Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன்வசந்தன்- அத்தியாயம் 1

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member


நீதானே என் பொன்வசந்தன்
அத்தியாயம் 1

அந்த அழகிய பொன் மாலைப்பொழுதில் ,சூரியனின் செங்கதிர்கள் தண்மை அடைந்து மேலை வானத்தில் ஆரஞ்சும் சிகப்பும் கலந்த வண்ணக்கலவையில் காட்சியளித்தது ,லேசான இளம்தென்றல் வசந்தமாக வீச, சாலையின் இருபுறங்களிலும் அடர்த்தியாக மரங்கள் சூழ்ந்திருந்த, அந்த அகன்ற வீதியில் தன்னந்தனியே சோர்வுடன் நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் அபி என்கிற அபிராமி.

சென்னை மாநகரத்தின் பல மேல்தட்டு மக்கள் வாசிக்ககூடிய அந்த ஏரியாவில் எப்போதுமே அதிக நடமாட்டம் இருக்காது,பிரதான சாலையின் போக்குவரத்து நெரிசலுக்கும், இரைச்சலுக்கும் நேர் எதிராக இந்த குறுக்கு தெருவில் நுழைந்ததும் ஏற்படும் அமைதியும், அடர்ந்த மரங்களில் வீடு திரும்பிய பறவைகள் தன் கூடுகளில் இருந்து எழுப்பும் ஒலியும் மிக ரம்மியமாக இருக்கும் ,சற்று அதிகபடி வாடகை தான் என்றாலும் அவள் இந்த "குருபிரியா அபார்ட்மெண்டை" தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் நகரத்தின் பரபரப்புக்கு நடுவே இருந்த இந்த இயற்கை சூழல் தான் ,ஆனால் இன்று அந்த அழகை கூட ரசிக்க முடியாத மன நிலையில் இருந்தாள்,மனதின் வலிக்கு சற்றும் குறைவில்லாமல் ,அவளது தலையும் வெடித்துவிடும் போல விண்விண்ணென்று வலித்தது ,அன்று காலையில் ஊரிலிருந்து அம்மாவின் ஃபோன் வந்த போதே அவளது கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டது ,அம்மாவை ஒரு வழியாக சமாளித்து விட்டு ,அரக்க பரக்க ஆபீஸ் சென்று அங்கும் ப்ராஜெக்ட் மேனேஜர் விவேக்கின் குத்திக்கிழிக்கும் வார்த்தை அம்புகளை தாங்கி ,தலை நிமிர கூட நேரம் இல்லாமல் உழைத்து அலுத்து வீடு திரும்பும்போது பாதி ஜீவன் காணாமல் போனதுபோல உணர்ந்தாள் .

எதேர்சையாக அவள் அடிக்கடி செல்லும் ஐஸ்கிரீம் கடை கண்ணில் பட்டது , இந்த வெடிக்கும் தலைவலியில் இருந்து விடுதலை கிடைத்தாலாவது கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் என்று தோன்றியது ,சட்டென்று முடிவு செய்து அந்த கடையை நோக்கி சென்றாள் .

அபிக்கு சிறுவயதில் இருந்தே ஐஸ்கிரீம் என்றால் உயிர் ,அதுவும் கசாட்டா ஐஸ்கிரீம் தான் அவள் ஃபேவரட் ..முன் ஜென்மம் போன்று தோன்றிய சின்ன வயதில் ஐஸ்கிரீம் கேட்டு அப்பாவிடம் ஆடம் பிடித்த நினைவுகளில் கண்களின் ஓரம் கசிந்தது.. பிடிவாதமாக அந்த நினைவுகளை ஒதுக்கிவிட்டு கடைக்காரரை அணுகினாள்,இவளைக் கண்டதும் சினேகமாக புன்னகைத்தான் கடையில் வேலை பார்க்கும் இளைஞன் .பதிலுக்கு ஒரு சம்பிரதாய புன்னகையுடன் ,"ஒன் கசாட்டா ப்ளீஸ் " என்றாள்.

"ஐயோ, ஒன்னு தான் மேடம் இருந்தது ,இப்ப தான் இந்த சார் ஆர்டர் பண்ணாரு" என்று வருத்தத்துடன் பக்கத்தில் நின்ற ஒரு இளைஞனை சுட்டிக் காட்டினான் ..

"ஒரு ஐஸ் கிரீம் சாப்பிட கொடுத்துவைக்க வில்லையா எனக்கு..? நான் என்ன அவ்ளோ பெரிய பாவியா?" தன்னிரக்கம் பேரலையாக தாக்க,சட்டென்று அவள் கண்கள் கலங்கி விட்டது ,"ச்சா... இது ஒரு சாதாரண விஷயம் இதுக்கு போய் அழுது ,ஒரு மூணாவது மனுஷன் முன்னாடி அவமான படாத அபி ."என்று அவள் மனம் எச்சரிக்க,உதட்டை கடித்து அவள் கண்ணீரை அடக்கும்போது,

"பரவாயில்லை அந்த ஐஸ்கிரீமை அவங்ககிட்டையே குடுத்துடுங்க நான் வேற ஏதாவது வாங்கிக்கறேன் "என்ற ஆணின் குரல் பக்கத்தில் கேட்டது.

அவள் அனிச்சையாக விழியுயர்த்தி அந்த புதியவனை பார்த்தாள்,

அவன் தன் பல்வரிசை முழுவதும் காட்டி அவளை பார்த்து சிரிக்க,அபி திகைத்து போனாள்…. ‘யாரிவன்? முன்னே பின்னே தெரியாத பெண்ணைப் பார்த்து இப்படி சிரிக்கிறான்!! பார்க்க ஆள் ரொம்ப டீசண்டா தான் இருக்கிறான் ,ஆனால் செயல் நேர்மாறாக இருக்கிறதே..!!!’அவன் பார்வையை தவிர்த்து விட்டு ,"நோ தேங்க்ஸ் ,நீங்களே வாங்கிக்கோங்க"என்று பொதுவாக சொல்லி விட்டு, "பொண்ணுங்கள பார்த்த உடனே வழிய வேண்டியது.." ,என்று அடிக்குரலில் முனகி விட்டு ,அங்கிருந்து நகர்ந்தாள்… “மேடம் இன்னும் வேற நெறைய பிளேவர்ஸ் இருக்கு ட்ரை பண்ணுங்க..” என்ற கடைக்காரனின் அவசர குரலையும் தவிர்த்து விட்டு வேகமாக திரும்பி நடந்தாள்...யாரோ தன் முதுகுப்புறம் உறுத்துவிழிப்பது போல் உணர்ந்தாள் ,யாரோ என்ன அந்த ரோடு சைடு ரோமியோவாக தான் இருக்கும் ,ஒருவேளை நான் கடைசியாக பேசியது அவன் காதில் விழுந்திருக்குமோ? விழுந்தால் விழட்டும் ,எனக்கென்னகவலை? என்று தலையை லேசாக சிலுப்பிவிட்டு ,நடையை தொடர்ந்தாள்.

ஐஸ்கிரீம் சாப்பிட்டால் மனசு சரி ஆகும் என்று போனால் இன்னும் மோசம் ஆனது தான் மிச்சம்..தன்னுடைய தவறான முடிவை மனதிற்குள் நொந்து கொள்ளும் போதே அவளின் அபார்ட்மெண்ட் கேட்டை அடைந்திருந்தாள்…செக்யூரிட்டி அவளைப்பார்த்து சினேகமாக சிரித்துவிட்டு அவளிடம் ஏதோ சொல்ல விரைந்து வருவதுபோல் தெரிந்தது…

‘ஐயோ… இது என்னடா வம்பாபோச்சி, சீக்கிரம் வீட்டுக்கு போய் படுக்கையில் விழலாம் என்றால் அதற்கு இவ்ளோ தடையா?” இல்லை இவரிடம் நின்று பேச எனக்கு சக்திஇல்லை.. நொடியில் முடிவெடுத்து அவரை தவிர்த்துவிட்டு வேகமாக விடு விடுவென்று நடந்து அவளது D பிளாக்கை அடைந்தால் லிப்ட்டின் மீது ‘அவுட் ஆப் ஆடர்’ என்ற போர்டு இவளை பார்த்து பல் இளித்தது,

‘இன்னும் என்னுடைய மோசமான நாள் முடியவில்லையா கடவுளே?’

இதை சொல்லத்தான் அந்த செக்யூரிட்டி அப்படி வேகமாக ஓடிவந்தானோ? இப்போது பத்துமாடி ஏறிச்செல்லவேண்டும் ,ஒரு பெருமூச்சுடன் நடக்கத்தொடங்கினாள்.

மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவளது பத்தாவது தளத்தை அடைந்த போது ,மயங்கி விழும் நிலையில் இருந்தாள்,காலையிலிருந்து ஒன்றும் சரியாக சாப்பிடவில்லை, அதற்குமேல் வேலைப்பளு ,மனதை அரிக்கும் வலி எல்லாவற்றுக்கும் மகுடமாக இந்த தலைவலி எல்லாம் சேர்ந்து அவளை அலைக்கழித்தது முதலில் வீட்டிற்கு போய் ஒரு காபி போட்டு குடிக்கணும்,இப்போதைக்கு தலைவலி குறைந்தால் போதும் என்றிருந்தது அவளுக்கு ,'காவ்யா வேற இருக்கமாட்டா ஊருக்கு போய் இருக்கா..'என்றைக்கும் இல்லாமல் இன்று அவள் ரூம்மேட் காவ்யாவை ரொம்ப மிஸ் செய்தாள்,"ச்சா ஒரு காபி போட்டு தர கூட எனக்கு ஒரு ஆள் இல்லை,பரிவு, கரிசனம் இதையெல்லாம் அனுபவிப்பதற்கு எனக்கு இந்த ஜென்மத்துல குடுத்து வைக்கல போல,என் சோகத்தை எல்லாம் சொல்லி அழக்கூட எனக்கு ஒருதோள் இல்லை .." அவளது பலவீனமடைந்த உடலும் உள்ளமும் அவளை தன்னிரக்கம் கொள்ள செய்தது ,

இப்படி தேவை இல்லாத கற்பனைகளால் மனம் உழன்று கொண்டே வீட்டின் வாசலை அடைந்தாள் ,மெல்ல நடந்து சென்று சாவித்துவாரத்தில் சாவியை நுழைத்து திருகினால் மற்றுமொரு அதிர்ச்சியாக சாவியை திருப்ப முடியவில்லை ,இன்றைய கஷ்ட காலம் இன்னும் தீர்ந்த பாடில்லையா?அதிர்ச்சியில் செயலிழந்து போனாள்,இப்போது என்ன செய்வது? பராமரிப்பு பணியாளரை கூப்பிடவேண்டும் என்றால் திரும்ப பத்து மாடி இறங்கி ஏற வேண்டும் ,இப்போதே கால்களெல்லாம் நடுங்குகிறது ,கண்டிப்பாக அவளால் முடியாது ,ஒரு அடி எடுத்து வைத்தாலே விழுந்துவிடுவாள் போல சோர்ந்திருந்தாள் ,இந்த கதவு சில நாட்களாக தொல்லைக் கொடுத்து கொண்டு தான் இருந்தது வாரக்கடைசியில் சரி செய்து விடலாம் என்று அபியும் அவளுடைய ரூம்மேட் காவ்யாவும் முடிவெடுத்திருந்தனர் ,ஆனால் பாழாய்ப்போன கதவு அதற்குள் இப்படி பழிவாங்கும் என்று அவள் நினைக்கவே இல்லை ,இருந்திருந்து இன்றைக்குத்தான் இதுவும் வேலை நிறுத்தம் செய்யவேண்டுமா ?

தன்னை மீறி பொங்கிய ஆத்திரத்தில் கதவை ஓங்கி உதைத்து விட்டு,வலி பொறுக்க முடியாமல் “ஷ்ஷ் ...”என்று முனகினாள் ,

அதேசமயம் "ஏதாவது ஹெல்ப் வேணுமா?” என்ற குரல் மிகஅருகில் பின்னாலிருந்து கேட்டதும் தூக்கிவாரிபோட்டு திரும்பிப் பார்த்தாள் அபி…பார்த்த நொடியில் அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன ,

ஐஸ்கிரீம் கடையில் பார்த்த அதே ஆள், அபியின் மனம்சட்டென்று திடுக்குற்றது,"ஒரு வேளை நம்மை பின் தொடர்ந்து வந்திருப்பானோ?’அந்த எண்ணமே அவளது உடலை சில்லிடச்செய்தது ,அடிவயிற்றில் பயம் கவ்விப்பிடித்தது ,சந்தேகமாக அவனைப்பார்த்தாள் .

அவன் அவளை ஆறுதல் படுத்துவதைப் போல லேசாக சிரித்தான் ,விசித்திரமான வகையில் அவன் இப்படி சிரிக்கும் போது அவனை தவறாக நினைக்க தோன்றவில்லை,மாறாக மனதின் பயம் நீங்கி அமைதி பரவுவதை உணர்ந்தாள் .

"ஹலோ ,என் பேர் அருண் ,அப்போசிட் பிளாட்க்கு புதுசா குடிவந்திருக்கேன் ,நாலு நாள் தான் ஆகுது ,நான் உங்களை முன்னாடியே பார்த்திருக்கேன் ,பட் நீங்க என்னை கவனிக்கலை போல "அவன் இடைவெளிவிடாமல் பேசினான் .

"ஓ இவன்தான் காவ்யா சொன்ன அந்த மிஸ்டர் ஹேண்ட்சமா?அப்பப்பா நாலு நாளா இந்த மன்மதனோட புராணத்தை கேட்டு எனக்கு காதே புளிச்சிபோச்சி ,அப்படி என்ன அழகு இவன்? காவ்யா அவ்ளோ வர்ணிக்கற அளவுக்கு?கண்ணு பார்க்க நல்லா இருக்கு ,ஷார்ப் நோஸ் ,சிரிப்பு கூட ஓகே தான்,அப்புறம்.. "என்று தன் மனம் தானாக அவனை அளவிட்டது ,

"ஹலோ "என்று அவன் ,அவள் முகத்திற்கு நேராக சொடக்கிடும் போது தன்னுணர்வு பெற்று திடுக்குற்றாள் ,”ச்ச கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாமல் பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி இவன் முகத்தை வெறிச்சிட்டு இருக்கோமே,அவன் என்னை பத்தி என்ன நினைப்பான்..?’ஓரக்கண்ணால் அவனை நோட்டம் விட்டாள், அவன் முகம் உணர்ச்சி துடைத்திருந்தது,அதிலிருந்து ஒன்றும் அறியமுடியவில்லை.

‘இவன் கிட்ட ஹெல்ப் கேக்கலாமா வேணாமா?’ஒரு கணம் அவள் மனம் அலைபாய்ந்தது, சரி ஆபத்துக்கு பாவம் இல்லை என்று எண்ணி, சிறுதயக்கத்துடன்,

"ஹலோ நான் அபி,அபிராமி " என்று முறையாக அறிமுக படுத்திக் கொண்டாள்.

"நைஸ் டு மீட் யூ மிஸ் அபி ,என்ன ப்ரோப்ளம் ?

"ஆக்சுவலி ,சாவிய திருப்ப முடியலை ,மாட்டிக்கிச்சுன்னு நினைக்கறேன் .."

"நான் ட்ரை பண்ணட்டுமா ?"
என்று அவன் வினவ,

லேசான தலையசைப்புடன் அவள் அவனுக்கு வழிவிட்டு விலகி நின்றாள்.

என்ன செய்தானோ தெரியாது ,சில முயற்சிகளுக்கு பின் அவன் சாவியை வைத்து திரும்பியவுடன்,கதவு திறந்து கொண்டது ,

கதவு திறக்கும் ஒலியில் அவள் மனம் அப்பாடா என்று நிம்மதியுற்றது ,இப்போது அவனுக்கு நன்றி கூற வேண்டும்,சிறுதயக்கத்திற்குப்பின் "ரொம்ப தேங்க்ஸ் "கம்மிய குரலில் கூறிக்கொண்டே விழியுயர்த்தி அவனைப்பார்த்தால் ,அந்த நன்றியைப் பெற்றுக்கொள்ள அவன் அங்கு இல்லை ,அவளைத் திரும்பியும் பாராமல் தன் பிளாட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றிந்தான்.

"ரொம்ப திமிரு புடிச்சவன் போல "அபி உதட்டை ஏளனமாக சுளித்து விட்டு தன் வீட்டிற்குள் நுழைந்து கதவை இருக்க மூடினாள் .

அதே சமயம் எதிர் பிளாட்டில் அவன் "ரொம்ப திமிரு புடிச்சவ ,என்று அபியை வைது கொண்டிருந்தான் "பெரிய உலக அழகின்னு நினைப்பு ,அப்படியே இவளைப்பார்த்ததும் வழியறாங்களாம் ,அருணுக்கு எரிச்சல் மண்டியது .

"அவள் தான் அவ்ளோ கேவலமா நினைக்கறா இல்ல ,அப்புறம் எதுக்குடா நீ போய் வலிய ஹெல்ப் பண்ற?மானம் கெட்டவன்டா நீ ,"தானாக போய் அவளுக்கு உதவியதற்காக அவன் அவனையே திட்டிக்கொண்டான்.


இனிமேல் அந்த பிளாட் பக்கம் திரும்பிக் கூட பார்க்க கூடாது என்று உறுதியெடுத்த மறு வினாடி ,எதிர்ப்பிளாட்டில் இருந்து யாரோ அலறும் குரல் கேட்டது,தான் எடுத்த தீர்மானத்தை நொடியில் மறந்து,எதிர்பிளாட்டை நோக்கி ஓடினான் ...

அவன் அங்கு கண்ட காட்சி,இந்த ஜென்மத்தில் மறக்காது என்று எண்ணினான் ,அபி சோபாவின் மீது ஏறி நின்று கொண்டுகண்களை இருக்க மூடி ,காதுகள் இரண்டையும் கைகளால் பொத்திக்கொண்டு ,முகத்தில் பயமும் ,அசூசையும் ஒரு சேர தாண்டவமாட நின்றுகொண்டிருந்தாள் ..
அவள் எதை கண்டு கலவரமடைந்து இருக்கிறாள் என்று அவனுக்கு புரிய சிறிது நேரம் பிடித்தது ,சுற்றும்முற்றும் பார்த்தால் ஒரு பூனை வெளியே போக வழியறியாமல் இங்குமங்கும் அலைந்து கொண்டிருந்தது இதைப் பார்த்ததும் அருண் பக்கென்று சிரித்துவிட்டான்.
திடீரென்று சிரிப்புசத்தம்கேட்டவுடன் அபி விருட்டென்று கண் விழித்துப்பார்த்தாள்,எதிர் பிளாட்காரனை அங்கு பார்த்ததும்,தன்நிலை மறந்து ,கோபம் கொப்பளித்தது "என்ன தைரியம் இருந்தால் என் அனுமதி இல்லாமல் என் வீட்டுக்குள் வருவீங்க ?

"ஹலோ ,நானா வரலை ,உங்க அலறல் சத்தம் தான் என்னை இங்க இழுத்து வந்துச்சி ,நான் கூட ஏதோ பேயோ,பிசாசோன்னு நெனச்சேன் , அட்லீஸ்ட் ஒரு பாம்பாவது இருக்கும்னு எதிர்பார்த்தேன் ஆனா இப்படி ஒரு பூனைக்குட்டி இருக்கும்னு நான் கனவுல கூட நினைக்கலை, அந்தக் காலத்துல பெண்கள் புலியை முறத்தால் விரட்டியதா கேள்விபட்டிருக்கேன் ஆனால் இந்த காலத்துல வெறும் பூனையைப் பார்த்து பயப்படுறாங்க
?அவன் போலியான ஆச்சரியத்தில்புருவம் உயர்த்தினான்..

அவன் தன்னை பார்த்து சிரிக்கிறான் என்று அபிக்கு நன்றாக புரிந்தது ,

அவன் முன் மேலும் அவமானப்பட விரும்பாமல் ,சோபாவை விட்டு மெல்ல கீழே இறங்கும் போதே முயன்று வரவழைத்த மிடுக்கான குரலில் ,"யாரு சொன்னா எனக்கு பயம்னு , திடீர்னு பார்த்ததும் கொஞ்சம் ஷாக் அவ்வளவுதா..” என்று வாக்கியத்தை முடிக்கும் முன்னரே அந்த பூனை இவளை நோக்கி வருவதைப் போல தோன்றியதும் ,"ஆஆஆ ..."என்று கத்திக்கொண்டேஅபி மீண்டும் சோபாவின் மேல் ஏறிக்கொண்டாள்.

இப்போது அவன் வயிற்றை கையால் பிடித்துக்கொண்டு சத்தமாக சிரித்தான் அவள் அவனை பார்த்து குறை கூறும் விதமாக முகம் சுளித்தாள்,

அருண் அவள் முகத்தை பார்த்து மேலும் சிரித்தான் ,தான் பார்த்ததில் இருந்து அவள் காட்டிய பெரிய மனுஷி தோரணை என்ன?மிடுக்கு என்ன? இப்போ அந்த விரைப்பை எல்லாம் விட்டு ஒரு சிறு குழந்தைப் போல் பயந்து அலறுவதைப் பார்க்க அவனுக்கு வேடிக்கையாக இருந்தது.அதே சமயத்தில் அவளது அப்பாவியான முகத்தோற்றத்தைப் பார்த்து அவன் மனம் இளகவும் செய்தது.
“வெளியே போக வழியில்லாம பாவம் அந்தப் பூனை சுத்திக்கிட்டு இருக்கு கதவு இல்லாட்டி ஜன்னல் எதையாவது தொறந்து வச்சா போயிடும் இதுக்கு எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க?” என்று விட்டு எதிரே இருந்த பலகணி கதவை விசாலமாக திறந்து வைத்தான், அப்போதும் வெளியே போகாமல் போக்குக் காட்டிக் கொண்டிருந்த பூனையின்மேல் அருகில் இருந்த ஒரு பேனாவை தூக்கி எறிந்தான், அது வேகமாக விலகி செல்லும் போது வழியில் இருந்த மேஜையின் மீது அலங்காரமாக வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த ஒரு புத்தர் சிலையை தட்டிவிட்டு சென்றது அது கீழே விழும் முன் நொடியில் செயல்பட்டு அதை லாவகமாக ஒரு தேர்ந்த கிரிக்கெட் வீரனை போல் பிடித்தான் அருண்,
சில கணங்களில் நடந்துவிட்ட இவை அனைத்தையும்
ஆச்சர்யத்தில் விழிவிரித்து பார்த்துக்கொண்டிருந்த அபிக்கு புத்தர் சிலையை கீழே விழாமல்அருண் பிடித்த கணத்தில்தான் போன உயிர் திரும்பியது போல் இருந்தது. அது காவியாவிற்கு அவளது பாய்பிரெண்ட் பரிசாக கொடுத்தது, அவள் மிகவும் செண்டிமெண்ட் பார்ப்பவள் அது மட்டும் உடைந்து இருந்தால் அவளை கண்ணீர் கடலில் மூழ்கடித்து இருப்பாள்.

நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்க வில்லை என்று அபி நிம்மதி பெருமூச்சு விடும் பொழுது அருணின் அவசர குரல் கேட்டது “ஹலோ என்ன பண்றீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க ..”என்று அவன் கூறியதும்தான் சிலையை கீழே விழுந்து பிடித்தவன் கனம் தாளாமல் அதை சிரமத்துடன் பற்றிக் கொண்டிருப்பது உறைத்தது, அவள் சட்டென்று கீழே இறங்கி சிலையை அவனிடமிருந்து குழந்தையை வாங்குவது போல் வாங்கி பத்திரமாக மேஜைமேல் வைத்தாள். அருண் மெதுவாக எழுந்து தன் சட்டையை சீர் செய்து கொண்டு திரும்பும் போது அபி அந்த புத்தர் சிலையை
நிம்மதி பெருமூச்சுடன் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பதை கண்டான். “அந்த சிலை என்ன அவ்வளவு ஸ்பெஷலா..?” என்று ஆச்சரியப்பட்டான், ஒருவேளை பாய்பிரெண்ட் பிரசெண்ட் பண்ணதா இருக்குமோ? என்று எண்ணியவன் பிறகு அந்த கற்பனை பிடிக்காமல் அதை ஒதுக்கித் தள்ளினான்… அபி அவன்புறம் திரும்பி முகமலர்ச்சியுடன்.

"ரொம்ப தேங்க்ஸ் " என்றாள் மனதார.

"உங்க தேங்க்ஸ் யாருக்கு வேணும் ?”

"பின்ன
?”புரியாமல் கேட்டாள்.

"ஒரு கப் காபி கிடைக்குமா? தொண்டை வறண்டுபோய் இருக்கு .."

அவளால் எப்படி மறுக்க முடியும்?வலிய வந்து உதவி செய்திருக்கான் அதுவும் எப்படிப்பட்ட உதவி..

"கண்டிப்பா "அவள் வாய் தன்னாலே பதிலளித்தது ..

அவசரமாக காபி தயாரித்து இரு கப்புகளில் ஊற்றி கொணர்ந்தாள் ,ஒரு சிறு புன்னகையுடன் பெற்றுக்கொண்டான் ,இருவரும் அமைதியாக காபியை அருந்தினர் ..

அபி அவனை கடைக்கண்ணால் பார்த்தாள் "காபி நல்லா இருக்குன்னு சொல்றானா பாரு ,கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாதவன் ,மனதிற்குள் குறைபாட்டாள்.ஆனால் அவள் ஏன் அவனிடமிருந்து பாராட்டை எதிர் பார்க்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை,,அவன் முழுகப்பையும் குடித்து முடிக்கும் சமயம்,அதற்குமேல் பொறுக்க முடியாமல்

"காபி எப்படி இருக்கு ?என்று அவள் கேட்டுவிட்டாள்.

அவன் முகத்தில் ஒருகணம் வியப்பு தோன்றி மறைந்தது

"ஆக்சுவலி ,இட் வாஸ் யம்மி ,அதான் ரொம்ப ரசிச்சி குடிச்சிகிட்டு இருந்தேன் ,தங்க்யூ சோ மச் ஃபார் தி ஒன்டர்புல் காபி" ,அவனது புகழ்ச்சியில் மனம் பறப்பதைக் கட்டுப்படுத்த முடியாமல்இனிமையான புன்னகை அவள் முகத்தில் தோன்றியது .

" சும்மா முகஸ்துதிக்காக சொல்றீங்கன்னு தெரியும் ,இருந்தாலும் தேங்க்ஸ்"முதல் முறையாக மனதார புன்னகைத்தாள் .

"நான் எப்பவுமே உண்மையதான் சொல்லுவேன் .." அவளது புன்னகையை பிரதிபலித்தான்..

"சரி நான் கிளம்பறேன் "என்று கூறி அவன் விடைபெறும் போது,"அந்த பூனை திரும்பி வந்தா என்ன பண்றது ? ?"என்று தன்னை மீறி கேட்டுவிட்டு நாக்கை கடித்துக்கொண்டாள் , "என்ன மடத்தனமான கேள்வி கேக்குறேன்..

உள்ளார்ந்த சிரிப்பில் கண்கள் பளபளக்க "சொல்ல முடியாது திருட்டு பூனை இல்லையா அர்த்த ராத்திரில உள்ள வந்து உங்க கைய பிறாண்டினாலும் ஆச்சரியம் இல்லை ,அப்படி எதுனா நடந்தா சத்தம் மட்டும் போட்டுடாதீங்க ,என்னோட தூக்கம் கெட்டுடும்.."என்று அவளை சீரியசான குரலில் சீண்டிவிட்டு சென்றான் ,ஒரு கணம் அச்சத்தில் விழித்தவள் அவனது கேலியை உணர்ந்து ,அவன் முதுகை வெறித்தாள் ..

" நான் மோதல்ல நெனைச்சது தான் சரி, இவன் சரியான திமிரு புடிச்சவன்,என்னை பார்த்து உள்ளுக்குள்ள சிரிக்கிறான்,ரொம்ப மோசம்,இந்த காபியோட சேர்த்து இவனோட சவகாசமும் முடிஞ்சுது .."என்று உள்ளூர முடிவெடுத்தாள்,
அடுத்த நொடி வாழ்க்கை ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்களை அறியாமல்.



தொடரும்
 
Last edited:
உங்களுடைய "நீதானே என்
பொன் வசந்தன்"-ங்கிற புதிய
அழகான அருமையான லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கலாராணி பாஸ்கர் டியர்
 
Last edited:
Top