,

"பயப்படாதீங்க நாசர். நாங்க உங்களைச் சந்தேகப்படல. எங்களுக்கு அன்னைக்கு என்ன நடந்ததுனு தெரியணும். அதுக்குத் தான் உங்களை விசாரிக்குறோம்"

அவர் இவர்களின் கேள்வியை எதிர்நோக்க,

"சரி அன்னைக்கு என்ன நடந்தது? நீங்க எத்தனை மணிக்கு எங்க ரத்தோர் சாரை பிக் அப் பண்ணி எங்க எப்போ டிராப் பண்ணீங்க?"

"மேடம் அன்னைக்கு சுமார் ஏழு மணியிருக்கும். அப்போ அவரை அவர் அபார்ட்மெண்ட்ல இருந்து பிக் அப் பண்ணிட்டு கோரிகான்(goregaon) வரை போனேன். உங்களுக்கே தெரியும் மும்பைல ஈவினிங் ட்ராபிக் எப்படி இருக்கும்னு. அதனால் அந்த பதினஞ்சு கிலோமீட்டர் போறதுக்கே ஒன்னேகால் மணிநேரம் ஆகிடுச்சு. இறக்கி விடும் போது நான் சரியா டைம் கவனிக்கல. ஆனா எப்படியும் எட்டே கால் இருக்கும். ரொம்ப நல்ல மனுஷன் மேடம் அவர். கேஷா கொடுங்க சார்னு கேட்டதும் எக்ஸ்டரா அம்பது ரூபா கொடுத்தார்"

"கோரிகான்ல எங்க இறக்கி விட்டீங்க?"

"ஆறே(aarey) காலனில இறக்கி விட்டேன் சார். அதுக்குள்ள எனக்கு அடுத்த சவாரி புக் ஆகிடுச்சு. நான் புறப்பட்டுட்டேன். எனக்கு வேற எதுவும் தெரியாது சார்..." என்று நாசர் சொன்னதும் ரத்தோரின் செல் போன் சிக்னல் ஆறே காலனியை கடந்து இரண்டு கிலோமீட்டரில் ஸ்விட்ச் அப் ஆனதும் ஒத்துப்போனதால் ஜான்சி ராணியும் இதயனும் ஒருவரை ஒருவர் அர்த்தமாகப் பார்த்துக்கொண்டனர்.

aarey colony என்பது மும்பையில் இருக்கும் பிரபலமான பால் உற்பத்தி செய்யும் பகுதி. கொஞ்சம் புரியும் படி சொன்னால் நம்மூர் ஆவின் போன்றது. மும்பையை நகரமாக மாற்றுவதற்காக அங்கிருக்கும் கால் நடைகளை எல்லாம் மும்பைக்கு அடுத்து உள்ள கோரிகான் என்னும் பகுதியில் இடம் பெயர்க்க முடிவெடுத்து கால்நடைகளுக்குத் தேவையான புற்களை அங்கே உருவாக்கினார்கள். இதெல்லாம் 1951ல் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் ஏற்படுத்தப்பட்டது. ஆயிரத்து இருநூறுக்கும் மேலான ஹெக்டரில் பரந்து விரிந்திருக்கும் இந்த செயற்கை காடைப் பற்றி அங்குள்ள பல மும்பை வாசிகளே கூட அறிந்திருக்க மாட்டார்கள். இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாய் இந்தக் காடுகளை ஒட்டியே இன்னும் தெளிவாகச் சொன்னால் இந்தக் காட்டின் வட எல்லை பிரபலமான உயிரியல் பூங்காவான சஞ்சய் காந்தி உயிரியல் பூங்காவோடு பகிரப்படுகிறது. இந்தப் பகுதிகளை ஒட்டி பல்லாயிரக்கணக்கான பூர்வகுடி மக்கள் வசிக்கிறார்கள். மும்பை நகரின் நுரையீரல் என்னும் சிறப்பையும் இந்தப் பூங்கா பெற்றுள்ளது. மும்பை நகரின் தண்ணீர் தேவையையும் இங்குள்ள இரண்டு ஏரிகள் பூர்த்தி செய்கிறது. இந்தப் பூங்கா எண்ணற்ற தாவரம் மற்றும் விலங்குகளுக்கு புகலிடமாக இருக்கிறது. இந்தப் பூங்காவுக்குள்ளே உலக புகழ்பெற்ற கண்ணேறி குகை இந்து பௌத்த சமண ஆலயங்கள் முதலியவை இருக்கிறது.

இன்னும் சுருக்கமாகச் சொல்லப் போனால் இயற்கைக்கும் மனிதனுக்குமான ஒரு போர்களமாகவே இந்த இடம் இருக்கிறது. இதனை எவ்வாறேனும் அடைய நினைக்கும் மனித இனம் இதனை ஒட்டி தன்னுடைய ஆக்கிரமிப்புகளால் நாலாப் புறமும் சூழ்ந்து கொண்டது. சுமார் பத்து கிலோமீட்டர் இடைவெளியில் இதைச் சுற்றி ஏர்போர்ட் ரயில் நிலையம் பிலிம் சிட்டி வானுயர் கட்டிடங்கள் போன்றவை எழுந்துவிட்டது.

இந்தப் பூங்காவுக்குள் கடம்ப மரம் தேக்கு மரம் சவுக்கு மரம் ஈட்டி மரம் ரோஸ் வுட் மற்றும் இதர தாவர வகைகள் மான்கள் முதலைகள் பாம்புகள் சிறுத்தைப்புலி யானை முதல் பட்டாம் பூச்சிகள் பறவைகள் என்று பல்லுயிர் ஏராளமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் மனிதனின் சுரண்டலுக்கு ஏற்ற இடமாக இது இருக்கிறது.

அதற்கு மேல் நாசருக்கு எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது இதயனுக்கும் புரிந்தது. பின்னே ரத்தோரை இறக்கிவிட்டு மலாட் வரையிலான தன்னுடைய அடுத்த சவாரியை அவர் செய்துள்ளார் என்றும் அவர்கள் விசாரித்து இருந்தார்கள்.

"ஓகே நாசர். இப்போ நீங்க போலாம். தேவைப்பட்டா நாங்க எப்போ வேணுனாலும் உங்களைக் கூப்பிடுவோம். நீங்க எங்க விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கணும்..." என்ற இதயன் யோசித்து பிறகு மிஹிரிடம் திரும்பி,

"மிஹிர் நீங்க ஒன்னு பண்ணுங்க. இப்போ நம்ம நாசர் கூடவே கார்ல போய் ரத்தோரை இவர் இறக்கிவிட்ட இடத்தைப் பார்த்துட்டு வாங்க. ஜான்சி நீங்களும் மிஹிர் கூடவே போங்க. அண்ட் எந்த என்கொயரியும் செய்ய வேண்டாம். ஜஸ்ட் ஸ்பாட்டை மட்டும் பார்த்துட்டு வாங்க" என்னும் போதே நாசரின் முகத்தைப் படித்தவன்,

"இப்போ அந்த இடத்துக்குப் போனா எவ்வளவு வாங்குவிங்க நாசர்?"

"எழுநூறு ரூபா ஆகும் சார்" மணியைப் பார்த்தவர்,"காலையில பீக் ஹவர் சார். அதான்" என்றதும் ஆயிரம் ரூபாயை மிஹிரிடம் கொடுத்தவன் கண்ணசைக்க அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். இதயனின் எண்ணமெல்லாம் ஆறே காடுகளைப் பற்றியே இருந்தது. ரத்தோர் உயிருடன் இருப்பாரா இல்லை அவர் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்குமா? என்று யோசித்தவன் தன்னுடைய மூளை சொன்ன ஹைப்போதீசிஸ்களை யோசிக்கத் தொடங்கினான்.

'வைல்ட் லைப் போட்டோ கிராபர் போட்டோ எடுக்க காட்டுக்குப் போயிருக்கார். அங்க போன ரத்தோர் மிஸ்ஸிங். ஒன்னு அந்தக் காட்டுக்குள்ள போன அவரை சிறுத்தைப்புலி எதாவது தாக்கி இருக்கலாம். இரண்டு மாதத்திற்கு முன்பு கூட சிறுத்தை தாக்கி ஒருவர் படுகாயம் அடைஞ்சதா நியூஸ் வந்ததே? இல்லைனா அவர் கேமரா படம் பிடிக்க கூடாத ஏதோ ஒன்னை படம் பிடிச்சி இருக்கும். அதனால் அவருடைய உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்திருக்கலாம். அப்போ அங்க என்னமோ நடந்திருக்கு. அங்க என்ன க்ரைம் நடந்திருக்கும்? இல்லை அவரை யாராவது கடத்தியும் இருக்கலாம். ஆனா கடத்தியிருந்தா இந்நேரம் டிமாண்ட் வந்திருக்கணுமே?' என்று பல்வேறு கோணங்களில் யோசனையில் மூழ்கினான் இதயன்.

*************

ஜெய்யின் வரவை எதிர்நோக்கி இருந்த குடும்பம் அங்கே ஜெய்யோடு ஒரு பெண்ணைக் கண்டதும் திடுக்கிட முதலில் சுதாரித்த கண்மணி தாங்கள் நினைப்பதைப்போல் எதுவும் இருக்காது என்று எண்ணி,

"வா ஜெய். என்ன அங்கேயே நின்னுட்ட? உனக்காக எல்லோரும் காத்திட்டு இருந்தோம் தெரியுமா?" என்றதும் சாந்தலஷ்மி சமையலறையில் இருந்து ஆவலாக வெளியேற,

"அக்கா இது யாக்நியா. நான் லவ் பண்ற பொண்ணு" என்று கேசுவலாக மொழிந்தவன் யாக்கிடம் திரும்பி,"வா உள்ள போலாம்..." என்று வீட்டிற்குள் நுழைந்தவன் அங்கிருந்த அலங்காரங்கள் எல்லாவற்றையும் புதியதாய்ப் பார்ப்பதைப் போல் கண்டு,

"என்னக்கா விஷேஷம்?" என்றவன் அங்கிருந்த தன் அத்தை வைதேகியைக் கண்டு,

"அத்தை நீங்க எப்போ வந்திங்க? சொல்லவேயில்லை?" என்று பேசி,

"பவித்ரா நீயும் இங்கேயா இருக்க? வாட் எ சர்ப்ரைஸ்?" என்னும் வேளையில் அவனை பின்னிருந்து இரு கரங்கள் அணைத்தும் அக்கரங்களைப் பிடித்தவன்,"என் பிரின்சஸ் நட்சத்திரா குட்டி" என்று திரும்ப அவன் தோள்பட்டை வரை வளர்ந்திருந்த நட்சத்திராவை இன்றும் குழந்தையாகவே எண்ணி அவளைத் தோளோடு அணைத்து,

"எப்படிடா அம்மா இருக்க?" என்றான்.

"போ மாம்ஸ்... பதினேழு வயசு முடிஞ்ச என்னை ஒன்னு குட்டிங்குற இல்லைனா அம்மாங்குற..." என்று செல்லமாக கோவித்தவளைக் கண்டு சிரித்தவன்,

"அச்சச்சோ என் பொண்ணு கோவிச்சுக்கிச்சா? நீ என்னைக்குமே என் பொண்ணு டா..." என்றவன் அந்தப் பொண்ணு என்னும் வாக்கியத்தில் ஒரு அழுத்தம் கொடுத்தான். நட்சத்திரா ஜெய்யின் அக்காவான கண்மணியின் மகள். சிறுவயதில் என்றோ ஒருநாள் அவளை ஆசைதீர கொஞ்சும் வேளையில் வீட்டிலிருந்த ஒரு சொந்தக்காரக் கிழவி பேச்சுவாக்கில் சாந்தலஷ்மியிடம்,"பரவாயில்ல உன் ரெண்டாவது பையனுக்கு வீட்லயே பொண்ணு இருக்கு..." என்று சொன்னது தான் தாமதம் ஜெய் பொங்கியிருந்தான். உறவு முறையில் வேண்டுமானால் கண்மணி ஜெய்க்கு அக்காவாக இருக்கலாம். ஆனால் அவன் முழுமையான தாய் பாசத்தை உணர்ந்தது என்னவோ கண்மணியிடம் தான். அவனுடைய பதின் வயதிலே நட்சத்திராவை தன்னுடைய மகளாகவே பாவித்தான். அன்று அவனுடைய ஆவேசத்தைக் கண்ட சந்திர சேகரனே ஒரு கணம் திகைத்து விட்டார். அன்றிலிருந்து விளையாட்டிற்குக் கூட யாரும் நட்சத்திராவையும் ஜெய்யையும் இணைத்துச் சீண்டியதில்லை.

இதையெல்லாம் கேள்வியாக யாக்நியா பார்த்துக்கொண்டிருக்க அங்கே இருந்தவர்களோ யாக்நியாவை கேள்வியாகப் பார்த்தனர். அதிலும் குறிப்பாக அவன் அத்தை வைதேகிக்கு யாக்நியாவை எண்ணிக் கோவமிருந்தாலும் முறைப்பெண்ணான தன் மகள் பவித்ரா இருந்தும் ஜெய்க்கு வெளியே பெண் பார்க்கப்பட்டதை நினைத்து ஆத்திரத்தில் இருந்தவர் இனி நடக்கவிருக்கும் நாடகத்தை வேடிக்கை பார்க்க காத்திருந்தார்.

சாந்தலஷ்மி தன் மகளிடம் ஜாடை காட்ட அதைப் புரிந்துகொண்ட கண்மணி,

"ஜெய், நீ லவ் பண்றதா சொல்லவே இல்லையே?" என்று கேட்க,

"வீட்டுக்கு கெஸ்ட் வந்தா தண்ணீ கூடக் கொடுக்க மாட்டிங்களா?" என்று தன் அன்னையைப் பார்க்க அதற்குள் நட்சத்திரா அவர்களுக்கு ஜூஸ் எடுத்து வந்தாள். பொறுமையாக அதைப் பருகியவன்,

"குட்டிமா நீ இவங்களை மேல என் ரூமுக்கு பக்கத்து ரூம்ல தங்க வைடா" என்று நட்சத்திராவுக்கு வேண்டுகோள் வைக்க,

"மாம்ஸ் எனக்கு இவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. இவங்களை நான் அத்தைனு கூப்பிடவா இல்ல அக்கானு கூப்பிடவா?" என்று தன்னுடைய சந்தேகத்தைக் கேட்க ஏனோ கண்மணிக்கும் சாந்தலஷ்மிக்கும் மயக்கம் வராத குறை தான்.

"அக்கா வேணாம்டா. அத்தைனு கூப்பிடு..." என்றவன் திரும்பி யாக்நியாவைப் பார்க்க அவளோ தன்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருக்கும் அவன் குடும்பத்தினரை ஏக்கத்தோடு பார்த்தாள்.

"நீ ப்ரெஷ் அப் ஆகிட்டு வா யாக். வீட்ல எல்லோரும் பேசுவாங்க. நான் தான் முன்னாடியே சொன்னேன் இல்ல? இவங்களுக்கு ஷாக் இருக்காதா?" என்று ஹிந்தியில் உரையாட அதன் பொருள் உணர்ந்த நட்சத்திரா அவளோடு சகஜமாக ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் உரையாடி மேலே அழைத்துச் சென்றாள்.

"என்னடா பண்ற நீ? நாளைக்கு உனக்கு நிச்சயதார்த்தம் ஏற்பாடு நடக்குது. நீ என்னடானா?"

"அப்படியா? எனக்குத் தெரியாதே?" என்று மீண்டும் அவன் குத்தலாகவே பதிலளிக்க,

"விளையாடாத ஜெய். அப்பா உன் சம்மதத்தைக் கேட்டு தான் எல்லாம் நடக்குதுனு சொன்னார். உன் மாமா தான் உன்கிட்டப் பேசுனதாவும் சொன்னார். சொல்லு நட்சு அப்பா உன்கிட்டப் பேசினாரா இல்லையா?"

"நான் யாக்நியாவை லவ் பண்றேனு அப்பாக்குத் தெரியும். அவருக்கு என் காதல் பிடிக்கல. மே பி இங்க என்னை வரவெச்சு சொந்தகாரங்க முன்னாடி என் நிச்சயத்தை வெச்சா நான் மறுக்க மாட்டேன்னு அவர் நெனச்சு இருக்கலாம். ஆனா பாருக்கா அவர் ஒன்னை மறந்துட்டார். தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறு அடி பாயும்னு அவருக்கு டெமோ காட்டப்போறேன்..." என்று சொன்ன ஜெய்யை மேலும் அதிர்ச்சியுடன் பார்த்தார் கண்மணி. இதையெல்லாம் அருகில் நின்று பார்த்தவாறு மட்டும் இருந்தார் கௌசல்யா, ஜெய்யின் அண்ணி.

"ஹே அழகி, எப்படி இருக்க?" என்று அருகிலிருந்த அவன் அப்பத்தா சத்யகலாவைக் கொஞ்சினான் ஜெய். நிலைமையின் தீவிரம் உணர்ந்து கண்மணி தன் கணவரையும் தம்பி ஆகாஷையும் அழைத்து விஷயத்தைத் தெரிவித்தார்.

***********************

அதுநாள் வரை பார்த்து மட்டும் கொண்டிருந்த ரேவந்த் அன்று அங்கிதாவிடம் பேசுவதற்காக நெருங்கியிருந்தான். அன்றைய ஒர்க் அவுட் முடித்து வெளியேறிய அங்கிதாவிடம் ஒரு நிமிடம் பேச வேண்டும் என்று நிறுத்தியவன்,

"ஹாய் அங்கிதா. என்னைத் தெரியுதா?" என்றதும் அவள் தலையசைக்க,

"நான் ரேவந்த். ஆக்டர். கொஞ்ச நாளுக்கு முன்னாடி வரை நான் அதிக கவலையில மூழ்கி ஸ்ட்ரெஸ் ஆகி அதைத் தீர்க்க ட்ரக்ஸ் அடிக்ட் ஆகி இப்போ ரீஹேபிலேஷன் முடிஞ்சு கொஞ்சம் கொஞ்சமா பழைய வாழ்க்கைக்கு அடாப்ட் ஆகிட்டு இருக்கேன். எனக்கு டுவென்டி செவென். கொஞ்ச நாளா உங்கள இந்த ஜிம்ல பாக்குறேன். ஈப் யூ ஆர் ஓகே ஷல் வி கோ பார் எ டேட்?" என்றதும் அவள் முகம் போன போக்கைக் கண்டவன்,

"இதைக் கேக்க இது சரியான இடம் இல்லைதான். இருந்தாலும் பரவாயில்ல... யோசிச்சு சொல்லுங்க. பை தி வே ஆல் தி பெஸ்ட் பார் யுவர் மேட்சஸ்" என்று அவன் நகர அங்கிதா என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தாள்.
 
தனித்தனியா வர்ற இந்த கதையெல்லாம் கடைசியா ஒன்னு சேருமா ??
 
Top