Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூவாசம் மேனி வீசுதம்மா - 4

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
பூவாசம் மேனி வீசுதம்மா – 4

“ஏ கஸ்தூரி.. சீக்கிரம் வா புள்ள.. அங்க கடையில ஒரே ரகளையா கெடக்கு...” என்று மரிக்கொழுந்துவின் அம்மா வந்து அழைக்க,

முன்னே திண்ணையில் படுத்திருந்த வடைபாட்டி “என்னத்த டி சொல்லுற...” என்றபடி எழ,

கஸ்தூரி உள்ளிருந்து வந்தவள் “என்னாச்சு பெரிம்மா...” என்றபடி வர,

“வெரசா வா.. அங்க கடையில ஒரே ரகளை..” என்று மீண்டும் அதனையே சொல்ல, “ம்ம்ச் என்ன விசயம்னு சொல்லு பெரிம்மா...” என்று நின்றாள் கஸ்தூரி.

“நம்ம கண்ணே போயி உங்கப்பாரோட சண்டை..” என,

‘என்னது??!!!’ என்று நெஞ்சடைத்துப் போனது அவளுக்கு.

ஒருவேளை அப்பா அவனையும் எதுவும் சொல்லிவிட்டாரோ என்று நினைக்க, ‘இருக்காதே..’ என்றும் தோன்றியது அவளுக்கு.

“சண்டையா??!! என்னத்துக்காம்??? என்னத்துக்கு யாரும் வந்து குதிக்கணும்...” என்று வடைப்பாட்டி, சேலையை உதறிக்கொண்டு கிளம்பிட,

“கெழவி நில்லு.. நீ போயி என்னத்த செய்யப் போற...?” என்று நிறுத்தினாள் கஸ்தூரி.

“அடியே..!! சண்டை உங்கப்பனோட..” என,

“அதுக்கு...??!!” என்றாள்.

“நீ வராட்டி போ... நான் போறேன்..” என்று கிளம்ப, “போ.. போ.. ” என்ற கஸ்தூரியோ, மனம் படபடத்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாது அங்கே திண்ணையில் அமர்ந்துகொள்ள,

“நீ வரலையா??!!” என்றார், மரிக்கொழுந்துவின் அம்மா.

“இல்ல பெரிம்மா...” உறுதியாய் அவள் குரல் வர,

“ஊரே அங்கனத்தான் கூடிருக்கு புள்ள..” என,

“இருக்கட்டும்.. நா வந்து?? அப்புறோ ஊரே நாந்தான் என்னவோ செஞ்சிட்டேன்னு சொல்லவா??!! சண்டை போடறவங்க போடட்டும். என்னவோ செய்யட்டும். நாளைக்கு சந்தைக்கு லோட் எடுக்க ஆட்டோ வந்திடும். எடை போட்டு அனுப்பனும்...” என்று அவளின் வேலைக்கு நகர்ந்துவிட்டாள்.

‘ஹ்ம்ம் இந்த புள்ள என்ன வரம் வாங்கி வந்துச்சோ...’ என்று அவர் புலம்பியபடி செல்ல, கஸ்தூரி அவளின் காய்கறித் தோட்டத்திற்குள் நுழைந்துவிட்டாள்.

வெண்டை போட்டிருந்தனர். மாற்றி மாற்றி பயிர் செய்வர். வெண்டை, தக்காளி, கொத்தமல்லி, கத்தரி, மொச்சை, அவரை என்று. எல்லாம் இவளின் மனதினைப் பொறுத்து. இம்முறை வெண்டை போட்டிருக்க, நாளை டவுனில் சந்தை கூடும் நாள் என்பதால், மாலையே லோட் எடுத்துச் செல்ல ஆட்கள் வந்திடுவர்.

வேலைக்கு வந்தவர்கள், காய் பறித்து முடித்து, தரம் பிரித்து, கஸ்தூரியின் வருகைக்காக காத்திருந்தனர். எப்போதும் கஸ்தூரியும் ஆளோடு ஆளாய் நின்றுதான் வேலை செய்வாள். இந்த களேபரத்தில் காய் எடுக்க அவள் செல்லவில்லை.

எடை போட்டு ஆட்டோவில் ஏற்றி அனுப்புவது அவளினது பொறுப்பு. கூடவே தோட்டத்தில் வேலை செய்யும் ஆள் சென்று லோட் போட்டுவிட்டு, கணக்கு பார்த்துவிட்டு பணமும் கொடுத்துவிடுவார்.

“கஸ்தூரி வெரசா வா..” என்ற சத்தம் வர,

“ம்ம் இந்தா வந்தேன்...” சேலையை இழுத்து சொருகியபடி தோட்டத்தில் இறங்கியவள், மூடைகளை எண்ண, அவளின் வேகம் பார்த்து
“ஆத்தாடி...??!! எதுக்கு இம்புட்டு வேகம்??” என்றனர் கூலி வாங்க நின்றிருந்தவர்கள்.

“ம்ம்ச் பேசாம இருங்க...” என்றவளின் கண்கள் தன்னப்போல் மூடைகளின் எடையை கணக்கு போட்டாலும், மனதோ அங்கே கடையில் என்ன நடக்கிறதோ என்று அடித்துக்கொண்டு இருந்தது.

‘இவன் ஏன் இப்படி பண்றான்.. இத்தன வருசமா எங்கன போச்சு இவனோட பேச்செல்லாம்..’ என்று எண்ணியபடி இருக்க, இரண்டு முறை எடையை தவறாய் கணக்கிட,

“இந்தா புள்ள.. எங்களை கூலி குடுத்து அனுப்பனும்னு நெனப்பு இருக்கா இல்லையா??!! என்னாச்சு உனக்கு..” என, அவளின் அடக்கப்பட்ட கோபமும், மாலை நேர வெயிலும் சேர்ந்து அவளின் முகத்தினை சிவக்க வைக்க, அதுவே அவளுக்கு ஒரு தனி ஜொலிப்பினை கொடுத்தது.

‘இந்த புள்ளதான் எம்புட்டு அழகு.. சட்டுபுட்டுன்னு ஒரு கண்ணாலம் காட்சி அமைஞ்சா சிறப்பா இருக்கும்..’ என்று அங்கிருந்த இரு பெண்கள் தங்களுக்குள் ரகசியம் பேச,

கஸ்தூரியோ ‘என்ன நடந்தாலும் சரி.. நான் அங்க போகமாட்டேன்.. ஏன் போகணும்.. அவனா வந்து பேசினான்.. அப்பா அவரா வந்து திட்றார்.. என்ன நெனைச்சாங்க எல்லாம்.. நான் என்ன கிள்ளுக்கீரையா... யாருக்கு எது வேணாலும் இங்கன வரட்டும்.. கஸ்தூரிய தேடி வரட்டும்...’ என்று அவளே தனக்குள் பிடிவாதம் செய்துகொண்டாள்.

அங்கே கடையிலோ, ஊரில் பாதி கூடிவிட்டது. கண்ணன் வந்து முன்னே நிற்கவும், செல்லப்பாண்டி அதிர்ந்து போனார்.

மரிக்கொழுந்துவோ “வேணாம் மாப்புள.. உங்க வீட்டுக்குத் தெரிஞ்சா பெரிய பஞ்சயாத்து ஆகுமடா...” என இழுக்க,

“ஏன்??! அப்போ இவர் பஞ்சாயத்து வைக்க மாட்டாரா??! என்ன மாமா சொல்லுங்க.. நீங்க பண்ண மாட்டீங்களா??!! இவரென்ன அப்படியே சும்மா விட்டுட்டு போயிடுவாரா?? ஏன் பஞ்சாயத்து கூட்டுற திறமை எம்மாமாக்கு இல்லையா?? அவ்வளோதானா மாமா நீங்க...” என்று மாறி மாறி பேச,

‘இவன் என்னத்த செய்யுறான்..’ என்று புரியாது பார்த்தான் மரிக்கொழுந்து.

செல்லப்பாண்டியோ கண்ணனிடம் எதுவும் பதில் பேசாது “எலேய் மரி.. உன்னோட சோலியா இது...” என்று முறைக்க,

“சித்தப்பா.. நான் எதுவுஞ் செய்யல .. நீங்க என்னைய கண்டிச்சது மாதிரி இவன கண்டிச்சேன்... ” என்று அவன் பதறி சொல்ல,

“பாத்தா அப்படித் தெரியலையே...” என்று அவர் சொல்ல,

“மாமா.. நாந்தானே பேசுறேன்.. எங்கிட்ட பேசுங்க..” என்று கமலக்கண்ணன், இருவருக்கும் இடையினில் சென்று நிற்க,
கடையினில் இருந்த ஒருவர் “யப்பா!!! என்னப்பா இதெல்லாம்.. இத்தன நாள் எப்படி இருந்தீங்களோ அப்படி இருந்திட்டு போயிடுங்க...” என்று மத்தியஸ்தம் செய்ய,

“எதுவா இருந்தாலும் எம்மாமா சொல்லட்டும்...” என்றவன், “என்னோட பேசுங்க மாமா...” என்று இப்போதும் செல்லப்பாண்டியை பார்த்து நிற்க, அவருக்கோ சங்கடமாய் போனது.

சிறு வயதில் இருந்து தூக்கி வளர்த்தவன் இவன். இடையினில் என்னென்னவோ நடந்து விரிசல் விட்டிருந்தாலும், ஊருக்குள் கண்ணனைப் பற்றிய பேச்சு அவருக்கு அவன்மீது ஒரு மரியாதையைக் கொடுத்திருந்தது. அதற்குமேல் வேறெந்த நினைப்பும் மனதினில் இல்லை.

இன்றோ கண்ணன், கஸ்தூரியை வம்பிழுத்தான் என்று கேள்விப்படவும், கண்ணனிடம் தான் பேச நினைத்தார். ஆனால் அவர்களே பேசாத போது, இதற்கு எதுக்கு போய் அவர்கள் முன்னே நிற்க வேண்டும் என்றுதான் கஸ்தூரி, மரிக்கொழுந்து இருவரையும் கண்டிக்க, அதற்கு முண்டிக்கொண்டு இவன் வருவான் என்று நினைக்கவே இல்லை அவர்.

அவனுக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது பேச, வீட்டினில் அப்பா அம்மாவிடம் பேசி, பொறுமையாய் எடுத்து சொல்லி இவர்களை ராசியாக வைத்து பின் கஸ்தூரியை பெண் கேட்டு திருமணம் முடிப்பது என்பது எல்லாம்.. அவனுக்கு நீண்ட தூரமாய் தெரிந்தது.
அதுவுமில்லாது, அது நடக்கும் என்றும் அவனுக்குத் தோன்றவில்லை. சில நேரங்களில் அதிரடிதான் லாயக்கு. அதுபோலத்தான் இங்கும். அதிலும் கிராமம் வேறு.. ஒரு சிறு விஷயம் என்றாலும் அது அப்படியே பெரிதாய் கிளம்பிடும். இதெல்லாம் கணக்குப் போட்டுத்தான் கண்ணன் இப்படி வந்து நின்றது. ஆனால் செல்லப்பாண்டிக்கோ, திடீரென்று வந்து நிற்கவும் பேச்சு வரவில்லை.

“பேசுங்க மாமா...” என,

“ம்ம்ச்... எந்த பிரச்சனையும் பண்ணாம போயிடுங்க எல்லாம்...” என்றார் பொதுவாய்.

“நான் எந்த பிரச்சனையும் பண்ணல.. ஆனா நான் கஸ்தூரிய வம்பு பண்ணதுக்கு அவளை தொங்க விட்டிருவீங்கன்னு சொன்னீங்கலாம்...” என, சுற்றி இருந்த ஆட்கள் ‘ஆ ..!!’ பார்க்க,

“ஏப்பா... நீயா அப்புடி பண்ண...?” என்று ஒருவர் கேட்க,

“ஏன்.. நான் வம்பு பண்ணக் கூடாதா??! எனக்கு அந்த உரிமை இல்லையா??!!” என, அவ்வளோதான், ஆள் ஆளுக்கு ஒன்று பேச,

இவ்விசயம் அப்படியே சந்திரபாண்டிக்கும், முருகேஸ்வரிக்கும் செல்ல, சந்திரபாண்டி என்னவோ என்று வர,
முருகேஸ்வரி ‘யாரது எம்மவனோட மல்லுக்கு நிக்கிறது...’ என்று ஊரையே ஒரு அலசு அலசியபடி வந்து சேர்ந்தார்.
ஆளாளுக்கு ஒன்று ஒன்று பேச, கமலக்கண்ணனோ ‘நீங்க பேசாம நான் போகமாட்டேன்...’ என்று சொல்வதுபோல் அங்கிருந்த பெஞ்சினில் அமர்ந்துகொண்டான்.

அவனுக்கும் தெரியும், திடீரென்று இப்படி செய்தால் எல்லாருக்கும் ஒரு பதற்றம் வரும் என்று. ஆனால், இவர்கள் விசயத்தில் இப்படி செய்தால் மட்டுமே அனைவரும் ஒரு வழிக்கு வருவர் என்று தோன்றியது. எப்போது வேண்டுமானாலும் கஸ்தூரிக்கு திருமணம் முடியலாம். அந்த நேரத்தில் போய் ‘எனக்கு அவள கட்டி வை...’ என்று நிற்க முடியாது.

எதுவாக இருந்தாலும், இன்றே.. இப்போதே.. என்ற முடிவிற்கு வந்துவிட்டான்.

கடைக்கு வெளியே நின்று சந்திரபாண்டி “என்ன கண்ணா இதெல்லாம்...” என, செல்லப்பாண்டி பார்த்தவர், முகத்தினைத் திருப்பிக்கொண்டார்.

முருகேஸ்வரியோ “யாருக்கு அம்புட்டு தைரியம்.. எம்மவன பேச...” என வர, மரிக்கொழுந்து மனதில் பிரளயம் தான் வெடித்தது.
‘செத்தோம்..’ என்று நினைத்துக்கொள்ள,

கமலக்கண்ணனோ “வாங்கப்பா...” என்றவன் “இவரை என்னன்னு கேளுங்க...” என, சந்திரபாண்டிக்கு எதுவும் விளங்கவில்லை.

“ஏப்பா... இதெல்லாம் உங்க வீட்டு விஷயமப்பா...” என்று அங்கிருந்த மற்றொருவர் சொல்ல,

“ஆமா.. வீட்டு விசயம்தான்.. குடும்ப விசயம்தான்.. அது எல்லாரும் ஒண்ணா இருந்தா பேசிருக்கலாம்.. தனி தனியா இருந்தா, இப்படி பொது இடத்துல தானே பேச முடியும்.. என்ன பெருசு...” என்று கண்ணன் கேட்க,

“ம்ம்ம்...” என்று அவரின் தலை பொத்தாம் பொதுவாய் ஆட,

“கண்ணா.. மொத நீ எந்திரிச்சு வா.. உள்ள உக்காந்துட்டு என்ன பேச்சு..” என்று முருகேஸ்வரி அழைக்க,

“ம்மா... மாமாவ என்னன்னு ஒருவார்த்தை நீங்க கேட்காம நான் வர மாட்டேன்...” என்றான் பிடிவாதமாய்.

‘டேய் பண்றது எல்லாம் நீயி.. அவர என்னத்தடா கேட்க...’ என்று மரிக்கொழுந்து பார்க்க,

“என்னடா??!!” என்றார் முருகேஸ்வரி.

“மதியம் கஸ்தூரிய பாத்தேன்.. பேசாமத்தான் போனேன்.. அவ போற வழியில ஆணி நீட்டி விழுந்து கெடந்ததும்மா.. மனசு கேட்காம பார்த்துப் போன்னு சொன்னேன்.. அதுக்கு முறைச்சா.. அதான் லேசா வம்பு பண்ணேன்.. நீயே சொல்லு.. நல்லது பண்ணனும்னு தானே நான் நெனச்சேன்..” என,

‘இவே என்ன புதுசா ஒரு கதை சொல்லிறியான்...’ என்று மரிக்கொழுந்து வாய் பிளக்க,

செல்லப்பாண்டி ‘இது என்ன??!!’ என்று புருவம் உயர்த்த,

“இதான் நடந்தது.. தோ.. இவந்தான் எங்கூட இருந்தான்.. என்னடா மரி.. வேறென்ன நடந்துச்சு.. நீயே சொல்லு..” என்று மரிக்கொழுந்துவை கண்ணன் அதட்ட,

“அ.. அ.. ஆமா.. ஆமாடா...” என்று அவன் தலையை உருட்ட,

“ஹ்ம்ம் பாருங்க.. நல்லது பண்ணனும்னு நெனச்சது என் தப்பா.. முறைச்சிட்டு போனது அவ.. இல்லை அவ என்னை முறைச்சதுதான் தப்பா.. என்னத்துக்கு இப்போ முறைக்கிறவன்னு நான் வம்பா பேசினேன்.. இல்ல அது தப்பா.. அதை இவர்கிட்ட யார் என்ன சொன்னாங்களோ.. மாமா போய் அவள இனி இப்படி பண்ணா தொங்க விட்ருவேன் சொல்லி மிரட்டியிருக்காரு...” என, சந்திரபாண்டியும், முருகேஸ்வரியும் ஒருவர் முகத்தினை ஒருவர் அதிர்ந்து பார்த்துக்கொள்ள,

“இங்கியாருங்க.. எம்மவ கஸ்தூரி.. அவளத்தான் சொல்ல எனக்கு உரிமை இருக்கு.. சும்மா இதை வச்சு யாரும் இங்க ரகள இழுக்கவேணாம்...” எனும்போதே வடைபாட்டி அங்கு வந்தவர்,

“ஏப்பா கண்ணா... என்ன இது??” என,

மீண்டும் கண்ணன் அதே கதையைச் சொல்லி “நீயே சொல்லு கெழவி... அந்தப்புள்ள என்னோட ஒருவார்த்தை பேசலை.. அதை போய் ஏன் அப்படி சொல்லணும்.. நானுமே வேணும்னு செய்யலை.. பார்த்துப்போன்னு சொன்னது குத்தமா??!!” என,

“என்னய்யா செல்லப்பாண்டி..” என்றார் அவரிடம்.

செல்லப்பாண்டி பதில் சொல்வதற்குள், “கண்ணா...” என்று சந்திரபாண்டி அதட்டியவர் “வீட்டுக்கு வா..” என்று சொல்ல,

“எனக்கு ஒரு முடிவு தெரியாம வரமாட்டேன் ப்பா...” என்றான் அனைவரின் முன்னமும்.

அவ்வளோதான் முருகேஸ்வரி ஆரம்பித்துவிட்டார் “எங்க அவ.. வித்தாரக்கள்ளி.. அன்னிக்கு என்னைய சாடை பேசுனா.. இன்னிக்கு எம்மவன் அவளுக்கு நல்லது சொல்ல போக, அவனையே முறைச்சிட்டு போயிருக்கா.. இத்தன தைரியம் அவளுக்கு யாரு கொடுத்தா.. எங்க அவ..” என்று கூட்டத்தில் கஸ்தூரியைத் தேட,

“அந்தப்புள்ள என்ன பண்ணுச்சு..??” என்றார் வடைபாட்டி.

“எம்மவன முறைச்சிருக்கா.. அவன் என்ன அவ கைய பிடிச்சா இழுத்தான்.. பார்த்து போ அப்படின்னு சொன்னது குத்தமா....” என்றவர்

“அவள போயி பேசிக்கிறேன்...” என்று கிளம்ப, “யக்கா... இருக்கா...” என்று வந்தான் மரிக்கொழுந்து.

சந்திரபாண்டி மனதில் என்ன தோன்றியதோ, மகனை ஒருபார்வை பார்த்தவர் “முருகு.. நீ கெளம்பு.. அவன் என்ன செய்யணுமோ செஞ்சிட்டு வரட்டும்..” என்றுவிட்டு அவர் கிளம்பிவிட்டார்.

இதற்குமேல் அங்கே நடக்கும் கேலி கூத்துக்களை எல்லாம் அவர் பார்க்க விரும்பவில்லை. கண்ணன் மனதில் என்ன நினைத்துகொண்டு இப்படி செய்கிறான் என்று யூகனம் செய்துவிட்டார்.

நேருக்கு நேரே பெரியவர்களை பேச வைக்க முயல்கிறான்..!!

இது புரியாதா அவருக்கு.. அதற்கு இடம் கொடாது அவர் நகர்ந்துவிட, முருகேஸ்வரியோ “ஏன்டா எவ காலுல என்ன குத்துனா உனக்கு என்னடா.. நல்லது பண்ணனும்னு நெனச்ச உன்னைய இப்படி நடு ரோட்ல நிக்க வச்சிருக்கா.. பண்ணதும் பண்ணிட்டு இப்போ எங்க போயி ஒளிஞ்சிருக்கா..??” என்று சத்தம் போட,

செல்லப்பாண்டிக்கு பொறுமை கடந்துவிட்டது.

“போதும்..!!” என்று சத்தம் போட்டவர், “இம்புட்டுத்தான் விஷயம்னு தெரிஞ்சி போச்சுல்ல, எல்லாம் கெளம்புங்க... இப்பவும் சொல்றேன் எம்மவள என்னமும் சொல்ல எனக்கு உரிமை இருக்கு.. அதை வந்து யார் கேள்வி கேட்கவும் உரிமை இல்லை..” என்று குரல் உயர்த்த,
சும்மா இருந்த தொட்டிலை ஆட்டிய கதையாய், முருகேஸ்வரியை இது தூண்டிவிட,

“எப்புடி எப்புடி.. என்ன சொன்னீங்க.. யார் வந்து கேள்வி கேட்கவும் உரிமை இல்லையா??!! அதுசரி.. உங்க மவ காலுல ஆணி குத்தினா என்ன?? முள்ளு குத்தினா என்னன்னு எம்மவன் போயிருக்கனும்.. அப்போ என்ன சொல்லிருப்பீங்க, எம்மவ போற வழியில ஆணிய போட்டான்னு சொல்லுவீங்களோ...” என்று கேட்டவர்,

“கண்ணா இப்போ சொல்றேன்டா... என்னையவே ஜாடை பேசினால்ல, இப்போ சொல்றேன்.. அவள எங்கன பார்த்தாலும் நிறுத்தி வச்சு பேசு.. யாரு என்ன செய்றான்னு நானும் பார்த்துக்கிடுறேன்...” என,

கமலக்கண்ணன் முகத்தினில் அப்படியொரு சிரிப்பு. மரிக்கொழுந்து மயக்கம் அடையாத குறைதான் இது.
சுற்றி இருந்தவர்களுக்கே அப்படித்தான் ஆனது..

“எம்மவன் அப்படித்தான் உங்க மவளோட பேசுவான்.. என்ன நடக்குதுன்னு நானும் பாக்குறேன்.. கண்ணா வாடா..” என்றுவிட்டு முருகேஸ்வரி நடக்க,

‘இதுக்குத்தான இம்புட்டும்...’ என்று மரிக்கொழுந்து கமலக்கண்ணனப் பார்க்க,

‘எப்புடி.. எங்கம்மா வாயாலயே சொல்ல வச்சேனா??!!’ என்று முனுமுனுத்தவன், “மாமா.. நீங்க அம்மா சொல்றதை எல்லாம் மனசுல வச்சுக்க வேணாம்.. சரியா.. கஸ்தூரி மேல எந்த தப்புமில்ல.. வீணா போயி அவள திட்டாதீங்க...” என்றுவிட்டு அவனும் கிளம்ப,

செல்லப்பாண்டி அனைத்திற்கும் சேர்த்து வைத்து மரிக்கொழுந்தை முறைக்க “ஆத்தி..!!” என்று விட்டால் போதும் என்பதுபோல் ஓடிவிட்டான் அவன்.

புயல் அடித்து ஓய்ந்தது போலிருந்தது அங்கே..!!

அனைவருக்குமே இப்போது ஏன் கமலக்கண்ணன் வந்து சத்தம் போட்டான், முருகேஸ்வரி எதற்கு அப்படிச் சொல்லிச் செல்லவேண்டும் என்று ஆனது.

சிலரோ ‘எப்படியோ எல்லாம் ஒண்ணு சேந்தா சரிதான்...’ என்றனர்.

அது அத்தனை எளிதாய் நடந்திடுமா என்ன??!!

முருகேஸ்வரி நேராய் வீட்டிற்குச் செல்லாது, நேராய் கஸ்தூரியைக் காணத்தான் சென்றார்.

‘எம்மவன் ராசாவாட்டம் இருக்கான்.. பார்த்து போ சொன்னதுக்கு முறைச்சாளா?? இந்தா வர்றேன்.. என்னைப் பார்த்து முறைக்கட்டும்.. உருட்டி உருட்டி பாக்குற கண்ண புடுங்கி அவ கைல தர்றேன்....’ என்றபடி போக,

“ஏப்பா கண்ணா உங்கம்மா கஸ்தூரி வீட்டுப்பக்கம் போகுதப்பா..” என்று வழியில் பார்த்தவர் ஒருவர் சொல்ல,

‘அய்யோ..!! எல்லாத்தையும் இந்தம்மா சொதப்பி வச்சிரும் போலவே...’ என்று வேகமாய் கைலியை மடக்கிக் கட்டிக்கொண்டு ஓடினான் கமலக்கண்ணன்..

‘யாரா இருந்தாலும் என்னைத் தேடி வரட்டும்...’ என்று கஸ்தூரி மனதில் எண்ணியது, காற்றுவழி சேதியாய் இவர்களுக்கு வந்து சேர்ந்ததுவோ என்னவோ??!!




 
:love: :love: :love:
இவன் ரொம்ப பண்ணுறான்........
சும்மா இருந்த பொண்ணை வம்பில் மாட்டி விடுறான்.........
இவன் அம்மா ஒருபுறம்........
இனி அவள் அப்பா ஒரு புறம்........
நிம்மதியா இருக்க விடமாட்டாங்க போலவே.......

அவளை ஓடவச்சிடுவான் போல.........

யாரா இருந்தாலும் என்னை தேடி வரட்டும்.......
பையன் குட்டு உடையுமா???
 
Last edited:
Top