Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதான் எந்தன் அந்தாதி - அத்தியாயம்-32

Advertisement

daisemaran

Well-known member
Member

அத்தியாயம்-32

கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் அவ்வப்பொழுது காட்டு விலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுவதாகவும், சோலையார் டேம் அருகே உள்ள பன்னிமேடு எஸ்டேட் முதல் பிரிவில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டுயானைகள், வீடுகளை இடித்து சேதப்படுத்தி விட்டதாகவும்,

நள்ளிரவில் யானைகள் நடமாடுவதால், பொதுமக்கள் அச்சத்துடன் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது எனவும், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள இந்த நிலையிலும்,
அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடந்து அங்கிருக்கும் மக்களை பீதியடைய வைத்ததாகவும் செய்தித்தாள்களில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக யானைகளின் தொல்லை இல்லை என்பதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருந்தார்கள்.


ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக யானைகளின் நடமாட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது. அது அந்த காட்டில் வசிக்கும் மக்களின் கவனத்திற்கு வந்து அவர்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது மட்டுமல்லாமல் பள்ளி செல்லும்
சிறு பிள்ளைகள் தனியாக செல்ல முடியாத சூழ்நிலைகளில் இருந்தார்கள். வால்பாறையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் யானைகளை அடர்ந்த வன பகுதிக்குள் விரட்ட வேண்டுமெனவும், ஊருக்குள் புகுந்த காட்டுயானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் குட்டிகளுடன் சுற்றித்திரியும் யானைகளை காட்டுக்குள் விரட்டவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இந்த சூழ்நிலையில்தான் ஒரு வாரத்திற்கு முன்பு வால்பாறையில் தோட்டத் தொழிலாளியின் வீட்டை இடித்து நாசப்படுத்திய யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

குடியிருப்பு பகுதியில் நுழைந்த அந்த யானைகள், அங்குள்ள தேயிலை தோட்ட அலுவலகம்,பொருட்கள் வைப்பறை, குடியிருப்பு பகுதி வழியாக சென்று மாடசாமி என்பவரின் வீட்டை முற்றுகையிட்டன.

பின்னர் திடீரென்று கோபம் கொண்ட அந்த யானைகள், சுற்றி நின்று கொண்டு ஜன்னல் மற்றும் கதவை உடைத்து சேதப்படுத்தின. தகவல் அறிந்து வந்த வால்பாறை சரக வனத்துறையினர் யானைகளை அங்கு இருந்து விரட்டியடித்தனர். உயிர்சேதம் எதுவும் இல்லாததால் இந்த விஷயம் அத்தோடு முடிந்து போனது. இது ஒரு பக்கமிருக்க அங்கு வசிக்கும் மக்களுக்கே தெரியாமல் அதாவது
வால்பாறை ரோட்டில் நீர்நிலையை தேடி அடிக்கடி ஒற்றை காட்டு யானை உலா வருவதால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் பீதியடைகின்றனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் தற்போது மழை இல்லாததால், நீர் நிலைகளை தேடியும், உணவுக்காவும் வன விலங்குகள் இடம் பெயர துவங்கியுள்ளதாகவும், இதில் ஆழியார் அருகே உள்ள குரங்கு அருவி மற்றும் வால்பாறை ரோட்டில் கடந்த சில வாரங்களாக காலை மற்றும் மாலை நேரத்தில், யானைகள் உலா வருவது அதிகரித்து உள்ளதாகவும் இதில் கடந்த சில வாரமாக, ஆண் ஒற்றை காட்டு யானை ஒன்று, இரவு மட்டுமின்றி பகல் நேரத்திலேயே அடிக்கடி வால்பாறை ரோட்டில் உலா வருவது தொடர்ந்துள்ளது இதை சுற்றுலா பயணிகள் சரக வனத்துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை.

இந்த நிலையில்தான் விபத்தை பார்வையிட அங்கு சென்ற அபிநயா யானையிடம் மாட்டிக்கொண்டாள்.

அபிநயா காரில் ஏறும்போதே சொன்னாள்.

" இந்தப்பாதை மேடும் பள்ளமுமாக இருக்கும். இந்த பாதையில் போக வேண்டாம். சுற்றுப்பாதை இருக்கிறதே அதன் வழியாக போவதுதான் நல்லது" என்று டிரைவரிடம் அவள் சொன்னபோது அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

" இல்ல மேடம் அது ரொம்ப சுத்து. அதுல போனா இன்னும் அரை மணி நேரம் எஸ்ராவா ஆகும். இது ஷார்ட்கட் வழி சீக்கிரமாவே போயிடலாம்.." என்றான் ட்ரைவர்.

மலைப்பாதையில் ஓட்டக்கூடிய திறமையான டிரைவர் என்று பாஸ்கர் அண்ணா நியமித்ததால் இவளும் சரி என்று சம்மதிக்க வேண்டிய சூழ்நிலை.

சரி அடிக்கடி மலைப்பாதையில் ஓட்டி பழக்கப்பட்டவர் அவருக்கு தெரியாத பாதையா என்று அவர் சொன்னதற்கு தலையசைத்து வைத்தாள்.

அதுதான் இப்போ தப்பாகிப் போனது. அபிநயா சொன்ன வழியிலேயே வந்திருந்தால் சற்று கால தாமதம் ஆகி இருக்குமே தவிர இந்த யானைகளின் தொல்லை இருந்திருக்காது. பாதையும் கரடு முரடு இல்லாமல் இலகுவாக இருந்திருக்கும். ஆனால் இந்தப் பாதையோ ஆள் நடமாட்டமே இல்லாத அடர்வனப் பகுதியாக இருந்தது. எதிர்பாராத வகையில் அந்த காட்டுப் பாதையில் யானைகளின் கூட்டத்தைக் கண்ட போது சற்று தயக்கத்தோடு காரின் வேகத்தை குறைத்தார் டிரைவர் குமார். வேகத்தை குறைத்தவர் காரை பின்பக்கமாக திருப்பி வந்த பாதையிலேயே சென்று சற்று தூரத்தில் வேறு பாதையில் சென்றிருக்கலாம். யானைகள் வழிவிட்டு விலகி விடும் முன்னேறி சென்று விடலாம் என்று டிரைவர் நினைத்தது தப்பு.

அந்த பெரிய தந்தங்களை உடைய யானை காரின் கதவை உடைத்து நொறுக்கி கொண்டிருந்தது. உள்ளே அமர்ந்திருந்த டிரைவரும் அபிநயாவும் செய்வதறியாமல் சத்தமிட்டு கொண்டிருந்தார்கள். பட்டென்று அபிநயா தன்னை சுதாரித்துக் கொண்டு,

" டிரைவர்... காருக்குள்ளேயே இருப்பது ஆபத்தான விஷயம். காரிலிருந்து எப்படியாவது வெளியேறி விட வேண்டும். நீங்க அந்த ரைட் சைடு டோரை திறந்து வெளியில் குதிச்சிடுங்கள். நான் பின்பக்கமாக இறங்க முயற்சி பண்றேன்."

அதற்குள் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்க தன் தும்பிக்கையை உள்ளே நீட்டிக்கொண்டிருந்தது அந்த யானை. அடுத்த நிமிடம் டிரைவர் ரைட் சைடு டோரை திறந்து குதித்து உருண்டு எழுந்து ஓடினான்.

அது.. நீட்டிய தன் தும்பிக்கையை வெளியில் இழுத்து உருண்டு எழுந்து ஓடிய டிரைவரை விரட்டிக்கொண்டு ஓடியது.

இதயம் படபடக்க உடலெல்லாம் தொப்பையாய் வேர்த்துக் கொட்ட, இடதுகையால் டோரை திறக்க முயன்று முடியாமல், வலது பக்க டோரை திறக்க முயன்று அதுவும் முடியாமல் போகவே, அடுத்து என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்தாள் அபிநயா. காரணம் அந்த இரண்டு டோர்களும் திறக்க முடியாமல் ஸ்ரக்காகி இருந்தது.

சற்று துணிச்சலை வரவழைத்துக்கொண்டு பின்பக்கமாக திரும்பிப் பார்த்தாள். டிரைவர் எங்கேயோ ஓடி ஒளிந்து கொள்ள அவன் கிடைக்காத கோபத்தில் திரும்பவும் காரை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தது அந்த யானை.

யானை வரும் வேகத்தைப் பார்த்தால் கண்டிப்பாக காரையே கவிழ்த்து விடும் என்று தோன்றியது. தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நம் உயிருக்கு ஆபத்து என்று உணர்ந்த அபிநயா தன்னுடைய பலம் கொண்ட மட்டும் காரின் கதவை திறக்க முயன்றாள். ஆனால் இறுதியில் அவளுடைய முயற்சி தோல்வியடைந்தது. யானையின் வேகம் அதிகரித்தது. இவளுக்கும் இதயத்துடிப்பு அதிகரித்தது. இரண்டு நிமிடத்தில் அருகில் வந்துவிடும், இனி கடவுளே நினைத்தாலும் நம்மை காப்பாற்ற முடியாது. என்ற மனநிலையில் இரண்டு கண்களையும் இருக்க மூடிக்கொண்டாள் அபிநயா.
***

"சார் நம்ம... கலெக்டர் அபிநயா மேடம் போன கார் ஒரு இடத்துல நின்னுட்டு இருக்கு சார். அவங்க கிளம்பி சென்ற நேரத்தை கணக்கிட்டு பார்க்கும் போது கார் ரொம்ப நேரமா ஒரே இடத்தில் நிக்குதுன்னு நினைக்கிறேன். ஏதாவது பிரச்சினையா இருக்கும்னு தோணுது." என்றார் இன்ஸ்பெக்டர்.

அப்போது இன்ஸ்பெக்டர் மற்றும் ஏசி இருவரும் அட்டகட்டி மலைப்பாதை பதினைந்தாவது கொண்டை ஊசி வளைவு தாண்டி வந்து கொண்டு இருந்தார்கள். ஜிபிஎஸ் கருவி மூலம் கலெக்டர் வந்த கார் வெகுநேரமாக அங்கே நிற்பதை ஊர்ஜிதப் படுத்தினார் இன்ஸ்பெக்டர்.

இருவருக்கும் சந்தேகம் வலுப்பெற்றது. இவ்வளவு நேரம் அதே இடத்தில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை அப்படி என்றால் ஏதோ பிரச்சினை ஆகியிருக்கிறது என்னென்ன பார்க்கலாம். முதல்ல அந்த அம்மாவோட செல்லுக்கு போன் போடுங்க என்றார் ஏசி.

உடனே இன்ஸ்பெக்டர் தன்னுடைய செல்லிலிருந்து அபிநயாவுக்கு கால் பண்ணினார் மறுமுனை சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.

"சார் நாம நெனச்சது சரியாயிடுச்சு அவங்களுக்கு ஏதோ பிராப்ளம்ன்னு நினைக்கிறேன். போன் சுவிட்ச் ஆப்ல இருக்கு சார்..." என்றார் இன்ஸ்பெக்டர்.

" டிரைவர் நம்பர் இருக்கா...? அவன் நம்பருக்கு கால் பண்ணுங்க..."

"இல்ல சார்... கார் அரசாங்க கார் இல்ல சார். கலெக்டர் அம்மாவோட சொந்தக்கார் சார்.அந்த டிரைவர் அந்தம்மாவுக்கு தெரிஞ்ச டிரைவர். அதனால அவருடைய நம்பர் என்கிட்ட இல்ல சார்...'" என்றார் இன்ஸ்பெக்டர்.

" என்னையா நீங்க... ஒரு கலெக்டர் அம்மா வராங்க அவங்களுக்கு ஒரு பாதுகாப்பு கொடுக்கணும்னு உங்களுக்கெல்லாம் தோணலையா..? ஒரு கான்ஸ்டபிளையாவது கூட அனுப்பி இருக்கலாமே? பொம்பள புள்ள பாவம் இந்த காட்டுக்குள் வந்துட்டு தனியா போறாங்க, அவங்களுக்கு ஒரு பாதுகாப்பு கொடுக்கனுன்னு உங்களுக்கு தோணல பாரு. இது எல்லாத்தையும் நான் சொல்லணுமா என்ன? உங்களுக்கே சுயபுத்தி இருக்காதா? அந்த அம்மாவுக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடிச்சுன்னா அதுக்கப்புறம் என்ன பண்ண முடியும்? நம்ம ஸ்பாட்டுக்கு அவங்க வந்திருக்காங்க பாதுகாப்பு கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை இல்லையா. இது நாளைக்கு அமைச்சருக்கு தெரிய வந்தா என்னத்தானே தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்துவார்... ஏன் ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க? நீங்க பண்ற இந்த தப்பால் என்னுடைய பதவிக்கு வேட்டு வச்சிடுவீங்க.., போலிருக்கு. சரி சீக்கிரமா அந்த ஸ்பாட்டுக்கு போங்க... என்ன நடந்துச்சுன்னு நேர்ல போய் பார்க்கலாம்." என்று துரிதப்படுத்தினார் ஏசி ரவிக்குமார்.
***

"ஏம்ப்பா கார்த்தி அபிநயா ஏதோ அபிஷியல் வொர்க்கா வெளியில போயிட்டு வரதா சொன்னாள். இன்னமும் ஆளே காணுமே என்ன ஏதுன்னு கால் பண்ணி கொஞ்சம் கேளு..."

" போன வேலை இன்னமும் முடிஞ்சிருக்காதும்மா.., கொஞ்சம் வெயிட் பண்ணுங்கம்மா கொஞ்ச நேரத்துல அவளே வந்துடுவாள். எதுக்கு போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டு என்கிட்ட லஞ்சுக்கு வந்துடுவேன்னு சொல்லிட்டுதான் போனா அதனால கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுவோம் வரலைன்னா கால் பண்ணி கேட்கலாம்." என்றான் கார்த்திக்.

"அதுக்கு இல்லப்பா இன்னிக்கு ஈவினிங் தான் பங்க்ஷன். இப்ப கிளம்பினால்தான் ராகு காலத்துக்கு முன்னாடி அவங்க வீட்டுக்கு போக முடியும். இன்னொரு விஷயம் அந்த வீடு எங்க இருக்குன்னு எனக்கு தெரியாது. அபிநயா கூட வந்துடுங்கன்னு சம்பந்தி அம்மா சொன்னாங்க. அதுக்காகத்தான் அபிநயாவிற்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்."

" இப்போ மணி ரெண்டு ஆகுதும்மா மூணு மணி வரைக்கும் பார்ப்போம் வரலைன்னா கால் பண்றேன்..." என்ற கார்த்திக்கின் மனசுக்குள் ஒரு நெருடல் தோன்றத்தான் செய்தது.

அறைக்கு வந்ததும் முதல் வேலையாக அபிநயா விற்கு கால் பண்ணினான்.

மறுமுனையில் போன் சுவிட்ச் ஆப் என்று வரவே சற்று பதற்றம் அதிகமானது. அவளுடைய கார் டிரைவரின் நம்பர் இருந்தால் அங்கிருக்கும் நிலவரத்தை தெரிந்துக்கொள்ளளாம். என்று எண்ணியவன் பாஸ்கரை தேடி ரிசப்ஷனுக்கு சென்றான். ஆனால் அங்கு பாஸ்கர் இல்லை என்றார்கள். மகளுடைய பங்க்ஷன்காக சீக்கிரமே கிளம்பி போய்விட்டதாக சொன்னார்கள். அவருக்கு அடுத்த பொறுப்பிலிருக்கும் வேறு ஒருவரின் நம்பரை பெற்றுக்கொண்டு அந்த நம்பருக்கு கால் பண்ணி பேசினான்.

" ஹலோ நான் கார்த்திக் அசிஸ்டன்ட் கமிஷனர் பேசுறேன். நீங்க எங்க இருக்கீங்க கொஞ்சம் என்னுடைய அறைக்கு வர முடியுமா ...?"

" ஓகே ஓகே சார் பதினோராம் நம்பர் ரூம் தானே? இதோ உடனே வரேன் சார்..." ஐந்து நிமிடத்தில் கார்த்திக்கின் அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் அந்த மேனேஜர்.

"எனக்கு ஒரு டீடைல் வேணும் சொல்ல முடியுமா? அதாவது கலெக்டர் அபிநயாவின் காரை ஓட்டிட்டுப்போன கார் டிரைவரின் போன் நம்பர் வேணும்."

" சார்.. சார் எதுவும் பிரச்சனையா சார்? அந்த டிரைவரை நான்தான் அரேஞ்ச் பண்ணி கொடுத்தேன் சார். அவன் பேரு குமார் சார். அவன் ரொம்ப நல்லவன் சார். எந்த தப்புதாண்டாவுக்கும் போகமாட்டான் புள்ள குட்டிக்காரன் சார். அ... அவனுடைய நம்பர் சொல்றேன் சார் நோட் பண்ணிக்கோங்க சார் எதாவது பிரச்சினையா சார்? எதுவா இருந்தாலும் சொல்லுங்க சார்...?" என்று தடுமாற்றத்துடன் கேட்டான் அந்த நபர்.

டிரைவர் குமாரின் போன் நம்பரை நோட் பண்ணி கொண்ட கார்த்திக்,

" பிரச்சனை எல்லாம் ஒன்னுமில்ல கலெக்டர் அம்மாவோட போன் சுவிட்ச் ஆப் ஆயிடுச்சு. அதுதான் டிரைவருக்கு கால் பண்ணி பேசலாம் ன்னு கேட்டேன் ஓகே கொஞ்சம் வெளியில வெயிட் பண்ணுங்க திரும்ப கூப்பிடுறேன்..." என்று அந்த மேனேஜரை அனுப்பிவிட்டு.,

குமாரின் நம்பருக்கு கால் பண்ணினான் கார்த்திக். இரண்டு மூன்று முறை முயற்சி செய்தும் குமார் போனை அட்டென்ட் பண்ணவில்லை.

பட்டென்று வெளியில் வந்த கார்த்திக் மேனேஜரிடம், ஃபோனை ஸ்பீக்கரில் போட்டுட்டு குமாருக்கு கால் பண்ண சொன்னான்.

ஒரே ரிங்கிலே போனை அட்டென்ட் பண்ணினான் டிரைவர் குமார். ஹலோ என்று சொல்வதற்குள் மறுமுனையில் குமார் பேச தொடங்கிவிட்டான்.

" டேய் மச்சான் நான் ஒரு தப்பு பண்ணிட்டேன் டா அந்த கலெக்டர் அம்மாவை அம்போன்னு விட்டுட்டு ஓடி வந்துட்டேன்டா பாவம் அந்த அம்மா என்ன ஆனாங்கன்னு தெரியலே எனக்கு ரொம்ப பயமா இருக்குடா..."

"கார்த்திக் பட்டென்று போனை கையில் வாங்கி பேசினான்.தான் யாரென்று சொன்னவுடன் முதலில் பேச தயங்கியவன் பிறகு என்ன நடந்தது என்பதை ஒன்றுவிடாமல் சொன்னான். சார் என் மேல எந்த தப்பும் இல்லே சார். அவங்க தான் கதவை திறந்திட்டு ஓடிடுன்னு சொன்னாங்க.., நான் பாதி தூரம் ஓடிப்போய் திரும்பிப் பார்த்தால் யானை என்னை தொரத்திக்கிட்டு வந்தது. நான் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் ஆசையில் கண்ணு மண்ணு தெரியாம ஓடி உருண்டு ஒரு பள்ளத்தில் போய் விழுந்தேன். அதுக்கு அப்புறம் யானை என்ன தூரத்துல திரும்பி கார் கிட்ட போனிச்சு. நான் மெதுவா எழுந்து பார்த்தேன். அவங்க காருக்குள்ளேயே இருந்தாங்க வெளியில் வரவே இல்ல.., என்ன ஆச்சு எனக்கு ஒன்னும் புரியல... மெதுவா எழுந்திருச்சு கார் கிட்ட போகலாம்னு ஒரு ஸ்டெப் எடுத்து வச்சேன்... திரும்பவும் கால் ஸ்லிப் ஆகி பள்ளத்திலே தலைக்குப்புற விழுந்துட்டேன் தல கிறு கிறுன்னு சுத்திருச்சு அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியலே. இப்பதான் மயக்கம் தெளிஞ்சு எழுந்து போய் பார்த்தேன். கார் நின்ன இடத்துல காரைக் காணோம் சார். கலக்டர் அம்மா என்ன ஆனாங்கன்னு தெரியல. நான் இப்போ நடந்துதான் வந்துகிட்டு இருக்கேன் வர வழியில எங்கேயாவது கண்ணுல கிடைப்பாங்களான்னு தேடிகிட்டு தான் இருக்கேன் சார். நீங்க இப்போ இங்கே வந்தீங்கன்னா ரெண்டு பேரும் சேர்ந்து தேடலாம் தேடினால் கண்டிப்பா கண்டுபிடித்து விடலாம்..." என்றான் குமார்.

ஓகே இப்ப நீங்க எங்க இருக்கீங்க நான் ஒரு ஆப்னவர்ல அங்க வரேன் என்று அவன் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு அறையிலிருந்து அவசரமாக வெளியில் வந்தான் கார்த்திக்.

"ஹலோ கார்த்திக் சார் நீங்க எப்படி இங்கே...?"

பரிச்சயமான அந்த குரல் வந்த திசையை நோக்கி திரும்பினான் கார்த்திக். அங்கே நின்றிருந்தவனை பார்த்தவுடன் கார்த்திக்கின் கண்களில் பளிச்சென்று ஒரு ஒளி வட்டம் பரவியது.

தன்னுடைய இரண்டு கைகளிளும் இரண்டு பிள்ளைகளை பிடித்தப்படி நடந்து வந்து கொண்டிருந்தான் வேழவேந்தன்.

சற்றும் எதிர்பார்க்காத அந்த நேரத்தில் வேழ வேந்தனை அங்கு பார்த்ததும் கார்த்திக்கின் மனம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவன் இருந்த மனநிலையில் சிரிப்பு கூட செயற்கையாய் வெளிப்பட்டது. அதை கவனித்த வேழவேந்தன்,

" கார்த்திக் சார் என்ன ஒரு மாதிரி இருக்கீங்க? என்னாச்சி சார்...? என்று கேட்டான்.

" ஒன்றுமில்லை வேழவேந்தன் ஒரு முக்கியமான விஷயமா காட்டுக்குள்ள போகணும் அதான் கிளம்பிகிட்டு இருக்கேன். ஆமா நீங்க எப்படி இங்க ஃபேமிலி டூரா?" என்று கேட்டான் கார்த்திக்.

"இல்ல சார் இந்த ஹோட்டல், ரிசார்ட் எல்லாம் என்னுடைய மாமனாரோடது. மாமனார் இங்கேயே தங்கியிருந்து இதையெல்லாம் மெயின்டன் பண்ணிக்கிட்டு இருக்கார். நான் மாசத்துக்கு ஒரு முறை இங்கே வந்து கணக்கு வழக்கெல்லாம் பார்த்து சரி பண்ணிட்டு போவேன். கை அடிபட்டதால போன மாசம் வர முடியல, பிள்ளைகளுக்கு மூணு நாள் லீவு வந்துச்சி தாத்தாவை பார்க்கணும்னு அடம் பிடிச்சாங்கள் அதான் ரெண்டு நாளைக்கு முன்னாடி அம்மா கூட அனுப்பி வைத்தேன். இப்போ அவங்களை கூட்டிட்டு போகத்தான் வந்தேன். உங்கள இங்க பார்த்தது ரொம்பவும் சர்ப்ரைஸா இருக்கு சார்..." என்றான் வேழவேந்தன்.

"ஓகே வேழவேந்தன் இந்த வால்பாறைக்கு இப்போதான் ஃபர்ஸ்ட் டைம் வந்திருக்கேன். காட்டுக்குள்ள போகணும். உள்ளே போறதுக்கு வழி காட்ட யாராவது இருந்தாங்கன்னா ஹெல்ப்பா இருக்கும்..."

" சார் நான் வரேன் சார்... எனக்கு இந்த ஏரியா முழுசும் அத்துப்படி, நீங்க எங்க போகணும்னு சொல்லுங்க அந்த இடத்துல உங்களை கொண்டுட்டுப்போய் விடுறேன்..."

"அப்படியா...? ஏரியா ஃபுல்லா தெரியுமா? வெரிகுட் . ஏற்கனவே அடிபட்ட கை அந்த கையால உங்களால டிரைவ் பண்ண முடியுமா..?"

" டாக்டர் ரெண்டு மாசத்துக்கு ஓட்ட கூடாதுன்னு தான் சொன்னாங்க, அதெல்லாம் நமக்கு செட்டாகாது. கோயம்புத்தூரிலிருந்து நான்தான் கார் ஓட்டிட்டு வந்தேன். அதனால இங்க போறது ஒன்னும் சிரமம் இல்லை... ஒரு 5 மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க சார் பிள்ளைங்கள அம்மா கிட்ட விட்டுட்டு வந்துடறேன்"

என்று சொல்லி விட்டு சென்றவன் 5 நிமிடத்தில் திரும்பவும் வந்தான்.

"வாங்க சார் போகலாம்..."

இருவரும் காரில் ஏறி அமர்ந்தார்கள். குமார் சொன்ன அந்த இடத்தை சொன்னான் கார்த்திக்.

"சார்... அந்த ஏரியாவா? கொஞ்சம் டேஞ்சரான ஏரியா சார்... காட்டு யானைகள் அதிகமாக இருக்கக்கூடிய ஏரியா சார். அங்கு எதுக்கு சார் போகணும்?"

அவன் சொன்னதைக் கேட்ட கார்த்திக்கின் முகம் வெளிறியது. அப்படின்னா அபிநயாவுக்கு...ஐயோ கடவுளே அபிநயாவுக்கு எதுவும் ஆகக்கூடாது.

" படபடத்த மனதை அமைதிப்படுத்தியப்படி அமர்ந்திருந்தான் கார்த்திக். கார் சீரான வேகத்தில் மலைப்பாதைகள் வளைந்து நுழைந்து சென்றது.

" சார் கேக்கறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க நீங்க இப்ப போறது அபிஷியல் வொர்க்கா சார்...?"

" இல்ல வேழவேந்தன் பர்சனல் வொர்க்காகத்தான் போறேன். கலெக்டர் அபிநயா அந்த ஏரியா வழியா வரும்போது அவங்க வந்த காரை ஒரு யானை தாக்கி இருக்கு... "

"சார் என்ன சொல்றீங்க...? அதிர்ச்சியோடு வேழவேந்தன் பிரேக்கில் கால் வைக்க, மறுநிமிடம் கார் கிரீச் என்ற சத்தத்தோடு நின்றது.
 
ஐயோ பாவம் அபிநயாவுக்கு என்ன ஆச்சு?
யானைகிட்டேயிருந்து அபியை யாரு காப்பாத்தினாங்க?
முதலில் பார்த்த போலீஸ் ஏசி ரவிக்குமாரா?
 
அதானே
ஒரு கலெக்டர் அதுவும் பெண் வேற அவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கலையே
ஒத்தையிலே அனுப்பிட்டாங்களே
ரவிக்குமார் நல்லாத்தான் கேட்டார்
 
Nice update
Aha abi ah parthu yanai trumbi porlirukumo
Inda soolnilayala yavadi Karthi ku unmai triuma
Ila vendan idula guest roal ah
Onnum puriyala??
 
Top