நினைக்காத நாள் இல்லை அத்தியாயம் 4

Advertisement

parvathi

Active member
Member
HERE WE GO WITH THE 4TH EPISODE HAPPY READING IN LEISURE



அத்தியாயம் 4


இந்த பதினேழு வயதிற்கு சந்தியாவிடம் எந்த ஆணும் இப்படி நடந்து கொண்டதில்லை.

அவளுடைய பத்தாவது வயதில் தவறிப் போன அப்பாவாகட்டும், இன்றைய தேதி வரை அவளை கண்ணின் கருமணியாய் காப்பாற்றிய தாத்தாவாகட்டும், அவளிடம் உரிமையுடைய அந்த இரண்டு ஆணகளுமே தங்கள் பாசத்தையும் பரிவையும் வார்த்தைகளிலும் செயல்களிலும் மட்டுமே

காட்டியிருக்கிறார்களே தவிர இப்படி முத்தமெல்லாம் தந்ததில்லை.

சந்தியாவிற்கு இன்றைக்கும் நன்றாய் நினைப்பிருக்கிறது. சின்னஞ்சிறுமியாய் இருந்த பொழுது அவள் தன் தந்தையின் கழுத்தைக் கட்டிக் கொண்டு செல்லங் கொஞ்சிய சமயங்களில் சத்யா மகளை கண்டும் காணாமலுமாய் கண்டித்திருக்கிறாள்.

"சந்தியாகுட்டி.......அப்பா கிட்ட என்ன செல்லம் கொஞ்சிகிட்டு இருக்கிறே?.........ஓடு..... வீட்டுப்பாடம் செய்ய வேணாமா?"

"ஏன சத்யா குட்டிம்மாவை விரட்டறே? நானும் பார்த்துட்டு தானிருக்கேன். என் பொண்ணு என்னைக் கொஞ்சினால் உனக்கு ஆகவே மாட்டேன்றது. ஏன் நீயும் வேணா வந்து என்னைக் கட்டிப்பிடிச்சு கொஞ்சேன். யார் இப்போ வேண்டான்னா? "

விஷமமாய் கண் சிமிட்டும் கணவனைப் பொய் கோபத்துடன் முறைப்பாள் சத்யா.

"ஆமா எனக்கு உங்க பொண்ணு மேல ரொம்ப பொறாமை. அதான் அவளை விரட்டறேன் போதுமா......நானெல்லாம் எங்கப்பாகிட்ட எதிரில் நின்று பேசவே பயப்படுவேன் தெரியுமா? எது ஒண்ணுன்னாலும் அம்மா கிட்ட தான் சொல்வேன். அப்பாவாகவே இருந்தாலும் ஒரு வயசுக்கப்புறம் பெண் குழந்தைகள் மேல விழுந்து பழகறது நல்லதில்லேன்னு அம்மா சொல்வாங்க. குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே அடக்கமாயிருக்கக் கத்துக் கொடுக்கறது நல்லது தானே. அதுவும் தவிர, அறியாப் பருவத்தில் அப்பாவிடம் நெருங்கிப் பழகறதே தப்புன்னா, பின்னாடி பெரியவங்களாகறப்போ அந்நிய ஆண்களிடம் இன்னும் தூரமா விலகி ஒதுங்கி நிற்க பெண் குழந்தைகள் கத்துப்பாங்க....."

"அப்படி தூரமா விலகி ஒதுங்கி நின்று தான் அம்மிணி என்னைக் காதலிச்சிங்களோ?"

சத்யாவின் கணவன் கிடைத்தது சந்தர்ப்பம என்று அவளைச் சீண்டுவான். சத்யாவின் கண்கள் கலங்கிவிடும்.

"அம்மாவோட அறிவுரையையெல்லாம் மீறி உங்களைக் காதலிச்சதும் கைபிடிச்சதும் தப்புதான்னு இன்னிக்கும் என் மனசுல ஒரு குற்ற உணர்ச்சி இருந்துட்டே தானிருக்கு. ஆனால் உங்களை முதன் முதலாய் பார்த்தப்போ நீங்க எனக்கு ஒரு அந்நியனா தெரியவேயில்லையே. ஏதோ ரொம்ப நாள் பழகிய சொந்தம் போல் மனசளவில் நெருங்கிட்டிங்களே. நான் என்ன பண்ணட்டும்?"

சத்யா பெரிதாய் உணர்ச்சி வசப்பட்டுப் பேசவும், அவளுடைய கணவன் கையெடுத்துக் கும்பிடுவான்.

"அம்மா தாயே நான் தெரியாத்தனமாய் சொல்லிட்டேன். இனிமேல் நம்ம குட்டிம்மா கிட்டருந்து மட்டுமில்லே நீ சொன்னால் உன்னிடமிருந்தும் ஓரடி தள்ளி நின்னே பழகறேன் சரியா?"

"ஐயோ....போதுமே.......தள்ளி நின்று பழகற ஆளைப் பார்க்கலே.... குழந்தையையும் பக்கத்தில் வெச்சுகிட்டு என்ன வழிசல் இது?"

அப்பாவின் கண்சிமிட்டலும், அம்மாவின் வெட்கமும் புரியாத வயசு அப்பொழுது சந்தியாவிற்கு.

ஆனால் பின்னாளில் புரிந்த பொழுது சொற்ப காலமே வாழ்ந்திருந்தாலும், பெற்றவர்கள் மனமொருமித்த தம்பதிகளாய் சந்தோஷமாகவே தான் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற உண்மை தெரிந்தது

'ஒழுக்கத்தை உயிராய் போதித்து வளர்த்த சத்யாவின் பெண் தான் சந்தியா. அப்படிப்பட்ட சந்தியாவிடம ஒரு அந்நிய ஆண் பார்த்த பத்து நிமிஷத்திற்குள்ளாகவே அதிக உரிமை எடுத்துக் கொண்டு அத்து மீறினானென்றால், அதை அவளும் அனுமதித்திருக்கிறாளென்றால், அம்மா

சொன்னது போல் அவன் அவளுக்கு அந்நியமாகத் தோன்றவில்லையோ?

ஒருவேளை அவனை அவள் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளதோ?'

மனதில் எழுந்த எண்ணங்களின் போக்கில் சந்தியா அதிர்ந்து போனாள்.

'இந்த முத்தம் என்னை உனக்கு அடிக்கடி ஞாபகப்படுத்தும் என்றால் அது என் பாக்கியம்'

அவன் குறும்பாய் சொன்ன வார்த்தைகள் நிஜமே தான் என்பது போல் அவனை சந்தித்த நிமிடத்திலிருந்து சந்தியா அவனை நினைக்காத நாளில்லையே........

'கடவுளே இது எங்கே போய் முடியும்?'

'அவனுடைய நினைப்பு இறந்து போன தாத்தாவின் ஆன்மாவிற்கும் உயிருடன் இருக்கும் தாயின் ஆசைக்கும் சேர்த்தே அல்லவா துரோகம் செய்ய வைக்கும்?'

சந்தியா பலதும் எண்ணி மனதைப் புண்ணாக்கிக் கொண்டிருந்த சமயத்தில் தான், குடும்ப வக்கீல் மீண்டும் அரவிந்தனிடமிருந்து தகவல் கொண்டு வந்தார்.

சந்தியா திருமண வயதை எட்டாத சிறுமியாம். அதனால் அவளைக கல்லூரியில் படிக்க வைத்து அவள் பட்டதாரியான பின் உயில்படி திருமணம் செய்வது பற்றி யோசித்து முடிவெடுக்கலாமாம். அதுவரை எஸ்டேட் விவகாரங்களை சத்யாவே கவனித்துக் கொள்ள வேண்டுமாம் . அரவிந்தனால் பணியை திடீரென்று விட்டு விட்டு வரமுடியாதாம்.

'அப்பா........இப்பொதைக்கு கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டுமோ என்ற கவலை இல்லை. குறைந்தது மூன்று வருஷங்களாவது சுதந்திரமாய் சந்தோஷமாய் இருக்கலாம்....'

சந்தியா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். ஆனாலும் எப்பொழுதும் நேரிடையாய் பேசாமல் ஈ மெயிலிலும் வக்கீல் மூலமாகவுமே பேசும் மாமனை எண்ணிக் கோபம் வந்தது



'என்ன சட்டாம்பிள்ளைத்தனம் இது? நூறாயிரம் மைல் தள்ளி இருந்து கொண்டு தொலைபேசியிலேயே உத்தரவு இடுவதென்றால், இந்த மாமாவிற்கு லொள்ளு ரொம்ப ஜாஸ்தி தான் '

மகள் மனதில் நினைத்ததை அவள் தாய் சத்யா வெளிப்படையாகவே பொரிந்து தள்ளி விட்டாள்.

"அதென்ன தம்பி ஓவ்வோரு முறையும் உங்க மூலமாகவோ ஈ மெயில்லயோ தகவல் சொல்றது? ஏன் நேரில் வந்தால் துரை என்ன குறைஞ்சு போயிடுவாராமா? எல்லாத்துக்கும் மேல அக்கான்னு பெரியவ நானொருத்தி வீட்ல இருக்கறப்போ என்னை ஒரு வார்த்தை கேட்காமல் இவனா எல்லா முடிவையும் எடுத்தால் என்ன அர்த்தம்? தட்டிக் கேட்க ஆள் இல்லேன்னு நெனச்சிட்டானா அவன்? சந்தியாவுக்கு கல்யாண வயசு வரலே. அவளைப் படிக்க வைக்கனும்ன்றதெல்லாம் சரிதான். ஆனால் அதென்ன திருமணம் பற்றி யோசிச்சு முடிவெடுக்கறது? என் மகளைக் கட்டிக்க இவன் யோசனை வேற பண்ணுவானாமா?"

பேசுவது அம்மா தானா என்று சந்தியா வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள். கூடவே மனதில் சின்னதாய் ஒரு பயம் ஓடியது

'அம்மா அவளைத் தன் தம்பிக்கு மணமுடிக்காமல் விடமாட்டாள் போலிருக்கிறதே.'

சந்தியா பயந்தது சரிதான் என்பது போல் சத்யா வலுகட்டாயமாய் வக்கீலிடம் அரவிந்தனின் தொலைபேசி எண்ணை வாங்கி தானே நேரிடையாக தன் தம்பியிடம் பேசினாள்.

எடுத்த எடுப்பிலேயே எண்ணெயில் இட்ட அப்பளமாகப் படபடவென்று பொரிந்த அக்காவிடம் மறுமுனையில் அந்த அருமைத் தம்பி என்ன தான் சொன்னானோ?

அரை மணி நேரம் தம்பியுடன் சிரிக்கச் சிரிக்கப் பேசிவிட்டு நிமிர்ந்த அம்மாவின் முகத்தில் நிம்மதியும் சந்தோஷமும் தெரிந்ததை பார்த்தாள் மகள்.

'அம்மா அப்படி ஆனந்தப்படும்படியாக அவளுடைய அருமைத் தம்பி அப்படி என்ன தான் சொல்லியிருப்பான்?'

தாயை சற்றே யோசனையுடனும் அதிர்ச்சியுடனும் வெறித்தாள் மகள்.
 

Advertisement

Back
Top