Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதான் எந்தன் அந்தாதி - அத்தியாயம்-8

Advertisement

daisemaran

Well-known member
Member
அத்தியாயம்-8
வேழவேந்தனின் நினைவிலேயே தூங்கச்சென்றதாலோ என்னவோ இரவெல்லாம் அவனோடு கனவில் உலாவந்தாள் அபிநயா. அலார சத்தத்தின் எழுப்புதல் மட்டும் இல்லை என்றால் அவனோடான டூயட் சற்று நீண்டிருக்கும். முதல் முறையாக அவன் தன் வீட்டிற்கு வரப்போவதை நினைத்த மறுநிமிடம் படுக்கையிலிருந்து சுறு சுறுப்பாக எழுந்தவள் ஜன்னல் திரைசீலையை விலக்கி வெளிப்புறத்தில் பார்வையை படரவிட்டாள்.
அபிநயாவின் உடல் அந்த அதிகாலையின் குளிர்ந்த காற்றில் லேசாக நடுங்க அதுவும் இன்பமாகவே இருந்தது. பால்கனியின் விளிம்பிற்கு சென்று பார்வையைக் கீழே செலுத்த நேர்த்தியான தோட்டம். உனக்கு முன்பே குளித்துவிட்டோம் என்று சொல்வது போல நேற்று இரவு தூரிய மழையில் மலர்களிலும் இலைகளிலும் நீர்த்துளிகள். இவ்வளவு தான் என்றில்லாமல் வர்ணஜாலமாய் பூத்திருந்தன - டேலியாக்களும், ரோஜாக்களும், சம்பங்கியும், சாமந்தியும்.. இன்னும் இன்னும் அவைகளின் பெயர் நினைவில் வரவில்லை அவளுக்கு. அதிலும் அந்த பன்னீர் ரோஜாச்செடியில் இலைகளே தெரியாமல் பிங்க் வண்ண ரோஜாக்கள் மூடியிருந்தன. அதிலிருந்து பிரிக்க முடியாத விழிகளை காற்றில் வந்த ஜாதிமல்லியின் மணம் தன்புறம் இழுக்க, ஜாதியும், முல்லையும், மல்லியும், சந்தனமல்லியும் தங்கள் பந்தல்களில் அடர்த்தியாய் படர்ந்து மூங்கில்களை மறைத்திருந்தன. நேற்று இரவு சந்திரனின் முகம் பார்த்து மலர்ந்த அந்த வெண்மலர்கள் பல, அபிநயாவைப்போல இன்னும் சற்று நேரத்தில் வரப்போகும் தங்கள் காதலன் கதிரவன் [அபிநயாவுக்கோ வேழவேந்தன்] முகம் காண ஆவலாய் எதிர்நோக்கி இருந்ததன.

அடுத்த நாள் மாலை நான்கு மணி வாக்கில் வேழவேந்தன் தன் அம்மா அக்காவுடன் ஆட்டோவில் வந்திறங்கினான். அவர்களைப் பார்த்து விட்டு முகம் சுளித்தார்கள் அபிநயாவின் பெற்றோர்கள். போதாக்குறைக்கு ஊரிலிருந்து வந்திருந்த அத்தை வேறு கழுத்தை நொடித்து,

“என்னடி இது ஷேர் ஆட்டோல வந்து இறங்குறாங்க, இதுதான் நீ மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்கிற லட்சணமா?” என்று கேட்க உயிர் போவது போல் இருந்தது அபிநயாவுக்கு. காரும் பங்களாவுந்தான் இவர்களுடைய கண்களுக்கு தெரியுதே தவிர மனிதர்களின் தரம் தெரியாத ஜென்மங்கள்.

அப்பா அவர்களை சம்பிரதாயத்துக்கு கூட வரவேற்கவில்லை.

“உங்க வீட்டில ஆம்பளைங்க யாரும் இல்லையா? எல்லாம் பொம்பளைங்களா வந்து இருக்கீங்க?” என்று எடுத்த எடுப்பிலேயே தன் கோபத்தை காட்டினார் அபிநயாவின் அப்பா சுந்தரம்.

“எங்க வேந்தனோட அப்பாவுக்கு இந்த காதல் காதல் கத்தரிக்காய் எல்லாம் பிடிக்காதுங்க. எடுத்த எடுப்பிலேயே மாட்டேன்னு சொல்லிடுவார். ஆனா நான் அப்படியில்லங்க...பையன் ஆசப்பட்டுட்டான் அவனுக்கு புடிச்ச வாழ்க்கையை அமைச்சிக்குடுக்கனுமில்லையா அதான் முதல்ல நாம போய் பொண்ணைப் பார்த்துட்டு வரலாம்னு என் பொண்ண கூட்டிட்டு வந்தேன். இனிமேதான் அவர்கிட்ட விஷயத்தை சொல்லணும். நல்லவேளை மனுஷன் ஊர்ல இல்ல வெளியூருக்கு போயிருக்காரு வர்றதுக்கு ரெண்டு நாளாகும்.” என்று வேழவேந்தனின் அம்மாவை நன்றியோடு நோக்கினாள் அபிநயா.

“இத பாருங்க...நாங்க ஆச்சாரமான குடும்பம்...அப்படித்தான் என் பொண்ணையும் வளர்த்திருக்க. எதையோ தாய்ப்பாலில் கலந்த மாதிரி அவ கொஞ்சம் தரங்கெட்டு போயிட்டா...இல்லன்னா இந்த மாதிரி வெளியாளுங்களை எங்க வீட்டுக்குள்ள விட்டுட்டு பேச மாட்டோம்.” அப்பா பேசிக்கொண்டே போக வேழவேந்தனின் முகம் கருப்பாதை கவனித்தாள்.

“அப்ப்பா....ஏம்பா இப்படியெல்லாம் பேசுறீங்க?” என்று கத்தவேண்டும்போல இருந்தது அபிக்கு.

“ஏதோ எங்க வீட்டு பொண்ணு ஆசைப் பட்டுட்டா அப்படிங்கிறதுக்காக உங்க பையனை நாங்க மாப்பிள்ளையாய் எடுத்துக்கலாம். ஆனா அதுக்கு முன்னாடி ஒரு கண்டிஷன். உங்க பையன் எங்க வீட்டோடை மாப்பிள்ளையா வரணும்...” அவர் அடுத்த வார்த்தையை தொடரும்முன் வேழவேந்தன் எழுந்தேவிட்டான். அவனை சமாதானப்படுத்தி அமரவைத்தாள் அவனுடைய அம்மா.

“இருங்க செத்த உட்காருங்க...அப்படி முடியாதபட்சத்தில் எங்க பொண்ணை அனுப்புறேன். ஆனா எங்க சொத்துல நயாபைசா கூட கொடுக்க மாட்டோம் அதற்கு சம்மதன்னா மேற்கொண்டு பேசலாம்.”

“அப்......பா “ என்ற உள்ளே இருந்து குரல் கொடுத்தாள் அபிநயா

“நீ செத்த சும்மா இரு இதெல்லாம் நீ பண்ண வேலை தான் இல்லன்னா ரோட்டில் போற கண்ட கண்ட நாயெல்லாம் என் வீட்டுக்குள்ள வந்து உட்கார விட்டிருப்பேனா?”
அடுத்தநிமிடம் பொறுமை இழந்தவனாய் இருக்கையிலிருந்து பட்டென்று எழுந்தான்.

“யாரைப் பார்த்து நாயின்னு சொல்லுறீங்க?” அவனுடைய குரலில் அனல்விசியது.

“ஓ...தொரைக்கு கோபம் பொத்துகிட்டு வருதோ?” அசிங்கமான அபிநயங்காட்டியபடி பேசினார்.

“வயசுல மூத்தவருன்னு பார்கிறேன். இல்லன்னா நடக்கிறதே வேற...” அவன் தன்னுடைய ஆட்காட்டி விரலை உயர்த்திக்காட்டி எச்சரித்தான்.

“யப்பா...யப்பா...செத்த சும்மா இருப்பா. அவர்தான் பேசுராருன்னா நீயும் கூட கூட பேசுறீயே?”

“அலோ...முதல்ல எழுந்து வெளியில போங்க...இங்க வந்து தெருநாய் கொரைப்பதுபோல கத்திகிட்டு இருக்காதீங்க..” அபிநயாவின் அப்பாகுரல் ஓங்கி ஒலித்தது.

“வார்த்தையை அளந்து பேசுங்க...இனி ஒரு வார்த்தை பேசினா...” என்று பேசிக்கொண்டே அவர் சட்டையை கொத்தாகப் பற்றியவன்,

“நானும் பொறுத்து பொறுத்து பார்க்கிறேன்...வார்த்தையோ ரொம்ப ஓவரா போயிகிட்டு இருக்கு..” என கோபத்தோடு உரக்கக்குரல் எழுப்பியவனை தடுத்து தன் பக்கம் இழுத்தாள் வேழவேந்தனின் அக்கா குழலி.

“தம்பி...வேணாம் போகலாம் வா”
“ஐயோ...ஒரு பிச்சைக்கார பைய என்னை அடிக்க வரான் பாரு...செக்கியூட்டியைகூபிடு...என்று தன்மனைவியை ஏவினார். சற்று நேரத்தில் செக்கியூரிட்டியும் வாட்ச்மேனும் ஓடிவந்தார்கள். கூடவே டிரைவரும் வந்தார். ஏதோ பெரிய கைகலப்பு நடந்தது போல் அப்பாவை தவிர்த்துவிட்டு வேழவேந்தன் பிடித்து இழுத்தார்கள். இந்த அவமானம் கஷ்டம் இதெல்லாம் அபிநயாவால் பாக்க முடியவில்லை.

“வேழவேந்தன்...ப்ளீஸ் சூழ்நிலை சரியில்லை நீங்க போங்க நான் கால் பண்றேன்.” என்று கையெடுத்து வணங்கினாள் அபிநயா.

“போதும் அபிநயா...கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்தியதுக்கு ரொம்ப நன்றி. மனுஷங்களை இப்பதான் நான் புரிஞ்சுகிட்டேன், உங்களுக்கு காதல் எல்லாம் ஒரு பொழுது போக்கு மாதிரி பணக்காரர்கள் இல்லையா நீங்க பத்தும் செய்வீங்க...” என்று கடுமையான வார்த்தைகளை கொட்டி விட்டு அம்மாவையும் அக்காவையும் அழைத்துக்கொண்டு வெளியில் சென்றான்.

என்ன பண்ணுவது என்று புரியாமல் அவள் கண்களில் இருந்து கண்ணீர் பொல பொல என்று கொட்டியது அப்பாவும் அம்மாவும் பிளான் பண்ணி அவனை வரவைத்து அவமானப்படுத்திவிட்டதாக அவள் மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு. அதுதான் உண்மையும் கூட, ஆயிரம் தான் இருந்தாலும் அவன் ஒரு ஆம்பள இப்படியெல்லாம் பேசினா அவனுக்கு கோபம் வராம இருக்குமா?

இதுக்கு அப்புறம் அவனை எப்படி ஃபேஸ் பண்ண போறேன்னு தெரியலையே? நேற்று நான்தானே அவனுக்கு கால் பண்ணி சொன்னேன். அப்பவும் அம்மாவும் நம்ம கல்யாணத்துக்கு சம்பாதிக்கிற மாதிரி பேசுறாங்கள். நீங்க உடனே வந்தீங்கன்னா சூட்டோட சூடா கல்யாணத்தை பத்தி பேசிடலாம். என்று சொன்னவுடனே அவன் எந்தவித தயக்கமுமின்றி கண்டிப்பா வரேன். இதைவிட எனக்கு வேற என்ன பெரிய வேலை இருக்க முடியும்.? என்று எவ்வளவு மகிழ்ச்சியோடு சொன்னான். ஆனா இந்த வீட்டிலிருந்து போகும்போது முகத்தில் எவ்வளவு பெரிய வருத்தத்தோடு போனான். கடவுளே திருப்பவும் அவன்கிட்ட நான் எப்படி போய் பேசுவேன்? வேழவேந்தனோடு எனக்கு கல்யாணம் நடக்குமா? இல்லை இத்தோடா நாங்க பிரிஞ்சிடுவோமா? கடவுளே ஒண்ணுமே புரியலையே என்று நினைத்து நினைத்து குமுறி குமுறி அழுதாள்.

வேழவேந்தனின் குடும்பம் கிளம்பிய பிறகு தன்னுடைய மொத்த கோபத்தையும் பெற்றோர் மேல் திருப்பினாள் அபிநயா.

"இப்போ உங்களுக்கு சந்தோஷம்தானே கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்திட்டீங்க இத முன்னாடியே சொல்லி இருக்கலாம். இந்தப் பையனை எங்களுக்கு பிடிக்கல நீ அவனை கல்யாணம் பண்ணிக்க கூடாது. மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன நடக்கும்னு எங்களுக்கே தெரியாது அப்படின்னு முன்னாடியே சொல்லி இருந்தா... அவங்கள நான் இங்க வர வச்சிருக்கவே மாட்டேனே..."

"ஆமா எங்களுக்கு அவனையும் அவன் குடும்பத்தையும் சுத்தமா பிடிக்கல உங்கிட்ட சொன்னா புரிஞ்சுக்கிற நிலமையில நீயும் இல்ல... அதனாலதான் அவனையும் அவன் குடும்பத்தையும் கூப்பிட்டு வச்சு நல்லா உரைக்கிற மாதிரி பேசி அனுப்பினோம். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு இனிமே அந்த குடும்பம் இந்த பக்கம் வராது. நீயும் அந்த பையனை பற்றி நினைக்கவும் கூடாது பேசவும் கூடாது. நாங்க யார கைகாட்றோமோ அவனைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும் புரியுதா...?"

என்று ஆவேசத்தோடு பேசிய அம்மாவை பார்த்தவளுக்கு கோபத்துக்கு பதிலாக அழுகைதான் வந்தது. அப்பா தான் இப்படி எல்லாம் பண்றாருன்னா அம்மா நீயும் அவர் கூட சேர்ந்துக்கிட்டு இப்படி பேசுறியே என்று சொல்வது போல் இருந்தது அவளின் அந்த பார்வை.

"ஏய்... அவகிட்ட என்னடி பேச்சு போயி ஆக வேண்டிய காரியத்தை பாரு, நாளைக்கு காலையில திருச்சிக்கு கிளம்புறோம். திரும்பி வர ஒரு வாரம் ஆகும் அந்த விஷயத்தை அவ கிட்ட சொல்லி வை அப்புறம் லீவு போட முடியாது காலேஜ்ல எக்ஸாம் இருக்கு டெஸ்ட் இருக்கு அப்படி இப்படின்னு எதையாவது சொல்லி போகும்போது தேவையில்லாத டென்ஷனை உண்டாக்கிட போறா புரியுதா...?"
-இது அப்பா.

"இப்ப எதுக்கு திருச்சிக்கு போகணும் போக வேண்டிய அவசியம் என்ன...? என்று படபடத்தவளை அதற்கு மேல் பேசவிடாமல் தடுக்கும் நோக்கத்தோடு கையை பிடித்து இழுத்தாள் அம்மா.

"கையை விடுமா எதுக்கு என்ன பேச கூடாதுன்னு சொல்ற... இவ்வளவு தூரம் வந்ததுக்கு அப்புறம் நான் பேசாம இருக்கணுங்கிற அவசியம் இல்ல. என்ன விஷயமா இருந்தாலும் என்கிட்ட நேரடியா சொல்லுங்க திருச்சி பக்கமே போக கூடாதுன்னு சொன்னவரு இப்ப எதுக்கு திருச்சிக்கு போறதுக்கு ஒத்தக்கால்ல நிக்கிறாருன்னு எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும்..."

"அண்ணா பாத்தியாண்ணா அவ என்ன பேச்சு பேசறான்னு இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தும் ஒன்னும் பிரயோசனம் இல்லையே? உன்னை எப்படியெல்லாம் கேள்வி கேட்கிற பாரு... நம்ம குடும்பத்துக்கு பொண்ணா இருந்தா இப்படி பேசுவாளா நான் அப்பவே சொன்னேன் இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராதுன்னு நீ காதுல வாங்கினாத்தானே...?"

சமையலறையிலிருந்து வெளிப்பட்ட அத்தையின் குரல் கணீர் கணீர் என்று கேட்டது.

“நீ பேசாம இரு நிம்மி எப்ப எதைப் பேசுறதுன்னு உனக்கு தெரியமாட்டுது. இருக்கிற பிரச்சினை பத்தாதுன்னு நீ பழைய பிரச்சனை எல்லாம் கிளர்ர‌...?" என்று அத்தையை பேசவிடாமல் தடுத்தார்.

"மன்னி செத்த பேசாம இருங்க இப்ப எதுக்கு அதெல்லாம் பேசுறீங்க...?" அம்மா பங்குக்கு அவளும் அத்தையை அடக்க,

"அப்போ...நான் பேச கூடாதுன்னு சொல்றீங்க அப்புறம் எதுக்கு என்னை கூப்பிட்டீங்க உங்க ஜோலியை நீங்க பாத்துக்கோங்க நான் கிளம்புறேன்."

அத்தை நிம்மி அறைக்குள் நுழைந்து துணிமணிகளை எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்ப ஆயத்தமானாள். என்ன நடக்குது இங்க ? அபிநயாவுக்கு எல்லாமே குழப்பமாக இருந்தது. ஒன்று மட்டும் நிச்சயம் ஏதோ ஒரு ரகசியம் இருக்கு அது எனக்கு தெரிய கூடாது என்று நினைக்கிறாங்க. அது கண்டிப்பா என்னைப் பத்தின ரகசியம் தான் அதுல எந்தவித சந்தேகமும் இல்லை. என்ற குழப்பமான மன மன நிலையோடு நின்றிருந்தாள்.

"அம்மா ப்ளீஸ்மா அத்தை ஏதோ சொல்றாங்க என்னன்னு எனக்கு புரியல எதுவா இருந்தாலும் என்கிட்ட மறைக்காம சொல்லுங்கம்மா...?"

"ஒண்ணுமே இல்ல அபிநயா...உங்க அத்தை ஏதோ கோபத்துல உளறினாங்க, அதை போய் நீ நம்பிக்கிட்டு போ நாளைக்கு காலையில திருச்சிக்கு போகணும். கோயிலுக்கு தான் போய் தூங்கு..."

அபிநயாவின் முகம் வாடிப்போனது. அப்பாவோ இதற்கும் தனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போல் எழுந்து தன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். அம்மாவோ உண்மையை சொல்வது போல் தெரியவில்லை. கடைசியாக இதை அத்தையிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.

ஒரு சிறு தலைப்போடு அம்மாவை பற்றியிருந்த பிடியை தளர்த்தி கொண்டாள்.

"அம்மா... எனக்கு அம்மான்னா ரொம்ப பிடிக்கும் என் கூட ரொம்ப அன்பா இருப்பே... ஆனா இப்ப அப்படி இல்லை. நீயும் அப்பா மாதிரி மாறிட்டே என் கண்ணுக்கு வில்லியாத்தான் தெரியிற பழைய மாதிரியான ஒரு பாசமும் அன்பும் உன்கிட்ட இல்லை. என்னுடைய அம்மா அந்தப் பாசமான அம்மா என் மேல உயிரையே வைத்திருக்கிற அம்மா நீயில்ல. உன்னை ஒரு நல்ல தோழியாத்தான் நான் நெனச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா அதெல்லாம் இப்ப தலைகீழா மாறி போயிடுச்சு..."
அதற்கு மேல் பேச முடியாமல் குரல் உடைந்து அழத்தொடங்கினாள் அபிநயா.
“நா...நாங்க என்ன செய்தாலும் எல்லாமே உன் நன்மைக்குதான் செய்வோம் அபி..வேற எதுவும் எங்கிட்ட கேட்காதே...” என்றவளின் கண்களில் குபுக்கென்று கண்ணீர் எட்டிப்பார்த்தது.

இதற்கு பிறகும் தாயை கஷ்டப்படுத்த மனதின்றி அந்த இடத்திலிருந்து நகர்ந்தாள் அபிநயா.
அடுத்தநாள் வெளியூருக்கு போகணும், அதாவது திருச்சிக்கு போய் ஒரு பத்து நாள் இருந்துட்டு வரலாம்னு அப்பாவும் அம்மாவும் கூப்பிட, வரமுடியாது என்று மறுத்தும் பிரயோஜனம் இல்லாமல் வலுகட்டாயம்மாக இழுத்துச்சென்றார்கள். வேழவேந்தனுக்கு கால் பண்ணினாள் அவன் காலை கட் பண்ணினான். மீண்டும் முயற்சி செய்தாள். அவன் எடுக்கவே இல்லை. சரி ஒரு இரண்டு நாட்கள் கோபம் தீர்ந்தப்பிறகு பேசிக் கொள்ளலாம் என்று அப்பா அம்மாவுடன் கிளம்பினாள்.

அதுதான் அவனை அவள் சந்தித்த கடைசி நிமிடங்கள். ஊருக்கு சென்று திரும்பி வந்தபோது இவளை தனியாக எங்குமே அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருந்தார்கள். காலேஜ் எக்ஸாம் முடிந்து விட்டதால் எந்த சாக்குப்போக்கும் சொல்ல முடியாமல் வீட்டிலேயே கிடந்தாள்.
ஒரே ஒருமுறை மேகலை தன் கணவருடன் வந்து இவளை பார்த்து விட்டு சென்றாள். அப்போது கூட அப்பா அம்மா கூடவே இருந்தார்கள் பர்சனலாக எதுவுமே பேசமுடியவில்லை போன்ல மெசேஜ் போட்டாள். வேழவேந்தனை விரும்புவது அவளுக்கு தெரியும் என்பதால், “கொஞ்சம் வெயிட் பண்ணு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். ஓரிரு ஒரு மாசம் தள்ளிப்போடலாம் அதுக்கப்புறம் நானே வேழவேந்தன் கிட்ட பேசி உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்.” என்று பிராமிஸ் பண்ணினாள் மேகலா.

ஆனால் இவள் ஊரிலிருந்து திரும்பி வந்தும்கூட வேழவேந்தனை சந்திக்க முடியவில்லை. அவன் வெளியூருக்கு சென்று விட்டதாக கூறினார்கள். கடை மூடியிருந்தது சொந்த ஊருக்கு போய் பார்க்கலாம் என்றால் அங்கேயும் அவர்கள் இல்லை என்றார்கள் ஏதோ போலீஸ் கேஸ் என்று எதை எதையோ சொன்னார்கள். என்ன நடந்துச்சுன்னு யாரிடமும் கேட்க முடியவில்லை. ஆனா எல்லாத்துக்கும் விடை கிடைக்கிற மாதிரி இரண்டு நாட்களுக்கு பிறகு பேப்பரில் கொட்டை எழுத்துல அவனுடைய போட்டோவும் அவனுடைய அப்பாவின் போட்டோவும் முதல் பக்கத்தில் வந்தது. சிலை கடத்தல் வழக்கில் கைது என்று பெரிய எழுத்தில் போட்டிருந்தார்கள். அதிர்ச்சியில் உறைந்துப் போனாள். அதையே ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு போயும் போயும் ஜெயிலுக்கு போன குடும்பத்துல போய் மாட்டிக்க இருந்தியே? நல்ல வேளை உன்னுடைய நல்ல நேரம் மாட்டிக்காமா தப்பிச்சிட்டே. அந்த பையனை அடியோடு மறந்துடு. என்று அப்பா மீண்டும் முருங்கை மரத்தில் ஏறினார்.

என்ன நடந்தது என்று கேட்டுத் தெரிந்து கொள்ள முடியவில்லை ஆனால் கண்டிப்பாக வேழவேந்தனுக்கும் இந்த விஷயத்துக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்பது மட்டும் அவளுக்கு நன்றாக தெரியும். ஜெயிலில் இருந்த அவன் அப்பாவையும் ஜாமீனில் எடுக்க போவது பற்றிய தகவல் கிடைக்கவே அவனை சந்திக்கலாம் என்று முயற்சி பண்ணினாள்.

ஆனால் சந்திக்க முடியவில்லை ஒரு வாரங்கள் கடந்தது மேகலாவின் கணவர் மூலமாக விசாரித்ததில் அவர்கள் குடும்பத்தோடு வேற ஊருக்கு போய் விட்டதாக கூறினார். எங்கிருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது என்றார்கள்

பிரச்சினையெல்லாம் சால்வான பிறகு மீண்டும் வருவான். கொஞ்ச நாள் பொறுத்து மீண்டும் போய் அவனுடைய கடைக்கு போனால் பார்க்கலாம் என்ற முடிவோடு அறைக்குள்ளேயே முடங்கிக்கிடந்தாள் அபிநயா.

அவனை நினைத்து அழுது அழுது கண்களின் ரப்பை தடித்திருந்தது. அழுகை பெண்களின் கடைசி ஆயுதம் என்று எதிலோ படித்தது நியாபகம் வரவே, சே...பெண்களின் பலத்தை பற்றி எழுதாமல் பலவினத்தை பற்றி எழுதிய அந்த எழுத்துக்களை சபித்தப்படி கண்விழித்தாள். இனி அழக்கூடாது...அழுவதால் எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை. என்ற முடிவோடு எழுந்தமர்ந்தாள். அதன் பிறகு அவள் வாழ்வில் அனைத்துமே தலைகீழாக மாறிப்போனது என்றே சொல்லலாம். இத்தனை வருடம் கடந்தும்கூட தேடுதல் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது.

பழைய நினைவுகளிலிருந்து விடுப்பட்டவள், கடற்கரையில் சற்று தூரம் நடந்து அங்கிருந்த மணல் திட்டில் அமர்ந்தாள்.

அபிநயாவின் பார்வை ஆழ்கடலில் நிலைத்திருந்தது.
அவனுக்கான எட்டு வருட காத்திருப்பில் கரைந்த நாட்களை நினைத்து நினைத்து தீரா துயர் கொண்டவள் இறுதி முயற்சியாக ஒரே ஒருமுறையேனும் அவனை சந்தித்துவிட வேண்டும் என்ற தீர்மானத்தோடு வந்திருந்தாள்.
பெற்றோர்களும் இதற்கு தடைசொல்லவில்லை. இவ்வளவு நாள் திருமணமே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இருந்த அவள் திருமண பந்தத்திற்கு சம்மதித்திருக்கிறாள். அதுவும் ஒரு கண்டிஷனோடு.

கடைசி முயற்சியாக அவனைத் தேடி கண்டுபிடிக்க முயல்கிறேன். அது நடக்காமல் போகும் தருணத்தில் நீங்கள் யாரை சொல்கிறீர்களோ அவரையே திருமணம் செய்து கொள்கிறேன் என்று தன் முடிவை சொல்லியிருந்தாள்.

அதிலிருந்து அவள் எங்கே மனம் மாறி விடுவாளோ என்ற பயத்தில் அவளிடமே அந்த விஷயத்தை விட்டுவிட்டார்கள்.

“நீ தேடு உனக்கு பிடித்த வாழ்க்கையை நீ அமைத்துக் கொள். ஒருவேளை அது நடக்காமல் போகும் பட்சத்தில் நாங்கள் சொல்வதை கேட்க வேண்டும்.” என்று இருவரும் மண்டியிடாத குறையாக கண்ணீரோடு அவளிடம் கேட்டுக் கொண்டதால் வேறு வழி தெரியாமல் கடைசி முயற்சியாக நான் அவனை தேடுகிறேன். கிடைத்தால் திருமணம் செய்து கொள்கிறேன். ஏன்னா தேடாமலேயே இறுதி முடிவை எடுக்க முடியாது. அவனை மிஸ் பண்ணிட கூடாது என்று என் மனசுக்குள்ள ஏதோ ஒரு பட்சி சொல்லிகிட்டே இருக்கு.

ஒருவேளை அவருக்கு கல்யாணம் ஆகியிருந்தால் கண்டிப்பா நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். புரியலியா? என்ன மாதிரியே அவரும் தனிக்கட்டையா வாழ்ந்துட்டு இருந்தார்னா எனக்கு வேற வழி தெரியலை.
அவரைத் தவிர வேறு யாருமே என் மனசுல துளிகூட இல்லை. என்று கண்ணீரோடு சொன்ன மகளை ஆறுதல் படுத்தினாள் தாய்.

உன் மனசு எனக்கு புரியுது அபிநயா. நீ ஆசைப்பட்டவன் கூடவே உன் வாழ்க்கை அமைஞ்சா அதுல எங்களுக்கு சந்தோஷம்தான். ஏதோ அப்ப இருந்த ஒரு முட்டாள்தனத்தில் நாங்க அப்படி நடந்துகிட்டோம். அப்படி நடந்துகிட்டது எங்க தப்புதான்.

ஆனா இவ்வளவு தூரம் உன் மனசுல இருப்பான்னு நாங்க அப்ப யோசிக்கல . அது முழுக்க முழுக்க எங்களுடைய தப்புதான். ஜாதி மதம் எல்லாத்தையும் கடந்து காதல்தான் முக்கியமுன்னு நீ போராடியிருக்கிறே. அதுக்காக தற்கொலை பண்ணல அறையிலேயே அடைந்து கிடைக்கல அதற்கு மாறாக போராடி படிச்சு ஒரு மாவட்ட கலெக்டராக இருக்கே.

ஆனா உன்கிட்ட இருக்கிற அந்த திடமான நம்பிக்கையும் தைரியமும் எங்கள தலைவணங்க வைக்கிறது. அதனால உனக்கு விருப்பம் இல்லாத விஷயம் எதையுமே நாங்க செய்கிறதா இல்லை. அந்த முடிவுக்கு நங்க எப்பவோ வந்துட்டோம்.

இந்த நிமிஷத்திலிருந்து தேட தொடங்கு. அந்தப்பையன் எங்கிருந்தாலும் கூட்டிட்டு வா நாங்க முன்னாடி நின்னு உன் கல்யாணத்தை நடத்தி வைக்கிறோம்.

அதே மாதிரி இன்னொரு விஷயத்தையும் நீ புரிஞ்சுக்கணும். ஒருவேளை அந்த குடும்பம் நமக்கு தெரியாம வேற சுழ்நிலையில் இருக்கலாம். அல்லது அந்த பையன் வேற யாராவது ஒரு பெண்ணை திருமணம் செய்து இருக்கலாம். அப்படி இருந்தா நீ மனசு உடைஞ்சு போய் விடக்கூடாது. உன் மனசை மாத்திக்கிட்டு நாங்க சொல்ற பையனை நீ கல்யாணம் பண்ணிக்கனும். அந்த பையனும் ஒன்னும் இல்லாதவன் கிடையாது. நம்ம ஜாதிக்காரன்தான் உன்னுடைய படிப்புக்கு இணையாக படிச்சு அசிஸ்டென்ட் கமிஷனராக இருக்கிறார்.

உன்ன பத்தி நாங்க சொன்ன உடனே அவங்க குடும்பத்துல உடனே சம்மதிச்சாங்க. அந்த பையனையும் பார்த்து பேசினோம். உன்னை நல்லா தெரியுமுன்னு சொன்னாரு. நிறைய இடங்கள்ல உன்ன மீட் பண்ணினதா சொன்னாரு”

உங்க பொண்ணுக்கு ஓகேன்னா எனக்கு சம்மதம்தான் அப்படின்னு உடனே சம்மதத்தையும் சொல்லிட்டாரு. வயசான காலத்துல எங்களுக்கு யாரும் இல்லை. நீ மட்டும் தான் எங்களுக்கு. இந்த உலகமே நீதான் நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை குட்டின்னு இருந்தால்தான் எங்களுக்கு சந்தோஷமா இருக்கும். சொத்து பணம் வீடு வாசல்னு எதுவுமே எங்களுக்கு வேணாம். நீ நல்லா இருந்தா போதும் அதனால நீ கொஞ்ச நாள் டைம் எடுத்துக்கோ அந்த பையனை தேடு. எங்கேயுமே கிடைக்கலைன்னு நீ வந்து சொல்லும் போது இந்த பையனை நிச்சயம் பண்றோம். என்று சொன்ன பெற்றோர்களிடமும் அவர்கள் சார்ந்த நியாயம் இருக்கத்தான் செய்தது.

இவளாகவே கேட்டாள். அப்பா அம்மா ரெண்டு பேரும் எனக்கு கொஞ்ச நாள் டைம் தரணும். அதாவது ஒரு வாரம் போதும் வேழவேந்தனை தேட போகிறேன். சொந்த ஊரில் இருந்து தான் என்னோட தேடுதல் ஆரம்பிக்க போகுது. எப்படியாவது ஒரு வாரத்துக்குள் வேழவேந்தனை கண்டுபிடித்து விடுவேன். அதுக்கப்புறம் எந்த சூழ்நிலையில் அவர் வாழ்ந்துகிட்டு இருக்காருன்னு தெரிஞ்சுக்கணும் ஒருவேளை நீங்க சொன்ன மாதிரி அவருக்கு திருமணமாகி இருந்தால் நான் விலகி வந்து விடுவேன். அவருடைய சந்தோஷத்துல குறுக்கே நிற்க நான் தயாராக இல்லை. அதனால நான் நாளைக்கு மகாபலிபுரம் போறேன் நல்ல செய்தியோடு வரேன். என்று கடைசியாக அவர்களோடு பேசிவிட்டு கிளம்பினாள்.

கடற்கரையில் மனிதக் கூட்டங்கள் வரத்தொடங்கியது. வெப்பம் குறைந்து இதமான காற்று வீசியது. செல்லை ஆன் பண்ணி மணி பார்த்தாள். ஐந்து தாண்டி பத்து நிமிடங்கள் கடந்து இருந்தது. வரும் வழியில் வேந்தனின் கடை வழியாக வரும்போது அவனுடைய கடை மூடி இருப்பதை பார்த்தாள். அவன் இல்லை என்றாலும் வேறு யாராவது இருப்பார்கள். அவர்களிடம் விசாரித்தால் அவனைப் பற்றிய விவரங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. என்று எண்ணியவள் எழுந்து கடற்கரை மணலில் கால் புதைய நடந்தாள்.

ஆட்டோ ஒன்றை அமர்த்திக்கொண்டு இவள் அவனுடைய ஷாக்கு போய் இறங்கும்போது கடை திறந்து இருந்தது. அவன் அமரும் அதே இருக்கையில் வேறு ஒரு பெண் அமர்ந்திருந்தாள். இவளுக்கு சற்று தயக்கமாகவே இருந்தது. உள்ளே சென்று சில பொருள்களை பார்ப்பதுபோல் பார்வையிட்டாள். வெளியில் வந்த பெண் என்ன வேண்டும் மேடம் என்றாள் இனிமையான குரலில்.
“எனக்கு ஒரு தகவல் தேவைப்படுது சொல்ல முடியுமா?” என்றாள் அபிநயா.

“சொல்லுங்க மேடம்...”

“வேழவேந்தன் என்பவரை உங்களுக்கு தெரியுமா?”

“தெரியும் மேடம் அவர் கிட்ட இருந்துதான் நாங்க இந்த கடையை வாங்கினோம்.”

“இப்ப அவர் எங்கு இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா?”

“இப்போ எங்க இருக்காருன்னு தெரியாது மேடம் ஆனால் ஒரு மூன்று வருஷத்துக்கு முன்னாடி சொந்த ஊருக்கு வந்ததா சொன்னாங்க. அவங்க அப்பாவோட கேஸ் போயிட்டு இருக்கு இல்ல அது விஷயமா பணத் தேவைக்காக அவருடைய சிலை செய்த பட்டறையை விலை பேச வந்ததா. அந்த ஊர்க்காரர் பையன் ஒருத்தன் சொன்னான்.”

“அவங்கப்பா கேஸா என்னது முடியலையா?”

“இல்ல மேடம் அது இன்னும் முடியல அதுக்காகத்தான் நிறைய செலவு பண்ணி இருக்காங்க ஆனா இன்னும் முடியல ஆனா எங்கம்மா தீர்ப்பு வந்துருச்சுன்னு தான் கேள்விப்பட்டேன் நீங்க ஒன்னு பண்ணுங்க அவருடைய சித்தப்பா ஊருல தான் இருக்காரு அவரு கிட்ட கேட்டீங்கன்னா விவரம் கிடைக்கலாம்.”

“ஓ அப்படியா ரொம்ப தேங்க்ஸ்ங்க நான் அவரை விசாரிக்கிறேன்.”

“மேடம் நீங்க கடைசி வரைக்கும் உங்க பேரு என்னன்னு சொல்லவே இல்லையே....?”

“என்னுடைய பெயர் அபிநயா நான் வேழவேந்தன் ஃப்ரெண்ட்...நான் உங்கள டிவி நியூஸ்ல பாத்திருக்கேன் மேடம். நீங்க வந்து மாவட்ட ஆட்சியராக தானே இருக்கீங்க?” என்றாள் அந்தப் பெண்.

“நான் இப்போ கோயம்புத்தூரில் மாவட்ட ஆட்சியராக இருக்கேன் பரவாயில்லை உங்களுக்கு ஷார்ப் மைண்டுதான் கண்டுபிடிச்சிட்டீங்க. யாருக்கும் தெரியாது நினைச்சேன் ஓகே எனிவே திரும்பவும் சந்திக்கலாம்.” என்றபடி விடைபெற்றுக் கொண்டு வெளியில் வந்தாள் அபிநயா.
 
Top