நினைக்காத நாள் இல்லை அத்தியாயம் 5

Advertisement

parvathi

Active member
Member
HERE WE GO WITH THE 5TH EPISODE AS I AM NOT FREE TO POST ON FRIDAY I AM POSTING THE 6TH EPISODE AS WELL HAPPY READING IN LEISURE FRIENDS THANKS TO ALL READERS FOR UR RESPONCE




அத்தியாயம் 5

" சந்தியா எதையும் விட்டுடலையே. எல்லா சாமானும் எடுத்து வெச்சுகிட்டியா? அப்புறமாய் கல்லூரி விடுதிக்கு போனபின்னால அதை மறந்துட்டேன் இதை மறந்துட்டேன்னு ஆயிரத்தெட்டு போன் பண்ணாதே. அம்மாவால ஒவ்வொண்ணா எடுத்துட்டு ஓடி வர முடியாது"

சத்யா நூறாவது முறையாக சந்தியாவிற்கு அறிவுறுத்த, சந்தியா பொறுமை இழந்தவளாய் படபடத்தாள்.

"ஏம்மா நான் இப்பத் தான் புதுசா ஹாஸ்டல்ல சேரப் போகிறேனா? முன்னே பள்ளிப்படிப்பையும் விடுதியில் தங்கிப் படித்தவள் தானே? எதைஎதை எடுத்துப் போகனும்னு எனக்குத் தெரியாதா? அதையெல்லாம் நீ ஆயிரம் முறை திரும்பத் திரும்பச் சொல்லனுமா? நீயும் டென்ஷனாகி என்னையும் ஏன்மா டென்ஷன் பண்றே?"

"அதற்கில்லேடி செல்லம்........முன்னேயாவது தாத்தா இருந்தார். தோட்டத்துக்குத் தேவையான பொருள்களெல்லாம் வாங்க கோவைக்கு வரும்பொழுது உன்னை வந்து பார்த்துட்டு உனக்குத் தேவையானதையும் வாங்கிக் கொடுத்துட்டு வருவார் ஆனால் இப்போ அப்படியில்லையே.

அம்மா அதிகமா வெளியே வர மாட்டேன்னு உனக்குத் தெரியாதா கண்ணம்மா?"

சத்யாவின் குரல் ரொம்பவே தழையவும், சந்தியா கோபத்தைக் கைவிட்டு அம்மாவின் கையைப் பற்றி பரிவுடன் அழுத்தினாள்.

"நீ கவலைப்படாதேம்மா......நான் இன்னும் ஒண்ணும் சின்னப் பெண்ணில்லை. எனக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொள்ள எனக்குத் தெரியும். தவிர கல்லூரி விடுதியில் பள்ளி விடுதி அளவிற்கு கட்டுப்பாடுகள் இருக்காது....."

கட்டுப்பாடுகள் இருக்காது என்று சந்தியா சொல்லவும் அதற்கு வேறு பயந்து போனாள் சத்யா.

' யார் துணையுமில்லாமல் சந்தியா வெளியே எங்கும் போகக்கூடாது. அப்படியே வெளியே போகவேண்டி வந்தாலும் சினேகிதிகள் துணையுடன் தான் போகவேண்டும். அதுவும் இரவில் வெளியே போகும் வேலையே வைத்துக் கொள்ளக்கூடாது. கூடப் படிக்கும் ஆண் மாணவர்களுடன். மரியாதைக்குரிய இடைவெளியில் தான் பழக வேண்டும். முக்கியமாய் அவளுக்காகவே காத்துக் கொண்டிருக்கும் தாய்மாமன் அரவிந்தனை மறந்து வேறு வழி செல்லக் கூடாது...........'

சத்யாவின் அறிவுரைகள் எல்லாவற்றுக்கும் தலையாட்டிய சந்தியா, கடைசியாக அவள் குறிப்பிட்ட அரவிந்தனைப் பற்றிய அறிவுரையில் மட்டும் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றாள்

"ஐயோ.....போதும்மா உன் தம்பி புராணம்............."என்று வாய் விட்டுக் கத்த வேண்டும் போல் ஒரு வெறி அவளைப் பிடித்து ஆட்டியது.

'அவளுக்கு மட்டும் பறக்கும் சக்தியிருந்தால், வெளிநாட்டில் இருந்து கொண்டு வெறும் வாய் மொழி உத்தரவுகள் மூலம் இந்தக் குடும்பத்தையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் அந்த அரவிந்தனை சட்டைக் காலரைப் பற்றி உலுக்கி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் உன் மனதில்? உன் தாளத்திற்கு ஆடும் பொம்மைகள் என்றா எங்களை நினைத்தாய்? என்று

ஒரு பிடி பிடித்திருப்பாள். நிச்சயமாய்.. '

'ஆனால் அதற்குத் தான் வழியே இல்லையே..........'

பெருமூச்சுடன் உதட்டைக் கடித்து தன் உணர்ச்சிகளை சம நிலைக்குக் கொண்டு வந்த சந்தியா அம்மாவிடம் நிதானமாய் சொன்னாள்.

"இப்ப எப்படிப் போறேனோ அப்படியே உன் மகளாகவே திரும்பி வர்றேன். போதுமா? இப்பத் திருப்தியா?"

அதற்கு மேல் மகளிடம் மேலும் அறிவுறுத்திச் சொன்னால் தன்னை வார்த்தைகளால் கடித்துக் குதறினாலும் குதறிவிடுவாள் என்ற பயத்தில் சத்யா மேலே எதுவும் பேசாமல் வாயை மூடிக் கொண்டாள்

கல்லூரி வாழ்க்கை சந்தியாவிற்கு சுவாரசியமாகவே இருந்தது.

கோவையின் பிரசித்திப் பெற்ற அந்தப் பொறியியல் கல்லூரியில் தான் அவள் சே.ர வேண்டும் கம்ப்யூட்டர் பிரிவில் தான் படிக்க வேண்டும் என்று அவளுடைய கல்லூரி வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையையும் அரவிந்தன் தீர்மானித்தான் என்ற ஒரே குறையைத் தவிர மற்றபடி சந்தியாவிற்கு கல்லூரி வாழ்க்கை பிடித்திருந்தது.

இன்னும் சொல்லப் போனால், வீட்டிலிருந்து அம்மா ஓயாமல் படித்த தம்பி புராணத்தை இப்பொழுது கல்லூரிப் படிப்பில் தவிர்க்க முடிந்ததே பெரிய விடுதலையாய் சந்தியாவிற்குத் தோன்றியதில் வியப்பொன்றுமில்லை.

சந்தியா ஸ்பாவத்தில் புத்திசாலியே என்பதால் படிப்பும் அரவிந்தன் தீர்மானித்ததாயிருந்தாலும் அவளுக்குமே விருப்பப்பட்ட படிப்புத் தான் என்பதாலும், பாடமும் படிப்புமாக முதல் இரண்டு வருஷங்கள் பிரச்னையின்றி ஓடின.

இயல்பிலேயே கலகலப்பான பெண் என்பதால், சந்தியாவிடம் நட்பு பாராட்ட ஆண் பெண் என்ற பேதமின்றி அனைவரும் விரும்பினர்.

அவளைச்சுற்றி எப்பொழுதும் ஒரு தோழியர் பட்டாளமே குழுமியிருக்க, கல்லூரியின் முடி சூடா ராணியாகவே பவனி வந்தாள் சந்தியா. துடுக்கான அவள் பேச்சினாலும், எதற்கெடுத்தாலும் விவாதம் பண்ணும் குணத்தினாலும், அவளுடைய தோழிகள் அவளுக்கு லொள்ளு சந்தியா என்று பட்டப்பெயரே சூட்டியிருந்தார்கள்

அழகான சந்தியாவை வேறு முறையில் அணுக முயன்ற சில சக மாணவர்கள் கூட அவளிடம் எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் கிடைக்காததால் கண்ணியமாகவே மரியாதைக்குரிய இடைவெளியில் நின்று பழகினர்.

வாஸ்தவத்தில் சந்தியாவை எந்த ஆணும் மனதைக் கவரும் வண்ணம் ஈர்த்ததில்லை அந்த மலைப்பாதையில் சந்தித்த மகானுபாவனைத் தவிர.

பார்த்த அந்த முதல் சந்திப்பிலேயே அவள் மனதில் முத்திரை பதித்தவன் அவன் மட்டும் தான். இன்றளவும் அவனை அவள் நினைக்காத நாளில்லை. மீண்டும் அவனைச் சந்திக்கமாட்டோமா என்று கூட அவள் ஏங்கியிருக்கிறாள்

இவ்வளவு ஏன்? ஒவ்வொரு விடுமுறைக்கும் ஊருக்குச் செல்லும் பொழுது, முதன்முதலில் அவனைச் சந்தித்த இடத்திற்குப் போய் மீண்டும் அவன் தன் விழிகளில் தென்படமாட்டானா என்ற ஏக்கத்துடன் நெடுநேரம் காத்திருந்திருக்கிறாள். ஆனால் ஒவ்வொரு முறையும் அவள் ஏமாந்து தான் போயிருக்கிறாள்.

ஆனால் எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத நேரத்தில் மீண்டும் அவனைச் சந்திக்க நேர்ந்த .பொழுது, சந்தியா அதிர்ச்சியில் பேசக் கூட வாய் வராமல் நின்று விட்டாள்.
 

Advertisement

Back
Top