Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன் வசந்தன்-அத்தியாயம் 35

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 35

அபி உறைந்து போய் அமர்ந்திருக்க ரம்யா தன் போக்கில் பேசிக்கொண்டிருந்தாள்.அபியிடமிருந்து பதில் வராமல் போகவே சற்று பேச்சை நிறுத்திவிட்டு அவளது அதிர்ந்த முகத்தைக்கண்டாள்..

“ஹே சாரி அபி,இப்படி திடீர்ன்னு சொல்லி உன்னை ஷாக் ஆக்கனும்ன்னு நினைக்கலை,ஆனா அருணும் இப்படி ஷாக்காகி நிற்கணும்கறது தான் அங்கிளோட ப்ளான்..நாளைக்கு அருணோட பர்த்டே பார்டியில எல்லார் முன்னாடியும் சொல்லி அவனை சர்ப்ரைஸ் பண்ணபோறாராம்..என்று கூறி சிரித்தாள்.

அபிக்கு தலையை சுற்றிக்கொண்டு வந்தது..இருப்பினும் சமாளித்துக்கொண்டு

“அருணுக்கு தெரியாம இவ்ளோ பெரிய ஏற்பாடு எப்படி செய்வாங்க ரம்யா?”என்று கேட்டாள் காற்றாகிவிட்ட குரலில்..

“அதுவா..அருண் மும்பைல இருந்து சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி வரும்போது இங்க வந்திருந்தான், அப்போ அங்கிள் அவன் கிட்ட கல்யாணத்தை பத்தி கேட்டிருக்காரு,யாரையாவது லவ் பண்ணா சொல்லு அந்த பொண்ணையே கட்டி வைக்கிறோம்ன்னு ..ஆனா அவன் ,யாரையும் லவ் பண்ணலை நீங்களே ஒரு நல்ல பொண்ணா பாருங்க ,மறுபேச்சு பேசாம கட்டிக்கறேன்னு சொன்னான்.

அவங்களும் நெறைய இடத்துல பொண்ணு பார்த்து எதுவுமே திருப்தி ஆகாம ,கடைசியா கைல வெண்ணைய வச்சிகிட்டு எதுக்கு நெய்க்கு அலையனும்ன்னு என்னைப் பொண்ணுகேட்டாங்க, எங்க அப்பா அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம் ஏன்னா சின்ன வயசுல இருந்து அவங்க பார்த்து வளர்ந்த பையன் அருண்,அப்பா எங்கிட்ட கேட்டாரு ,மொதல்ல கொஞ்சம் தயக்கமா தான் இருந்தது,அப்புறம் யோசிச்சி பார்த்தா தெரியாத ஒருத்தனை கட்டிக்கறதை விட சின்ன வயசுல இருந்தே பார்த்துப் பழகின அருணைக் கட்டிக்கிட்டா நல்லா இருக்கும்ன்னு தோணிச்சி ,அது மட்டுமில்லாம புகுந்த வீடு எப்படி இருக்குமோன்னு கவலைப் படத்தேவையில்லை, ஆன்ட்டி என்னைப் பொண்ணு மாதிரி பார்த்துப்பாங்க…சந்தோஷமா தலையாட்டிட்டேன்..

அருணோட அப்பா ,அவனுக்கு இது பர்த்டே ப்ரசென்ட்டா இருக்கட்டும்ன்னு ரகசியமா வச்சிருக்காரு ...நாளைக்கு விழாவுல எல்லார் முன்னாடியும் அவனுக்கு சொல்லி சர்ப்ரைஸ் பண்ணபோறாராம்..அபி நீயும் யார் கிட்டையும் சொல்லிடாத ப்ளீஸ்..என்னக்கு ப்ராமிஸ் பண்ணி இருக்க மறந்துடாத..”என்று அவளை எச்சரித்துவிட்டு ..

“நாளைக்கு நான் தான் பொண்ணு ,எங்களுக்கு எங்கேஜ்மெண்ட் ன்னு சொன்னதும் அருண் முகத்துல, முதல்ல அதிர்ச்சி,ஆச்சரியம் ,அப்புறம் என்னை கேள்வியா அவன் பார்க்க நான் கண்ணால ஆமாம்ன்னு சொல்ல ,அவன் முகம் சிரிப்புல மலர்ந்து என்னை காதலோட பார்க்குற அந்த கணத்துக்காக நான் தவமிருக்கிறேன் அபி ..” என்று கண்களில் கனவு மிதக்க ரம்யா பேசிக்கொண்டே போக ,அபிக்கு காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதுபோல் இருந்தது.

இந்த நிச்சயதார்த்தமே அவளுக்கு அதிர்ச்சி என்றால் அதற்கு மேல் ரம்யா அருணின் மீது மையல் கொண்டிருப்பதை அவளால் கொஞ்சமும் சகிக்கமுடியாமல் நெஞ்சை காந்தியது.

அபி செய்வதறியாது உள்ளம் பதறி அமர்ந்திருந்த போது ,கீழே சத்தம் கேட்க
“அபி அவங்கலாம் வந்துட்டாங்க போல ,நான் போறேன் ,மறந்துடாத ,இது நமக்குள்ள ரகசியம் ..”என்று மீண்டும் ஒருமுறை நினைவுறுத்திவிட்டுச் சென்றாள்.

அன்று இரவு அபி தன்னந்தனியாக மொட்டை மாடியில் நின்று கொண்டு நிலவில்லா வானத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தாள்.மறுநாள் தீபாவளிக்காக ஊர்முழுவதும் ஒளிவிளக்குகளின் பிரகாசத்தில் ஜொலித்தது,அபிமட்டும் தன் வாழ்வில் சட்டென்று சூழ்ந்த அந்தகாரத்தில் திக்கு தெரியாமல் தவிப்பதை போல் உணர்ந்தாள்.

“ஏன் அவள் மட்டும் கனவு காணக்கூடாதா?ஒவ்வொரு முறையும் ஆசைகளை வளர்த்து அது கண்முன்னே நொருங்கிப்போவது தான் அவள் வாங்கி வந்த வரமா? கடவுள் ஏன் இவ்வளவு இரக்கமில்லதவராக இருக்கிறார்?முன்பு அவள் இருந்த அதே நிலையில் இப்போது ரம்யா இருக்கிறாள்.முகம் முழுவதும் ஆவலும் எதிர்காலத்தைப் பற்றிய கனவுக்கோட்டைகளோடும் அவள் முகம் கண்முன் வந்து அவளை வதைத்து..அந்த முகத்தின் சிரிப்பை எப்படி என்னால் துடைத்து அழிக்க முடியும்?ஆனால் அதற்காக அருணையும்தான் அவள் விட்டு கொடுத்துவிட முடியுமா?அது அவளால் ஒருபோதும் முடியாது அருணை பிரிவது உடலிலிருந்து உயிர் பிரியும்போது தான் சாத்தியம் ..

என்ன மாதிரியான ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறேன் நான் ?என்னை நம்பி தன் வாழ்க்கை கனவுகளையெல்லாம் பகிர்ந்து கொண்ட ரம்யாஅந்த வண்ணச்சித்திரத்தை அழிக்க வந்தவளே அவள் தான் என்பதை எப்படி தாங்குவாள்?இப்படி தான் அனுவும் ஒருகாலத்தில் தவித்திருப்பாளோ?

ரம்யாவின் குற்றம் சாட்டும் விழிகள் ஒருகணம் கண் முன் தோன்றி அவளை உடல்சிலிர்க்கவைத்தது.அதே நேரத்தில் பின்னலிருந்து இருகரங்கள் அவள் இடையை சுற்றி வளைத்து இறுக்கியது.

“மிஸ்ஸிங் மீ?”என்று அருணின் குரல் காதோரம் கிசுகிசுத்தது.

அவனது அருகாமையின் கதகதப்பில் இனம்புரியாத ஆறுதலில் உடல் மேலும் சிலிர்த்தது அபிக்கு..

அவளை மேலும் தன்புறம் சேர்த்து அணைத்தபடி வாகாக அவளது தோள்மீது தன் தாடையை வைத்துக்கொண்டு

“குளுருதா அபி?”என்றான் கரிசனமாக

அபிக்கு பேசமுடியாமல் தொண்டை அடைத்தது, கண்கள் குளமாகி அடைப்பை உடைத்துக்கொண்டு கன்னகளில் வழிந்தோடியது..அப்படியே அவன் மார்பில் சாய்ந்து ஓவென்று அழவேண்டும் போல இருந்தது ..ரம்யாவிடம் செய்த சத்தியம் அவளை கட்டிப்போட்டதாக அவள் நினைக்கவில்லை ,ஆனால் ஏதோ ஒன்று அவளை பேசவிடாமல் தடுத்தது..

அருணின் பெற்றோர் அவன் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள்…அருண் அவர்களை எதிர்த்து, ஒருவருக்கொருவர் எதிரெதிர் துருவங்களாக நிற்பதையும் அதுவும் அதன் காரணம் தானாக இருப்பதையும் அவளால் தாங்கவே முடியவில்லை..இவ்வாறாக எண்ணங்கள் அலைகழிக்க அவள் வெடித்து வந்த அழுகையை சிரமத்துடன் அடக்கிக்கொண்டு சத்தமின்றி விசும்பலுடன் மூக்கை உறிஞ்சினாள்.

“அபி உனக்கு சளி பிடிச்சிருக்கா ?என்று கேட்டு அவளை தன்
புறமாகத்திருப்பி அவளது முகத்தை பார்க்க முனைந்தான் …ஆனால் தன் கண்ணீரை அருண் கண்டுவிடக்கூடாது என்று சட்டென்று அவன் மார்பிலேயே முகம் புதைத்து தன் முகத்தை மறைத்துக்கொண்டாள்.

அருண் அவளது இந்த விநோதமான செயலை கண்டு வியந்து ,தன்னிடமிருந்து அவளைப் பிரிக்க முயல அவள் மேலும் அவனை அழுத்தமாக கட்டிக்கொண்டாள்.

முகத்தில் வியப்பும் சிரிப்புமாக

“என்ன இன்னிக்கு ஒட்டுதல் கொஞ்சம் ஓவரா இருக்கு..?”என்றான் அவன்.

அவளை பிரித்து நிறுத்தி முகத்தை தன் கைகளில் ஏந்தினான் .அபியின் கண்கள் மூடியிருந்தது.

குனிந்து லேசாக அவள் இமைகளில் இதழ் ஒற்றி எடுத்து
அபியின் இமைகளைத் திறக்கச் செய்தான் , அவளது கண்கள் அந்த காரிருளிலும் பளபளத்தது ,அவளது விழியின் ஒரம் சிறு ஈரத்தை கண்டவனின் முகம் சுருங்கியது.

“என்ன ஆக்சு அபி?”என்று அவன் கேட்கும் போதே அவனது ஃபோன் ஒலித்தது.எடுத்து யார் என்று பார்த்தவனின் முகம் சட்டென்று பிரகாசமடைந்த து.. முகம் முழுவதும் சிரிப்பாக அவன் நிற்க

“யார் “ என்று கேட்டாள் அபி..

“அம்மா ..”என்றான் அவன் புன்னகை மேலும் விரிய ,

“அபியின் நெஞ்சில் வேல் பாய்ச்சியது போல் இருந்தது.இல்லை அவன் முகத்தில் இந்த சிரிப்பை மறையவைக்க ஒரு நாளும் அவளால் முடியாது .அவனிடம் சொல்லாமுடியாத தவிப்பும் தயக்கமும் மேலும் அதிகரித்தது அபிக்கு..

“அவங்க எதுக்கு இந்த நேரத்துக்கு கால் பண்றாங்க?”என்றாள் புரியாமல்,
“அடடா அபி, என் மேல உனக்கு எவ்வளவு பாசம் ?மேடம் ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேஷன் இப்ப மணி பன்னிரெண்டு என்னோட பர்த்டே ஆரம்பிச்சாச்சு..இதை கூட வெட்கமே இல்லாம நான் தான் நியாபக படுத்தவேண்டி இருக்கு, நான் குடுத்துவெச்சது அவ்வளவு தான் “என்று சோகமாக கூறி பெருமூச்செரிந்தான் ..

“ஐயோ சாரி அருண்..நான் மறந்துட்டேன் ..ரொம்ப சாரி டா ..”என்று அவள் கலங்க

“ஐயோ உன்னோட சாரி இருக்கட்டும் ,இப்பவாது விஷ் பண்ணு ,அம்மா திரும்ப கால் பண்றாங்க,அவங்களை ரொம்ப நேரத்துக்கு அவாய்ட் பண்ண முடியாது..எனக்கு முதல் வாழ்த்து உன்னோடதா இருக்கனும் அபி சீக்கிரம் விஷ் மீ “ என்றான் அருண் அவசரமாக

“ஐயோ பாவம் ,பர்த்டே பாய் அவனுக்கு எவ்வளவு ஏமாற்றமா இருந்திருக்கும் ,இத்தனைக்கும் என் பிறந்த நாளை நான் சொல்லாமலே சர்ப்ரைஸ் ஆக கொண்டாடியவனுக்கு வெறும் வாழ்த்து சொல்ல கூட மறந்து போனோமே என்று அவள் தன்னையே நொந்துகொள்கையில்..

“கமான் அபி..இந்த சின்ன ஆசைய கூட நிறைவேத்தமாட்டியா?”என்றான் குறையாக

“சாரி அருண்..”என்றவள் அவனது கன்னங்களை தன் கைகளால் பற்றி அவனை தன் புறமாக இழுத்து எட்டி அவன் நெற்றியில் முத்தமிட்டு .”ஹேப்பி பர்த்டே அருண்”என்றாள் .

“அவ்வளவு தானா?”என்றான் ஏமாற்றத்துடன்.

“வேற என்ன?”என்றுகேட்டாள் கேள்வியாக

“இல்லை… பூர்ணா சொன்னா நீ என்னமோ எனக்கு பர்த்டே கிஃப்ட் தரப்போறேன்னு ..”

“இந்த பூர்ணா வாயை வெச்சிகிட்டு சும்மா இருக்க கூடாதா..” என்று மனதுக்குள் அவளை நினைத்து பல்லைக்கடித்தாள்..

இப்போது அவள் இருக்கும் மன நிலையில் எப்படி தன் காதலை அவனிடம் எந்த வித தங்கு தடையும் இல்லாமல் சொல்ல முடியும்..மனதில் இவ்வளவு பெரிய தடையை வைத்துக்கொண்டு அவளால் அரைமனதாக ஒரு நாளும் கூறமுடியாது..

ஆனால் அருண் அவளது பதிலுக்காக காத்திருப்பதும் புரிய ,அவனை கடந்து சென்றுவிட முயன்றாள்..ஆனால் சட்டென்று அவளது கையை பற்றி தன்புறமாக இழுத்தான் ,அடுத்த கணம் அவனது பிடியில் இருந்தாள்.
“ஓடிப்போலாம்ன்னு கனவுலையும் நினைக்காத..சொல்லு..”என்றான் கொக்கி பார்வையுடன்

அவனிடமிருந்து தப்பிக்க வழி எதுயும் அறியாமல் விழித்தாள் அபி..

“அருண்..”

“ம்ம்..”

“வந்து..”

“வந்தாச்சு சொல்லு..”

“ஐ..”

“ஐ..?”

“ஐ அம் ஃபீலிங்க் ஸ்லீப்பி ..”என்றவள் அவன் திகைத்து நின்ற அந்த ஒரு கணத்தை பயன்படுத்திக்கொண்டு அவனிடமிருந்து விலகி ஓடிப்போனாள்..

அருண் குனிந்து தன் சட்டையை பார்த்தவன் ..அங்கே அபி முகம் புதைத்த இடத்தில் ஈரத்தைக்கண்டு புருவம் சுருக்கினான் ..என்ன ஆச்சு இவளுக்கு ?அழுதாளா?”என்று யோசனையில் ஆழ்ந்தான் ..

மறுநாள் காலையில் முதல் ஆளாக வந்து அபியை எழுப்பி அவளை தயாராக சொன்னாள் ரம்யா..

“ஹேப்பி தீபாவளி அபி..சீக்கிரம் ரெடி ஆகு நாம் ஒரு இட த்துக்கு போகணும் ..”

“எங்க ரம்யா?”என்று அலுப்புடன் கேட்டாள் அபி

“சஸ்பென்ஸ் அது அங்க போய் சொல்றேன்..பூர்ணாவையும் கூட்டிடு வந்துடு”என்று பெரிய பீடிகை போட்டுவிட்டு சென்றாள்.

ஐய்யோ இவள் நேத்து வச்ச சஸ்பென்ஸ் சே தாங்கல இப்ப என்ன என்று பதற்றத்துடனே தயாரானாள் அபி.

காலை உணவு முடிந்து சின்னவர்கள் அனைவரும் வெளியே கிளம்பினர்,
அருண் கார் ஓட்ட விக்கி அருகில் அமர்ந்தான் ,பெண்கள் மூவரும் பின் இருக்கையை ஆக்கிரமித்திருந்தனர்.

“எங்க டா போறோம் ?”என்றான் விக்கி அருணிடம்

“தெரியல டா நான் வெறும் ட்ரைவர் மட்டும் தான், மேடம் சொல்லுவாங்க கூட்டிட்டு போகணும் அதான் என் வேலை..” என்றான் ரம்யாவை குறிப்பிட்டு

அவனது விளையாட்டையே பின்பற்றி “ட்ரைவர் கீர்த்தி லால்ஸ்க்கு போ..” என்று ஒரு பெரிய நகைக்கடையின் பெயரைச் சொன்னாள் ரம்யா அதிகாரத்தோரணையுடன் .
சிரிப்பலையின் ஊடே வண்டி கிளம்பியது

“அங்க எதுக்கு போறோம்..” என்றாள் பூர்ணா..

“ரம்யாவுக்கு ஏதோ நகை வாங்கணுமாம்..” என்றான் அருண்

“அதுக்கு நாங்க அங்க வந்து என்ன பண்ணுறது?”என்றாள் மீண்டும்

“கவலைப்படாதீங்க பூர்ணா, அந்த கடை இருக்கறது ஒரு பெரிய ஷாப்பிங்க் மால்ல உங்களுக்கு நல்லா பொழுது போகும் என்றாள் ரம்யா..”

அபிக்கு இது எதுவும் பிடிக்கவில்லை அமைதியாக வந்தாள்…சட்டென்று ஏதோ தோன்ற தலை நிமிர்த்தி பார்த்தவள் ,அருண் அவளை பின் புறமாக பார்க்கும் கண்ணாடியிலிருந்து பார்த்துக்கொண்டிருப்பதை அறிந்தாள்.அவள் பார்த்தும் அவன் கண்களை விலக்கிக் கொண்டான் ,இது எதார்த்தம் போல் இல்லாமல் திரும்பத் திரும்ப அவன் இப்படியே செய்ய ,அபி சற்று குழம்பினாள்,இப்ப இவன் எதுக்கு என் மேல கோபமா இருக்கான் ?சட்டென்று பொறி தட்டியது,

தான் இரவு அந்த மூன்று வார்த்தையை சொல்லாது போனதால் விளைந்த கோபம் என்று ..அவள் என்ன அந்த மன நிலையிலா இருக்கிறாள்,இவனது கள்ள கோபத்தை சமாளிப்பதைவிட மேலாக கவலைக்கொள்வற்கு வேறு ஒரு இன்னல் அவளை பூதாகரமாக மருட்டிக்கொண்டிருக்கிறதே,,அவள் அலட்சியத்துடன் உச்சுகொட்டிவிட்டு, அதன் பிறகு அவனைப் பார்ப்பதையே தவிர்த்தாள்.அருண் கோபத்தில் கொதித்தான்..அவ்வளவு அலட்சியமா இரு உன்னை பார்த்துக்கறேன் என்று மனதிற்குள் புகைந்தான்.

மாலுக்கு சென்றதும் விக்கியும் பூர்ணாவும் தனியாக சென்றுவிட ,அபியை ரம்யா தன்னுடன் இருத்திக்கொண்டாள்.

முதலில் ஆரம் நெக்லஸ் என்று சுற்றித் திரிந்துவிட்டு கடைசியாக வைர மோதிரம் இருக்கும் பகுதிக்கு வந்தனர் .அருணுக்கு ஃபோன் வரவே பேசுவதற்காக கடையின் வெளியே சென்றான் .

அப்போது ரம்யா அபியிடம் “அபி ,நாம எதுக்கு இங்க வந்திருக்கோம் தெரியுமா ? எங்க எங்கேஜ்மென்ட் ரிங்க் வாங்க ..”என்றாள் உற்ச்சாகம் பொங்க..

“அருணுக்கு நான் வாங்கிட்டேன் ,ஆனால் என்னோடதை அவன் தானே செலக்ட் செய்யனும் ,ஆனா அது அவனுக்கே தெரியக்கூடாது அதுக்கு தான் முதல்ல வேற நகையெல்லாம் பார்க்கற மாதிரி நடிச்சேன் ,உங்களை கூட கூட்டிவந்தது கூட அவனுக்கு சந்தேகம் வரக்கூடாதுன்னு தான்..” என்று விளக்க அபிக்கு அவள் முகத்திலே அறைந்து ,”அருண் ஒரு நாளும் உனக்கு சொந்தம் ஆக முடியாது அவன் என்னுடையவன்”ன்னு சொல்ல வேண்டும் போல இருந்தது. அவள் சொல்லிவிடலாமா என்று வாய் திறக்கும் நேரம் அருண் சரியாக அங்கு வந்து சேர்ந்தான் .

அவன் வந்து தன் பக்கம் அமர்வான் என்று அவனுக்கு இருக்கையை நகர்த்தி போட்டு காத்திருந்தாள் அபி ,ரம்யாவின் பேச்சை கேட்ட தாக்கதிலிருந்து மீள அவனது அருகாமை அவளுக்கு மிகத்தேவையாக இருந்தது.ஆனால் அவன் அவளை பொருட்படுத்தாமல் ரம்யாவின் அருகில் அமர்ந்து சவால் விடுவது போல அவளைப் பார்த்தான்..அபியின் முகம் வாடிப்போனது,

அதற்குள் ரம்யா ஒரு வைர மோதிரத்தை எடுத்து காட்டி “இது நல்லா இருக்கா..?” என்று அருணிடம் கேட்டாள்..

“இதெல்லாம் எனக்கு என்ன தெரியும் ?நீ எது கேட்டாலும் வாங்கி தர சொல்லி அப்பா அவரோட கார்டை குடுத்தனுப்பினாரு..நீ எதுவேணா வாங்கிக்கோ ரம்மி..”என்றான்.
“போடா பெஸ்ட் ஃப்ரெண்டுக்கு ஒரு ரிங்க் வாங்க கூட ஹெல்ப் பண்ண மாட்டியா ? என்று குறைகூறவும்..

“சரி சென்டிமென்ட் புராணத்த ஆரம்பிக்காத..” என்று அவனும் அவளுடன் சேர்ந்து தேர்வு செய்வதில் மும்முரமாக இறங்கவே..அவர்கள் இருவரும் சகஜமாக பேசி சிரித்து கிண்டலடித்தபடியே ஒவ்வொரு மோதிரமாக ரம்யா கையில் போட்டு அருணிடம் காட்டி அபிப்ராயம் கேட்க, அந்த காட்சியை காண சகிக்காமல் அங்கிருந்து மெதுவாக நழுவி சென்று ஆங்காங்கே அலங்காரமாக வைக்கப்பட்டிருந்த நகைகளை பார்த்துக்கொண்டிருந்தாள்..அப்போது ஒரு ப்ளாடினம் ரிங்க் மீது அவளது பார்வை பட்டு நிலைத்தது.

அவள் பார்ப்பதை கவனித்த கடையில் பணிபுரியும் பெண் இவளிடம் வந்து
“மேடம் இந்த ரிங்க் பார்க்குறீங்களா?இது வேலண்டைன் ரிங்க் .ப்ரோபோஸ் பண்றவங்க வாங்குறது ..புது டிசைன் பாருங்க..” என்று இவள் வேண்டாம் என்று தடுத்தும் கேளாமல் எடுத்து கையில் கொடுத்துவிட்டாள்.

அபி அந்த மோதிரத்தை கையில் வைத்து நன்றாக பார்த்தாள். பிளாடினத்தினால் ஆன மெல்லிய மோதிரத்தின் முகப்பில் அம்சமாய் ஒரு வெள்ளை வைரக்கல் மின்னியது .. வளையத்தை சுற்றிலும் சிறுசிறு வைரக்கற்கள் வரிசையாக பதிந்திருக்க உட்புறமாக “ஐ லவ் யூ” என்று எழுதி இருந்தை அபி வாய் விட்டு படிக்க
“என்ன மேடம் சொன்னீங்க..” என்றபடி அவளருகில் வந்து நின்றான் அருண்.

அபி சற்று திடுக்கிட்டு போனதை மறைக்க “என்ன சொன்னாங்க ?”என்று வெடுக்கென்று கேட்டாள்.அவன் அவளை வெறுப்பேற்ற அந்த ரம்யாவின் பக்கத்தில் அமர்ந்த கோபமும் இருந்தது அவளது குரலில்..

“இல்லை எதோ எங்கிட்ட சொன்ன மாதிரி இருந்தது..”

“உங்கிட்ட ஒன்னும் சொல்லல ,இந்த ரிங்க்ல எழுதி இருந்ததைப் படிச்சேன்..” என்றாள் அபி ..

“அப்படியா அந்த ரிங்கல என்ன எழுதி இருக்கு ?என்று அப்பாவியாக அருண் கேட்க அபியும் தன் போக்கில் “ஐ லவ்..”என்று தொடங்கி விட்டு சட்டென்று நாக்கை கடித்து நிறுத்தினாள்..

“இந்தா நீயே படிச்சிக்கோ..” என்று அந்த மோதிரத்தை அவன் கையிலேயே திணித்தாள்.

அருண் சட்டென்று அபியின் கையை பற்றி, அந்த மோதிரத்தை அவள் விரலில் போட்டுவிட்டான்..அபி அதிர்ந்து நிற்கும் போதே அதை சற்றும் சட்டை செய்யாமல் அவள் கையை அப்படி இப்படி திருப்பி அழகு பார்த்தான் ..

“நல்லா இருக்கு அபி வாங்கிக்கோ..” என்றவன் அந்த பெண்ணிடம் திரும்பி “இது எவ்வளவு மேடம் ..”என்றான் ..

”ரெண்டரை லட்சம் வரும் சார் என்றாள் .

அபி உடனே வேகமாக மூச்சை உள்ளிழுத்து ..”வேண்டாம் அருண் அவ்ளோ பணம் எங்கிட்டல இல்லை..” என்றாள் .

“ஏன் நான் உனக்கு வாங்கி தர மாட்டேனா ?யார் வாங்கினாலும் இவ்ளோ காஸ்ட்லி யாலாம் எனக்கு ரிங்க் வேணாம்..” என்று மறுத்துவிட்டு அந்த மோதிரத்தை அந்த பெண்ணிடமே கொடுத்தாள்.

“இந்த டைமண்ட்லாம் நமக்கு செட் ஆகாது வா போலாம்..” என்று நகரமறுத்து நின்றவனை இழுத்துச்சென்றாள்.

சற்று தொலைவிலிருந்து இந்த காட்சியை கண்ட ரம்யாவின் கண்களில் கனல் எரிந்தது..

சின்ன வயதிலிருந்து பழகிய தனக்கே அருண் விரலில் மோதிரம் போட்டுவிட வில்லை ,ஆனால் அபியிடம் அந்த தயக்கம் எதுவும் அவனுக்கு இருந்ததாக தெரியவில்லையே ..
“என்னைவிட அபி அவனுக்கு நெருக்கமானவாளா?”
என்ன தான் அபியை சந்தேகிக்க மனம் வராவிட்டலும் மனதிற்குள் பொறாமைத்தீ பற்றி எரிவதை அவளால் தடுக்க முடியவில்லை..
தொடரும்

மன்னிக்கவும் மக்களே!!!!!
டெட் லைன் நெருங்கிய பிறகும் இன்னும் கதையை முடிக்காமல் உங்களை சோதிக்கிறேன் .டைப் பண்னி வச்சதெல்லாம் எப்படியோ டெலீட் ஆகி போச்சி,அதான் திரும்ப டைப் பண்ண டைம் ஆகிடுச்சி..கண்டிப்பாக ஜுன் 30 க்குள் முடித்துவிடுவேன் ..
இவ்வளவு நாள் பொறுமை காத்தமைக்கு நன்றி..
 
Last edited:
Top