Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதான் எந்தன் அந்தாதி - அத்தியாயம் 29

Advertisement

daisemaran

Well-known member
Member
அத்தியாயம் 29

அந்த கைவினை பொருட்கள் கண்காட்சி திடல் முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி இருக்க கமிஷனர், அசிஸ்டன்ட் கமிஷனர் என்று சிறப்பு விருந்தினர்களுக்காக அழகான மேடை அமைத்திருந்தான் வேழவேந்தன்.

ஆனாலும் மேடைக்கு எதிர்ப்புறத்தில் விஐபி அமரும் வகையில் பத்து இருக்கைகள் போடப்பட்டிருந்தது. அதில் தான் கார்த்திக்கும் அபிநயாவும் அடுத்தடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தார்கள்.

அபிநயாவை பார்த்தவுடன் கமிஷனர் மேலே வந்து அமருங்கள் என்று அழைத்தார். பரவாயில்லை சார் என்று செய்கையால் சொல்லிவிட்டு எளிமையாகவே மக்களோடு மக்களாய் அமர்ந்துகொண்டாள் அபிநயா.

கமிஷனரும் தலையசைத்து ஓகே என்று விட்டுவிட்டார். காரணம் இதுபோன்ற கூட்டங்களுக்கு எல்லாம் கலெக்டர் வரும்போது சற்று நெருக்கடி ஏற்படலாம். போட்டோ எடுக்கிறேன் மாலை போடுறேன் அப்படி இப்படி என்று சில அன்புத் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், இதுபோன்ற பொது விழாக்களுக்கு வரும்போது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் கூட்டத்தோடு கூட்டமாக வந்து செல்வார்கள். அதை புரிந்து கொண்டுதான் கமிஷனர் அபிநயாவை கட்டாயப்படுத்தாமல் அமைதியானார்.

முதலில் கமிஷனர் பேசினர் அதன் பிறகு அந்த கண்காட்சியைப் பற்றியும் அதற்கான முயற்சி மற்றும் உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருள்கள் அது வாங்கிய இடங்கள் பற்றியும் வேழவேந்தன் பேசினான். அவனுக்கு அடுத்து அந்த ஊர் கவுன்சிலர் பேசினார் அத்தோடு பேச்சு முடிந்துவிட வேழவேந்தன் மூவருக்கும் சிறப்பு செய்வதற்காக மேடைக்கு அழைத்தான்.

இதில் கொஞ்சம் கூட அபிநயாவுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் கார்த்திக்காக வேறுவழியில்லாமல் பொறுத்துக்கொண்டு பொறுமையோடு அமர்ந்திருந்தாள். வேண்டாம் என்று போய்விடலாம் ஆனால் கார்த்திக்கை அவமரியாதை படுத்தியது போல் அல்லவா ஆகிவிடும். வந்ததுதான் வந்தோம் கொஞ்ச நேரம் பல்லை கடிச்சுட்டு இருந்துட்டு கிளம்பிவிட வேண்டியதுதான் என்று நெருப்பின் மேல் நிற்பதுபோல் நின்றிருந்தாள்.


முதலில் கமிஷனருக்கு சிறப்பு செய்யும் போது அவருக்கு சால்வை போர்த்தி ரோஜா மாலை அணிவித்தான். அவர் அவனிடம் ஏதோ சொல்ல,

சிறு புன்னகையோடு மைக்கை கையில் வாங்கி ,

"கமிஷனர் சாருக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு தெரியும். ஆனாலும் நம்ப பழங்கால சம்பிரதாயங்களில் மாலை அணிவிப்பது என்பது மிகவும் சிறப்பான ஒன்று. நமக்கு ரொம்ப பிடிச்சவங்க நாம உயர்வா நினைக்கக் கூடியவங்களுக்கு மாலை அணிவிக்கும் போது அவங்களை சிறப்பிப்பது மட்டுமல்லாமல் நம்மையும் அறியாமல் ஒரு மகிழ்ச்சி உண்டாகும் அதை நான் இப்போ உணர்கிறேன்." என்றான் முகத்தில் பெருமிதத்தோடு.

"அடுத்து அசிஸ்டன்ட் கமிஷனர் கார்த்திக் சார் மேடைக்கு வரும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்." என்றான்.

கார்த்திக் ஒரு தலையசைப்புடன் மேடையை நோக்கி சென்றான். கார்த்திக்குக்கும் சால்வை போர்த்தி ரோஜா மாலை அணிவிக்கப்பட்டது.

கார்த்திக்கின் கழுத்தில் மாலை விழும்போது, இவளுக்கு பக்கென்று இருந்தது. அடுத்தது நாமதான். நம்ம கழுத்துலேயும் மாலை போடுவானோ? இல்ல இல்ல அப்படி எல்லாம் இருக்காது. பொது இடத்தில அந்த மாதிரி ஒரு பொண்ணு கழுத்துல மாலை போடுற அளவுக்கு நம்ம சமுதாயம் மாறல பெண்களுக்கு மாலை போடுவதற்கு யாராவது ஒரு பெண்ணை தான் நியமிப்பார்கள். இல்லன்னா கைகளில் கொடுப்பாங்க. கண்டிப்பாக நம்முடைய கழுத்தில் மாலை போட மாட்டான் என்று மனதை திடமாக வைத்துக் கொண்டாள். என்னதான் கலெக்டராக இருந்தாலும் மற்றவர்களிடம் பழகும்போது தனக்கென்று சில கொள்கைகளும் கோட்பாடுகளையும் வரையறுத்து கொண்டுதானான் பழகினாள்.

மாவட்ட ஆட்சியாளர் அபிநயாவை மேடைக்கு அழைக்கிறேன் என்று சொன்னபோது, நிமிர்ந்த நடையோடு மேடையை நோக்கி சென்றாள் அபிநயா. அபிநயா மேடை ஏறியதும் பலத்த கரகோஷம் எழுந்தது. தலையை அசைத்து எல்லாருக்கும் ஒரு வணக்கத்தை தெரிவித்தாள் அபிநயா.

இவள் மேடையில் ஏறியவுடன் வேழவேந்தன் இடது பக்கமாக திரும்பி யாரையோ அழைத்தான்.

அடுத்த நிமிடமே நவ நாகரீக உடை அணிந்த பெண் ஒருத்தி மேடையேறினாள். மாம்பழ நிற புடவையில் வெள்ளி நிறத்தில் ஜமிக்கியும் ஸ்டோன்களுமாய் புடவை முழுவதும் வேலைப்பாடுகளால் நிறைந்திருக்க, காது கழுத்து கைகள் என வெண்கற்கள் பதித்த நகைகள் ஒளிக்கற்றைகளை வாரியிறைத்து ஜொலித்துக் கொண்டிருந்தது.

அந்த பெண்ணின் முகம் மிகவும் பரிச்சயமானதாய் தோன்ற எங்கே பார்த்திருக்கிறோம் என்று குழம்பினாள் அபிநயா. அந்தப் பெண் மேடையில் ஏறியவுடன் அதிக கரகோஷம் எழுந்தது. கண்களை மறைத்த முடிக்கற்றைகளை லாவகமாக கைகளால் ஒதுக்கியபடி பளிச்சென்ற சிரிப்புடன் அபிநயாவின் அருகில் வந்தாள்.

இப்போது அபிநயாவுக்கு மின்னல் வெட்டியது போல் பளிச்சென்று அவளின் முகம் நினைவுக்கு வந்தது. ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் ஹேர் ஆயில் விளம்பரத்தில் அவளை பார்த்திருக்கிறாள். காற்றில் அலைபாயும் கூந்தலை ஒதுக்குகிறேன் என்று உடலில் இருந்து நழுவிய புடவை முந்தானையை சரிசெய்வது போல் உடலின் அங்க அவயங்களை எடுத்துக்காட்டும் ஒரு கீழ்த்தரமான விளம்பரம் அது. அதை பார்க்கும் ஒவ்வொரு முறையும் முகம் சுளிப்பாள் அபிநயா. முடி வளர்வதற்கான விளம்பரத்தில் உடலை பல கோணங்களில் அசைத்து காட்டுவது எந்த விதத்தில் நியாயம்? ஏன் தான் இந்த விளம்பரதாரர்கள் பணத்தையே குறிக்கோளாகக் கொண்டு இப்படி பட்ட தான விளம்பரங்களை எடுக்கிறார்களோ?? என்று புலம்பியது கூட உண்டு. அப்படிப்பட்ட தான விளம்பரத்தில் நடித்தவள்தான் இந்த யுவதி என்பது இவளுக்கு அப்போது நன்றாகவே நினைவுக்கு வந்தது.

அபிநயாவின் அருகில் நெருங்கி நின்றாள் அந்தப் பெண். அடுத்த நிமிடம் வேழவேந்தன் அவள் கைகளில் ரோஜா மாலையை கொடுத்து,

"நிவி.. மேடத்துக்கு இந்த மாலைய போடு..."என்று மிகவும் உரிமையோடு அவளுடைய கைகளில் ரோஜா மாலையை கொடுத்தான். அவளும் தலையசைத்து புடவையை சரி செய்வது போல பாவனை பண்ணிக்கொண்டு அவன் மீது இரண்டு மூன்று முறை ஒட்டி உரசிக் கொண்டிருந்தாள்.

அந்த நிவி மாலையை கையில் வாங்கினாளே தவிர கவனமெல்லாம் மற்றவர்கள் நம்மை கவனிக்கிறார்களா என்பதிலேயே குறியாக இருந்தது. அபிநயாவின் சங்கு கழுத்தில் அந்த ரோஜா மாலை அணிவித்தவள், அபிநயாவை ஒட்டி வந்து

" மேடம் இந்த புடவையோட கலர் உங்களுக்கு எடுப்பாக இல்லை. லைட் கலர் கட்டுங்க அதுதான் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்னு நினைக்கிறேன்." அவள் சொன்ன மறுநிமிடம் என்ன ரியாக்ட் பண்ணுவது என்று புரியாமல் தலையை மட்டும் அசைத்து வைத்தாள் அபிநயா.

அடுத்து நம்ம ஊர் கலெக்டர் மேடத்துக்கு என்னுடைய சின்ன பரிசு என்று ஒரு பார்சலை கொண்டு வந்து அவள் கைகளில் கொடுத்தான் வேழவேந்தன்.

"இல்ல... சாரி... நான் இந்த மாதிரி பொது இடங்களில் கிப்ட் எல்லாம் வாங்குவதில்லை, இது எனக்கு வேணாம்..." என்று பட்டென்று வாங்க மறுத்தாள் அபிநயா.

அவள் அப்படி சொல்லுவாள் என்று அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான் போலும் அவனுடைய முகம் கருத்து காது சூடானது. சூழ்நிலையை புரிந்து கொண்டு மேடைக்கு மேலே வந்த கார்த்திக்,

"அபியின் சார்பா அத நான் வாங்கிக்கிறேன்..." என்று கை நீட்டி வாங்கிக் கொண்டான்.

எப்படியோ கொடுத்ததை அபிநயா வாங்க மறுத்தாலும் அவள் சார்பில் வேறு ஒருவன் வாங்கிக்கொண்டான் என்ற திருப்தியோடு அங்கிருந்து நகர்ந்தான். ஆனாக அவன் கோபம் முற்றிலும் குறைய வில்லை என்பது அவனுடைய உடல் மொழியிலேயே தெரிந்தது.

அபிநயாவுக்கு அங்கு இரண்டு விஷயங்கள் பிடிக்கவில்லை. ஒன்று கண்ணைப் பறிக்கும் உடையும் ஆபரணங்களையும் அணிந்து கொண்டு அவனை ஒட்டி உரசிக் நின்று பேசும் அந்த விளம்பர யுவதியை பிடிக்கவில்லை. அடுத்தது இந்த மேடைக்கு அழைத்து ரோஜா மாலை அது இது என்று போட்டு இவளை அவனுடைய விருப்பத்திற்குள் அடைக்க நினைக்கும் வேழவேந்தனின் செயல்கள் அறவே பிடிக்கவில்லை. இது இரண்டுமே சேர்த்து அவனை ரியாக்ட் பண்ண வேண்டும் என்று எண்ணியவள் அவனை நோஸ் கட் பண்ணினால் தான் திருந்துவான் என்ற எண்ணத்தில் அந்த கிப்ட் வேண்டவே வேண்டாம் என்று மறுத்து கூறினாள்.

ஒருவழியாக விழா நிறைவு பெற அங்கிருந்து ஒவ்வொருவராக கலைய தொடங்கினர். அந்தப் பெரிய கிரவுண்டில் கிட்டத்தட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட ஸ்டால்கள் வைக்கப்பட்டிருந்தது. வந்தவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு பொருளை வாங்கி சென்றனர்.

வந்ததுக்கு ஏதாவது ஒன்றை வாங்கி செல்ல வேண்டும் என்று கூறினான் கார்த்திக். "சரி" என்று தலை அசைத்தாள்.

"அபிநயா வாங்க கமிஷனரை அனுப்பிட்டா கொஞ்சம் ரிலாக்ஸா எல்லாத்தையும் சுற்றி பார்க்கலாம்." என்றான்.

அதற்குள் கமிஷனரை அந்தப்பக்கமாக வந்துவிட

"சார்...இவங்க அபிநயா, என்னுடைய உட்பி..." என்று இவளை அறிமுகப்படுத்தி வைத்தான்.

" கார்த்திக் உங்களுக்கு வேணும்னா அபிநயா புதிய அறிமுகமா இருக்கலாம். எனக்கு ஆல்ரெடி அறிமுகமானவர்கள் தான்." என்றார் கமிஷனர்.

அவன் அதற்கு மேல் எதுவும் விளக்கம் சொல்லாமல் சிரித்தபடி நின்றிருந்தான். அப்போது தூரத்திலிருந்து வேக வேகமாக நடந்துவந்த வேழவேந்தன் கமிஷனரின் அருகில் வந்தவுடன்

" சார் ரொம்ப நன்றி சார்... அப்படியே அப்பாவோட விஷயத்தையும் கொஞ்சம் நினைவில் வச்சுக்குங்க..." என்று தலையைச் சொறிந்தான்.

" ஓகே ஓகே ஞாபகம் இருக்கு..." என்றவர் அபிநயா, கார்த்திக் பக்கம் திரும்பி,

" வேழவேந்தன் ரொம்ப நல்ல டைப் கார்த்திக் எனக்கு இவர ஒரு எட்டு வருஷமா தெரியும். கடுமையான உழைப்பாளி நேர்மையான மனிதர் ஆனால் அதற்கான அங்கீகாரம் தான் இன்னும் கிடைக்கல குட் பார்சன்..." என்று அவனுடைய தோளை தட்டிக் கொடுத்தார்.

கமிஷனர் அவனை புகழ்ந்து தள்ள கார்த்திக் அதற்கு இசைந்து தலையாட்டி கைகுலுக்கி அவனோடு நட்புறவோடு பேச, அபிநயாவின் கண்கள் மட்டும் இருள் நிறைந்த வெற்று வானத்தை வெறித்துக் கொண்டு இருந்தது.

சில நிமிட பொதுப்படையான பேச்சுக்கு பிறகு கமிஷனர் கிளம்பி செல்ல அபிநயாவும் கார்த்திக்கும் பொருட்கள் விற்கும் ஸ்டாலை நோக்கி திரும்பினர். வேழவேந்தன் எதிர் திசையை நோக்கி சென்றான்.

கார்த்திக்குடன் இணைந்து நடந்த போதும், எங்கிருந்தோ யாருடைய பார்வையோ தன்னை தொடர்வது போல் ஒரு உணர்வுத் தோன்றிக் கொண்டே இருக்க, எங்கிருந்தாவது வேழவேந்தன் தன்னை கவனிக்கிறானா? என்று ஓரிரு முறை திரும்பிப் பார்த்து இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள்.

அந்த வரிசையில் மூன்றாவதாக இருந்த ஸ்டாலின் கலைநயத்துடன் அழகழகாய் செதுக்கப்பட்டு எனாமல் பதிக்கப்பட்டிருந்த நிறைய பீங்கான் பொருட்கள் இருக்க அதில் மலர் கொத்துகள் சொருகி வைக்கும் ஒரு பீங்கான் குடுவை அபிநயாவின் கருத்தை கவர அதை தெரிந்தெடுத்தாள்.

அதற்கு உரிய பணத்தை கொடுத்துவிட்டு தலையை உயர்த்திய போது ஒரு ஐம்பதடி தூரத்தில் மூங்கில் கொம்பில் கட்டப்பட்டிருந்த விளம்பர பலகையை ஒருவர் ஏணியின் மேல் ஏறி கழற்றி கொண்டிருக்க அவருக்கு நேர் கீழே நின்ற வேழவேந்தன் எந்த திசையில் கழற்ற வேண்டும் என்று சத்தமிட்டு கத்தி சொல்லிக்கொண்டிருந்தான்.

ஏதோ விபரீதம் நடக்க போவது போல இவளுக்குள் ஒரு உணர்வு தோன்றியது. தோன்றிய மறு நிமிடமே அந்த அசம்பாவிதம் நடந்தேறியது.

அதாவது மேலே கழற்றி க்கொண்டிருந்த விளம்பரப்பலகை கைதவறி வேழவேந்தனை நோக்கி வந்தது. விழப்போவதை உணர்ந்த மறுநிமிடம் அந்த இடத்திலிருந்து எகிரி குதிக்க முயன்றவனின் கால் ஸ்லிப்பாகி கீழே விழ அவன் மேல் அந்த விளம்பர பலகை விழுந்து நொருங்கியது.

மறுநிமிடம் அங்கு இருந்த கூட்டம் என்ன என்று புரியாமலேயே சிதறி ஆளுக்கொரு திசையில் ஓட, பதறியடித்துக் கொண்டு அவன் இருந்த இடத்தை நோக்கி ஓடினாள் அபிநயா. ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போன கார்த்திக் பிறகு தன்னுணர்வு பெற்றவனாய் அவளை பின் தொடர்ந்து ஓடினான்.

எல்லாமே ஒரு அரை மணி நேரத்தில் நடந்து முடிந்தது கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அந்த சம்பவம் அபிநயாவை ரொம்பவே புரட்டிப்போட்டது. இப்படி நடக்கும் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை இவ்வளவு பெரிய இடத்தில் இப்படி ஒரு விபத்தா? அதுவும் அவனுக்கா இப்படி நடக்க வேண்டும் என்று எண்ணி அதிர்ச்சியிலிருந்து மீளாத துயரத்தோடு அந்தக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே புகுந்து பார்த்தாள்.

செங்குத்தாக விழுந்த அந்த விளம்பர பலகை வேழவேந்தனின் வலது கையைப் பதம் பார்த்திருந்தது. மயங்கிய ரெத்த வெள்ளத்தில் விழுந்துகிடந்த வேழவேந்தனை பார்த்து பதறிப் போனாள் அபிநயா.

"என்னாச்சு என்னாச்சு எல்லாரும் கொஞ்சம் தள்ளுங்க ப்ளீஸ்... காத்து வரட்டும்... உடனே ஆம்புலன்ஸ் கூப்பிடனும். யாராவது ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணுங்க..."

"அபிநயா பதட்டப்படாதீர்கள் ரிலாக்ஸா இருங்க ஆம்புலன்ஸ் கால் பண்ணிட்டேன் ஐந்து நிமிடத்தில் வந்துடும்..." என்று கார்த்திக்கின் குரலை கேட்ட பிறகுதான் சுய உணர்வு திரும்பியது.

குறிப்பிட்ட நேரத்தில் ஆம்புலன்ஸ் வரவழைத்து அதில் வேழவேந்தனை ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு பின்னாலேயே அபிநயாவும் கார்த்திக்கும் சென்று அவனை அட்மிட் பண்ணி விட்டு சம்பிரதாயங்கள் எல்லாம் முடித்து,

" ஒன்னும் பிரச்சனை இல்ல எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் எலும்பு நொறுங்கி இருக்கு. சின்ன ஆபரேஷன் பண்ணனும். த்ரீ டேஸ்ல வீட்டுக்குபோயிடலாம்." என்று டாக்டர் உத்தரவாதம் தந்த பிறகுதான் அபிநயாவுக்கு நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது.

டாக்டரிடம் வேழவேந்தனின் வீட்டிற்கு தகவல் சொல்லி விடுங்கள் என்று சொல்லிவிட்டு இருவரும் அபிநயா வீட்டிற்கு வரும்போது இரவு பனிரெண்டு.

அதற்குள் அவளின் அப்பா அம்மாவிடமிருந்து நான்கைந்து போன் வந்திருந்தது.

"அம்மா அந்த இடத்தில் ஒரு சின்ன ப்ராப்ளம் ஒரு ஆக்சிடெண்ட் அந்த நபரை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி விட்டு வர கொஞ்சம் லேட்டாகும் புரிஞ்சுக்கோ... பனிரெண்டு மணிக்குள்ள வந்து விடுவேன்." என்று சொன்னாலும்,

" எந்த இடத்தில் இருக்கிறே..? நான் வேணா வரட்டுமா?" என்று அப்பா பதற்றத்துடன் பேசினார்.

"எனக்கு ஒன்னும் இல்ல நான் அட்மிட் பண்ணிட்டு நேரா வீட்டுக்கு தான் வருவேன். பக்கத்துல கார்த்திக் இருக்காரு பேசுறீங்களா?" என்று போனை கார்த்திக்கிடம் கொடுத்து கார்த்திக் பேசிய பிறகுதான் இருவரும் சமாதானம் அடைந்தார்கள்.

"தனியா போகவேண்டாம் அபிநயா.. நான் உங்கள வீட்ல டிராப் பண்றேன்..." என்று ஹாஸ்பிடலில் இருந்து இருவரும் கிளம்பி அபிநயாவின் வீட்டில் வந்து அவளை விட்டு விட்டு சென்றான் கார்த்திக்.

இரவெல்லாம் தூக்கம் இன்றி விழித்துக்கொண்டே கிடந்தாள். அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்த அந்த பலகை எந்த அளவுக்கு அவனைத் தாக்கி இருந்தால் நினைவற்று கிடந்து இருப்பான். கடவுளே வேழவேந்தன் எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும். அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது. நல்லவேளை நான் உருண்டு பெரண்டு அழவில்லை. அப்படி நடந்திருந்தால் அதை விட ஒரு பெரிய அவமானம் வேறு எதுவும் இருக்கமுடியாது. கார்த்திக் என்ன பத்தி என்ன நினைத்திருப்பார்? முன்பின் தெரியாத யாரோ ஒருவனுக்காக இந்த அளவுக்கு பதறுவதாக என்னைப் பற்றி தப்பாக நினைக்க வாய்ப்பிருக்கிறது. நல்லவேளை அப்படி எதுவும் அவர் நினைத்தது போல் தெரியவில்லை.

பலதும் எண்ணி வெகு நேரத்திற்குப் பிறகு தூங்கியவள் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக ஹாஸ்பிடலுக்கு கால் பண்ணி வேழவேந்தனைப் பற்றி விசாரித்தாள்.

'மேடம் ஒன்னும் பிரச்சனை இல்ல மேடம் ஆபரேஷன் நல்லபடியாக முடிஞ்சிடுச்சு. அவரும் கண்விழித்து நார்மல் ஆகிவிட்டார் . நாளைக்கு அல்லது நாளை மறுநாள் காலையில் டிஸ்சார்ஜ் பண்ணி விடுவோம் வீட்ல இருந்து பார்த்துக்கலாம்." என்றார் டாக்டர்.

டாக்டர் சொன்னதைக் கேட்ட பிறகுதான் அவளின் மனம் நிம்மதியடைந்தது.

ஆனால் இரண்டு நாட்கள் எப்படியோ பொறுமையாக இருந்தவள், மூன்றாவது நாள் அவனை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு அலுவலகத்திலிருந்து அரசாங்க வாகனத்தை தவிர்த்துவிட்டு ஆட்டோ பிடித்து அவனுடைய வீட்டிற்கு கிளம்பி போனாள்.

ஆனாலும் மனசு படபடப்பாக இருந்தது அவனுடைய மனைவி எப்படி இவளை ரிசீவ் பண்ணுவாள் என்ற குழப்பம் மேலோங்கி இருந்தது.

ஆனால் அவனுடைய வீட்டை கண்டுபிடித்து இவள் அங்கு போய் இறங்கியபோது இவளை ரிசீவ் பண்ணியது அவனுடைய அம்மா.

அபிநயா தன்னை யார் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட போது அந்த அம்மாவின் கண்களில் கண்ணீர் வடிந்தது.

" நல்லா இருக்கியா மா எப்படியோ நினைச்சாம் எப்படியெல்லாமோ நடந்திடிச்சி..." என்று முந்தானையால் கண்களைத் துடைத்தபடி இவளை அழைத்து அமர வைத்தார்கள்.

அந்த வீடு பெரிய அரண்மனை போல் இருந்தது. வீட்டிற்குள் நுழைந்து சோபாவில் இவள் அமர்ந்தவுடன் தம்பி பிள்ளைங்க எல்லாம் மேலே இருக்குதுங்க, கூட்டிட்டு போறேன். முதல்ல என்ன சாப்பிடுறேம்மா.." என்று கேட்டாள்.

"தண்ணி கொடுங்க போதும்..."

ஆனால் அந்த அம்மா சர்வன்டிடம் சூடான காபியை ஸ்னாக்ஸ் எடுத்து வந்து கொடுக்க சொன்னார்கள். கூடவே நம்ம தோட்டத்தில் பூத்தது. நானே கட்டியது இந்தா வச்சுக்கோ என்று அந்த மல்லிகை பூச்சரத்தையும் இவளிடம் நீட்டினார்கள்.

மறுக்க மனமின்றி வாங்கிக்கொண்டாள். மல்லியை நெருக்கமாகத் தொடுக்க கொஞ்சம் ப்ராக்டீஸ் இருக்கவேண்டும். ஒரே புறமாய்த் தொடுத்து, இரண்டு நுனியிலுள்ள நூல்களை இணைத்து ஊசியில் கோர்த்த பூப்பந்து போல அழகாய் இருந்தது மறுக்க மனமின்றி கை நீட்டி வாங்கி தலையில் சூடிக் கொண்டாள்.

கோவையில் க்ராஸ்கட் ரோடில் மாலை போல நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட மல்லிகைச் சரம் கிடைக்கும்னு கேள்விப்பட்டு ஒருமுறை இதற்காகவே அம்மாவை அழைத்து வந்து ஐந்து முழம் மல்லிகை சரத்தை வாங்கினாள் அபிநயா.
மற்றபடி பூக்காரர்களிடம் கிடைக்கும் சரம் அவ்வளவு நெருக்கமாக இராது.

ஊரில் அத்தை வீடு இருக்கும் ஏரியாவில் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் தவறாமல் இந்தக் கொடி வளர்த்திருக்காங்க. ஜாதிப்பூ மணம் அபாரமாய் இருக்கும், சிலருக்கு ஒவ்வாமல் தலைவலி கூட வரும் என்பார்கள். மாலையில் மலரும், மல்லி-முல்லை போல மாலைநேரம் மொக்குகளைப் பறித்து தொடுத்து அபிநயாவின் நீண்ட கூந்தலில் இரட்டை ஜடை போட்டு படுக்கை வாட்டில் பட்டையாக வைத்து விடுவாள் அத்தை. பூச்சரத்தை பார்க்கும் போதெல்லாம் தவறாமல் அந்த நினைவு வந்துவிடும்.

"அம்மா யாரு வந்திருக்கா...? " மேலிருந்து வேழவேந்தனின் குரல் கணீரென்று ஒலித்தது.
 
Last edited:
Top