Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூந்தென்றல் தீண்டுமோ-2

Advertisement

Samyukta Ram

Member
Member
மறுநாள் காலை வரை வீட்டிலேயே அரட்டை ஆட்டம் பாட்டம் என்று இருந்த கயலும் குழலியும் மறுநாள் டவுனிற்கு சென்றனர். கடைத்தெருவில் மதியம் வரை அலைந்தவர்கள் மதியம் ஓட்டலில் சென்று அமர்ந்தனர்.விரும்பியதை உண்டு முடித்ததும்,

"சுந்தரி!ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடுவோமா ரொம்ப நாள் ஆச்சு?"என்று குழலி கேட்டாள்.எப்போதுமே கயலை வேறு பெயர்களில் அழைத்துக் கொஞ்சுவது குழலிக்கு வழக்கமாகிவிட்டது.முதலில் சிணுங்கிய கயலுக்கே இப்போதெல்லாம் அது மிகவும் பிடித்துவிட்டது.

தோழி கேட்டதும் கயலின் முகம் அவள் எங்கோ கனவுலகிற்கு சென்றுவிட்டதை உணர்த்தியது.பதில் கூறாமல் மவுனத்தில் ஆழ்ந்த தோழியின் தோளைத் தட்டி உலுக்கிய குழலி,

"ஹலோ மேடம் என்ன உட்கார்ந்திட்டே கனவு காணுறீங்க? ஐஸ்கிரீம் வேணுமா வேண்டாமா?"

திடுக்கிட்டு தன்னிலை அடைந்த கயல் வேண்டாம் என தலையசைத்தாள்.

"என்னடி இது உனக்கு ஐஸ்கிரீம் பிடிக்காதா! எனக்கு தெரிஞ்சு என் அம்மச்சி கூட ஐஸ்க்ரீம் விரும்பி சாப்பிடும்...நீ என்னடான்னா வேண்டாங்கிறீயே?!"என்று ஆச்சரியத்துடன் கேட்க,

"மூணு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் நானும் ஐஸ்கிரீமை ரசிச்சு ருசிச்சு சாப்பிட்ருக்கேன்!... அதுக்கப்புறம் ஏனோ சாப்பிட பிடிக்கல"என்று தோழிக் கூற,

"ஏன்டி இந்த காசிக்கு போனவங்க பிடிச்சத விடுவாங்களாமே அது மாதிரி விட்டுட்டியா"என்று கேலியாகக் கேட்க,

"ம்ஹூம் பிடிச்சவங்க நினைவுனால விட்டுட்டேன்"என்று கயல் கூறியதும் கண்களை அகல விரித்தாள் குழலி.தோழியின் கண்களில் இருந்த கேள்வியைப் படித்தவள்,

"பப்பி லவ்!"

"எதே பப்பி லவ்வா!...யாருடி அது?ப்ளீஸ்டி ஸ்வீட்டி எனக்கும் சொல்லுடி!"என்று ஆவலோடுக் கேட்க,

"வேற எங்கயாவது போயி பேசலாம்!"என்று கயல் கூற இருவரும் அங்கிருந்து கோயிலுக்கு சென்றனர்.உள்ளே பூட்டியிருந்ததால் வெளி மண்டபத்தில் காற்றாட அமர்ந்தனர்.

"சீக்கிரம் சொல்லுடி எக்ஸைட்மெண்ட் தாங்க முடியல!"என்று குழலி அவசரப்படுத்த கயலின் நினைவுகள் மூன்று ஆண்டுகள் பின்னோக்கி சென்றது.

திருச்சி மாநகரத்தின் பிரபலமான கல்லூரிகள் மத்தியில் கிரிக்கெட் மேட்ச்.மைதானம் பள்ளி கல்லூரி மாணவர்களால் நிரம்பி வழிந்தது.எழிற்கயலும் அவள் தோழி ரஜனியும் ஓரமான இடத்தில் அமர்ந்திருந்தனர்.ஐஸ்கிரீம் பார்ப்கான் சிப்ஸ் கூல்ட்ரிங்க்ஸ் என எல்லாமும் அதிக அளவில் விற்றுத் தீர்ந்தது.கயலுக்கு பிடித்தமான குஃல்பியை வாங்கியவள் நுனி நாக்கால் நக்கியும் ஒருமுறை விர்ரென்று உறுஞ்சியும் நாக்கை சப்புக் கொட்டியபடி சாப்பிட பக்கத்தில் இருந்த ரஜனி தலையில் அடித்துக் கொண்டாள்.

"எதுக்குடி இப்போ தலைல அடிச்சுக்குற?"என்று மூக்கை சுருக்கி அவள் கேட்க,

"இது என்னடி ஐஸ்கிரீமை இப்படி திங்குற! நீங்க திங்கற பாத்தா எனக்கு ஐஸ்கிரீம் திங்கற ஆசையே போயிடும் போல இருக்கு!"

"போடி பக்பக்குனு முழுங்க இது என்ன தயிர் சாதமா?! ஐஸ்கிரீம் டி! மெதுவா ரசிச்சு ருசிச்சு அனுபவிச்சு திங்கனும்..போடி போயும் போயும் ரசனக்கெட்ட உங்கிட்ட போயி இதையெல்லாம் சொல்றேன் பாரு என்னை சொல்லனும்"என்று மீண்டும் அவள் தன் ஐஸ்கிரீமில் ஆழ்ந்து விட,

"நா ஒரு ரவுண்ட் க்ரவுண்டை சுத்திட்டு வரேன்...எங்கேயாச்சும் போய்ராதே!"என்று கூறி விட்டு அவள் போய் விட்டாள்.

ஐஸ்கிரீம் முழுவதும் தின்று கடைசி ஒரு வாய் இருக்க அவள் ஆவலோடு வாயை திறக்க வெயிலின் தாக்கத்தால் ஏற்கெனவே உருகி இருந்தது பொத்தென அவள் மேலேயே விழுந்துவிட்டது.வடை போச்சே என்ற ரீதியில் பரிதாபமாக தன் மேல் விழுந்ததை அவள் பார்த்தபோது சுவற்றின் அந்த பக்கத்திலிருந்து யாரோ ஆண்குரல் பக்கென சிரிப்பதுக் கேட்டது.யார் தன்னைப் பார்த்து சிரித்தது என்று தலையை நீட்டி அவள் பார்க்க அங்கு நின்றவனின் முதுகுப்புறம் மட்டுமே அவளால் பார்க்க முடிந்தது.யாரோ அவனை "டேய் ஹீரோ வாடா போலாம்"என்று அழைக்க திரும்பி பாராமல் சென்றுவிட்டான்.போகும் போது அவன் தலையை கோத அவன் கையிலிருந்த வெள்ளி கடகத்தை மட்டும் தான் அவளால் பார்க்க முடிந்தது.அந்த நிகழ்வு எங்கோ மனதின் மூலையில் கெட்டியாக அமர்ந்தது.

அது நடந்து ஒருமாதம் சென்ற பின் பள்ளி விட்டு பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் கயல்.கால் வைக்க இடமில்லாமல் கூட்டம் நெருக்கியது பஸ்ஸில்.பேகை இருக்கையின் மேல் இருக்கும் இடத்தில் போட்டிருந்ததால் கம்பியை இறுகப் பற்றியபடி நின்றிருந்தாள்.ஒவ்வொரு நிற்குமிடத்திலும் எவ்வளவு இறங்கினரோ அதே அளவு மீண்டும் ஏறினர்.இறங்கினால் போதும் என்று கடுப்பாக நினைத்தாள் அவள்.இடது வலது என்று கூட திரும்ப முடியாமல் பல்லியைப் போல கம்பியை கட்டிக் கொண்டு நிற்பது அவஸ்தையாக இருந்தது.மேடும் பள்ளமும் உண்டியல் போல் குலுக்கியது.

திடிரென குறுக்கே நாய் வந்ததோ என்னமோ ட்ரைவர் சடன்பிரேக் போட கம்பியிலிருந்து கை நழுவி கீழே விழப் போனாள் கயல்.ஆனால் அதற்குள் ஒரு வலிய கரம் அவள் விழுமுன் அவள் தாங்கிப் பிடித்துவிட்டது.தன் இடுப்பை சுற்றியிருந்த கையில் அன்று பார்த்த அதே கடகத்தைக் கண்டவள் திகைத்துப் போனாள்.திண்ணென்ற மார்பில் தான் சாய்ந்திருப்பதை உணர்ந்தவளுக்கு அதுவரை தோன்றாத புது உணர்வுத் தோன்றி அவள் உடலை சிலிர்க்க செய்தது.அது யார் என்று பார்க்க ஆவல் மீறினாலும் நெருக்கும் கூட்டத்தால் அது முடியவில்லை.அவள் திடமாக நிற்கிறாள் என்று உறுதியானதுப் போல அந்த கை அவளை விட்டு நீங்கியது.அடுத்த நிலையத்தில் கூட்டம் சிறிது இறங்க மெல்ல அவள் திரும்பிப் பார்க்க அங்கே பெண்கள் இருவர் மட்டுமே அவள் பின் நின்றிருந்தனர்.ஏமாற்றம் சூழ அவளையும் அறியாமல் ஒரு துளி கண்ணீர் அவள் கண்ணிலிருந்து விழுந்தது.யாரும் பார்த்து விடுமுன்பு கைக்குட்டையால் கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

அன்று தோழிகள் நான்கைந்து பேர் பயங்கரமான பேய் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றனர்.அவர்கள் இறக்கையில் அமரும் முன்பே விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க அமர்ந்தவர்கள் காலை மிதித்து அதற்கு அவர்கள் திட்டி என தடுமாறியபடி வந்து சீட்டில் அமர்ந்தனர்.அவர்கள் வரிசையில் கடைசிக்கு முன் சீட்டில் கயல் அமர்ந்திருந்தாள்.அவளுக்கு அடுத்து கடைசி சீட்டில் யாரோ அமர்ந்திருப்பது புரிந்தது.ஆனால் இருட்டில் சரியாக அடையாளம் தெரியவில்லை.

படம் ஆரம்பித்திலேயே திகில் தாங்க முடியவில்லை.வேண்டாம் என்று எழுந்தால் தோழிகள் கேலி செய்வார்களே என்று பயத்தை விழுங்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள் கயல்.போக போக க்ராஃபிக்ஸ் காட்சியால் அதி பயங்கரமான கோர முகம் தோன்ற பயந்து யார் என்று பாராமல் தன் அருகில் இருந்த தோளில் முகத்தை மறைத்துக் கொண்டாள்.அவள் பயத்தை அறிந்துக் கொண்டது போல் அந்த தோளுக்கு உரிய கை அவள் கையை இறுகப் பற்ற இரண்டு முறை கண்ட அதே கடகத்தை அந்த கைகளில் கண்டவள் திகைத்து தன் அருகில் இருந்தவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.படத்தில் இரவு காட்சியே அதிகம் இருந்ததால் அவளால் அவனின் வரிவடிவத்தைப் பார்க்க முடிந்ததே தவிர முகத்தை அடையாளம் காண முடியவில்லை.அவன் இன்று எப்படியும் பார்த்தே விடவேண்டும் என்று முடிவெடுத்தவள் இடைவெளிக்காக காத்திருந்தாள்.ஆனால் அதற்குள் அவன் போன் கிணுகிணுக்க எடுத்துப் பார்த்தவன் அவளை விட்டு தன் கையை பிரித்தெடுத்துக் கொண்டு வேகமாக வெளியே சென்று விட்டான்.மீண்டும் அவன் உள்ளே வரவேயில்லை.ஏதோ துக்கம் தொண்டையை அடைக்க மேலே திரையில் தெரிந்த எதுவும் அவள் மனதில் பதியவில்லை.அதுதான் அவள் அவனை கடைசியாகப் பார்த்தது.எங்கு வெளியே சென்றாலும் அவள் கண்கள் அவனின் கடகம் அணிந்த கை தென்படுகிறதா என்று தேடும்.ஆனால் அவன் மீண்டும் அவள் முன் வரவேயில்லை.அவளும் காலம் செல்ல செல்ல அது வெறும் எதிர்காலம் இல்லாத பப்பி லவ் என்று மனதைத் தேற்றிக் கொண்டாள்.ஆனால் ஏனோ அதன்மேல் ஐஸ்கிரீம் சாப்பிடவே பிடிக்காமல் போய்விட்டது அவளுக்கு.

கண்களை மூடி இறந்தகாலத்தில் ஆழ்ந்து விட்ட தோழியை கலைப்பவளாக அவள் தோளை தட்டினாள் குழலி.திடுக்கிட்டு கண்களை திறந்த கயலிடம்,

"அப்புறம் அவனை பாக்கவேயில்லையா?"

"ம்ஹூம் நான் திருச்சி விட்டு வர வரைக்கும் எங்கையும் அவனைப் பாக்கவேயில்லை...ஏதோ இரண்டு மூணு தடவை சந்திச்சது எனக்கு வேணா பொக்கிஷமா இருக்கலாம்.அவனுக்கும் அப்படியே இருக்கனும்னு இல்லயே...விடு அதெல்லாம் கோல்டன் மெமரீஸ்...உள்ள வச்சு பூட்டி வைக்க வேண்டியது அவ்ளோதான்...சரி வா போலாம் லேட்டாயிடுச்சு"என்று தோழி எழுந்திருக்க ஏதோ கூற வாயெடுத்த குழலி பின் இருக்காது என்று தனக்குள்ளேயே முடிவெடுத்தவளாக அவளோடு எழுந்துச் சென்றாள்.

தோழியின் வீட்டிலிருந்து பிரியா விடைபெற்று தன் வீடு திரும்பினாள் குழலி.கிளம்பும் முன் கயலின் பெற்றோரிடம் கயலை அவள் வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறுக் கேட்டுக் கொண்டாள்.அவர்களின் நட்பின் ஆழத்தை அதற்குள்ளாகவே புரிந்துக் கொண்டிருந்த அந்த பெற்றோர் அதற்கு சம்மதித்தனர்.அதன்படி அந்த வார இறுதியில் கயல் குழலியின் வீட்டிற்கு செல்வதாக முடிவு செய்தனர்.கூட்டுக் குடும்பம் அரிதாக இருக்கும் இந்த காலத்தில் ஒற்றுமையோடு இருக்கும் அந்த குடும்பத்தைப் பார்க்க கயலுக்கும் ஆசையாக இருந்தது.

தந்தை வயலுக்குச் சென்றிருக்க அவருக்கு காலை உணவை எடுத்துக் கொண்டு சென்றாள் கயல்.அவர் உண்டு முடித்ததும் சாமான் வாங்க தான் டவுனுக்கு செல்வதாகக் கூறி அவர் சென்று விட்டார்.பசுமையான வயலை ஆனந்தமாக சுற்றிய கயல் அங்கே பெரிய கிணற்றை கண்டு குனிந்துப் பார்த்தவள் கால் இடற கிணற்றில் விழுந்து விட்டாள்.நீச்சல் தெரியாததால் தன் கதை முடிந்தது என்று நிராசையுற்றாள்.

இளஞ்சேரலின் வயலும் மருதைய்யாவின் வயலின் பக்கத்திலேயே இருந்தது.காலை ஒருமுறை வயலை சுற்றுவது அவன் வழக்கம்.அதே சுற்றி வந்தவன் பக்கத்து வயலின் கிணற்றில் யாரோ பெண் விழுந்ததைப் பார்த்தவன் பதறியபடி ஓடி வந்து தானும் குதித்தான்.நீரைக் குடித்து ஆழத்தில் இறங்கத் தொடங்கியிருந்த கயலை தூக்கி வந்து கரையில் போட்டான்.தன் நினைவின்றி கிடந்தவளை கூர்ந்தவனின் கண்களில் பல்வேறு உணர்ச்சிகள் சடுதியில் வந்துப் போயின.அதையெல்லாம் புறம் தள்ளி அவள் வயிற்றில் கை வைத்து அமுக்கி நீரியெல்லாம் வெளியேற்றினான்.

அதற்குள் வயலில் வேலை செய்த இரண்டு பெண்கள் ஓடி வந்தனர்.தாங்கள் அவளைப் பார்த்துக் கொள்வதாக அவர்கள் கூற சரியென அவன் கிளம்பத் தொடங்க நினைவு திரும்பிய கயல் மெல்ல கண்களை திறக்க அவள் கண்ணில் முதலில் பட்டது இளாவின் கரம்தான்.தான் காண்பது கனவா என்று ஐய்யுற்று அவள் எழுமுன்பு அவன் வரப்பில் ஏறி நடக்கத் தொடங்கிவிட்டான்.எழுந்து அவன் பின்னே ஓடத் தோன்றினாலும் உடல் ஒத்துழைக்காதலால் அவன் கண் மறையும் வரை கண்ணில் நீர் வழிய அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பக்கத்தில் இரண்டு பெண்கள் இருப்பதை கண்டவள் அவர்களிடம்,

"என்னை காப்பாத்தினாரே அவர் யாரு?"என்று அவள் கேட்க,

"அவரு பெரியவூட்டு ஐயாங்க அம்மா!"என்று அவர்களில் ஒருவள் கூற எப்போதோ எங்கோ தான் பார்த்த ஒருவன் இங்கே இந்த கிராமத்தில் இருப்பது சாத்தியமா? என்று திகைத்தாள்.மெல்ல வீடு வந்து சேர்ந்தவள் தாய் பார்க்கும் முன் அறையில் சென்று கதவை மூடிக் கொண்டாள்.மனம் மீண்டும் மீண்டும் இன்று கண்டதை முன்பு கண்டதோடு ஒப்பிட்டுப் பார்க்க முயன்றது.நிஜமாகவே அவனே தானா இல்லை கயலின் ஆசை மனது தோற்றுவிக்கும் பிரமையா?!

தன் அறையில் அவனும் கண்மூடி பெருக்கெடுத்த உணர்ச்சியை கட்டுக்குள் கொண்டு வர கடுமையான முயற்சியில் இருந்தான்.யாரை இனி தன் வாழ்வில் இனிமேல் பார்க்கவே போவதில்லை என்று நினைத்திருந்தானோ அவளையே அவன் கண்முன் இன்று கண்டதில் தன்னை வீழ்த்த எந்த விளையாட்டை ஆரம்பித்திருக்கிறது விதி என்று அயர்ந்துப் போனான்.

 
Top