நினைக்காத நாள் இல்லை அத்தியாயம் 2

Advertisement

parvathi

Active member
Member
HERE WE GO WITH THE 2ND EPISODE HAPPY READING IN LEISURE FRIENDS



அத்தியாயம் 2

'தாத்தா இறந்து விட்டாரா?'

சந்தியாவால் இன்னும் நம்ப முடியவில்லை. ஆனால் வீட்டில் அந்த பெரிய கூடத்தில் கண்ணாடிப் பெட்டியில் மகனின் வருகைக்காக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த பெரியவரின் உடல் நடந்தது உண்மை உண்மையைத் தவிர வேறில்லை என்றது

"நேற்றுக் கூட நல்லாத் தான் பேசிட்டிருந்தார்..... உன் நெனப்பு தான் அவருக்கு எப்பவுமே. இந்த முறை நீ விடுமுறைக்கு வர்றப்போ உனக்கு நம்ம எஸ்டேட் நிர்வாகம் கணக்கு வழக்குகளில் பயிற்சி கொடுக்கப் போறதா சொல்லிட்டிருந்தார். நான் கூட அவ சின்னப்பொண்ணுப்பா இப்பவே அதற்கெல்லாம் என்ன அவசரம்னு சொல்லிட்டிருந்தேன். இப்படி கண் சிமிட்டற நொடியிலேயே ஓரேயடியா கண்ணை மூடிடுவார்னு நான் நெனக்கவேயில்லையே..."

சத்யா சதா அழுது கரைந்தாளே தவிர சின்னவள் சந்தியாவிற்கு இருந்த நிதானமும் திடசித்தமும் கூட அவளைப் பெற்றவளுக்கு இல்லை.

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் சந்தியா முதலில் தடுமாறிப் போனாலும், அனந்தராமன் முயன்று அவளிடம் வளர்த்திருந்த தன்னம்பிக்கையும் தைரியமும் அவளை சுதாரிக்க வைத்து விட்டன.

மளமளவென்று தாத்தாவின் உதவியாளர் சுப்ரமணியின் உதவியுடன் காரியங்களை கவனிக்க ஆரம்பித்தவள் அரவிந்தனிடமிருந்து வந்த ஈ மெயில் தகவலில் தளர்ந்து போனாள்.

'தாய்மாமன் என்று ஒருவன் இருக்கிறான். தூரதேசத்திலிருந்தாலும் இப்படியரு இக்கட்டான சந்தர்ப்பத்தில் ஓடோடி வந்து ஆறுதல் சொல்லி காரியம் யாவிலும் கை கொடுப்பான் என்று அவள் மலையாய் நம்பிய மாமனிதன் தான் விபத்தொன்றில் அடிபட்டு சிகிச்சையிலிருப்பதாகவும் பின்னொரு சமயம் வருவதாகவும் தகவல் கொடுத்தால், சந்தியா தான்

பாவம் என்ன செய்வாள்?'

" ஐயோ! தெயவம் நம்மை ஏண்டி சந்தியா இப்படி சோதிக்குது? வாழ வேண்டிய வயசுல புருஷனைப் பறி கொடுத்துட்டு இங்கே வந்தப்போ ஆதரிக்க உன் தாத்தாவாவது இருந்தார். இப்போ அவரும் போய் சேர்ந்துட்டார் தம்பியாவது வந்து எஸ்டேட்டையும் உன்னையும் பொறுப்பாப் பார்த்துப்பான்னு நெனச்சா அவனும் விபத்தில் அடிபட்டுட்டானே....நாம என்னடி

சந்தியா பண்ணுவோம்?"

அம்மாவின் ஒப்பாரி சந்தியாவிற்கு அலுப்பைத் தான் தந்தது.

' என்ன அம்மா இவள்? கூடப் பிறந்த தம்பி இது நாள் வரையில் சம்பிரதாயத்திற்காக கூட நலம் விசாரிக்காதவன், அப்பாவும், அக்கா, அக்கா மகளும் இருக்கிறார்களா செத்து விட்டார்களா என்று கூட கவலைப்படாதவன், முக்கியமாய் வெளிநாட்டு மோகம் கண்ணையும் கருத்தையும் மறைக்கும் அளவிற்கு வெறியுடனிருப்பவன், இப்பொழுது உடல் நலத்துடனேயே இருந்தாலும் தான் என்ன தாய்நாட்டிற்கு ஓடோடி வந்து விடப் போகிறானாமா? நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்று விபத்தின் மீது பழியைப் போட்டு விட்டு உட்கார்ந்திருப்பவன் இனி வந்தால் என்ன வராவிட்டால் தான் என்ன? '

சந்தியா உலகத்திலேயே ஒருவனை வெறுத்தாள் என்றால் அது சத்தியமாய் தன் தாய்மாமன் அரவிந்தனைத் தான்.

அதுவும் காரியங்கள் எல்லாம் முடிந்த பின், குடும்ப வக்கீல் நாராயணன் வந்து தாத்தாவின் உயிலையும் அதன் சாராம்சத்தையும் விவரித்தபொழுது, சந்தியாவிற்கு இந்த உலகமே வெறுத்துப் போனது.

யாரை அவள் விஷமாய் வெறுத்தாளோ, அவனை அவள் வாழ்க்கையோடு பின்னிப் பிணைத்திருந்தது அனந்தராமனின் உயில்.

அரவிந்தனும் சந்தியாவும் தம்பதிகளானால் மட்டுமே அனந்தராமனின் சொத்துக்கு உரிமைபட்டவர்கள் ஆவார்கள். இல்லையென்றால் அனைத்தும் தர்ம ஸதாபனத்திற்கு சென்று விடும் என்று அனந்தராமன் தன் வாரிசுகளுக்கு தனக்குத் தெரிந்த வகையில் செக் வைத்திருந்தார்.

தாத்தாவின் ஏற்பாடு பேத்திக்கு முற்றிலும் பிடிக்கவில்லை என்பதோடு முன்னே பின்னே பார்த்தேயிராத அரவிந்தனின் மீது இமாலய அளவிற்கு வெறுப்பு ஏற்பட்டது.

ஆனால் சத்யா, சந்தியாவைப் பெற்றவள் இந்த ஏற்பாட்டில் மகிழ்ச்சி அடைந்தாள்.

அப்பா எதைச் செய்தாலும் தீர யோசித்துத் தான் செய்வார். அவர் செய்வதெல்லாம் நன்மைக்கே என்று சாதித்தாள்.

"என்ன பெரிய நன்மை?" என்று வெடித்தாள் மகள்.

"உன் தம்பியை நீ அவனோட பத்தாவது வயசுல பார்த்தது தான். இப்போ அவருக்கு வயசு இருபத்தெட்டாவது இருக்கும். ஆனால் உன் மகளுக்கு என்ன வயசுன்னு யோசிச்சுப் பார்த்தியா? எனக்கு இப்பத் தான் பதினேழு முடியப் போகுது. எனக்கும் உன் தம்பிக்கும பத்து வருஷ இடைவெளி. வயசு வித்தியாசத்தை விடு. அவர் நல்லவரா கெட்டவரா கல்யாணமானவரா

கல்யாணமாகாதவரா ஒரு மண்ணும் தெரியாது. வெளிநாட்ல இருக்கற உன் செல்ல தம்பி இங்கே அக்கா மகள் ஒருத்தியை தன் தலையில் கட்ட இருப்பது தெரிஞ்சு இத்தனை வருஷத்துக்கும் கல்யாணமாகாமலேயே இருப்பாரா? கொஞ்சமாவது யோசிக்க வேணாம்? சாகற நேரத்துல தாத்தாவுக்கு புத்தி இப்படி சீர் கெட்டுப் போயிருக்க வேண்டாம்........."

"அப்படிச் சொல்லாதடி செல்லம்.......அரவிந்த் அப்படியெல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் கல்யாணம் பண்ணிக்கற பையனில்லை. ஒரேயடியா அப்பா அக்கான்னு அவன் உருகியது இல்லை தான். ஆனால் அதற்காக எங்க மேல பாசம் இல்லேன்னும் சொல்லமுடியாது. வருஷந்தவறாமல் நல்லநாள் பெரிய நாளுக்கெல்லாம் நமக்கு வாழ்த்து அனுப்பியவன் தானே?"

"க்கும்......உன் தம்பியை நீ தான் மெச்சிக்கனும். நல்லநாள் பெரிய நாளுக்கு வாழ்த்து அனுப்பியதற்கே நீ உன் தம்பியை தலை மேல தூக்கி வெச்சுக் கொண்டாடறே. இன்னும் நேரிலேயே வந்துட்டார்ன்னா உன்னைப் பிடிச்சுக்க ரெண்டு கை போதாதும்மா. சந்தோஷத்துல நல்லாவே குண்டடிச்சுடுவே."

கிண்டலடித்துவிட்டு கோபம் குறையாமலேயே விலகிய மகளைப் பெற்றவள் புரியாமல் பார்த்தாள்.

சந்தியாவிற்கு தாத்தாவின் உயிலை நினைக்க நினைக்க ஆறவில்லை.

'என்ன பெரிய சொத்து? இந்த சொத்து இல்லாவிட்டால் வாழ முடியாதா என்ன? அவள் படிப்பை இன்னும் பூரணமாக முடிக்கவில்லை தான். ஆனால் இந்த ப்ளஸ்டூ படிப்பிற்கே ஏதாவது வேலை கிடைக்காதா என்ன?'

'கிடைக்கும் தான். கிடைக்காது என்று யார் சொன்னது? ஆனால் இந்த எஸ்டேட்டை விட்டு வெளியேற அம்மா ஒத்துக் கொள்வாளா? பழகிய இடத்தில் பக்கத்தில் கோவிலுக்குப் போகவே துணைக்கு ஆள் தேடுபவள் வேறு புதிய இடத்திற்கு மகளுக்குத் துணையாய் வரக் கூட தயங்குவாள் தான். அப்பா அதன்பின் தாத்தா என்று எப்பொழுதும் அடுத்தவரைச் சார்ந்திருந்தே

பழக்கப்பட்டுவிட்ட அம்மா இப்பொழுதும் தம்பியைச் சார்ந்திருக்க விரும்புவாளே தவிர, மகளுக்குத் துணை வருவது என்பது சந்தேகம் தான்"

இவளைப் போலவே அரவிந்தனுக்கும் இந்த ஏற்பாட்டில் விருப்பமில்லாவிட்டால் பிரச்னையே இல்லையே என்ற நினைப்பில் சற்றே முகம் மலர்ந்த சந்தியா அடுத்த நிமிஷமே மற்றொரு நினைப்பில் வாடிப் போனாள்.

அவளுக்கு அரவிந்தன் மீது தான் ஈடுபாடில்லையே தவிர இந்த எஸ்டேட் வாழ்க்கை அவளுக்குப் பிடித்தமான ஒன்று தான். நகரத்தின் நெரிசலை நேரில் பார்த்தவளுக்கு இந்த மலைப் பிரதேசத்தின் குளுமையும் சுத்தமான மூலிகைக் காற்றின் சுகந்தமும் அம்மிணி என்று அருமை பெருமையாய் கொண்டாடும் எஸ்டேட் ஊழியர்களும் என்றும் இங்கேயே இருந்து விட வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு அவளைக் கட்டிப் போட்ட விஷயங்கள்

தான்.

அவளோ இல்லை அரவிந்தனோ இருவரில் யார் முரண்டு பிடித்தாலும், எஸ்டேட் வாசம் என்பது கனவில் மட்டும் தான் என்ற நினைப்பில் மனம் சோர்ந்து போனது.



யோசித்துக் கொண்டே நடந்து வந்ததில் மலைப்பாதையில் வெகு தொலைவிற்கு எஸ்டேட்டை விட்டு விலகி வந்து விட்டது தெரிந்தது. மலைப்பிரதேசத்தில் சீக்கிரமே இருட்டத் தொடங்கிவிடும் என்பதால் அம்மா வேறு அவளைக் காணாமல் கவலைப்படுவாளே என்ற நினைப்பில் மீண்டும் வீடு செல்லத் திரும்பிய அந்த தருணத்தில் தான் அவனைப் பார்த்தாள்

சந்தியா.

தனக்கு முன்னால் சேறும் சகதியுமாயிருந்த ஒரு குட்டையை சர்வ அலட்சியமாய் தாண்ட முனைந்து கொண்டிருந்தான். எஸ்டேட்டிற்குப் பழக்கப்படாத அந்நியன் நகரவாசி என்பது அவன் உடையைப் பார்த்ததுமே தெரிந்தது

"ஏய் நில்லு என்ன காரியம் பண்றே நீ?"

பதட்டத்தில் சந்தியா மரியாதைப் பன்மையைக் கைவிட்டது தப்புதான் ஆனால் அவன் சேறு என்று அலட்சியமாய் நினைத்து புதைகுழியில் காலை வைத்துவிடுவானோ என்ற பயத்தில் அவள் அவசரமாய் கத்த, அவனோ நிதானமாய் அதை. ஒரே எட்டில் கடந்து அவளருகில் வந்தான் .

ஆனாயாசமாய் அந்தக் குட்டையைத் தாண்டிய அவன் கால்களின் நீளத்தைப் பார்த்து பிரமித்து நின்றாள் அவள்.

"இந்த மலைப் பிரதேசத்து ஜனங்க வெள்ளந்தியானவங்க ஒன்றும் அறியாதவங்கன்னு சொல்லக் கேள்விபட்டிருக்கிறேன்......ஆனால் மரியாதை கூட தெரியாதவங்களா இருப்பாங்கன்னு நெனக்கவேயில்லை....."

அந்த நேரிடையான குற்றச்சாட்டில் சந்தியா திகைத்துப் போய் நின்றாள்.




 
  • Like
Reactions: bbk

Advertisement

Back
Top