நினைக்காத நாள் இல்லை அத்தியாயம் 6

Advertisement

parvathi

Active member
Member
HERE WE GO WITH THE 6TH EPISODE HAPPY READING IN LEISURE FRIENDS


அத்தியாயம் 6

கலாச்சார விழா என்ற பெயரில் கல்லூரி களை கட்டியிருந்தது.

மாணவர்களும் மாணவிகளும் அழகழகான உடைகளில் கல்லூரியில் ஏதோ பேஷன் ஷோ தான் நடக்கிறதோ என்று பார்த்தவர்கள் பிரமிக்கும் அளவிற்கு அலங்காரமாய் வலம் வந்தார்கள்.

"ஏய் இன்னிக்கு நம்ம கல்லூரிக்கு வரப் போற முக்கிய விருந்தினர் யார் தெரியுமா?"

அனு பெரிதாய் பில்டப் கொடுத்து சஸ்பென்சாய் நிறுத்தவும் பெண்கள் அனைவரும் அவளைத் திரும்பிப் பார்த்தனர்.

" யாராவது மத்திய மாநில அமைச்சர் இல்லேன்னா பிரபல தொழிலதிபர் இவர்களை விட்டால் வேற யாரை நம்ம வைஸ் சேன்ஸிலர் கூப்பிடப் போகிறார்? ஆனால் ஒண்ணு ஆதாயமில்லாமல் யாரையும் நம்ம சீஃப் அழைக்கமாட்டார். விருந்தினராய் வர்றவர் தலையைத் தடவி நிச்சயம் கல்லூரிக்கு வேண்டிய எதாவதொரு வசதியை நன்கொடையாகவோ சலுகையாகவோ தேற்றிவிடுவார்............"

சுமதி அலட்சியமாய் எல்லாம் தெரிந்தவள் போல் பேச, அனு தீர்மானமாய் தலையசைத்தாள்.

" ம்கூம்......இங்கே தான் நீ தப்பு பண்றே. நம்ம சீஃப் இந்த விஷயத்தில் தான் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுகிறார். அவர் இந்த மாதிரி விழாக்களில் விருந்தினராய் கூப்பிடுவது இதே கல்லூரியில் படித்து இன்று நல்லநிலையில் இருக்கும் பழைய மாணவர்களைத் தான்."

"க்கும்.......அப்படியே பார்த்தாலும் நம் கல்லூரியில் என்ன அனில் அம்பானியும், அசிம் ப்ரேம்ஜியுமா படித்திருக்கப் போகிறார்கள்? எந்தக் குப்பனும் சுப்பனும் வரப் போகிறானோ?"

சந்தியா நக்கலாய் சொல்லவும், சுற்றியிருந்த மற்ற பெண்கள் சிரித்தார்கள்.

"ரொம்ப லொள்ளு தாண்டி உனக்கு....... நம்ம கல்லூரியில் படித்த எத்தனையோ மாணவர்கள் இன்று மைக்ரோ ஷாஃப்ட், இன்போஃசிஸ் என்று பெரிய நிறுவனங்களில் பெரிய பதவிகளில் இருக்கிறார்கள் தெரியுமா? அவர்களை நமக்கு ரோல் மாடல்களாகக் காண்பித்து நாமும் அவர்களைப் போல் வரவேண்டும் என்பதற்காக நம்ம சீஃப் மெனக்கெட்டால், நீங்களெல்லாம்

கிண்டலா பண்ணுகிறீர்கள்?"

"ஹய்யோ...சாரி அனு..........இன்னிக்கு வரப் போற விஐபி மிஸ்டர் குப்பன் உனக்குத் தெரிந்தவரா? ஒருவேளை முறை மாப்பிள்ளையோ?"

சந்தியா விடாமல் சீண்டவும் அனு முறைத்தாள்.

"லொள்ளு சந்தியான்ற பட்டப்பெயர் உனக்கு சரியாத் தாண்டி இருக்கு........."

"அரியர்ஸ் அனு ஒண்ணு சொன்னால் அதுவும் சரியாய் தானிருக்கும்........"

சந்தியாவும் சளைக்காமல் அனுவை பதிலுக்கு வார, பெண்களின் கவனத்தை ப்ரின்சிப்பாலின் வரவேற்புரை திசை திருப்பியது.

வழக்கப்படி சம்பிரதாயமாக அனைவரையும் வரவேற்றுப் பேசிய கல்லூரி முதல்வர் ,

"இப்பொழுது நம் கல்லூரியின் முன்னாள் மாணவரும் இந்நாள் மைக்ரோஷாஃப்ட் கம்பெனியின் உயரதிகாரியுமான மிஸ்டர் அரவிந்தனை உங்கள் அனைவரின் சார்பாகவும் நான் வரவேற்கிறேன்..."என்ற பொழுது சந்தியா தன்னையறியாமல் ஒரு ஆர்வத்துடன் தன் மாமாவின் பெயர் கொண்ட அந்தக் குப்பன் யாரென்று பார்த்தாள்.

பலத்த கைதட்டல்களிடையே எழுந்து மேடைக்கு வந்த அந்த இளைஞனைப் பார்த்த நொடியில் சந்தியா வாயடைத்துப் போய் காண்பது கனவா இல்லை நினைவா என்று புரியாத தடுமாற்றத்தில் தன் கையில் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.

அந்த குப்பன் வேறு யாருமில்லை. முன்னொரு சமயம் மலைப்பாதையில் சந்தியாவிடம் மல்லுக்கு நின்று அவள் மனதிலிருந்து இன்று வரை மறைய மறுக்கும் மகானுபாவனே தான்.

கலைநிகழ்ச்சிகளில் ஒன்றாக அமைந்த தன் நாட்டிய நிகழ்ச்சிக்காக சந்தியா மேடையேறியபொழுது, தன்னை இனம் கண்டு கொள்வானோ என்ற ஆர்வத்தில் அவன் புறமாய் பார்வையைத் திருப்பிய அவளுக்குக் கிடைத்தது ஏமாற்றமே.

ஏனெனில் அவன் பார்வையில் ஏற்கெனவே அறிமுகமானதைத் தெரிவிக்கும் வகையில் ஒரு பார்வையோ இல்லை புன்னகையோ ஒன்றுமே இல்லை.

சந்தியாவிற்கு கிட்டத்தட்ட கண்ணில் நீர் துளிர்த்துவிட்டது.

'அவளானால் அவனைச் சந்தித்த நாளாய் அவனை மறக்கவும் முடியாமல் மாமனை மணக்கவும் மனசில்லாமல் திரிசங்கு நிலையில் தவிக்கிறாள். அவனுக்கோ அவளை நினைவிருப்பதாகவே தெரியவில்லையே. யாரோ எவரோ என்பது போல் பார்க்கிறானே?'

நாட்டியத்திற்காக அவள் எடுத்துக் கொண்ட பாட்டு பாரதியாரின் கண்ணன் பாட்டு. கண்ணனைக் காதலனாக்கி அவள் மனம் திருடிச் சென்ற கள்வனாக்கி ராதா பாடுவது போல் அமைந்த அந்தப பாடலின் வரிகள் கிட்டத்தட்ட சந்தியாவின் மனநிலையையே பிரதிபலிக்க, சந்தியாவின் அபிநயத்தில் ராதையின் ஏக்கமும் தாபமும் அற்புதமாய் வெளிப்பட்டது.

அவ்வப்பொழுது அவள் நயனங்கள் பாவனையுடன் அவனை எதிர்கொண்ட பொழுது, அவன் விழிகளில் தெரிந்த சலனமற்ற தன்மையில் சந்தியா நொந்து போனாள்.

'யாருமில்லாத இடத்தில் உலாவுகிறாயே நீ வனதேவதையோ.....என்றும்

உன்னுடைய மாமாவை நினைத்து நான் பொறாமைப்பட ஆரம்பித்துவிட்டேன் என்று சொன்னால் நீ நம்புவாயா பெண்ணே?.........என்றும்

இந்த முத்தம் என்னை உனக்கு அடிக்கடி ஞாபகப்படுத்தும் என்றால் அது நான் செய்த பாக்கியம்..... என்றும்

அன்று அவன் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் இன்றைக்கும் அவள் மனசில் கல்வெட்டுக்களாய்ப் பதிந்திருக்கின்றன.

ஆனால் அதைச் சொன்னவன் அவளை ரொம்ப சுலபமாக மறந்து விட்டானே......'

கரித்துக் கொண்டு வந்த கண்களை அரும்பாடுபட்டு மறைத்தாள் என்றாலும் மனம் நிலை கொள்ளாமல் அலைந்தது.

"சுமி.......நான் ஹாஸ்டலுக்குப் போகட்டுமா? லேசாத் தலையை வலிக்கிற மாதிரி இருக்கு.."

மெதுவாய் தோழிகளிடம் விடைபெற எண்ணியபொழுது, சுமித்ரா அவசரமாய் அவளைத் தடுத்தாள்

"ஏய் உனக்கென்ன பைத்தியமா? இன்னும் பரிசுகள் கொடுக்கவே ஆரம்பிக்கலே. ரெண்டு சப்ஜெக்ட்ல நீ டாப் ரேங்க் ஹோல்டர். உனக்கான பரிசை இறந்து போன உன் அப்பாவோ தாத்தாவோவா வந்து வாங்குவாங்க? பேசாமல் உட்கார். எழுந்து போனே மகளே உன்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவோம் நாங்கல்லாம்........"

"அதானே..........அரவிந்த்சாமி மாதிரி ஒரு பர்சனாலிட்டிகிட்டருந்து பரிசு வாங்க இவளுக்குக் கசக்குதாக்கும்?"

மற்ற தோழிகளும் சேர்ந்து அவளைக் கலாய்க்கவும் தவிர்க்க முடியாமல் இருக்கையில் வேதனையுடன் அமர்ந்தாள் சந்தியா.

"ஏம்ப்பா இந்த அரவிந்தன் இவ்வளவு ஹேண்ட்சம்மா இருக்காரே இத்தனை நாளைக்கு யாரையும் காதலிக்காமலோ கல்யாணம் செய்யாமலோவா இருப்பார்? ம் யார் அந்த அதிர்ஷ்டசாலியோ தெரியலையே......."

மாலதி நெடுமூச்செறியவும், வந்தனா கிண்டலடித்தாள்.

"ஏன் அவருக்கு கல்யாணமாகலேன்னா கொஞ்சம் நூல் விட்டுப் பார்க்கலாமேனு உனக்கு ஆசையா மாலு?"

"ஆமாண்டி எனக்கு மட்டும் தான் அவர் மேல ஆசை.......நீங்கல்லாம் அவருக்கு கையிலே ராக்கி கயிறு கட்டிட்டு வந்த உடன்பிறவா சகோதரிகள்னு நினைப்பா? உண்மையைப் பேசுங்கடி"

மாலதி பதிலுக்கு வாரவும், வந்தனா வாயடைத்துப் போனாள்.

சந்தியா நெருப்பில் அமர்ந்திருப்பது போல் தவித்துக் கொண்டிருந்தாள்.

முன்னெல்லாம் அவளும் தோழிகளுடன் சேர்ந்து கூடப் படிக்கும் பல மாணவர்களைக் கலாய்த்திருக்கிறாள் தான். ஆனால் இப்பொழுது அவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாய் அரவிந்தனை சைட் அடிக்கையில் சந்தியாவால் அதைத் தாங்க முடியவில்லை, என்பது நிஜம்.

எழுந்து போய் விடலாமா என்று எண்ணிய சமயத்தில் அந்த அரவிந்தன் பேச எழுந்தான்

"மை டியர் ஸ்டூடன்ட்ஸ்....... எத்தனையோ தலைவர்களும் தொழிலதிபர்களும் இருக்கும் பொழுது. பழைய மாணவர்களை சிறப்பு விருந்தினராய் அழைத்து கௌரவிக்கும் நம் கல்லூரித் தலைவரின் இயல்பை எண்ணி முன்னே நான் படித்த காலத்தில் வியந்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது நன்றாய் புரிகிறது. விதைக்கும் விதைகளெல்லாம் வீரியமுள்ளவையாக வரவேண்டும் என்று நம் தலைவர் ஆசைப்படுவதும், அதற்காகவே மெனக்கெடுவதும்.......அவர் உயர்ந்த மனிதர் எனபதை நிரூபிக்கும் சான்றுகள். இங்கே படித்த ஒருவன் உயரத்திற்குப் போக முடிந்திருக்கிறதென்றால் உங்கள் அனைவராலும் அதே உயரத்திற்குப் போக முடியும் என்ற நம்பிக்கையை உங்களில் விதைக்கவே என்னைப் போன்ற பழைய மாணவர்களை அழைத்து சிறப்பு விருந்தினராய் எங்களைக் கௌரவிக்கிறார் என்று நினைக்கிறேன்........

உங்களை எல்லாம் பார்க்கும் பொழுது, என்னுடைய கல்லூரிப் பருவம் நினைவிற்கு வருகிறது

கல்லூரிக் காம்பவுண்டில் செய்த கலாட்டா, வகுப்பறையில் அடித்த லூட்டி, விடுதி வார்டன் செய்த கெடுபிடி என்று அந்த மலரும் நினைவுகளின் இனிமையை அரவிந்தன் நகைச்சுவையுடன் ஆங்காங்கே சிறு அறிவுரைகளுடன் எடுத்துரைத்து இறுதியில் தன்னை சிறப்பு விருந்தினராய் அழைத்ததற்காக நன்றி சொல்லி தன் உரையை முடித்தபொழுது, மொத்த மாணவர கூட்டமும் மகுடிக்கு மயங்கிய நாகமாய் அவன் பேச்சில் கட்டுப்பட்டிருந்தது.

"க்ரேட்.......ஆள் பார்க்க மட்டும் ஹாண்ட்சம் இல்லே. புத்தியிலும் வித்தை காட்டுவார் போல ம் எவளுக்குக் கொடுத்து வெச்சிருக்கோ?"

மாலதி மீண்டும் பெருமூச்செரிய, வந்தனா கடுப்படித்தாள்.

"ஐயோ இவளோட பெரிய ரோதனையாப் போச்சுடி. விட்டால் இப்பவே அரவிந்தனைக் கல்யாணம் பண்ணிக்கப் போற மாதிரி ரொம்பத் தான் அலையறா...."

" ப்ச்சு.....சும்மாயிருங்கப்பா. நம்ம சந்தியா இப்போ பரிசு வாங்கப் போறா.... அதைப் பார்க்க விடாமல் நீங்க ரெண்டு பேரும் ஏண்டி மல்லுக் கட்டறிங்க?"

சினேகிதிகளின் ஆர்ப்பாட்டக் கூச்சலுக்கிடையில் சந்தியா மேடையேறினாள்.

அவன் அருகில் நெருங்க நெருங்க, கால்கள் இரண்டும் வலுவிழந்தது போல. துவைத்த துணியாய் துவண்டன. குனிந்த தலை நிமிராமல், அவன் அருகில் சென்று பரிசுக்காய் அவள் கைகள் அவன் புறமாய் நீண்ட பொழுது, மயிலிறகின் வருடலாய் அவனிடமிருந்து வந்தன வார்த்தைகள்.

"வனதேவதை வரம் தரும் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன். பரிசுகளை வாங்கவும் பிரசன்னமாவதை இப்போ தான் பார்க்கிறேன்..........."

'கடவுளே.........அவன் அவளை இனம் கண்டு கொண்டான் '

சடாரென்று நிமிர்ந்து பார்த்த சந்தியா, அவனுடைய பார்வையில் தெரிந்த பரிகாசத்திலும். உதட்டோரம் தெறித்த குறும்புச் சிரிப்பிலும், உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை பரவி ஓடிய சிலிர்ப்பில் மெய் மறந்து நின்றாள்
 
❤️❤️❤️❤️❤️அருமை 💋💋💋💋💋ஏண்டா ஒரு பொண்ணு உன்னைய நினைச்சிட்டு இருந்தா இப்படித்தான் டீஸ் பண்ணுவியா
 

Advertisement

Back
Top