Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூவாசம் மேனி வீசுதம்மா - 10

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
பூவாசம் மேனி வீசுதம்மா – 10

கமலக்கண்ணன் இரண்டு நாட்களாய் கஸ்தூரியோடு எதுவும் பேசவில்லை. என்னவோ அவனுக்கு பேசவேண்டும் என்று நினைத்தாலே, அவள் எதுவும் சொல்லிடுவாளோ, இல்லை எதுவும் அவள் பழையது நினைத்திடுவாளோ, தன்னை அறியாது அவளைப் பேசி நோகடித்துவிடுவோமோ என்று நினைத்தே அமைதியாகிப் போனான்.

இது அவனின் குணமே அன்று.. எதிலும் எப்போதும், அவ்வப்போது அதனதனை முடித்திட வேண்டும் என்று இருப்பவன்.
இன்று கஸ்தூரிக்காக பொறுத்துப் போனான்.!!

பட் பட் என்று பேசுகையில், அவனாலும் பதில்கள் சொல்லிட முடியும். ஆனால் காயப்படுவது அவள் என்கையில் அதுவே அவனுக்கு பெரும் வலி கொடுக்கும்.

யாரின் பிடிவாதத்திற்காக அவர்களின் திருமணம் நடந்திருந்தாலும் சரி.

அவள், அவனின் மனைவி. அதுவும் விரும்பி மணந்தவன் வேறு.

அவனைப் பொறுத்தமட்டில், கஸ்தூரிக்கு மனக்கசப்பு எதுவும் வந்திட கூடாது. இந்த வாழ்வில், அதாவது அவனோடான இந்த வாழ்வில் அவள் ஒட்டிக்கொள்ள வேண்டும். முக்கியமாய் தன்னை அவள் மனதில் கணவனாய் நினைக்கத் தொடங்கவேண்டும்.
அவளின் பேச்சுக்கள் எல்லாம் அப்படியே பழைய படியே தான் இருக்கிறது. இவன் என் கணவன் என்றோ, புதிதாய் திருமணம் ஆகியிருக்கிறது என்ற பாவனையோ அவளிடம் இல்லை. சில நேரங்களில் அவள் நன்றாய் இருக்கிறாள். நன்றாய் பேசுகிறாள்.

இரவுகளில் பேச்சுக்களில் சில நேரம் ருசிகள் மாறுகையில், புன்னகையோடு தான் இருக்கிறாள், ஆனால் அதையும் தாண்டி அவனிடம் எவ்வித உரிமையோ இல்லை நெருக்கமோ அவளாய் காட்டுவதும் இல்லை. அதற்கான முயற்சியும் செய்வதாய் தெரியவில்லை.

இதெல்லாம் கண்ணனின் மனதினுள் ஓட, மௌனியாகிப் போனான். இவளை எப்படி அணுகுவது என்று யோசித்து யோசித்தே..
இந்த இரண்டு நாட்களும் அவனுக்கு வேலையும் நிறைய இருந்தது. மில்லில் இருந்து வரவே இரவு ஒன்பது மணியாகிவிட, வந்து பின் குளித்து, உண்டு என்று அதிலேயே நேரம் சென்றுவிடுகிறது.

கிராமம் வேறா, எழு மணிக்கு எல்லாம் ஊரே அமைதியாகிப்போகும், அவரவர் வீட்டினில் டிவி ஓடும் சத்தம் மட்டுமே.

கஸ்தூரியை அழைத்துக்கொண்டு சும்மாவேனும் எங்காவது சென்று வரலாம் என்றால் அதற்கு நேரமும் அமையவில்லை. அவளும் அதற்கு தோதாய் வருவதுபோல் தெரியவில்லை.

வருகிறாயா.. வா.. போகிறாயா.. போ..

“ஏன் லேட்??!!”

“ரொம்ப வேலையா??”

“இன்னிக்கும் லேட்டாகுமா??”

“சாப்பிட்டியா இல்லையா..??”

இப்படியான கேள்விகள் எல்லாம் அவளிடம் இருந்து வருமா என்று அவனும் பார்த்து பார்த்து நின்றது மட்டும்தான் மிச்சம்..
நல்லவேளை கமலக்கண்ணனுக்காகவே வந்தது வார விடுமுறை. அடுத்த இரு தினங்களும் வீட்டினில் தான். அதுதான் அவனுக்கு இப்போது பெரும் யோசனை.. வெளியே கூட்டிச் செல்வோமா??!! தான் அழைத்து அவள் மறுப்பாய் சொன்னால், அதுவேறு இவனுக்கு கடுப்பாய் இருக்கும்..

இதே எண்ணத்தில் படுத்திருக்க, பக்கத்தில் இருக்கும் அவளின் தலையணையில் இருந்து அவள் வைத்து படுத்திருந்த பூ வாசம்..
அவனின் முகத்தினைப் அதில் புதைத்து, வாசம் நுகர்ந்தவன், “ம்ம் என் நேரம்..” என்று முனங்க, சரியாய் கஸ்தூரியும் அறைக்குள் வந்துவிட்டாள்.

அவளின் தலையணையில் தலை வைத்து, அவன் படுக்கும் பக்கம் கால் நீட்டி, கட்டில் முழுவதும் அடைத்து படுத்திருக்க,

“ந்தா இப்படி படுத்தா நான் எப்படித் தூங்க..” என்று கஸ்தூரி நிற்க, கண்ணனோ பதிலே சொல்லவில்லை.

“உன்னத்தான்...” என்று அவனின் முதுகில் தட்ட,

‘நீ கத்திக்கிட்டே கொஞ்ச நேரம் நில்லு டி...’ என்றுதான் அவனின் மனது எண்ணியது.

“ம்ம்ச் பார்ரா...” என்று சொன்னவள், “இங்க பாரு.. இப்புடி படுத்தா எப்புடி...” என்றபடி நெறுக்கி அமர,

‘வா டி வா...’ என்றெண்ணியவன் “எனக்குத் தூக்கம் வருது போ...” என,

“தூங்கு வேணாங்கல.. தள்ளிப் படுத்துத் தூங்கு..” என்றாள் இவளும்.

“ச்சே... ஒரு மனுஷன் நிம்மதியா தூங்க முடியுதா...” என்றவன், அவளின் இடத்தினிலேயே படுத்துக்கொள்ள “ரொம்ப அலுத்துக்காத...” என்றவள், அவன் இடம் விடவும், விளக்கை அணைத்துவிட்டு வந்து படுக்க, அப்போதும் கண்ணன் பேசாது இருக்க, அவளுக்குத் தெரியும் அவன் உறங்கவில்லை என்பது.

இரண்டு நாட்களாய் அவன் சரியாய் பேசவில்லை என்பதும் கூட கண்டுதான் வைத்திருந்தாள்.

என்ன கேட்க கொஞ்சம் தயக்கமாய் இருந்தது..!!

ஆனால் மண்டைக்குள்ளே வண்டுபோல் குடைய “தூங்கிட்டியா??!” என்றாள் மெதுவாய்.

“ம்ம்ஹும்...”

“அப்புறோ என்ன யோசிக்கிற??!!”

“எதுக்கு..??”

“சொல்லேன்.. தூக்கம் வர வரைக்கும் என்னோட எப்பவும் பேசுவதான..” என,

“ஆமா டி.. உன்னோட பேசிக்கிட்டே தூங்கத்தான் உன்ன கல்யாணம் பண்ணேன் பாரு...” என்று பட்டென்று கமலக்கண்ணன் எரிந்து விழ, அவனுக்கு கோபம் கோபமாய் வந்தது.

அவளின் மனநிலை நன்கு தெரிந்தது. இருந்தும் முயற்சிகள அவளும் தான் செய்திட வேண்டும். இப்படியே அவன் பேசாது இருப்பதும் எத்தனை நாளைக்கு. ஒவ்வொரு முறைக்கும் இதுவே சாத்தியமாகுமா??!! அதனால் கோபம் வந்துவிட்டது.

“சொல்லு கஸ்தூரி.. எனக்குத் தெரியலை.. இல்ல நான் எதுவும் உன்னைய கஷ்டப்படுத்துறேனா..” என்றவனின் பார்வையில் அப்படியொரு வேகம்.

கஸ்தூரிக்கும் புரிந்தது தான் நடந்துகொள்வதும் சரியில்லை என்று. ஆனால், எல்லாம் மறந்து ஒரேடியாய் அவனோடு ஈஷிக்கொள்ளவும் அவளால் முடியவில்லை.

பழையதை எல்லாம் மறந்தால் தான் இவ்வாழ்வு சந்தோசமாய் இருக்கும் என்று அவளுக்கும் புரிந்தது. ஆனாலும் என்னவோ, அவளால் ஒரு அளவுக்கு மீறி அவனோடு ‘என் கணவன்..’ என்ற உரிமையை எடுக்கவோ இல்லை அவனுக்குக் கொடுக்கவோ முடியவில்லை.

வடைபாட்டித்தான் “யாரோ ஒருத்தனுக்கு கட்டிக் கொடுத்திருந்தா என்ன செஞ்சிருப்ப, இதான் நம்ம வாழ்க்க இதான் நம்ம புருசன்னு சந்தோசமா இருந்திருப்ப தான.. அதுபோல இதையும் நெனச்சிக்க.. புரிஞ்சதா..” என்று சொல்லியிருக்க, அதையே மனதினில் போட்டு நினைத்து நினைத்து,

‘புரிஞ்சுக்கிட்டு அப்புறம் வாழ்றது எல்லாம் நமக்கு சரி வராது போல.. போற போக்குல புரிஞ்சுக்க வேண்டியதுதான்..’ என்ற முடிவில் வந்து நின்றுவிட்டாள் கஸ்தூரி. அநேகம் பேரின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது என்று அவளுக்கு இன்னம் தெரியவில்லையோ என்னவோ.

இப்போது கமலக்கண்ணனும் இப்படி கேட்க “ம்ம் இப்போ நான் என்ன பண்ணிட்டேனாம்...” என்றாள் சலுகையாய்.
குரலில் என்னவோ ஒரு மாறுபாடு. அது அவனை அவளைப் பார்த்துத் திரும்ப வைக்க,

“ஒரு முத்தத்துக்கே இங்க பஞ்சமாருக்கு...” என்று அவன் முகத்தினை சுருக்கி முனங்க, “பஞ்சப்பாட்டு பாடி, பஞ்சாங்கம் பார்த்துட்டு இருக்கிறது நீ..” என்று அவளும் முனங்க,

“என்னது.. என்ன டி சொல்ற நீ??” என்று அவன் எழுந்து அமர்ந்தே விட்டான்.

“என்னத்த சொன்னேன்..” என்று நொடித்தவள் “புதுசா கல்யாணம் ஆகிருக்கே.. காலகாலத்துல வீட்டுக்கு போவோம்.. அவள எங்கனயாவது கூட்டிட்டு போவோம் இப்புடி எதுனா இருக்கா... ம்ம்...” என்று வேண்டுமென்றே சொல்ல,

“ஐயோ.. ஐயோ...!!!” என்று வாயில் அடித்துக்கொண்டான் கமலக்கண்ணன்.

அவன் செய்வதை கஸ்தூரி ஒரு சிரிப்போடு பார்த்துக்கொண்டு இருக்க “ஏன் டி பண்ணது எல்லாம் நீ.. என்னைய சொல்றியா... முத்தம் வச்சா, சின்ன புள்ளைல வச்ச மாதிரின்னு சொல்றவக்கிட்ட வேற நான் என்ன செய்ய??” என்றவனுக்கு உற்சாகம் வந்துவிட்டது.

‘ரெண்டு நாள் பேசாம இருந்ததுக்கு தன்னப்போல வழிக்கு வர்றா...’ என்று.

இரவு விளக்கின் வெளிச்சத்தில், கஸ்தூரியின் அழகு பன்மடங்காய் தெரிய, ஏற்கனவே அழகி அவள், இதில் இப்போது இன்னமும் ஜொலிக்க, அவளின் பார்வையோ கமலக்கண்ணன் பக்கமே இருக்க, “இப்போ எதுக்கு இந்த பார்வை??!!” என்றான் வேண்டுமென்றே.

“நீ படுத்துக்கிட்டே பேசு.. இப்புடி நீ உக்காந்துட்டு பாக்குறது என்னவோபோல இருக்கு..” என,

“என்னவோ போலவா??!! என்ன போல?? ம்ம் சொல்லு சொல்லு என்ன போல??” என்று கமலக்கண்ணன் வேகமாய் கேட்க,

“அச்சோ போ.. நீ... இப்புடியெல்லாம் கேட்டா எனக்குத் தெரியாது...” என்றாள் சிணுங்களாய்.

“வேற எப்புடி கேக்கட்டும்.. அதாவது சொல்லு...” என்றவன் வெகுவாய் அவளை நெருங்கியிருக்க, கஸ்தூரி தடுக்கவேயில்லை..

பேச்சுக்காகவேணும் மறுப்பாளோ என்று பார்க்க, அவளோ அவனோடு லயிக்கவே விருப்பமாய் இருப்பதுபோல் இருந்தது. கமலக்கண்ணனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. என்ன திடீர் மாற்றம் என்று கேட்க நினைத்தான். பின் அவனே வேண்டாம் என்று விட்டுவிட்டான். இதெல்லாம் திருமண வாழ்வின் ஓரங்கம். இது ஏன், அது ஏன் என்று கேள்விகள் எல்லாம் சிலவற்றிற்கு இல்லவேயில்லை. கேட்கவும் கூடாதது. யாரிடமும் சொல்லவும் கூடாதது.

“சொல்லு கஸ்தூரி.. வேற எப்புடி கேட்கட்டும்...” என்றவனோ இப்போது அவள் தலையில் சூடியிருக்கும் பூவினை நுகர,

“என்னைய கேட்டா..” என்று கேட்டவளுக்கு, குரலே வரவில்லை.

கொஞ்சம் கூச்சமாய் இருந்தாலும், ஆசையாகவும் இருந்தது. சிறு வயதில் இருந்து பார்த்தவன் என்ற எண்ணம் போய், கமலக்கண்ணன் மீது ஒருவகை நாட்டம் எழ, கணவன் மனைவி என்ற உறவு என்பதும், வாழ்வின் ஆரம்பம் என்பதும் இப்படிதான் இருக்குமோ என்று அவளாகவே எண்ணிக்கொள்ள, புதுவித சந்தோசமாய் இருந்தது கஸ்தூரிக்கு.

“உன்னைத்தான்டி கேட்க முடியும்...” என்றவனின் கரங்களோ இப்போது அவளை நுகர, அவளோ பேசவேயில்லை.

“சொல்லு டி கஸ்தூரி...” என்றவனோ அவளின் கன்னத்தோடு கன்னம் வைத்து அழுத்தி, “எவ்வளோ வழுவழுப்பு..” என்றவன் மீண்டும் மீண்டும் அவளின் கன்னமும், இதழும் தீண்ட, கஸ்தூரியின் பார்வை இப்போது முற்றிலும் மாறிப்போனது.

மாற வைத்துவிட்டான் கமலக்கண்ணன். ..!

“நீ செம்ம அழகு டி கஸ்தூரி..” இது மட்டுமே அவன் சொல்லிக்கொண்டு இருந்தது.

அவன் பேச, பேச அவளுள் நிறைய மாற்றம். பதிலுக்கு பதில் பேசிட நினைத்தாலும் அது அவளால் முடியவில்லை. ஆனாலும் அவனுக்கு இசைந்து கொடுக்க, இப்போது பூவாசம் அவனின் மேனியிலும் வீச, சுகந்தமாய் நகர்ந்தது அப்பொழுது.

மறுநாள் விடியலிலோ, கஸ்தூரி வேகமே எழுந்துவிட “லீவுதான இரு...” என்று கமலக்கண்ணன் இறுக்கி பிடிக்க,

“லீவு உனக்குத்தான்.. மதினி ஊருக்குக் கிளம்புறாங்க.. வேலையிருக்கு..” என்றவள், குளிக்கச் சென்றுவிட்டாள்.

கஸ்தூரி குளித்து முடித்து வந்து, தயாராகி கீழே செல்லும் வரைக்கும் கமலக்கண்ணன் அவளைச் சீண்டியபடியே இருக்க கஸ்தூரியும் பதிலுக்கு எதையாவது அவனிடம் சொல்லிக்கொண்டு இருக்க, அவள் முகத்தினில் இருக்கும் புன்னகையும், அவள் பேச்சில் தொனிக்கும் கேலியும் கிண்டலும் குழைவும், அவனுக்குக் காண காண தெவிட்டவில்லை.

அவள் கீழே சென்றதும், சிறிது நேரத்தில் அவனும் கிளம்பி கீழே வர, முருகேஸ்வரி சொன்னதற்கு எல்லாம் கஸ்தூரி என்னவோ சிரித்துப் பேசிக்கொண்டு இருக்க,

“ஆ..!!” என்று அவர்கூட ஆச்சர்யமாய் பார்த்து வைக்க, கல்பனா ஊருக்குச் செல்ல தயாராகிக் கொண்டு இருந்தவள்,

“என்ன கஸ்தூரி.. சிரிப்பெல்லாம் ஒரு மார்கமா இருக்கு..” என்று கேலி பேசவும்,

“வேற எப்புடி சிரிச்சா ரெண்டு மார்கமா இருக்கும் மதினி..” என்று கஸ்தூரியும் கேட்க, “அது சரி..” என்று கல்பனா சொன்ன விதத்தில் கஸ்தூரியும் அவளோடு சேர்ந்து நகைத்துகொண்டாள்.

முருகேஸ்வரி பார்த்துக்கொண்டே இருந்தவருக்கு என்ன புரிந்ததுவோ “இவங்க கெளம்பவும் நீயும் அவனும் கோவிலுக்கு போயிட்டு வாங்க என்ன??” என,

“சரிங்கத்த..” என்றவளோ, கமலக்கண்ணனைப் பார்க்க, “டவுனுக்குக் கூட்டிட்டு போகலாம்னு நெனச்சேன் ம்மா...” என்றான்.

“எங்கனயோ ஒன்னு கூட்டிட்டு போயிட்டு வா..” என்ற முருகேஸ்வரி கல்பனாவோடு பேசத் தொடங்கிவிட,

“டவுனுக்கு எதுக்கு??” என்றாள் கஸ்தூரி..

“சும்மாதான் போயிட்டு வருவோம்.. உனக்கு புது ட்ரெஸ் எல்லாம் வாங்கலாம்..” என, “அதான் இருக்கே..” என்றாள்.

“என்கூட வேலை செய்றவனுக்கு இன்னும் பத்து நாள்ல கல்யாணம்.. வந்து கூப்பிடுவான்.. எப்போ பாரு சேலையே கட்டுற.. இப்போ சுடிதார் எல்லாம் எவ்வளோ டிசைன் டிசைனா வருது.. அதுபோல வாங்கலாம்..” என, கஸ்தூரிக்கு குஷியாகிப் போனது.

அவளும் டிவியில் பார்த்திருக்கிறாள் தானே. எத்தனை ரகம் ரகமாய், விதம் விதமாய்.

ஆசையாய் தான் இருக்கும். ஆனால் செல்லப்பாண்டி எப்போதும் இருக்கும் மாடல் தான் சுடிதாரில் வாங்கித் தருவார். அதன்பின்
கஸ்தூரியே சேலைக்கு மாறிக்கொண்டாள். இப்போது கண்ணன் சொல்லவும், அவள் முகத்தினில் ஆவல் தெரிய,

“என்ன ஓகேவா..” என,

“ம்ம் அப்புடியா சினிமாக்கு போலாமா??” என்றாள், என்ன சொல்வானோ என்ற பாவனையில்.

கமலக்கண்ணன் என்ன வேண்டாம் என்றா சொல்லப் போகிறான். அவனே இதனை நினைத்து இருந்தான் தான். இங்கே வைத்து எதுவும் சொல்லிக் கொள்ளவேண்டாம், அங்கே போன பிறகு கூட்டிச் செல்வோம் என்று நினைத்திருக்க, கஸ்தூரியே கேட்டது ஆனந்தமாய் இருந்தது.

“போலாமே...” என்று கண்ணன் சொல்லவும், “நான்லாம் தியேட்டருக்கு போயி பல வருஷம் ஆச்சுத் தெரியுமா..” என, கமலக்கண்ணனுக்கு அப்படியே முகம் வாடிப் போனது.

சிறு சிறு சந்தோசங்களைக் கூட வாழ்வினில் இழந்து இருக்கிறாள்..

அவளின் அம்மா செய்த செயல், அவளின் உள்ளே எத்தனை ஏக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது என்று அவளைப் பார்க்க,

“அட அப்புடி எல்லாம் பார்த்து வைக்காத.. உன்னோட போகணும்னு இருந்திருக்கு..” என்றபடி கஸ்தூரி உள்ளே போக,

‘இவள இன்னும் இன்னும் நல்லா வச்சுக்கணும்..’ என்று முடிவு செய்துகொண்டான்.

சிறிது நேரத்தில், கல்பனாவும் அவள் மகளும் புகுந்த வீடு கிளம்பிவிட, அவர்களின் வீடு பக்கத்து டவுனில் இருந்து அடுத்து தள்ளி இருக்க, சந்திரபாண்டி தான் ஒரு டாக்சி அமர்த்தியிருந்தார். மகளைக் கொண்டு போய் விடவும் அவரே கிளம்பியிருக்க, முருகேஸ்வரி எதுவும் சொல்லவில்லை.

கண்ணனையும் கஸ்தூரியையும் அனுப்பி வைக்கலாம் என்று நினைத்திருக்க, சந்திரபாண்டியோ “அவங்க தனியா எங்கனாவாது போயிட்டு வரட்டும்...” என்றுவிட்டார்.

கல்பனா அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிட “சுடு தண்ணிய காலுல ஊத்தின மாதிரி அவதிப்பட்டு கூட்டிட்டு வந்துடாதடா.. நாலு எடம் சுத்திக்காட்டு..” என்று முருகேஸ்வரி, மகனிடம் சொல்லிக்கொண்டு இருக்க,

அம்மாவின் இந்த திடீர் மாற்றம் கண்ணனுக்கு வியப்பாய் இருந்தது.

“எப்புடிம்மா இப்புடியெல்லாம்..” என்று சிரிப்பினை அடக்கி வினவ,

“பின்ன, நாளைக்கு எனக்கு ஒண்ணுன்னா அவதான் பாக்கணும்.. மல்லுக்கட்டி அதெல்லாம் நான் கெடுத்துக்க விரும்பல..” என்று ஒரே போடாய் போட்டுவிட்டார்.

“பயங்கரமான ராஜ தந்திரம்மா..” என்று கண்ணன் சொல்லிச் சிரிக்க, சரியாய் வந்தான் மரிக்கொழுந்து.

“வாடா..” என,

“ம்ம் ம்ம்..” என்றவன் “யக்கா.. எங்கம்மா சீட்டு பணம் கொடுத்து விட்டுச்சு.. அடுத்த மாசம் அதுக்கு போட்ருவியாம்.. சொல்லி வைக்க சொல்லுச்சு..” என,

“அதான பார்த்தேன்...” என்றபடி முருகேஸ்வரி “கஸ்தூரி அந்த பெரிய நோட்டு கொண்டா..” என்று குரல் கொடுக்க, உள்ளிருந்து அவளும் எடுத்து வந்து கொடுக்க,

“நாஞ்சொல்லிக் கொடுத்தது போல எழுது..” என்றார் அவளிடம்.

“வாண்ணே...” என்று கஸ்தூரி சொன்னவளும், நோட்டை விரிக்க, கமலக்கண்ணனுக்கு இப்போது வரைக்கும் இவ்விசயம் தெரியாது. கஸ்தூரி சொல்லவேயில்லை.

“ம்மா அவளுக்கு என்ன இதெல்லாம் தெரியும்..” என,

“அதெல்லாம் நான் சொல்லிக்கொடுத்தேனே.. எனக்கடுத்து இதல்லாம் இவதான பாக்கணும்..” என்று முருகேஸ்வரியும் சொல்ல,
‘எங்கம்மா ஒரு மினி முருகேஸ்வரிய ரெடி பண்ணுது போல..’ என்று எண்ணிக்கொண்டான்.

கஸ்தூரி எழுதி முடித்து, மரிக்கொழுந்து கொண்டு வந்த சிறிய நோட்டிலும், எழுதி கொடுக்க, “கஸ்தூரி ஒரு காப்பி கொடேன்...” என்று மரிக்கொழுந்து கேட்க,

“ம்ம்...” என்று கஸ்தூரி எழ,

“இந்தாடா.. காசு கொடுக்க வந்தமா கொடுத்தமா இருக்கணும்.. அதவிட்டு காப்பி கொடுன்னு கேக்குற. அவளே எம்புட்டு வேல செஞ்சுட்டு இருக்கா. உனக்கு காப்பிப் போட்டுக் கொடுக்கத்தேன் அவள நா மருமவளா கொண்டு வந்தேனா.. போயி அவ அப்பாரு கடையில குடி..” என்று விரட்ட,

முருகேஸ்வரி சொன்ன விதத்தில், கஸ்தூரி கமலக்கண்ணன் இருவருக்கும் சிரிப்பு வந்துவிட, மரிக்கொழுந்து மூவரையும் முறைத்துப் பார்த்தவன் “நல்லா வருவீங்க...” என்று இரு கைகளையும் விரித்து சொல்லிவிட்டுச் செல்ல, இப்போது முருகேஸ்வரியும் சிரிப்பினில் சேர்ந்துகொண்டார்.








 
:love::love::love:

அம்மா கஸ்தூரி நீயும் மாமியாரும் சேர்ந்துட்டீங்களே........

கமலக்கண்ணனை போற போக்குலத்தான் புரிஞ்சுக்க போறியா :p:p:p
ஆனாலும் ரொம்ப பண்ணுறமா நீ........

மாமனாரும் மாமியாரும் விழுந்து விழுந்து கவனிக்குறாங்க......
மாமியார் வாதமும் சரிதான்....... எதிர்காலத்தை கெடுத்துக்க தயாரில்லை :D:D:D

ஆனாலும் வந்தவனுக்கு கேட்டப்புறமும் காபி குடுக்க விடலையே........
அங்கே நிக்குறாங்க உன் மாமியார்......
 
Last edited:
ஹா ஹா ஹா
உனக்கு காபி போட்டுக் கொடுக்கத்தான் அவளை மருமகளாகக் கொண்டு வந்தேனா?
சூப்பர் முருகேஸ்வரி
 
Last edited:
Top