Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொழுது 4

Advertisement

Sakthi bala

Active member
Member
மதிவதனி தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் கயிற்றை உற்று பார்த்துக் கொண்டிருந்தாள். இறுதியாக மனோரஞ்சன் “சரி நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று சொன்னது மட்டும் தான் அவள் நினைவில் ஓடிக் கொண்டிருந்தது.

அதன் பின் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அவளுக்கு நினைவில் இல்லை. ஒரு பொம்மை போல அனைவரும் செய்ய சொன்னதை அவள் செய்தாள். அவள் கல்யாணமும் நடந்து முடிந்தது.

அவள் விருப்பத்தை யாரும் கேட்க முன்வரவுமில்லை, அவளை பேசவுடவுமில்லை. ‘எனக்குனு உணர்வுகள், விருப்பங்கள் இருக்காதா? ஏன் யாரும் அதை மதிக்கலை? ஒரு நாள் இரவு ஒரு இளைஞன்னுடன் இருந்து விட்டால் தனக்கு களங்கம் ஏற்பட்டு விடுமா?’
அப்படியென்றால் ஒரு பெண்ணை மணப்பதற்கு அவளுடன் ஒரு நாள் இரவு தங்கினால் மட்டும் போதுமா? இப்படி யோசிக்கும் அவங்க மனம் தான் களங்கம் கொண்டது’

‘யார் என்னவென்றே தெரியாமல் அவனுக்கு தன்னை கட்டிக் குடுத்து விடுவாங்களா? அவன் சரியான அயோக்கியனா இருந்தால் என்ன செய்வாங்க? அதை பத்தியெல்லாம் அவங்களுக்கு என்ன கவலை? கல்யாணம் பண்ணி குடுத்துட்டு அடுத்த வேலையை பாக்க போய்டுவாங்க. காலம் முழுக்க கஷ்டப்பட போறது நான் தானே!’

இப்படி எண்ணங்கள் அவள் மனதிலே ஓடிக் கொண்டிருக்கையிலே அவள் எண்ணங்களை தடை செய்த படி ஒரு இருமல் சத்தம் கேட்டது. அவள் நிமிர்ந்து பார்த்தாள். அவளுக்கு தாலி கட்டிய அவள் கணவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் முகத்தில் ஒரு கடினத்தன்மை தெரிந்தது.அவன் முகத்தில் இருந்து அவளால் எதையும் கண்டுக் கொள்ள முடியவில்லை.

“ஹ்ம்ம்...சாரி. உன் பேர் என்ன?”

மதிவதனிக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. அவர்கள் இருவருக்கும் மற்றவரின் பெயரே தெரியாது ஆனால் அவர்கள் இருவருக்கும் கல்யாணம் முடிந்து விட்டது.

“மதிவதனி”

“ஹ்ம்ம்....ஓகே மதிவதனி.நாம இன்னிக்கு சென்னைக்குக் கிளம்புறோம். உன் திங்க்ஸ் பேக் பண்ணி வச்சிடு” என்று கூறி விட்டு அங்கிருந்து விறுவிறு வென்று சென்று விட்டான்.

அவன் செல்வதையே அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தாள்.’என்ன இவர் வந்தார், பேரை கேட்டார், சென்னைக்கு போறோம்னு சொல்லிட்டு போய்ட்டார். என்னை ஒரு மனுசியா கூட அவர் மதிக்கலையே?! நான் பேசறதுக்கு எதுவுமே இல்லையா? இவர் பேர் கூட நமக்குத் தெரியாதே?’ என்று அலுத்துக்கொண்டாள்.

காமாட்சி அத்தை எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். மதிவதனி அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவர் தன்னை எப்படியாவது காப்பாற்றுவார் என்று நினைத்தாள்.’நீ சென்னைக்கு போக வேண்டாம். இங்கேயே இருந்துடு’ என்று அவர் சொல்வாரென்று அவள் எதிர்பார்த்தாள்.ஆனால் அவரோ அவள் முகத்தை பார்ப்பதைக் கூட தவிர்த்து வந்தார்.

மனோரஞ்சன், மதிவதனி, காமாட்சி மூவரும் கிளம்பி திருநெல்வேலி ஸ்டேஷன் சென்றனர். மனோரஞ்சன் கடிகாரத்தை பார்ப்பதும், ஸ்டேஷன் வாசலை பார்ப்பதுமாக இருந்தான்.இன்னும் சிறிது நேரத்தில் சென்னைக்குப் போகும் டிரெயின் வரவிருந்தது.

சில நிமிடங்கள் கழித்து அங்கு ரிதுநந்தன்,வினோதன்,பாலச்சந்திரன்,கார்த்திகேயன் வந்து சேர்ந்தனர். அவர்கள் யார் என்றே தெரியாமல் நின்று கொன்டிருந்தாள் மதிவதனி. அவர்கள் அனைவருமே இறுகிய முகத்துடன் இருந்தனர்.வினோதன் மட்டும் மதிவதனியை பார்த்து சிறிது புன்னைகைத்தான்

“அண்ணா வந்து....” என்று ரிதுநந்தன் ஏதோ பேச ஆரம்பிக்கவும் மனோரஞ்சன் கை நீட்டி அவன் பேசுவதை தடுத்தான்.

“ரித்து எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்” என்றான்.

சிறிது நேரத்தில் டிரெயின் வந்தது. எல்லோரும் ஏறினர். டிரெயின் திருநெல்வேலி ஸ்டேஷன் விட்டு நகர்ந்தது. மதிவதனியை சுற்றி எல்லோரும் அந்நியர்களாக அவளுக்கு தெரிந்தனர். டிரெயின் முன்னோக்கி நகர்ந்துக் கொண்டிருந்தது, ஆனால் அவள் மனம் மட்டும் அங்கிருந்து நகராமல் அங்கேயே நின்றது....

சென்னை – மனோரஞ்சன் வீடு

ஹாலில் பெருத்த அமைதி நிலவியது. அங்கிருந்த அனைவரும் ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தனர். அனைவரது முகமும் சோகத்தை பிரதிபலித்தது.

அந்த வீட்டின் பெரியவர் நாராயணன். அவரின் மனைவி பார்வதி. அவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். மூத்த மகன் சூரியநாராயணன். சூரியநாராயணனுக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவன் மனோரஞ்சன், இரண்டாமவன் ரிதுநந்தன், மூன்றாவது நிலா.

நாராயணனின் அடுத்த மகள் சகுந்தலா. அவருக்கு ஒரே பெண். பெயர் நித்யகல்யாணி. சகுந்தலாவின் கணவர் விஸ்வநாதன், சூரியநாராயணனின் நெருங்கிய நண்பர். எல்லா சந்தர்பங்களிலும், எல்லா பிரச்சனைகளிலும் அவருக்கு தோள் குடுக்கும் தோழன்.

நாராயணனின் மூன்றாவது பெண் பெயர் குந்தவை. அவர் இப்பொழுது இங்கு இல்லை.
“ஏன் இப்போ எல்லாரும் அமைதியாக இருக்கீங்க? இப்போ என்ன நடந்துடுச்சு?”

மனோரஞ்சனின் தந்தை சூரியநாரயணன் பேச்சை துவங்கினார்.
அவரின் தங்கை சகுந்தலா ஏதோ பேச ஆரம்பிக்கும் போது அவரே பேச்சை தொடர்ந்தார்.

“அப்பா நீங்க என்னப்பா சொல்றீங்க?” சூரியநாரயணன் அவர் தந்தை நாராயணனை கேட்டார்.

“இதுல நா சொல்றதுக்கு என்ன இருக்கு? அவன் வாழ்க்கைய அவனே முடிவு பண்ணிட்டான்.இதுக்கு மேல நா சொல்றதுக்கு என்ன இருக்கு? அவன் இனிமே என் பேரன் இல்ல உன் பையன், எந்த முடிவையும் நீயே எடுத்துக்கோ” என்று சொல்லிவிட்டு அவர் உள்ளே செல்ல அவர் மனைவி பார்வதி எதுவும் சொல்லாமல் நாராயனனை தொடர்ந்து உள்ளே சென்றார்.

அவரை போவதை வருத்தத்துடன் பார்த்த சூரியநாராயணன்“நடந்தது நடந்தது தான்.நடந்த எதையுமே நாம மாத்த முடியாது. அதனால் நடந்தத ஏத்துக்கறது தான் நம்ம எல்லோருக்குமே நல்லது.மனோ இங்க வரும் போது யாரும் அவன் கிட்ட இத பத்தி எதுவும் கேக்கக் கூடாது.எல்லாருக்கும் புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறன்.”

“என்ன ராஜேஸ்வரி? நான் சொன்னது உனக்கு புரிஞ்சுதா?” சூரியநாராயணன் தன் மனைவி ராஜேஸ்வரியிடம் கேட்டார்.

“இதுல நான் சொல்றதுக்கு என்னங்க இருக்கு? நான் என்ன சொல்லனும்னு எதிர்பாக்குறீங்க? மாமா சொன்ன மாதிரி அவன் வாழ்க்கையை அவன் முடிவெடுதுக்கிட்டான். என் கிட்ட சொல்லனும்னு அவனுக்கு தோனாதப்போ நான் மட்டும் என்ன சொல்ல முடியும்?” அவர் பட்டும் படாமல் பேசினார். அவர் குரலில் இருந்து தன் மகன் தன்னிடம் சொல்லாமல் வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவை எடுத்துவிட்டானே என்ற வருத்தம் மேலோங்கி ஒலித்தது.

சூரியநாராயணன் தன் மனைவியை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் குழம்பினார். தன் தங்கை சகுந்தலாவிடம் திரும்பி,” என்னமா? நீ என்ன சொல்ற?”

“அண்ணா. தயவுசெஞ்சு இந்த விஷயத்தை பத்தி என் கிட்ட எதுவும் கேக்காதீங்க. அப்புறம் நான் ஏதாவது சொல்லிட போறேன்! கடைசியில எல்லாருமா சேர்ந்து என்னையும் என் பொன்னையும் ஓரங்கட்டிடீங்களே! விட்ருங்க எங்கள விட்ருங்க. நாங்க எக்கேடும் கெட்டு போறோம்” என்று சொல்லிவிட்டு அவர் அழுது கொண்டே உள்ளே சென்றார்.

சூரியநாராயணனின் முகம் மிகுந்த கவலையை பிரதிபலித்தது. விஸ்வநாதன் மட்டும் சூரியநாரயணனிடம் சென்று அவர் தோளில் கை போட்டு, “கவலைப்படாதடா. மாறாதது எதுவுமே இல்லை. இந்த கஷ்டமும் கடந்து போகும். சீக்கிரம் எல்லாமே சரி ஆயிடும்”

“ரொம்ப சாரி மாப்பிளை. இந்த விசயத்துல ரொம்ப பாதிக்கப்பட்டது நீயும் சகுந்தலாவும், நித்யாவும் தான். ஆனால் அதை கூட மறச்சிகிட்டு நீ எனக்கு ஆறுதல் சொல்றியே டா”

“டேய்....நடந்தது நடந்துருச்சு. அதை யாராலும் மாத்த முடியாது. அடுத்து என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம். கடவுள் ஒரு கதவை அடைச்சா இன்னொரு கதவை தொறப்பார். நித்யாவோட வாழ்க்கை எப்படி அமையணும்னு அந்த கடவுள் முடிவு பண்ணி வச்சுருக்காரோ அது படியே நடக்கட்டும். இப்போதைக்கு நீ ராஜேஸ்வரியையும், மாமா, அத்தையும் எப்படி சமாதானப்படுத்தலாம்னு யோசி” சொல்லிவிட்டு அவர் சென்றார்.

எல்லோரும் அவரவர் வேலையில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் கவனம் வாசலிலேயே இருந்தது. சிறிது நேரத்தில் கார் சத்தம் கேட்டது. ஆனால் யாரும் வெளியே வந்து எட்டி பார்க்க துணியவில்லை. சூரியநாராயணனும், விஸ்வநாதனும் மட்டும் வாசலுக்கு வந்து நின்றனர்.

ஒரு வாடகை காரில் மனோரஞ்சன், மதிவதனி, ரிதுநந்தன் வந்து இறங்கினர். மனோவுக்கு தெரியும் அவன் இனிமேல் பல சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும் என்று அதனால் ஒரு கடின முகத்துடனே இருந்தான்.

மதிவதனிக்கோ ஒன்றுமே புரியவில்லை.எல்லையற்ற பயம் மட்டும் அவள் நெஞ்சில் நிறைந்திருந்தது.ரிதுநந்தன் இறங்கியவுடன் நேராக தன் அறைக்குள் நுழைந்து விட்டான். யாரிடமும் எதுவும் பேசவில்லை.

மனோரஞ்சனும் மதிவதனியும் வீட்டுக்குள் படியேறும்போது “அங்கேயே நில்லுங்க” என்ற குரல் அவர்கள் இருவரையும் கட்டிப்போட்டது. அந்த குரலுக்கு சொந்தக்காரரை நிமிர்ந்து பார்த்த மனோரஞ்சன் ஆச்சரியத்தின் உச்சிக்கு சென்றான்!

புலரும்
 
Top