Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூந்தென்றல் தீண்டுமோ-4

Advertisement

Samyukta Ram

Member
Member
ஹாய் ரீடர்ஸ் சென்ற அத்தியாயத்திற்கு கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் மனம் கனிந்த நன்றிகள் இதோ பூந்தென்றல் தீண்டுமோ அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள் ?♥️




மறுநாள் குழலியை கல்லூரிக்கு அழைத்துச் செல்ல வந்தாள் கயல்.முன்தினம் மழையில் நனைந்ததில் உடம்பு ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.ஆனால் தேர்வு நெருங்கியதால் விடுமுறை எடுக்க தயங்கி கிளம்பி விட்டாள்.உள்ளே நுழைந்ததுமே எதிர்ப்பட்ட சிவகாமி,

"கயல்மா ஏன்டா நாலு நாளா வரல?"

"வீட்ல கொஞ்சம் வேலை அதான் வர முடியல...ஆமா இது என்ன கஷாயம் மாதிரி இருக்கே யாருக்கு உடம்பு முடியல?"என்று கயல் கவலையோடுக் கேட்க,

"அது நா பெத்த துரைக்கு தான் உடம்பு முடியல நேத்திக்கு மழைல நனஞ்சுட்டு வந்திருக்கான்... ராத்திரி புடிச்சு லேசா சளி காய்ச்ச அடிக்குது அதுக்கு தான் கசாயம் பண்ணி இருக்கேன்"

அப்போது வெளியே இருந்து யாரோ வேலை செய்பவர் சிவகாமியை அழைத்தார். மகனுக்கு கசாயம் எடுத்து போவதாக இல்லை வாயிலுக்கு செல்வதா என்று குழம்பிப் போனார் சிவகாமி. அப்போது கயலுக்கு ஒரு யோசனை தோன்றியது.

"அம்மா கசாயத்தை என்னிடம் கொடுங்க நான் கொண்டு போயி உங்க மகனுக்கு கொடுக்கிறேன்"என்று கயல் கூறவும் சரி என அவள் கையில் கசாயத்தை கொடுத்தார்.

கசாயத்தை எடுத்துக்கொண்டு இளாவின் அறைக்கு சென்றாள். அவள் இதுவரை அவன் அறைக்கு சென்றதில்லை. இப்போது செல்வது ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. ஆனால் உடல்நலம் சரியில்லாத அவனை பார்க்க வேண்டும் போல் தோன்றியது. தன்னால்தான் அவனுக்கு ஜுரம் வந்தது என்று அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஒருக்களித்து இருந்த கதவை லேசாக தட்டினாள். ம்ம்ம்ம் என்ற முனகல் தான் கேட்டது. படபடத்த இதயத்தை சமன் செய்தவாறு உள்ளே நுழைந்தாள். அங்கே படுக்கையில் கவிழ்ந்து படுத்து இருந்தான். அரவம் கேட்டதும் வந்திருப்பது அம்மா என்று நினைத்தவன்,

"கசாயத்தை அங்கே வெச்சிட்டுப் போங்கம்மா"என்று அவன் கூற,

"சாரி.."என்று முனகினாள்.

கயலின் குரலை கேட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்தவன் யார் நீ என்பதுபோல் பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டான். அவன் ஒதுக்கம் அவளுக்கு வருத்தத்தை அளித்தது. நேற்று வண்டியில் வீடுவரை விட்டது என்ன இன்று நீ யாரோ என்பதுபோல் பார்ப்பது என்ன? அவ்வப்போது மாறும் அவன் நடத்தை அவளுக்கு துளியும் புரியவில்லை. அவன் எழுந்து எப்படியும் பேசப்போவதில்லை என்று அவளுக்கு தீர்மானமாக தெரிந்துவிட்டது. அதனால் கண்ணில் நீர் தளும்ப அங்கிருந்து அகன்று விட்டாள்.

குழலியின் அறைக்குச் சென்றவள் அவள் தயாராகிக் கொண்டிருப்பதை பார்த்தாள். தோழியை கண்டதும் குழலி புன்னகைத்தாள். ஆனால் கண்ணீர் நிரம்பிய கயலின் கண்களை பார்த்ததும் துணுக்குற்றாள்.

"கயல் ஏண்டி அழறே என்ன ஆச்சு ஏதாவது பிரச்சனையா?"என்று குழலி பதற,

"அப்படி எல்லாம் எதுவும் இல்லை நீயா ஏதாவது நினைச்சுக்காதே! காலேஜுக்கு லேட்டாயிடுச்சு சீக்கிரம் போலாம் வா"என்று கயல் கூறிவிட வேறு வழி இல்லாமல் குழலியும் காலேஜுக்கு கிளம்பினாள்.

கல்லூரியிலும் கயல் பாடத்தில் கவனமில்லாமல் உம்மென்று இருந்தது குழலியை பாதித்தது. பிரச்சனை என்னவென்று தெரிந்தால் ஏதாவது செய்யலாம். ஆனால் எதற்கும் வாய் விடாத தோழியை என்ன செய்வது என்று அவளுக்கு புரியவில்லை. ஆனால் மனதின் ஆழத்தில் தோழியின் இந்த நிலைக்கு தன் அண்ணனே காரணம் என்று அவளுக்கு தோன்றியது. இன்று மாலை எப்படியும் கயலிடம் உண்மையை வரவழைக்க வேண்டும் என்று தீர்மானித்தள் குழலி.

மாலை கல்லூரி முடிந்ததும் வீட்டுக்கு செல்லாமல் கோவிலுக்கு செல்வோம் என்று குழலி கூறவும் கயலும் சரி என்றாள். அன்று கோவிலில் அதிகம் கூட்டம் இல்லை. தரிசனம் முடிந்து ஒதுக்குப்புறமான மண்டபத்தில் இருவரும் அமர்ந்ததும் இரண்டொரு நொடி தோழியை கூர்ந்த குழலி முடிவில்,

"கயல் நீ எங்க அண்ணாவை லவ் பண்றியா"என்று குழலி கேட்டதும் திடுக்கிட்டுப் போனாள் கயல். அவள் அப்படி ஒரு கேள்வியை கேட்பாள் என்று அவள் நினைக்கவே இல்லை. திடுமென கேட்கவும் அதிர்ந்து வாய் பேச முடியாமல் அயர்ந்து விட்டாள். தோழிக்கு என்ன பதில் கூறுவது என்று அவளுக்கு புரியவில்லை. கயலின் அதிர்ந்த முகத்திலேயே தனக்கான பதிலை தெரிந்து கொண்டு விட்டாள் குழலி. ஆனாலும் அது அவள் வாயிலிருந்தே வரட்டும் என மௌனமாக அவளையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். இனி உண்மையை மறைக்க இயலாது என்று தீர்மானித்த கயல்,

"சாரி குழலி நான் உன் கிட்ட சொல்லனும் தான் இருந்தேன் ஆனா தைரியம் வரல... நான் சொன்ன பப்பி லவ் உங்க அண்ணா தான் இது எனக்கு இப்பதான் தெரிஞ்சது"என்று கயல் கூற திகைத்தாள் குழலி.

"நீ சொல்லும் போதே எனக்கு சந்தேகம் வந்தது அது அண்ணாவா தான் இருக்கணும்னு... ஆனா இப்போ நீ நடந்துக்கிற பாத்தா இது பப்பி லவ் இல்ல போல இருக்கே?"

அதில் இரண்டு நிமிடம் மௌனமாக இருந்த கயல் பின்,

"ஆமா குழலி நீ சொல்றது போல இது பப்பி லவ் இல்ல எனக்கு அது இந்த மூணு வருஷத்துல புரிஞ்சிடுச்சு இப்போ அவர மறுபடியும் பார்த்ததும் அந்த எண்ணம் உறுதி ஆயிடுச்சு... இனிமே அவரை தவிர வேற ஒருத்தர என்னால நினைச்சுக் கூட பார்க்க முடியாது"என்று திடமான குரலில் கயல் கூற அவள் தோளை ஆதரவாக தட்டினாள் குழலி. அவள் முகத்தில் தெரிந்த பரிதாபத்தில் குழம்பிப் போனாள் கயல். எதற்கு இந்த பரிதாபப் பார்வை? என்று திகைத்தாள்.

"குழலி ஏன் இப்படி பாக்குற நான் உங்க அண்ணா விரும்ப கூடாதா?அத தவறுன்னு நினைக்கிறாயா?"என்று கயல் கண் கலங்க கேட்டாள்.

"கயல் எங்க அண்ணாவுக்கு உன்ன விட சிறந்த ஜோடி வேறு யாரும் இருக்க முடியாது... ஆனா உன் ஆசை நிறைவேறுவது ரொம்ப கஷ்டம்..."என்று குழலி பூடகமாக கூற ஏனென்று அவள் புரியாமல் பார்த்தாள் கயல்.

"உங்க லெவலுக்கு நாங்க சாதாரணம் தான் அதனால தான் இது நடக்காதுன்னு சொல்றியா"என்று கயல் வருத்தத்தோடு கேட்க அதற்கு அவள் தோளில் சரியாக அடித்த குழலி,

"என்ன பேச்சு பேசுற கயல் நான் உன் அந்தஸ்த குறையா நெனச்சு இத சொல்லல... இதுக்கு வேற காரணம் இருக்கு "

"அப்படி என்னதான் பெரிய காரணம் இருக்கு தயவு பண்ணி இருக்கிற காரணத்தை விவரமா சொல்லு!"

"இது மூணு வருஷம் முன்னாடி நடந்தது அத எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சொல்றேன்"

ஒரு நாள் வயலில் மேற்பார்வை செய்துகொண்டிருந்த சுகேசன் திடீரென நெஞ்சை பிடித்துக்கொண்டு விழுந்துவிட்டார் உடனே ஆஸ்பத்திரியில் சேர்க்க மருத்துவர் அவருக்கு இதயம் பலவீனமாக இருக்கிறது என்று கூறினார். அதனால் பொறியியல் கடைசி வருடத்தை விட்டு கிராமத்திற்கு வந்துவிட்டான் இளா. அதன்பின் குடும்பத்தை பார்ப்பது வயல் வேலை என அதிலேயே மூழ்கி விட்டான். ஆறு மாதங்களில் எல்லாவற்றையும் நிர்வகிப்பதில் தேர்ந்துவிட்டான். தெளிந்த நீரோடை போல் இருந்த அவன் வாழ்வில் சூறாவளியாக வந்தாள் நீலாம்பரி.

நீலா பக்கத்து ஊர் செல்வந்தர் பக்தவத்சலத்தின் ஒரே மகள். அளப்பரிய சொத்திற்கு அவள் ஒரே வாரிசு. தாயில்லா மகளை செல்லமாக வளர்த்திருந்தார் அவர். அவள் கேட்ட எதுவும் இல்லை என்று அவர் என்றுமே சொன்னதில்லை. ஆசை மகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார். படிப்பு முடிந்து நீலாம்பரி வீட்டுக்கு திரும்பி வந்தாள். வெளிநாட்டின் உல்லாசத்தில் இருந்தவள் இங்கே கிராமத்தில் இருக்க தவித்துப் போனாள். அதற்கு அவள் தந்தை கூறிய யோசனை இங்கே இளஞ்சேரலுக்கு தீமையாக முடிந்தது.

படித்தவன் ஆயினும் இளஞ்சேரலுக்கு விவசாயம் மற்றும் கிராமத்து விளையாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.அதிலும் ஜல்லிக்கட்டு விளையாடி நிறைய பரிசுகளை வென்றிருந்தான். அந்த வருடம் பக்கத்து ஊரில் ஜல்லிக்கட்டு நடப்பதாக கேள்விப்பட்டு தானும் அதில் கலந்துக் கொள்ள சென்றான்.நீலாம்பரியும் அந்த ஊர் திருவிழாவையும் ஜல்லிக்கட்டையும் பார்க்க வந்திருந்தாள்.

ஜல்லிக்கட்டு துவங்கி நிறைய பேர் ஜெயித்தும் சில பேர் தோல்வியோடு படுகாயத்தையும் பெற்று சென்றனர்.கடைசியாக விடப்பட்ட காளை படுபயங்கரமானது.எத்தனையோ போட்டிகளில் அந்த காளை வீரர்களின் குடலை உருவி இருந்தது.இதுவரை பிடிக்க வந்த எல்லோருமே இப்போது அதன் அருகில் வர தயங்கினர்.

அதுவரை வாங்கியிருந்த ஐஸ்கிரீமை கண்மூடி ரசித்து ருசித்துக் கொண்டிருந்த இளா அந்த காளையைப் பற்றிய அறிவிப்பு வரவும் கைதட்டியபடி எழுந்தவன் வேட்டியை இழுத்து பின்னே சுருக்கிக் கொண்டு களத்தில் இறங்கினான்.அவனை அறிந்த நண்பர்கள் விசிலடித்து அவனை உற்சாகப்படுத்தினர்.அதுவரை நடந்தவைகளை அலட்சியமாகப் பார்த்திருந்த நீலா காளையின் எதிரே தானும் ஒரு காளையாக நின்றவனைக் கண்டு,

"வாவ்....வாட் எ மேன்!"என்றவள் இளாவை தலை முதல் கால் வரை ரசிக்கத் தொடங்கிவிட்டாள்.இந்தியா மட்டுமல்லாது அவள் சென்ற வெளிநாடுகளிலும் எத்தனையோ அழகான ஆண்களை அவள் பார்த்தவள் தான்.ஆனால் தூக்கி எறியும் காளையின் முன்பு அசால்ட்டாக நின்ற அவன் கம்பீர அழகு அவளை மொத்தமாக வீழ்த்திவிட்டது.

அவன் காளையை பிடித்தப் போது வாவ் மார்வ்லெஸ் வொண்டர்ஃபுல் என்று கத்தியவள் காளை அவனை எத்தி அவன் வீழ்ந்தப் போது நோ என்று கத்தினாள்.இங்கே இவள் இவ்வளவு ரகளை செய்துக் கொண்டிருக்க அங்கே அதை கொஞ்சமும் உணராது காளையை அடக்குவது ஒன்றே குறியாக இருந்தான் இளா.

ஒரு மணி போராட்டத்திற்கு பின் காளை அடங்கி அவனிடம் குழந்தை போல ஆனது.சுற்றியிருந்தவர்களை பாராது கூட்டத்தில் இடித்துப் பிடித்து ஓடி வந்த நீலா இளா அசந்த நேரம் அவன் கன்னத்தில் நச்சென்று முத்தத்தை கொடுக்கவும் அவளை இழுத்து எதிரே விட்டவன் அவள் கன்னத்தில் பளாரென்று அறைந்து விட்டான்.தான் முத்தமிட்டதும் கிறங்கிப் போவான் என்று நினைத்திருந்த நீலா அவன் சட்டென்று கை நீட்டிவிடவும் கண்ணில் கணல் பறக்கப் பார்த்தவள் மேலே ஏதும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

இளாவோடு வந்திருந்த விக்னேஷ்,

"யோவ் மாமா! உமக்கு கண்ட கண்ட எடமெல்லாம் மச்சம் இருக்கு ஓய்! அம்புட்டு அழகு பொண்ணுங்களும் உம்மதான் சுத்துது...எப்பா என்னா கிஸ்...!சந்தோஷப்படாம இப்படி அடிச்சுப்புட்டீரே!"என்று கேலி செய்ய,

"தூ யாரு கேட்டாங்க அவ கிஸ்ஸ!முதல்ல வீடு போய் பத்து சோப்பு போட்டு என் மூஞ்சிய கழுவனும்"என்று அருவெறுப்பாக முகத்தை சுளித்தபடி கூற நீ மனுஷனா என்பதைப் போல் பார்த்து வைத்தான் விக்னேஷ்.வீட்டிற்கு திரும்பி அவன் கூறியது போல சோப்பை தேய்த்து குளித்தான்.

அண்ணனுக்காக காப்பியை வைத்துக் கொண்டு காத்திருந்தாள் குழலி. குளியலறைக்கு அவன் சென்று ஒரு மணி நேரத்திற்கும் மேலே ஆகியிருந்தது.ஆனால் இன்னும் வெளியே வராது அப்படி என்னதான் செய்கிறான் என்று யோசனையில் ஆழ்ந்தாள்.அங்கே ஏதேச்சையாக வந்த விக்னேஷ் குளியலறை கதவைப் பார்த்தபடி நின்ற குழலியைப் பார்த்தவன்,

"அவரு இப்போதைக்கு வர மாட்டாரு நீ இங்க நிற்கிறது டோட்டல் வேஸ்ட்"என்று சிரித்தபடி கூற,

"ஏன் அப்படி என்னதான் பண்றான் உள்ளே?"

"குடுத்த முத்தம் கன்னத்தை விட்டு போயிடுச்சுன்னு அவருக்கு தோணுற வரைக்கும் மாமாரு வரமாட்டாரு!"

"எதே முத்தமா யாரு கொடுத்தது?அண்ணனுக்கா?"என்று குழலி கண்ணை விரிக்க ஜல்லிக்கட்டில் நடந்ததை விவரித்தான் விக்னேஷ்.

"அட கெரகம் புடிச்சவளே!அத்தனை பேரு இருக்குற இடத்துலே கொஞ்சம் கூட வெக்கமில்லாம இப்படித்தான் நடக்கறதா?"என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

அப்போது உள்ளே இளாவின் குரல் கேட்க யாரிடம் பேசுகிறான் என்று காதை கதவில் அழுத்து வைத்துக் கொண்டு கேட்டனர் அவர்கள் இருவரும்.

"ஐஸ்கிரீமு சாரிடி மாமா கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன்...சைடு கேப்ல எவளோ வெளங்காதவ வந்து நீ கொடுக்க வேண்டிய முத்தத்தைக் கொடுத்துப்புட்டா... இனிமே இப்படி நடக்காம மாமா இனிமே ஜாக்கிரதையாக இருப்பேன் என் ஐஸு!"என்று புலம்ப இது எப்போதிருந்து என்று வாயை பிளந்தனர் திகைப்பில்.

"ஏய் கூமுட்ட!அது யாருடா ஐஸ்கிரீம்!...அவளை நினைச்சு இப்படி புலம்புறானே!"

"எனக்கு எப்படிடி தெரியும்...ஆனா நா அவரைப் பார்க்க பிஜி போனப் போது இப்படி தான் தூக்கத்துல ஒரே உளறல் ஐஸ்கிரீமு குல்பின்னு...நான் நெனைக்கிறேன் யாரோ காலேசுல கூட படிச்ச புள்ள மேல லவ்வு வந்திடுச்சோன்னு!"

"மரியாதையா அவன் வாயை பிடிங்கி என் மதனி யாருன்னு தெரிஞ்சுட்டு வர இல்ல வகுந்துடுவேன் உன்ன!"என்று அவனை மிரட்டி விட்டு சென்று விட்டாள்.

"எது நானு கேட்டோன்ன சொல்லிட்டு தான் மறுவேலை பாப்பாராக்கும்"என்றபடி அவனும் நொடித்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்

அன்று குளித்து முடித்தப் போது நீலாவை சுத்தமாக மறந்தேப் போனான் இளா.ஆனால் அவள் அவ்வளவு சுலபமாக அவனை விடப் போவதில்லை என்று அவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

மறுநாள் அவள் அவனின் வீட்டிற்கே வந்து அவன் அறை நாற்காலியில் ஒய்யாரமாக அமர்ந்திருந்ததை காணும் வரை கூட அவன் தான் எப்படிப்பட்ட சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்திருக்கவில்லை.ஒருவேளை அறிந்திருந்தால் பின்னாளில் அவன் வாழ்க்கையே புரட்டிப் போடும் நிகழ்விலிருந்து தன்னை காத்துக் கொண்டிருப்பானோ!

 
அடியே நீலாம்பரி
என்ன செய்ய போறா
 
Nice epi dear.
So Neelambari avan appa convince panni,panathal adichu ulla vanthutala?so sad.
 
Top