Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதான் எந்தன் அந்தாதி - அத்தியாயம்-10

Advertisement

daisemaran

Well-known member
Member
அத்தியாயம்-10
குமரி காவல் நிலையம்...

இதுவரை போலீஸ் ஸ்டேஷன் பக்கமே போனதில்லை என்பதால் வாசலிலேயே தயங்கி நின்றாள் வள்ளி.

“என்னம்மா... யாரு வேணும்? கான்ஸ்டபிள் யாருன்னு பாருங்க?” ஒரு கரகப்பான குரலை தொடர்ந்து வெளியில் வந்தார் அந்த பெண் போலீஸ்.

“என்னம்மா... ஏதாவது கம்ளைண்டா? “

“இல்லை மேடம் கணபதிசாரை பார்க்கணுும் சாரு இருக்கிறாருங்களா?”

“நீங்க யாரு எதுக்கு அவரைப்பார்க்கணும்?” கேட்டவரின் குரலில் சலிப்பு தென்பட்டது.

”சுமதி டீச்சர்தான் அவரை பார்க்கச்சொல்லி இந்த நம்பரை எழுதிகொடுத்தாங்க...”
குரல் கேட்டு எட்டிப்பார்த்தார் கணபதி.

“உள்ள வாங்கம்மா... என்ன விஷயம்?”

“இதோ.. வறேங்கையா டேய்.. வினோத்து நீ இங்கயே இரு உள்ளே வரவேணா..”

“ஏம்மா...?”

“படிக்கிற பையன் போலிஸ்ஸ்டேஷனுக்கெல்லாம் வரக்கூடாது.”

“சரிம்மா...” கையை கட்டியபடி ஓரமாக நின்றுகொண்டான். மகனை நிறுத்திவைத்துவிட்டு வள்ளி மட்டும் உள்ளே போனாள்.

“என்னம்மா... விசயம்? ஏதாவது திருட்டு கேசா?”

“அதெல்லாம் இல்லைங்கையா...கடலுக்கு போன என் வுட்டுக்காரரை இலங்கை போலீஸ் புடிச்சி வச்சிருக்காங்கையா அது விஷயமா யாரைப்பார்க்கனும் என்ன பண்ணனுன்னு கேட்டுட்டு போகலான்னு வந்தேங்கையா... எம் மவன் சுமதி மிஸ்கிட்டதான் படிக்கிறான். அவங்கதான் இந்த நம்பரை எழுதிக்கொடுத்து இங்க அனுப்புனாங்க...”

“ம்ம்...எங்களுக்கும் நீவுஸ் வத்திருக்கு, அது விஷயமா விசாரிக்கத்தான் கான்ஸ்டபிளை உங்க வீட்டுக்கு அனுப்பியிருக்கேன். உன் புருஷன் பேரு வீட்டு அட்ரஸ் எல்லாத்தையும் எழுதி ஒரு கம்பிளைன்ட் எழுதிகொடுத்துட்டுப்போம்மா... ஆமா... நீ மீன் யாவாரமா பார்க்கிற?”

“இல்லைங்கையா... நம்பசுந்தரியம்மா வீட்டுல வேலைப்பார்க்குறேங்கையா...”

“யாரு... வி ஏ ஒ சுந்தரி அம்மாவா? போனவாரம் கூட அவங்க பையனுக்கு கல்யாணம் ஆச்சே அந்த அம்மா வீட்டிலேயா?”

“ஆமாங்கையா... “

“அட என்னம்மா நீ அந்த அம்மா சின்ன பையனை பிடிச்சாலே உன் புருஷனை வெளியில கொண்டுட்டு வந்துடலாமே”

“என்னங்கையா சொல்லுறீங்க..?”

“அவரு பெரிய போலீஸ் ஆபீசரா இருக்காரு. அவருக்கு மெட்ராஸ்ல நிறையா ஆளுங்க... தெரியும் அவரு நினைச்சா இலங்கை போலீஸ் கிட்டே பேசி உன் புருஷனை வெளியில எடுத்துடலாம்.”

“அப்படீங்களா... அப்ப சரிங்கையா, நான் போய் அவரை பார்க்குறேன்.”
கணபதிக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியில் வந்தாள்.

“அம்மா... என்னம்மா சொன்னாரு...”

“வா..சொல்லுறேன்...” வேகவேகமாக நடந்தப்படி அவர் சொன்ன விஷயத்தை மகனிடம் சொன்னாள்.

“அப்படியா!...அப்ப எப்படியாவது அவருகிட்ட பேசி அப்பாவை வெளியில கொண்டுட்டு வந்துடலாம்மா...”
மகன் முகத்தில் தெரிந்த மலர்ச்சி தாயிடமும் தாவியது.

“இப்ப வீட்டுக்கு போனா அவரைப்பார்க்கலாமா?”

“ம்கும்... அதுக்கு வாய்ப்பே இல்லை. ஏன்னா அவர் சென்னையில இருக்காரு...?”

“ஆனா... போன்ல பேசலாம். வா சுந்தரி அம்மாகிட்ட சொன்னா அவங்க போனை போட்டு கொடுப்பாங்க அவருகிட்ட நாம ரெண்டுபேரும் பேசுவோம்.”

“ம்ம்... “
அம்மாவை பின்னால் அமரவைத்துக்கொண்டு எப்படியாவது அப்பாவை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையோடு சைக்கிளை மிதித்தான் வினோத்
சுந்தரியம்மா வீட்டிற்கு வருவதற்குள் மிகவும் சோர்ந்துப்போனான். காலையிலிருந்து சாப்பிடாமல் வெறும் வயற்ரோடு இருந்தால் பசிவராமல் என்ன செய்யும்?
மகனின் சோர்ந்த முகத்தைப்பார்த்துவிட்டு,

“வா சுந்தரி அம்மாகிட்ட சாப்பாடு வங்கித்தறேன் சாப்புடு.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம்மா..."

" சொன்னா கேளுடா... “

சுந்தரியம்மா எங்கோ வெளியில் போயிட்டு அப்போதான் கேட்டை திறந்துகிட்டு உள்ளே வந்துகொண்டு இருந்தார்கள்.

“என்ன வள்ளி வீட்டுக்கு போனவ திரும்பி வந்துட்ட...? எதையாவது விட்டுட்டு போயிட்டியா?”

“அம்மா எம்மொவ அவன் அப்பனை நினைச்சி காலையிலேருந்து எதுவும் சாப்பிடலம்மா... சாப்பிட ஏதாவது கொடுங்கம்மா...” உரிமையோடு ஆரபித்தவள் உருக்கத்தோடு முடித்தாள்.

“என்னடி வள்ளி புதுசு புதுசா பேசுறே? இது உன் வீடுமாதிரி உள்ளே போயி சாப்பாடு போட்டு கொடு. வினோத்து உள்ள போய் சாப்பிடுப்பா..” மறுக்காமல் உள்ளே போய் அம்மா போட்டுகொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டான்.

“இப்ப சொல்லு என்ன விஷயன்னு...? அவன் அப்பனுக்கு என்ன கடலுக்குத்தானே போயிருக்கான்.?”

“அம்மா...நான் என்னன்னு சொலுவேன். என்று ஆரமித்து மொத்த கதையையும் சொல்லி முடித்தாள்.

“நெனைச்சேன் வள்ளி...காலையில வந்ததிலிருந்து உன் முகத்துல சிரிப்பே இல்லை. எதையோ பறிகொடுத்தமாதிரியே இருந்த... நீயே சொல்லுவேன்னுதான் நான் பேசாம இருந்தேன். எங்கிட்ட சொல்லுறதுல உனக்கு என்ன தயக்கம்?”

“இல்லம்மா...நீங்களே பெரிய மகன் கல்யாண வேலையில பிசியா இருந்துட்டு இப்பதான் கொஞ்சம் ஓய்வா இருக்கீங்க உங்களை எதுக்கு கஷ்டப்படுத்தனுன்னுதான்...”

“அடிபோடி அறிவுகேட்டவளே... உனக்கு செய்யாம யாருக்கு செய்யப்போறே? இரு சின்ன தம்பிகிட்ட பேசுறேன்.”
இருவரின் உரையாடலையும் கேட்ட வினோத் ஆச்சரியப்பட்டான். அம்மா சொல்லும்போதெல்லாம் சுந்தரியம்மாவை பற்றி பெரியதாக ஒன்றும் நினைத்ததில்லை. இப்போ நேரில் பார்க்கும்போதுதான் அவங்க எப்பேர்பட்ட நல்லவங்கன்னு தெரியுது.

சுத்தரியம்மா தன் மகன் கார்த்திகேயனுக்கு போன் பண்ணீ பேசினாள். ராஜேந்திரனை பற்றின முழுவிவரத்தையும் வள்ளியிடமும் வினோத்திடமும் கேட்டு தெரிந்துக்கொண்டான். தன் அம்மாவிடம் வாட்சப்பில் ராஜேந்திரனின் புகைப்படத்தை அனுப்பிவைக்கும் படி கூறினான். தன்னுடைய நண்பன் நேவி ஆபிசராக இருப்பதால் அவனிடம் சொல்லி விடுவிக்க முயற்சி பண்ணுகிறேன்.
தேவைப்பட்டால் வள்ளியும் வினோத்தும் சென்னைக்கு வரவேண்டி இருக்கும். என்று கூறிவிட்டு தன்னால் முடிந்த அளவிற்கு எப்படியாவது உதவிசெய்கிறேன் கவலைப்பட வேண்டாம் என்று தைரியமும் கூறினான்.
தாயும் மகனும் நிம்மதியோடு வீட்டிற்கு வந்தார்கள்.

அடுத்தநாள்...
ஊர் தலைவராலேயோ அரசாங்கத்தாலேயோ செய்ய முடியாத உதவியை கார்த்திகேயன் செய்தான். தன் நண்பன் மூலியமாக யார்யாரையோ பிடித்து இலங்கை கடற்ப்படை காவலில் இருக்கும் ராஜேந்திரனிடம் பேசினான்.

“எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை நான் நல்லாத்தான் இருக்கேறேன் என் கூட்டாளிதான் செத்துபோயிட்டான். அதைதான் என்னால தங்க முடியலை.” என்று கதறி கண்ணீர் விட்டான்.

“சரி கவலைப்படாதீங்க...இப்படி நடக்குன்னு யாரும் எதிர்பார்க்கலை. அவர் உடலை எப்படியாவது தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு ஏற்பாடு பண்ணலாம்.

“சரிங்க சார்... ஒரு சின்ன வேண்டுகோள்.”

“என்ன.. சொல்லுங்க?”

“எம்மவன்கிட்ட பேசணும்போல இருக்கு கொஞ்சம் பேசவைக்க முடியுமா?”

“மிஸ்டர் ராஜேந்திரன்... உங்க மனைவியும் மகனும் உங்ககிட்ட பேசனுன்னு ரொம்ப ஆசைப்படுறாங்க... அவங்களை சென்னைக்கு வரவழைச்சி உங்ககிட்ட பேச சொல்லுறேன் சரியா?”

“ரொம்ப... ரொம்ப... நன்றி சார்”
ராஜேந்திரனிடம் பேசிவிட்டு தன் அம்மாவை அழைத்தான் கார்த்திகேயன்.

“அம்மா... நீங்க எப்போ சென்னைக்கு வர்றீங்க...”

“வர்ற சனிகிழமப்பா... ஏன் கேட்குறே?

“நீங்க நாளைக்கு காலையில கிளம்புங்கம்மா... வரும்போது வள்ளியையும் அவங்க பையன் வினோத்தையும் கூட்டிட்டு வாங்கம்மா..”

“சரிப்பா... இதோ இப்பவே சொல்லி அனுப்புறேன்.”
போனை வைத்துவிட்டு கார் டிரைவரை அழைத்து வள்ளியிடம் விவரத்தை சொல்லி கூட்டிட்டு வரச்சொன்னாள்.

அடுத்தநாள் காலை ஏழுமணி...
வள்ளியையும் வினோத்தையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு கிளம்பினாள் சுந்தரி அம்மா.
வினோத்தின் சட்டை அக்குள் கிட்ட கிழிந்திருந்தது.

“ஏண்டி வள்ளி.. மனோஜ் கல்யாணத்துக்கு புது துணி எடுத்துக்கண்ணு காசு கொடுத்தேனே என்ன பண்ணினே? வினோத்துக்கு எடுத்துக்குடுக்கலையா?” சுந்தரி அம்மாளின் பார்வை வினோத்தின் மேல் படிந்திருந்தது.

“அ...அது வந்துங்கம்மா...நாலுவாரமா தண்டல் கட்டாம இருந்திச்சி அதை கட்டிட்டேன். அதான் புது துணி எடுக்க முடியலை.” தலையை சொரிந்தப்படி தயக்கத்தோடு கூறினாள்.

“உனக்கு எவ்வளவு வந்தாலும் பத்தாது. எதுக்கு கொடுத்தேனே அதுக்கு செலவு பண்ணிருக்கனுமில்லையா? அப்படி என்னதான் கஷ்டம்...? பாவம் ராஜேந்திரன் ராவும் பகலுமா கடலுல கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறான் நீ என்னடான்னா....” என்று பேசிக்கொண்டே போனவர்கள் பாதியிலேயே பேச்சை நிறுத்திவிட்டு வள்ளிப்பக்கம் திரும்பினார்கள்.
அங்கே வள்ளி தன் முந்தானையால் கண்களை துடைத்துக்கொண்டிருந்தாள்.

“ஏய்...வள்ளி என்னாச்சி? ஏன் அழுவுறே?”

“ஒ...ஒண்ணுமில்லேம்மா...”

“மேடம்....நான்தான்...என் அம்மாகிட்ட புதுதுணி வேணா... வாரா வாரம் வாசலில வந்து நின்னு கத்திகிட்டு இருக்கிற தண்டல்காரருக்கு பணத்தைக்கட்டி கடனை அடச்சிடுன்னு சொன்னேன் மேடம்.” என்று தன் தாயின் மேல் எந்த தப்புமில்லை என்பதை நிருபிக்க முயன்றான் மகன்.
இந்த வயசுல குடும்ப கஷ்டத்தை உணர்ந்து பேசுறானே என்று ஆச்சிரியத்தோடு பார்த்தாள் சுந்தரியம்மா.

“ட்ரைவர்... அந்த துணிக்கடைக்கு ஓரமா கரை நிறுத்து” ரெடிமேட் துணிக்கடைக்கு அருகில் காரை நிறுத்துமாறு சுந்தரியம்மா சொல்லவும்,

“அம்மா அதெல்லாம் ஒன்னும் வேணாம்மா. போனகையோட திரும்பப்போறோம் எதுக்கு புதுதுணி எல்லாம்...” பதற்றத்தோடு மறுத்தாள் வள்ளி.

வள்ளியை பொறுத்தவரை இது தேவையில்லாத ஒன்று. கரும்பு இனிக்கிறது என்பதற்காக அடியோட புடிங்கி தின்ன முடியுமா? ஏற்கனவே பெரியமகன் கல்யாணத்துக்கு மூனு பேரும் துணி எடுத்துக்கோங்கோன்னு சொல்லி ஐந்தாயிரம் பணத்தை கொடுத்தாங்கள். அதை வாங்கி செலவு பண்ணிட்டு, சென்னையில் நடந்த கல்யாணத்துக்கும் போகாம, அவங்க காசுல துணிமணியும் எடுக்காமல் செலவு பண்ணிட்டு, திரும்பவும் அவங்களை தொல்லை கொடுத்துட்டு இருகிறோமே நல்லாவா இருக்கு? என்று மனதுக்குள் வள்ளி புழுங்கிக்கொண்டிருக்க.

“அட உ்னக்கு எவடி துணி வாங்கப்போறா? இவ்வளவு நல்ல பிள்ளையா வளர்த்திருக்கியே...உன் மகன் அவனுக்கு என்னோட பரிசு... வாப்பா வினோத்து... வந்து உனக்கு பிடிச்ச மாதிரி ஒரு சட்டை எடுத்துக்கோ...”

“வேண்டாங்க மேடம்...எம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்காது. நான் ்வாங்கிகிட்டேன்னா...வீட்டுக்கு போனபின்னாடி எங்க அம்மா என்னத்தான் வையும். வாங்கித்தறேன்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றி மேடம்.”

“அடி வாங்கப்போறே...மொதல்ல கீழ இறங்கு...நாம இப்போ மெட்ராசுக்கு போகப்போறோம். அங்க போகும்போது டீசண்டா போட்டுட்டு போக வேணாமா?”

வினோத் தன் தாயின் முகத்தை பார்த்தான்.

“வேணான்னு சொன்னா அம்மா கோவிச்சிப்பாங்க வினோத்து, போய் வெல குறைவா பார்த்து ஒரு சட்டை எடுத்துக்கோ...”
வள்ளி மகனின் காதில் கிசுகிசுத்தாள்.

“சரிம்மா...”தயக்கத்தோடு காரிலிருந்து இறங்கி கடைக்குள் சென்றான் வினோத்.
சுமார் பத்து நிமிட தேடலுக்கு பிறகு, இருப்பதிலே குறைந்த விலையில் இருந்த சட்டையை தனக்கு இந்த கலர் மிகமிக பிடித்திருக்கிறது என்று சொல்லி எடுத்துகொண்டு வெளியில் வந்தான் வினோத்.

“வினோத்... சட்டையை இங்கேயே போட்டுக்கோ... சென்னைக்கு போனவுடன் கார்த்திக்கிட்ட சொல்லி இரண்டு மூனு சட்டை எடுத்து கொடுக்க சொல்லுறேன்.”

“அதெல்லாம் வேணாம் மேடம். நான் இதையே போட்டுக்கிறேன். இது ஒன்னே போதும்.”
என்று சொல்லிவிட்டு சங்கோஜத்துடன் முகத்தை திருப்பிகொண்டான்.
சுந்தரி அம்மாவும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியானார்கள்.
நீண்ட தூரம் என்பதால் இரண்டு இடத்திலே காரை நிறுத்தி மதிய உணவையும் இரவு உணவையும் முடித்துக்கொண்டு சரியாக இரவு பத்துமணிக்கு சென்னையை அடைந்தார்கள்.

அரண்மனையைப் போல் இருந்த அந்த வீட்டு கேட்டின் முன் காரைநிறுத்திவிட்டு கேட்டின் துவாரத்துக்குள் கையைவிட்டு காலிங்பெல்லை அழுத்தினார் சுந்தரியம்மா.
கூரக்கா வந்து கேட்டை திறந்து ஆளை அடையாளம் கண்டுகொண்டு வணக்கம் வைத்தான்.

“வீட்ல.. ஆட்கள் இருக்கிறாங்களா?”

“சின்னம்மாவும் டாக்டர் ஐயாவும்தான் வெளியில போயிருக்காங்க. நீங்க உள்ளே போங்க. அம்மாவும் சாரும் உங்களுக்காதான் வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க டிரைவர்... நீங்க எங்கூட தங்கிக்குங்க”

“ஓ... அப்பசரி வா வள்ளி”

சமிபத்தில் கல்யாணமான தன் பெரிய மகன் மனோஜ் வீட்டுக்குள் மூவரும் நுழைந்தார்கள்.
சுந்தரியின் சம்மந்தி இவர்களை பார்த்துவிட்டு இன்முகத்துடன் வரவேற்றனர். ஒரு சில நிமிடங்கள் பேசிவிட்டு ரொம்ப டயடா இருக்கீங்க காலையில பேசிக்கலாம் போய் ரெஸ்ட் எடுங்க..” என்று அனுப்பிவைத்தார்கள்.
எப்படா விடியும் என்றிருந்தது வள்ளிக்கும் வினோத்துக்கும்.
காலையில் எழுந்தவுடன் சுந்தரியம்மாவை தேடிசென்று கதவை தட்டினார்கள்.

“இதோ... இங்கே இருக்கேறேன். இங்க வங்க...”
அழைத்த பக்கம் திரும்பிப்பார்த்தால் அங்கே கார்த்திகேயனுடன் பேசிக்கொண்டிருந்தார்கள் சுந்தரியம்மா.

“ஐயா... எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா?”

“நல்லா இருக்கேன்...நீங்க எப்படி இருக்கீங்க...?”
கேட்ட அடுத்த நிமிடமே பொசுக்கென்று கண்ணீர் வந்துவிட்டது.

“ஒன்னும் பயப்பட வேணாம். எங்கூட வங்க...உங்களை எல்லாம் கூட்டிட்டு போகத்தான் இங்க வந்தேன்.”

“அட...வினோத் எப்படிப்பா இருக்கே?”
என்று கேட்டுக்கொண்டே இவர்கள் இருந்த ஹாலுக்குள் வந்தான் சுந்தரியம்மாளின்பெரிய பையன் மனோஜ்.

“நல்ல இருக்கேன்...” அண்ணா என்று சொல்வதா? அங்கிள் என்று சொல்வதா? என்ற மன குழப்பத்தோடு பதில் சொன்னான் வினோத்.

“உங்க கல்யாணத்துக்குதான் வரமுடியவில்லை.”

“பரவாயில்லை... இது வினோத்தானே?”

“ஆமாங்கையா... “

“இந்தாங்க... அத்தை காபி எடுத்துக்கோங்க, அம்மா நீங்களும் எடுத்துக்கோங்க...”
என்று காபி கப்போடு நின்றவளை அப்போதுதான் முதல் முதலாக பார்க்கிறாள் வள்ளி.

“என்ன வள்ளி அப்படி பார்க்குறே இதுதான் என் மருமக. இளமதி இது வள்ளி... இது வள்ளியோட பையன் வினோத்து.”

“ம்ம்... இவங்க வரப்போறதா அவர் நேத்து சொன்னாரு அத்த..”

“சரி... வள்ளிக்கு மாத்து புடவை ஒன்னு கொடு. கார்த்திக்கூட அவங்க கிளம்பனும்.”

“ம்ம்... என்கூட வாங்க...”
என்றவளை பின்தொடர்த்துப்போனாள் வள்ளி.
வள்ளிக்கு இளமைதியை பார்த்தவுடன் இறந்துப்போன தன் மகள் ஞாபகம் வந்துவிட்டது. கூர் மூக்கு பெரிய கண்கள் ஏர் நெத்தி.
இளமதி கொடுத்த மாற்று புடவையை கட்டிக்கொண்டு வெளியில் வந்தாள்.

“என்னடி...வள்ளி மூஞ்சை உம்முன்னு வச்சிக்கிட்டு இருக்கே?”

“ஒன்னுமில்லம்மா செத்துப்போன என் பொண்ணு ஞாபகம் வந்துடிச்சி...”

“என்னாச்சிம்மா....?”என்று கார்த்திகேயன் கேட்க,

“அது ஒரு பெரிய சோகக்கதை. பெத்த ஒத்தபொண்ணையும் சுனாமியில பறிகொடுத்துட்டு நிக்கிறா...இன்னேரம் அந்த பொண்ணு இருந்திருந்த நம்ம இளமதி மாதிரிதான் இருந்திருக்கும். அதான் இளமைதியைப்பார்த்த்வுடன் அவள் பொண்ணு ஞாபகம் வந்துடிச்சி...”

“ச்சோ... அப்படியா?”

“சரிம்மா நான் அவங்களை கூட்டிட்டு போயிட்டு வந்து அப்புறம் பேசுறேன்.”
வள்ளியையும் வினோத்தையும் கண்ரோல் ரூமுக்கு அழைச்சிகிட்டு போய் ராஜேந்திரனிடம் பேசவைத்தான்.

“வள்ளி அழாத வள்ளி ஒரு வாரத்துல என்ன விட்டுடுவாங்க நான் வீட்டுக்கு வந்துடுவேன் கவலைப்படாத.. வினோத்துகிட்ட போனை கொடு வள்ளி.”

“அலோ... அப்பா எப்படி இருக்கீங்கப்பா... சாப்பிட்டீங்களா?”
கண்கள் கலங்கியப்படி கேட்டான்.

“நான்... நல்லாத்தான் இருக்கேன். நீ எப்படி இருக்க? என்னபத்தி கவலைப்படாதே... ஒழுங்கா படிக்கணும். அம்மாவ பத்திரமா பாத்துக்கணும் சரியா?”

“சரிப்பா..”

“ஊருக்கு கிளம்பிப்போங்க... உன் மாமா பரமசிவம் பொணம் ஊருக்கு வந்திருக்கும். நான்தான் கிட்ட இருந்து அவனுக்கு எதுவும் செய்யமுடியலை. நீயும் அம்மாவும் போயி ஈம சடங்குல கலந்துக்குங்க...” சொல்லிவிட்டு தேம்பி அழுதவனை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் திக்கித்து நின்றான் வினோத்து.

“ரொம்பநேரம் பேசக்கூடாது வினோத். என்கிட்டே கொடு நீ அங்கப்போயி உட்காரு...”

“போனை வாங்கி... ஓகே மிஸ்டர் ராஜேந்திரன், தைரியமா இருங்க என் நண்பன்கிட்ட சொல்லி இருக்கேன். சீக்கிறமா நீங்க வெளியில வந்துடலாம்.”
என்றவன் ராஜேந்திரனிடம் நன்றியை பெற்றுக்கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தான்.
வீட்டுக்கு வரும் வழியில் வினோத்துக்கு இரண்டு செட் டீசர்ட் வாங்கிக்கொடுத்தான். சரியாக இருக்கிறதா என்று ட்ரயல் ரூமுக்கு போன கேப்பில் வள்ளியிடம் மெல்ல பேச்ச்சிக்கொடுத்தான்.

“உங்களுக்கு ஒரே ஒரு பெண் குழைதைதான் இருந்தது என்று அம்மா சொன்னாங்களேம்மா அப்படின்னா...அப்படின்னா...இந்த வினோத் யாருங்க? சொல்ல விருப்பம் இல்லையின்னா சொல்ல வேணா”

“அப்படியெல்லாம் இல்லைங்க...இதுவரைக்கும் இந்த விஷயம் வேற யாருக்கும் தெரியாது. அதான் எப்படி சொல்லுறதுன்னு யோசிகிறேன்.

“சொல்லனுன்னு ஒன்னும் அவசியமில்லை ஆனால் சொன்னால் என்னால் முடிந்த உதவிகளை செய்யலாம் என்றுதான் கேட்கிறேன்.”

“சொல்லுறேன் தம்பி ஆனா இந்த விசயம் என் மகனுக்கு தெரியக்கூடாது. தப்பி தவறி தெரிய வந்தா என்னைவிட்டு அவன் போயிடுவான் அதுதான் எனக்கு பயமா இருக்கு...”

“என் மூலியமா தெரிய வாய்ப்பில்லை. அதற்கு நான் உறுதியளிக்கிறேன்...” என்று அவன் உறுதியளித்தபிறகுதான் வள்ளி அந்த உண்மையை சொல்ல தொடங்கினாள்.
அவள் சொல்லிமுடிக்கும்வரை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தவன் சட்டென்று தன் கையில் வைத்திருந்த லேப்டாப்பை ஒப்பன் பண்ணி அதில் ஒரு தேடுதலோடு பார்வையை ஓடவிட்டான். ஓரிரு நிமிடங்களுக்கு பிறகு எதையோ கண்டுபிடித்துவிட்ட தெளிவு அவன் முகத்தில் தெரிந்தது.
 
Last edited:
Top