Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் அத்தியாயம் 16

Advertisement

parvathi

Active member
Member
Thanks to all readers for ur genuine support. Pls give ur feedbacks.

என் கதைகள் ஆடியோவில் கேட்க விருப்பப்பட்டால்
@ BalaThiagarajanTamil Novels. utube. Com என்ற சேனலுக்கு வருகை தாருங்கள். Last BUT NOT THE LEAST PLS LIKE COMMENT SHARE N SUBSCRIBE 🙏🏻

அத்தியாயம் 16

வேலை செய்த களைப்பும் தூக்கமின்மையும், கண்களில் தெரிய, அன்று காலையில் வீடு திரும்பிய நந்தகுமாரனை, தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த மீனு தான் முதலில் வரவேற்றாள்.

"ஹாய் அங்கிள் வந்தாச்சு…"

ஆரவாரமாய் ஓடி வந்தவளை அள்ளி அணைத்து கொண்டான் நந்தகுமாரன்.

"ஏன் அங்கிள் ரெண்டு நாளா வீட்டுக்கே வரல?"

பெரிய மனுஷி போல் கேள்வி கேட்டவளின் கன்னத்தில் செல்லமாக தட்டினான் நந்தகுமார்.

"அதான் மீனுவை பார்க்க இன்னிக்கு வந்துட்டேனே அப்புறமென்ன?"

"என்ன டாக்டர் இன்னிக்கு தான் வீட்டு ஞாபகமே வந்ததா? நோயாளிகளையே எப்பவும் கவனிச்சுண்டிருந்தால் எப்படி? கொஞ்சம் உங்களையும் கவனிச்சுக்க வேண்டாமா? சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். என்ன நான் சொல்றது?"

வாசலில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த சுந்தரம் வெகு கரிசனத்துடன் சொல்ல, நந்தகுமார் பணிவுடனே பதிலளித்தான்.

"நீங்க சொல்றதும் வாஸ்தவம் தான் சார். ஆனால் என்னோட உத்தியோகம் காலையில் போய்ட்டு மாலையில் திரும்பும் அலுவலக வேலையில்லையே. டாக்டர்ன்ற பேருக்கு எவ்வளவு மரியாதை இருக்கோ அதே அளவு பிரஷரும் எங்க வேலையில் இருக்கே."

"சந்தியா டாக்டர் சொல்றதை கேட்டுக்கோம்மா. டாக்டர் வேலையில் தான் பிரஷர் ஜாஸ்தியாம்."

கையில் பாடப்புத்தகத்துடன் வராண்டாவின் திண்ணையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த சந்தியா நிமிர்ந்து நந்தகுமாரை பார்த்து விட்டு அப்பாவிடம் திரும்பினாள்.

"டாக்டர் ப்ரொபெஸன்ல பிரஷர் அதிகம் தான்ப்பா. நான் ஒத்துக்கறேன். ஆனால் அந்த வேலையில் கிடைக்கும் மனநிறைவு வேறு எந்த வேலையில் கிடைக்கும்? சொல்லுங்க. மனுச உயிரை காப்பாத்தற சக்தி கடவுள்னா அதற்கான கருவி டாக்டர்ஸ் மட்டும் தானே? அப்படியிருக்கறப்ப அது எத்தனை உன்னதமான உத்தியோகமாயிருக்கனும்? இதில் பிரஷர் ஜாஸ்தினு சொல்ற டாக்டரே விருப்பமில்லாமலா இதை செய்கிறார்? எதையுமே முழு விருப்பத்துடன் செய்தால் அலுப்போ அழுத்தமோ தெரியாதுப்பா. நீங்க என்ன தான் சொன்னாலும் என் முடிவை நான் மாத்திக்கறதாயில்லை."

மூச்சு விடாமல் பேசிய சந்தியாவை வியப்புடன் பார்த்தான் நந்தகுமார்.

"சந்தியாவுக்கு டாக்டராகனும்னு ஆசை. அதான் நீட் பரீட்சைக்கு கோச்சிங் போய் இராப்பகலா படிக்கறா.மெரிட்ல சீட் வாங்கிடனும்னு ரொம்ப மெனக்கெடறா.எல்லாம் சரிதான். ஆனால் பார்வர்ட் கம்யூனிட்டியில இல்ல பிறந்து தொலைச்சிருக்கா.அதான் சீட் கிடைக்குமான்னு சித்த கவலையாயிருக்கு."

"நீங்க கவலைப்படாதிங்க சார் உண்மையான உழைப்புக்கு என்னிக்குமே பலன் கிடைக்காமல் போகாது.அதுவும் இந்த நீட் பரீட்சை வந்த பின்னால் தகுதியுள்ள மாணவ மாணவிகள் நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு.ஏன் நானும் கூட பார்வர்ட் கம்யூனிட்டி தான். நான் இப்ப டாக்டர் ஆகலையா? நிச்சயமா உங்க பொண்ணும் தான் நினைச்சதை சாதிப்பாங்க.ஐ விஸ் ஹர் குட் லக்."

நந்தகுமாரின் வாழ்த்துக்கு குரல் அதிராமல் நன்றி சொன்னாள் சந்தியா.

"என்னப்பா இது? ஓய்வெடுக்க வீட்டுக்கு வந்த மனுசரை வீட்டுக்கு போக விடாமல் வாசல்ல வெச்செ பேசி அவரை இம்சை பண்ணினா எப்படி?"

பேச்சுக்குரல் கேட்டு வெளியே வந்த பாலசந்தர் அப்பாவிடம் கோபிக்க, சுந்தரம் உடனேயே மன்னிப்புக் கோரினார்.

"சாரி டாக்டர் உங்களுக்கு ஓய்வு கிடைக்கறதே அபூர்வம்.அதை நான் வேற கெடுத்துண்டிருக்கேன். சாரி நீங்க போய் ரெஸ்ட் எடுங்கோ.."

அவரிடம் விடைபெற்றுக்கொண்டு மாடியேறினான் நந்தகுமார். வழக்கமாக வீட்டினுள் நுழைந்த உடனேயே வரவேற்கும் தேவகி அன்று ஹாலில் இல்லை. சமையல் பண்ணுகிறாளோ என்னவோ? உள்ளே குக்கரின் விசில் சத்தம் கேட்டது. அம்மாவைக்கூட தேடாமல் படுக்கையறையினுள் நுழைந்த நந்தகுமார் உடையை மாற்றி கொண்டு கட்டிலில் சாய்ந்தவன் அப்படியெ தூங்கிப் போனான்.

மீண்டும் அவன் கண்விழித்தபோது மணி மூன்றாகியிருந்தது. குளியலறையில் ஸவரின் கீழ் பூஞ்சாரலாய் பொழிந்த நீரில் உடல் சோர்வை போக்கிக் கொண்டு , வெளியே வந்தபோது பின் வாசலில் அம்மாவின் பேச்சுக்குரல் கேட்டது.

"உன்னை வராதே வராதேனு எத்தனை தடவை தான் சொல்றது? ஏன் தான் வந்து என் உயிரை எடுக்கறயோ தெரியல. பண்றதெல்லாம் பண்ணிட்டு முழிக்கற முழியைப்பாரு."

கையை ஓங்கியபடி பேசிக் கொண்டிருந்தாள் தேவகி. யாரை திட்டுகிறாள் அம்மா என்ற ஆச்சரியத்துடன் அருகில் வந்தவன் எதிரில் நின்று கொண்டிருந்த அந்த அழகான வெள்ளை பூனையைப் பார்த்தவுடன் அடக்க முடியாமல் சிரித்து விட்டான்.

அப்போது தான் மகன் வந்திருப்பதை உணர்ந்து திரும்பினாள் தேவகி.

"ஏம்மா அந்த வீட்ல ஷர்லின்ற நாய் இங்க இந்தப் பூனையா? உனக்கு பேசறதுக்கு வேற ஆளே கிடைக்கலியா? இல்ல ஐந்தறிவு ஜீவன்கள் மட்டும் தான் உன் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் தலையாட்டும்னு இப்படி பண்றியா?"

குறும்பாக சிரித்த மகனை செல்லமாக கண்டித்தாள் தேவகி.

"ஆமாண்டா எனக்கு பேசறதுக்கு வேற ஆள் கிடைக்கல தான். நீ ஆடிக்கொரு தரம் அமாவாசைக்கொரு தரம்னு வீட்டுக்கு வந்துட்டு போறியா? எனக்கு துணைக்காவது யாரும் வேணுமோல்லியோ? அதான் காவலுக்கு இந்த பூனையை வெச்சுண்டிருக்கேன்."

மகனின் கிண்டலுக்கு தாயும் சளைக்காமல் பதிலுக்கு அவனை வார, நந்தகுமார் சிரித்தான்.

"அப்படியொண்ணும் நீ காவலுக்கு வெச்சுண்ட மாதிரி தெரியலயே. வராதே வராதேனு விரட்டியடிச்ச மாதிரில்ல இருந்தது."

நந்தகுமார் விடாமல் கலாய்க்கவும்,தேவகி அவனை முறைத்தாள்.

"ப்ளீஸ் உனக்கு என் மேல் கோபம்னா வாய் விட்டு திட்டிடும்மா. இப்படி பார்வையால என்னை எரிக்காதம்மா.அப்புறம் ஆடிக்கொரு தரம் அமாவாசைக்கொரு தரம்னு வர்றதுக்கும் ஆள் இல்லாமல் போய்டும்."

நந்தகுமார் பயந்தவன் போல் நடிக்க, தேவகியோ முன்னிலும் அதிகமாக கோபப்பட்டாள்.

"சிவசிவா அச்சானியமா பேசறதை நிறுத்துடா. விளையாட்டு பேச்சுக்கு ஒரு அளவில்லையா? நீயும் உன் வியாக்கியானமும் கேட்கவே சகிக்கல. ஆமா கார்த்தால வர்றதா சொன்னவன் இப்ப வந்திருக்கே.மதியம் நீ சாப்பிட வருவேன்னு உனக்கு பிடிச்ச வத்தகுழம்பும் வெண்டைக்காய் பொரியலும் பண்ணி உனக்காக காத்திருந்தது தான் மிச்சம் ."

"சரியாப் போச்சு போ என்னை சொல்லிட்டு இப்ப நீ தான் விளையாடறே. நான் கார்த்தாலயே வந்துட்டேன். வந்து என் அறையில் போய் படுத்தவன் இப்ப தான் எழுந்து வர்றேன். நிஜமாகவே நான் வந்தது தெரியாதா உனக்கு?"

"நன்னாருக்கே கேள்வி? நீ வந்தது தெரிஞ்சிருந்தால் உன்னை சாப்பிடாமல் தூங்க விட்டிருப்பேனா? காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றுடன் அப்படியென்ன தான் தூக்கமோ? நன்னா தூங்கினே போ.சரி சரி வா.இப்பவாவது சாப்பிடு. அடை வார்த்து தாரேன்."

சமையலறையை நோக்கி நடந்தவளை பின் தொடர்ந்தான் நந்தகுமார். தட்டில் சூடாக விழுந்த அடைகளை உண்டு முடித்து அம்மா தந்த காப்பியை ருசித்து குடித்து க் கொண்டிருந்த போது காற்றில் மிதந்து வந்தது அந்த வீணையின் இசை.

வீணையின் தந்திகளை தான் அந்த விரல்கள் மீட்டினவா இல்லை இசை கேட்டவர்களின் இதயங்களையுமா?

ஒரு கணம் இமைகளை மூடி இசையின் இனிமையில் தன்னை மறந்து லயித்தான் நந்தகுமார்.

"ரொம்ப நன்னா வாசிக்கறா இல்ல?"

அம்மாவின் கேள்வியில் விழிகள் திறந்தவன் தலையசைத்தான்.

"யாரும்மா வாசிக்கறது?"

"கீழ் வீட்டுப் பொண்ணு ராதா தான்டா. என்ன அடக்கம்? என்ன பதவிசு? காயத்ரியோட மூனு பொண்ணுங்களுமே தங்கம் தான். அதிலும் ராதா இன்னும் ஒரு படி மேல. அவ வீணை வாசிக்கறத கேட்டே அசந்து போய்ட்டே. இன்னும் சாயரட்சே பூஜை அறையில் விளக்கேற்றி அவ பாடற சௌந்தரியலகரியை கேட்கனும். சாட்சாத் அந்த சரஸ்வதி தேவியே பிரசன்னமான மாதிரி இருக்கும். ஆனால் பிறக்கறப்பவே ராசியில்லாதவள்ன்ற பட்டத்தை சுமந்துண்டுன்னா பிறந்திருக்கா.அவ பாட்டி அவளை திட்டறச்சே பார்க்க பாவமாதானிருக்கு. ஆனால் அவ வருத்தம் அவளுக்கு. நல்லாயிருந்த ஆம்படையான் பொசுக்குனு போய்ட்டாருன்னா பொண்ணு பிறந்த வேளைனு தானே நினைக்க தோணும். எனக்கு கூட இந்த வீட்டுக்கு வந்த புதுசில அவளை உனக்கு கேட்கலாமேனு தோணித்து. ஆனால் அவ மூல நட்சத்திரம்னு வேற எல்லாரும் பேசிக்கறா. அதனால சுத்தமா அந்த நினைப்பையே விட்டுட்டென்."

தேவகி பேச்சுவாக்கில் இதை சாதாரணமாக தான் சொன்னாள். ஆனால் நந்தகுமாருக்கோ உன் மனதில் அப்படியொரு ஆசையிருந்தால் முளையிலேயே கிள்ளி எறிந்து விடு என்று அம்மா சொல்லாமல் சொல்வதாக பட்டது.

அவனுக்கு ராதாவின் மேல் அப்படியொரு ஆசையிருக்கிறதா என்ன?

நந்தகுமார் யோசித்து பார்த்தான்.அவனுக்கு அவள் மீது ஏற்பட்ட பிடிப்பு நிச்சயம் கண்டதும் காதல் இல்லை. முதன்முதலாய் அவளை பார்த்தபோது அழகான பெண்ணை பார்க்கும் எந்த ஒரு ஆண்மகனுக்கும் ஏற்படும் ஆர்வம் அவனுக்கும் ஏற்பட்டது.அவளுடன் நெருங்கி பழக துடித்தவனின் ஆர்வம் அவள் விலகி செல்ல செல்ல வலுவேறியது.

யதேச்சையாய் நிகழும் சந்திப்பில் அவள் விழிகளில் காணும் நாணம்,அவனுக்கானது என்ற விவரம் அறியாத சிறு பிள்ளையா அவன்?

மீனுவை வைத்து உரையாடும் அவள் அன்பு, அர்த்தராத்திரியிலும் அவனுக்காக கதவை திறந்து விடும் கரிசனம்,

இது தான் காதல் என்பதா? இளமை தூது விட்டதா,?

அம்மாவிற்கு அவன் மனசு தெரிந்தால் என்ன சொல்வாள்?

'போடா நீயும் உன் காதலும் என்பாளா? மூல நட்சத்திரத்தில் பிறந்தவள் எனக்கு மாட்டுப்பொண்ணா அறிவிருக்கா உனக்கு '

என்று வசை பாடுவாளா? எதைச் சொல்வாள் அம்மா?

அது சரி.அம்மா நிச்சயம் அவன் ஆசையை அங்கீகரிக்கப் போவதில்லை.அது தான் இன்றே சொல்லிவிட்டாளே அப்படியொரு ஆசை அவளுக்கு சுத்தமாக இல்லையென்று. ஆனால் அம்மாவிற்காக அவன் மனதிலிருக்கும் ஆசையை அவனால் தூக்கியெறிய முடியுமா? முடியாதே..

என்ன செய்யப் போகிறான்? நந்தகுமார் என்ன செய்யப் போகிறான்?
 
நெஞ்சங்கள் இடம் மாறிய பின்,
நட்சத்திரப் பொருத்தத்திற்கு ஏது வேலை....


எனக்கொரு சந்தேகம் ஆத்தரே!
மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்னை தந்தை இல்லாத பையனுக்கு கல்யாணம் பண்ணித்தரது ஓகேன்னு தானே சொல்லுவா....🧐🧐🧐
 
முழுதாக காதலை உணரும் முன் முட்டுக்கட்டையாக மூடநம்பிக்கைகள்
முன்னே வந்து நிக்குது.....
மனதிற்குப் பிடித்து விட்டால்
மங்கையும் உணர்ந்திட்டால்
மன்னவனுடன்
மாங்கல்யம் தானே.... 🤩🤩🤩
 
நெஞ்சங்கள் இடம் மாறிய பின்,
நட்சத்திரப் பொருத்தத்திற்கு ஏது வேலை....


எனக்கொரு சந்தேகம் ஆத்தரே!
மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்னை தந்தை இல்லாத பையனுக்கு கல்யாணம் பண்ணித்தரது ஓகேன்னு தானே சொல்லுவா....🧐🧐🧐
வாஸ்தவம்.நட்சத்திரம் மூலம்ன்றது இட்டுகட்டி சொல்லப்பட்ட வதந்தி.உண்மையில் ராதா ரேவதி நட்சத்திரம்.அவ ராசியில்லாதவள்னு பாட்டி சித்தரித்த பிம்பம் தான் இப்போ பிரச்னையே.
 
Top