Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நள(ன்)தமயந்தி - 14

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் – 14

தமயந்தியுடன் வீட்டினுள் நுழைந்த நளன், நேராக சமையலறைக்குள் சென்றான்.. இருவருக்கும் மாலை நேர சிற்றுண்டியுடன், இஞ்சி டீயையும் தயாரித்து முடித்து, அங்கிருந்த சிறு டைனிங் டேபிளில் நேர்த்தியாக அடுக்கினான்..

சமையல் கலை வல்லுநரான அவனுக்கு, அவர்கள் இருவருக்கு மட்டும், ஈவ்னிங் ஸ்நாக்ஸ் மற்றும் ஜிஞ்சர் டீ செய்வது, பெரிய வேலையாகவே தெரியவில்லை.. நொடியில் எளிதாக செய்து முடித்தான்..

தமயந்திக்கு உணவின் மீதான வெறுப்பு முழுதாக தீர்ந்திருக்கவில்லை.. இன்னும் அதற்குண்டான சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன..

இவர்களின் திருமணத்திற்குப் பின் நளன், தமயந்தியை ஒருவேளை உணவு கூட சாப்பிடாமல் இருக்க விட்டதில்லை.. அவளுடன் இணைந்தே உணவருந்தும்படி தினமும் பார்த்துக்கொண்டான்.

இதை கவனித்திருந்த தமயந்தியின் பெற்றோர், இந்த மாப்பிள்ளையை கண்ணில் காட்டிய கடவுளுக்கு, ‘நன்றி’ யை நிதமும் மனமார கூறி வருகின்றனர்..

இதோ இப்பொழுதும், முகம் அலம்ப சென்றிருந்தவளுக்காக, செய்தவற்றை ருசிக்கூடப் பார்க்காமல் அமர்ந்திருந்தான்..

சிறிது நேரம் கழித்து குளியலறையில் இருந்து, முகத்தை துடைத்தபடி வந்த தமயந்தியின் கைப்பிடித்து, அவனுக்கருகே அமரவைத்தான் நளன் சிறு புன்னகையுடன்..

தமயந்தியின் முகத்தில் லேசாக புன்னகை இருந்தாலும் உணவைப் பார்த்ததுமே, முகம் கோணியது..

அதைப் பார்த்திருந்த நளன், அவளின் மனம் கோணாதவாறு ஏதேதோ பேசியபடியே அவளை உண்ண வைத்திருந்தான்.. இல்லை.., இல்லை.. அவளுக்கு ஊட்டி முடித்திருந்தான்..!! டீயையும் அருந்த வைத்திருந்தான்..!!

என்னதான் இவர்களுக்கு திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் நிறைந்திருந்தாலும்,, இன்னும் இவர்களின் வாழ்க்கை, தாமரை மேல் இருக்கும் தண்ணீர் போல், பட்டும் படாமல் தான் சென்றுக்கொண்டிருக்கிறது..

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி தான் நளன்..!!

அவர்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல நளனிற்கு மிகுந்த விருப்பம் தான்.. ஆனால் தமயந்தியின் மனதை கருத்தில் கொண்டு அமைதியாகவும், பொறுமையாகவும், காதலுடனும் காத்திருக்கிறான் நளன்..

திருமணத்திற்கு முன்பு அவளிடம் தனியே பேசும்போதே, ‘தன்னை நண்பனாகப் பார்க்காமல், கணவனாக தான் பார்க்கவேண்டும்’ என்று உறுதியாக கூறியிருந்தான் நளன்..

தமயந்தி அன்று தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்திருந்தாலும், அவளின் தயக்கம் எல்லாவிதத்திலும் வெளிப்பட்டது...
ஆனால், நளன் அவற்றையெல்லாம் கண்டுக்கொள்ளாமல், சிறு சிறு செயல்கள் மற்றும் அணைப்புகளினால், அவன் அவளுடையவன் என்பதை அவளுக்கு உணர்த்திக்கொண்டே தான் இருக்கிறான்..

அதற்குண்டான பலன், சிலசமயங்களில் தமயந்தியிடம் வெளிப்பட்டாலும், பல சமயங்களில் நளனிற்கு தோல்வியே கிட்டியது..

அன்று பதிவு திருமணம் முடிந்ததுமே, தமயந்தியின் வீட்டிற்கு சென்று பாலும் பழமும் கொடுக்க விருப்பப்பட்ட மீனாட்சியிடம், திடமாக மறுத்துவிட்டு, அவளை நேராக தங்களின் வீட்டிற்கே அழைத்து சென்றான் நளன்.
அப்படி அழைத்து சென்றது, ஏதோ ஒருவிதத்தில் தமயந்தியின் மனதை அமைதிப் படுத்தியது..

அதேப்போல் முதலிரவு ஏற்பாடையும் அறவே மறுத்துவிட்டு, அவளை, உறங்குவதற்கு அன்னையின் அறைக்கு அனுப்பினான்.. அன்னையிடம் இரவு அவளை பார்த்துக்கொள்ள சொல்லவும் மறக்கவில்லை..

அவளுடன் தனியே இருக்க நினைக்காமல், அவளையும் தனியே இருக்கவிடாமல், அன்னையுடன் அனுப்பிய நளனை நன்றியுடன் பார்த்தாள் தமயந்தி..

நளனின் பார்வையோ, ‘நமக்குள் நன்றியெல்லாம் தேவையற்ற ஒன்று..!!’ என்று அவளிடம் கூறியது.. அந்தப் பார்வையை ஏற்றாலும் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி தோன்றியது.. அது ஏனென்றால்,

அஸ்வினோடான முதலிரவின் போது, தோழிகள் மற்றும் அவள் வயதையொத்த உறவு பெண்களின் கேலி, கிண்டல்களால், ஒரு வித மயக்கத்திலேயே தான் அந்த அறைக்குள் சென்றாள் தமயந்தி..

குடும்பத்தினருக்காக செய்துக்கொண்ட திருமணமானாலும், அவளின் வயது மற்றும் கழுத்தில் தழைய தழைய காலையில் அவன்(அஸ்வின்) கட்டியிருந்த தாலி, அவளை அந்த அறைக்குள் ஆவலுடன் செல்ல வைத்திருந்தது..
நிறைய திருமணங்களில் தாம்பத்யத்தின் மூலம் தான் இரு மனங்களின் சங்கமங்கள் நிகழ்கின்றன.. அந்த எதிர்ப்பார்ப்புடன் அறையினுள் சென்ற தமயந்திக்கு கிடைத்ததென்னவோ ஏமாற்றம் தான்..

‘இவருக்கு(நளன்) இது முதல் திருமணம், இந்த இரவை குறித்த எதிர்ப்பார்ப்பு நிறைய இருந்திருக்கும்..!! அதை தன்னால் முழு மனதோடு நிறைவேற்ற முடியாமல் போனதே..!!’ என்ற குற்ற உணர்ச்சி தான் அவளுக்கு..

இந்த ஆரம்பக்கட்ட புரிதல் தான் அவர்களின் வாழ்க்கையை மேன்மேலும் நல்லவிதமாக கொண்டு செல்லும் என்பதை, தமயந்தி இப்பொழுது புரிந்துக்கொள்ளவில்லை. நளனின் உதவியால் அதைப் புரிந்துக்கொள்ளும் நாளும் சீக்கிரம் வரும்..

மேலும், அஸ்வினோடான முதல் இரவிற்கு ஆவலுடன் சென்றதும், இந்த குற்ற உணர்ச்சியில் சேர்ந்து அவள் கண்களில் நீர் கோர்த்தது.. ‘தான் நல்லவளே இல்லை..!!’ என்று நினைத்தாள்.

தமயந்தியின் இந்த சுய அலசல், ‘நளனை விட்டு இன்னும் ஒதுங்கியிருக்க வேண்டும்..’ என்ற முடிவை அவளை எடுக்க வைத்தது..

சுந்தரம் நளனிடம் நடந்த நிகழ்வுகளை சொன்னபோது, திருமண இரவு அன்று பெண்ணின் முகத்தில் நிறைந்து இருந்த அலாதி வெட்கமும், எதிர்ப்பார்ப்பு கலந்த சிறு பயமும் இருந்ததை, சொல்லி சொல்லி அழுதிருந்தார்.. நளன் தான் அவரை சற்று அமைதிப்படுத்தியிருந்தான்..

இப்பொழுது அதேபோல் முதலிரவிற்கு ஏற்பாடு செய்திருந்தால் தமயந்தி முழுவதுமாக உடைந்து இருப்பாள்.. அவளை தேற்றுவதே மிகவும் கடினமாக இருந்திருக்கும்.. அவளின் மனதைப் புரிந்துக்கொண்ட நளன், மற்றவர்களின் பேச்சுக்கே இடம் கொடுக்காமல், அந்த சடங்கையே முற்றிலும் தவிர்த்தான்..

அதற்காக அவளை விட்டு ஒதுங்கியிருக்க நினைக்கவில்லை நளன்.. தமயந்தியின் மனதில், முதலில் இடம் பிடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அடுத்ததடுத்த வேலைகளை செய்தான்.. அவனின் வீட்டில் அவளின் உரிமையை, அவளே புரிந்துக்கொள்ள வைத்தான்.. அதற்கு விசாலாட்சியும் மிக உதவியாக இருந்தார்.

சுந்தரத்தின் சிகிச்சைகளை கவனித்துக்கொண்டிருந்த தமயந்திக்கு, மிகவும் உதவியாக இருந்தது நளனின் குடும்பம்.. சுந்தரத்தை சொந்த தந்தைப்போல் பார்த்துக்கொண்ட நளனின் மேல், தமயந்திக்கு சிறிது அக்கறை கூட வந்தது.. அதை அவளே உணராமல் இருந்தாள்.

‘அந்த அக்கறையே, நாளை காதலாக மாறலாம்..’ என்ற நம்பிக்கையுடன் காத்திருக்க ஆரம்பித்தான் நளன்..

நண்பன் வளவன் மற்றும் வளவனின் அப்பா உதவியுடன், தி.நகரில் ‘சுந்தரதர்மா’ வை திறந்தான்..

அடுத்து, அவனுடைய சொந்த உழைப்பான ‘நளாஸ்’ உணவகத்தின் நிர்வாகத்தை, விசாலியின் கணவன் முகுந்திடம் ஒப்படைத்தான்.. முகுந்தனும் நிர்வாக பொறுப்பை ஒரு வருடம் மட்டுமே எற்பதென்ற நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டான்..

பெரியவர்களிடம் ஒருவருடம் மட்டும், தமயந்தியுடன் தனி குடித்தனம் செல்ல விரும்புவதாக சொல்லி அனுமதி வாங்கினான். அதை தமயந்தி அறியாதவாறும் பார்த்துக் கொண்டான்.
.
சென்னையில் வீடு தேடும் படலத்தை அவனேப் பார்த்துக்கொண்டான்.. தமயந்தி தன்னிடம் நெருங்க வேண்டும் என்பதற்காகவே ஒற்றை படுக்கையறை கொண்ட வீடுகளாகவே தான் பார்த்தான்..

அதிலும், அவளுடன் நிறைய நேரம் செலவழிக்க வேண்டுமென்ற ஆவலுடன், கடையின் அருகிலேயே ஒரு வீட்டைப் பார்த்து, அதில் அவளுடன் தனி குடித்தனத்தை ஆரம்பித்தான்..

தங்க, வைர ஆபரணங்களை காட்டிலும், விலை மதிப்பிலா இந்த ‘நேரத்தை’, அவளுக்காக செலவிட்டவனை சற்று பிடிக்க ஆரம்பித்தது..

காலம் பொன் போன்றது..!! என்று பெரியவர்கள் சொன்ன வாக்கின்படி, நளன் அந்த காலத்தை தமயந்தியுடன் கழித்ததால், அவளுடனான நெருக்கம் அதிகரித்தது..

(கணவன் - மனைவி இருவருமே சற்று நேரம் ஒதுக்கி, மனம் விட்டு பேசினாலே நிறைய பிரச்சினைகளை தவிர்க்கலாம்.. குடும்பத்திற்காக சிலமணி துளிகளை செலவழித்தால் அதில் இருக்கும் சந்தோஷமும், நிம்மதியும் வேறெங்கு தேடினாலும் கிடைக்காது..!!)

நளனின் அன்னை விசாலாட்சி தான் திருச்சியிலேயே கொஞ்சநாள் இருப்பதாக ஏற்கனவே தமயந்தியிடம் சொல்லியிருந்தார்..

திருச்சியில் இருந்து கிளம்புபோது, ‘அவனை சமையலறைக்குள் மட்டும் அனுப்பாதே..!! பின் உனக்கு தான் கஷ்டம்..!!’ என்று தமயந்தியிடம் விசாலாட்சி சொல்லிதான் அனுப்பியிருந்தார்..

அது ஏன் என்று தான் தமயந்திக்கு புரியவில்லை..!!

வந்த முதல் இரண்டு நாட்கள் கடையில் இருந்து வாங்கி வந்து சாப்பிட்டனர்.. அதற்குள் வீடு முழுவதையும் செட் செய்து முடித்தனர்.. அடுத்தடுத்த நாட்களில் நளனின் உதவியுடன் மிகவும் எளிதாக தமயந்தியே சமைத்தாள்..
மாமியாரின் சொற்படி நளனை சமைக்க மட்டும் அனுப்பவில்லை..!!

அதை ஒருவாரம் வரை சரியாக கடைப்பிடித்த தமயந்திக்கு போக்கு காட்டிவிட்டு, இன்று மாலை நேர சிற்றுண்டியை தயார் செய்திருந்தான் நளன்..

இருவரும் உண்டு முடித்ததும் டேபிளை சுத்தம் செய்த தமயந்தி, அங்கிருந்த ப்ளேட் மற்றும் டீ கப்புகளை எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் சென்றவளின் குரல், “ஹா..!! அய்யோ..!!” என்று அலறியது..

“என்னாச்சு தமும்மா..?” என்று கேட்டபடியே உள்ளே வந்தான் நளன்..

உள்ளே வந்த அவனை மிகுந்த கோபத்துடன் பார்த்தாள் தமயந்தி..

இதுவரை எந்தவித உணர்ச்சிகளையும் அவ்வளவு எளிதில் தன்னிடம் காட்டாத மனைவி, இன்று இப்படி கோப உணர்ச்சியை வெளிப்படுத்தியது மிகவும் சந்தோஷமாக இருந்தது நளனிற்கு..

“ஹே..!! குட்டிமா..!! என்னடா இது, இந்த ‘தத்தி’ம்மாக்கு புதுசா கோபம் எல்லாம் வருது..!!” என்று பெரிய புன்னகையுடன் ஆச்சர்யப்பட்ட நளனை, இன்னும் கோபமாகப் பார்த்தாள் தமயந்தி..

“யாரு தத்தி?”

“இதுல உனக்கு சந்தேகம் வேறயா தமும்மா? ஹா..ஹா..!!” என்று சிரித்தபடி வினவினான் நளன்..

“நீங்க..!!உங்க..,உங்களை..!!” என்று நளனை திட்டுவதற்கு வார்த்தைகளை தேடினாள் தமயந்தி..

“விட்டுடு செல்லம்..!! உனக்கு திட்ட எல்லாம் வராது..!! இப்போ எதுக்கு அலறின? அதை சொல்லு..!!” என்றான் நளன்..
அவளோ எதுவும் பேசாமல், சமையலறை மேடையை சுற்றி கைகளை ஆட்டி, “என்ன இது?” என்ற பார்வைப் பார்த்தாள்..

அவனோ அவளை நோக்கி அசட்டுப் பார்வை ஒன்றை வீசினான்.

எண்ணி பத்தே பத்து திணை கட்லெட்டும், டீயும் செய்வதற்கு, அங்கிருந்த மேடையை கந்தரகோலம் செய்து வைத்திருந்தான் நளன்.. போதாத குறைக்கு சிங்கில், தேய்ப்பதற்கு பாத்திரங்களையும் சேர்த்திருந்தான்..(குவித்திருந்தான்)

“தமு..!! இங்க பாரு இந்தப் பாத்திரம் திணையை வறுப்பதற்கு எடுத்தது..”

“அது” என்று அடுத்த பாத்திரத்தை தமயந்தி காண்பித்ததற்கு,

“இது வெங்காயம், வெஜிஸ் எல்லாம் வதக்க எடுத்தது..”

அவள் மெளனமாக அடுத்தப் பாத்திரத்தை காண்பித்தாள்..

“இது வெஜிஸ் எல்லாம் திணையுடன் சேர்த்து பிசைவதற்கு எடுத்தது, அப்புறம் இந்த ப்ளேட், சின்ன சின்ன உருண்டைகளை வைப்பதற்கு எடுத்தது, இது மைதா மிக்ஸ் செஞ்சு வைத்தது, இது ப்ரெட் க்ரம்ஸ் வச்சிருந்த பவுல். இந்த தவால தான் கட்லெட் செஞ்சேன்.. செர்விங் ப்ளேட்ல செர்வ் செஞ்சாதானே நல்லா இருக்கும்..!! அதற்காக இதை எடுத்தேன்..!!” என்றவனை கொலைவெறியுடன் பார்த்தாள் தமயந்தி..

அங்கிருந்த மற்றவற்றை பார்த்தாள் தமயந்தி.. டீ போடுவதற்கே இரண்டு, மூன்று பாத்திரங்களை எடுத்திருந்தான் நளன்.. அதில் அப்படியே டீயும் இருந்தது.. அவனிடம் திரும்பி “இது என்ன?” என்று கேட்டாள்..

“வெஜிடபிள் கார்விங் பண்ணிட்டு இருந்ததுல, இந்த டீ ரொம்ப கொதிச்சு போயிடுச்சு.. அது நல்லா இருக்காதுங்கறதுனால வேற டீ போட்டேன்..” என்றான்..

அவன் ‘வெஜிடபிள் கார்விங்’ என்றதும் தான் அங்கிருந்தவைகளை பார்த்தாள்.. பீட்ரூட்டை ரோஜா பூ போல் வெட்டுவதற்காக அதனை நிறைய வேஸ்ட் செய்திருந்தான்.. அதே போல, தக்காளி வெங்காயத்தையும் மீதம் வைத்திருந்தான்.. அனைத்துமே சிறு சிறு துண்டங்களாக நிறம் மாறி கிடந்தது.. மறுமுறை கூட அதை உபயோகிக்க முடியாதது போல் இருந்தது..

உணவுகள், மற்றும் உணவுப் பொருட்களை வீண் செய்வதை அறவே பொறுக்காத தமயந்தி, அவனிடம் பொரிய ஆரம்பித்தாள்.. அவனின் தலையை பிடித்து உலுக்காதது ஒன்று தான் குறை..

“தெய்வமே..!! இனி இது போன்ற தவறுகள் நடக்காது..!! எமக்காக கருணைக் கொண்டு, காத்தருள்வீராக..!!” என்று கையெடுத்து கும்பிட்டான் நளன்..

“என்னது..? இன்னொரு முறை கிட்சனுக்கு வருவீங்களா..!!! இரண்டு பேருக்கு அதுவும் ஒருவேளைக்கு செய்ததே, எனக்கு போதும் போதும்ன்னு இருக்கு..!! இனியொருதரம் கிட்சனுக்குள்ள வந்திங்கன்னா நான் சும்மா இருக்க மாட்டேன்..”

“ஹே..!! நான் மாஸ்டர் செப்..!! இந்த பாத்திரங்கள் கூட இல்லைனா என்னை மாதிரி இருக்கிறவங்க எப்படிம்மா சமைப்பாங்க..??”

“நீங்க வளவன் அண்ணா கடைக்கு போய் சமைங்க..!! இனிமே இந்த வீட்டுல சமையலை நானே பார்த்துக்கிறேன்.. உங்களை சமையலறை பக்கம் விடாதேன்னு அத்தை ஏன் சொன்னாங்கன்னு இப்பதான் புரியுது.. இதெல்லாம் பார்த்தாலே எனக்கு கண்ணெல்லாம் கட்டுது.. இதுல இவரு பெரிய செப்..!! ஆளைப் பாரு..!!”

“அய்யாவோட அருமை பெருமை எல்லாம் உனக்கும் தெரியல..!! உன் அத்தைக்கும் தெரியல..!!” என்றபடியே சமையலறையை விட்டு வெளியே சென்றான் நளன்.

அவனின் செல்ல கோபத்தில், உண்டான புன்னகையுடன், அங்கிருந்தவைகளை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள் தமயந்தி..
“நானும் ஹெல்ப் செய்யறேன்..!!” என்று நளனும் சேர்ந்து செய்ததில் சீக்கிரமே சமையலறை சுத்தத்துடன் ஒளிர்ந்தது..
 
Top