Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நள(ன்)தமயந்தி - 8

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்: 8

சில மாதங்களுக்கு முன்:


“இன்னிக்கு வியாபார சங்க கூட்டமிருக்கு தமும்மா, நானும் அப்பாவும் போயிட்டு வரோம், நீயே கடையப் பார்த்துக்கோ.” என்றபடியே வந்த தர்மாவிற்கு சூடான காபியை தந்து விட்டு அகன்றார் அன்னம்.

அக்கூட்டத்திற்கு தன்னை அழைத்து செல்ல ஏற்கனவே கேட்டும் உடனேயே அதை தர்மா மறுத்திருந்திருந்தது நினைவிலிருந்தது.
அதனால் “சரி மாமா.” என்று பதிலளித்தாள் தமயந்தி.

கூட்டத்திற்கு வந்திருந்த சங்க தலைவர் முருகானந்தத்தை முன்னரே அறிந்திருந்தார் சுந்தரம். அவர்களுக்குள் இருந்த தோழமை, எங்கேயாவது பார்த்தால் புன்னகைத்து கொள்ளும் அளவிற்கு மட்டுமே இருந்தது. தர்மாவிற்கு அது கூட இல்லை. முருகானந்தம் சங்க தலைவர் ஆனப் பிறகே அவருக்கு அறிமுகமானார்.

சங்க கூட்டம் முடிந்தும் கலையாமல் இருந்த உறுப்பினர்கள் எல்லோரும் கதை அடிக்க ஆரம்பித்திருந்தனர்.

“சுந்தரம், உன் பொண்ணுக்கு வரன் பார்க்கிறாயா, என்ன?” என்றார் அங்கிருந்த மூத்த உறுப்பினர் ஒருவர்.

“இப்போ தான் பார்க்கலாம்ன்னு வீட்டுல முடிவு பண்ணியிருக்கோம் கார்மேகா.”

“அப்போ நாலு தெரிஞ்ச இடத்துல பொண்ணோட ஜாதகத்தை கொடுத்து வைப்பா சுந்தரம். உள்ளூர்லேயே பார்க்கிறாயா?”

“உள்ளூரா, வெளியூரா? ன்னு இன்னும் முடிவு செய்யல. அது வர ஜாதகத்தை வச்சு அப்போதைக்கு முடிவு செஞ்சுக்கலாம்ன்னு இருக்கேன்.”

“நல்லது சுந்தரா, நல்ல இடம் அமையும்.. நான் கிளம்பறேன்.” – கார்மேகம்.

அவர் சென்றதும் சுந்தரத்தின் அருகே முருகானந்தம் வந்து அமர்ந்தார். அதுவரை கார்மேகமும் சுந்தரமும் பேசியதை கவனித்ததால் அங்கே வந்து அமர்ந்திருந்தார் முருகானந்தம்.

“நமக்குள்ள ரொம்ப பேசி பழக்கமில்லை சுந்தரம்.. இப்போ நீங்க பேசிட்டு இருந்ததை கவனிச்சுட்டு தான் இங்கயே வந்தேன்.. எனக்கு ஒரு பையன் இருக்கான். ஒரே பையன் தான் எனக்கு. பெங்களூர்ல இருக்கான். என்ஜினீயரிங் படிச்சுட்டு கம்ப்யூட்டர் கம்பெனில வேலை பார்க்கிறான்.. கை நிறைய சம்பளம். அவனுக்கு நம்ம கடை, வியாபாரம் எதுவும் ஒத்துவரல. அது எல்லாம் பிடிக்கவும் இல்லை அவனுக்கு. அதான் அவனுக்குன்னு வேலை தேடிக்கிட்டான். உங்களுக்கு விருப்பம்ன்னா நாம ஜாதகத்தை பார்க்கலாம். எல்லாம் ஒத்து வந்ததுன்னா மேற்கொண்டு பேசிக்கலாம். என்ன சொல்றீங்க சுந்தரம்?” என்றார் முருகானந்தம்.

சுந்தரம், தர்மாவிடம் கண்களாலேயே பேசிவிட்டு, “சரீங்க ஜாதகத்தை நேரா வீட்டுக்கே கொண்டு வந்து தரோம்ங்க. நல்ல நாள் பார்த்து சீக்கிரமே வரோம்.” என்றார்.

கூட்டம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் மீனாட்சியிடம் முருகானந்தம் கூறியதை பகிர்ந்துக்கொண்டார் சுந்தரம்.

அடுத்து வந்த ஒரு சுப நாளில் முருகானந்தத்தின் வீட்டுக்கே சென்று ஜாதகத்தை கொடுத்தார்கள் சுந்தரம் தம்பதியனர்.

ஜாதகம் எல்லாம் பொருந்தி வரவே, முருகானந்தத்தின் குடும்பத்தினர் தமயந்தியைப் பெண்ப் பார்க்க வந்திருந்தனர். மாப்பிள்ளைப் பையனை தவிர.

மாப்பிள்ளை வராதது குறித்து மீனாட்சி சிறிதே சலனப்பட்டாலும், முகத்தில் எதுவும் காண்பிக்காமல் இன் முகத்துடனேயே அனைவரையும் வரவேற்று உபசரித்தார்.

“நம்ம பையனுக்கு ஆபீஸ்ல கொஞ்சம் வேலைங்க.. இன்னும் ரெண்டு வாரம் கழிச்சு பொண்ண பார்க்க வரேன்னு சொல்லி இருக்கான். இது என் அக்காங்க.” என்று பக்கத்தில் இருந்த பெண்மணியை அறிமுகப் படுத்தினார் முருகானந்தம்.

அப்பெண்மணி அக்காவை போல் இல்லாமல் பாட்டியைப் போன்றிருந்த தோற்றத்தை சிறிது கவனித்து விட்டு தலையை குனிந்துக்கொண்டாள் தமயந்தி.

முருகானந்தமே சற்று வயசானவர் தான். அவருக்கு பிள்ளை பிறந்ததே அவரின் பின் நாற்பதுகளில் தான். இப்பொழுது அவரின் வயது எழுபது. அவரை விட ஐந்து வயது மூத்தவர் அவரின் அக்கா.

முருகானந்ததிற்கு மனைவி இல்லை. பிள்ளை பிறந்த மறு கணமே அவர் இவ்வுலகத்தைவிட்டு சென்றிருந்தார்.

“அக்கா பொண்ண பார்க்கட்டும்ன்னு தான் இன்னிக்கு வந்திருக்கோம். அஷ்வின் வரும்போது இவங்க ரெண்டு பேரும் (அக்காவின் பெண்களை கை காட்டினார்) திருப்பி வருவாங்க.” என்று பேசிய முருகானந்தத்திற்கு தமயந்தியை மிகவும் பிடித்தது.

அவருடையை அக்காவிற்கும் எல்லாம் பிடிக்கவே இருவாரம் கழித்து வருவதாக சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.

இருவாரம் கழித்து வந்த அஷ்வின், தனக்கு சம்மதம் என்பதாக தலை ஆட்டினான். அவனுக்கு தமயந்தியைப் பிடித்து தலை ஆட்டினானோ, இல்லை எதுக்கு தலை ஆட்டினானோ அந்த கடவுளுக்கே வெளிச்சம்..

தமயந்த்திக்கும், அஷ்வினை பிடிப்பதற்கும், பிடிக்காமல் போவதற்கும் எந்த காரணமும் இல்லாததால் அவளும் மௌனமாக சம்மதத்தை தெரிவித்தாள்.

இரு குடும்பமும் இணைந்து மூன்று மாதம் கழித்து வந்த மூகூர்த்த நாளில் திருமண தேதியை குறித்தனர்.

அஷ்வினும், தமயந்தியும் தனியேவோ, இல்லை போனிலோ பேச முற்படவே இல்லை. தனக்கு திருமணம் என்றதும் உள்ளத்தில் குறுகுறுப்போ, ஆர்வமோ எதுவும் ஏற்படாதது ஏன் என்று சில நாட்கள் சிந்தித்தாலும், தன்னை திருமணத்திற்கு தயார் செய்தாள் தமயந்தி.

மீனாட்சியிடம் முருகானந்தத்தின் அக்கா, தமயந்தி வந்ததுமே குடும்ப பொறுப்பை ஏற்கவேண்டும் என்றும், தனக்கும், முருகானந்தத்திருக்கும் வயதாகி விட்ட படியால், அவளுக்கு பொறுப்பு கூடும் என்பதையும் சில பல பேச்சுகளால் தெளிவு படுத்தியுருந்தார்.

அதன் விளைவாக, இந்த மூன்று மாதங்களையும் பெண்ணை நன்றாக கவனித்துக்கொள்ள முடிவு செய்தார் மீனாட்சி.

தமயந்தியை கடைக்கு செல்ல அனுமதிக்காமல், தன்னுடனேயே இருத்திக்கொண்டார் மீனாட்சி. அவளுக்கு பிடித்த உணவு வகைகளை தாரளமாக செய்து நிறைய சாப்பிட வைத்தார்.

இடத்திற்கு தகுந்தமாதிரி நடந்துக்கொள்ளும் திறன் தன் மகளுக்கு இயல்பிலேயே இருப்பதால், அவளை வீட்டில் எந்த ஒரு துரும்பையும் அசைக்க விடாமல் பாதுகாத்தார்.

திருமணம் முடிந்தால் அவளுக்கு கூடும் கூடுதல் பொறுப்புகளினால் அவளையே அவள் கவனித்துக்கொள்வது கடினம் என்று அவராகே முடிவு செய்து விட்டபடியால் தான் இவ்வாறு நடந்துக்கொண்டார்.

(அதுவே தன் பெண்ணிற்கு வினையாகப் போகும் என்று சற்றும் சிந்தித்திருக்கவில்லை மீனாட்சி)

தமயந்தியும் அன்னையின் சிறகடியில் அமர்ந்து நன்றாக இளைப்பாறினாள்.

கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்று மாதங்கள் பறந்தோடியது போலிருந்தது மீனாட்சிக்கு.

திருமண நாள் அன்று அழகு கலை நிபுணர்களால் ஒளிர்ந்த தன் மகளை பெருமிதத்துடன் பார்த்தப் படியே நின்றிருந்தனர் சுந்தரம் தம்பதியினர்.
தர்மாவுக்கோ நிற்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தார். தன் பிரியமான மருமகளுக்கு தானே செய்ய வேண்டுமென்ற ஆசையில் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்தார். மங்கள நாண் பூட்டும்போது மட்டும் மேடையின் அருகில் சென்று கண்ணில் நீர் பொங்க ஆனந்தத்துடன் அவளை மனதார வாழ்த்தினார்.

எல்லா சடங்குகளும் இனிதே நிறைவேறியதால் எல்லோரும் சற்றே ஓய்வாக அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்தனர்.

அன்று இரவு நடக்கும் சடங்கை பெண்ணின் வீட்டிலேயே செய்வதாக இருந்த படியால், தர்மா மண்டப்பத்திலிருந்து சீக்கிரமாகவே வீட்டிற்கு திரும்பினார். சிறிது நேரம் கழித்து மீனாட்சியும் அவருக்கு உதவியாக வீட்டிற்கு வந்தார்.

அன்னம் தமயந்திக்கு துணை இருந்தார். சுந்தரத்திற்கு மண்டபத்தில் நிறைய வேலை இருந்ததால் அவரால் வீட்டிற்கு செல்ல முடியவில்லை.
சாந்தி மூகூர்த்தம் வீட்டில் நடக்கிற படியால் வந்திருந்த உறவினர்களை மண்டப்பத்திலேயே தங்க வைப்பது என்று முடிவாகியிருந்தது.

அந்த இரவு பொழுது வந்ததும் பெண்ணையும். மாப்பிள்ளையையும் அழைத்துக்கொண்டு, கூடவே முருகானந்தம் மற்றும் அவரின் அக்காவையும் அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார் சுந்தரம்.

ஆரத்தி எடுக்கும் போது எதேச்சையாக அஷ்வினின் முகத்தைப் பார்த்த மீனாட்சிக்கு அடி வயிற்றில் பயம் ஏற்பட்டது.

கல்யாண களையே இல்லாமல், முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிக்க நின்றிருந்த மாப்பிள்ளையை திரும்பவும் பார்த்த மீனாட்சிக்கு, ‘எல்லாம் நல்லபடியே முடிய அருள் செய் ஆண்டவா!’ என்று வேண்டுவதை தவிர, அவருக்கு வேறு வழி தெரியவில்லை. அவரின் பயத்தையும் யாரிடமும் வெளிப்படுத்தவும் முனையவில்லை.

ஆரத்தி எடுத்து உள்ளே நுழைந்த தம்பதிகளுக்கு, பாலும், பழமும் கொடுக்கப்பட்டது.

சிறிய வெள்ளி கிண்ணங்களில் இருவருக்கும் தனித்தனியே மீனாட்சி கொடுத்ததைப் பார்த்த மாப்பிள்ளையின் அத்தை பேச ஆரம்பித்தார்.

“என்ன மீனாட்சி நீ, மொத்தமா பெரிய லோட்டால கொண்டுவந்து மாப்பிள்ளை கிட்ட கொடுக்க வேண்டியது தானே, அஸ்வின் குடிச்சுட்டு மீதிய அவளுக்கு கொடுப்பானில்லை மீனாட்சி..! புருஷன் பொஞ்சாதிகுள்ள என்ன நாகரீகம் வேண்டிக்கிடக்கு?” என்றார்.

மீனாட்சி உடனே திரும்பி மாப்பிள்ளையின் முகத்தைப் பார்த்தார். அங்கிருந்த அபரிமிதமான கோபம் அவரின் பயத்தை அதிகரித்தது.

சில பல அறிவுரைகளுக்குப் பின் தமயந்தி அவளின் அறைக்குள் நுழைந்தாள். ஏற்கனவே அறைக்குள் வந்திருந்த அஸ்வின் குறுக்கும் நெடுக்குமாக நடைப் பழகிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே கதவை தாழிடத்தொடங்கினாள் தமயந்தி.

அதைப்பார்த்த அஸ்வினுக்கு எங்கிருந்து தான் கோபம் வந்ததோ, தமயந்தியை இடித்து தள்ளிக்கொண்டு சென்று கதவை உடைத்து திறந்து வெளியே சென்றான்.

கீழே விழுந்திருந்த தமயந்திக்கு என்ன நடந்ததென்று புரிய சில பல நொடிகள் ஆயின.. ஆனால் அதற்குள் வெளியேறியிருந்த அஸ்வின் கத்த தொடங்கியிருந்தான்.

“அ.ப்பா.. அப்..பா!” என்று அடிவயிற்றிலிருந்து கத்திய அஸ்வினைப் பார்த்து, அருகேயிருந்த அவனின் அத்தை “தம்பி அஸ்வினு என்ன கண்ணு, இப்படி கத்துற?” என்றார்.

“அத்தை நீங்க சும்மாயிருங்க.. எங்க அவரு? என் வாழ்க்கையை கெடுத்துட்டு தூங்க போயிட்டாரா?”

“தம்பி என்ன பேசிட்டு இருக்க? புரிஞ்சு தான் பேசறியா?” – அத்தை.

அதற்குள் தூக்கம் களைந்து வந்த முருகானந்தம், “என்னக்கா இங்க என்ன பிரச்சினை?” என்றவர் அஸ்வினிடம் திரும்பி “நல்ல நேரம் முடியறதுக்குள்ள நீ ரூமுக்கு போ அஸ்வின்.. எதா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்.. அக்கா நீ வா வந்து படு..” என்றவாறே அறைக்கு செல்ல முயற்சித்தார். அதற்குள் அஸ்வினின் “நில்லுங்க அப்பா.” என்ற கத்தலில் நின்றார்.

“என்ன அஸ்வின், எங்க வந்து எப்படி நடந்துக்கற? நாகரீகமா நடந்துக்கப் பாரு..”

“ஹம்..! நாகரீகமா? அதெல்லாம் என்னன்னாவது உங்களுக்கு தெரியுமா? இனிமே நான் அதெல்லாம் மறந்துட வேண்டியது தான்..”

“அ..ஸ்வி.ன்.” என்று பல்லைக்கடித்தார் முருகானந்தம்.

“சும்மா கத்தாதீங்க, என் அம்மா இருந்திருந்தா இப்படி நடக்க விட்டு இருப்பாங்களா? நேத்துலேர்ந்து என் பிரண்ட்ஸ்ல்லாம் என்னை கிண்டல் செஞ்சுக்கிட்டு இருக்கிறது உங்களுக்கு தெரியுமா? இப்போ நாகரீகத்தைப் பத்தி பேச வந்திட்டாரு..”

“அஸ்வின் என்ன விஷயம்? கொஞ்சம் அமைதியா இரு.. இப்போவே பேசியாகணும்ன்னு ஒண்ணுமில்லையே, எல்லாம் காலைலே பேசிக்கலாம்.. நீ உள்ளார போ..”

அங்கிருந்த மீனாட்சிக்கும், சுந்தரத்திற்கும் இன்றே விஷயத்தை அறிந்து கொண்டால் நல்லது என்று பட்டது.

இவர்களின் முகத்தை வைத்தே புரிந்துக்கொண்ட தர்மா, “மாப்பிள்ளை என்ன விஷயம்ன்னு சொல்லிட்டே போகட்டுமே.. முதராத்திரிக்கு சந்தோஷமா போனா தானே வாழ்க்கை முழுசும் நல்லா இருக்கும் பிள்ளைங்களுக்கு.!” என்று முருகானந்தத்தைப் பார்த்து சொன்னவர்,
“சொல்லுங்க மாப்பிள்ளை உங்களுக்கு என்ன பிரச்சினை? ஏதாவது தப்பிருந்தா நாங்க மன்னிப்பு கேட்டுக்கிறோம்.. இது உங்க வீடு.. மனசுல என்ன குறை இருக்குன்னு சொல்லுங்க.. அதை நிவர்த்தி செய்ய முயற்சி செய்யறோம்.” என்றார்.

“யோவ்! நிறுத்துய்யா! பெரிய இவனாட்டம் பேச வந்துட்ட! ந்தோ பொண்ண பெத்தவனே பேசாம நிக்கல, நீ என்னமோ கிடந்து துள்ற..!!” என்ற வாரத்தைகளில் தர்மா, சுந்தரம் மற்றும் மீனாட்சியும் உறைந்து நின்றனர்.

அவர்கள் எல்லோருக்கும் பாலை தட்டில் எடுத்து வந்திருந்த அன்னம், அவ்வார்த்தைகளின் வீரியத்தில் அப்படியே கீழே போட்டார்.

அதற்குள் அவ்வார்த்தைகளை கேட்டிருந்த முருகானந்தம், அஸ்வினை ஓங்கி அறைந்திருந்தார்.

அறைந்த சத்தம் கேட்டு அவர் அருகில் சென்ற தர்மா, “என்ன இது? விடுங்க முருகானந்தம்.” என்று முருகானந்தத்தின் கையைப் பற்றி இழுத்தார்.

இதைப் பார்த்த அஸ்வினுக்கு கோபம் ஏற தர்மாவை ஓங்கி அறைந்து, “யோவ்! இது என் அப்பாவுக்கும் எனக்குமான பிரச்சினை.. நீ யாருய்யா அதை தடுக்க? என்ன பிரச்னைன்னு கேட்ட இல்ல.. வாய்யா பெரிய மனுஷா! இங்க வா! சொல்றேன்.” என்று சொன்ன அஸ்வின் தர்மாவின் தோளில் கை போட்டு இழுத்தவாறே தமயந்தியின் அருகில் சென்றான்.

“ந்தோ இவளை பாருய்யா! எப்படி இருக்கான்னு..? நல்லா ஹன்ட்சம்மா இருக்கிற எனக்கு, பெரிய டிரம்க்கு துணி போட்ட மாதிரி இருக்கிற இவ எப்படியா பொருந்துவா... பொண்ணு பார்க்க வந்தப்ப இப்படி ஒரு ட்ரம்ம காட்டியிருந்தா அப்படியே தலை தெறிச்சுஓடியிருப்பேன்.. என்னை ஏமாத்திட்டு இப்ப வந்து கேள்வியா கேக்குற.. உன்னாலயும் தான் எனக்கு பிரச்சினை.. என் பிரண்டு ராகுல், உனக்கு ரெண்டு மாமனாரமே!! ன்னு நக்கலா சிரிக்கறான்.. அப்படியே உன் மென்னியப் பிடிச்சு கொல்லலாம்ன்னு தான் தோணிச்சு..!”

“ஆ! ஐயோ! ஆண்டவா!” என்றவாறே கீழே சரிந்தார் தர்மா.

அங்கே தர்மா கீழே விழுந்திருந்ததைக் கூட கவனிக்க யாருக்கும் தோணவில்லை.. சுந்தரம் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அசையாமல் நின்றார்.
மீனாட்சியோ இரு காதுகளையும் கைகளால் மூடியிருந்தாலும் கண்களிலோ கண்ணீர் நிற்காமல் பெருகிக்கொண்டே இருந்தது.. மொத்த உடம்பும் அவருக்கு நடுங்க ஆரம்பித்தது. அதனால் அவரின் கைகள் மற்றும் கால்கள் இழுக்க அருகிலிருந்த நாற்காலியில் அப்படியே சரிந்தார்.. இதையும் கவனிக்க அங்கே ஒருவருக்கும் உயிரில்லை..

இதையெல்லாம் கவனித்தும் கவனிக்காமலும் இருந்த அஸ்வின் இன்னும் வார்த்தைகள் என்னும் அமிலத்தை தமயந்தியை நோக்கி வீச ஆரம்பித்தான்.
 
Top