Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூவாசம் மேனி வீசுதம்மா - 6

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
பூவாசம் மேனி வீசுதம்மா – 6

கமலக்கண்ணனுக்கு பெண் பார்க்கும் படலமும், கஸ்தூரிக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலமும் ஜரூராய் நடந்துகொண்டு இருந்தது.

சந்திரபாண்டி “அவனுக்கு வயசு ஆகுதுதான.. பொண்ணு பார்க்க ஆரம்பிப்போம்..” என்று அவரே ஒரு தரகரையும் வர சொல்லிவிட்டார்.
முருகேஸ்வரி கூட “அவங்கிட்ட ஒரு வார்த்த...” என்று இழுக்க,

“ஆமா உம்மவன் குமரி பையன்... உனக்கு சம்மதம்மான்னு கேட்டு, புரிய வச்சு கல்யாணம் பேச.. இருபத்தி ஒம்பது ஆச்சு.. அவனா கேப்பானா நம்மட்ட..” என்று அதட்டிவிட்டார்.

அங்கே செல்லப்பாண்டியோ இனியும் அதிகம் தாமதம் செய்யக்கூடாது என்று அவரும் தரகரிடம், வெளியூரில் இருக்கும் தெரிந்தவர்களிடம் எல்லாம் பேச்சினைத் தொடங்கிவிட்டார்.

வடைபாட்டிக்கூட சொன்னார் “நாளாகிட்டே போகுது செல்லா.. காலகாலத்துல பாத்து முடி...” என்று.

எல்லாம் தாண்டி செல்லப்பாண்டியின் மனதில் ஒரு உறுத்தல். கண்ணன் வந்து பேசியது. பின் முருகேஸ்வரி இங்கே வந்து போனது. அதற்கு கஸ்தூரி அலட்டல் இல்லாது இருந்தது. எது எப்படி என்றாலும் சரி, தன் மகளைப் பற்றியும் இந்த ஊர் பேசிவிடக் கூடாது என்பதில் அவர் தெளிவாய் இருந்தார்.

‘போதும்... பேச்சுக் கேட்டு கேட்டு புழுங்கி புழுங்கி வாழ்ந்தது எல்லாம் போதும். எம்மவளுக்கு ஒரு வாழ்கைய அமச்சு கொடுத்து, அனுப்பிடணும்.. அவ உண்டு அவ பொழப்பு உண்டுன்னு வாழ்ந்துக்கட்டும்..’ என்று நினைத்துவிட்டார்.

தரகர் கொண்டு வந்து காட்டிய பெண்களில் யாரையுமே முருகேஸ்வரிக்கு பிடிக்கவில்லை.

“இவ என்னடா இம்புட்டு கோணலா வகுடு வச்சு சீவிருக்கா...”

“ம்ம்ஹும்.. இவ என்னத்த மூக்குல வளையம் போட்டிருக்கா...”

“யம்மாடி..!! இம்புட்டு பவுடரு போட்டிருக்கா..”

“அஹா..!! கோணலா சிரிக்கிறா...”

“ஏன்டா... இவ நிக்கிற விதமே சரியில்லதான...” என்று ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு காரணம் சொல்லி, எதுவும் அவருக்கு மனதிற்கு ஒட்டவில்லை.

சந்திரபாண்டியோ “முதல்ல உம்மவன கேளு பிடிக்குதான்னு.. அப்புறம் நீ பாரு...” என்று சொல்ல,

“அதுசரி.. இது நா வாழ வந்த வீடு.. இப்ப எவ்வீடு.. எனக்கு மருமவளா வர்றவ எனக்கும் பிடிக்கணும். எனக்கப்புறம் அவதான் இங்க நிப்பா. அவனுக்கு பொண்டாட்டியா நின்னா மட்டும் போதாது. இங்க நடக்குற நல்லது கெட்டது எல்லாம் தாங்கி நிக்கணும். என்னவோ சினிமாக்கு நடிக்க போறவ மாதிரி நிக்கிறாளுங்க.. அதெல்லாம் எனக்கு சம்மதப்படாது...” என,

“ம்ம்ம் நீ சொல்றது எல்லாம் சரிதான்.. ஆனாலும் அவனுக்கும் புடிக்கணும்..” என்று சொல்ல,

“எல்லாம் புடிக்கும் புடிக்கும்..” என்று முனங்கிக்கொண்டே சென்றுவிட்டார் முருகேஸ்வரி.

நடப்பதை எல்லாம் கவனித்துக்கொண்டு தான் இருந்தான் கமலக்கண்ணன். இருந்தும் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை. மகனின் இந்த மௌனமே சந்திரபாண்டிக்கு பல கதைகள் சொன்னது.

‘தன்னோடு சரியே பேசவில்லை..’ என்பது எல்லாம் தாண்டி, திடீரென்று மகன் செல்லப்பாண்டியோடு பேசியதும், கஸ்தூரி வீடு வரைக்கும் சென்றது எல்லாம் அவருக்கு வேறு வேறு யோசனைகளை கொடுத்தது.

கைமீறி எதுவும் செல்லும் முன்னம், மகனுக்கு கால் கட்டு போட நினைத்தார். ஆனால் கட்டுப் போடவேண்டியது அவனின் கண்களுக்கு அல்லவா.. அதுவோ கஸ்தூரியின் மீதுதானே பார்வை பதித்திருக்கிறது.

இப்போதும் கூட கண்ணன் எங்கேனும் செல்லப்பாண்டியைப் பார்த்தால் ‘என்ன மாமா...’ என்றுவிட்டுத்தான் போகிறான்.

அவரும்தான் எத்தனை நாளுக்கு முகம் திருப்ப, பெயருக்காகவேனும் ஒரு தலையசைப்போடு நகர்கிறார். என்ன அதன்பின் கமலக்கண்ணன் கஸ்தூரியோடு வேறெந்த பேச்சும் வைத்துக்கொள்ள வில்லை.

ஆனால் கல்பனாவிடம் பேசியிருந்தான்.

“க்கா.. நீ ஊருக்கு வர்றப்போ இதை முடிச்சுவிட்டு போற..” என்று.

“ஏன்டா திடீர்னு இப்படி ஒரு குண்டு போட்டு, அதை முடிச்சிட்டு போன்னு வேற சொல்ற.. இந்த பேச்ச நான் எப்புடி டா எடுக்க முடியும்...” என,

“அதெல்லாம் எனக்குத் தெரியாது.. சரியா நீ வர்றப்போ அப்பாக்கிட்ட நான் சொல்லிடுவேன். வேற இடம்னா நானே பார்த்துப்பேன். இது ஊருக்குள்ள.. அம்மா எப்போ என்ன செய்யும்னு சொல்ல முடியாது.. அதுனால நீ வர்றப்போ எனக்கு ஒரு நல்லது பண்ணிட்டு போ..” என்று சொல்ல,

“டேய் கண்ணா..!!!” என்று தயங்கினாள் கல்பனா.

கல்பனா, இன்னும் பதினைந்து தினங்களில் சிங்கப்பூரில் இருந்து வருவதாய் இருந்தது. அப்படியே இல்லை என்றாலும், கமலக்கண்ணனே பேசி வரவழைத்திருப்பான்.

‘அக்கா வர்றாடா... அவ வர்றப்போவே உனக்கும் ஒரு நல்லது பண்ணிடனும்..’ என்று முருகேஸ்வரி சொல்லவும், கல்பனாவிற்கு அழைத்து,

“எனக்கு கஸ்தூரிய கல்யாணம் பண்ணிக்கணும்க்கா..” என்றுவிட, கஸ்தூரிக்கு அப்பாவினை எண்ணித்தான் பயமாய் இருந்தது.
ஏனெனில் போன முறை வந்திருந்தபோது கல்பனா எதையோ சொல்ல, முருகேஸ்வரியும் “ஏங்க.. நம்மளும் இப்படி பண்ணா என்ன??” என்று கேட்க,

அவரோ “கல்பனா இந்த வீட்டுக்கு என்ன முடிவு எடுக்கனும்னு எங்களுக்குத் தெரியும்.. சிங்கப்பூர் பழக்கமெல்லாம் இந்த கிராமத்துக்கு ஒத்து வராது..” என்று முகத்திற்கு நேரே சொல்லிவிட்டார்.

கல்பனா திகைத்துப் போய் பார்க்க, “கல்யாணம் முடிச்சு பொண்ணுங்க பொறந்த வீட்டுக்கு சீராட வரலாம். ஆனா வந்து நாட்டாமை செய்யக் கூடாது. அது என்ன இப்படி, இது என்ன அப்படின்னு கேள்விக கேக்கக் கூடாது...” என்றுவிட்டார்.

அவ்வளோதான், அடுத்து கல்பனா வேறெந்த பேச்சுக்களும் வைத்துக் கொள்வது இல்லை. அம்மாவிடம் எதுவென்றாலும் பேசுவாள். அப்பாவின் முன்னம் ம்ம்ஹும் இருக்கும் இடமே தெரியாது. முருகேஸ்வரிக்குக் கூட மனத் தாங்கல் தான்.

கண்ணனிடம் “இப்புடியா இந்த மனுஷன் பேசி வைப்பாரு.. பாவம் அவ மொகமே விழுந்து போச்சு.. அப்பா ஆத்தான்னு தான உரிமையா பேசுறா..” என்று சில நாள் புலம்பியபடி இருந்தார்.

இப்போதோ தம்பி தன் தலையில் மிக பெரிய இடியை இறக்க, “அப்பா என்னை வரவே வராதன்னு சொல்லிடுவார்டா..” என்றாள் கல்பனா.

“அதெல்லாம் எதுவும் ஆகாதுக்கா. அப்பாவ நான் பார்த்துப்பேன்.. அம்மாவ மட்டும் நீ கரக்ட் பண்ணு.. வேற ஒண்ணுமில்ல,
எதாதுன்னா அம்மா அங்க போயி கஸ்தூரிக்கிட்ட மல்லுக்கு நிக்கும்.. அதான் விசயமே..” என,

“அதெல்லாம் சரி தம்பி.. கஸ்தூரி என்ன சொல்லுறா, சரின்னுட்டாளா??” என்று விசாரிக்க,

“ஹ்ம்ம் அது அவ்வளோ சீக்கிரம் நடக்கும்னு நினைக்கிறியா நீ??” என்றான் இவனும்.

“டேய் அப்போ அந்த புள்ளக்கிட்ட பேசாமத்தான் நீ இவ்வளோ பேசிட்டு இருக்கியா..?”

“ம்ம்ச் அக்கா... உனக்கு கஸ்தூரி பத்தியும் தெரியும்.. நம்மூரு பத்தியும் தெரியும்.. நானும் எப்படியாவது அவளோட பேசி, என்னை புரிய வைக்கனும்னு பாக்குறேன்.. சந்தர்ப்பமே கொடுக்க மாட்டேங்கிறா...”

“உன்னைய புரிய வைக்கிறது இருக்கட்டும்.. முதல்ல அவள நீ புரிஞ்சுக்க.. சின்னதுல இருந்து எம்புட்டு பார்த்திருப்பா அவ, இன்னிக்கு நீ போயி திடீர்னு பேசுனா உடனே பேசிடுவாளா.. பொறுமையா போ..” என்று கல்பனா சொல்ல,

“மாமாவேற அவளுக்கு வரன் பார்த்துட்டு இருக்கார்க்கா.. ஒரு நிலைமைக்கு மேல பொறுமை எல்லாம் பார்க்க முடியாது. அதான் கல்யாணம் பண்ணிட்டு எதுனாலும் பேசிக்கிறேன். நான் அவளை புரிஞ்சுக்கிறதும், அவ என்னை புரிஞ்சுக்கிறதும் புருஷன் பொண்டாட்டியா புரிஞ்சுக்கிறோம்..” என்றுவிட்டான் முடிவாய்.

தம்பி இத்தனை சொல்கையில் கல்பனாவினால் தான் என்ன சொல்லிட முடியும்?? இங்கேயே இருந்திருந்தால் கல்பனாவின் சிந்தனைகள் எப்படி இருந்திருக்குமோ, வெளிநாட்டு வாழ்க்கை அவளுக்கு வாழ்வை பற்றிய கண்ணோட்டங்களை மாற்றியிருந்தது.
‘அவன் வாழ்க்கை.. அவனுக்கு பிடிச்சது மாதிரி இருக்கட்டுமே..’ என்றுதான் நினைத்தாள்.

ஆனால் இதனை, வீட்டினர் சம்மதிக்கவேண்டுமே.

மரிக்கொழுந்து கூட “டேய் மாப்புள.. எங்கக்கா போற வேகத்துக்கு இந்த மாசமே உனக்கு கல்யாணம் செஞ்சிடும் போல..” என,

“ம்ம்ஹும்.. அதெல்லாம் உங்கக்காக்கு யாரையும் பிடிக்காது...” என்றான் உறுதியாய்.

“அதெப்புடிடா அவ்வளோ உறுதியா சொல்ற..??”

“இத்தன பொண்ணுல ஒருத்தி கூட எங்கம்மாக்கு பிடிக்கல.. பிடிக்காது.. அது மனசுல எங்கயோ ஒரு இடத்துல கஸ்தூரி பதிஞ்சு போயிருக்கா.. அதான் பாக்குற பொண்ணு எல்லாத்தையும் கஸ்தூரி கூட கம்பேர் பண்ணுது..” என,

“எப்புடி சொல்ற நீ??!!” என்றான் அவனும்..

“அன்னிக்கு முத்தக்காக்கிட்ட சொல்லிட்டு இருந்துச்சு.. இந்த ஊருக்குள்ளயே அந்த கஸ்தூரி தான் அழகா இருக்கா.. எனக்கு மருமவளா வர்றவ அவள விட வரணும்னு.. அதுவும் இல்லாம, கஸ்தூரிய பேசி பேசி எங்கம்மாக்கும் பழகிடுச்சு.. அவ ஜாடை பேசினாலும் பெருசா எதுவும் தோணாது.. இதேது புதுசா ஒருத்தி வந்து ஏதாவது சின்னதா ஒன்னு சொன்னான்னு வை, அவ்வளோதான்... ஊர கூட்டிடும்...” என்று கமலக்கண்ணன் விளக்க,

“ப்ளான் பண்ணி லவ் பண்ணுற நீ.. ம்ம் செய் செய்..” என்றுவிட்டு போனான் மரிக்கொழுந்து.

இத்தனை தெளிவாய் கண்ணன் பேசிவிட்டான் தான். இருந்தும் அவனுக்குமே மனதினில் ஒரு ஓரத்தில் யோசனை, அது கஸ்தூரியைக் கொண்டு.

எல்லாம் செய்து, கடைசியில் அவள் முடியாது என்றுவிட்டால்...

எப்படியாவது அவளிடம் பேசிட வேண்டும் என்று பார்த்தால், அவளோ அவனின் கண்களில் படவேயில்லை.. தானாக தன்னை அவன் பார்வை வட்டத்தில் இருந்து மறைத்துக்கொண்டாள் கஸ்தூரி.

அவளுக்குத் தெரியும், கண்ணன் செய்வது எல்லாம் ஏதேனும் பெரிய பிரச்சனைகளில் கொண்டு போய் விடும் என்று. அப்படியே இல்லை என்றாலும், ஏற்கனவே பிளவு பட்டு போய் நிற்கும் ஆட்களிடம் மேலும் பிளவினையும், மன வெறுப்பையும் கொடுக்கும் என்பதும் அவள் அறிவாள்.

ஆக, தன்னைப் பார்த்தால் தானே அவன் எதுவும் பேசிட விளைவான், அவன் பக்கம் போகாமல் இருந்தால், எப்படி பேசுவான்??
பேச்சினை வளர்த்தால் தானே, அடுத்தது எல்லாம் நடக்கும். அதுவே இல்லை எனில்.. அரசல் புரசலாய் அவளுக்கும் தெரிய வந்தது, கமலக்கண்ணனுக்கு பெண் பார்க்கிறார்கள் என்று.

“கண்ணெதிர, ராசாதியாட்டம் ஒருத்திய வச்சிட்டு எந்த சீமையில பொண்ணு தேடுறாங்களாம்...” என்று வடைபாட்டி அங்கலாய்ப்பு செய்ததற்குக்கூட,

“கெழவி, இனியொருவாட்டி இதை பேசின பாத்துக்க.. அப்பா முன்னாடி இப்படி எல்லாம் சொல்லிப்புடாத...” என்று மிரட்டி வைத்தாள்.
கமலக்கண்ணனுக்கு பெண் பார்க்கிறார்கள் என்றதுமே அவளுக்கும் சுருக்கென்று இருந்ததுதான்.

‘வேணாம் கஸ்தூரி.. எந்த ஆசையும் வச்சுக்காத..’ என்று அவளே அவளை இறுக்கிக்கொண்டாள்.

தோட்டத்தில் வேலைக்கு வருபவர்கள் கூட, “ஹ்ம்ம் இப்புடியாவது இவங்க ஒன்னு சேரலாம்...” என்று பேச, கஸ்தூரி காதினிலே வாங்காதது போல இருந்துகொண்டாள்.

செல்லப்பாண்டியிடமும் ஒருசிலர் சொன்னார்கள், “ஏம்ப்பா எதுக்கு வெளிய பாக்கணும்... நம்ம கண்ணனுக்கு என்ன கொறச்சல்... அந்நியமா அசலா.. பொண்ண இங்கன கொடுத்துப்புட்டு நிம்மதியா இருக்காம...” என்று.

“எம் பொண்ணுக்கு என்ன செய்யனும்னு எனக்குத் தெரியும்...” என்றுவிட்டார் அவர்.

இதுபோல பேச்சு சந்திரபாண்டியிடம் செல்ல, அவரோ பதிலே சொன்னாரில்லை. தோளில் இருக்கும் துண்டினை உதறிவிட்டு போய்விட்டார்.

ஆக மொத்தம், ஊருக்குள்ளே கண்ணனுக்கும் கஸ்தூரிக்கும் கல்யாணம் முடிந்தால் என்ன??! என்ற பேச்சு வந்துவிட்டது.

‘இவனவிடவா மாப்புள்ள வேணும்..’ என்றும்,

‘கஸ்தூரிக்கு என்னவாம்.. இவளவிட அழகி எங்கிருந்து வருவா..’ என்றும் பேச்சாய் இருந்தது.

முருகேஸ்வரி மகளிடம் பேசுகையில் கூட “என்னவோ எல்லாரும் கஸ்தூரி அப்புடி இப்புடின்னு சொல்லுறாளுங்க.. அவளைவிட சிறப்பா ஒரு பொண்ணு பார்த்து கொண்டு வரணும்டி..” என,

“ஏம்மா... வர்றவ எப்புடின்னு நீ கண்டியா..” என்று அவளும், ஊருக்கு வரும் முன்னமே ஆரம்பித்துவிட்டாள்.

“அதுக்காக??!!”

“அதுக்காக என்னம்மா அதுக்காக.. ஒன்னு நீ கஸ்தூரிய நினைச்சு அவனுக்கு பொண்ணு தேடுறதா விடு.. இல்லையோ பேசாம அவளையே மருமகளா கொண்டு வந்திடு..” என,

“ஆத்தாடி..!!!” என்று வாய் பிளந்துவிட்டார்.

“இப்புடி வந்து உங்கப்பாரு முன்ன பேசிப்புடாத கல்பு... அவ்வளோதான் மகளே இனிமே இல்லன்னு சொல்லிடுவாரு..” என்று அப்போதைக்கு அந்த பேச்சினை முடித்துவிட்டார்.

கல்பனா இதனை கண்ணனுக்கு அழைத்துச் சொல்ல, “ம்ம் நான் பேசிக்கிறேன் க்கா..” என்றுவிட்டான்.

அவனுக்கு நாள் கடத்துவது இனியும் சரியில்லை என்று தோன்றிவிட, மில்லில் இருந்து வருகையில் செல்லப்பாண்டியோடு பேசிவிட்டு வரவேண்டும் என்ற நினைப்பில் வர, அவரோ கடையில் இல்லை.

“மாமா எங்க??!!” என்று அங்கிருந்தவரிடம் கேட்க,

“வீடு வரைக்கும் போயிருக்காப்ள கண்ணா...” என்று பதில் வர,

“சரி...” என்று வீட்டிற்குச் சென்றுவிட்டான்.

போய்விட்டு வருவோம், இங்கேயே இருந்தால், பின் அதற்கும் யாரேனும் எதுவும் சொல்வர் என்றெண்ணி வீடு செல்ல, அங்கே
செல்லப்பாண்டியோ “இந்த மாப்புள உனக்கு சம்மதமா பாரு கஸ்தூரி..” என்று மாப்பிள்ளையின் புகைப்படத்தைக் காட்ட,
அவளோ அதனை வாங்கிக் கூடப் பார்க்கவில்லை “நீ பார்த்து யாருக்கு சரின்னு முடிக்கிறயோ எனக்கு சம்மதம்பா...” என,

“பாத்துட்டு சம்மதம் சொல்லு கஸ்தூரி..” என்று அவரும் சொல்ல, பாத்திரம் கழுவிக்கொண்டு இருந்தவள், அப்பாவிடம் திரும்பி, அவரை நேருக்கு நேரே பார்த்து,

“என்னோட அப்பா, எது செஞ்சாலும் அது எனக்கு நல்லதா செய்வாருன்னு எனக்குத் தெரியும்.. இந்த மாப்புள்ள பார்த்து பிடிக்குது, பிடிக்கல அதெல்லாம் எனக்கு இல்ல. நீ அமச்சு கொடுக்குற வாழ்கைய நான் நல்லபடியா வாழுவேன். உம்பேர காப்பாத்துவேன்பா...” என, செல்லப்பாண்டிக்கு மனது நிறைந்து போனது.

கையில் இருந்த புகைப்படத்தையும், கஸ்தூரியின் முகத்தினையும் மாறி மாறிப் பார்த்தார் செல்லப்பாண்டி. பொருத்தமாய் இருப்பதாய் தான் தெரிந்தது. மாப்பிள்ளையும் படித்து நல்ல வேலையில் இருக்கிறான். கை நிறைய சம்பளம். கூடிய சீக்கிரம் வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும் என்று சொன்னார்கள்.

‘எம்மவ வெளிநாட்டுக்கு போயி அவபாட்டுக்கு நிம்மதியா இருப்பா.. இங்கன இருந்தா தான, பழச எல்லாம் பேசுவாங்க..’ இதுவே அவரின் எண்ணமாக இருக்க,

“சரி கஸ்தூரி.. ஒரு நல்ல நாள் பார்த்து வர சொல்லுவோம்..” என்றுவிட்டார்.

அப்பாவின் பேச்சுக்கு சம்மதமாய் தலையை ஆட்டினாலும், அடிநெஞ்சில் ஒரு பயம் எழுந்தது. இந்த கமலக்கண்ணன் எதுவும் செய்வானோ என்று..

அவனை நினையாத மனமே என்று சொன்னாலும், அவள் மனம் கேட்பதில்லை. ஏதேனும் ஒருவகையில், அவனின் நியாபகம் வந்துகொண்டே இருந்தது.

வருவானோ.. பேசுவானோ.. வீடு தேடி வந்துவிட்டால்?? அப்பாவிடம் எதையும் சொல்லிவிட்டால்?? மாப்பிள்ளை வீட்டாரிடம் எதுவும் சொல்லிவிட்டால்..?? அவன் வீட்டினில் எதையும் உளறினால்..??

இப்படி அதை இதை எண்ணி எண்ணி நிறைய மனதிற்குள் போட்டு அஞ்சிக் குழம்ப, அவள் முகத்தினில் எப்போதும் இருக்கும் அந்த செழுமை மறையத் தொடங்கியது..

எப்போதும் ஒரு யோசனை.. கண்ணில் ஒரு குழப்பம் வந்து குடிகொண்டது.

“அம்மா தாயே மாரியம்மா... யாருக்கு எந்த பகையும் வரக்கூடாது.. எல்லாமே நல்லபடியா நடத்திக்குடு...” என்று அவள் வேண்ட,
எதை நல்லபடியாய் நடத்திக்கொடு என்று கேட்கிறாய் என்று அவள் மனமே அவளிடம் கேள்வி கேட்டது..!!

 
Top