Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் அத்தியாயம் 9

Advertisement

parvathi

Active member
Member

அத்தியாயம் 9​

ராதா முரளியிடம் கோபப்பட்டு பேசியதை கமலி பாராட்டினாள்​

"சாது மிரண்டால் காடு கொள்ளாதுனு பெரியவங்க சும்மா ஒண்ணும் சொல்லலெ ராதாவா இப்படி பேசறானு நான் கூட அசந்து போய்விட்டேன் தெரியுமா?"​

"ஏய்! கமலி சும்மாயிருக்க மாட்டியா .அந்த முரளி ரொம்ப பொல்லாதவன் அவனிடம் இருந்து ஒதுங்கி போறது தான் நல்லது."​

"கவலைப்படாதே சீதா.இன்னிக்கு ராதா போட்ட போடில் அவன் இந்த பக்கமே வரமாட்டான்."​

தோழிகள் நால்வரும் பேசிக் கொண்டே நடந்து அவரவர் வீடுகளுக்கு பிரிந்து சென்றனர். வீட்டினுள் நுழைந்த ராதாவை அதிகாரமாக வரவேற்றார் பாட்டி.​

"ஏண்டிம்மா! உனக்கு மட்டும் காலேஜ் அஞ்சு மணிக்கு மேல் விடறாளா ?அந்த சுஜாதா நாலு மணிக்கே வந்துவிட்டாள்."​

"அவ சொகுசு கார்ல் வருவா பாட்டி என்னை மாதிரி ரெண்டு பஸ் மாறி அல்லாடி வரல."​

இப்படி சூடாக பதில் சொல்ல ஆசை தான் ஆனால் பாட்டி எதிர்த்து பேசினா விடாமல் திட்டி தீர்ப்பாளே​

"பாட்டி கோபப்படறாளே சித்த முன்ன வரகூடாதா ராதா?"​

அம்மாவும் அதே பல்லவியை மென்குரலில் பாடினார்​

"ஏம்மா! ரெண்டு பஸ் மாறி அல்லாடினாலும் அஞ்சு மணிக்கு ஆத்துக்கு வந்து விடுகிறேன். இதற்கு மேல் சீக்கிரமாக எப்படிமா வர்றது?"​

"வாஸ்தவம் தான்."​

தலையாட்டினாள் காயத்ரி​

"கைகால் முகம் அலம்பிண்டு நெத்திக்கு இட்டுண்டு வா உனக்கு பிடித்த டிபன் அடை பண்ணியிருக்கேன். சாப்பிட்டு கோவிலுக்கு போய் உன் பேரில் அர்ச்சனை பண்ணிட்டு வா இன்னிக்கு உன் பிறந்தநாள் இல்லையா? பக்கத்தாத்து ஜானாவையும் கூட அழைச்சுண்டு போ சரியா?"​

ராதா முகம் கழுவி உடை மாற்றி டிபன் சாப்பிட்டு அர்ச்சனைக்கு வேண்டிய பொருட்கள் சேகரித்த சமயம் ஜானகியும் வந்துவிட இருவரும் கிளம்பினார்கள் .​

கோவிலில் அன்று அதிகம் கூட்டமில்லை வாய்க்குள் அஷ்டலஷ்மி ஸ்தோத்திரம் உச்சரித்து கொண்டு பிரகாரத்தை சுற்றி வருகையில் ஜானகி கேட்டாள்.​

"இந்த சூழ்நிலை மனசுக்கு ரம்யமா இதமா இருக்கு இல்ல"​

உண்மையில் ஜனசந்தடி இல்லாத பிரகாரமும் சுற்றியிருந்த நந்தவனத்தின் அழகும்,அலங்காரமாய் கருவறையில் வீற்றிருக்கும் அம்மனும் மனதுக்குள் அலாதி நிறைவை தந்தது நிஜம்.​

மனநிறைவோடு கோவிலை விட்டு வெளியே வந்து வீடு திரும்பும் வேளையில் ஜானகி விசாரித்தாள்.​

"கோவிலில் அம்மனிடம் என்ன வேண்டி கொண்டாய் ராதா ?"​

"அதுவா..என் பிரிய தோழி ஜானகி கழுத்தில் ஸ்ரீராம் சீக்கிரமாக மூனு முடிச்சு போடனும்னு வேண்டிகிட்டேன்"​

"ஏய்! பார்த்தாயா இந்த கிண்டல் தானே வேண்டான்றது இந்த ராதாவுக்கு ஏற்ற கண்ணன் வரணும்னு வேண்டிக்கல? ."​

பதில் சொல்லாமல் சிரித்தவளை பொய் கோபத்துடன் முறைத்தாள் ஜானகி.​

"ஏய் ! என்னடி சிரிப்பு இன்னிக்கு நீ பதில் சொல்லாமல் என்னிடம் தப்பிக்க முடியாது ஒழுங்கு மரியாதையா மனதிலிருப்பதை மறைக்காமல் சொல்லு இதுவரை ஒருவர் கூடவா உன் மனதில் சலனம் ஏற்படுத்தவில்லை ?"​

"இல்லை..".சிரிப்புடன் தலையசைத்தாள் ராதா​

"வாழ்க்கையில் கல்யாணம்னு ஒண்ணு இருக்கே அதை பற்றி யோசனையாவது பண்றதுண்டா? "​

"இல்லை"​

"சரி போகட்டும் கணவராக வரப்போகிறவர் எப்படியிருக்கனும்னு ஒரு ஐடியாவாவது வெச்சிருக்கியா? ஏய்! இதுக்கும் இல்லைனு சொன்ன உதைப்பேன் உன்னை ."​

"என்னாச்சு ஜானா உனக்கு ?அபத்தமான கேள்விகளை கேட்டுண்டு , நீ விளையாட இன்னிக்கு நானா கெடச்சேன்? என்னை விட்டுவிடும்மா ப்ளீஸ் ."​

"எதிர்கால கணவர் எப்படியிருக்கனும்னு நீ எதிர்பார்க்கறேனு கேட்டால் அது அபத்தமா? நல்லாயிருக்குடி உன் நியாயம். இப்ப நீ சொல்ல போறியா இல்லையா?"​

"ஐயோ..ஆனாலும் நீ ரொம்ப படுத்தறே ஜானா.எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை.அப்பா பார்க்கற மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டுவேன்.அவ்வளவு தான் போதுமா?"​

"போதாது.. " தீர்மானமாய் தலையசைத்தாள் ஜானகி​

"மாமா பாக்கற மாப்பிள்ளையாகவே இருக்கட்டும்.அவர் எப்படியெல்லாம் இருக்கனும்னு நீ எதிர்பார்க்கற?"​

"எதிர்பார்ப்பெல்லாம் ஒண்ணும் கிடையாதுனு சொல்றேன். என்ன நீ திரும்ப திரும்ப அதையே கேட்கறே? சரி உன் திருப்திக்காக சொல்றேன்.அவர் என் கண்ணுக்கு மட்டும் அழகாயிருக்கனும் நல்ல குணம் இருக்கனும்.அப்புறம் முக்கியமான விஷயம் என்னன்னா எனக்கு டார்க் ப்ளூ லைட் ப்ளூ காம்பினேசன் ரொம்ப பிடிக்கும். அந்த காம்பினேசன்ல தான் அவர் எப்பவுமே டிரஸ் பண்ணிக்கனும்."​

ராதாவின் பேச்சில் குறும்பு விளையாடியது.​

"ஏய் என்ன விளையாடறியா?"​

"சே சே நான் நிஜமா தான் சொன்னேன் ஜானா உன் கிட்ட போய் விளையாடுவேனா?"​

ராதாவின் குரலில் போலி பவ்யம் தெரிந்தது. கோபமாக பேச எத்தனித்த ஜானகி 'ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மீ' என்ற குரல் கேட்டு திரும்பினாள்.​

டார்க் ப்ளூ ஜீன்ஸ், அழகாய் டக் செய்யப்பட்ட ஆகாய வண்ண ஒட்டோ ஸ்லாக், முழங்கையில் மடித்து தொங்க விட்டிருந்த வெள்ளை கோட், ஆறடி உயரம், உயரத்துக்கேற்ற பருமன், நெற்றியில் விழுந்த முடிக்கற்றையை லாகவமாக விலக்கி விட்டு அவன் சிரித்த பொழுது பளிச்சிட்ட பல்வரிசை கால்கேட் விளம்பரம் காட்டியது​

ராதா விளையாட்டாய் வர்ணித்த கற்பனை கணவனுக்கு உயிர் கொடுத்தது போல் அவன் எதிரே வந்து நின்ற பொழுது,தோழிகள் இருவரும் ஆச்சரியத்தில் ஸ்தம்பித்துப் போய் பார்த்த விழி பார்த்தபடி நின்று விட்டனர்.​

 
Last edited by a moderator:
நந்தன் வந்துவிட்டான்😍😍 ஆனாலும் ராதாவின் காதல்தான் முரளியின் கையில் பந்தானதே🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️
வில்லன்னு ஒருத்தன் வந்தால் ஹீரோனு ஒருத்தன் வந்தாகனும்றது சொல்லப்படாத விதி.சரிதானே சகோதரி
 
Top