Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் அத்தியாயம் 36

Advertisement

parvathi

Active member
Member
Thanks to all readers for ur genuine support. Pls give ur feedbacks.

என் கதைகள் ஆடியோவில் கேட்க விருப்பப்பட்டால்@ BalaThiagarajanTamil Novels. utube. Com என்ற சேனலுக்கு வருகை தாருங்கள். Last BUT NOT THE LEAST PLS LIKE COMMENT SHARE N SUBSCRIBE 🙏🏻





அத்தியாயம் 36


"மாமா! எனக்கு கொஞ்சம் பணம் வேணும்."



கதவோரமாக தலை குனிந்து நின்றவண்ணம் தயங்கி தயங்கி கேட்ட மருமகளை வியப்புடன் பார்த்தார் வெங்கட்ராமன்.



அவர் எதிரே நிற்பது அவரறிந்த ராதாயில்லை. இத்தனை நாட்களில் ஒரு இளம் வயசுப் பெண்ணின் ஆசைகளுடன் அது வேணும் இது வேணும் என்று எதையுமே கேட்டவளில்லை. இந்த பெண்ணிற்கு ஆசாபாசங்களே இல்லையே.ஒருவேளை முற்றும் துறந்த ஞானியோ என்று கூட வெங்கட்ராமன் வியந்திருக்கிறார்.



அப்படிப்பட்ட ராதா இன்று என்றுமில்லாத தினுசில் பணம் கேட்கவும் அவள் மீது மகனைக் காட்டிலும் அதிகம் பாசம் வைத்திருக்கும் வெங்கட்ராமனா மறுக்கப் போகிறார்? நிச்சயமாக மறுக்க மாட்டார்.அவள் கேட்ட பணத்தை கையில் கொடுத்தார்.



"இது போதுமா இல்லை இன்னும் வேணுமா? எதுவானாலும் தயங்காமல கேளும்மா ராதா…"



உதட்டில் அரும்பிய முறுவலுடன் அவர் கேட்க, ராதாவின் விழிகளிலோ கண்ணீர் மல்கியது.



"ஏன் எதுக்குனு ஒரு கேள்வி கூட கேட்காமல் கொடுக்கறிங்களே மாமா…..நான்… "



உணர்ச்சிபெருக்கில் மேலே பேச முடியாமல் அவள் தடுமாறவும், வெங்கட்ராமன் புன்னகைத்தார்.



"அந்த விவரமெல்லாம் எனக்கு அவசியமா தெரியனும்னு நெனச்சிருந்தால் என் மருமகளே சொல்லியிருப்பானு எனக்கு தெரியும்மா. நீ எதை பண்ணினாலும் ஒரு காரணகாரியத்தோட தான் பண்ணுவேன்னு தீவிரமா நம்புறவன்மா நான்.அதனால தான் விவரம் கேட்டு விவகாரத்தை அநாவசியமாய் வளர்க்கறதில்ல."



அந்த பெருந்தன்மையான கனிவான பதிலில் நெகிழ்ந்து போய் ராதா அவர் கைகளைப பற்றி கண்களில் ஒற்றிக் கொள்ள, வெங்கட்ராமன் சின்ன சிரிப்புடன் கைகளை விடுவித்துக் கொண்டார்.



அடுத்து வந்த நாட்களில் ராதா ஒரு பெரும்புதிராகவே மாறிப் போனாள் .அவள் நடவடிக்கைகள் வெங்கட்ராமனை ஆச்சரியப்பட வைத்தன.



கணவன் துணையின்றி வீட்டை விட்டு ஓரடி கூட எடுத்து வைத்திராத ராதா, இப்பொழுதெல்லாம் சர்வசாதாரணமாக தனியாளாக வெளியிடங்களுக்கு சென்று வரத் தொடங்கினாள். கோவில், கடைகள் என்று அவள் சென்று வருவதை வரவேற்கத் தக்க மாற்றமாக மனம் கொண்டாடினாலும், எதற்காக இந்த மாற்றம் எனும் நெருடலும இருக்க தான் செய்தது. தான் கொடுக்கும் பணம் நகையாகவோ புடவையாகவோ மாறி வீட்டிற்கு வரவில்லை என்ற விவரம் அவள் வெறும்கையோடு வீடு திரும்பும் பொழுது வெங்கட்ராமன் புரிந்து கொண்டார்.



ஒருமுறை கணவனுடன் பிக்னிக் சென்றவள் தான் மட்டும் தனியாக திரும்பி வந்தாள்.போன இடத்தில் சண்டையோ என்று தானாக ஊகித்துக் கொண்டார் வெங்கட்ராமன்.



ஆனால் நாளடைவில் ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாக தெரிந்தது.ராதா எதையோ மறைக்கிறாள் என்று திட்டமாகப் புரிந்தது..



அன்றொரு நாள் வியர்க்க விறுவிறுக்க வீடு திரும்பியவளிடம்,

"ஏம்மா! வீட்ல ஒண்ணுக்கு ரெண்டா கார்கள் இருக்கறப்போ நீ இப்படி லோகல் பஸ்ல ஆட்டோலனு அலையறது நல்லாவா இருக்கு?"



மருமகளிடம் அவர் உரிமையாய் கோபித்துக் கொள்ள, அவளோ திடுக்கிடலுடன் மறுத்தாள்.



"இல்லே மாமா. எனக்கு ஒண்ணும் சிரமமாயில்லை."



என்றுமில்லாத திருநாளாக அன்று முரளி சீக்கிரமே வீடு திரும்பியிருந்தான்.வழக்கம் போல் ராதா வெளியே சென்றிருக்க, கௌரியே அவனுக்கு உணவு பரிமாறினாள்.



"ஏம்மா! ராதா இல்லை?"



கேள்வியாய் கேட்ட மகனை ஏறிட்டாள் அன்னை.



"உன் பொண்டாட்டி என்னிக்கு வீட்லருந்தா இன்னிக்கு இருக்க ? பொழுது விடிஞ்சு பொழுது போனால் ஊரை சுத்தி வர்றதே பொழைப்பா போயிடுச்சு.எல்லாம் உங்கப்பா தர்ற செல்லம். இருந்திருநது இந்த மனுஷருக்கு ஏன் தான் இப்படி புத்தி கெட்டுப் போச்சோ?"



அம்மாவின் பதில் முரளியை வியக்க வைத்தது.



'ராதா ஊர் சுற்றுகிறாளா? ம்..இப்பல்லாம் அவ ஒரு மார்க்கமா தானிருக்கா.எங்கிட்ட இருந்த பயம் போய் இப்ப நன்னா எதிர்த்து வாயாடறா. அன்னிக்கு பிக்னிக் போன இடத்துல என்னை ஏமாத்திட்டு ஓடி வந்துட்டாளே. ஆமா யாரோட சுத்தறா? ஒருவேளை அந்த டாக்டர் பயலோட சகவாசம் வெச்சிண்டிருப்பாளோ? வீட்டுக்கு வரட்டும். இன்னிக்கு சேர்த்து வெச்சு பழி தீர்க்கறேன்.'



மனதில் ஆயிரம் வன்மமுடிச்சுகள் வலம் வந்தாலும் வாய் என்னவோ சாவகாசமாய் கேட்டது.



"எங்கே போறதா சொல்லிட்டுப் போனாள் உன் மருமகள்?"



நக்கலாய் கேட்டவனுக்கு அலட்சியமாய் பதில் சொன்னாள் அவன் அன்னை.



"வேறெங்கே கோவிலுக்குத் தான் போயிருப்பா.கழுதை கெட்டா குட்டிச்சுவர் தானே? என்னவோப்பா! இதெல்லாம் கோவிலுக்கு போனா நடந்துடும் விஷயமா? அரசமரத்தை சுத்தி வந்து அடிவயித்தை தொட்டுப் பார்த்த கதை தான். நீ மட்டும் என் பேச்சை கேட்டு சரண்யாவைக் கட்டியிருந்தேன்னா, இந்நேரம் மூலைக்கொரு பிள்ளையாய் வீடே நெறஞ்சிருக்கும்."



எங்கே ஆரம்பித்து எங்கே வருகிறாள் இந்த அம்மா?



முரளி ஆச்சரியப்பட்டாலும், அம்மாவின் குழந்தை பற்றிய பேச்சு தியேட்டரில் பார்த்த சிறுவனை ஞாபகப்படுத்தியது..கூடவே ரேகாவின் சூடான வார்த்தைகளும் நினைவிற்கு வந்து முகம் கோபத்தில் சிவந்தது.



அன்று தியேட்டரில் என்னவெல்லாம் பேசிவிட்டாள் ரேகா? இப்போ நெனச்சு பார்த்தாலும் மனமெல்லாம் கொதித்தது.



அன்று சிறுவன் கேட்ட சாக்லெட்டை மோகன் வாங்கச் சென்ற சமயத்தில் முரளி தான் பேச்சை ஆரம்பித்தான்.



"எப்படியிருக்கே ரேகா?"



அவள் பதில் சொல்லவில்லை என்றாலும் அவனும் விடவில்லை.



"ஏன் பேச மாட்டேன்ற ரேகா?"



முரளி முடிக்கும்முன் ரேகாவிடமிருந்து சவுக்கடியாய் வந்தது பதில்.



"நான் மனுசங்களோட பேசித்தான் பழக்கம்."



பளீரென்று சாட்டையாலடித்தாற்போல வந்த பதிலில் முரளிக்கு முகம் அவமானத்தில் சிவந்து போனது. நல்லவேளை மோகன் திரும்பி வந்து விட்டதில், விவகாரமாய் எதுவும் நடக்காமல் போனது.



அதுவரையில் ரேகாவின் கைப்பிடியில் இருந்த சிறுவன் தந்தை சாக்லெட்டுடன் வந்தவுடன் மோகனிடம் தாவினான்.சாக்லெட்டை வாங்கிய கையோடு மீண்டும் தன் அம்மாவிடமே வந்து விட்ட சிறுவனின் சூட்டிகையான ஸ்பாவத்தால் கவரப்பட்ட பக்கத்தில் நின்றிருந்த ஒரு பெரியவர்,சிரித்துக் கொண்டே,

"பையன் ரொம்ப காரியவாதியா இருப்பான் போலவே"

என்று விமர்சிக்க, ரேகா உடனே ஆமோதித்தாள்.



"ஆமா! அவங்கப்பாவைப் போலவே…."



அடுத்த அடி. முரளிக்கு அதற்கு மேல் அவளின் பேச்சை கேட்க திராணியின்றி தியேட்டருக்குள் திரும்ப எத்தனித்த பொழுது ரேகா தன் அடுத்த

அஸ்திரத்தை எய்தாள்.



"தீபக் கண்ணா! அங்கிளுக்கு டாட்டா சொல்லு…"



என்ன இருந்தாலும் பெற்ற பிள்ளை அப்பனை அங்கிள் என்று கூப்பிடுவதை ஜீரணிப்பது கஷ்டம் தானே?



முரளி எரிச்சலுடன் திரும்பிப் பார்க்க, ரேகா

அழகாய் புன்னகைத்தாள்.



"தீபக்குக்கு டாட்டா சொல்றதுன்னா ரொம்ப

பிடிக்கும். அன்னிக்கொரு நாள் இவன் அப்பாவோட நண்பர் ஒருத்தர் வீட்டுக்கு வந்திருந்தார். என்ன பாக்கறிங்க? எந்த அப்பான்னா? எனக்காகவும் இவனுக்காகவும் மட்டுமே வாழ்ந்துட்டிருக்கறாரே ஒரு உன்னத மனுஷர். அவரைச் சொல்றேன்.அவரோட நண்பர் கொண்டு வந்த பொம்மை அவன் கைக்கு வர்றவரை அவரோட விளையாடிட்டிருந்தான் .பொம்மை அவன் கைக்கு வந்த மறு நிமிஷமே அவருக்கு டாட்டா காண்பிச்சுட்டான். இந்த விஷயத்தில் மட்டும் அப்படியே அவன் அப்பனைக் கொண்டிருக்கான். நான் இப்ப சொன்னது அவன் பிறக்க காரணமாயிருந்த அயோக்கிய அப்பனை…"



தியேட்டர் பொதுஇடம் என்றெல்லாம் பார்க்கவில்லை ரேகா. சுற்றிலும் ஆட்கள் வேடிக்கை பார்க்கிறார்களே என்று அலட்டிக் கொள்ளவுமில்லை.



எத்தனை நாள் மனக்குமுறலோ?

அத்தனையும் ஆசை தீர கொட்டி முடித்து விட்ட திருப்தியில் ரேகா திரும்பி பார்க்காமல் நடக்க, அதிர்ச்சியிலும் அவமானத்திலும் உறைந்து போன முரளியின் அருகில் வந்து நின்ற ராதா

"வாங்க போகலாம் "என்றாள்.



அங்கே நடந்த நிகழ்வுகள் அத்தனையும் ராதா பார்த்திருப்பாளோ? அதனால் தான் அவளிடம் இந்த மாற்றமோ?



இந்த யோசனை தோன்றிய மறுகணம் முரளி தலையை உலுக்கிக் கொண்டான்.



"என்னடா முரளி! நான் பாட்டுக்கு பேசிண்டேயிருக்கேன். நீ ஒண்ணுமே சொல்லாமல் பிரமை பிடிச்சா மாதிரி இருந்தால் என்ன அர்த்தம்?"



கௌரி மகனை நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தாள்.



"நான் என்னம்மா சொல்லனும்?"



முரளி புரியாமல் பார்க்க, கௌரி சலித்துக் கொண்டாள்.



"விடிஞ்சது போ! இத்தினி நாழி நீ எந்த லோகத்துல இருந்தே?"



"விஷயத்த சொலலும்மா…"



முரளியின் குரலில் எரிச்சல் படர்ந்திருக்க, கௌரி தன் குரலை தழைத்துக் கொண்டாள்.



"நீ மட்டும் சரினு ஒரு வார்த்தை சொல்லு. இந்த மூதேவியை தள்ளி வெச்சுட்டு உனக்கேத்த நல்ல பொண்ணா பார்த்து முடிச்சு வைக்கறேன். என்ன சொல்றே? நம்ம வம்சம் தழைக்கனும்டா கண்ணா..இந்த மலடியைக் கட்டிண்டு ஏன் மாரடிக்கனும்? சொல்லு."



வேறு சமயமாகயிருந்தால் "அடப் போம்மா உனக்கு வேற வேலையில்லை" என்று சொல்லி விட்டுப் போயிருப்பான் முரளி. ஆனால் இப்பொழுது குழந்தை வேண்டும் என்ற ஏக்கத்தை தீபக் ஏற்படுத்தியிருந்தான்.



தவிரவும் தன்னுடைய அச்சாக தீபக்கை பார்த்ததில் ஏற்பட்டிருந்த பெருமிதம் குறை ராதாவிடம் தான் இருக்க கூடும் என்று அவனை நம்ப வைத்து விட்டதால், முரளி

"சரிம்மா பார்க்கலாம்" என்று அவன் தாய்க்கும் நம்பிக்கையான பதிலாக தந்துவிட , கௌரி அகமும் முகமும் மலர்ந்து போனாள்.



ஆனால் அப்படியொரு அநியாயம் நடப்பதை அந்த ஆண்டவனே விரும்பவில்லையோ என்னவோ ,

அம்மாவின் முறையற்ற முடிவிற்கு ஆகட்டும் என்று தலையசைத்து சம்மதம் சொன்ன அடுத்த இருபத்திநாலு மணி நேரத்தில் முரளி கொலை செய்யப்பட்டான்.
 
நன்றிமா🙏🏻ரொம்ப லேட்டா ரெஸ்பான்ட் பண்றேன் எனக்கே கஷ்டமாதானிருக்கு.வேலைப்பளு. சாரிம்மா
 
Top