Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூவாசம் மேனி வீசுதம்மா - 8

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
பூவாசம் மேனி வீசுதம்மா – 8

கஸ்தூரியும் கல்பனாவும் மாடிப்படியில் அமர்ந்து காலை நேர காப்பி குடித்துக்கொண்டு இருக்க, முருகேஸ்வரி திண்ணையில் அமர்ந்து சமையலுக்கான காய்களை அறிந்துகொண்டு இருக்க,

“உன்னைய பத்தி நானும் தம்பியும் அடிக்கடி பேசிப்போம்.. சிங்கபூர்ல இருக்கப்போவே...” என்று கல்பனா சொல்ல,

“ம்ம்...” என்று புன்னகையோடு கேட்டுக்கொண்டு இருந்தாள் கஸ்தூரி.

“அட நெஜமா.. எனக்கு இப்போது தோணுது இந்த பைய அதனால தான் இங்கன வந்துட்டானோன்னு...”

“அதெல்லாம் இருக்காது மதினி.. அங்கன பிடிக்காம போயிருக்கும்..”

“ம்ம்ஹும்.. நீவேனா கேட்டுப்பாரு.. அவனே சொல்லுவான்.. உனக்கு ஒன்னு தெரியுமா. உன்னைய கட்டிக்கிடணும்னு எங்கிட்ட தான் முதல்ல சொன்னான். நான்கூட பயந்தேன்..” என்று கல்பனா ரகசியம் போல பேச,

“என்னைய தவற எல்லார்க்கிட்டயும் சொல்லிருக்கான்... சொல்லிருக்காப்ல போல...” என்று கஸ்தூரி இடைவிட்டு பேச,

“சும்மா அவன் இவன்னு பேசிக்க.. ஆனா எங்கம்மா முன்னாடி மட்டும் வேணாம். அவ்வளோ தான் எம்மவள மதிக்கலன்னு ஆர்ப்பாட்டம் பண்ணிடும்...” என்று கல்பனா சிரிக்க, பதிலுக்கு கஸ்தூரியும் சிரிக்க,

“எதுக்கு சிரிப்புன்னு சொன்னா நானும் சிரிப்பேன்...” என்று முருகேஸ்வரியின் குரல் மட்டும் இடக்காய் வர,

“ஹா..!! நீ போட்டுக் கொடுத்த காப்பி கழனித் தண்ணி போல இருக்காம்மா...” என்று கல்பனா சொல்லவும்,

“ஐயோ.. மதினி..!!” என்று கஸ்தூரி அவளினை அடக்க, முருகேஸ்வரி நிமிர்ந்து மகளையும் மருமகளையும் பார்த்தவருக்கு இருவரின் முகத்திலும் இருக்கும் குறும்பும் புன்னகையும் என்ன உணர்த்தியதோ “பேசுறவ எல்லாம் வந்து சமையல பாருங்க.. அப்புறோ நீங்க பண்ற சட்டுனி எந்தத் தண்ணி போல இருக்குன்னு பாப்போம்..” என்றுவிட்டு போக,

“கஸ்தூரி..!!” என்ற கண்ணனின் அழைப்பு, இவர்களின் பேச்சினை நிறுத்தியது.

“போ போ..” என்று கல்பனா சொல்ல, “வேலைக்கு போறவன கவனிக்காம மாமியாள கேலி பேச வந்துட்டாளுங்க...” என்று
முருகேஸ்வரி முனுமுனுத்தபடி எழுந்து உள்ளே போக,

“ம்மோய்.. அவ ஒன்னும் சொல்லல.. நான்தான் சொன்னேன்..” என்று கல்பனாவும் எழுந்து உள்ளே வர,

“உன்னையும் சேத்துத்தான் டி சொல்றேன்..” என்றுவிட்டு போனார்.

சந்திரபாண்டி வழக்கம் போல திராட்சை தோட்டம் சென்றிருந்தார். கண்ணன், அன்றுதான் மில்லுக்கு செல்லக் கிளம்பிக்கொண்டு இருந்தான். திருமணம் முடிந்தும் ஒருவாரம் ஆகிப்போனது..

உற்றார் உறவினர் வீட்டு விருந்துக்கள், மறுவீட்டு அழைப்பு, சீர் சுமந்து வந்தது, மாப்பிள்ளை வீட்டின் கறி விருந்து என்று அனைத்தும் முடிந்து, ஒருவழியாய் அன்றுதான் அன்றாடம் திரும்பியது போலிருந்தது. கல்பனாவின் கணவன் கிளம்பிச் சென்றிருக்க, அவளும் அவளின் ஐந்து வயது மகள் ரோகிணியும் மட்டும் இவர்களோடு இருந்தனர்.

கஸ்தூரி கல்பனாவோடும், ரோகினியோடும் சட்டென்று ஒட்டிவிட்டாள். முருகேஸ்வரியும், கண்ணனும் கேட்பதற்கு பதில். சந்திரபாண்டியோடு எதுவுமே இல்லை.

அவர் முன்னும் எதுவும் பேசுவதில்லை. அவரோடும் எதுவும் பேசுவதில்லை.. அவரும் அப்படித்தான். மருமகளின் முகம் கூட பார்க்கவில்லை. திருமணம் பேசி முடித்ததோடு சரி.

பையனும் மருமகளும் காலுக்கு விழுகையில் கூட, “நல்லாருங்க..” என்று சொன்னது மட்டுமே, அடுத்து மகனோடும் ஒன்றும் அப்படி பேசிக்கொள்ளவில்லை.

அன்று கண்ணன், செல்லப்பண்டியோடும், கஸ்தூரியோடும் பேசிவிட்டு நேராய் வீடு போனவன் “ம்மா அப்பா எங்க???” என,

“அவர் என்னிக்கு இந்நேரத்துக்கு வீட்ல இருந்தாரு..” என்றவர் “நீ என்ன இம்புட்டு வெரசா வந்திருக்க..” என்றும் கேட்க,

“ம்மா நீ கேட்டதானே எப்படியாபட்ட பொண்ணு வேணும்னு.. இப்போ சொல்றேன்.. எனக்கு கஸ்தூரி தான் பொண்டாட்டியா வரணும்.. பேசுங்க போயி...” என்று கண்ணன் பட்டென்று சொல்லிட,

புலி வருது புலி வருது கதை கடைசியில் புலி வந்தேவிட்டது என்று முடிய,

“ஏ.. யப்பா.. சாமி.. கண்ணா...??! என்னய்யா??” என்ற முருகேஸ்வரிக்கு முகமெல்லாம் மாறிவிட்டது.

“எனக்கு வேற யாரும் வேணாம்.. அப்படின்னா நான் கல்யாணமும் பண்ணிக்க மாட்டேன்..” என,

“வேணாம்யா பெரிய பஞ்சாயத்து ஆகிப்போடும்..” என்று முருகேஸ்வரி இறங்கி வந்து சமாதானம் செய்யப் போக,

“எதுன்னாலும் சரி..” என்றான் தீர்மானமாய்.

“கண்ணா... அப்பாக்குத் தெரிஞ்சா அம்புட்டுத்தான்..”

“வரட்டும்மா நானே பேசிக்கிறேன்..” எனும்போதே சந்திரபாண்டி வந்தவர், மகன் முகம் பார்த்து நேரே அமர்ந்துவிட,

‘என்ன கலவரம் ஆகப்போகுதோ..!!’ என்று அஞ்சித்தான் பார்த்தார் முருகேஸ்வரி.

வாய் பேச்சு துடுக்காய் வந்தாலும், வீட்டில் சண்டை சச்சரவுகள் அவருக்கு என்றுமே பிடிக்காது. அதிலும் அப்பாவும் மகனும்
எதிரும் புதிருமாய் அமர்ந்திருக்க, இருவரையும் மாறி மாறி பார்க்க,

கண்ணனோ “ப்பா...” எனும்போதே,

சந்திரபாண்டி “முருகு.. கஸ்தூரிய பொண்ணு கேட்கலாம்னு இருக்கேன்....” என, மற்ற இருவருக்கும் அப்படியொரு அதிர்ச்சி.

கண்ணனுக்கு புரிந்துபோனது ‘அப்பா எதையோ பார்த்திருக்கணும்..’ என்று.

முருகேஸ்வரியோ ‘அப்பனும் மவனும் சொல்லி வச்சு பேசுறாங்களா..’ என பார்க்க,

“என்ன சொல்லுறா..?!” என்று திரும்பவும் மனைவியிடம் கேட்க,

‘ஆத்தி அவ இங்கன வந்து என்னிய என்னென்ன பேசப்போறாளோ...’ என்று தான் தோன்றியது.

கஸ்தூரி, தனக்கு மருமகளாய் வருவதா??! அப்படி எண்ணம் போகவில்லை, வந்து தன்னை என்ன சொல்லப் போகிறாளோ என்று தோன்ற, எதோ ஒரு இடத்தில் கஸ்தூரி அவர் மனதில் ஆழப் பதிந்து போனாள் என்பதுதான் நிஜம்.

மனித மனம் செய்யும் வித்தைகளில் இதுவும் ஒன்று.

“நீங்க எல்லாம் சொன்னா நான் என்னத்த வேணாம்னா சொல்லிட போறேன்...” என்று சொன்னாலும், குரல் இறங்கி ஒலிக்க,

சந்திரபாண்டியோ மகன் முகம் பார்க்க “இது எதுக்குன்னு தெரிஞ்சுக்கலாமா...?!” என்றான் அவனும்.

“எதுவாருந்தா என்ன?? உனக்கு பிடிச்ச வாழ்க்க தான..”

“பிடிச்ச வாழ்க்க தான். ஆனா உங்க பிடிவாதத்துக்கு வாழ நாங்க ஆள் இல்லை.. நாளைக்கு கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து, அது இதுன்னு பேச்சு வந்துச்சுன்னா சும்மாயிருக்க மாட்டேன்..” என்று அப்போதே ஒரே போடாய் போட்டுவிட்டான் கண்ணன்.

“நாங்க சந்தோசமா வாழணும்னு நினைச்சு பண்றதா இருந்தா மட்டும் பண்ணுங்க..” என்று கண்ணன் சொல்லவும், அப்பாவும் அம்மாவும் வாய் திறக்கவில்லை.

பின் சந்திரபாண்டி, அவரின் நண்பருக்கு அழைத்து “நாளைக்கு நாங்க பேச வர்றோம்னு சொல்லிடு செல்லப்பாண்டிக்கிட்ட..” என்றிட, அவரும் விசயத்தை சொல்ல,

“முதல்ல வர்றட்டும்.. பின்ன பேசிக்கலாம்..” என்றார் செல்லப்பாண்டியும்.

மகளுக்குத் தான் பார்த்த வரனில் பிடித்தம் இல்லையோ, அவளின் மனதும் கமலக்கண்ணனைத் தான் நினைக்கிறதோ என்ற யோசனையிலேயே இருக்க, வீட்டிற்குப் போனவர்,

“உண்மைய சொல்லு கஸ்தூரி.. உனக்கு யாரை பேசி முடிக்க..” என,

“யப்பா.. ஜவுளி கடையில எந்த துணி வேணும்னு கேக்குறாப்ல இருக்கு.. நான் யாரோட சந்தோசமா இருப்பேன்னு உனக்குத் தோணுதோ அதை செய்பா.. எனக்கு எப்பவும் உன்னோடு முடிவுதான்...” என,

“நாளைக்கு கண்ணன் வீட்ல இருந்து வர்றாங்க..” எனவும், கஸ்தூரிக்கு திடுக்கென்று ஆனது.

“இப்போ சொல்லு.. அவங்க வந்து கேட்டா நான் என்ன சொல்ல...” என்று செல்லப்பாண்டி விடாது கேட்க,

“உன்னோட முடிவு என்னவோ அதைச் சொல்லுப்பா.. எப்பவும் என்னைய இப்புடித்தான் கேட்டியா??” என்று அவளும் சொல்ல,

“கஸ்தூரி.. போதும்..” என்று அதட்டிவிட்டார்.

அப்பாவின் குரலும் முகமும் மாறிட, “ப்பா...” என்று கஸ்தூரி பார்க்க, “வாழப்போறது ஒத்த வாழ்க்க.. அதை நீ சந்தோசமா வாழணும்னு நெனக்கிறேன்... உன் முடிவு.. உன்னிஷ்டம்னு பேசிட்டு கெடக்காத.. சரியா இல்லையா.. ஒரு வார்த்தை சொல்லு மிச்சத்த பாத்துக்கிறேன்...” என்று அப்போதும் அதட்டலாய் பேசவும்,

“சரிதான் ப்பா..” என்றுவிட்டாள் தலையை ஆட்டி.

கண்ணனை திருமணம் செய்யும் அளவு பிடித்திருக்கிறதா என்றால், அவளுக்குத் தெரியவில்லை என்றுதான் சொல்வாள். ஆனால் இத்திருமணத்தில் அவளுக்கான் ஆதாயம் நிறைய. இங்கேயே இருக்கலாம். அவளின் தோட்டம் எப்போதும் போல் அவளே பார்க்கலாம். அதெல்லாம் தாண்டி அவளின் அப்பாவை தினம் பார்க்கலாம். எதுவென்றாலும் இங்கேதானே இருக்கிறோம் என்ற தைரியம்.

இதெல்லாம் தான் அவள் மனதில் அப்போது.

மற்றதை எல்லாம்விட, இனி இந்த கண்ணன் எதுவும் பிரச்சனை செய்ய மாட்டான். அந்தவொரு நிம்மதி. இதையே தான் திருமணம் முடிந்த முதல் நாள் இரவும் சொன்னாள்.

“உன்னோட அளவு எல்லாம் எனக்கு பிடிச்சிருக்கா தெரியாது.. ஆனா இது நம்ம வாழ்க்க அதுமட்டும் எனக்கு மனசுல இருக்கு..” என,

கமலக்கண்ணனோ “எனக்கும் தெரியும்.. அவ்வளோ சீக்கிரம் எதுவும் மாறாது.. நானும் உன்ன எதுக்கும் வற்புறுத்த மாட்டேன். ரெண்டுபேருக்கும் புரிஞ்சுக்க டைம் எடுக்கும்..” என்று சொல்ல, கொஞ்சம் நிம்மதியாகிப் போனது கஸ்தூரிக்கு.

பிடிவாதம் செய்து திருமணம் செய்தான், தான் சொல்வதை புரிந்துகொள்வானா என கேள்வி அவளுள் இருக்க, கண்ணன் இத்தனை நாள் காட்டிய பிடிவாதம் எல்லாம் இல்லாது, இப்போது மிக இயல்பாய் அவளோடு பேச, அவள் தான் கொஞ்சம் குழப்பமாய் பார்த்தாள்.

கட்டில் முழுக்க பூக்கள் தூவி இருக்க, அவனோ அதெல்லாம் ஒதுக்கி ஒதுக்கி தள்ளியபடி அவளோடு பேச, கஸ்தூரி அமைதியாய் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

கல்யாணம் பேசினார்கள்.. அதனை ஏற்றுக்கொள்ள முடிந்தது.. ஆனால் அதெல்லாம் தாண்டி பழையது எல்லாம் மறந்து இவனை உடனே ஏற்றுக்கொள்ள முடியுமா?? அது யோசனையாகவே இருக்க,

கண்ணனே சொன்னான் “எங்க நீ முடியாதுன்னு சொல்லிடுவியோன்னு நெனச்சேன்..” என்று.

“ம்ம்ம்..” என்று அவன் பேசுவதைப் பார்த்துக்கொண்டு இருக்க, நிமிர்ந்து அவளைப் பார்த்தவன் “எங்கம்மா உன்னைய விட அழகா பொண்ணு தேடுச்சு..” என,

“ம்ம் கிடைச்சாங்களா??!!” என்றாள் ஏனோ சிரித்தபடி.

“இப்படி சிரிச்ச முகமா இரு.. அதான் நல்லாருக்கு..” என்று கமலக்கண்ணனும் இலகுவாய் கூற,

“அது என்னைய சுத்தி இருக்கிறவங்களைப் பொறுத்து..” என்றாள் கஸ்தூரியும்.

“எங்கம்மாக்கு மனசுல பயம். நீ மருமகளா வந்து ஏதாவது சண்டைகிண்டை போடுவியோன்னு..”

“ஓ!!! அப்போ உனக்கு பயமா இல்லையா...” என்று கேட்டவளுக்கு மனதில் அக்காட்சிகள் ஓடியது முருகேஸ்வரியும், கஸ்தூரியும் சண்டை இடுவது போலவும், கமலக்கண்ணன் இருவருக்கும் இடையினில் முழித்துக்கொண்டு நிற்பது போலவும்.

பட்டென்று சிரித்துவிட “என்ன கற்பனையா.. நானெல்லாம் எப்பவும் உங்க மாமியா மருமக விசயத்துல வரமாட்டேன்..” என,

“பின்ன..??!” என்றாள்.

“உன்ன நல்லபடியா சந்தோசமா வச்சுப்பேன். அதுமட்டும் உறுதி...” என,

“நீ எப்படி வச்சுக்கிட்டாலும், நான் சந்தோசமா இல்லைன்னு சொன்னா??!!” என்று கஸ்தூரி சாதரணமாய்த்தான் கேட்டாள், ஆனால் கண்ணனுக்குத் தான் முகம் மாறிப்போனது.

உடனே பதில் சொல்லாது, அவளைப் பார்த்தவன், பின் அவளின் அருகே நெருங்கி அமர்ந்து அவளின் கை மீது கை வைத்து லேசாய் அழுத்தியவன் “பழசை எல்லாம் மனசுல வச்சுட்டு இப்போ இருக்கிற வாழ்கைய கெடுத்துக்காம இருக்கிறது உன்கிட்ட தான் கஸ்தூரி இருக்கு.. நாங்க பண்ணது சரின்னு சொல்லலை. ஆனா எனக்கு அந்த வயசுல எதுவும் புரியலை.. வீட்ல அப்போ பேசினது, சொன்னது வச்சு நானா அப்படி பேசிட்டேன் அப்போ..

இங்க இருந்து படிப்பு வேலைன்னு வெளியூர் போகவும் தான் எனக்குமே சிலது புரிஞ்சது கஸ்தூரி.. உங்கிட்ட இதெல்லாம் சொல்லி புரிய வச்சு.. காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கனும்னு நெனச்சேன்..” என,

“ம்ம்.. நான் சாதாரணமா தான் கேட்டேன்.. நானும் இந்த வாழ்கைய வீணடிக்க மாட்டேன்.. ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கோ.. நான் வாழ்ற வாழ்க்கை தான் எங்கப்பாக்கு நான் செய்ற மரியாதை.. உன்னைய கல்யாணம் பண்ணிக்கிற அளவு எனக்கு புடிக்குமா அதெல்லாம் எனக்குத் தெரியாது. பழைய கோவம் எல்லாம் இருக்கான்னு கேட்டா.. ம்ம் இப்போ அதுவும் தெரியலை.. ஆனா கண்டிப்பா வருத்தம் இருக்கு..” என்று இருவரும் பேச, இப்படிதான் இருவரின் பேச்சும் அன்று இருந்தது.

அதன் பின்னும் கஸ்தூரியாய் அப்படியொன்றும் கண்ணனோடு பேசி பேசி பழக எல்லாம் நினைக்கவில்லை. அதற்கு நேரமும் இல்லை. இரவுகளில் கூட, வீட்டில் நடந்தது அது இதென்று ஒரு பேச்சு அவ்வளவே..

முதல் நாள் தான் சொல்லியிருந்தான் “நாளைக்கு இருந்து நான் வேலைக்கு போறேன்...” என்று.

“ம்ம் நானும் தோட்டத்துக்கு போயி பாக்கவே இல்ல.. போயி பார்த்துட்டு வரணும்..” என,

“அக்காவ கூட்டிட்டு போ.. நீயா போகவேணாம்..” என்று கண்ணன் சொல்லவும் “எதுக்கு..” என்று கஸ்தூரி கேட்க வரும்போதே,

“கொஞ்ச நாளைக்கு.. இங்க எல்லாம் கொஞ்சம் செட்டாகட்டும்..” என்று சொல்ல, “ம்ம்...” என்று கேட்டுக்கொண்டாள்.

அப்பாவின் வீட்டில் அவளே ராணி அவளே சேவகி கஸ்தூரி. சமையல் முதற்கொண்டு வீட்டு வேலை எல்லாம் அவளின் எண்ணப்படி தான். யாரும் எதுவும் கேட்டதில்லை. இங்கேயோ அனைத்துமே முருகேஸ்வரியின் கட்டுப்பாட்டில் தான்.

கொஞ்சம் பழகவும் நாள் எடுக்கும் என்பதால், கண்ணன் சொல்லும் விசயங்களுக்கு மறுப்பாகவும் அவள் சொல்லவில்லை.
இப்போதோ அவன் அழைக்கவும் போய் அறையினில் நிற்க “என்னைய புரிஞ்சுக்கணும்னு நினைக்கிறியா நீ??!!” என்று கேட்டவன் முகத்தினில் என்ன இருந்ததோ அவளுக்குப் புரியவில்லை.

“ஏன்..?? என்னாச்சு??!!”

“கல்யாணமாகிருக்கு.. உனக்கும் எனக்கும்...” என்றான் ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து.

கஸ்தூரி எதுவும் பேசாமல் நிற்க, “அக்காவோட பேசு வேணாங்கல.. ஆனா என்னைய கவனிக்கிற நேரத்துல நீ என்கூட இருக்கணும் தான..” என்றுசொல்ல,

“ஆமா நீ ஸ்கூல் போற பையன், ட்ரெஸ் போட்டு, தலை சீவி ஊட்டிவிட்டு அனுப்ப...” என்று கஸ்தூரி பொசுக்கென்று சொல்லிட, கமலக்கண்ணனின் முகம் அப்படியே வாடிப்போனது.

“சரி நீ போ..” என்றவன், சட்டை பட்டன்களை மாட்ட,

“கோவமா??!!” என்றாள் நின்று.

“ம்ம்ச் ஒண்ணுமில்ல போ கஸ்தூரி..” என,

“நான் சாதாரணமா பேசுறதுக்குல்லாம் நீ இப்படி பண்ண நான் என்ன செய்ய??” என்று கஸ்தூரி உதடு பிதுக்க,

‘ஓ..!! இதுதான் இவ சாதாரணமா பேசுறதா?? எங்கம்மாக்கு அடுத்து வருவா போல..’ என்று எண்ணியவன்,

“ஒண்ணுமே நினைக்கல தாயே.. சாப்பிட எடுத்து வை வர்றேன்..” என, அதற்குமேல் ஒன்றும் சொல்லாது கஸ்தூரி கீழே வந்துவிட்டாள்.

அதற்குள் முருகேஸ்வரியும், கல்பனாவும் காலை நேர டிபன் செய்திருக்க, கல்பனா மகளுக்கு ஊட்டியபடி இருக்க, முருகேஸ்வரி வேறு வேலையாய் இருக்க, வாசலில் ஒருவன் வந்து “கண்ணனண்ணா...” என்று சத்தமாய் அழைக்கவும், கஸ்தூரி தான் சென்று பார்த்தாள்.

“யக்கா.. அண்ணன் எங்க??!!”

“எதுக்குடா??!!”

“எனக்கு ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்கித்தாரேன் சொல்லிச்சுக்கா அண்ணே.. அதான்..” என்று வந்தவர்களில் உயரமாய் இருந்த ஒருவன் இழுக்க,

“இப்போ வெளிய வருவாங்க.. இரு சொல்றேன்..” என்று கஸ்தூரி திரும்புகையில், முருகேஸ்வரி இடுப்பினில் கை வைத்து நின்றிருந்தார்.

“இப்புடி தினம் ஒருத்தன் வருவான்.. எல்லாத்துக்கும் அவன கூப்பிட்டு விடக்கூடாது.. நம்மளே பேசி அனுப்பனும்...” என்றவர்,
“அவனெல்லாம் எதுவும் தர மாட்டான்.. ஓடு..” என்று முருகேஸ்வரி விரட்ட, கஸ்தூரி பாவமாய் பார்த்து வைத்தாள்.

“அஹா..!! இப்புடி எல்லாம் பார்த்து வச்சா, நம்மள மொட்டை அடிச்சிட்டு போயிடுவானுங்க.. அவனைக் கொஞ்சம் இறுக்கிப்புடி.. இல்லனா ஊருக்கே தானம் செய்வான்.. அப்புறோ உம் புள்ளைங்களுக்கு யார் செய்வா...” என, கஸ்தூரியோ பதில் சொல்லாது நிற்க,

கமலக்கண்ணன் வந்துவிட்டான் வெளியே “என்னடா..” என்றபடி.

“காசு எதுனா கொடுத்துவிட்ட பார்த்துக்கோ...” என்று மிரட்டியபடி முருகேஸ்வரி உள்ளே செல்ல,

“ண்ணா ஸ்போர்ட்ஸ் ஷூ..” என்று கேட்க,

“அதுக்கு ஏன்டா இங்க வரணும்.. கடை கிட்ட நிக்க வேண்டியதுதானே...” என்றவன் உள்ளே அம்மாவினை எட்டிப்பார்த்து
“சாயங்காலம் மில் விட்டு வர்றப்போ போய் வாங்குவோம்.. கடைக்கு வந்திடு..” என்று சொல்லி அனுப்ப, சந்தோசமாய் வந்தவனும் செல்ல,

“நீ எதுவும் சொல்லல..” என்றான் கண்ணன்.

“என்ன சொல்ல??!!”

“நான் இப்படிதான் பசங்களுக்கு எதுனா செய்வேன்..” என,

“செஞ்சுக்கோ.. நான் எதுவும் சொல்லமாட்டேன்.. அதெல்லாம் உங்கம்மா பார்த்துப்பாங்க..” என்றுவிட்டு அவளும் உள்ளே போக,

“அம்மாக்கிட்ட சொல்லிகில்லி வைக்காத..” என்றபடி இவனும் உள்ளே போனான்.


 
Top