Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதான் எந்தன் அந்தாதி -அத்தியாயம் -9

Advertisement

daisemaran

Well-known member
Member
அத்தியாயம்-9
குமரிக் கடற்கரை...

இன்னும் விடியவில்லை. கடலில் மெல்லிய இருள் கவிழ்ந்திருந்தது. தூரத்தில் சிறுபுள்ளியாய் தெரிந்த வெளிச்சம், படகு வருவதை அடையாளப்படுத்திக்காட்டின. கடலோரகரைப்பாதையில் ஒன்றன்பின் ஒன்றாய் வந்துகொண்டிருந்த மனித உருவங்கள்.

வான்தொடும் மின்கம்பத்திலிருந்து சிதறிய ஒளிச்சிதறலை அங்கு யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. இருட்டும் ஒளிதான் என்பதை உணர்ந்தவர்களாக தங்கள் வேலைகளில் மும்முரமாக சுழன்று கொண்டிருந்தார்கள்.

படகுகளிலிருந்து மீன்களை இறக்குவதும், ஏலம் விடுவதற்காக வியாபாரிகளிடம் ஒப்படைப்பதுமான வேலைகள் நடந்துகொண்டிருந்தன. அலுமினிய அன்னக்கூடைகளை இடுப்பில் வைத்துகொண்டு பெண்கள் ஒருபக்கமாக நின்றிருந்தனர். இரசிப்பாரின்றி கடல் மெல்லிய இசையோடு இறைந்துக்கொண்டிருந்ததை எவரும் சட்டை பண்ணியதாகவும் தெரியவில்லை.

படகுகள் ஒவ்வொன்றாக கரையை நோக்கி வரத்தொடங்கின. கடைசியாக கரைக்கு வந்தது ராஜேந்திரனின் டீசல்படகு. ஒரு கூடை கவலைமீனையும் இரண்டுக்கூடை அயிலைமீன்களையும் சுமத்துகொண்டு வந்த படகை, கைகளை அசைத்து, தங்கள் பக்கம் வருமாறு செய்கை செய்தனர் மணல்திட்டில் நின்றிருந்தமூவர். அந்த இளம் இருளிலும் ஆட்களை அடையாளம் கண்டுகொண்ட ராஜேந்திரன் பதிலுக்கு கையசைத்து அவர்களிடத்தில் வருவதை உறுதிப்படுத்தினான்.

இழுப்புக்கயிற்றில் படகை கட்டி நிறுத்திவிட்டு, கூடையில் இருந்த மீன்களை தூக்கி மணல்திட்டில் வைத்தான் ராஜேந்திரன்.

“ஏ... ராசு எல்லாமே தூள்மீனா இருக்கே பெருசு எதுவும் மாட்டலையா?”
கூட்டத்தில் வயது முதிர்ந்த பெண் ஒருத்தி மின்விளக்கு ஒளியில் மீன்களை அடையாளங்கண்டுகொண்டு கேட்டாள்.

“இல்லை சித்தி... எல்லாமே தூள்மீன்தான் மாட்டியது...கூடை ஆயிரன்னு குடு போதும்...”

“அண்ணே... எட்டுநூறு போட்டுக்க கூடாதா...?” ஒண்ணுவிட்ட சித்தாப்பா பொண்ணு சாந்தி கேட்க,

“கட்டுபடியாகாது தங்கச்சி...ஒரு நாள் டீசல் செலவே ஆயிரம் ஆகுது ம்மா...அதுவும் இந்தமுறை அதிக நீரோட்டமும் சுறாவளி காற்றின் வேகமும் அதிகமாக இருந்தாதால் மீனே சிக்கலை போட்ட வலையில பாதிவலை வெத்துவலைதான்னா பார்த்துக்கோயேன்.”

“சரி பார்த்துபோட்டு கொடுப்பா...”

“சரி...சித்தி கூடைக்கு நூறுரூவா கொறச்சிக்கொடு... டீசல் செலவாவது மிஞ்சட்டும்...”

“அடேய்... நான் ஒரு கூறுகெட்டவ மறந்துட்டேன் பாரு... உன் பொண்டாட்டி உன்னை வீட்டுக்கு வர சொன்னா... அவ ஓனர் வூட்டுல கல்யாணமா வச்சம்.”

சில நிமிடம் யோசித்தவன்

“சித்தி... எம்மவன் ஸ்கூலுக்கு போவாம இருக்கானில்ல...உனக்குதான் தெரியுமே...அவனுக்கு யூனிபாம்ட்ரெஸ் எடுக்கவேணாமா? வீட்டுக்கு வந்து ஜாலியா கல்யாணம் காட்சின்னு போகுற நிலையிலையா இருக்குறேன்.? என்னால வரமுடியாதுன்னு அவகிட்ட போய் சொல்லுங்க...”

சொன்னானேதவிர பிள்ளையோட ஞாபகம் உப்புகாத்தோடு கலந்து நெஞ்சை கரிக்கத்தான் செய்தது.

கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கலையத்தொடங்கியது. மின் விளக்கு அணைக்கப்பட்டு பாதை போகும் வழி கண்ணுக்கு தெரிந்தது. கடற்கரைக்காற்று, மணலில் ஈரப்பதத்தை உலர்த்தி இதமான சூட்டை படரவிட்டது. சாப்பாட்டுத்தூக்கை எடுத்துவந்து பயன்பாடின்றி பாழடைந்து கிடந்த ஒரு படகோரத்தில் அமர்ந்தான்.

பழைய சோற்றில் ஊறிக்கிடக்கும் பச்சைமிளகாயையும், சின்ன வெங்காயத்தையும் பார்க்கும்போது ராஜேந்திரனுக்கு நாவில் எச்சி ஊறியது. அண்ணன் பையன் குமாரிடம், மனைவி வள்ளி கொடுத்துவிட்டிருந்தாள். வள்ளிமேல கொஞ்சம் வருத்தந்தான். நடுகடலில் மீன் பிடிக்கப் போகும் புருஷனுக்கு தன் கையால சோத்தை எடுத்துட்டு வந்து கொடுத்தா கொறைஞ்சா போயிடுவா? இல்லே கொடுக்கனுங்கிற நெனப்பே இல்லையா? எப்பபாரு ஓனர்வீடு ஓனர்வீடுன்னு சதா ஓடிகிட்டு கிடந்தா எப்படி? என்று மனது அழற்றியது. வர வர அவளுக்கு என் மேல பாசமே இல்லை. வந்து பேசிக்கிறேன்.

திடீரென்று நியாபகம் வந்தவனாக தூரத்தில் போய்கொண்டிருந்த சித்தியை பெருக்குரலெடுத்து அழைத்தான்.

“ஏய் ...என்னடா சொமையை தூக்கிகிட்டு போறேனே நினவுல்லையா? போகவுட்டு ஏன் கூப்புடுரே?... இருக்குபோதே சொல்லவேண்டியதுதானே... என்ன சங்கதி சொல்லு?”

“கோவிக்காத சித்தி... இதை எம் பொண்டாட்டிகிட்ட கொடுத்துடு...”
ஈரத்துணியில் சுருட்டி இருந்த எதையோ எடுத்து நீட்டினான். சித்தியின் பார்வை கேள்வியோடு நோக்கவே,

“சிங்கி இறால்... சித்தி நடுகடலுல கிடச்சுது. எம்மவனுக்கு சமைச்சிக்கொடுக்க சொல்லு...”

“ம்கும்... இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்லை... கொண்டா” தாவாங்கட்டையை தோள்பட்டையில் இடித்துக்கொண்டு முனுமுனுத்தப்படி கிளம்பினாள் அந்த சித்தி.

பொண்ணுக்கு சிங்கி ஏறான்னா ரொம்பபிடிக்கும்... ம்ம்.. என்ன பண்ணுறது.. அவளுக்குத்தான் இந்த பூமியில் வாழ கொடுத்துவைக்கலையே?

மகள்நினைப்பில் பசி உறைந்துப்போனது.. ஒரு பெருமூச்சுடன் திறந்த தூக்குவாளியை மூடி வைத்துவிட்டு, முந்தைய நாள் பயன்படுத்தியபோது சேதமடைந்த வலைகளை சரிசெய்து அதனுடன் படகிற்கு தேவையான எரிபொருள் மற்றும் மனைவி அனுப்பியிருந்த உடைகளையும் படகில் வைத்துவிட்டு, சாப்பிடுவதற்கு வந்து அமர்ந்தான்.

“என்னப்பா... பிரியாணியா? துன்னு... துன்னு...” நண்பன் பரமசிவத்தின் குரல் பின்னால் கேட்க,

“அட எவன்டா இவன் கூறு கெட்டவன் காலக்காத்தால எவனாவது பிரியாணி சாப்பிடுவானா? கஞ்சி சோறுதான் இருக்கு இந்தா சாப்பிடு...”
என்று தூக்குவாளி மூடியிலே கொஞ்சம் சாதத்தை அள்ளிவச்சி எலுமிச்சம் ஊருக்கா பாக்கெட்டையும் சேர்த்துக்கொடுத்தான் நண்பன் பரமசிவத்திடம்.

அவனும் மறுக்காமல் வாங்கிக்கொண்டான்.

கடந்த இருவதுவருஷமா தன்னோடு கடலுக்கு வந்து காத்து புயலுன்னுகூட பார்க்காம துணையா வரும் நண்பணாச்சே அவனை பட்டினி போட்டுட்டு சாப்பிட மனசு ஒப்புமா?

இரண்டு பேரும் பங்கிட்டு ஆளுக்கு கொஞ்சம் சாப்பிட்டார்கள். “

“வெள்ளனே கிளம்பிருக்கலாம். இந்நேரத்துக்கு கிளம்பினால் நடுசாமம் தாண்டிதான் வீடுவந்து சேரமுடியும் ராஜேந்திரா...”

“இருக்கட்டுமே ஒரு வாரம் இருந்து மீன்புடிச்சிட்டு வருவோம். சீக்கிரமா கரைக்கு வந்து என்னத்தை பண்ண போறோம்? உன் பொண்ணு கல்யாணத்துக்கு வாங்கின கடனை அடைக்க வேணாமா? தண்டல்காரன் உன்வீடு பூட்டி இருக்குன்னு என்னை வந்து கேட்குறான் இதெல்லாம் நல்லாவா இருக்கு?”

பதில் சொல்லமுடியாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தான் பரமசிவம்.
“வா போகலாம்...”
நண்பனின் பேச்சிக்கு மறுபேச்சி பேசாமல் உடை உணவுப்பொருள்கள் கொண்டுவந்த பையையும் வாட்டர் பாட்டிலையும் எடுத்துக்கொண்டு படகை நோக்கி நடந்தான் பரமசிவம். சற்று நேரத்திற்க்கெல்லாம் படகின் வேகம் அதிகரித்து நடுகடலை நோக்கி சென்றது. அன்று அம்மாவாசை என்பதால் அலையின் வேகம் அதிகமாக இருந்தது.

“என்னாச்சி ராஜேந்திர... முகத்துல கலகலப்பையே காணும்?”

“எம் மவ நெனப்பு வந்துடிச்சி பரமசிவம்...சுனாமியில அநியாயமா போய் சேர்ந்துட்டாளே” கண்களை துடைத்தான்.

" என்ன பண்றது நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்..."

"....................")

இரண்டு நாட்களுக்கு பிறகு கன்னியாகுமரி மீனவர் குப்பத்தில்...!

இலங்கைக்கு அருகே நடு கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்த மீனவரை கடலோர காவல் படையினர் மீட்டனர். என்று டிவியில் செய்தி வாசித்தவரை அதிர்ந்த முகத்துடன் கண்கொட்டாமல் பார்த்துகொண்டிருந்தான் வினோத்.

கன்னியாகுமரியை சேர்ந்த மீனவர்கள் நேற்று இரவு இலங்கை கடற்கரையில் மீன்பிடித்துகொண்டிருந்தபோது கடல் சீற்றம் காரணமாக ஒரு படகு கவிழ்ந்து அதிலிருந்த ராஜேந்திரன் மற்றும் பரமசிவம் இருவரும் கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். இதையடுத்து அங்கு ரோந்து பணியில் இருந்த கடலோர காவல் படையினர் இருவரையும் மீட்டு, எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்த குற்றத்திற்காக கைது பண்ணியிருக்கிறார்கள். அப்போது பரமசிவம் என்ற மீனவர் தப்பியோட முயற்சித்திருக்கிறார். அவரை பிடிப்பதற்காக துப்பாக்கி சூடு நடத்தியதில் குண்டு பாய்ந்து அவர் அதே இடத்தில் உயிர் இழந்து விட்டார். அவரின் பிணத்தை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்று இலங்கை காவற்படை மறுப்பு தெரிவித்திருக்கிறது.

திடீர் புயலில் சிக்கி தவித்த மற்றும் சில மீனவர்கள் தீவில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது, மேலும் சில மீனவர்கள் நடு கடலில் தத்தளித்து வருகின்றனர், அவர்களை மீட்கும் பணியில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக இடுபட்டுள்ளனர்.

“அம்மா....அம்மா... சீக்கிரம் வாயேன்” வினோத்தின் பதற்ற குரலைக்கேட்டு கொல்லைப்புறத்தில் பாத்திரம் துலக்கிட்டிருந்த வள்ளி இடுப்பில் சொறுகிய சேலையை அவிழ்த்துவிட்டப்படி வீட்டிற்குள் வந்தாள்.

‘என்னடா... ஏன் இந்த கத்துகத்தறே?”
பேச்சி வராமல் ஆட்காட்டி விரலை டிவிப்பக்கமாக நீட்டினான். நியூஸ் முடிந்து விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது. கோபம் கொப்பளிக்க

“எதுக்குடா... காதுகிழியரமாதிரி கத்திக்கூப்பிட்ட இந்த விளம்பரத்தை பார்க்கத்தானா?”

“இல்லம்மா... நியூஸ்ல அப்பாவையும் பரமசிவம் மாமாவை பத்தியும் சொன்னாங்க. பரமசிவம் மாமாவை துப்பாகியால சுட்டு கொன்னுட்டாங்களாம். அ...அப்பாவுக்கு ஒண்ணுமில்லைம்மா அவர் நல்லாத்தான் இருக்கிறாரு. .. நீ வரதுக்குள்ள அந்த நியூஸ் போயிடிச்சி...”

உடைந்த குரலில் சொன்னவனை அதிர்ச்சியோடு பார்த்தாள் வள்ளி.

“உங்க அப்பாவைப்பாத்தியா? என்னடா... என்னடா.. சொல்லுறே? அவரு கடலுகில்ல போயிருக்காரு...நீயுஸ்ல என்ன சொன்னாங்கா?”

படபடக்கும் மனதுடன் மகனின் தோள்களை பற்றிக்கேட்டாள்.

வினோத் பதில் சொல்லாமல் சேனலை மாற்றினான். அதில் அதே நியூஸ் ஒளிப்பரப்பாகிகொண்டிருந்தது. சற்று நேரம் இமைகொட்டாமல் பார்த்த வள்ளி ஓலமிட்டு அழத்தொடங்கினாள்.

“ஐயோ.. நான் தலப்பாடா அடிச்சிகிட்டேனே... காத்தும் புயலுமா இருக்கு இப்ப கடலுக்கு போகவேனான்னு சொன்னேனே... எம் பேச்சை கேட்டாதானே... “

“அக்கா... வள்ளியக்கா... இந்த செய்தியைப்பாருங்களேன்.” எதிர் வீட்டு சாந்தி கையில் பேப்பரோடு ஓடி வந்தாள். அவள் கையிலிருந்த பேப்பரை பிடிங்கி சத்தம்மாக படித்தான் வினோத்.

தமிழகத்திலிருந்து மூன்று நாட்டு படகுகளும் இரண்டு டீசல் பாடகுகளில் மீன்பிடிக்க சென்ற பனிரெண்டு மீனவர்களையும் படகுகளையும் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கிடையே இலங்கை கடற்படையினர் வெள்ளிக்கிழமை இரவு கைதுசெய்தனர்.

அத்துமீறி கச்சத்தீவு எல்லைக்குள் மீன் பிடித்துகொண்டிருந்த மீனவர்களை ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களையும் படகுகளையும் சிறைப்பிடித்து ‘காரைநகர்’ துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர். அவர்கள் பிடித்துவைத்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் பனிரெண்டு மீனவர்களில் ஒருவர் மட்டும் குண்டடிப்பட்டு இறந்திருக்கிறார். இறந்தவர் குமரி மாவட்ட மீனவர் பரமசிவம் என்பது தெரியவந்துள்ளது. மற்ற மீனவர்களை சனிக்கிழமை யாழ்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக அந்நாட்டு அதிகாரி கூறுகிறார். கைது செய்யப்பட்ட மீனவர்கள் கன்னியாக்குமரி மற்றும் தூத்துகுடியை சேர்ந்த மீனவர்கள் என கூறப்படுகிறது. காவல் துறையினரிடம் ஒப்படைத்தப்பின்னரே முழு விவரமும் தெரியவரும். மீனவர்களை சிறைபிடித்த சம்பவம் தமிழக மீனவ கிராம்மங்களில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவசங்கத்தினர் கோரிக்கை விடுவித்துள்ளனர்.

வினோத் பேப்பரை படித்துமுடித்துவிட்டு தாயை ஏறிட்டான். அழுகை குறைந்து கண்களை முந்தானை தலைப்பால் துடைத்துகொண்டிருந்தாள் வள்ளி.

“பரமசிவம் அண்ணனின் பொண்ணுக்கு இந்த விஷயம் தெரியுமா?”

“அவதான் குடும்பத்தோட திருப்பதிக்கு போயிருக்காளே! இனிமே சொன்னாதான்.”

“எலேய் வினோத்து... உங்க அம்மாவை கூட்டிட்டுப்போயி நம்ப சங்கத்தலைவரை பார்த்து பேசிட்டுவா... போ..”

என்று சாந்தி வினோத்தை பார்த்து சொல்ல,

“அவன் எதுக்கு சாந்தி... அவன் படிக்கிறப்புள்ளை, அவன் படிச்சிகிட்டு இருக்கட்டும் நான் போயி தலைவரை பார்த்துட்டு வரேன்...”

“யம்மா... நீ ஒன்னும் தனியே போவ வேணா நானும் உன்கூட வரேன். சட்டையை எடுத்து மாட்டிகிட்டு வெளியில் வந்தான் வினோத்.

“பாத்தியா சாந்திக்கா! பொறுப்பு இல்லேன்னு சொல்லுவியே உன் மவன் எப்படி பதறுறான் பாரு... ஜான் பிள்ளையானாலும் ஆண்பிள்ளையாச்சே” என்று சாந்தி சொல்ல திடமான மனதுடன் குடிசையை விட்டு வெளியில் வந்தாள் வள்ளி.

அம்மாவும் பிள்ளையும் சங்கத்தலைவரை சந்தித்து விவரத்தை சொன்னார்கள். நீங்கசொன்னாலும் சொல்லாட்டியும் நான் அப்படியே விட்டுடுவேனா? எனக்கு ராத்திரியே தெரியும். அந்நேரத்துக்கு உங்களை கூப்பிட்டு சொன்னா நல்ல இருக்காதுன்னுதான் சொல்லலை. கவலைப்படாதீங்க.. வெளியில வரதுக்கான எல்லா ஏற்பாட்டையும் செதுட்டேன் இரண்டு நாளுல வீட்டுக்கு வந்துடுவான்.

“ரொம்ப நன்றிங்கையா... சீக்கிரம் வெளியில வரதுக்கு ஏற்பாடு பண்ணுங்கையா...” மீண்டும் ஒருமுறை அவரிடம் ஞாபகப்படுத்திவிட்டு வீட்டிற்கு வந்தார்கள்.

பரமசிவம் வீட்டில் அழுகுரல் கேட்டது. பரமசிவத்துக்கு மனைவி இல்லை இறந்து பத்துவருஷமாகிறது. ஒரே ஒரு பொண்ணுதான். போனமாசந்தான் கட்டிகொடுத்தாரு. பொண்ணு திருப்பதியில இருந்து வந்துகிட்டு இருப்பதா தகவல். ஒண்ணுவிட்ட சொந்தமும் அக்கம் பக்கத்துக்கு வீட்டுகாரங்களும்தான் ஒப்பாரி வச்சி அழுதுகிட்டு இருந்தாங்க. ஒரு எட்டு போய் பார்த்துட்டு வருவோமா? என்ற எண்ணியவள் மகனின் பயந்த முகத்தை பார்த்துவிட்டு அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டாள். பொணம் வந்தபிறகு போய் பார்த்துக்குவோம். மகனின் கையைப் பற்றி தர தரவென்று இழுத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்தாள்.
அன்று இரவு இருவருமே சாப்பிடவில்லை, தூங்கவுமில்லை. மறுநாள் காலையில் எழுந்தவுடன் பரமசிவம் வீட்டுக்கு ஓடிப்போய் பார்த்தாள். பொணம் வர இரண்டுநாள் ஆகுன்னு சொன்னாங்க. அவர் பொண்ணும் இன்னும் வரலை. சரி இங்க இருந்தா அதே ஞாபகமா இருக்குன்னு ஓனர் வீட்டுக்கு வேலைக்கு கிளம்பினாள்.

“வினோத்து... நான் வேலைக்கு போயிட்டு வரேன். முக்கியமா உங்க அப்பாவுக்காக த்தான் ஓனர் வீடுவரை போறேன். போயிட்டு சீக்கிரமே வந்துடுறேன். பானையில கஞ்சி இருக்கு தொவையல் அரைச்சி வச்சிருக்கேன் போட்டு சாப்பிடு. தூங்கிக்கொண்டிருந்தவன் முகசுளிப்போடு எழுந்தான். மகனின் முகச்சுளிப்பை பார்த்துவிட்டு, பரமசிவம் மாமா செத்துட்டார் இல்லே... பதினாறு நாளுக்கு கவிச்சி கிடையாது....”

மீண்டும் இழுத்துப்போத்தி படுத்திருந்தவனை உலுக்கி மறக்காம சாப்பிட்டுடு. சொல்லிவிட்டு கதவை ஒருக்களித்து சாத்திவிட்டு கிளம்பினாள் வள்ளி. அம்மாவின் காலடி சத்தம் தேய்ந்து மறையும்வரை அமைதியாக இருந்தவன், பட்டென்று படுக்கையை விட்டு எழுந்தான். பல்லை விலக்கி முகத்தை கழுவிவிட்டு வந்து வீட்டை பூட்டி சாவியை எப்போதும் வைக்கும் கரண்டு பாக்ஸ் மேல் வைத்துவிட்டு தன்னுடைய சைக்கிளை எடுத்து வேகவேகமாக மித்தித்தான். சற்று நேரத்தில் தன்னுடைய டீச்சரின் வீட்டருகில் சென்று சைக்கிளை ஸ்டாண்டு போட்டு நிறுத்திவிட்டு காலின்பெல்லை அழுத்தினான்.

“என்னப்பா... வினோத்து எக்ஸாம் வரப்போவுது இந்த நேரம்பார்த்து ஒரு வாரம் லீவு போட்டுட்டே?”

“மீ..மீஸ்... இருந்த ஒரு யூனிபாமும் கிழிந்துபோச்சி. அப்பா கடலுக்கு போயிட்டுவந்து இந்த முறை கண்டிப்பா எடுத்துதறேன்னு சொன்னாரு.. அதான் அப்பா வந்தவுடனே ஸ்கூலுக்கு வரலான்னு.. லீவு போட்டுட்டேன் மிஸ்.”

“ம்ம்... அதுக்காகவா லீவு போடுறது...?நான் எடுத்து தரேன்னாலும் உங்க அப்பா சம்மதிக்க மாட்டார். சரி...டைமை வேஸ்ட் பண்ணாமல் வீட்டுல உக்காந்துப்படி...”

"சரி " என்று தலையை ஆட்டியவன் தலையை சொரிந்தப்படி நின்றான்.

“என்ன... சொல்லுப்பா? ஏன் தயங்குறே”

“அது... வந்து... அப்பாவை இலங்கை போலீஸ் அரஸ் பண்ணீட்டாங்களாம். அவர் கூட போன பரமசிவம் மாமாவை சுட்டு கொன்னுட்டாங்க... இன்னக்கிதான் நியூஸ்ல பார்த்தேன் மிஸ்... எனக்கு ரொம்ப பயமா இருக்கு மிஸ்... நீங்கதான் எப்படியாவது சார்கிட்ட சொல்லி எங்க அப்பாவை வெளியில எடுக்க ஏற்பாடு பண்ணனும்...”

மிஸ்சோடா வீட்டுக்காரரு போலீசா இருக்காரு. அவருகிட்ட சொல்லி எப்படியாவது அப்பாவை வெளியில எடுத்துடலாம் என்ற எண்ணத்தோடுதான் மிஸ்சை தேடிவந்தான்.

வினோத்தின் வாடிய முகமும் கலங்கிய கண்களையும் கண்ட சுமதிமிஸ், வினோத்திடம் தன்னுடைய கணவரின் செல் நம்பரை எழுதிகொடுத்து ஸ்டேஷன்லதான் இருப்பார் நான் அனுப்புனன்னு சொல்லிட்டு போய் பாரு என்று அவனிடம் சொல்லி அனுப்பினாள்.
சைக்கிளை போலிஸ் ஸ்டேஷனை நோக்கி மிதித்தான். எப்படியாவது அவர் கையில காலுல விழுந்தாவது அப்பாவை வெளியில கொண்டுட்டு வர சொல்ல வேண்டும். என்ற எண்ணத்தில் சைக்கிளை மிதித்தவன் எதிரில் அம்மாவை பார்த்தவுடன் சைக்கிளின் வேகத்தை குறைத்தான்.

“என்னடா... இவ்வளவு வேகமா எங்க போயிட்டு இருக்கே?”
முகம் வெளிறிப்போனது வினோத்துக்கு. எங்கே போகிறேன் என்று சொன்னால் கண்டிப்பாக கொவப்படுவாள். சங்க தலைவர் வீட்டுக்கு போவவதற்கே வேணான்னு சொன்ன அம்மா, போலிஸ் ஸ்டேசனுக்கு போறதா சொன்ன ஏத்துக்குவாளா?

“என்னடா... கேக்குறே பதில் சொல்லாமல் மசமசன்னு நிக்குறே...?”

“என்... பிரண்டு வீட்டுக்கு போறேம்மா...”

“என்னது பிரண்டு வீட்டுக்கா? யாரு அந்த கஞ்சா கேசுல மாட்டினானே சேகரு அவன் ஊட்டுக்கா போறே?”

“அம்மா... அவன் என் கூட படிச்ச பையன்தான். ஆனா அவன் எனக்கு பிரண்டு கிடையாது. அவனை ஸ்கூலை விட்டே நிறுத்திட்டாங்க.. அவனை பார்த்தாக்கூட நான் பேசுறதில்லை...”

“அப்படின்னா... இந்த ஏரியாவுல உனக்கு யாரு பிரண்டு? ஆமா கஞ்சி சாப்பிட்டியா?”

இல்லை என்பதுபோல தலைகுனிந்தான்.

“சோறுக்கூட சாப்பிடாம ஊரை சுத்திகிட்டு இருக்கிறே அப்படிதானே...?”

“அம்மா... நீ நெனைக்கிற மாதிரி நான் இல்லம்மா... அப்பா இந்த மாதிரி இருக்கும் போது எனக்கு எப்படிம்மா ஜாலியா ஊரை சுத்த மனசுவரும்?”

சொன்ன மறுநிமிடமே கண்களில் இருந்து இரண்டு கண்ணீர் துளிகள் உருண்டு தரையை நனைத்தன. இதை கவனித்த வள்ளியின் மனம் இளகியது.

“வினோத்து சாப்டாம கொள்ளாம எங்கே போறேன்னுதான் கேட்டேன். ஏன் உன்ன நான் கேட்ககூடாதா? நான் உன் அம்மாதானே? உன் அப்பாதான் என் பேச்சி கேட்காமா போய் மாட்டிகிட்டாரு, நீயும் எம் பேச்சை கேட்கலன்னா நான் எங்க போவேன் சொல்லு...?” சொல்லிவிட்டு வலது கையால் இரண்டு கண்களையும் துடைத்தாள்.

“அம்மா... நான் எங்கப்போறேன்னு சொல்லிடுறேன். அதுக்காக நீ அழக்கூடாது. நீ அழுதா எனக்கு பிடிக்காது...”
என்று சைக்கிளை ஸ்டாண்டு போட்டு நிறுத்திவிட்டு, டீச்சர் வீட்டுக்கு போனதையும் அவங்க, அவங்க ஹஸ்பண்ட் நம்பர் கொடுத்து போய் பார்க்க சொன்னதையும் தன் தாயிடம் கூறினான்.

“என் தங்கம் உன்னை நான்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன். நீ ரொம்ப பெரிய அறிவாளின்னு எனக்கு தெரியாம போயிடிச்சி...வா வீட்டுக்கு போகலாம்.”

“இல்லம்மா... இவ்வளவு தூரம் வந்துட்டோம் போய்தான் அவரை பார்த்துட்டு வருவோமே” அழுகையை அடக்கியபடி கேட்ட மகனை தோளோடு சாய்த்துக்கொண்டாள்.

இருவரும் போலீஸ் ஸ்டேசனுக்குள் நுழைந்தபோது அவர்கள் சற்றும்
எதிர்ப்பார்க்காத ஒரு விஷயம் அங்கு நடந்தது.
 
Last edited:
படிக்கிற பையனுக்கு யூனிஃபார்ம் இல்லைன்னு ஸ்கூல் போகாததை நினைத்தால் மனசுக்கு ரொம்பவே
கஷ்டமா இருக்குப்பா
அதைவிட வயிற்றுப்பாட்டுக்கு மீன்
பிடிக்கும் மீனவர்களை இலங்கை அரசு பிடிக்கறதைப் பார்த்தால் அழுகையா வருதுப்பா
அபிநயா ராஜேந்திரனின் மகளா?
போலீஸ் ஸ்டேஷனில் வள்ளியும்
வினோத்தும் அபியை சந்திப்பார்களோ?
 
Last edited:
Top