Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதான் எந்தன் அந்தாதி- அத்தியாயம்- 14

Advertisement

daisemaran

Well-known member
Member
அத்தியாயம்-14

உலகவரலாற்றில் காலத்துக்குகாலம் ஏதாவது ஒரு இயற்கை அனர்த்தம் மக்கள் மனங்களில் அழியா சுவடுகளை ஏற்ப்படுத்தவே செய்கிறது. அதாவது மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்ட கொள்ளைநோய்கள், சூறாவளிகள், நிலஅதிர்வுகள், எரிமலை வெடிப்புகள், கடும்மழை, கரைபுரண்டோடும் வெள்ளம், பெரும் வறட்சி இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்ட இயற்க்கை சீற்றங்களில் ரணத்தை பதித்துவிட்டு போனதுதான் சுனாமி என்னும் பேரலை.


கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் துயரத்தின் எல்லைக்கு கொண்டு செல்லும் அந்த கோரசம்பவம் நடந்தேறியது. மனித குலம் காணாத இந்த பெரும் பேரழிவு பல்வேறு நாடுகளை சார்ந்த இரண்டு லட்சத்துக்கு மேற்ப்பட்டோர் உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆழிப்பேரலை என்பதை வரலாற்றில் மட்டுமே படித்திருந்த மக்களுக்கு முதல் முறையாக அதை நேரில் காணும் வாய்ப்பை ஏற்படுத்திகொடுத்துவிட்டது இயற்கை.


தன் தாய்தந்தையரோடு கடற்கரை மண்ணில் கால் புதைய நடந்து சென்றது அந்த இரண்டு குழந்தைகளின் பாதங்களும். அழகான குடும்பம். ஐந்து வருடங்களாக தாய் மண்ணை மறந்து இருந்த ராகவன் தன் வடநாட்டு மனைவியுடன் சொந்த மண்ணுக்கு வந்திருந்தார். சொந்த ஊர் கானாடுகாத்தான் உறவு என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை ஒரே ஒரு சித்தப்பாவை தவிர. அவரிடமே எல்லா சொத்துகளையும் ஒப்படைத்துவிட்டு கடல் தாண்டிப்போனவந்தான் பனிரெண்டு வருடத்திற்கு பிறகு தன் கர்பவதியான மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளுடனும் திரும்பி வந்திருக்கிறான்.


ஒரு வேளை சொந்த மண்ணை தேடி வராமல் இருந்திருந்தால், அந்நிய தேசத்திலேயே தங்கள் குடும்பம் சகிதமாய் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம். வாழ்ந்தும் இருப்பார்கள் அதில் எந்த வித ஐயமும் இல்லை.


இனி...


ராகவன் தன்னுடைய மகள் யாரென தனக்கு தெரியும் என்று சொன்னதும் இதை சற்றும் எதிர்பார்க்காத கார்த்திக் அதிர்ச்சியடைந்தான்.


"சார் என்ன சொல்றீங்க உங்க பொண்ணு யாருன்னு உங்களுக்கு தெரியுமா...?


"நன்றாகவே தெரியும்... அவள் யார் வீட்டில் வளர்கிறாள், அவள் இப்போ எப்படி இருக்கிறாள் எல்லாமே எனக்கு தெரியும். ஆனால் அவள்தான் என்னுடைய மகள் என்றோ, நான் தான் அவளுடைய அப்பா என்றோ என்னைத்தவிர வேறு யாருக்குமே தெரியாது." என்று சொன்னவரை யோசனையோடு ஏறிட்டபடி,


"எனக்கு எல்லாமே குழப்பமா இருக்கு... நீங்க தெளிவா சொன்னாத்தான் என்னால புரிஞ்சுக்க முடியும்."


"ம்ம்... சொல்றேன் என்னுடைய யூகப்படி என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கப்போற மாப்பிள்ளை நீங்களாதான் இருக்கும்னு நினைக்கிறேன் சரியா?"


மீண்டும் வியப்போடு அவரை ஏறிட்டான்.


"ஒவ்வொரு நாளும் என்ன நடக்குது அப்படிங்கற விஷயம் எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு ஏதோ ஒரு மூலையில்... ஒரு முதியோர் இல்லத்தில் மேனேஜரா உட்கார்ந்துட்டு இருக்கீங்களே அதனுடைய பின்னணிதான் என்ன? அதை நான் தெரிஞ்சுக்கலாமா? அதாவது ஏதோ பெரிய சதித் திட்டம் தீட்டுறீங்களோன்னு எனக்கு தோணுது."


போலீஸ்காரர்களுக்கே உரிய ஒரு சந்தேக கண்ணோட்டத்தோடு அந்த கேள்வியை முன் வைத்தான்.


பதிலுக்கு அவர் முகத்தில் மெல்லிய புன்னகை ஒன்று படர்ந்தது.


"இவ்வளவு தூரம் என்னப்பத்தி கெஸ் பண்ற நீங்க... என் பொண்ணு மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்காம விட்டுட்டீங்களே தம்பி.... சாரி சார்..."


பெரிய பீடி கையோடு பேசிய ராகவனின் கண்களை நேருக்கு நேராக சந்தித்து அவர் என்ன நினைக்கிறார்? எதைப் பத்தி சொல்கிறார்? என்பதை கண்டுபிடிக்க முயன்றான் எல்லாமே தெரிந்து கொண்டு எதுவுமே வெளிக்காட்டாமல் அமைதியாக அமர்ந்திருந்தார் ராகவன்.


"என்ன சார்... எதுவுமே பேச மாட்றீங்க?"


நாமாக எதற்கு சொல்ல வேண்டும் அவன் கேட்டபிறகு சொல்லலாம் என்ற பிடிவாதம் அவர் குரலில் தெரிந்தது.


"தெரியல... நீங்க என்ன சொல்றீங்க உங்க பொண்ணு மனசுல அப்படி என்ன இருக்கு அவங்க கூட பேசினதுல என்னால ஒன்னும் கெஸ் பண்ண முடியல! ஆனா கல்யாணத்தை மட்டும் கொஞ்ச நாளைக்கு தள்ளிப்போடலான்னு சொல்லி இருக்காங்க. அதுக்கும் நீங்க சொல்றதுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா...?" என்று பேசிக்கொண்டே போனவனுக்கு அப்போதுதான் ஒரு விஷயம் உரைத்தது.


ஹலோ சார் முதல்ல உங்க பொண்ணு யாரு? பேரு என்னன்னு சொல்லுங்க? எல்லாமே தெரியும் என்று நீங்க சொன்னதை நம்பி, நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன். நீங்க இன்னும் விஷயத்துக்கு வரவே இல்லை. முதல்ல உங்க பொண்ணோட பேரு சொல்லுங்க. அவங்க பேரையோ முகவரியையோ எதுவுமே சொல்லாம மொட்டையா பேசிட்டு இருக்கீங்க முதல்ல உங்க பொண்ணு பெயர் என்ன அவங்க எங்க இருக்கிறாங்க அதை சொல்லுங்க அதுக்கு அப்புறம் என்ன பண்ணலாம் அப்படின்னு நான் சொல்றேன்."


அவன் குரலில் சற்று கடுமை ஏறி இருந்தது.


இனியும் பொறுமையாக இருக்காமல் விஷயத்துக்கு வருவதுதான் நல்லது என்று உணர்ந்தவராய் பேசத் தொடங்கினார்.


'என்னுடைய பெண்ணு பேரு சொன்னா... அவ கிட்டயோ வேற யார்கிட்டேயோ நான் தான் அவளுடைய அப்பான்னு சொல்லக்கூடாது. இது முதல் கண்டிஷன் இரண்டாவது கண்டிஷன் எந்த சூழ்நிலையிலும் என்னை பார்த்ததையும் என்ன பத்தின விஷயத்தையும் நீங்க யார்க்கிட்டயும் ஷேர் பண்ண கூடாது. இதுக்கு ஓகேன்னா நான் எல்லாத்தையும் சொல்றேன்."


"ம்ம்.... சொல்ல மாட்டேன்."


முதல்ல இருந்தே சொல்றேன். அந்த சுனாமியின் கோர தாண்டவத்தில் என்னுடைய மனைவியையும் என் ரெண்டு பொம்பளப் பிள்ளைங்களையும் தொலைச்சுட்டு நிற்கதியா நான் நின்றப்போது உலகமே வெறுத்து போயிருந்தது. என்னுடைய உயிர் மனைவி என்னை விட்டு நிரந்தரமா பிரிஞ்சிட்டா அப்படிங்கிற விஷயம் என் உள் உணர்வுக்கு நன்றாகவே தெரிந்தது. அவள் உயிரோடு இல்லை என்பதை உணரமுடிந்தது.


மூன்றாவது நாள் கரை ஒதுங்கிய பிணக்குவியலில் அவளின் பிணம் இருக்கலாம் என்ற தேடுதலோடு ஓடி சென்று அந்த குவியலில் தேடினேன். ஆனால் என் மனைவியோட பிணம் அதில் இல்லை. எங்கு தேடியும் எனக்கு கிடைக்கல... ஆனா ரெண்டு பொண்ணுல பெரிய பொண்ண பத்தின எந்த செய்தியும் தெரியாதப்போ சின்னப் பொண்ணோட பொணம்தான் எனக்கு கெடச்சுச்சு அவள இந்த ரெண்டு கையாலையும் தான் நெருப்பு வச்சு எரித்தேன்." என்றவர் அந்த பழைய நினைவு கண்முன் தோன்ற முகத்தை இரு கைகளாலும் மூடியபடி குலுங்கி குலுங்கி அழுதார்.


அவருக்கு ஆறுதல் சொல்ல வழியின்றிப் அமைதியாக அமர்ந்திருந்தான் கார்த்திக். சில நிமிடங்களில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவர் தொண்டையை செருமிக்கொண்டு பேச்சைத் தொடர்ந்தார்.


"அந்த சூடு ஆறுவதற்கு முன்னாடி பெரிய பொண்ணு ஷேலியை ஹாஸ்பிடலில் அவளுக்கு ரெத்தம் கொடுக்கும் போது பார்த்தேன். அவளாவது நல்லா இருக்கணும் அப்படின்னு கடவுள்கிட்ட வேண்டினேன். அவளுக்கு என்னை அடையாளம் தெரியாத விட்டாலும் நினைவிழந்து இருந்த அந்த நேரத்திலும் அவளை விட்டு விலக என்னால் முடியவில்லை. அவள் குணமாகி திரும்பவும் காப்பகத்துக்கு வந்தப்போ அதே காப்பகத்தில் வாட்ச்மேனாக வேலைக்கு சேர்ந்தேன். அடிக்கடி அவளை பார்க்க ஒரு சின்ன சந்தர்ப்பம் கிடைத்தது. அது எனக்கு மிகப்பெரிய சந்தோஷமாக இருந்தது.


அப்பதான் கணவன் மனைவியாக இரண்டு பேர் வந்து அந்த காப்பகத்தில் இருக்கிற பிள்ளைங்களுக்கு எல்லாம் உணவு உடை எல்லாம் கொடுத்தாங்க அவங்க போகும் போது என்னுடைய மகளை மட்டும் தனியா கூப்பிட்டு அவகிட்ட ஏதோ பேசினாங்க அவளும் தலையை தலையை ஆட்டினாள்.


அவங்க என்ன சொன்னாங்கன்னு தெரியல ஆனா ரெண்டு நாளுக்கு அப்புறம் என்னுடைய மகள அவங்க கூட்டிட்டு போனாங்க, நான் அவங்களை வழி மறிச்சி பாப்பாவை எங்க கூட்டிட்டு போறீங்க அப்படின்னு கேட்டேன்.


'இவ எங்க பொண்ணுதான்... கொஞ்ச நாளைக்கு முன்னாடி காணாம போயிட்டா, பாவம் புள்ளைக்கு தலையில அடி பட்டதுல நாங்கதான் அப்பா அம்மா என்ற விஷயத்தையே மறந்துட்டா. நாங்க அவளை தேடி கண்டு பிடிச்சு கூட்டிட்டு போறோம்னு' சொன்னாங்க.


என் பொண்ணை அவங்க பொண்ணுன்னு எங்கிட்டயே சொல்லும்போது எனக்கு எப்படி இருந்திருக்கும் வாய்விட்டு கத்தி கதற வேண்டும் போல தோன்றியது. ஆனால் அமைதியாய் இருந்தேன் அவங்கள பாத்தா நல்ல குடும்பத்து ஆட்களா தெரிஞ்சது.


அந்த காப்பக உரிமையாளர் கிட்ட போயி விவரம் கேட்டேன். அந்த பொண்ணை அவங்க கூட அனுப்புறீங்களே இது என்ன ஞாயம்? நினைவு திரும்பி தான் யாருன்னு தெரிஞ்சா பிரச்சினையாகாதா? அப்படீன்னு கேட்டேன். அப்பதான் அவரு சொன்னாரு,


'சுனாமியில் பாதிக்கப்பட்ட எத்தனையோ பெண் பிள்ளைங்க இருக்கிறாங்க அவங்கள எல்லாம் நம்மளால பாதுகாத்து அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுக்க முடியும். ஆனா அப்பா அம்மா பேரு தெரியாமல் தான் யார் என்ற விஷயம் எதுவுமே தெரியாம இருக்குறது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா?


என்று என்னையே எதிர்கேள்வி கேட்டார் அந்த காப்பகத்தின் பொருப்பாளர். அத்தோடு அந்தப் பேச்சை அவர் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. ஆனால் அதன் பிறகு ஒன்று கேட்டாரே அதைத்தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை அதாவது,


'நாளைக்கு நீயே வந்து இவ என்னுடைய பொண்ணு என் கூட அனுப்பி வை என்று கேட்டாலும் கேட்கலாம் அப்படி இருக்கும்போது அவளுக்குன்னு ஒரு பாதுகாப்பு வேணும். இந்த பாதுகாப்பில்லாத உலகத்துல ஒரு நல்ல குடும்பத்தில் நல்ல தாய் தகப்பன் கூட வளர்ரதுதான் அந்த பொண்ணை பொறுத்தவரைக்கும் நல்லது. நான் நல்லா யோசிச்சு தான் குழந்தையே இல்லாத இந்த பணக்கார குடும்பத்திற்கு கத்துக்கொடுக்க தீர்மானித்தேன்.


இந்த பொண்ணுகிட்ட இவங்க தான் உங்க அப்பா அம்மா உனக்கு தலையில் அடிபட்டதில் மறந்திருக்கிறேன்னு சொன்னேன். அந்த பொண்ணும் கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு சரினு அவங்க கூட போறதுக்கு சம்மதிச்சுட்டாள். என்னை பொருத்த வரைக்கும் ஒரு பெண் பிள்ளைக்கு ஒரு நல்ல அப்பா அம்மாவையும் ஒரு வாழ்க்கையையும் அமைத்துக் கொடுத்திருக்கேன். இதுமாதிரி தத்துக்கொடுக்கிறது அரசாங்கத்துக்கு எதிராக பண்றதுதான். ஆனாலும் ஒரு பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்த ஒரு சந்தோஷம் எனக்கு என்னைக்குமே இருக்கும் என்றார் அந்த காப்பாளர்.


அவர் சொல்வதில் ஞாயம் இருந்துச்சு! அவருக்கே தெரியாம அந்த ரிஜிஸ்டர் ல அவங்களுடைய முகவரியை எழுதி வச்சுக்கிட்டேன். ஒரு வாரத்துக்கு அப்புறம் அவ வீட்டுக்கு டொனேஷன் வாங்குவதற்கு போற மாதிரி போனேன். அங்க என் பொண்ணு சீரும் சிறப்புமாக பணக்காரர் சூழல்ல வளர்வதை பார்த்தேன். என் பொண்ணு எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும். அவங்க கொடுத்த டொனேஷன் வாங்கிகிட்டு அவ கையால ரெண்டு பழைய துணிகளை வாங்கிட்டு திரும்பி வந்துட்டேன்.


அன்னையிலிருந்து அடிக்கடி அந்த வீட்டுக்கு போவேன். இந்த காப்பகத்தில் வேலை செய்கிறேன்னு ஓரளவு அவங்களுக்கு தெரியும். ஏதாவது காசு கொடுப்பாங்க சாப்பாடு போடுவாங்க அப்படியே என் பொண்ணையும் கண்குளிரப் பார்த்துட்டு திரும்பி வந்துடுவேன். இது இன்னைக்கு நேத்து நடக்கிறது இல்ல பதினைந்து வருஷத்துக்கு மேல நடந்துக்கிட்டு இருக்கு. ஆனா இப்ப என் பொண்ணுக்கு ஒரு பிரச்சனை. அவள் நிம்மதி இழந்து தவிக்கிறா... அவள வளர்த்தவங்க இங்க இருந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு என் மகளையும் கூட்டிட்டு வெளி ஊருக்கு போயிட்டாங்க.


என்ன பிரச்சனைன்னு நான் விசாரிச்சுதான் தெரிஞ்சுகிட்டேன். அவளுடைய அந்த மனப்பிரச்சனை எப்படியாவது சரியாகனும் அதுக்காக நான் தினம் தினம் கடவுள்கிட்ட வேண்டிகிட்டு இருக்கிறேன். தூரத்துல இருக்கற நான் தெரிஞ்சிக்கிட்ட அளவு கூட அவ கூட வாழ போற நீங்க தெரிஞ்சுக்கலேன்னு தான் எனக்கு கவலையா இருக்கு."

ராகவன் பேச்சை நிறுத்தி அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கினார்.


கார்த்திக் பட்டென்று இருக்கையை விட்டு எழுந்தான்.


" பிரச்சனை என்ன? என்ன பண்ணலாம் அப்படின்னு நான் அவகிட்டேயே பேசிட்டு முடிவு பண்றேன். திரும்பவும் உங்கள தேடி வருவேன் நன்றி." என்றவன் அவரின் பதிலை எதிர்பார்க்காமல் சட்டென்று அறையை விட்டு வெளியில் வந்தான்.
 
Last edited:
Top