Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் அத்தியாயம் 14

Advertisement

parvathi

Active member
Member
அத்தியாயம் 14

ராமசந்திரன் அன்று மகாகோபத்துடன் இருந்தார். டீபாயின் மீதிருந்த பத்திரிக்கைகளை விசிறியடித்து எதையோ தேடினார். வாய்க்குள்ளேயே எதையோ முணுமணுத்து கொண்டார். தேடிய பொருள் கிடைக்காமல் போன ஆத்திரத்தை வார்த்தைகளில் கொட்டினார்.

"இந்த ஆத்துல எந்த பொருளும் வெச்சது வெச்ச இடத்தில் இருக்காதே..சே ! என்ன கருமம்டா இது? எங்கே தொலைஞ்சது?"

இந்நேரம் வரை அவர் தேடலை கவனித்து கொண்டிருந்த அவருடைய தர்மபத்தினி இப்பொழுது உதவிக்கு வந்தாள்.

"என்னத்த தேடறேள் அப்படி?"

"என் மூக்கு கண்ணாடி இங்கே டீபாயில் தான் கழட்டி வெச்சுட்டு போனேன் கொல்லைபக்கம் போய்ட்டு வந்து பார்த்தால் அதை காணலே எங்கே தொலைஞ்சதோ தெரியல."

மீண்டும் தேடலை தொடர்ந்தார் . சீதாலட்சுமி அவர் கண்ணாடியை எடுத்து வந்து கொடுக்கவும் வியப்புடன் பார்த்தார்.

"எங்கேடீ இருந்தது?"

"நான்தான் டீபாயிலிருந்தால் யாரானும் உடைச்சுடப்போறாங்கனு மேஜை மேல கொண்டு வெச்சேன்."

"எனக்கு தெரியுமே இப்படி எக்குதப்பா எதாவது நீ செய்வேன்னு நன்னா தெரியும். மூக்குகண்ணாடி என்ன ரெக்கை முளைச்சா பறந்து போயிருக்கும் மறுபடியும் வந்து படிக்கனும்னு தானே அதை டீபாயில் வெச்சுட்டு போனேன் நீ ஏண்டி அவசரப்பட்டு அதை தூக்கி அந்தண்டை வைக்கறே? இங்கே உடைக்கறதுக்கு நம்மாத்துல என்ன சின்னகுழந்தையா இருக்கு,?."

"ஏன் நீங்க இருக்கேளே போதாது? சும்மா சத்தம் போடாதிங்கோன்னா வரவர ஒண்ணுமேயில்லாத விஷயத்துக்கெல்லாம் ஆகாசத்துக்கும் பூமிக்குமா குதிக்கறேள் .பிள்ளயில்லாத வீட்ல கிழவன் துள்ளி குதிச்ச கதையா...வயசாச்சே தவிர இன்னும் விவேகம் வரல…"

"நீ எனக்கு சொல்றியா? கொன்னுடுவேன் கொன்னு. வரவர ஆம்படையான்ற மரியாதை இல்லாமல் போச்சு உனக்கு.உன்னை சொல்லி குத்தமில்லடி உன்னை கொண்டு வந்து என் தலையில் கட்டினா பார் உங்கம்மா அவளை சொல்லனும். ம்..1947 ல நம்ம நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்சது என்ன பண்ண என் சுதந்திரம் அதே நாளில் பறிபோயிடுச்சே அன்னிக்கு என்னை படிச்சுண்ட சனிபகவான் இன்னிவரை என்னை விட்டு போகலேடி."

"உங்களுக்காவது சனி தான் பிடிச்சது எனக்கு ஏழரை நாட்டுசனின்னா பிடிச்சுண்ருத்து நான் செத்தால் தான் என்னை பிடிச்ச எழரையும் விலகும் போல."

"அது தெரிஞ்சா சரி…."

"என்னது…"சீதாலட்சுமி முறைத்தாள்

"நான் செத்துப் போகனும்னா சொல்றிங்க..நான் இல்லேன்னா தான் என் அருமை தெரியும் இந்த சீதாலெட்சுமி இல்லாமல் லோல்படுவிங்க."

"ஒண்ணும் பிரச்னையில்லை நன்னா சௌக்கியமா சந்தோசமா இருப்பேன் ஆனால் அது நடக்கற காரியமில்லையே."

ராமசந்திரன் ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன் இதை சொல்ல, சீதாலட்சுமி காளி அவதாரம் எடுத்தாள்

"என்ன சொன்னிங்க?"

"ஏய் நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு நீ இந்த கத்து கத்தற? இந்த பூலோகத்திலிருந்து சொர்க்கலோகத்திற்கு போக ஆசைப்படறவாளை தடுக்கலாமோ? நீ சொர்க்கத்துக்கு போவியோ நரகத்துக்கு போவியோ அது வேற விஷயம் ஆனால் என்னை படுத்தின பாட்டுக்கு நிச்சயம் நீ சொர்க்கத்துக்கு போக மாட்டே ஆனால் பாவம் உன் நம்பிக்கையை நான் ஏன் கெடுக்கனும்? தாராளமா போ ஆனால் போறது தான் போறே கொஞ்சம் சீக்கிரமாய் போனால் தேவலை நானும் சின்னபொண்ணா பார்த்து இரண்டாம் தாரமாய் கல்யாணம் பண்ணிண்டு சௌக்கியமாய் இருப்பேன்.. "

"அப்படி வேற ஒரு ஆசை மனசிலிருக்கா?"

அவரை கடிக்க முடியாமல் பற்களை கடித்தாள் சீதாலட்சுமி

"ம் ஆசை இருந்து என்னடி பண்ண? அதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும் .சும்மாவா சொன்னாங்க ஆசை இருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்கனு"

"கல்யாண வயசுல ஒரு பொண்ணை வெச்சுண்டு பேசற பேச்சான்னா இது? உங்களுக்கு யாருன்னா அந்த ஏகபத்தினி விரதர் ராமர் பெயரை வெச்சா?"

"உனக்கு உன் அம்மா எப்படி சீதாலட்சுமினு பெயர் வெச்சாளோ, அதே மாதிரி தான் எங்கம்மா எனக்கு ராமசந்திரன்னு பெயர் வெச்சா அவா பேர் வெச்சதுல தப்பில்லடி நாம ரெண்டு பேரும் அந்த ராமரும் சீதையும் போல அழகா குடித்தனம் பண்ணுவோம்ன்ற நெனப்புல நம்மை சேர்த்து வெச்சா பாரு அது தான் மகா பெரிய தப்பு."

"யூ ஆர் செண்ட் பர்செண்ட் கரெக்ட்பா.."

தன் அறையில் அமர்ந்து மெடிகல் ஜர்னலை புரட்டிக் கொண்டிருந்த ஜானகி பெற்றொரின் வாக்குவாதத்தை மேலும் பொறுக்க முடியாமல் எழுந்து வந்தாள்.

"கீரியும் பாம்புமாய் இருக்கற உங்களுக்கு ராமர் சீதைனு பேர் வெச்சது தப்புதான் அந்த தப்புக்கு இப்ப என்ன பண்ணனும்றிங்க? ஏம்பா நான் ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ணனும்ற எண்ணம் இருக்கோல்லியோ?"

கோபத்துடன் கேட்ட ஜானகியை சமாதானப்படுத்தும் விதமாக சிரித்தார் ராமசந்திரன்.

"என்னம்மா நீ நாங்க ஏதோ விளையாட்டுக்கு பொழுது போகாமல் சண்டை போட்டால் நீ அதைப் போய் பெரிசுபடுத்தறயே."

"விளையாட்டா? அப்ப சரி தாராளமா சண்டை போடுங்க ஆனால் அதை முன்னாடியே தெளிவா சொல்லிடுங்க நானும் கண்டுக்காமல் இருந்துடறேன் ஏம்பா பொண்ணு டாக்டர் ஆகனும்னு ஆசைப்பட்டா மட்டும் போதுமா? அவ படிப்புக்கு தடையா இல்லாமல் உபத்திரவம் கொடுக்காமல் இருக்க வேண்டாமா?"

"என்னவோ தெரியல இன்னிக்கு உன் மூடே சரியில்லை அதுதான் இப்படி கோபப்படறே.சீதா நான் கொஞ்சம் சுந்தரம் வீடு வரை போய்ட்டு வரேன் நீ போய் அடுக்களையில் காரியமிருந்தால் கவனி. ஜானகி படிக்கட்டும்."

ராமசந்திரன் துண்டை உதறி தோளில் போட்டு கொண்டு கிளம்ப,அவருடைய தர்மபத்தினி அடுக்களைக்கு செல்ல, ஜானகி ஆயாசத்துடன் சோபாவில் சரிந்தாள்

அவள் எப்பொழுதும் பெற்றோரின் சண்டையில் தலையிட்டதில்லை போங்கப்பா உங்களுக்கு வேற வேலையில்லை என்ற கமெண்டுடன் சிரித்துக் கொண்டே நகர்ந்து விடுவாள் ஆனால் இன்று மட்டும் ஏன் அப்பாவை அப்படி கோபித்துகொண்டாள்?

காலையில் ராதா அவளிடம் காட்டிய கோபத்தை இப்பொழுது அவள் அப்பாவிடம் கொட்டி வடிகால் தேடினாளா? பாவம் அப்பா….

எவ்வளவு நேரம் தான் அப்படி உட்கார்ந்திருந்தாளோ

"என்னடி பொழுது சாயறச்சே தூக்கம்?.."

என்று ராதா வந்து தோள் பற்றி உலுக்கிய பொழுது தான் சுயநினைவிற்கு வந்தாள் ஜானகி.சட்டென்று ராதாவின் கைகளை தட்டி விட்டு தன்னறைக்குள் புகுந்து கொண்டாள். அவள் கோபத்திற்கான காரணம் புரிந்தவளாய் ராதா சற்று நேரம் மௌனமாக இருந்தாள்.

பின் அவள் அருகில் நெருங்கி அவள் கைவிரல்களை பற்றி,

"நீயும் என்கிட்ட கோபிச்சுண்டா நான் எங்கே ஜானா போவேன்? "

என்று வருத்ததுடன் சொல்ல, ஜானகி சட்டென்று தன் கைவிரல்களை அவள் பிடியிலிருந்து விலக்கி கொண்டாள்.

"உன்கிட்ட கோபிச்சுக்க நான் யாரும்மா? இன்னிய தேதி வரை நீயும் நானும் ஒண்ணு உன் கிட்ட யாருக்கானும் காரியம் ஆகனும்னா அவங்க என் மூலமா தான் அதை நிறைவேற்றிக்க முடியும்னு தப்பா நினைச்சுட்டிருந்தேன். உன் மேல ஓவரா உரிமை கொண்டாடினது தப்புனு இப்ப புரிஞ்சுடுத்து.."

"ப்ளீஸ் வார்த்தைகளால என்னை கொல்லாதே ஜானா.நான் அந்த அர்த்தத்தில் உன்னை கோபித்துக் கொள்ளவில்லை. டாக்டருக்கு கல்யாணமாயிடுச்சுனு முன்னால பொய் சொல்லிட்டு அப்புறம் அவரை என்னொட இணைச்சு வேற பேசினியா? அதான் ஆத்திரப்பட்டுட்டேன்.ஐ ஆம் சாரி ஜானா…."

"என்கிட்ட கோபப்பட்டே சரி ஆனால் டாக்டர் கிட்டயும் ஏன் அப்படி கடுமையா நடந்துண்டே? என்னை விட அதிகம் பாதிக்கப்பட்டது அவர் தான் தெரியுமா? கார்த்தால என்கிட்ட ரொம்ப வருத்தப்பட்டார்.உன் நெஞ்சுல கைவெச்சு சொல்லு ராதா உண்மையிலேயே அவர் மேல் உனக்கு அன்பும் அக்கறையும் இல்லையா?"

"கோபுரத்தையும் குப்பைமேட்டையும் இணைச்சுப் பார்க்காதே ஜானா."

ராதாவின் குரல் தழுதழுத்தது.

"ஸ்டுப்பிட் எப்பலருந்து இப்படி பஞ்ச் டயலாக் பேச கத்துண்டே? சரி உன் பாணியிலேயே நானும் கேட்கிறேன் அந்த கோபுரமே குப்பைமேட்டுடன் இணைய ஆசைப்பட்டால்?."

"அது வெறும் ஆசையாய் தானிருக்கும். நிறைவேற வாய்ப்பிருக்காது."

"ராதா…"

.அதிர்ச்சியுடன் நிமிர்ந்தாள் ஜானகி.ராதா விழிகளில் தளும்பிய நீரை துடைத்துக் கொண்டாள்.

"எனக்கும் அவருக்கும் நடுவில் அந்தஸ்து மட்டும் தடையா நிற்கலே ஜானா.அடிப்படையில் பிராமணர்கள் தான் என்றாலும் அவர் ஸ்மார்த்தர் பிரிவு நாங்க வைஸ்ணவ பிரிவு .எனக்கு அவர் மேல இருக்கற ஆசையையும் ப்ரியத்தையும் விட எங்கப்பா மேலயிருக்கற பாசமும் மரியாதையும் அதிகம். எங்கப்பா ஒருவேளை இந்த கல்யாணத்திற்கு சம்மதிச்சாலும் பாட்டி நிச்சயம் அனுமதிக்க மாட்டா. அதுவும் நான் அவர் மேல விருப்பப்படறது தெரிஞ்சா, என் ஆசையை அழிச்சுட்டு தான் மறுவேலை பார்ப்பா.என் ஜாதகராசி ஜானா எனக்கு எதற்குமே கொடுப்பினை கிடையாது…"

அழுகையில் குமுறிய தோழியை ஆதரவாய் அணைத்து கொண்ட ஜானகி பேச்சை திசைதிருப்பினாள்.

"நேத்து நம்ம சுஜாவோட அப்பா ராஜசேகரன் உங்க ஆத்துக்கு வந்திருந்தார் போல. வெளியில் அவருடைய கார் நின்றதை பார்த்தேன். ஏதும் ஆபீஸ் விஷயம் பேச வந்தாரா?"

"இல்லை சுஜா கல்யாண விசயமா பேச வந்தார்."

"ஓ நம்ம பாலு அண்ணாவுக்கு பெண் கொடுக்க வந்தாரா? பார்த்தாயா ஊருக்கு பெரிய மனிதர் அவரே அந்தஸ்து எல்லாம் பர்க்காமல் வந்திருக்கார். நீயென்னவோ பெரிசா ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம் கவலைப்படறியே"

"முழுசும் கேட்காமல் பேசறியே ஜானா அவர் பெண் கொடுக்க முன் வந்தது எங்கண்ணாவுக்கு இல்லை டாக்டருக்கு"

"ராதா…."

அதிர்ந்தாள் ஜானகி

ராதாவை சமாதானப்படுத்தும் முயற்சியாக தான் பேச்சை திசைதிருப்பினாள் ஜானகி. ஆனால் அது சுற்றி சுற்றி அதே வட்டத்தில் தான் வந்தது .

"நான் ஏன் அவரை அவாய்ட் பணறேன்னு இப்ப புரியறதா ஜானா?"

"நோ நீ முழுவதுமாய் அவரை புறக்கணிக்கலே.அப்படி அவரை அவாய்ட் பண்றவளா இருந்தா, நேத்து நைட் அவருக்கு அக்கறையோட கதவு திறந்து விட்டிருக்க மாட்டே .ஏய் இந்த விஷயம் எனக்கு எப்படி தெரியும்னு பார்க்கறியா? இன்னிக்கு கார்த்தால மீனுவை நடுவில் வெச்சுண்டு நீங்க ரெண்டு பேரும் விளையாடிய சதுரங்க ஆட்டத்தை நான் பார்த்துண்டு தான் இருந்தேன். யூ ஸ்டில் ஹாவ் எ சாஃப்ட் கார்னர் பார் ஹிம் இன் யுவர் ஹார்ட். ஜாதி அந்தஸ்துனு பார்த்து வர்றதில்லடி காதல் இட் சுட் பீ ஸ்பான்டேனியஸ். நீ பிரச்னைகளை தான் அதிகம் பார்க்கறியே தவிர அவர் மனசை பார்க்க மாட்டேன்ற.நந்தகுமாரோட மனசை நீ இன்னுமாடி புரிஞ்சுக்கல? அவர் உன்னை விரும்பறார் ராதா ."

"நான் இப்ப என்ன பண்ணனும்றே ஜானா?"

பரிதாபமாக கேட்ட தோழியின் முதுகில் தட்டி கொடுத்தாள் ஜானகி

"வெல் ..இது உன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் நீ தான் முடிவெடுக்கனும் ஆனால் நீ கேட்டதால சொல்றேன் டாக்டரை ஏமாற்றி விடாதே ராதா ப்ளீஸ்."

"எனக்கு மட்டும் அவரை ஏமாற்றனும்னு ஆசையா ஜானா?,"

ராதா விழிகளில் தளும்பிய நீரை உதட்டை கடித்து விழுங்கினாள். அவள் இப்படி செய்யும் பொழுதெல்லாம் நந்தகுமாரனின் பார்வை அவள் மீது ரசனையுடன் பதிவது இப்பொழுது ஜானகிக்கு நினைவில் வரவும் சிரித்து விட்டாள்.

"என்னடி நீ சிரிக்கறாப்ல நான் இப்ப என்ன சொல்லிட்டேன்?"

குழப்பத்துடன் கேட்டவளை பார்த்து மீண்டும் சிரித்தாள் ஜானகி.

"நீ ஒண்ணும் சொல்லலே ராதா ஆனால் நீ இப்ப உதட்டை கடிச்சுகிட்ட பாரு அதை டாக்டர் பார்த்திருந்தால் என்ன பண்ணியிருப்பார்னு யோசிச்சு பார்த்தேன் சிரிப்பு வந்துவிட்டது."

"ஏன் என்ன பண்ணியிருப்பார்?"

இயல்பாக கேட்ட தோழியை குறும்பாக பார்த்தாள் ஜானகி.

"சொல்லிடுவேன் ஆனால் நீ அதை கேட்டுட்டு என்னை திட்ட கூடாது."

"என்னடி விவகாரமா எதுவும் சொல்லப்போறியா? பீடிகை எல்லாம் பலமாயிருக்கு.."

"அது ஒண்ணுமில்ல ராதா. நீ இப்படி உதட்டை கடிச்சுக்கறப்ப எல்லாம் நந்தகுமார் உன்னை ரசனையோட பார்க்கறதை நீ கவனிச்சிருக்கியோ இல்லையோ நான் கவனிச்சிருக்கேன். நீ இப்படி பண்றப்போ பொம்மனாட்டி எனக்கே உன் உதட்டில் ஒண்ணு கொடுக்கனும் போல ஆசையாயிருக்கும்.அப்படியிருக்கறப்போ ஒரு ஆண் அதுவும் உன்னை உயிருக்குயிராய் காதலிப்பவர் எப்படியெல்லாம் ஆசைப்படுவார்னு நினைச்சுப் பார்த்தேனா அதான் சிரிப்பு வந்துடுச்சு.."

"சீ !….நீ ரொம்ப மோசம் ஜானா"

ராதாவின் முகம் அந்திவானமாய் சிவக்க, செல்லமாய் சிணுங்கியவளை பார்த்து கண் சிமிட்டினாள் ஜானகி

"இதை நீ டாக்டர் கிட்ட சொல்லியிருப்பாயா? எங்கே அந்த மாதிரி சமயத்தில் அவர் உன்னை பேச விடுவாரா என்ன?"

"வரட்டும். ஸ்ரீராம் வந்தவுடன் இப்படி பேசற உன் வாயை முதலில் அடைக்க சொல்றேன்."

"ப்ளீஸ் அதை செய்மா முதலில்"

ஜானகி குறும்பாக கண்ணடிக்க ராதா வாய் விட்டு சிரித்து விட்டாள்.

எனக்கு மட்டும் அவரை ஏமாற்ற வேண்டும் என்று ஆசையா எனக் கேட்ட ராதா பின்னொரு காலத்தில் நந்தகுமாரனை ஏமாற்றத் தான் போகிறாள் என்ற உண்மை அந்த சமயத்தில் அவர்கள் இருவருக்குமே தெரியாமல் போனது.





Thanks to all readers for ur genuine support. Pls give ur feedbacks.

என் கதைகள் ஆடியோவில் கேட்க விருப்பப்பட்டால் BalaThiagarajanTamil Novels@ utube. Com என்ற சேனலுக்கு வருகை தாருங்கள்.Last BUT NOT THE LEAST PLS LIKE COMMENT SHARE N SUBSCRIBE 🙏🏻
 
உதட்டை கடித்து
உள்ளத்தை உருக்கியவலே
உருகிடும் என் எண்ணம்
உனக்கது புரியலையா....
உண்மை தெரிந்தும்
உணை மறைப்பது
உனக்கே நியாயமா ராதா???
உன் கடை கண் பார்வைக்கு காத்திருக்கும்
உந்தன் நந்தகுமாரன்
நம் பிருந்தாவனத்தில்.....
 
பெற்றவர்களின் சிறுபிள்ளை சண்டை
பிள்ளையின் சத்தத்தில்
பாதியில் நின்று விட....

சண்டையில் இருந்த
தோழியின் வருகை
சமாதானத்தில் முடிய....

ஜானாவின் சீண்டலில்
ராதையின் நாணம் தெரிந்தாலும்
சிறு வலி இருக்கதான்
செய்கிறது ராதையின் மனதில்.....
 
பெற்றவர்களின் சிறுபிள்ளை சண்டை
பிள்ளையின் சத்தத்தில்
பாதியில் நின்று விட....

சண்டையில் இருந்த
தோழியின் வருகை
சமாதானத்தில் முடிய....

ஜானாவின் சீண்டலில்
ராதையின் நாணம் தெரிந்தாலும்
சிறு வலி இருக்கதான்
செய்கிறது ராதையின் மனதில்.....
உதட்டை கடித்து
உள்ளத்தை உருக்கியவலே
உருகிடும் என் எண்ணம்
உனக்கது புரியலையா....
உண்மை தெரிந்தும்
உணை மறைப்பது
உனக்கே நியாயமா ராதா???
உன் கடை கண் பார்வைக்கு காத்திருக்கும்
உந்தன் நந்தகுமாரன்
நம் பிருந்தாவனத்தில்.....
இப்படி எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டா, அப்புறம் நாங்க எதைப் பற்றி கவிதை எழுதறதாம் 🤨🤨
 
உள்ளம் முழுவதும் “அவனே” நிறைந்திருந்த போதும்,
உற்றத்தோழி அதைக் கண்டுகொண்ட போதும்,
உற்றார் உறவினர் பழிச்சொல்லுக்குப் பயந்து,
உத்தமன் “அவனை” உதறித்தள்ள நினைப்பது நியாயமா?
 
என் கதையை விட கவிக்குயில்களின் கவிதை படு சுவாரஸ்யமாக இருக்கிறது.இதுல போட்டி வேறா ம் நடக்கட்டும் நடக்கட்டும்.😀
 
உதட்டை கடித்து
உள்ளத்தை உருக்கியவலே
உருகிடும் என் எண்ணம்
உனக்கது புரியலையா....
உண்மை தெரிந்தும்
உணை மறைப்பது
உனக்கே நியாயமா ராதா???
உன் கடை கண் பார்வைக்கு காத்திருக்கும்
உந்தன் நந்தகுமாரன்
நம் பிருந்தாவனத்தில்.....
கவிக்குயிலுக்கு புரிந்த காதல் ராதாவுக்கு புரியலையே.என் செய்வேன்?😥
 
Top