Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூவாசம் மேனி வீசுதம்மா - 3

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
பூவாசம் மேனி வீசுதம்மா – 3

“எம்புட்டு ஜாடை பேசிட்டு போறா... எம்புட்டு தைரியம்... என்னன்னு கேக்குறதுக்கு ஆள் இல்லை, இவ என்னை என்னைபார்த்து ஜாடைப் பேசுறா..” என்று முருகேஸ்வரி இரண்டு நாட்களாய் இதே பாட்டுத்தான் வீட்டினில்.

வார இறுதி நாட்கள் என்று, கமலக்கண்ணன் வீட்டினில் இருக்க, அம்மாவின் இந்த பாட்டினை கேட்டு கேட்டு அவனுக்கு இம்சையாய் ஆனது.

“ம்மா போதும்மா..!!” என்றுகூட சொல்லிப்பார்த்தான்.

சந்திரபாண்டி கூட “முருகு... பிடிக்கலைன்னா ஒதுங்கிடனும்.. இப்படி நீயும் பண்ணி வைக்கக் கூடாது..” என்று கண்டிக்க,

“அதுக்கு.. அதுக்கு... அப்படி சொல்வாளா??!! முருகேஸ்வரின்னு பேரு சொன்னா அவ அவ வீடு தேடி வந்து சீட்டு பணம் கொடுத்திட்டு போவா.. நான்.. நான் பணம் கேட்டு இம்சை பண்ணேனாம்.. இவ பார்த்தாளாமா...??!!!” என்று அதற்கும் எகுற,

“நான் தோப்புக்கு போறேன்..” என்று எழுந்துவிட்டான் மகன்..

மட்டமதிய நேரம், ஊரே அமைதியாய் இருக்க, இவன் என்ன இந்நேரத்தில் தோப்பிற்குக் கிளம்புகிறான் என்று பார்க்க,
‘மரிக்கொழுந்தே ஏ மல்லிகப்பூவே...’ என்று கமலக்கண்ணின் அலைபேசி குரல் கொடுக்க,

“சொல்டா மரிக்கொழுந்து.. என்ன விஷயம்??!!” என்று கேட்டபடி நகர்ந்துவிட்டான் கமலக்கண்ணன்.

“என்னாங்க..??!! இவன் பாட்டுக்கு எந்திரிச்சு போறான்..??!! இந்நேரம் தோப்புல என்ன வேல?? நீங்க எதுவும் சொன்னீங்களா??” என,

“இம்புட்டு நேரம் நானும் இங்கன தானே இருந்தேன்.. நான் சொன்னதை எதுவும் பாத்தியா??” என்று சந்திரபாண்டியும் கேட்க,

“அந்த மரிக்கொழுந்து பய கூட சேராதன்னா, பொழுதன்னைக்கும் அவனோடதான்.. ஒன்னு அவன் வர்றான்.. இல்ல இவன் போறான்...” என்று முருகேஸ்வரி அடுத்த பாட்டினை ஆரம்பிக்க,

“ஆமா... உம்மவன் பள்ளிக்கூடம் போறான்.. அவனோட சேராத இவனோட சேராதன்னு சொல்லிட்டு.. போ.. போய் வேற சோலி இருந்தா பாரு..” என்று சந்திரபாண்டியும் எழுந்துவிட,

‘அப்பனுக்கும் மவனுக்கும் எப்படித்தான் இருக்குமோ.. கோழி குழம்ப தின்னுட்டு வாய் சவடால்...’ என்று முருகேஸ்வரி முனுமுனுக்க, சந்திரபாண்டி எதனையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

கமலக்கண்ணன் வீட்டை விட்டு வர, சற்றுத் தள்ளி மரிக்கொழுந்தும், அவனோடு இரண்டு சிறுவர்களும் நின்று இருந்தனர். மிஞ்சி போனால் இருவருக்கும் பத்து வயது இருக்கும்..

“என்னடா எதுக்கு கூப்பிட்ட...?” என்றபடி கைலியை மடக்கிக் கட்டிக்கொண்டு கண்ணன் வர,

“ம்ம்.. வேண்டுதலு.. இந்த பொடிசுகளுக்கு கெணத்துல நீச்ச கத்து கொடுக்கணுமாம்..” என்று மரிக்கொழுந்தும் சொல்ல,

“அதுகென்ன கத்து கொடு..” என்றான் கண்ணனும் அசால்ட்டாய்.

அவன் அப்படி சொன்னதும், அச்சிறுவர்கள் சிரிக்க, “டேய்..!!” என்று அவர்களை அதட்டல் போட்டவன் “உங்கிட்ட தான் கத்துப்பானுங்கலாம்...” என,

“ஏன்டா அப்படியா??!!” என்றான் கண்ணன், அவர்களைப் பார்த்து.

“ஆமாண்ணே.. இந்தண்ணே போன வாரம் சொல்லித்தரேன்னு சொல்லி, கெணத்துக்குள்ள இறங்கி வரவே ஒருமணி நேரம் பண்ணிச்சு..” என்று சொல்லி சிரிக்க,

‘இதெல்லாம் தேவையா??!!’ என்று பார்த்தான் கண்ணன்.

“மாப்ள... உள்ள இறங்கி போறது வரைக்கும்தான்டா பயம்.. இறங்கிட்டேன்னு வையி...” எனும்போதே “அப்படியே நீயும் நீந்தி கிழிச்சிடுவ...” என்றவன், “கம்மாய்ல பழகுவோமா டா??” என்று கேட்க, சிறுவர்களும் சந்தோசமாய் சரி என்றனர்.

“கம்மாய்னா எனக்கெல்லாம் சர்வ சாதாரணம்டா.. கெணறுன்னு சொன்னாதுனால தான் உன்னைய கூப்பிட்டேன்..” என்றபடி மரிக்கொழுந்தும் வர, கண்ணன் வந்த சிரிப்பை அடக்கியபடி நடக்க, அப்போதுதான் கஸ்தூரி அவளின் அப்பாவிற்கு சாப்பாடு கொண்டுபோய் கொடுத்துவிட்டு வந்துகொண்டு இருந்தாள்.

அவர்களின் கடையில் காலையும், இரவும் மட்டுமே உணவு விநியோகம். மதியம் இல்லை. ஆக மதியம் இவள் சென்று கொடுத்துவிட்டு வருவாள் செல்லப்பாண்டிக்கு. இன்றும் அதுபோல் கொடுத்துவிட்டு வர, அத்தனை பெரிய ரோடும் அல்ல, கமலக்கண்ணன், மரிக்கொழுந்து, மற்றும் அச்சிறுவர்கள் என்று நால்வரும் ரோட்டினை அடைத்துக்கொண்டு வர,
எதிரே கஸ்தூரி வர

‘டேய் மாப்புள... பேசாம வந்திடு.. வம்பு கிம்பு பண்ணிப்புடாத...’ என்று மரிக்கொழுந்து சொல்லி முடிக்குமுன்னம்,

கண்ணன் “கஸ்தூரி.. இன்னிக்கு என்னா சமையலு??!!” என்று கேட்டுவிட்டிருந்தான்.

மற்றவர்களோடு வருகிறான், ஒன்றும் பேசாது ஒதுங்கிப் போய்விடுவான் என்று கஸ்தூரி அமைதியாய் வந்துகொண்டு இருக்க, என்னவோ பல நாள் பேசிப் பழகியது போல கண்ணன் கேட்கவும், அவளுமே கொஞ்சம் திடுக்கிட்டுத்தான் பார்த்தாள்.
மரிக்கொழுந்தோ, ‘ஐயோ..!!’ என்று நெஞ்சில் கை வைத்தவன், சுற்றி முற்றி வேகமாய் பார்த்தான். யாருமில்லை என்ரபின்னே தான் மூச்சே வந்தது.

“டேய் வாடா மாப்புள..” என, கஸ்தூரி கண்ணனை முறைத்தவள், பதில் சொல்லாது நடக்க,

“ஓய்!!! கைல கூடை வச்சு போறவளே...” என்று திரும்பி நின்று கண்ணன் அழைக்க,

‘இதேதடா வம்பு...??!!’ என்றுதான் கஸ்தூரிக்கும் தோன்றியது.

“டேய்.. போதும்டா.. கடைசில எனக்கு சமாதி கட்டிடாத...” என்று மரிக்கொழுந்து அழாத குறையாய் இருக்க, “இருடா...” என்றவன்,

“டேய் பசங்களா.. என்னடா உங்கக்கக்கா பேசாம போறா??!!” என்றபடி அவளின் பின்னயே போக, அச்சிறுவர்களுக்கு இதெல்லாம் வேடிக்கையாய் இருந்தது.

‘என்ன இவன் இப்படி எல்லாம் பண்றான்...’ என்றெண்ணியவள் ‘திரும்பிப் பாக்காம நீ பாட்டுக்கு போ கஸ்தூரி..’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொள்ள, கண்ணனோ அவள் பின்னேயே போக,

“டேய் வாடா...” என்று மரிக்கொழுந்தும் அவன் பின்னே போக, நீச்சல் கற்றுக்கொள்ள வந்த சிறுவர்களும் அவர்களின் பின்னே போக,

கண்ணனோ “நீ பேசாம.. நான் இவனுங்களோட போக மாட்டேன்..” என, இன்னும் சற்று தள்ளிப்போனால் வீடுகள் ஆரம்பித்து விடும்.. யாரேனும் பார்த்தால் கூட வம்பு என்று கஸ்தூரி,

“மரியண்ணே நீ பண்ற வேலைதானா இதெல்லாம்..” என்று அவனைப் பார்த்துக் கேட்க, “ஐயோ..!! ஆத்தி... சத்தியமா இல்ல தாயி..” என,

“நீ மட்டும் இப்போ எல்லாத்தையும் கூட்டிட்டு இடத்த காலி பண்ணல, நேரா இவங்கம்மாட்ட போய், உங்க மவன என்னோட பேசச் சொல்லி இந்தண்ணே இழுத்துட்டு வர்றாங்கன்னு சொல்லிடுவேன் பார்த்துக்கோ..” என்று மிரட்டவும், மரிக்கொழுந்து அந்த வார்த்தைகளிலேயே பயந்து மாண்டு போனான்..

பின்னே யார் முருகேஸ்வரியிடம் பேச்சுக்கேட்பது??!!

“டேய் மாப்புள.. உன்காலுல கூட விழுறேன்.. வந்திடுடா.. உசுர வாங்காத..” என்று மரிக்கொழுந்து கெஞ்ச,

"அண்ணே வாண்ணே.. இந்தண்ணே இங்கவே அசிங்கம் பண்ணிடும் போல..” என்று சிறுவர்கள் சொல்ல, கண்ணன் ‘ஹா ஹா ...’ என்று நகைக்க, அது நடந்து போகும் அவளின் காதிலும் விழுந்தது..

கண்ணனின் சிரிப்பினைப் பார்த்து மரிக்கொழுந்து முறைக்க “முறைக்காதடா.. உம்முகத்துக்காக அவள சும்மா விடுறேன்..” என,

“ஏன்டா ஏன்??!! அவ என்னடான்னா என்னைய சொல்லுவேங்குறா.. நீ எனக்காகன்னு சொல்ற.. ஏன்டா சோதிக்கிறீங்க..” என்று மரிக்கொழுந்து புலம்பியபடி வர,

“குடும்பத்துக்குள்ள இதெல்லாம் சகஜம்டா வா.. வா...” என்று இழுத்துப் போனான் கமலக்கண்ணன்..

‘குடும்பமா??!!’ என்று மரிக்கொழுந்து யோசிக்க, “யாருக்கு யார்றா குடும்பம்??” என,

“நீச்சலுக்கு அப்புறம் சொல்றேன்...” என்றவன், பின் சிறுவர்களுக்கு பொறுப்பாய் கம்மாயில் நீச்சல் சொல்லிக்கொடுக்க, மரிக்கொழுந்தோ தண்ணீரில் கால் வைக்கக் கூட இல்லை..

“மரி.. நீயும்வாடா... தண்ணி குளுகுளுன்னு இருக்கு...” என,

“நீ பேசுனதே ஜிலுஜிலுன்னு இருக்குடா...” என்றவன் இன்னமும் பேயறைந்தது போல் இருந்தான்..

கண்ணன் செய்யும் செயல்கள் எல்லாம் அறியாதவனா மரிக்கொழுந்து. என்ன சொல்லியும் அவன் கேட்பதாய் இல்லை. இப்போதோ வெளிப்படையாகவே அவளோடு போகையில் வருகையில் பேச நிற்க, இதெல்லாம் இருவர் வீட்டிலும் தெரிந்தால் என்ன என்று அச்சம் கொண்டது அவன் மனது.

அங்கே கஸ்தூரியோ, கமலக்கண்ணனைத்தான் அர்ச்சித்துக்கொண்டு இருந்தாள்.

‘எம்புட்டு தெனாவட்டு... இவனுக்கு.. அப்பா அம்மா முன்னாடி பேச மாட்டானாம்... ஆனா இப்படி வம்பளப்பானாம்...’ என்று முனங்கியபடி, பாத்திரங்களாய் ஒதுக்கிப்போட்டு தேய்க்க, பாத்திரங்கள் எல்லாம் அவள் கையில் படாத பாடு பட,

“என்னா கஸ்தூரி.. என்னத்துக்கு இப்படி போட்டு உருட்டுற...” என்று வடைப்பாட்டி கேட்க,

“கெழவி நீ பேசாமயிரு கொஞ்சம்..” என்று அதட்டியவளுக்கு, அவனின் மேலிருந்த ஆத்திரம் மட்டும் குறைவதாய் இல்லை..

‘இன்னொரு தடவ வரட்டும்.. கஸ்தூரின்னு பேரு வச்சவனாட்டம்.. கவ்வாத்து கத்தி வச்சு அவன் வாயில இழுக்குறேன்...’ என்று அவளின் முனுமுனுப்பு அடங்கவே இல்லை.

இத்தனை வருடங்களாய் பேசாது போய்விட்டு, இப்போது வந்து கஸ்தூரி என்றால், அவள் பேசுவாளா என்ன??!! அதுவும் எப்படி சொல்லிப்போனான் அன்று.. அதெல்லாம் அவளுக்கு மறக்குமா என்ன??!!

ஆனால் கஸ்தூரி நினைக்காத வகையில் ஒன்று நடந்தது..!!

செல்லப்பாண்டி மாலை வீட்டிற்கு வந்து “மதியம் வீட்டுக்கு வர்றப்போ என்ன பிரச்னை..??!” என, அவளுக்குப் புரியவில்லை.
எதைக் கேட்கிறார் என்று..

“என்னதுப்பா..??!!” என்று அவளும் கேட்க,

“மதியம் வீட்டுக்கு திரும்ப வர்றப்போ உன்னோட யார் பேசினா??!!” என்று கேட்க, அவளுக்குப் புரிந்துபோனது ..
யாரினது கண்ணிலோ இது பட்டிருக்கிறது என்று..

“அதுப்பா..!!” என்று இழுக்க,

“இன்னொரு தடவ இப்படி ஏதாவது கேள்விப்பட்டேன்.. தொங்க விட்ருவேன்...” என்று விரல் நீட்டி செல்லப்பாண்டி எச்சரிக்க, கஸ்தூரிக்கு மழுக்கென்று கண்ணில் நீர் வந்துவிட்டது.

அவள்மீது என்ன தவறு??!!

அன்றிலிருந்து இன்று வரைக்கும், அவள் மீது என்ன தவறு இருக்கிறது..?! ஆனாலும் பேச்சு வாங்குவது அவள்தானே..
கண்ணில் வழிந்த நீரைத் துடைத்தவள் “நான் எதுமே பண்ணலப்பா..” என,

“பண்ணனும்னு நெனப்பு கூட வரக்கூடாது..” என்றார் செல்லப்பாண்டி.

“ப்பா... நான் தப்பா எப்பவும் எதுவும் செய்யமாட்டேன்..” என, “செஞ்சுத்தான் பாரேன்...” என்றுவிட்டு போனார் அவர்.

கஸ்தூரிக்கு ஒருவித அயர்வாய் கூட போனது. எத்தனை முறை சொல்ல முடியும் என்னை நம்பு நம்பு என்று.. அவருக்கும் தன்னைப் பற்றி தெரியும். இருந்தும் இப்படி வந்து சொல்கையில், கோபம் ஒருபுறம், ஆற்றாமை ஒருபுறம் என்று அவளின் மனதினைப் போட்டு வெகுவாய் பாதித்தது..

இது அத்துனையும், கண்ணன் மீது தான் திரும்பியது அவளுக்கு. இருந்தும் தன் கோபத்தினை கூட அவன்மீது அவள் காட்டிட விரும்பிடவில்லை.

ஆனால், செல்லப்பாண்டியோ கஸ்தூரியோடு நில்லாது மரிக்கொழுந்தினை அழைத்தவர் “இன்னோரு தடவ ஏதாவது இப்படி கேள்விபட்டேன்..” என, அவனையும் பிடித்து உலுக்க,

“சித்தப்பா... அதெல்லாம் ஒண்ணுமில்ல...” என்று அவன் சமாளிக்கப் பார்க்க,

“இப்போதான் கஸ்தூரிட்ட சொல்லிட்டு வந்தேன்.. தொங்க விட்ருவேன்னு.. அதேதான் உனக்கும்...” என்றுவிட்டுப் போக,

‘எல்லாம் இவனால வந்தது...’ என்று முனங்கிய மரிக்கொழுந்து, நேராய் கண்ணனிடம் போய் நின்றான்.
சிறுவர்களுக்கு நீச்சல் சொல்லிக்கொடுத்தவன், அவர்களின் தென்னந் தோப்பில், ஒரு கயிற்றுக் கட்டிலில் காலாட்டி படுத்துக்கிடக்க,

“டேய் நல்லவனே.. உன்னால என்ன முடியுமோ செஞ்சிட்ட..” என்றுபோய் மரிக்கொழுந்து நிற்கவும்,

“என்னடா பயலுங்க நல்லா நீந்துனாங்கல்ல..” என்று அவன் அப்போதும் கேட்க,

“அப்படியே கொன்னுடுவேன்...” என்று இரு கைகளையும் மரிக்கொழுந்து கண்ணனின் கழுத்திற்கு அருகே கொண்டுப் போக,

“அதுக்கு நீ உசுரோட இருக்கனும்டா...” என்று அவனின் கையினை படுத்திருந்த வாக்கிலேயே முறுக்கினான் கண்ணன்.

“டேய்.. டேய்.. விட்றா...”

“இப்போ எதுக்கு இவ்வளோ சலம்பல்..??!!”

“எல்லாம் உன்னாலதான்..??” என்றவன், ஒருவழியாய் கமலக்கண்ணனிடம் இருந்து தன் கையினை விடுவித்துக்கொண்டவன், செல்லப்பாண்டி சொல்லியதைச் சொல்ல,

“என்ன??!! தொங்க விட்ருவேன் சொன்னாரா??!!” என்றான் கோபமாய் கண்ணன்.

“ஆமாடா...”

“கஸ்தூரிய அப்படிச் சொன்னாரா??!!”

“என்னையும் தான்டா சொன்னாரு..”

“ம்ம்ச் அது கெடக்கட்டும்.. கஸ்தூரிய சொன்னது உனக்குத் தெரியுமா??!” என,

“ஆ..!!” என்று மரிக்கொழுந்து பார்க்க, “சொல்லுடா...” என்று கண்ணன் அவனை உலுக்க,

“அப்படி அவர்தான் சொன்னார்..” என,

“சரி வா போவோம்...” என்று கிளம்பிவிட்டான்..

“எங்கடா.. டேய்..” என்று மரிக்கொழுந்து அவனின் பின்னே ஓடாத குறையாய் செல்ல,

“ம்ம் பேசினது நாந்தான.. அப்போ என்னத்தான முதல்ல தொங்க விடனும்.. அதான்.. போய் என்னன்னு கேட்கறேன்...” என்று போனான் கண்ணன்..

“ஐயோ!!! கண்ணா.. ஊருக்குள்ள பெரிய பஞ்சாயத்தா ஆகிடும்டா..” என்று மரிக்கொழுந்து பதறியபடி பின்னேயே போக,
கமலக் கண்ணன் எத்தனை வேகத்தில் சென்றானோ, நேராய் போய் நின்றது செல்லப்பாண்டியின் கடையினில் தான். அவர் அப்போதுதான் வீட்டினில் இருந்து வந்திருக்க,

“என்ன சொன்னீங்க மாமா நீங்க??!! தொங்க விடுவீங்களா?? அதுவும் கஸ்தூரியவா..??!! முடியுமா உங்கனால??!! செஞ்சித்தான் பாருங்கேளன்...” என்று போய் நின்றான்..

 
Top