Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொழுது 3

Advertisement

Sakthi bala

Active member
Member
கல்யாண தீர்த்தத்தின் அழகை தன் காமெராவினால் பதிந்து கொண்டிருந்த மனோரஞ்சன் ஒரு அலறல் குரலை கேட்டு அதிர்ந்து போனான். அந்த குரல் வந்த திக்கை நோக்கி ஓடினான்.

அங்கே தண்ணீருக்குள் ஒரு பெண் மூழ்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவள் மூச்சுக்கு திணறுவதை கண்ட அவன் எதுவும் யோசிக்காமல் சட்டென்று நீருக்குள் குதித்தான்.
மூழ்கிக் கொண்டிருந்த அவளை நோக்கிச் சென்று அவள் தலை முடியை பிடித்து இழுத்து அரும்பாடுபட்டு கரைக்கு வந்து சேர்ந்தான்.

அந்த பெண் மூச்சு பேச்சில்லாமல் இருப்பதைக் கண்டு அவள் கன்னத்தில் தட்டி அந்த பெண்ணை எழுப்ப முயற்சி செய்தான். அவள் மயக்கத்தில் அம்மா, அப்பா என்று உளறினாள். பின் மயக்கம் நன்றாக தெளிந்து எழுந்து அமர்ந்தாள்.

மயக்கத்தில் இருந்து எழுந்து உட்கார்ந்த மதிவதனிக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. ‘நாம் எங்கு இருக்கிறோம்? இது தான் சொர்கமா? எங்கே என் அம்மா அப்பா?’ என்று நினைத்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். அப்பொழுது தான் அவள் சாகவில்லை என்பதை உணர்ந்தாள். தன்னை யாரோ காப்பாற்ற வந்தார்களே? என்று நிமிர்ந்து பார்த்தாள்.

அங்கே ஒரு இளைஞன் நின்று சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தான். இவர் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறார்? என்று யோசித்து கொண்டே மதிவதனியும் சுற்றி பார்த்தபோது தான் அவளுக்கும் நிலைமை முற்றிலுமாக புரிந்தது.

சுற்றி நன்கு இருட்டிவிட்டது மட்டுமல்லாமல் ஒரு ஈ, காக்கை கூட அங்கு இல்லை. அவள் வயிற்றில் ஒரு பயபந்து எழுந்து வந்தது.

மனதை திடப்படுத்திக்கொண்டு எழுந்து நின்ற அவள், முதலில் அவளை காப்பாற்றியதற்கு அவனிடம் நன்றி சொன்னாள்.

அவனோ,”ஆமா....இப்போ அது ஒன்னு தான் ரொம்ப முக்கியம்! நீச்சல் தெரியலேனா எதுக்கு தண்ணில இறங்குற? என்ன தற்கொலை முயற்சியா?” அவளை சந்தேகத்துடன் பார்த்தான் அவன்.

“அய்யயோ! அதெல்லாம் இல்லை. அந்த புறா....” அவள் சொல்ல ஆரம்பிக்கும் முன்பே அவளை தடுத்தவன்,”சரி சரி, உன் கதையெல்லாம் கேட்க எனக்கு நேரம் இல்லை. என் கூட வந்தவங்க என்னை தேடுவாங்க. முதல இங்கேருந்து ஊருக்குள்ள இறங்கி போகணும். அதுக்கு உனக்கு வழி தெரியமா?” அவன் எரிச்சலுடன் கேட்டான்.

அவன் குரலில் தெரிந்த எரிச்சல் அவளுக்கு நெருடியது. நாம் சொல்வதை அவர் காது கொடுத்து கூட கேட்கவில்லேயே என்று நினைத்தவள், தனக்கு வழி தெரியுமென்று தலையை ஆடினாள்.

அந்த இடத்தை சுற்றி பெரிதாக வீடுகள் ஒன்றும் கிடையாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வீடுகளே இருந்தன. அவள் தோழி மித்ராவின் வீடு மட்டுமே பக்கத்தில் இருந்தது. அவளும் ஊருக்கு சென்று விட்டாள்.

இவ்வளவு நன்றாக இருட்டியபின் வேறொருவர் வீட்டுக்கு அதுவும் ஒரு இளைஞனோடு சென்று நிற்கவே முடியாது. இதெல்லாம் யோசித்தபின் ஊருக்குள் இறங்கி செல்வது ஒன்றே வழி என்று தீர்மானித்தாள் மதிவதனி.

‘நமக்கு தான் வழி நல்லா தெரியுமே? எதுக்கு பயப்படனும்? எப்படியும் சீக்கிரம் ஊருக்குள் போய்டலாம். போன பிறகு இவருக்கு ஒரு நன்றி சொல்லிட்டு கடைசி பஸ் புடிச்சாவது வீட்டுக்கு போய்டலாம்’ இவ்வாறு எண்ணியவாறே வேகமாக நடக்க முயன்றாள் மதிவதனி.

நாம் எண்ணியதெல்லாம் நடந்து விட்டால் கடவுள் இல்லையென்று ஆகிவிடாது.

தண்ணீரில் விழுந்த அதிர்ச்சியாலும், உடம்பில் அங்கங்கே பட்டிருந்த அடியும் அவளை நடக்க விடாமல் செய்தது. இருட்டில் வழியும் சரியாக புலப்படவில்லை.பயம் வேறு அவள் மனதில் விஸ்வரூபம் எடுக்க அதன் வெளிப்பாடாக அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

மனோரஞ்சனின் கண்களில் கோபம் பிறந்தது,” “ஏற்கனவே உன்னால தான் நான் இங்கே மாட்டிட்டு இருக்கேன். உனக்கு வழியும் தெரியல, இதுல அழுக வேறயா?” என்று அவன் எரிந்து விழுந்தான்.

மதிவதனி கஷ்டப்பட்டு தன் அழுகையை அடக்க முயன்றாள்.’ச்சே என்ன இவர் இப்படி பேசுறாரே? இருந்தாலும் அவர் சொல்றதும் சரி தான்! நம்மை காப்பாத்த போய் தான் அவருக்கு இந்த கஷ்டம். இப்போ என்ன செய்றது? எப்படி வீட்டுக்கு போறது? அத்தைக்கு என்ன பத்தி சொல்றது? என்றெல்லாம் எண்ணி குழம்பினாள்.

மனோரஞ்சன் தன் மொபைலை எடுத்து யாரையாவது அழைத்து விபரம் சொல்லலாம் என்று பார்த்தான். ஆனால் சுத்தமாக டவர் இல்லை. மதிவதனியின் போனிலும் டவர் இல்லை.

“சரி இதுக்குமேல இருட்டில நாம வழி கண்டு பிடிச்சி போறது கஷ்டம். அதனால இங்கேயா எங்கயாவது இருப்போம். காலைலே வழி கண்டு புடிச்சி போலாம்” என்று கூறினான்.
அவளுக்கும் அது தான் சரி என்று பட்டது. எப்படியும் இந்த இருட்டில் வழி கண்டு பிடிப்பது கஷ்டம். அப்படியே கண்டு பிடித்து சென்றாலும் ஏதாவது பூச்சி பொட்டு அவர்களை வந்து தாக்கினால் ஒன்றும் செய்ய முடியாது.

அதனால் மறுநாள் வீட்டுக்கு சென்றவுடன் அத்தையிடம் நடந்ததை சொல்லிகொள்ளலாம், அவர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்று நினைத்தவள் எங்கே உட்காருவது என்று சுற்றி பார்த்தாள்.

அங்கு ஒரு பெரிய மரத்தின் இரண்டு கிளைகள் ஒன்றோடொன்று பின்னி பினைந்து ஒரு பலகை போல இருந்தது. அதில் ஒரு மரக்கிளையில் அவளும் இன்னொன்றில் மனோரஞ்சனும் அமர்ந்து கொண்டனர். இருவருமே சோர்வாக இருந்ததால், உட்கார்ந்தபடியே சீக்கிரம் தூங்கி விட்டனர்.

அடுத்த நாள் காலை எப்பொழுதும் போல புலர்ந்தது. ஆனால் மதிவதனிக்கும் மனோரஞ்சனுக்கும் அந்த காலை வேளை எப்பொழுதும் போல புலரவில்லை. அது அவர்கள் வாழ்க்கையை மாற்ற போகும் காலையாக புலர்ந்தது.

வெளிச்சம் நன்றாக பரவியதாலும், தண்ணீரில் விழுந்த அதிர்ச்சி சற்று மறைந்தாலும்
இப்போது மதிவதனியால் வழி நன்றாகக் கண்டு புடிக்க முடிந்தது.மனோரஞ்சன் அவளை வீட்டுக்கு கொண்டு சென்று விட்டுவிட்டு பின் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் செல்வதாக கூறினான்.

அவள் வேண்டாமென்று எவ்வளவோ மறுத்தும் அவன் கேட்கவில்லை.

“உங்க வீட்ல கேட்டா என்ன சொல்லுவ? எதுக்கும் நானே உங்க வீடு வரைக்கும் வந்து நடந்தது என்னனு அவங்களுக்கு சொல்லிடுறேன்.” என்று பிடிவாதமாக கூறி விட்டான்.
அவன் மனதில் அவள் தற்கொலைக்கு முயன்றிருப்பாளோ என்ற சந்தேகம் இன்னும் மறையவில்லை. அதனால் அவளை வீட்டில் விட்டுவிட்டு அவள் பெற்றோரிடம் சொல்லிவிட்டு போவது தான் நல்லது என்று தீர்மானித்தான்.
அவர்கள் வீட்டை நெருங்கும் போது ஒரு கூட்டம் அங்கு மதிவதனியை தேட கிளம்பி கொண்டிருப்பதைக் கண்டனர். மதிவதனியையும், மனோரஞ்சனையும் பார்த்த அவர்கள் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அவளை பற்றி பேச ஆரம்பித்தனர். யாருமே அவள் பேசுவதையோ, மனோரஞ்சன் பேசுவதையோ காது கொடுத்துக் கேட்பதாக இல்லை.

அவள் அத்தை கூட எதுவுமே பேசாமல் அமைதியாக நின்று அவளை பார்த்து கொண்டிருந்தார். இரண்டு மூன்று தடவை அவர் ஏதோ பேச வருவது போல வாயை திறந்தார், ஆனால் பேச பயந்து வாயை மூடி கொண்டார்.

மனோரஞ்சன் அவர்களிடம் பொறுமையாக சூழ்நிலையை எடுத்து விளக்க முயன்று தோற்றான். யாரும் அவன் சொல்வதை ஏற்பதாக இல்லை. ஆளுக்கொரு கருத்தை சொல்லிக் கொண்டிருந்தனர்.

“கடைசியா இப்போ என்னதான் சொல்ல வறீங்க?” என்று மனோரஞ்சன் கோபத்தில் கத்தினான்.

“தம்பி நீங்க எங்க பொண்ணு கூட ஒரு நாள் ராத்திரி பூரா இருந்திருக்கீங்க. இனிமே அந்த பொண்ண யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க? அதனால நீங்க தான் கல்யாணம் பண்ணிக்கணும்.”

“என்ன விளையாடுறீங்களா? எந்த காலத்துல இருக்கீங்க நீங்கல்லாம்?! நான் தான் நேத்து என்ன நடந்துச்சுன்னு சொன்னேன்ல. இதுக்கு போய் நான் எப்படி அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியும்?”

“அதெல்லாம் எங்களுக்கு தெரியாது தம்பி. உங்க ஊர்ல இதெல்லாம் சாதாரணமா இருக்கலாம். ஆனா இது கிராமம். இங்க சில கட்டுபாடுகள் இருக்கு. அது படி தான் நாங்க வாழ்ந்துட்டு வரோம்.இப்போ நீங்க அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கலேனா அந்த பொண்ணு வாழ்நாள் முழுசும் இப்படி தான் இருக்க போகுது. விஷயம் தெரிஞ்சவங்க யாரும் அந்த பொன்னை கல்யாணம் பண்ணிக்க முன் வர மாட்டங்க. அப்போ அந்த பொண்ணோட வாழ்க்கைக்கு என்ன பதில் சொல்ல போறீங்க?” கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் கேட்டார்.

மதிவதனி நடப்பது எதையும் நம்ப முடியாமல் அழுது கொண்டே இருந்தாள். அவளை தேற்றுபவர் எவரும் இல்லை. மனோரஞ்சன் ஒரு முறை அவளை ஆழ்ந்து பார்த்தான். பின்பு ஒரு முடிவுடன் அனைவரையும் பார்த்து தன் முடிவை கூறினான்......

புலரும்

 
Top