Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொழுது 9

Advertisement

Sakthi bala

Active member
Member
“யாரு நானு? மனசு மாறுவேன்?” கேட்டுவிட்டு பெரிதாக சிரித்தார் தாத்தா நாராயணன். மதிவதனி அமைதியாக அவரை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சரி...நீயே பரிமாறு. இந்த வீட்ல வேலை செய்யுறாளே சுப்பு, அவ பரிமாறி நான் சாப்பிட்டதில்லையா என்ன? அந்த மாதிரி நினைச்சுக்கிறேன்”

நீயும் ஒரு வேலைக்காரி போல தான் என்று அவர் குறிப்பிட்டது அவளுக்கு சுருக்கென்றிருந்தது. இருந்தாலும் அன்றலர்ந்த மலர் போல முகம் மாறாமல், “சந்தோஷம் தாத்தா, சாப்பிடுங்க” என்று அவருக்கு பரிமாறினாள்.

அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே மனோரஞ்சன் சாப்பிடுவதற்கு இறங்கி வந்தான். தாத்தாவுக்கு அவள் பரிமாறுவதை ஒரு ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு வந்து அமர்ந்தான்.
அவளிடம் ‘என்ன இது’ என்று புருவத்தை உயர்த்திக் கேட்டான்.அவள் ‘எல்லாம் அப்படிதான்’ என்பது போல கண்ணடித்தாள்.இதை பார்த்தும் பார்க்காதது போல தாத்தா அமர்ந்திருந்தார்.

“மதி....இன்னைக்கு என்ன சமையல்?”

“சாம்பாரும்,அவியலும்”

“ஓ....சூப்பர் சூப்பர்....போடு......சாப்பாடு போடு”
மனோரஞ்சனுக்கு சாம்பாரும்,அவியலும் ரொம்பப் பிடிக்கும். வீட்டில் சாம்பார், அவியல் வைக்கும்போதெல்லாம் தாத்தா நாராயணன்,மனோரஞ்சனுக்கு ஊட்டி விடுவார். இது சின்ன வயதிலிருந்து நடக்கும் ஒரு விஷயம்.

மனோரஞ்சன் வேண்டுமென்றே சாம்பாரை கொஞ்சமாக ஊற்றி அவியலை வைத்து ஏதோ கொறித்துக் கொண்டிருந்தான்.அந்த நிமிடம் தாத்தா எல்லாவற்றையும் மறந்தார்.

“டேய்!என்னடா சாப்புடற?சும்மா கொறிசிக்கிட்டு!எத்தனை தடவை சொல்லிருக்கேன்? சாம்பாரை நல்ல குழைய ஊத்தி நெய் விட்டு அவியலை போட்டு பிசைஞ்சு, கூடவே அப்பளத்தை அதோட உடைச்சு ஊறுகாய் தொட்டு சாப்புடனும்.”

“ச்சு.....நீ என்னைக்கு உருப்படியா சாப்பிட்ட? இரு” என்று சொல்லிக்கொண்டே அவர் சொன்ன மாதிரியே பிசைஞ்சு அவன் வாய் பக்கம் கொண்டுச் சென்றார்.

மனோரஞ்சன் கலங்கிய கண்களுடன் அவரை பார்த்துக் கொண்டிருந்தான்.அப்போது தான் அவருக்கு எல்லா நினைவும் வந்தது.

“தாத்...தாத்தா....ப்ளீஸ் தாத்தா, ஊட்டி விடுங்க தாத்தா!” அவன் குரல் உடைந்தது.நீட்டிய அவர் கையை கீழே இறக்கி, கையை கழுவி விட்டு பாதி சாப்பாட்டிலேயே எழுந்து போனார்.

மதிவதனி அவன் தோளை தொட்டு,”இதுவே ஒரு நல்ல ஆரம்பம் தான்” என்று கனிவுடன் கூறினாள்.அது வரை அவர்களிடையே இருந்த கசப்பு அப்போது அவன் சிந்திய புன்னகையில் மறைந்தது.

மனோரஞ்சன் சாப்பிட்டு முடித்து விட்டு செல்லும் போது
மதிவதனி,”ஒரு நிமிஷம்” என்று அழைத்தாள்.

“சொல்லு”

“ஹ்ம்ம்.....வந்து ....வந்து.....ஃப்ரெண்ட்ஸ்?” அவள் தயக்கத்துடன் கையை நீட்டிக் கொண்டு நின்றாள்.

அவன் அவள் கையை பற்றாமல் அவள் அருகில் வந்தான். வந்து, ஒரு கையால் கலைந்த அவள் தலையை வருடிவிட்டு சிரித்துக் கொண்டே சென்றுவிட்டான்.

மதிவதனி நீட்டிய கையை மடக்கக் கூட தோன்றாமல் அப்படியே நின்றுக் கொண்டிருந்தாள்.

அதன் பின் மதிவதனிக்கு வாழ்க்கை ரெக்கைக் கட்டிக் கொண்டு பறந்தது. அவளுக்கும் மனோரஞ்சனுக்கும் இடையில் ஒரு நல்ல சிநேகம் உருவானது.தினமும் மனோரஞ்சன் கம்பெனியிலிருந்து வந்ததும் அவளுடன் சிறிது நேரம் செலவிடுவான். அவர்கள் இருவரும் நிலவொளியில் தோட்டத்து ஊஞ்சலில் அமர்ந்துக் கொண்டு பேசிக்கொண்டே இருப்பர். என்னவென்று கேட்டால் இருவருக்கும் தெரியாது. எல்லாமே ‘ஸ்வீட் நத்திங்க்ஸ்’ தான். படுக்க போகும்போது அவன் அவள் தலையை வருடி விட்டு போவான்.

தினம் அவன் வருகைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள் மதிவதனி.‘நாம் ஏன் இப்படி ஆனோம்? ஏன் அவர் வந்தாலே சந்தோஷப்படுறோம்? அவர் ஒரு சின்ன தொடுகையில் நம் மனம் தடுமாறுதே ஏன்?அப்படினா நான் அவரை காதலிக்கிறேனா?’
இந்த எண்ணங்கள் அவள் மனதில் ஓடும்போதே அவளுக்கு இன்னொன்றும் நினைவுக்கு வந்தது.’ச்சே....நம்ம கிட்ட அவரு ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம்னு தானே சொன்னாரு. அப்புறம் நான் ஏன் இப்படி தப்பு தப்பா யோசிக்கிறேன்? இது தெரிஞ்சா அவரு என்னை பத்தி என்ன நினைப்பாரு?’ என்று தனக்குள் ஒரு குட்டு வைத்துக் கொண்டாள்.

ஆனால் அவளுக்கு ஒரு விஷயம் புரியவில்லை. ஒரு நல்ல கணவன், மனைவியாக வாழ்வதற்கு முதல் படியே நல்ல நண்பர்களாக இருப்பது தான் என்பது.

அதுமட்டுமில்லாமல் மனோரஞ்சனின் நினைப்பு வரும்போதெல்லாம் இலவச இணைப்பாக நித்யாவின் நினைப்பும் வந்தது.‘ச்சே....இது வேற எப்ப பாரு! ரொம்ப ஆசையா பாயசம் சாப்பிடும் போது நடுவுல ஏலக்காய் வர மாதிரி அவரை பத்தி நினைச்சாலே எனக்கு நித்யா ஞாபகமும் வருது’ என்று நொந்துக் கொண்டாள்.

‘இல்லை! அவர் நம்மிடம் ஒரு நண்பனா தான் பழகுறார். நாம வேற எதையும் கற்பனை பண்ணிக்கிட கூடாது’ என்று முடிவுக்கு வந்து அவள் மனதிற்குக் கடிவாளம் போட்டாள்.

அவளின் நாட்கள் மனோரஞ்சனின் நினைவுகளில் சென்றுக் கொண்டிருக்க, மனோரஞ்சனோ கம்பெனியில் ஒரு மோசமான நிலைமையில் இருந்தான்.

வழக்கமாக கம்பெனியில் கணக்கு வழக்குகளை ரங்கராஜன் தான் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் மனோரஞ்சனின் தந்தை காலத்தில் இருந்தே அந்த கம்பெனியில் வேலை பார்க்கிறார். மிகவும் நம்பிக்கையானவர். அவர்கள் வீட்டில் ஒருவரை போன்றவர்.
அவருக்கு வயதாவதால், அவர் தன் மகன் ரவியை தன் வேலைக்கு பரிந்துரை செய்தார். அவரே இதைக் கூறியதால் இதில் யோசிப்பதற்கு ஒன்றும் இல்லை என்று மனோரஞ்சனும் உடனே சரி என்றான்.

இன்கம் டாக்ஸ் விஷயமாய் ஏதோ குளறுபடி ஏற்படவும் அதற்காக அவன் சில கணக்கு வழக்குகளை ஆராய்ந்தபோது மிக பெரிய தொகை குறைவது தெரிந்தது. அதுவும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும்.
பொதுவாக கணக்கு வழக்குகளை ரங்கராஜனின் மகன் ரவி மட்டும் தான் பார்த்துக் கொள்கிறான். அவனிடம் இந்த விஷயத்தை பற்றி நேரடியாக கேட்பதற்கு ஏதோ ஒன்று அவனை தடுத்தது.

மனோரஞ்சன் இதை பற்றி பல விதமாக ஆராய்ச்சி பண்ணி கடைசியில் இதை பண்ணியது ரவி தான் என்பதை சான்றுகளுடன் கண்டுபிடித்து விட்டான். இப்பொழுது என்ன செய்வது என்றே அவனுக்கு தெரியவில்லை.

‘எப்படி இதை ரங்கராஜன் அங்கிளிடம் சொல்வது? எப்படிப்பட்ட நல்ல மனுஷன் அவரு? அவருக்கு இப்படி ஒரு மகனா?! இதை இப்படியே விடவும் முடியாது. தொகை மிக மிக பெரியது. இந்த திருட்டுத்தனம் எவ்வளவு நாளா நடக்குதுனு தெரியலை?இப்போ என்ன செய்யுறது?’
அவன் தலையை பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையை இது வரை அவன் சந்தித்ததில்லை.

அந்த சமயத்தில் தான் மதிவதனி அவனுக்கு போன் செய்தாள்.இப்பொழுதெல்லாம் மதிவதனி நடுவில் ஒரு தடவை அவனை அழைத்து அவன் சாப்பிட்டானா?வேலை எப்படி போகிறதென்று? பேசிக் கொண்டிருப்பாள். அவனும் உற்சாகமாக பேசுவாள். ஆனால் இன்றோ அவன் குரல் சோர்ந்து போயிருந்தது.
அதை அறிந்த அவள்,”என்னாச்சுங்க?ஏன் உங்க குரல் ஒரு மாதிரி இருக்கு?ஏதாவது பிரச்சனையா?”

“ஒன்னும் இல்லை” என்றான் மொட்டையாக.

“இல்லை ஏதோ சரி இல்லை. என்ன பிரச்சனைனு சொல்லுங்க?”

“அதான் ஒன்னும் இல்லேன்னு சொல்றேன்ல. இது கம்பெனி விஷயம். சொன்னாலும் உனக்கு புரியாது.”

மதிவதனி ஒரு நிமிடம் அமைதியாக இருந்தாள், பின்பு,”மாமா எனக்கு வேலை வாங்கி தர சொன்னாரு ஞாபகம் இருக்குல? அது மட்டுமில்ல நான் எங்க காலேஜில் கோல்ட் மெடலிஸ்ட் தெரியுமா?! எனக்கு எல்லாம் புரியும். ப்ளீஸ் சொல்லுங்க” என்று கேட்டாள்.

“அது வந்து இன்னிக்கு அக்கௌன்ட்ஸ் செக் பண்ணிட்டிருந்தேன். அப்போ ஒரு பெரிய தொகை மிஸ் ஆகுறது தெரிஞ்சுது. என்குயர் பண்ணினப்போ அது நம்ம ரங்கராஜன் அங்கிள் பையன் ரவி பண்ணினதுன்னு தெரியுது”

“அங்கிள் கிட்ட இதை பத்தி எப்படி பேசனு புரியல. அவருக்கு போன மாசம் தான் பைபாஸ் சர்ஜரி முடிஞ்சிது. இந்த விஷயம் தெரிஞ்சா ரொம்ப உடைஞ்சு போய்டுவாரு. அதான் என்ன செய்யறதுன்னு தெரியாம குழப்பமா இருக்கு!”

“என்னங்க இந்த விஷயத்த பொறுமையா நீங்க ரங்கராஜன் அங்கிள் கிட்ட சொல்றதுதான் சரின்னு எனக்கு தோணுது. பக்குவமா எடுத்து சொன்னா அவரு புரிஞ்சிப்பாரு. இதை விட்டா வேற வழி இல்லை. நீங்க இதை விட கஷ்டமான சிக்கலை பிசினஸ்ல பேஸ் பன்னிருப்பீங்க. உங்களுக்கு தெரியாதது இல்லை! செண்டிமென்ட்ஸ், டென்ஷன் எல்லாமே பிசினஸ் பாதிக்கும். ரிலாக்ஸ் பண்ணிட்டு நிதானமா யோசிங்க. கண்டிப்பா ஒரு தீர்வு கிடைக்கும்”

“ஹ்ம்ம்...சரி பாப்போம்”

“சரிங்க”

“ஏய்!உனக்கு நான் எத்தனை தடவை சொல்லிருக்கேன்? என்னை பேர் சொல்லி கூப்புடுனு. ஏதோ பட்டிக்காடு மாதிரி ங்க ங்க னு கூப்பிட்டுட்டு?”

“ஹலோ....என்னங்கனு கூப்பிடறது உங்களுக்கு பட்டிக்காடா தெரியுதா? எங்க ஊர் சைடுலாம் அப்படி தான் எல்லோரும் கூப்பிடுவாங்க. அதான் எனக்கும் அப்படியே வருது. சரி வேற எப்படி கூப்புடனும்னு சொல்லுங்க?”

“நம்ம ரெண்டு பெரும் ஃப்ரெண்ட்ஸ்னு சொல்லிருக்கேனா இல்லியா? அதனால என்னை பேர் சொல்லியே கூப்பிடு”

“ஹ்ம்ம்....சரி டா...மச்சி.....”

“என்னது?சரி டா மச்சி யா?”

“ஆமா பின்னே நீங்க உங்க ஃப்ரெண்ட்ஸ் கூட இப்படி தானே பேசிக்குவீங்க?”

“அதுக்குன்னு இப்படியா? சரி சரி பரவாயில்லை, கூப்பிட்டுக்கோ. ஆனால் யார் முன்னாடியும் கூப்பிட்டுடாத.என் மானம் கப்பல் ஏறிடும்”

“அது என்ன?ஆம்பளைங்க மட்டும் பொண்ணுங்கள வாடி போடி இன்னும் வேற என்னலாமோ கூப்பிடுறீங்க, அதுவும் எல்லார் முன்னாடியும்? நாங்க கூப்பிட கூடாதா?”

“ஐயோ சாமி!பெண் குலத்தைக் காப்பாற்ற வந்த தெய்வமே! என்னை ஆள விட்ரு. எனக்கு நிறைய வேலை இருக்கு”

“ஒவ்வொரு தடவையும் இப்படியே சொல்லியே தப்பிச்சிட்டு இருக்கீங்க. இருங்க ஒரு நாள் நல்லா மாட்ட போறீங்க”

“சரிங்க மேடம். அதை அப்போ பார்க்கலாம். நான் வச்சிடுறேன் மது மா. பை” சிரித்துக் கொண்டே வைத்து விட்டான்.

அவன் போனை வைத்த பிறகும் அவன் சிரிப்பு அவள் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. இப்போதெல்லாம் அவன் அவளை மது என்றே அழைத்து வந்தான். ஏனோ அவன் அப்படி கூப்பிடும்போதெல்லாம் அவளுக்கு வானத்தில் பறப்பது போலவே இருக்கும்.

அவள் சந்தோஷமாக இருந்தாலே அதை கலைப்பதற்கென்றே ஏதாவது விஷயம் நடக்கும் அல்லது விதி ஏதாவது ரூபத்தில் வந்து சேரும். அப்படி அன்றைய அவள் சந்தோஷத்தை கெடுப்பதற்கு விதி வினோதன் ரூபத்தில் வந்து சேர்ந்தது......

புலரும்
 
Top