Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதான் எந்தன் அந்தாதி -அத்தியாயம் -25

Advertisement

daisemaran

Well-known member
Member

அத்தியாயம் 25

அபிநயா கொடுத்த கடிதத்தை வாங்காமல் சிரித்த முகத்தோடு அவளையே பார்த்துக்கொண்டு நின்றான் வேழவேந்தன்.

இந்த சிரிப்பு, இந்த காதல் பார்வை இவற்றை எல்லாம் ரசிக்கும் மனநிலையில் அவள் இப்போது இல்லை என்பது அவனுக்கு தெரியாமலா இருக்கும். ஆனாலும் ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறான் என்று நெற்றியை சுருக்கி நேருக்கு நேராக பார்த்து,

"இந்தாங்க அந்த லெட்டர்..." என்றாள் அபிநயா.

லெட்டரை கையில் வாங்கியவன் இடத்தை விட்டு நகராமல் அப்படியே நின்றான்.

"சொல்லுங்க வே... வேழவேந்தன் வேற ஏதாவது சொல்லனுமா...?" அபிநயா சற்று சலிப்புடனே கேட்டாள்.

தொண்டையை லேசாக செருமிக்கொண்டவன் அவள் கண்களை ஏறிட்டு,

"மேடம் ஒரு விஷயம் சொல்லணும்... அதை எப்படி சொல்றதுன்னு தான் கொஞ்சம் தயக்கமா இருக்கு... நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க கூடாது. இது கொஞ்சம் பர்சனல் தான் ஆனா உங்களை பார்த்த உடனே அதை சொல்லனும்னு தோணிச்சி.. அதனாலதான் சொல்லலாமா.. வேண்டாமா.. என்று இவ்வளவு நேரம் யோசிச்சுட்டு இருந்தேன்.!!"

"சுத்தி வளைக்காமல் சொல்ல வந்த விஷயத்தை சொல்லிட்டு கிளம்புங்க,.. எனக்கு ஆபீஷியல் வொர்க் நிறையா இருக்கு. நேத்துல இருந்து என்னுடைய ஆபீஷியல் வொர்க் எதையும் நான் பண்ணல, ப்ளீஸ் என்ன விஷயமாக இருந்தாலும் கொஞ்சம் சீக்கிரம் சொல்லிட்டு போனீங்கன்னா நல்லா இருக்கும்." மனதை கல்லாக்கி கொண்டு முகச்சுளிப்புடன் கூறினாள் அபிநயா.

"மேடம்...அது வந்து...நீங்கள் உடுத்தி இருக்கிற இந்த புடவை ரொம்ப அழகா இருக்கு. முன்பெல்லாம் எனக்கு கூட இந்த நிறம் என்றால் ரொம்ப பிடிக்கும். என்னுடைய ஃபேவரைட் கலர்ன்னு கூட சொல்லலாம். என் மாஜி காதலியிடம் இதுமாதிரி மஞ்சளும் கறுப்பும் கலந்த காம்பினேஷனில் உடுத்த சொல்வேன். அவளும் என்னுடைய மனதை புரிந்து கொண்டு அடிக்கடி இந்த நிற உடைகளை அணிந்து கொண்டு வருவாள். உங்களை அதே நிற உடையில் பார்த்தவுடன் அவளுடைய ஞாபகம் வந்துவிட்டது. இருந்தாலும் முடிந்துபோன வாழ்க்கையை பற்றி நினைக்ககூடாது என்று என்னையே நான் கண்ட்ரோல் பண்ணிக் கொண்டேன்.என் மனைவிக்கு துரோகம் பண்ண கூடாது இல்லையா? அந்த எண்ணத்தில்தான். ஆனாலும் உண்மையை சொல்லனும்னா உங்களுக்கு இந்த புடவை கன கச்சிதமா ரொம்பவே அழகா இருக்கு. ஏதோ சொல்லனும்னு மனசுக்கு தோணிச்சு அதனால சொன்னேன். எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க ஓகே அப்போ நான் கிளம்பட்டுமா...?"

அவன் பேசியதை கேட்ட மறுநிமிடம் கோபம் தலைக்கேற இன்டர்காம் எடுத்து,

" ஹலோ அடுத்து யார் இருக்காங்க உள்ள அனுப்புங்க சண்முகம்..." என்றாள்.

இதற்குப் மேலும் இங்கு நிற்பது நல்லதல்ல என்று எண்ணியவனாய், பட்டென்று அறைக் கதவை திறந்து கொண்டு வெளியேறினான்.

எவ்வளவு துணிச்சல் இருந்தா இவ இடத்துக்கே வந்து இப்படி எல்லாம் பேசுவான்? இத்தனை நாளும் அவனையே நினச்சு நெனச்சு ஏங்கி ஏங்கி பைத்தியக்காரி போல அந்த அவனுடைய ஊர்ல ராத்திரி பகல்ன்னு பார்க்காம இவனைத் தேடி சோர்ந்து போய் வந்திருக்கிறேன்.

அவன் நினைச்சிருந்தா ஒரே நாள்ல என்னை தேடி வந்து இருக்கலாம். இவனுக்கு மேகலாவைத்தான் நல்லா தெரியுமே, மேகலாவோட அப்பா வீட்லதான் குமரேசனும் மேகலாவும் குடியிருக்கிறாங்கன்னு தெரியும். அதைவிட ஒரு எளிமையான விஷயம் சென்னையில எங்க வீட்டு வாட்ச்மேன் கிட்ட கேட்டு இருந்தாக்கூட என்னுடைய முகவரியை கொடுத்திருப்பான். எவ்வளவோ வழிகள் இருந்தும் என்ன தேடாம தவிக்க விட்டுட்டு கண்காணாத தேசத்தில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறவன் இப்போ மட்டும் பெருசா பேச வந்துட்டான். யாரு கேட்டா இவன் பாராட்டை. புடவை நல்லா இருந்தா இவனுக்கு என்ன? மூஞ்சி நல்லா இருந்தா இவனுக்கு என்ன? இனிமே இவனை அலுவலக அறையில் அனுமதிக்கப்போவதில்லை. வேண்டாம் அதுக்கப்புறம் திரும்பத் திரும்ப வந்து கண் முன்னாடி நின்னு என் மனச மாற்றுவதாக நெனச்சுக்கிட்டு எனக்கிருக்குற கொஞ்ச நஞ்ச நிம்மதியை கெடுத்துடுவான். அது மட்டும் கண்டிப்பா நடக்காது. அதுக்கு இடம் கொடுக்கவும் கூடாது.

ஒரு விஷயத்தை மறப்பதற்காக இன்னொரு விஷயத்தில் கவனம் செலுத்துவதுப் போல், அவனுடைய நினைவை முற்றிலும் மறக்க வேண்டும் என்பதற்காக பெண்டிங் வைத்திருந்த மொத்த வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு மாங்கு மாங்கு என்று ஒரே மூச்சில் செய்து முடித்தாள்.

அன்று மாலை அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு கிளம்பும் போது கார்த்திக்கிடம் இருந்து போன் வந்தது.

"ஹலோ சொல்லுங்க கார்த்திக்...ஆமாம்... ப்ரீயா தான் இருக்கேன்.... பரவால்ல சொல்லுங்க? வேலை எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு கிளம்பப்போறேன்... ஒன்னும் பிரச்சனை இல்ல ப்ரீயா தான் இருக்கேன் சொல்லுங்க..."

"அபிநயா நாளைக்கு காலையில நான் கோயம்புத்தூர் வரேன். கமிஷனர் கூடத் தான் வரேன். அவர் ஏதோ கல்ச்சுரல் ப்ரோக்ராம் அட்டன்ட் பண்ண போறாராம். அதுக்கு என்னையும் இன்வைட் பண்ணி இருக்கார். ஒரு மூணு நாட்கள் கோயம்புத்தூர்லதான் இருப்பேன். அப்படியே நீங்க ஃப்ரீயா இருந்தா உங்களையும் மீட் பண்ணலாம்னு பார்த்தேன். இல்ல.... அபிநயா உங்க வீட்டுக்கு வருவது கொஞ்சம் கஷ்டம்தான். நீங்க ஆபீஸ் ஒர்க் எதுவும் இல்லாமல் ஃப்ரீயா இருக்கும்போது சொல்லுங்க வெளில எங்காவது மீட் பண்ணலாம்..." என்ற அவனின் குரலில் ஒரு இளக்கம் தெரிந்தது. முன்பானால் யாரோ மூன்றாவது மனிதரிடம் பேசுவதுபோல சற்று ஒதுக்கமாகவே பேசுவான். இப்போது அவனோட குரல் இயல்பாய் கொஞ்சம் நெருக்கமாக பேசுற மாதிரி இவளுக்கு தோன்றியது.

இவன்தான் மாப்பிள்ளை இவள்தான் பொண்ணு என்று நிச்சயம் பண்ணி பூவைத்து மோதிரம் போட்டவனுக்கு இந்த அளவுக்கு கூட பேச உரிமை இல்லையா என்ற கேள்வி இவளுக்கு எழத்தான் செய்தது. அவன் அப்படி என்ன பெருசா கேட்டுட்டான்?. நேரம் இருந்தா உங்கூட பேசுறேன்னு சொல்றான். இது ஒரு பெரிய தப்போ, எல்லை மீறுதலோ கிடையாது. உங்களை சந்திக்க விருப்பம் இல்லை என்றோ முடியாது என்றோ மறுக்க வேண்டிய அவசியமில்லை. இன்னும் சொல்லப் போனால் இது அவளுக்கு கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பம் என்றே சொல்லலாம். இயல்பான அவனுடை அழைப்பை ஏற்று அவனிடம் மனம் விட்டு பேசக் கூடிய ஒரு நல்ல சந்தர்ப்பம்.

அபிநயாவை பொருத்தவரை தானாகத் தேடி வரும் ஒரு நல்ல வாய்ப்பு. அபிநயாவின் பழைய காதலை பற்றி கார்த்திக்கிடம் சொல்லிடலாம். இவளுடைய மனதை உறுத்திக் கொண்டிருக்கும் அந்த விஷயத்தை சொல்ல இதைவிட ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைப்பது அரிது என்ற முடிவோடு,

"ஓகே கார்த்திக் நீங்க கோயம்புத்தூர் வந்ததுக்கு அப்புறம் எனக்கு கால் பண்ணுங்க ஆபீஸ் வொர்க் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு சொல்றேன் நாம கண்டிப்பா மீட் பண்ணலாம்."என்றாள்.

மறுமுனை பதிலற்று அமைதியாக இருக்க ஒரு வேளை போன் லயன் கட்டாயிடுச்சோ?? என்ற சந்தேகத்தில்,

" ஹலோ.. ஹலோ.. ஹலோ கார்த்திக், லைன்ல இருக்கீங்களா...?" என்று கேட்டாள்.

மறுமுனையில் கார்த்திக்கின் கனைப்பு சத்தம் கேட்டது. பிறகு அவள் கேட்டதற்கு பதில் சொன்னான்

"அபிநயா என் காதுகளை என்னாலேயே நம்ப முடியல!! நீங்கதான் பேசுறீங்களா?? என்று எனக்கு ஒரே ஆச்சரியமாயிடுச்சி!! ஏன்னா இதுவரைக்கும் நீங்க எங்கிட்ட மனம்விட்டு பேசினதே இல்லை. இதுதான் முதல் முறை.. அதுவும் நான் கேட்டவுடன் வர சம்பாதித்தது எனக்கு மிகப் பெரிய சந்தோஷமா இருக்கு. அதுதான் உடனே பதில் பேச முடியாமல் திணறிக்கிட்டு இருந்தேன்."

அவன் சொன்னதைக் கேட்டவுடன் இவளுக்கு சிரிப்புதான் வந்தது.

"ஓகே கார்த்திக் நான் வீட்டுக்கு கிளம்புறேன். நீங்க கோயம்புத்தூர் வந்ததுக்கப்புறம் எனக்கு கால் பண்ணுங்க சரியா பை.."

அன்று சீக்கிரமாகவே வீட்டுக்கு சென்றுவிட்டாள்.

"அபிநயா ஷாப்பிங் போகணும் வீட்டுக்கு தேவையான திங்ஸ் கொஞ்சம் வாங்கணும் டிரைவரை அனுப்பிடாதே... !!" என்றாள் அம்மா.

எத்தனையோ முறை இவள் அம்மாவிடம் சொல்லி இருக்கிறாள் அபிஷியல் ஒர்க்கை தவிர மற்ற வேலைக்கு ஆபீஸ் காரை பயன்படுத்த வேண்டாம் என்று ஆனாலும் அம்மா திரும்பத் திரும்ப அதையே தான் சொல்கிறாள்.

" நம்ம கிட்ட தான் கார் இருக்கேம்மா நான் ஓட்டிட்டு வரேன். நாம ரெண்டு பேரும் போகலாம்.." என்று சொன்னபோது,

"ஒரு பொருளை வாங்குறோம்னா பொறுமையா ஆர அமர பார்த்து வாங்கணும். அந்த அளவுக்கு உனக்கு பொறுமை இருக்காது. நான் போனேனா எல்லாத்தையும் பொறுமையா பார்த்து வாங்கிட்டு வருவேன். அதனாலதான் டிரைவரை இருக்க சொல்றேன்."

"நீங்க என்ன வாங்கணும் அத முதல்ல சொல்லுங்க..?"

"மிக்சி ரிப்பேர் ஆயிடுச்சு.. புது மிக்ஸி வாங்கணும், புது மாடல் மைக்ரோ ஓவன் வந்து இருக்காம் பக்கத்து வீட்டு மாமி சொன்னாங்க அது என்ன மாடல் என்று விசாரிச்சு வாங்கனும். இப்படி இரண்டு மூன்று வேலை இருக்கு பகல்ல டைம் இருக்க மாட்டேங்குது. உங்க அப்பாவும் இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம் நான் வரல அப்படின்னு தட்டிக்கழிக்குறாரு, டெய்லி நீ வரத்துக்கும் லேட் ஆயிடுது. இன்னைக்கு தான் அதிசயமா அஞ்சு மணிக்கே வந்து இருக்கே, ம்ம் நான் சொல்லி ஒன்னும் நடக்கப்போவது இல்லை போகலாம்..'" என்றாள்.

"ஓகே மா இன்னிக்கு நான் உங்க கூட வரேன்... எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை மெதுவா பர்சேஸ் பண்ணிட்டு வாங்க...சரியா?" என்றாள் அபிநயா.

"சரி சரி போகலாம்...நீ கை கால் கழுவிட்டு வா நான் காபி எடுத்து வைக்கிறேன்."

"சரிம்மா..." என்றவள் டிரைவரை அனுப்பி விட்டு கை கால் முகம் கழுவி வேறு உடைக்கு மாறியபோது, கழற்றி போட்ட மஞ்சள் புடவை கண்ணில்பட்டது. காரணமே இல்லாமல் வேழவேந்தனின் முகம் கண் முன்னால் வந்து போனது.

சரியாக ஐந்தரை மணிக்கெல்லாம் அவள் அம்மாவை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் கிளம்பினாள் அபிநயா.

அது ஒரு பெரிய மால் எல்லா பொருள்களையும் ஒரே இடத்தில் வாங்கிக் கொள்ளலாம் என்ற காரணத்தால் அபிநயா அடிக்கடி இங்கு வருவது வழக்கம். உடன் வருபவர்கள் அந்த மால் குள்ளே எங்காவது மிஸ்சாகி விட்டால் தேடுவது மிகவும் கடினம் என்பதற்காக உள்ளே நுழையும்போதே அம்மாவிடம் எல்லா பொருட்களையும் வாங்கி முடித்தவுடன் இந்த இடத்துக்கு வந்துடுங்க, இங்கு வந்த பிறகு எனக்கு கால் பண்ணுங்க!! என்று ஒரு முறைக்கு இரு முறை தெளிவாக சொல்லிவிட்டு தனக்குத் தேவையான பொருட்களை வாங்க மேல் தளத்திற்கு சென்றாள்.

அங்கே ஒரு ஆர்ட்டிஃபிஷியல் நகை கடை இருந்தது. அபிநயாவுக்கு என்று தங்க வைர நகைகளை விதவிதமாக வாங்கி அடுக்கி வைத்திருந்தார்கள் அவளுடைய பெற்றோர்கள். ஆனாலும் அதையெல்லாம் அணிந்துக்கொள்ள அவள் விரும்பியதே இல்லை. அவளுக்கு எப்போதும் பிடித்தது பிளாக் மெட்டல் நகைகள்தான். அந்த மாலில் குறிப்பிட்ட அந்த கடையில்தான் வெரைட்டியான டிசைனில் நகைகள் கிடைக்கும் என்பதால் தள்ளு கதவை திறந்து உள்ளே சென்றாள்.

"வாங்க மேடம், வாங்க... நல்லா இருக்கீங்களா உட்காருங்க..!!" என்று அவளை அமர சொன்னார். ஓரிருமுறை கடைக்கி வந்திருப்பதால் ஏற்கனவே அறிமுகமாகி இருந்தார் அந்த கடையின் ஓனர்.

அபிநயாவும் சிறு தலையசைப்போடு அங்கிருந்த சேரில் அமர்ந்தாள்.

புது மாடல் என்று அவர் காட்டிய அந்த நகைகளை மேலோட்டமாக பார்த்துக்கொண்டிருந்தாள் அபிநயா. அப்போது கண்ணாடி கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த நபர்களை தற்செயலாக பார்த்தவளுக்கு பயங்கர அதிர்ச்சி, காரணம் வந்தது வேழவேந்தனும் அவனுடன் ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தையும் தான். அதிர்ச்சியில் மூச்சடைத்து போனாள் அபிநயா.

இவன் எப்படி இங்கே வந்தான். ஒருவேளை நாம இங்க வர்ற விஷயம் அவனுக்கு முன் கூட்டியே தெரிந்து இருக்குமோ? சேச்சே அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பு இல்லை. நான் ஏன் இப்படி எல்லாம் பைத்தியக்காரத்தனமான நினைக்கிறேன். இது பொது இடம் யார் வேணும்னாலும் வரலாம் யார் வேணும்னாலும் போகலாம் இங்கே ஏன் வந்தீங்கன்னா யாரைப் பார்த்து யாரும் கேட்கமுடியாது.
ஆனாலும் இப்பல்லாம் அடிக்கடி இவன் நம்ம கண்ணுல படுறானே??. என்று எண்ணினாள்.

அபிநயாவை அங்கு எதிர்பார்க்காததால் அவன் முகத்திலும் அதே அதிர்ச்சி தெரிந்தது. ஆனாலும் அவளை அறிமுகமானவள் போல் காட்டிக்கொள்ளாமல் விலகி சென்றான். அது இவளுக்கு சற்று நிம்மதி அளித்தது.

" வாங்க சார் வாங்க எப்படி இருக்கீங்க? நம்ம கடை பக்கம் வந்து ரொம்ப நாள் ஆகுது, குட்டி பாப்பாவைப் பார்த்து ஆறு மாசத்துக்கு மேல ஆகுது... பிஸ்னஸ் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு அம்மா நல்லா இருக்காங்களா...?"

" பிசினஸ் கொஞ்சம் டைட்டாதா போய்கிட்டு இருக்கு, அதான் வர முடியல அம்மா நல்லா இருக்காங்க, அப்புறம் ஷானுவுக்கு அடுத்த வாரம் ஸ்கூல்ல டான்ஸ் ப்ரோக்ராம் இருக்கு... அதான் அவளுக்கு ஸ்டோன் வச்ச நெத்திச்சுட்டியும் இடுப்புல போடுற ஒட்டியானமும் வேணுமாம்.. நல்ல டிசைன்ல கொஞ்சம் எடுத்து கொடுங்க..." என்றவனின் பார்வை அபிநயாவின் மேல் படிந்திருந்தது.

"சார் ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க மேடம் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க அவங்களுக்கு கொடுத்துட்டு அதுக்கப்புறம் உங்களுக்கு தரேன்.." என்று தணிந்த குரலில் கூறினார் அந்த கடையின் ஓனர்.

அந்த சமயத்தில் உள்ளே நுழைந்த கடை ஊழியரை பார்த்து,

" ஆசிப்... சார் கேட்கிறதை எடுத்துக்கொடு.." என்றார்.

அபிநயா என்னதான் மனதை கண்ட்ரோல் பண்ணி பார்வையை அவன் பக்கம் திருப்பாமல் பிடிவாதமாய் அமர்ந்திருந்தாலும் அவளின் உள்ளுணர்வு அந்த குழந்தையைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது. குழந்தைக்கு முக சாயல் வேண்டுமானால் அப்பாவைப் போல இருக்கலாம். ஆனால் நிறம் கண்டிப்பாக அவளுடைய அம்மாவை போல்தான் இருக்க வேண்டும். ரோஜாவை ஒத்த நிறம், திராட்சை கண்கள், புசு புசு கண்ணங்கள். ஒரே ஒரு செகண்ட் பார்த்தவளின் மனதில் குழந்தையின் முகம் பசை போட்டு ஒட்டி கொண்டது.

'"டாடி.. டாடி... இது ரொம்ப நல்லா இருக்கு. இது தான் எனக்கு வேணும்.. இங்க வாங்க" என்று வேழவேந்தனின் கையைப் பற்றி இழுத்தது அந்தக் குழந்தை.

'ஓகே ஓகே அதையே வாங்கிக்கோ... " என்று அவன் கையை பற்றி இழுத்த குழந்தையை தூக்கி தோளில் இருத்தி கொண்டான்.

ஆனால் அவனுடைய பார்வை மட்டும் அபிநயாவை விட்டு விலகாமல் அவள் மேலே நிலைத்திருந்தது.
 
Last edited:
Top