Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ தான் எந்தன் அந்தாதி - அத்தியாயம்-18

Advertisement

daisemaran

Well-known member
Member
அத்தியாயம்-18

மாலை வேளை மகாபலிபுரம் கடற்கரை...


"அபி.... அபி என்னாச்சு அபி ஏன் எதுவும் பேச மாட்றே?" மேகலா தன் தோழியின் தோள்களைப் பற்றி அசைத்தப்படி கேட்டாள்.


அபியின் பார்வை வெற்று வானத்தில் நிலைத்திருந்தது.


சோகம் நிறைந்து அவள் அமர்ந்திருந்த நிலை அசோகவனத்துச் சீதையின் தோற்றத்தை ஒத்திருந்தது.


அசோக வனத்தில் சீதை மிகுந்த சோகத்துடன் அமர்ந்திருப்பது போல, அபியின் கண்களும் அழுதழுது மிகவும் வாடி போயிருக்க... அவள் உடல் இளைத்து, தூக்கமின்றி புலியிடம் மாட்டிக்கொண்ட மான் போல (அகப்பட்டு) மிகவும் வருந்திக் கொண்டிருந்தாள். வேழவேந்தனின் நினைவால் மிகவும் வருந்தி, சோர்வுற்று, அவனின் வரவை எதிர்பார்த்து மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருந்தாள். இராமரின் நினைவு சீதையை வாட்டிக் கொண்டு இருந்ததுப்போன்ற ஒரு பிம்பம். இராமர் தன்னை காக்காவிட்டாலும், தன் குலப்பெருமையைக் காக்கும் பொருட்டு நிச்சயம் வருவான் என சீதை காத்திருந்ததுப்போல நாலாபுறமும் வேழவேந்தனின் வரவை எதிர்நோக்கிப் பார்த்துக் கொண்டு அபிநயா அமர்ந்திருப்பது போல் மேகலாவிற்கு தோன்றியது.


"கவலைப்படாதே அபி... உன் வேழவேந்தன் உன்னைத்தேடி கண்டிப்பாக வருவார்." என்று நம்பிக்கை ஊட்டினாள்.


"மேகலா.... அவங்கள டிஸ்டர்ப் பண்ணாதே... அவங்க ஏற்கனவே மன உளைச்சல்ல இருக்காங்க நீ வேற வெந்த புண்ணிலே வேலப் பாய்ச்சாதே..." என்று குமரேசனின் குரல் கண்டிப்போடு ஒலிக்கவே,


" என்னங்க என்ன நடந்துச்சுன்னு நீங்களும் சொல்ல மாட்றீங்க...? என்னையும் கேட்க விடமாட்றீங்க... அப்படி அந்த ஊருல என்னதான் நடந்துச்சு...??"


வாய் திறந்தால் எங்கே அழுது விட போகிறோமோ?? என்ற பயத்தில் கீழுதட்டை பற்களால் கடித்து அழுகையை கட்டுக்குள் வைத்திருந்தாள் அபிநயா. ஆனாலும் தோழியின் அக்கறையும் அன்பும் அவள் கண்களின் கட்டுப்பாட்டை உடைத்துக்கொண்டு மடைதிறந்த வெள்ளம் போல மடமடவென்று உருண்டு கன்னத்தை நனைத்தது. முகத்தை கவிழ்த்து கொண்டு கன்னத்தில் இறங்கிய கண்ணீரை சுண்டுவிரலால் சுண்டி எறிந்தாள். தோழியின் கண்ணீரைக் கண்ட மேகலா பதறிப்போனாள்.


"அபி... ?"என அவள் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை தன் கைக்குட்டையால் ஒற்றி எடுத்தவள்,


"அபி... அபி... என்ன விஷயம் என்கிட்ட சொல்லு என்னால் முடிந்த உதவியை நான் செய்யறேன். மனசுக்குள்ளேயே வெச்சுட்டு அழுத்துகிட்டே இருந்தால் அது உடம்புக்கு நல்லதில்லை. ப்ளீஸ் அழாதே... நீ அழுதா என்னால தாங்க முடியாது. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அபி..." என்று குரல் கம்ம சொன்ன தோழியை இருக்க அணைத்துக் கொண்டாள் அபிநயா.


'"கண்கள் அழுதால் துடைப்பது வேண்டுமானால் கைகளால் இருக்கலாம், ஆனால் இருதயம் அழுதால் துடைப்பது நட்பு மட்டும் தாண்டீ... அந்தளவு நட்பு உயர்வானது. நீ அழுவதை என்னால பார்த்துட்டு இருக்க முடியல... இப்ப 'ம்' ன்னு ஒரு வார்தை சொல்லு அந்த வேழவேந்தனோட அட்ரஸ குடு... நான் நேரடியா போய் அவர் கையில கால்ல விழுந்தாவது எங்க அபியை ஏத்துக்கோங்க நீங்க இல்லேன்னா அபி இல்லை...உங்கள பிரிஞ்சு அவ உயிரோடவே இருக்க மாட்டா?? அப்படின்னு அவர் மரமண்டைக்கு புரியிற மாதிரி எடுத்து சொல்லி உங்க ரெண்டு பேரையும் நான் சேர்த்து வைக்கிறேன்." என்று உணர்ச்சி மேலிட கூறிய தோழியின் வாய்களை தன் கரம் கொண்டு பொத்தினாள் அபிநயா.


கேள்வியோடு அபியின் முகத்தை ஏறிட்டவளுக்கு அபியின் கண்களில் தெரிந்த விரக்தி சமிபத்தில் பெரிய தோல்வியை சந்தித்ததற்கான எதிரொலியை அவளின் சோர்ந்த முகம் அடையாளப்படுத்திக் காட்டியது.


வேழவேந்தனைப் பற்றி விசாரிக்கப் போன இடத்தில் ஏதோ நடந்திருக்கிறது. இல்லையென்றால் அபி இந்த அளவுக்கு உடைந்து போய் அழ மாட்டாள். தன் கணவனும் சரியான பதிலை சொல்ல மறுக்கிறார். அப்படி என்றால் போன இடத்தில் ஏற்க முடியாத பெரிய இழப்பை அபி சந்தித்திருக்கிறாள் என்றுதானே அர்த்தம் அப்படியென்றால் ஏதோ நடந்திருக்கிறது.


" அபி... கவலைப்படாதே தீர்வு இல்லாத பிரச்சினை என்று எதுவுமே இல்லை. எல்லாத்துக்கும் ஒரு தீர்வு உண்டு அதை எப்படி சரி பண்ணுவது என்று யோசிக்கலாம். எந்த சூழ்நிலையிலும் மனதை தளர விடாதே..." தோழியை ஆறுதல் படுத்தும் விதமாக மேகலா சொல்லிக்கொண்டிருக்க,


"மேகலா....நீயும் சிஸ்டரும் பேசிகிட்டு இருங்க... நான் போய் அம்மாகிட்ட விட்டு விட்டு வந்த குழந்தைங்கள் என்ன பண்றாங்கன்னு பார்த்துட்டு வரேன்." என்று தூரத்தில் பஜ்ஜி கடையில் குழந்தைகளுடன் அமர்ந்திருந்த தன் தாயை சுட்டிக் காட்டியபடி நகர்ந்தான் குமரேசன்.


குமரேசனின் சோர்ந்த நடையும் இங்கிதம் புரிந்துகொண்டு விலகிச் சென்ற அவனுடைய பெருந்தன்மையும் நினைத்தபோது அபிநயாவின் மனதிற்கு ஆறுதலாக இருந்தது. கூடப்பிறந்த அண்ணன் தம்பியாய் இருந்தாக் கூட இந்த அளவுக்கு அவளுக்காக பாடு பட்டிருக்க மாட்டார்கள். ரத்த சொந்தமே இல்லாத குமரேசன், மனைவியின் தோழி என்ற ஒரே காரணத்திற்காக கூடப்பிறந்த சகோதரியை போல இரண்டு மூன்று நாட்களாக தன் குடும்பத்தை விட்டு விட்டு இவளுடன் அலைந்து கொண்டிருக்கிறான். இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதனைப் பார்ப்பது என்பது அரிதிலும் அரிது.


இன்னொரு ஜென்மம் என்று ஒன்று இருந்தால் குமரேசனுக்கு தங்கையாய் பிறக்க வேண்டும் என்று எண்ணியது அபிநயாவின் பேதை மனம்.


" என்ன அபி எதையாவது பேசேன்... உன்ன பாக்கும்போது எனக்கு ரொம்ப பயமா இருக்குடீ..."


"ஏன் நான் செத்து கித்து போயிடுவேன்னு பயப்படுறீயோ...?" என்று விரக்தியோடு சிரித்தாள் அபிநயா.


"ஏன் அபி இப்படி எல்லாம் பேசுற...? நீ இப்போ சாதாரண மனுஷி இல்ல ஒரு மாவட்டத்துக்கு கலெக்டர் மக்களுக்கு சேவை செய்ய வந்திருக்கே... நீ இப்படி பேசலாமா?"


" ஆனா நானும் ஒரு மனுஷி தானே எனக்கும் ஆசா பாசங்கள் இருக்கும் இல்லையா? மத்தவங்களைப் போல மனசுக்கு பிடித்த வாழ்க்கையை வாழணும்னு நான் நினைச்சது தப்பா? எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? பதவியோ பணமோ நாம நெனச்சா தேடிக்கலாம் ஆனால் வேழவேந்தனை?? இனி எனக்கும் அவருக்குமான உறவு அறுந்துவிட்டது. அவர் ஒருத்திக்கு சொந்தமாகி விட்டார். இனி நான் நெனச்சாலும் அவர் கூட வாழ முடியாது."


என்று சொல்லிய மறுநிமிடம் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அபி குலுங்கி குலுங்கி அழத் தொடங்கினாள்.


" அபி அழதே அபி ... அவர் கிட்ட நீ பேசினியா அவரா அப்படி சொன்னார்...?"


"ம்ம்ம்... அங்க என்ன நடந்துச்சுன்னு சொன்னால் தான் உனக்கு புரியும். அன்னைக்கு நானும் குமரேசன் பிரதரும் அந்த ஊருக்கு போனோம் இல்லயா... நாங்க விழாவை முடித்துகொண்டு வேழவேந்தன் அக்கா குழலியை சந்திக்க அவங்க வீட்டுக்கு போனோம். குழலி அக்கா எங்களை வாங்க வாங்கன்னு எங்களை உபசரிக்கா விட்டாலும் முகம் சுளிக்காமல் வரவேற்றார்கள்.


வேழவேந்தனின் முகவரியை கேட்டோம் அவரைப்பற்றி விசாரித்தோம். முதல்ல அவங்க வேழவேந்தனை பற்றி சொல்ல மறுத்துட்டாங்க. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் என் மனச ரொம்ப பாதிச்சிடிச்சி.


"என் தம்பி வேழவேந்தன் தேடி வந்து இருக்கீங்கன்னா அவன ஜெயில்ல புடிச்சு போடுவதுதான் உங்களுடைய நோக்கமாக இருக்கும். கண்டிப்பா என்கிட்ட இருந்து எந்த உண்மையும் வெளிவராது உங்களை கையெடுத்து கும்பிடுறேன் தயவுசெய்து இங்கிருந்து போயிடுங்க அப்படின்னு சொன்னாங்க.


வேழவேந்தனை போலீசில் பிடித்துக் கொடுக்கத்தான் நாங்க அங்க போனதா சொன்னாங்க. அந்த வார்த்தையை என்னால தாங்கிக்கவே முடியல. கொஞ்ச நேரம் பேசிட்டு வீட்டை விட்டு வெளியில் வந்து விட்டோம்.


ஆனால்... குமரேசன் பிரதர் திரும்பவும் அவர்களை தேடி சென்றார் அவங்க மனசு கொஞ்சமாவது மாறலாம் அப்படின்னு அவர் எண்ணினார். இந்த முறை அவங்க கொஞ்சம் பணிவான குரலில் பேசி இருக்காங்க அதுல நம்பிக்கை வந்த குமரேசன் பிரதர் என்னை அழைத்தார் நானும் தயக்கத்தோடு திரும்பவும் சென்றேன். அப்பதான் எங்க ரெண்டு பேரின் முன்னிலையில் வேந்தனுக்கு கால் பண்ணினாங்க. ஸ்பீக்கரில் போட்டதால எங்களால வேழவேந்தன் பேசுவதை கேட்க முடிந்தது.


ஹலோ என்று வேழவேந்தனின்குரல் வந்தவுடன் எனக்கு வானத்தில் பறக்கிற மாதிரி தோணுச்சு குழலி அக்கா கையில் இருந்து போனை பிடிங்கி நான் தான் அபிநயா வந்து இருக்கேன் அப்படின்னு கத்தனும் போல ஆவலாய் இருந்துச்சு. எல்லாத்தையும் அடக்கிட்டு சிலைபோல் அமைதியாக நின்னேன்.


குழலி அக்கா குமரேசன் அண்ணா வந்ததை மட்டும் தான் சொன்னாங்க சொன்ன மறுநிமிடமே வேந்தன் அவன் கூட மிஸ் அபிநயாவும் வந்திருக்காங்களா அப்படின்னு கேட்டார்.


ஆமாம் என்று குழலி அக்கா சொல்றதுக்கு முன்னாடியே அவர் பேசத் தொடங்கினார்.


குமரேசன் வந்திருந்தால் கூட அபிநயாவும் வந்து இருப்பாங்க!! ஆனா... இப்ப இருக்கிற என்னுடைய குடும்ப சூழ்நிலையில நான் யார்கூடவும் பேச விரும்பல. அடுத்து எனக்கு திருமணம் ஆன விஷயம் அவங்களுக்கு தெரியாது நீ சொல்லிடு. தேவை இல்லாம எங்க குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்க வேண்டாம். தெரிஞ்சோ தெரியாமலோ சில வருஷத்துக்கு முன்னாடி நான் அவங்க கூட பழகி இருக்கலாம். ஆனா இப்ப என்னை நம்பி எனக்குன்னு ஒரு குடும்பம் ஒரு குழந்தை இருக்கு. நான் சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்கேன். தயவு செய்து என்ன பத்தி விசாரிக்கிறதையோ... என்ன பாக்க நினைக்கிற தையோ..} நான் விரும்பல வந்தவர்களை திருப்பி அனுப்பி விடு அக்கா." என்று சொல்லிவிட்டு போனை கட் பண்ணிவிட்டார்."


"அபி... போன்ல பேசினது அவர்தான்னு எப்படி நம்புறது..."


"இல்ல எனக்கு நல்லா தெரியும் அது அவருடைய குரல் தான் அதை நான் உறுதியாக சொல்வேன்..."


" வேழவேந்தனின் நம்பரை வாங்கி நீ ஒரு முறை பேசி இருக்கலாம் அபி..."


" குழலி அக்கா நம்பர் தர முடியாது போன் வேணா போட்டுதரேன் சொல்லிட்டாங்க எங்களுக்கும் வேற வழி தெரியல எப்படியாவது பேசனும்னு நினைச்சோம். ஆனாலும் குமரேசன் பிரதர் வேந்தன் கிட்ட பேசியே தீருவேன்னு பிடிவாதமா இருந்தார். திரும்பவும் கால் பண்ணி அவர்கிட்ட கொடுத்தாங்க, போனை வாங்கி ஹலோன்னு சொன்ன மறுநிமிடம்,


"குமரேசன் நான் யார்கிட்டயும் பேச விரும்பல... தயவுசெய்து எனக்கு கால் பண்ணாதே..." என்று போனை கட் பண்ணிவிட்டார் வேழவேந்தன்..."


"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல... இது உன்னுடைய வாழ்க்கை நீதான் ஒரு நல்ல முடிவா எடுக்கணும் அபி...."


" ம்ம்... அந்த கார்த்திக்கை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்கேஜ்மென்ட் ஏற்பாடு பண்ணுங்கன்னு அப்பா அம்மாவுக்கு கால் பண்ணு சொல்லிட்டேன் மேகலா... அனேகமா நாளைக்கு காலையில கோயமுத்தூர் கிளம்பிடுவேன்... நீ என்கேஷ்மெண்ட்க்கு வரமுடியாது. ஆனா கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துடு... மேகலா" என்றவளின் கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் சிதறி மேகலாவின் கைகளில் தெரித்தது.


தோழிக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று புரியாமல் அவள் கைகளை இறுகப் பற்றியபடி அமர்ந்திருந்தாள் மேகலா. இருவரின் மனங்களும் சமாதானம் மின்றி இருந்தாலும்,

அபியின் மனதில் ஆயிரமாயிரம் போராட்டங்கள் நடந்து கொண்டு இருந்தாலும் அதை எல்லாம் மீறி தோழியின் அருகாமை அபிநயாவுக்கு ஒரு மெல்லிய ஆறுதலைக் கொடுத்தது
.
 
Last edited:

Advertisement

Top