Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூவாசம் மேனி வீசுதம்மா - 9

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
பூவாசம் மேனி வீசுதம்மா – 9

கமலக்கண்ணன், கஸ்தூரியை புரிந்துகொள்ள வேண்டும் என்று எடுக்கும் முயற்சிகள் எல்லாம் சரியாய் இருக்கிறதா என்றால், அது இல்லை. காரணம் பெரிதாய் எதுவுமில்லை, கஸ்தூரியே. அவளுக்கும் சில நேரங்களில் பழைய சங்கதிகள் நினைவில் வந்துவிடுகிறது.

அவள் இயல்பாய் ஒரு விஷயம் பேச, அது அவனுக்கு சில நேரம் தன்னை நோகடிக்கிறாளோ என்ற ரீதியில் சிந்திக்க வைத்தது.
கஸ்தூரியின் படிப்பினை நிறுத்தியதில் அவனுக்கு உடன்பாடே இல்லை. அன்று அவனால் எதுவும் சொல்ல முடியாது போனது. இன்று அவள் அவனின் மனைவி. அவனுக்கு அவளைச் சார்ந்த முடிவுகள் எடுக்கும் உரிமை இருக்கின்றது என்று, அவளிடம் கேட்டான்.

“மேல படிக்கிறியா கஸ்தூரி.. நான் ஏற்பாடு செய்யவா..?” என்று, அப்படியே அவளின் முகம் மாறிப்போனது.

பதில் சொல்லாது அவர்களின் அறையை கூட்டிக்கொண்டு இருந்தாள்.

“கஸ்தூரி உன்கிட்ட தான் கேக்குறேன்..” என, “கேக்குது..” என்றவளின் தொனியும் மாறியிருந்தது.

“படிக்கிறியா நீ..” என, “இப்போ என்ன திடீர்னு..” என்றாள்.

“தோனுச்சு.. நீயும் சின்ன புள்ளல நல்லா படிப்ப தான...” என்றதுமே

“அது சின்ன புள்ளைல..” என்றாள் வெடுக்கென்று.

மில்லுக்கு கிளம்பிக்கொண்டு இருக்கையில் தான் இதனை ஆரம்பித்தான். முதல் நாள் இரவு கூட கஸ்தூரி அவனோடு நன்றாய் தான் பேசினாள். அத்தனை ஏன் கமலக்கண்ணன் அவளுக்கு முத்தம் கூட வைத்தானே..

பேசிக்கொண்டு இருக்கும்போதே பட்டென்று வைத்தவன், ‘எதையாவது சொல்லிட போறா..’ என்று பார்க்க, கஸ்தூரி எதுவுமே சொல்லவில்லை..

‘பார்ரா..’ என்று பார்த்தவன், இன்னும் அழுத்தமாய் ஒன்று வைக்க, அவளுக்கு சிரிப்பு வந்ததுவோ என்னவோ, முகத்தை லேசாய் திருப்பிக்கொள்ள “எதுவுமே சொல்லல...” என்றான்..

“என்ன சொன்ன சொல்ற??” என்றவளோ திரும்பிடவே இல்லை.

“இப்போ ஒன்னு வச்சேனே அதுக்கு...”

“அ... சின்ன புள்ளல புஸ் புஸ் கன்னம்னு எத்தன வச்சிருப்பா.. எப்போ என்ன சொன்னேனாம்...” என்று கஸ்தூரி சொல்லும்போதே,

‘போச்சுடா இவ இன்னமும் சின்ன புள்ளைல இருந்து வெளிய வரலையா..’ என்றெண்ணி எழுந்து அமர்ந்து அவளினைப் பார்க்க, அவளோ கிண்டலாக சிரிப்பது தெரிந்தது..

“கள்ளி டி கஸ்தூரி நீ..” என்றவன், அவளின் முகத்தினை திருப்பி, “இப்போ வச்சதும் சின்ன புள்ளைல வச்சதும் ஒண்ணா??” என,

“அதே எடத்துல வச்சா அப்புடித்தான் தோணும்..” என்றவளுக்கு அவளைப் மீறிப் பேச்சு வந்துகொண்டு இருந்தது.

இது கமலக்கண்ணனின் நெருக்கம் கொடுக்கும் பேச்சு.. அவளின் இவ்வார்த்தைகள் அவனுக்கும் ஒரு ஆசையை கிளப்பிவிட,

“ஓ..!! வேற இடம் பாக்கணுமா...” என்று அவள் மீது நிறுத்தி நிதானமாய் பார்வையை ஓட்ட, “ச்சீ போ..” என்றவள் திரும்பி குப்புறப் படுத்துக்கொள்ள, அவள் புரண்டு படுத்ததில் சேலையும் விலகியிருக்க, வாடாமல்லி நிற சேலைக்கும் ரவிக்கைக்கும் இடையில் வெளிரீன தெரிந்த அவளின் முதுகும், பின்னிடுப்பும் தெரிய,

“ஓய் கஸ்தூரி...” என்று சல்லாபமாய் ஒலித்தது அவனின் குரல்.

“நான் திரும்ப மாட்டேன்...” என்று கஸ்தூரி இன்னும் ஆழமாய் தலையானையில் முகம் புதைக்க,

“திரும்பாத போ டி.. எனக்கென்ன வேற இடமா இல்லை..” என்றவன், அவளின் தண்டுவடத்தில் முத்தமிட, கஸ்தூரிக்கு மேனி சிவந்தும் போனது, சிலிர்த்தும் போனது.

“பேசாம தூங்கு நீ...” என்று மட்டும் அவளின் குரல் மெல்லமாய் கேட்க, “பேசுனாதான் தூக்கம் வரும்..” என்று அவனும் சொல்ல,

“பேச மட்டும்தான் செய்யணும்..” என்று அவளும் சொல்ல,

“சரி சரி இன்னிக்கு இது போதும்..” என்றவன் அவனின் சிங்கப்பூர் கதைகளை எல்லாம் சொல்ல, அப்போதே படிக்கிறாயா என்று கேட்டு இருக்கலாம். பேச்சு சுவாரஸியத்தில் கமலக்கண்ணனும், அதனை அப்போதுவிட்டு விட்டு இப்போது கேட்க, கஸ்தூரியின் பதில்கள் அவனுக்கு சங்கடத்தை தான் கொடுத்தது.

“ஏன் இப்போ என்ன?? படிப்புக்கு வயசு எல்லாம் தேவையில்ல.. நீ படி..” என்று கண்ணன் சொல்ல,

“ஏன், உனக்கு பொண்டாட்டிய வர்றவ படிச்சிருக்கணும்னு நினைச்சியா..??” இதுதான், இவ்வளோதான் அவள் கேட்டது. சுறுசுறுவென்று கண்ணனுக்கு கோபம் வந்துவிட்டது.

“ஏய்.. நான் என்ன கேக்குறேன்.. நீ என்னத்த சொல்ற. எனக்கு பொண்டாட்டியா நீ மட்டும்தான் டி வரணும்னு நெனச்சேன்.. நீ எப்புடி இருந்திருந்தாலும் உன்னத்தான் கல்யாணம் பண்ணிருப்பேன். அதை புரிஞ்சுக்கோ..” என்று கத்த, செய்துகொண்டு இருந்த வேலையை விட்டுவிட்டு அவனை பார்த்து நிற்க,

அவளின் முகம் பார்த்தவன், “எனக்கு சத்தியமா ஒண்ணுமே புரியல..” என்றவன், அப்படியே கட்டிலில் அமர்ந்துவிட்டான்.

அவள் சிரித்துப் பேசுகையில் எல்லாம் சும்மா இருப்பவன், அவளின் பதில்கள் வேகமாய் வருகையில் இப்படி யோசிக்கத்
தொடங்கிப்போனான்.

“என்ன புரியணும் உனக்கு..” என்றவள், கை கழுவி விட்டு, அவனின் அருகே அமர, “நீ படிக்கணும்னு நெனச்சது தப்பா..??” என்றான் இவனும் கோபம் குறையாது.

“தப்பில்ல.. என் படிப்ப நிறுத்தினப்போ, நீயும் கூட சின்ன பையன் இல்ல.. காலேஜ் படிச்சிட்டிருந்த. அப்போ இதை நீ வந்து சொல்லிருந்தா நிஜமா நான் சந்தோச பட்டிருப்பேன். ஒவ்வொரு தடவையும் நீ வர்றப்போ எல்லாம், எங்கிட்ட வந்து பேசுவியான்னு பார்த்திருக்கேன். இப்பவும் கூட நான் சம்மதம்னு சொல்லாட்டி இந்த கல்யாணம் நடந்திருக்காது.

உனக்கு எப்படி சிலது புரியலையோ, அதுபோல தான் எனக்கும். ஒருவேள உனக்கு படிச்சா பொண்ணு பொண்டாட்டிய வரணும்னு ஆசையோன்னு தெரிஞ்சக்கத்தான் கேட்டேன். இதுல தப்பா என்னாருக்கு தெரியலை...” என்று அவளும் சொல்ல, பேசும் அவளின் முகத்தினையே தான் பார்த்துகொண்டு இருந்தான்.

மறைத்து பேசுவதோ, மாற்றி பேசுவதோ என்றுமே கஸ்தூரியிடம் இல்லை. இருந்தும், அவள் இன்னமும் பழைய விசயங்களை எல்லாம் மறந்திடவில்லையோ என்றெண்ணியவன்,

“இப்பவும் சொல்றேன்.. பழசு எல்லாம் நினைச்சா இப்போ நம்ம வாழ்றது கஷ்டம்..” என,

“முடிஞ்ச அளவு மாத்திக்கப் பாக்குறேன்..” என்றவளின் பதில் அப்போதும் சட்டென்று வர,

“இதோ.. இதான்.. நீ சட் சட்டுன்னு பதில் சொல்றப்போ, மனசுக்குள்ள அதெல்லாம் வச்சிட்டு பேசுறியோன்னு இருக்கு..” என்று அவனும் கேட்டுவிட்டான்.

இப்போது அவள் முறைத்து “நீ கேள்வி கேட்ட, நான் பதில் சொன்னேன்.. யோசிச்சு சொல்றதை தான் யோசிச்சு சொல்ல முடியும்..” எனும்போதே, கீழிருந்து கல்பனா அழைப்பது கேட்டது.

“இந்தா வாறே மதினி..” என்றவள், “சாப்பிட எடுத்து வக்கிறேன்...” என்றபடி சென்றுவிட்டாள்.

இப்போதும் கூட அவள் படிக்கிறேன் என்றோ இல்லை வேண்டாம் என்றோ சொல்லிடவில்லை. ஆகமொத்தம் அவன் விசயங்களுக்கு எப்போதுமே கஸ்தூரியின் பேச்சு இப்படியானதாய் இருக்க, திணறித்தான் போனான் கமலக்கண்ணன்.
மில் கிளம்பத் தயாராகி வர, கஸ்தூரி தான் அவனுக்கு உண்ண எடுத்து வைக்க, சற்று தள்ளி பின்னே சந்திரபாண்டி அமர்ந்து செய்தித்தாள் படித்துக்கொண்டு இருக்க,

“அம்மா அக்கால்லாம் எங்க??” என்றபடி இவனும் உண்ண அமர்ந்தான்.

“ம்ம்.. மதினிய பிடிச்சு சீட்டு கணக்கு எழுத சொல்லிட்டிருக்காங்க..” என்றபடி பரிமாற,

“அடுத்து உன்னத்தான் எங்கம்மா பிடிக்கும்..” என்று கண்ணன் சொல்லும் போதே கஸ்தூரிக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாய் முருகேஸ்வரி “ந்தா இதெல்லாம் நீயும் பழகு.. எனக்கடுத்து இதெல்லாம் நீதேன் பாக்கணும்..” என்றுகொண்டு இருந்தார்.

இவள்தான் கண்ணனிடம் சொல்லவில்லை..!!

முருகேஸ்வரி மற்றது எல்லாம் விடுத்தது, மாமியார் நாற்காலியில் வேகமாய் ஏறி அமர்ந்துகொண்டார்..!

‘இதைச் செய், அதைச் செய், இதான் நம்ம வீட்டு பழக்கம். இதெல்லாம் நீதான் செய்யணும்..’ என்று அவர் ஆரம்பித்துவிட்டார். அதாவது கஸ்தூரியாய் எதையும் செய்ய ஆரம்பிக்கும் முன்னம், அவரின் பாங்கினை அவளிடம் நிலைக்கச் செய்தார். அதில் ஒன்று இந்த சீட்டு விஷயம்.

முதல் கொஞ்ச நாள், கல்பனாவிடம் சொல்லி சொல்லி முருகேஸ்வரி பேசிக்கொண்டு இருந்தார். நேர் பேச்சுக்கள் இல்லை.
இதனைக் கவனித்த கல்பனா, “ம்மா.. நான் இன்னும் நாலு நாள்ல கிளம்பிடுவேன்.. அதுக்கப்புறோ உம்மருமவக்கிட்ட நீ எப்புடி பேசுவ??” என,

“அ..!! எனக்கென்ன பயமா.. சரி புதுசா வந்திருக்காளே கொஞ்சம் விட்டுப் பிடிப்போம்னுதான்..” என்று இழுத்தவர், மெல்ல கஸ்தூரியிடம் பேச்சுக் கொடுக்க, அவளும் அவர் சொல்வதற்கு நல்லதனமாய் பதில் சொல்ல

‘யப்பாடி..!! சண்டை எல்லாம் போடமாட்டா போலிருக்கு..’ என்று எண்ணியவர், அடுத்து அவரின் வேலையை ஆரம்பித்து விட்டார்.

“என்னம்மா... இப்புடி தொபுக்கடீர்னு விழுந்துட்ட...” என்று கல்பனா கேட்டதற்குக் கூட,

“சண்ட போட்டு வழிக்கு கொண்டு வர்றது ஒருவகைன்னா, சமாதானமா போயி வழிக்குக் கொண்டு வர்றது ஒரு வகை டி.. இதெல்லாம் உனக்குப் புரியாது...” என்றுவிட்டுப் போக,

“என்னவோ போ.. ஆனாலும் நீ ரொம்ப மாமியார்தனம் செய்ற..” என,

“எம்மருவக்கிட்ட நா மாமியார்தனம் செய்யாம எவ டி செய்வா??” என்ற முருகேஸ்வரியின் பேச்சு கஸ்தூரிக்கே ஆச்சர்யம் தான்.
அவளுமே கூட, முருகேஸ்வரி ஜாடை மாடையாய் பேசுவார் என்றுதான் நினைத்திருந்தாள். ஒருவகையில் தன்னை அதற்குத் தயார் செய்திருந்தாள். அதைவிட்டு “நல்லா பளிச்சுன்னு கட்டு.. தலை நிறைய பூ வையி.. அவன் வர்றப்போ சிரிச்ச முகமா இரு..” என்று சொல்பவரிடம் இவள் என்னதான் செய்ய முடியும்.

ஆகமொத்தம் அந்த வீட்டினில் இவளிடம் ஒட்டாது இருந்தது சந்திரபாண்டி மட்டுமே. அவளும் அவரை கண்டுகொள்ளவில்லை.

இப்போதும் கூட, அவர் அங்கு இருப்பதாய் கஸ்தூரி பாவிக்கவில்லை. கமலக்கண்ணனும் கிளம்பும் வேகத்தில் உண்டுகொண்டு இருக்க, சந்திரபாண்டியோ விடாது இருமிக்கொண்டு இருக்க, சடுதியில், ஒரு டம்ப்ளரில் தண்ணீர் ஊற்றியவள், அப்படியே நின்றும் போனாள்.

கொண்டு போய் கொடுப்பாளோ என்று கமலக்கண்ணன் பார்க்க, அவளோ ரோகிணியிடம் கொடுத்து கொடுக்கச் சொல்ல,

“நீ போய் கொடுத்தா என்ன??!!” என்றான் மெதுவாய் கமலக்கண்ணன்.

“நான் கொடுத்தா வாங்குவாங்களா?!! வாங்கலைன்னா எனக்குக் கஷ்டம்.. அங்கன போய் வச்சிட்டு வந்தா அவருக்கு மரியாதையா இருக்காது. அதான்...” என்று கஸ்தூரி சொல்ல, இது சந்திரபாண்டி காதிலும் விழுந்தது.

கமலக்கண்ணன் திரும்பி அப்பாவினைப் பார்க்க, அவரோ எழுந்து உள்ளே போய்விட்டார்.

“அவர் எங்கிட்டவே அப்படித்தான்..” என்று கண்ணன் மேற்கொண்டு எதையோ சொல்லவர, “சாப்புடு.. இப்போ இதெல்லாம் பேசவேணாம்..” என்று கஸ்தூரி சொல்லும்போதே,

“எங்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்வ நீ??” என்று அவனும் கேட்க,

“இப்போவேணாம்.. அப்புறம் பழசெல்லாம் நெனக்கிறேன்னு சொல்லுவ.. நமக்குள்ள எல்லாமே சரியாகட்டும். மொதல்ல நம்ம நல்லபடியா எல்லாத்தையும் ஆரம்பிப்போம். அப்புறம் மத்தது எல்லாம் பேசுவோம்..” என்று கஸ்தூரி சொல்லும் போதே, முருகேஸ்வரி வந்துவிட்டார்.

“என்னடா இன்னுமா கிளம்பாம இருக்க??” என்றபடி.

“சாப்பிடாம போகச் சொல்றியா..” என்று கமலக்கண்ணன் எரிந்து விழ,

“அட..!!” என்று கன்னத்தில் கை வைத்தவர் “இவே எதுக்கு கடுகா வெடிக்கிறான்...” என்று கஸ்தூரியிடம் கேட்க,

“ம்ம்ம் நீங்க செஞ்ச சட்டினியில கடுகு நெறைய இருக்காம் அதான்..” என்று அசால்ட்டாய் கஸ்தூரி சொல்லிவிட்டுச் செல்ல, முருகேஸ்வரி புரியாது பார்த்து நின்றார்.

கிண்ணத்தில் இருந்த சட்டினியை கரண்டி போட்டு இரண்டு கிண்டு கிண்டியவர் “கண்ணா.. நெஜமா அதுக்கா கோவமாருக்க..” என,

கஸ்தூரி சொல்லிவிட்டு போன தினுசில் அவனுக்குச் சிரிப்பு வேறு வந்திருக்க, முருகேஸ்வரியின் முன்னம் இப்போது சிரித்துவைத்தால் அம்மா எதையாவது நினைப்பார் என்று,

“ம்மா நீயாவது இவ்வளோ கடுகு போட்டு சட்டினி செய்ற.. அவளுக்கு அதுகூடத் தெரியாது போல..” என்றுசொல்லி கிளம்பிவிட்டான். விட்டால் போதும் என்றானதுபோல் இருந்தது.

கிளம்பி வரும் வழியிலேயே மரிக்கொழுந்து வர, அவனோ இவனைப் பார்த்து இளிக்க “என்னடா சிரிப்பே சரியில்ல..” என்றபடி வண்டியை நிறுத்தினான் கமலக்கண்ணன்.

மரிக்கொழுந்தோ அப்போதும் அவனைப் பார்த்து இளிக்க, “ஏய் என்னடா...” என,

“வர வர நீ ரொம்ப அழகாயிட்டே போறியே மாப்புள்ள.. என்ன விஷயம்..” என்று விஷமமாய் மரிக்கொழுந்து புருவத்தை உயர்த்த,

“போடா கிறுக்கு பயலே..” என்றுவிட்டு கமலக்கண்ணன் பைக்கை கிளப்பப் பார்க்க “ஏய்.. நில்லு நில்லு..” என்றான் மரிக்கொழுந்து.

“என்னடா...” என்று கண்ணன் பல்லைக் கடிக்க, “நெனச்ச மாதிரி கல்யாணம் பண்ணிட்ட அந்த புள்ளைய.. சந்தோசமா பேசுவன்னு பாத்தா எரிஞ்சு விழற...” என்றுகேட்ட மரிக்கொழுந்துவின் பார்வை இப்போதே மாறியிருந்ததது..

செல்லப்பாண்டி தான் கேட்க சொல்லியிருந்தார். “எலேய் மரி.. நா போயி இதெல்லாம் கேக்க முடியாது.. அதனால மாப்புள்ளக்கிட்ட லேசுபாசா விசாரி சந்தோசமா இருக்காங்களான்னு.. நீயா கேக்குற மாதிரி கேட்டு வையி..” என்று சொல்லி அனுப்பியிருந்தார்.

அதனை இப்போது மரிக்கொழுந்துவும் கேட்க, கமலக்கண்ணனோ எரிச்சலாய் பேசவும் இவனுக்கு முகம் மாறிப்போனது.

‘இவன் வேற..’ என்று எண்ணிக்கொண்ட கமலக்கண்ணன் “இப்போ உனக்கு என்ன தெரியனும்??” என,

“ஆ...!! பொடலங்கா.. சந்தோசமா இருக்கியான்னு கேட்டா வல்லுன்னு விழுற...” என்று மரிக்கொழுந்தும் எகிற,

“அது போறவன நிறுத்தி வச்சு கேட்டா..” என்றவன் “ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்டா.. போதுமா...” என்று சொல்லிக்கொண்டே சென்றுவிட்டான் கமலக்கண்ணன்.

இவை எல்லாம் அப்படியே செல்லப்பாண்டியின் காதுக்கு போக, வடைபாட்டியிடம் “ந்தா கெழவி.. அப்புறமேட்டி உம்பேத்தி வந்தா கொஞ்சம் புத்திமதி சொல்லி வையி...” என,

கண்ணன் சொல்லிவிட்டு சென்றதுபோல், கல்பனாவோடு சேர்ந்துதான் கஸ்தூரி அவர்களின் தோட்டத்திற்கு வர, அன்றைய தினம் இருவர் மட்டுமே வேலையில் இருக்க,

“நீ இரு கஸ்தூரி.. நான் சோளக்காடு எல்லாம் பாத்துட்டு வர்றேன்..” என்று கல்பனா கிளம்பிடவும்,

“என்ன கெழவி சாப்பிட்டியா??” என்றபடி அமர்ந்தாள் கஸ்தூரி.

“ம்ம் ஆச்சு..” என்றவர் “நீ என்ன சாப்பிட்ட..” என்றவர், வாஞ்சையாய் அவளின் கன்னம் தடவ, கஸ்தூரியும் அவரின் கையை பிடித்துகொண்டார்.

“சந்தோசமா இருக்கியா கண்ணு..” என, இந்த மூன்று வார்த்தைகளில் தான் எத்தனை அர்த்தங்கள் புதைந்திருக்கிறது என்று தோன்றியது கஸ்தூரிக்கு.

சில நொடிகள் அமைதியாய் இருக்க, “என்ன கண்ணு...” என்று வடைபாட்டி கேட்க,

“என்னையும் மீறி சில நேரம் பழசு எல்லாம் நெனப்பு வருது கெழவி..” என, “ம்ம்ம்... அது உன் வாழ்கைய கெடுத்துடும்..” என்றார் யோசிக்காது.

“ம்ம்ம்... இனி நீ வாழ்ற பாரு அதான் முக்கியம்.. உங்கப்பன் உன்னைய சந்தோசமா பொழைக்கத்தான் அங்க கட்டிக் கொடுத்திருக்கான். புரிஞ்சு நடந்துக்க..” என்று அறிவுரை சொல்ல, கண்ணனிடம் தானுமே கொஞ்சம் நல்லபடியாய் நடந்துகொள்ள வேண்டுமோ என்று தோன்றியது கஸ்தூரிக்கு.



 
Top