Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதான் எந்தன் அந்தாதி - அத்தியாயம்- 35

Advertisement

daisemaran

Well-known member
Member
"நீதான் எந்தன் அந்தாதி..!"
அத்தியாயம்-35​

கோவை மாவட்ட கலெக்டர் அம்மாவை உங்க மலை கிராமத்துல இருக்கிற இளைஞர்கள் கடத்திட்டு வந்துட்டாங்க அதை விசாரிக்கத்தான் நாங்க இங்கே வந்திருக்கோம். அந்த அம்மாவுக்கு ஏதாவது ஒரு பிரச்சனன்னா அத பார்த்துட்டு அரசாங்கம் சும்மா இருக்காது. சம்பந்தப்பட்டவர்களை அரசாங்கம் சும்மாவும் விடாது. சூட்டிங் ஆர்டர் கொடுத்துடும். கண்ணு மண்ணு தெரியாம அத்தனை பேரையும் சுட்டுத்தள்ளிடுவாங்கள்.

இந்த கூட்டத்துல இருக்கிற இளைஞர்களில் யாரோதான் கலெக்டர் அம்மாவை கடத்தி இருக்கனும். அதற்கான ஆதாரம் எங்க கிட்ட இருக்கு, அதனால நாங்க யாரும் கடத்தலன்னு மழுப்பி பேச முடியாது. எங்க பசங்க ரொம்ப நல்லவங்க அப்படின்னு சொல்லி குற்றவாளிகளை காப்பாற்ற நினைக்காதீங்க.. அதுக்கப்புறம் உங்களுக்கு என்ன வேணாலும் நடக்கலாம். அதுக்கு நான் பொறுப்பில்லை சொல்லிட்டேன்."

கார்த்திக்கின் குரல் கணீர் கணீரென்று ஒலித்தது. அங்கு சுற்றி நின்றிருந்த மக்களின் காதுகளில் அந்த ஒலி கர்ண கொடூரமாக புகுந்து வெளிவந்தது.

மலைகிராம தலைவர் மாயன் நழுவிய தன்னுடைய காவி நிற துண்டை இழுத்துப் போர்த்தியபடி அந்த மரத்தடி மேடையில் எழுந்து நின்றார். அவர் எதையோ பேச போகிறார்க்ஷெ என்று மொத்த ஜனங்களும் அவர் பக்கமே திரும்பினார்கள்.

"ஐயா போலீஸ்காரர்களே நீங்க எடமாறி வந்து இருக்கீங்கன்னு நினைக்கிறேன். எங்க மலகிராமத்து பசங்க முரட்டு பயலுங்கதான் அத நான் ஒத்துக்கறேன். ஆனா பொம்பள புள்ளைய கடத்துற அளவுக்கு கீழ்த்தரமான பயலுவ இல்லீங்கோ...நாங்க பொம்பளைங்கள தெய்வமா மதிக்கிற சாதியில பிறந்தவங்க. எங்க பயல்கள் இப்படிப்பட்ட காரியத்தை பண்ண மாட்டாங்கே.., அப்படியே பண்ணாலும் அது இந்த ஊருகுள்ள நடக்காதுன்னு அவனுங்களுக்கே தெரியும். நாங்க மலை ஜாதி காரங்க தானே தவிர கண்ணு மண்ணு தெரியாம நடந்துக்கிற நாகரீகம் தெரியாத காட்டுவாசிங்க இல்லே. தாய்க்கும் தாரத்துக்கும் எங்களுக்கு வித்யாசம் தெரியும். யாரோ வழிப்போக்கன் சொன்னதை கேட்டு நீங்க இம்மாந்தூரம் வந்து இருக்கீங்கே, உங்களுக்கு இல்லாட்டாலும் நீங்க போட்டு இருக்கிற ஒடைக்கு மதிப்பு கொடுக்கனும்னு நெனைக்கிறேன். அந்த கலெக்டர் அம்மாவை எங்க ஊரு கார பயலுவ கடத்திட்டு வந்துட்டானுங்க என்கிறதை நீங்க நிருபிச்சிட்டா அவனுங்கள இங்கேயே இந்த இடத்திலேயே பொலி போட்டுடுவேன் பொலி. நீங்க எங்க மக்களுங்ககிட்டே விசாரணை பண்ணுங்க..., நான் வேணாம்னு சொல்லல ஆனா எந்த விசாரணையாக இருந்தாலும் இன்னும் ஒரு மணி நேரத்துல முடிச்சுக்கிட்டு நீங்கள் இங்கிருந்து கிளம்பிடனும். தப்பா எடுத்துக்க கூடாது பொட்டப் புள்ளைங்க இருக்கிற இந்த மலகிராமத்துல போலீஸ்காரங்க வந்துட்டு வந்துட்டு போறது சரிப்பட்டு வராது. இப்போ மணி எட்டு இருக்குன்னு நினைக்கிறேன்... ஒன்பது மணிக்குள்ள இங்கிருந்து நீங்க கிளம்பிடனும்."

என்றவர் பின்பக்கம் திரும்பி சற்று முன் மரவள்ளி கிழங்கும், திணை மாவும் எடுத்துட்டு வந்த அந்தப் பெண்ணை பார்த்து,

"ஏ... பூவரசி போலீஸ்கார ஐயாவுக்கு குடிக்க ஒரு சொம்பு தண்ணி கோரிட்டு வாம்மா... காட்டு கிழங்கு தின்னது தொண்டையிலேயே சிக்கிக்கிட்டு நிக்கிதுன்னு நினைக்கிறேன் சீக்கிரம் கொண்டாந்து கொடும்மா..." என்றார். ஊர்த்தலைவர் மாயன்.

" இதோ கொண்டு வரேன் பா..." என்று சொல்லிவிட்டு பின் பக்கமாக சென்று ஒரு பித்தளை சொம்பில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள் பூவரசி என்ற அந்தப் பெண்.

" வேண்டாமென்று மறுக்காமல் தண்ணியை வாங்கி ஒரு மிடறு குடித்து விட்டு அருகில் இருந்த வேழவேந்தனிடம் நீட்டினான் கார்த்திக். பசியின் தாக்கத்தால் மொத்த தண்ணீரையும் குடித்து முடித்துவிட்டு சொம்பை திரும்ப அந்த பெண்ணிடம் கொடுத்தபோது வேழவேந்தனின் பார்வையில் அந்த விஷயம் பட்டது. நெற்றியை சுருக்கி யோசித்தவனுக்கு மூளைக்குள் பளிச்சென்று ஒளி தோன்றி அந்த விஷயத்தை தெளிவும் படுத்தியது. மண்டையைப் போட்டு கசக்கி பிழிந்து கூட்டி கழிச்சி பார்த்தால் ஓரளவுக்கு விடை கிடைத்து விட்டதுபோல் தோன்றவே, அதை கார்த்திக்கிடம் சொல்ல நினைத்தவன் அடுத்த நிமிடமே தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு அமைதியானான். இது மட்டும் உண்மையாக இருந்தால் கண்டிப்பாக அபிநயாவை கண்டுபிடித்து விட்டோம் என்று அர்த்தம்.

கார்த்திக் தன்னுடைய விசாரணையை ஆரம்பித்தான். மொத்த பேரையும் அழைத்து விசாரித்து விட்டு இளைஞர்கள் பக்கம் விசாரணையை தொடங்கியபோது வனக்காவலர் தங்கராசுவை அழைத்து இவர்களில் யார் என்று அடையாளம் காட்ட முடியுமா? என்று கேட்டான். தங்கராசு குழப்பத்தோடு அங்கிருந்த இளைஞர்களை பார்த்தார். அவருக்கு எல்லா முகங்களும் புதியதாக இருந்தது.

"இந்த ஊர்கார பசங்கன்னு தான் சொன்னாங்க ஆனா என்கிட்ட பேசின அந்த நாலு பேரு வேற... இங்க இருக்கிற பசங்க அவங்க இல்லே, அவனுங்க என்ன நல்லாவே ஏமாற்றி இருக்காங்க.." என்று தெள்ளத் தெளிவாக சொன்னார் வனக்காவலர் தங்கராசு.

போலீஸ்காரர்கள் கிராம மக்களை விசாரித்து முடித்தபோது மணி ஒன்பதை நெருங்கியிருந்தது. தலைவர் மாயன் சொன்னதுபோல் இனிமேல் இங்கே விசாரிப்பது வேஸ்ட் என்று புரிந்து கொண்ட கார்த்திக் முகவாட்டத்துடன் அங்கிருந்து கிளம்ப தயாரானான்.

" இதோ பாருங்க ஐயா... இதுவரைக்கும் ஒத்துழைப்பு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி... ஆனா நாங்க எப்ப வேணாலும் இது சம்பந்தமாக விசாரிக்க இங்க வருவோம். அப்படி வரும்போது எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கணும். இப்போதைக்கு இந்த ஊர் மக்கள் எல்லார்கிட்டயும் விசாரிச்சாச்சி எந்த ஒரு தகவலும் கிடைக்கலை. நாங்க வேற மாதிரியான விசாரணையைதான் ஆரம்பிக்கனுன்னு நினைக்கிறேன். அதனால எங்களுக்கு ஒத்துழைப்பு தந்த உங்கள் எல்லாருக்கும் நன்றி நாங்க கிளம்பறோம்."

என்று சொல்லிவிட்டு மடமடவென்று காரில் ஏறினான் கார்த்திக், பின்னிருக்கையில் தங்கராசு அமர காரை ஸ்டார்ட் பண்ணினான் வேழவேந்தன். அவர்கள் காரை பின்தொடர்ந்து போலீஸ் ஜீப் வந்தது. போகிற வழியில் வனக்காவலர் தங்கராசுவை இறக்கி விட்டுவிட்டு வேறு ஏதாவது தகவல் கிடைத்தால் உடனே சொல்லவேண்டும் என்று அவரை எச்சரித்து விட்டு கிளம்பினார்கள்.

சற்று நேரத்திற்கெல்லாம் இந்த விஷயம் காட்டுத் தீயாய் பரவியது.

அடுத்து சில மணி நேரங்களில்...

மேலிடத்து உத்தரவின்படி அரசாங்க அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்தாலோசித்த பிறகு தனிக்குழு அமைத்து காட்டில் எங்கெங்கு தேடுவது எப்படி தேடுவது என்ற பிளான் பண்ணி அடுத்தகட்ட நடவடிக்கையாக அபிநயாவை தேடும் படலம் ஆரம்பமானது. இரவுக்குள் தேடி கண்டுபிடித்து விட வேண்டும் என்ற மேலிடத்து உத்தரவுக்கு இணங்க காட்டிலாகாவுடன் காவல் துறையும் சேர்ந்து துரிதகதியில் தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள்.

எந்த செய்தி வெளி உலகத்திற்கு தெரியக்கூடாது என்று கார்த்திக் நினைத்தானோ அந்த செய்தி எப்படியோ கசிந்து மீடியாக்கள் வழியாக பொது மக்களை சென்றடைந்தது.

""கோவை மாவட்ட ஆட்சியாளர் செல்வி அபிநயா அவர்கள் வால்பாறை செல்லும் வழியில் கடத்தப்பட்டதாகவும், பல மணி நேரங்கள் ஆகியும் அவரைப்பற்றின எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் காவல்துறையும் காட்டு இலாகாவும் செய்வதறியாது தடுமாறிக் கொண்டு இருக்கிறார்கள். கலெக்டர் அபிநயா இப்பொழுது எங்கே இருக்கிறார் என்ன ஆனார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.""

என்று தலைப்பு செய்தியாக எல்லா தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது.

"எது நடக்கக் கூடாதுன்னு நினைச்சேனோ... அது நடந்துடுச்சு வேழவேந்தன். அபிநயா இருக்கிற இடத்தை இன்னும் கண்டு பிடிக்கல இதற்கு நடுவுல இந்த செய்தி எல்லா ஊடகங்களிலும் வந்துடுச்சு.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இந்த செய்தி வெளியில் வந்ததால் என்னுடைய ஸ்டேட்டஸ் பாதிக்கும் இல்லையா? நாளைக்கு அவளை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க இல்லே...? என்ன பண்றதுன்னே தெரியல ஒரே குழப்பமா இருக்கு..." என்று புலம்பினான் கார்த்திக்.

" சார் என்ன சார் சொல்றீங்க அவங்க வேணும்னேவா போய் மாட்டிக்கிட்டாங்க.. அவங்கள யாரோ கடத்தி இருக்காங்க... அவங்க உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் நல்லபடியா திரும்பி வரணும்னுமே தவிர, இப்போ போய் ஸ்டேட்டஸ் பார்க்கிற நேரமா சார்... சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க... இப்போதைக்கு அபிநயா மேடம் நல்லபடியா திரும்பி வந்தா போதும் சார். எனக்கு இந்த சாமி மேல எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனா இந்த நிமிஷம் ஏதாவது ஒரு சாமி கண்ண திறக்காதான்னு தோணுது." என்று பேசியவனின் குரல் மெல்ல தடுமாறத்தான் செய்தது.

வேழவேந்தனின் பேச்சை கார்த்திக் செவிமடுத்தானே தவிர பதிலேதும் பேசாமல் விரக்தியோடு கார்த்திக்கின் பார்வை வெளிப்புற இருளை வெறித்தபடி இருந்தது.

சற்று நேரத்தில் அந்த மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் தேடுதல் குறித்து விசாரித்து விட்டு, தன்னுடைய அறைக்கு செல்வது தான் சரி என்றான் கார்த்திக். காரணம் இந்த குளிர்ல இதுக்கு மேல என்னால இருக்க முடியாது. மன உளைச்சல் ஒரு பக்கம் உடல் அசதி மறுபக்கம் மொத்தமா சேர்ந்து ஆளையே நிலைகுலைய வைக்கிறது. நேரா ரிசாட்டுக்கு போங்க வேழவேந்தன். நைட்டு ரெஸ்ட் எடுத்துட்டு காலையில திரும்பவும் இங்க வரலாம் அதற்குள் காவல்துறையினர் கண்டுபிடித்தாலும் பிடித்திருப்பார்கள். என்று முடித்தான். பதில் சொல்ல முடியாமல் "சரி" என்று தலையசைத்தப்படி காரை ஓட்டினான் வேழவேந்தன்.

இருவரும் ரிசார்ட்டுக்கு வந்தபோது உறவினர்கள் எல்லாம் கூட்டமாக கூடி இருந்தனர். அபிநயாவின் அம்மாவும் அப்பாவும் கண்ணீரோடு ஓடிவந்து கார்த்திக்கின் கரங்களை பற்றி விசாரித்தனர். முன்னிருக்கையில் இருந்து இறங்கிய வேழவேந்தனைப் பார்த்த அவர்களுக்கு முகம் வெளிறிப்போனது. ஆனாலும் சூழ்நிலையின் தாக்கத்தை புரிந்துகொண்ட இருவரும் அவனை தெரிந்தது போல் காட்டிக் கொள்ளாமல் இயல்பாக இருக்க முயற்சி செய்தார்கள்.

அபிநயாவுக்கு எந்த ஆபத்தும் இல்லை. நல்லா தான் இருப்பாங்கள். அவங்களோட போன் சுவிட்ச் ஆப்ல இருக்கிறதால எங்க இருக்காங்கன்னு கண்டுபிடிக்கிறது கொஞ்சம் தாமதமாகிறது அவ்வளவுதான். விடியறத்துக்குள்ளே கண்டுபிடித்துவிடலாம். பயப்பட வேண்டாம் தைரியமாக இருங்கள்." என்று ஆறுதல் படுத்தினான் கார்த்திக்.

காரை பார்க் பண்ணிவிட்டு சோர்வோடு தன் அறைக்குள் வந்த வேழவேந்தன் ஷவரை திறந்து சுடு தண்ணீரில் குளித்தான். உடம்புக்கு இதத்தை தர வேண்டிய தண்ணீர் அமிலமாய் இறங்கியது. தன்னையும் மீறி கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் தண்ணீரில் கரைந்தது.

அறையை விட்டு வெளியில் வந்து வேறு உடைக்கு மாறினான். அப்போது யாரோ கதவை தட்டினார்கள். கதவை திறந்த போது வெளியில் வேழவேந்தனின் அம்மா நின்றிருந்தார்கள்.

" எப்பா... அபிநயாவுக்கு என்னப்பா ஆச்சு? என்று கேட்ட தன் தாயை சோபாவில் அமர வைத்து அவள் மடியில் தலை சாய்த்து கொண்டு குலுங்கி குலுங்கி அழுதான்.

" ரொம்ப பயமா இருக்கும்மா..."

"கடவுளே எப்படியாவது அபிநயாவை காப்பாத்து.. அபிநயாவுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது. சிறு கீறல் கூட அவள் உடல்ல படக்கூடாது. அப்படி நீ காப்பாத்திட்டீன்னா நூத்தியோரு பேருக்கு அன்னதானம் பண்றேன்..." என்று மனமுருகி வேண்டினாள்.

" அம்மா அபிநயா கிடைச்சுடுவாம்மா... இத்தனை காலமா கடவுள் நம்பிக்கை இல்லாமலிருந்த நானே அவளுக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு உருகி உருகி வேண்டி இருக்கேன். கடவுள்னு ஒருத்தர் இருந்தாருன்னா கண்டிப்பா அபிநயாவை உயிரோடு மீட்டுக் கொண்டு வருவார்ம்மா கவலைப்படாதே, எனக்கே நம்பிக்கை வந்துடுச்சு...ஆமா பிள்ளைங்க எப்படி இருக்காங்க அம்மா...?"

" பிள்ளைங்க தாத்தா பாட்டி கிட்ட இருக்குதுங்க அதிருக்கட்டும்... மத்தியானம் போனவன் இப்பதான் திரும்பி வந்திருக்கே... வயித்துக்கு எதையாவது சாப்பிட்டியாப்பா...?, ரொட்டி எடுத்துட்டு வந்திருக்கேன் முதல்ல சாப்பிடு..."

அம்மா கொடுத்த ரொட்டி தொண்டையில் இறங்க மறுத்தாலும் வேறுவழியின்றி விழுங்கி வைத்தான்.

அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்த வேழவேந்தன் கார்த்திக்கிடம் கூட சொல்லாமல் தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு வால்பாறை காட்டுக்குள் காரை செலுத்தினான்.

***
முதல்முறையாக வனவர் பணியில் சேர்ந்து திறம்பட பணியில் சிறந்து விளங்கிய இரண்டு பெண்களை தேடி சென்றது காவல்துறை. அதற்கு காரணம் அவர்களுக்கு மொத்த காடும் அத்துப்படி. அந்த இரண்டு பெண்களும் விலங்குகளின் கால் தடங்களை கூட நுணுக்கமாக கண்டறிந்து சொல்லக் கூடிய திறமை வாய்ந்தவர்களாக இருந்தனர்.

மிடுக்கான காக்கி சீருடை, தோள்பட்டைடையில் இரண்டு நட்சத்திரங்கள், முகம் நிறைந்த புன்னகையுடன் காணப்பட்ட சுகந்தி, தேவி இருவரும் வால்பாறை வனச்சரகத்துக்கு உள்பட்ட காட்டில்தான் இருந்தார்கள். அவர்கள், வால்பாறை பகுதியில் புதிதாக வெட்டப்பட்டிருக்கும் காட்டுவிலங்குகளுக்கான தடாகத்தையும், காட்டுப்பகுதியை விட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்துவிடாமல் தடுக்க அமைக்கப்பட்டிருக்கும் யானை தடுப்பு வேலியையும் பார்வையிட்டுக்கொண்டிருந்தார்கள்.

இருவரும் பணியில் சேர்ந்து சில நாட்கள்தான் ஆகின்றன. ஆண்கள் மட்டுமே செய்து வந்த வனவர் பணியை முதல்முறையாக இந்த இரண்டு பெண்களும் தங்கள் திறமையை காட்டிக்கொண்டிருந்தனர். உயர் அதிகாரிகள் அவர்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கும் பட்சத்தில்..அவர்களுக்கு கீழ் வேலை செய்யும் வனக்காப்பாளர், வனக்காவலர், வேட்டைத்தடுப்பு காவலர்களும் இவர்களின் பணி உதவிகரமாக இருக்கிறார்கள்.

தங்கள் வீட்டை விட்டு வெளியே வந்து தனியாக வனக்கிராமங்களில் தங்கி இருக்கும் இந்த இரண்டு பெண்களிடமும் அந்த கிராம மக்கள் அன்பாக பழகுகிறார்கள். வனங்களில் வாழும் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும். வனத்தில் இன்னும் அதிகமான மரங்களை வளர்க்க வேண்டும். சத்தியமங்கலம் காட்டின் பெருமையை பறைசாற்றிய சந்தன மரங்கள் இப்போது இந்த காடுகளில் குறைந்த அளவிலேயே உள்ளன. அதன் எண்ணிக்கையை அதிகப் படுத்த வேண்டும். இந்த காட்டினை வளமான காடாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் காடாக மாற்றுவோம். இது நமது காடு. எத்தனை இடர்கள் வந்தாலும் இந்த காடுகளை காப்போம்’ என்று கம்பீரமாக சொல்லிக்கொண்டிருந்த அவர்கள் இருவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது காவல்துறை. நேற்று அபிநயா காணாமல் போன விஷயத்தை அவர்களிடம் சொல்லி அபிநயாவை கண்டுபிடிக்க அவர்களின் உதவியை நாடியது காவல்துறை.

முன்பெல்லாம் இது யானைகளின் காடு. இப்போது சிறுத்தைகளும் உலவுகின்ற பெருங்காடு. வன விலங்குகள் சகஜமாக வந்து போய்க்கொண்டிருக்கும் இந்த காட்டினை கண்காணித்து, கட்டிக்காக்கும் வனவர் பொறுப்பினை நாங்கள் இருவரும் ஏற்று இருக்கிறோம். ஆண்களே செல்ல அஞ்சும் இந்த அடர்ந்த காட்டில் அச்சமின்றி பணியாற்றிக் கொண்டிருக்கிறோம், நம்ம மாவட்ட கலெக்டர் அம்மாவை கண்டுபிடிக்க எங்களால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்கிறோம். என்று அவர்கள் வாக்கு கொடுத்தனர்.

ஒரு பக்கம் காட்டு இலாகாவுடன் காவல்துறையும் சேர்ந்து அபிநயாவை தேடும் வேட்டையில் இறங்கி இருக்க,.

மறுப்பக்கம் வேழவேந்தனோ நேற்றிரவு சென்ற அந்த மலை கிராமத்திற்கு சென்று கொண்டு இருந்தான். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு அந்த கிராமத்திற்குள் நுழைந்தவன் அங்கு விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுமியிடம் பூவரசி பற்றி விசாரித்தான்.

"அக்கா மலைத் தேன் எடுக்க கூட்டாளிங்க கூட காட்டுக்குள்ளே போய் இருக்கு சார்... அதோ தெரியுது பாருங்க பச்சைமலை அந்த மலைக்குதான் அக்கா போயிருக்கு..." என்று சிறுமி சுட்டிக்காட்டிய மலையைத் திரும்பிப்பார்த்தான்.

சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த அந்த மலைக்கு காரில் செல்லமுடியாது என்று தோன்றவே நடந்து அந்த மலையை நோக்கி சென்றான். பத்து நிமிட தேடலுக்குப் பின் கண்ணில் பட்டாள் பூவரசி. இவனை பார்த்தவுடன் அவள் முகம் மாறியது கைகள் லேசாக நடுங்க தொடங்கியது.

"பூவரசி..." என்று இவன் உரக்க அழைத்தவுடன் அவள் அங்கிருந்து நகர முயன்றாள். தாவி அவள் கையைப் பற்றி இழுத்தவன்,

" உண்மையை சொல்லு கலெக்டர் அபிநயாவை எங்க கடத்தி வச்சிருக்கீங்க... எனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்லாதே.., உனக்கு எல்லாமே தெரியுன்னு எனக்கு தெரியும். நீ இப்ப உண்மைய சொல்லுலேன்னா இந்த மலையிலிருந்து உன்னை கீழே உருட்டி தள்ளி விட்டுடுவேன்?" என்றான்.

அவன் குரலில் தெரிந்த தீவிரம் அவளை யோசிக்க வைத்தது. அடுத்த நிமிடம் ஒரு முடிவுக்கு வந்தவளாய்..,

" நான் எல்லா உண்மையும் சொல்லிடுறேன்... ஆனால் உங்களுடைய மிரட்டலுக்கு பயந்துகிட்டு இல்லே... நீங்க சாகறதுக்கு முன்னாடி உண்மையெல்லாம் தெரிஞ்சுகிட்டு சாகனும் இல்லையா அதற்காகத்தான்..." என்றாள். யோசனையோடு தன்னுடைய பிடியை தளர்த்தி கொண்டான் வேழவேந்தன்.

" சொல்லு எதையும் மறைக்கக்கூடாது எல்லா உண்மையையும் சொல்லணும்...?"
என்ற வேழவேந்தனை புருவம் சுருக்கி ஏளனத்துடன் பார்த்தாள் பூவரசி.

"ப்ளீஸ் என்ன கொஞ்சம் புரிஞ்சுக்கோ... உங்கூட சண்டை போட நான் இங்கு வரல, ஏன் அவளை கடத்துனீங்க...அவளை எங்க வச்சிருக்கீங்க? என்னுடைய அபிநயாவை கடைசியா ஒருமுறை நான் பார்க்கணும்..."

ஒருநிமிடம் அவனையே பார்த்துக்கொண்டிருந்த பூவரசிக்கு என்ன தோன்றியதோ அபிநயாவை கடத்திய தற்கான காரணத்தைச் சொல்லத் தொடங்கினாள்.

"ம்ம்... சொல்றேன்...இந்த மலை கிராமங்களுக்கு சாலை வசதி இதுவரை கிடையாது, மின்சார வசதி கிடையாது, நியாயவிலைக்கடை கிடையாது, பள்ளிக்கூடம் கிடையாது, ஆரம்ப சுகாதார நிலையம் கிடையாது, குடிதண்ணீர் வசதி கிடையாது இப்படி பல கிடையாதுகள், இதில் எது வேண்டும்மென்றாலும் சுமார் பத்து கி.மீ தூரம் மலையில் இருந்து கீழே இறங்கி போகணும். என்பதால் இக்கிராம மக்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்மென பல வருஷங்களா மனுவுக்கு மேல் மனுவாய் கொடுத்து வந்தோம். ஆனால் கொடுத்த மனு எல்லாம் குப்பைத் தொட்டிக்குள் போய்விட்டது. கேரள அரசும் தமிழக அரசும் எங்களப் பத்தி கொஞ்சம் கூட கவலைப்படலை. எங்களுக்கு உதவி செய்யாத அரசாங்கத்துக்கு ஒரு பாடத்தை கற்பிக்கத்தான் நாங்க அபிநயாவை கடத்தினோம். இந்த விஷயம் எங்க ஊர் மக்களுக்கோ, ஊர்த் தலைவரான எங்க அப்பாவுக்கு கூட தெரியாது. ஆனா நீங்க எப்படியோ இதை கண்டுபிடிச்சிட்டீங்க... என்னை ஜெயில்ல போட்டாலும் போடுங்க நான் அதுக்கெல்லாம் பயப்பட போவதில்லே.. ஆனா கலெக்டர் அபிநயா இருக்கிற இடத்தை மட்டும் சொல்ல மாட்டேன் கண்டிப்பா சொல்ல மாட்டேன்..."

கண்களில் நெருப்புப்பொறி பறக்க பூவரசி பேசியதை கேட்ட வேழவேந்தன் விக்கித்துப்போய் நின்றான்.
 
Top