Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதான் எந்தன் அந்தாதி - அத்தியாயம்-3

Advertisement

daisemaran

Well-known member
Member

அத்தியாயம்-3
வீட்டிற்கு வந்த ஓரிரு நாட்கள் வேழவேந்தனை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள் அபிநயா. அவன் மட்டும் காப்பாற்ற வில்லையென்றால் இவள் இன்று உயிரோடவே இருந்திருக்க முடியாது. கடலில் மூழ்கியதால் அடுத்தநாளே ஃபீவர் வந்துவிட்டது கல்லூரிக்கு விடுப்பு சொல்லிவிட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடந்தாள். உடலில் பிரச்சனையை விட மனதில் பிரச்சனை அதிகமாக இருந்தது. அதாவது தன்னை காப்பாற்றின வேழவேந்தனின் நினைவாகவே இருந்தது அபிநயாவுக்கு
இரண்டு நாட்களுக்கு பிறகு ஓரளவுக்கு குணமானவுடன் கைப்பையில் இருந்த அவனுடைய விசிட்டிங் கார்டை எடுத்தாள். வீட்டில் யாரும் இல்லாத நேரம் அவனுக்கு கால் பண்ணினாள்.

போனை அவனே எடுக்க வேண்டும்! என்பது அவளுடைய வேண்டுதலாக இருந்தது. அதே மாதிரி அவனே போனை அட்டென்ட் பண்ணி,

“ஹலோ யார் பேசுறது?” என்றான் அந்த இனிமையான குரல் இதயத்தில் புகுந்து இதத்தை தந்தது.
பயத்தில் என்ன பேசுவது என்று புரியாமல் போனை கட் பண்ணிவிட்டாள்.

பிறகு அவனே அந்த நம்பருக்கு கால் பண்ணினான்.
இந்த முறை சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “ஹலோ நான் அபிநயா பேசுறேன்.” என்றாள்.

“ஓ!... அபிநயாவா நேத்து....அதாவது இரண்டு நாளைக்கு முன்னாடி வந்தீங்களே அவங்க தானே?”

“ஆமாங்க...அதே அபிநயாதான். நீங்கக்கூட கடலில் குதித்து என்னை காப்பாத்தினீங்களே அதே அபிநயாதான்.”
“என்ன விஷயம் சொல்லுங்க...” என்றான் குரலில் ஆர்வமே இல்லாமல்.

இவளுக்கு வேறு என்ன சொல்வது என்று புரியவில்லை. என் உயிரை காப்பாற்றின உங்கள் நினைவாகவே இருக்கிறேன். நீங்க மட்டும் அந்த நேரத்துக்கு வந்து என்னை காப்பாத்துலேன்னா இந்நேரத்துக்கு நான் செத்துப்போய் மூனாவது நாள் ஆகியிருக்கும். அப்படி இருக்கும்போது என் உயிர காப்பாத்தின உங்கள பத்தியே நெனச்சிகிட்டு இருக்கேன். உங்கள உடனே பாக்கணும்னு தோணுது. அதுக்கு என்ன அர்த்தம்னு எனக்கு புரியல... நன்றி உணர்வா? பாசமா? காதலா? ஏதோ ஒரு உணர்வு எனக்குள் இருந்துகிட்டே இருக்கு. மீண்டும் உங்களை எப்போ சந்திப்பேன்னு மனசெல்லாம் அடிச்சுகிட்டே இருக்கு. உங்கள நான் பாக்கணும் வெக்கத்தை விட்டு சொல்றேன் உடனே உங்கள பாக்கணும்னு.”
இப்படியெல்லாம் சொல்லலாம்னு நினைக்கும்போது அவன் குரலில் இருந்த அந்த சோர்வு இவள் மனதை பிசைந்தது. எனக்குத்தான் அப்படி ஒரு உணர்வா? நான் இப்படி பைத்தியக்காரத்தனமாக யோசிச்சிட்டு இருக்கேன். ஆனா அவனுக்கு என் மேல அப்படி ஒரு உணர்வு இருக்குற மாதிரி தெரியல. எப்படி இருக்கும்? ஏதோ பரிதாபப்பட்டு காப்பாத்தினோம் அத்தோட எல்லாம் முடிஞ்சிடிச்சி அப்படின்னு அதை அப்போதே மறந்திருப்பான்.

“என்னங்க எதுவும் பேச மாட்டேங்கிறீங்க அமைதியாகவே இருக்கீங்க?” என்றான் மறுமுனையில் அவன்

“அதுவந்து...அதுவந்து...எப்படி சொல்றதுன்னே தெரியலங்க...” இவளுக்கு வார்த்தைகள் தொண்டை குழியில் சிக்கிக்கொண்டன.

“எதுவா இருந்தாலும் சொல்லுங்க ஏன் இப்படி தயங்குறீங்க உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா? அல்லது உடம்பு கிடம்பு சரி இல்லையா? ஏதாவது ஹெல்ப் வேணுமா?”

“அதெல்லாம் ஒன்னுமில்லைங்க நான் ஒன்னு சொன்னா நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது.”

“அதெல்லாம் எடுத்துக்க மாட்டேன் சொல்லுங்க...” என்றான் அவள் பேசிய அதே தொனியில்.

“நேற்று ஒரு கனவு கண்டேன். அந்த கனவுல உங்களுக்கு ஒரு ஆபத்து மாதிரி...ஏதோ ஒரு விபத்துல நீங்க மாட்டிக்கிட்ட மாதிரி...அப்படி ஒரு பயங்கரமான கனவு அதிலிருந்தே எனக்கு மனசு சரியில்ல. உங்கள பார்த்தா நல்லா இருக்கும்னு தோணுது. நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க ஒரு உயர்ந்த மனிதர். ஆனா உங்களுக்கு ஒரு பிரச்சினை என்ற உடனே என்னையும் அறியாமல் உங்கள பாக்கணும் போல ஒரு பீலிங் வருது அதுதான் எனக்கு ஒன்னும் புரியல. த...தயவுசெய்து நீங்க தப்பா எ...எடுத்துக்ககூடாது.” எப்படியோ திக்கித்திணறி ஒரு வழியா சமாளித்தாள்.

“அவ்வளவுதானே! அதுக்கு எதுக்கு இந்த அளவுக்கு தயங்குறீங்க? எனக்கும் அதே மாதிரி ஒரு பீலிங்க் வந்துச்சுதான். நானும் கால் பண்ணலான்னு நினைச்சேன். பஸ்டபால் உங்க நம்பர் எங்கிட்ட இல்லை. அடுத்து நீங்க தப்பா நினைச்சிப்பீங்களோன்னு ஒரு தயக்கம். நைட் எனக்கும் ஒரு கனவு வந்திச்சி. நீங்களுக்கும் அதே மாதிரி ஒரு விபத்துல மாட்டிகிட்ட மாதிரி தான் வந்துச்சு நானும் உங்கள பாக்கணுன்னுதான் தான் நினைச்சுட்டு இருந்தேன். நல்ல வேளை நீங்களே எனக்கு கால் பண்ணிட்டீங்க. நீங்க இப்போ பண்ணலைன்னா கொஞ்ச நேரத்துல குமரேசன்கிட்ட நம்பர் வாங்கி நானே உங்களுக்கு பண்ணியிருப்பேன். என்ன உங்க நம்பரை வாங்க மறந்துட்டேன்னு காலையிலிருந்து மண்டையைபோட்டு பிய்ச்சிகிட்டு இருக்கேன். நல்லதாப்போச்சி நீங்களே கால் பண்ணிட்டீங்க...”
என்று அவன் சொன்ன அடுத்த நிமிடம் இவளுக்கு சிரிப்பு வந்துவிட அவனும் இணைந்து சிரித்தான்.

“நம்ப ரெண்டு பேரும் மனசும் ஒன்றாக யோசிச்சுட்டு இருக்கும்னு நினைக்கிறேன்.” என்றவனின் குரல் இளகியிருந்தது.

“எ...எப்ப மீட் ப... பண்ணலான்னு சொல்லுங்க. நீங்க எந்த நாள் சொன்னாலும் எனக்கு ஓகே தான்.” இவள் குரலில் தடுமாற்றம் தெரிந்தது.

“உடனே கிளம்பிவரட்டா?” காதல் தோய்ந்த குரலில் கேட்டான்.

“அ...அதெல்லாம் ஒன்னும் வேணாம் நாளைக்கு நானே உங்களை தேடி வரேன்.” பதில் சொன்னாள்.

“ஏன் உங்க வீட்டுக்கு நான் வந்தா என்ன கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிடுவீங்களா?”

“அப்படி இல்லைங்க உங்களுக்கு எதுக்கு சிரமம்? அடுத்து இங்கே வந்தாலும் நீங்க யாரு என்னன்னு ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பாங்க. நான் காலேஜ் போற மாதிரி வீட்டுல சொல்லிட்டு காலேஜ் கட் அடிச்சுட்டு வந்திடறேன். உங்களை பார்த்துட்டு உடனே கிளம்பிடுறேன்.”
அவள் சொல்வதும் சரி என்றே பட்டது. சில நொடி அமைதிக்கு பின்னால்,

“ஓகே என்னால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது. நீங்களே வாங்க. வர்றதுதான் வரீங்க கொஞ்சம் சீக்கிரமா வந்திடுங்க. அப்புறம் என்னுடைய ஷாப் தெரியும்ல நேர ஷாப்புக்கு வந்துடுங்க. கடல் அலையை பார்க்க கடலுக்கு போயிடாதீங்க திரும்பவும் அங்க வந்து காப்பாற்றுவதற்கு எனக்கு தெம்பு இல்லை.”
என்று அவன் சொல்லிவிட்டு உரக்க சிரித்தான். இவளும் வெட்கப்பட்டு சிரித்தாள். அது தான் இவர்களின் காதலின் ஆரம்பம்.

அவள் சொன்னது மாதிரி அடுத்த நாள் கல்லூரியை கட் அடித்துவிட்டு அவனைப் பார்க்க மகாபலிபுரம் சென்றாள். அந்த முதல் சந்திப்பில்தான் இருவருக்குள்ளும் ஒரு புரிதல் உண்டானது. அவனுடைய கடையில் அவன் அமர்ந்திருக்கும் எதிர் இருக்கையில் அமர்ந்தாள். ஒன்றுமே பேசாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்த அவளை பார்வையால் பருகிக் கொண்டிருந்தான் வேழவேந்தன்.

“ஏதாவது பேசுங்க...இப்படியே என் முகத்தையே பார்த்துகிட்டு இருந்தா எனக்கு ஒரு மாதிரி இருக்கில்ல...” என்றான்.
பொய் கோபத்தோடு அவன் முகத்தை எறிட்டவள், அவன் பார்வையை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் தலையை கவிழ்த்துக்கொண்டாள்.

“நான் ஒன்னு சொல்லட்டா...நீங்க பக்கத்துல இருக்கும்போது எனக்கு பேச்சே வரமாட்டுது. ஒரே பட படப்பா இருக்கு...” அவன் அவள் அவள் அருகே சாய்ந்து ரகசிய குரலில் கூறினான்.

“ஐயே...இதெல்லாம் நான் பேசுற டயலக்குங்க. ஆனா நீங்க பேசிகிட்டு இருக்கீங்க...? ஆமா... நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?” பேச்சை மாற்றினாள்.

“ம்கும்...சொல்லுங்க?” குரலில் சுரத்தே இல்லாமல் கேட்டான்.

“ ‘வேழவேந்தன்னு’ உங்களுக்கு இந்த பெயரை வச்சது யாருங்க?”

“ஏன் இந்த பெயர் நல்லா இல்லையா?”

“வித்தியாசமான பெயரா இருக்கே! அதான் கேட்டேன்.”

“அது ஒன்னுமில்லங்க, எங்க அப்பா பெயர் முருகவேல். அவர் சின்ன வயசுல எங்க தாத்தாக்கூட சண்டைப்போட்டுகிட்டு ராத்திரியோட ராத்திரியா சென்னைக்கு ஓடிப்போயிட்டாராம். போன இடம் புது இடம். கையில வேற காசு இல்லையாம். சொர்ந்துப்போய் ஒரு வீட்டுக்கும் முன்னாடி போய் மயக்கம் போட்டு விழுந்துட்டாராம். அந்த வீட்டு ஓனர் ஓடி வந்து முகத்துல தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளிய வச்சு பசிக்கு சாப்பாடும் போட்டிருக்கார். எங்க அப்பா அவர் கையை பிடிச்சிகிட்டு ஏதாவது வேலைப்போட்டு கொடுங்கன்னு கேட்டு இருக்கார். அவரும் மனம் இறங்கி தான் நடத்திக்கொண்டிருந்த பிரிண்டிங் பிரஸ்ல்ல வேலைப்போட்டு கொடுத்து தன் பிள்ளைப்போல பார்த்துகிட்டாராம்.
அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரின் பெயர்தான் வேழவேந்தன். அவர் ஒரு பிரபல எழுத்தாளர். அதன் பிறகு அப்பா தன் சொந்த ஊருக்கு வந்துட்டாராம். ஆனாலும் அந்த எழுத்தாளரை மறக்காமல் வருஷத்துக்கு ஒரு முறையாவது போய் அவரை பார்த்துட்டு வந்துடுவாராம். நன்றிக்கடனா அவருடைய பெயரைத்தான் எனக்கு வச்சிருக்கிறார். என் அப்பா என்னையும் ஒரு நாள் அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னார். ஆனால் இதுவரை போனதில்லை.”

“ஓ....” ஒற்றை புருவத்தை உயர்த்தி அதிசயத்தாள்.
சற்று நேரத்தில் இரண்டு ஜூஸ்சோடு வந்தான் கடைப்பையன் எடுத்துக்குங்க என்றான் அவன் ஒன்று எடுத்துக் கொண்டு அவளிடம் ஒன்றை எடுத்துக்கொடுத்தான்.

“நாம ரெண்டு பேரும் உக்கார்ந்து இருக்குறதை கட பையன் ஒரு மாதிரி பார்த்துட்டு போறான் பாத்தீங்களா?” என்றான் வேழவேந்தன்.

“ஆமாங்க ஏதோ சந்தேகத்தோட பார்த்துட்டு போன மாதிரி தெரியுது.” என்றாள் இவள்.

“நீங்க ஒன்னு பண்ணுங்க ஒரு ஆட்டோ பிடிச்சிகிட்டு கடற்கரைக்கு போங்க, நான் என் வண்டியில் அங்க வந்துடுறேன்.”

“சரி” என்று தலையை அசைத்துவிட்டு அவள் முன்னே செல்ல 5 நிமிடம் கழித்து அவளை தேடி கொண்டு வந்தான் வேழவேந்தன். கடலலைகள் பச்சைக்கொடி காட்டி காதலை வரவேற்றது.
அதன் பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்தார்கள். கிட்டத்தட்ட வாரத்திற்கு இரண்டு மூன்று தினங்களாவது அவர்களின் சந்திப்பு தொடர்ந்தது.
அபிநயா அவனை அடிக்கடி தேடி வரத்தொடங்கினாள். அப்படி அவள் வராத நாட்களில் அவளைத் தேடி கல்லூரி வாசலில் நிற்பான் வேழவேந்தன்.
இருவரும் உலகத்திலுள்ள எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசினார்கள். கண்ணில் பட்டதை எல்லாம் ரசித்து சிரித்தார்கள். பொதுவாக எதைப்பற்றியும் வேழவேந்தனின் பார்வை சற்று தீவிரமாகவே இருக்கும்.
அபிநயா எல்லாவற்றையும் இலகுவாக எடுப்பவள். ஒவ்வொன்றிலும் இருவரும் ஒத்துப் போவார்கள் என்று சொல்ல முடியாது.
ஆனால் அடிப்படைத் தன்மையாக இருவருக்குமே நகைச்சுவை உணர்வு இருக்கவே அவர்கள் இருக்கும் இடத்தில் அடிக்கடி சிரிப்பொலி கேட்பது வழக்கமாயிற்று. அவரவர் தங்கள் குடும்பத்தைப் பற்றி வெளிப்படையாக பேசிக் கொண்டனர்.
வேழவேந்தன் தன்னுடைய தந்தையை பற்றி சொல்லும்போது மிகவும் அதிசயப்பட்டாள் அபிநயா. இவ்வளவு திறமைகளோடு குடும்பத்துக்காக கஷ்டப்பட்டு உழைக்கும் ஒரு குடும்பத் தலைவனால்தான் பிள்ளைகளை நல்லவர்களாக வளர்க முடியும் என்று நம்பினாள்.

தன்னுடைய குலத்தொழிலோடு மட்டும் விட்டுவிடாமல் மகனை இரண்டு டிகிரி படித்த வைத்திருக்கும் அவருடைய கல்வியின் தாகத்தையும் இவளால் புரிந்துகொள்ள முடிந்தது. வேழவேந்தன் ‘எம்பிஏ’ முடித்திருந்தான்.

“இது மட்டும் போதாது அபி நான் இன்னமும் வளர வேண்டும்.” என்று உணர்ச்சிவசத்தோடு அவர் கூறியபோது,

“இன்னமும் வளர வேண்டுமா? இப்பவே கூரை தலையில் இடிக்கிற அளவுக்கு வளர்ந்து இருக்கீங்க! இன்னும் வளர்ந்தால் வீட்டுக்கு வெளியிலதான் தலை தெரியும்.” என்று சிரித்தவளை செல்லமாக அடிக்க கை ஓங்கினான்.

“அய்யோ அடிக்காதீங்க....அடிக்காதீங்க...என்று பொய்யாக நடித்தவளை பார்த்து தன்னை மீறி சிரித்துவிட்டான். அவனது வெண்ணிற பல்வரிசை பளிச்சிடுவதை ரசித்தவள் அவன் சிரிப்பில் தன்னையும் இணைத்துக்கொண்டாள்.

“ஏற்கனவே ஒரு நல்ல நிலையில் தான் இருக்கிறீங்க வேழவேந்தன். இன்னும் நல்ல நிலைக்கு வரணும்னு ஏதோ சொல்றீங்க பாரு அங்கதான் நீங்க நிக்கிறீங்க வேழவேந்தன். மனுஷனுக்கு பணம் காசுதான் முக்கியம். பணம் கொடுத்தால் யாரவது வேணான்னு சொல்லுவாங்களா?” அவள் குரலில் கேலி இழையோடியது.

“அபி...உனக்கு எங்களைப் போன்ற மக்களின் சுழ்நிலை புரியவில்லை. அதான் இப்படி பேசுறே. பணம் மட்டும் குறிக்கோள் இல்லை. அதை நான் கேட்கவும் இல்லை. ஆனால் எங்க ஊர் மக்கள் இன்னமும் அவல நிலையில்தான் இருக்கிறார்கள் அடித்தட்டு நிலையில்தான் வாழ்கிறார்கள். அதை நினைச்சாதான் மனசுக்கு வேதனையா இருக்கு. அவங்களுக்கெல்லாம் எதாவது ஒரு விதத்தில் உதவி செய்யனுன்னு நினைக்கிறேன். அதாவது வெளிநாட்டிலிருந்து கோடிக்கணக்கில் வரும்படி வர்ர அளவுக்கு ஆர்டரை வாங்கி அவங்க வருஷக்கணக்கா வறுமை இல்லாத அளவுக்கு தொழிலையும் வருமானத்தை கொடுக்கணும். என்ற ஒரு எண்ணம் என் மனசுல ரொம்ப நாளா இருந்துட்டு இருக்கு. அதுக்கு எந்த மாதிரியான முயற்சி பண்ணனுமுன்னு எனக்கு இன்னமும் சரியாத் தெரியல.?” என்றவன் எதையோ யோசித்தப்படி அமைதியானான்.
அவனுடைய மனப்போராட்டத்தை இவளால் புரிந்துகொள்ள முடிந்தது. இருவரும் நின்றிருந்த வேப்பமர உச்சியிலிருந்து ஒரு அணில் மற்றொரு அணிலை துரத்திக்கொண்டு ஓட, அதை கவனித்தவள் அவனுடைய மனநிலையை மாற்றும் வண்ணமாக,

“நல்ல வேளை வேப்பமரமாய் இருந்ததாலே தப்பிச்சோம். இதுவே போதிமரமா இருந்தா என்ன ஆகுறது?” அமைதியாக இருந்தவனை வார்த்தைகளால் சீண்டினாள் அபிநயா.

“இதெல்லாம் தெரிஞ்ச பிறகும் இவனோட எப்படி வாழ்க்கையை ஓட்டுறதுன்னு நினைக்கிறீயா? என்ன கல்யாணம் பண்ணிகிட்டா கடைசி வரைக்கும் வாழ்க்கையோட போராடிகிட்டேதான் இருக்கணும். இப்படிப்பட்ட ஒருத்தனோட நீ வாழத்தான் வேண்டுமா அபி? இப்பக்கூட ஒன்னும் கெட்டுப்போகல மனமொத்து ரெண்டு பேரும் பிரிந்து அவங்க அவங்க வழியில போயிடலாம்.” என்றான் விட்டேத்தியாக.
பதற்றத்தோடு அவன் வாயை பொத்தினாள் அபிநயா.

“இப்படி இன்னொருமுறை பேசாதீங்க...எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. உங்கள மாதிரி என்னாலயும் பேச முடியும். ஆனா நான் அப்படி பேச விரும்பல...”

“என்ன...என்ன...சொல்லு சொல்லு?” என்று ஊக்கப்படுத்தினவனை கோபத்தோடு முறைத்தாள்.

“கடலில் விழுந்தவளை அப்படியே விட்டிருக்கலாமோ? காப்பாற்றியதால் தானே இப்படி வந்து உயிரை எடுக்கிறாள். என்று தானே நினைக்கிறீங்க? இப்படிப்பட்ட என்னுடைய தொணதொணப்பு இல்லாமல் இருக்குமில்லையா? அப்படி நீங்க நினைகிறீங்களோன்னு எனக்கு தோணுது.?”

“அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. அப்படின்னு நினைக்கிற ஆள் நான் இல்லை.”

“அப்போ நான் மட்டும் அப்படி நினைக்கிறேன் இல்ல உங்கள சொன்னவுடனே கோபம் வருதில்ல. அது மாதிரிதான் நான் உங்களை விட்டு ஓடிவிடுவேன்னு என்று என்னை சொன்னாலும் எனக்கும்தான் கோபம் வரும்." என்று வார்த்தைகளால் அவனை மடக்கினவளை, சட்டென்று அவளருகில் சென்றவன் அவளை அதற்கு மேல் பேச விடாமல் இறுக்க அணைத்து இதழ்பதித்தான்.
இவள் கண்களில் இருந்து இரண்டு துளி கண்ணீர் அவன் மார்பில் புதைந்தது. காதல் ஆழமானது என்கிறார்களே அதனால்தான் இந்த கண்ணீரோ?


அதன் பிறகு அடுத்தடுத்து நிறைய சந்திப்புக்கள் தொடர்ந்தன.
இவளுக்கு அவன் தன்னுடைய செல்போனை தொலைத்தது நினைவுக்கு வந்தது. இவளை காப்பாற்றப் போய் தன்னுடைய செல்போனை தொலைத்தவனுக்கு பிறந்தநாள் பரிசாக ஒரு விலையுயர்ந்த செல் போனை வாங்கி பரிசளித்தாள். இவ்வளவு விலை உயர்ந்த செல் எதற்கு அபிநயா? என்று செல்லமாக கோபித்துக் கொண்டவன், வேறு யாராவது ஒரு பெண் கடலில் விழுந்தால் திரும்பவும் காப்பாற்றப்போய் என் போன் தொலைந்து விட்டால் யார் வாங்கி தருவார்கள்? என்று கிண்டல் பேச்சு பேசி அவளிடம் கொட்டு வாங்கினான்.
திடீரென்று ஒரு நாள் உனக்கு நீச்சல் கற்றுத் தருகிறேன் என்றான்.
மறுக்க முடியாமல் அவளும் கடலில் அவனோடு இறங்கினாள். இதை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டமே கூடிவிட்டது.

“என் காதலியை கண்டவனுங்க எல்லாம் பார்ப்பதா?” என்று கரையேறி விட்டான்.
அதன்பிறகு ஒரு சும்மிங் கிளாஸில் அவளை சேர்த்து விட்டவன் அவள் கற்றுக்கொள்ளும் வரை துணைக்கு வந்து நின்றான். ஒருவழியாக நன்றாகவே கற்றுத்தேர்ந்தாள்.
இப்படி இனிமையாக சென்றுகொண்டிருந்த அவர்களின் காதல் வாழ்க்கையில் திடீர் திருப்பமாக வந்து சேர்ந்தாள் நீலவேணி.

-தொடரும்
 
Last edited:
Top