Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நள(ன்)தமயந்தி - 11

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்: 11
அஸ்வினின் வக்கிர குணம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போனது.. கூடவே போதை பழக்கமும் சேர்ந்தது..

கஞ்சா, அபின் போன்ற போதை பழக்கமாக இருந்திருந்தால் முருகானந்தத்தின் புலன்களுக்கு புலப்பட்டிருக்கும்..

அப்படி அவருக்கு புலப்பட்டிருந்தால் அஸ்வினுக்கு திருமணம் என்ற ஒன்றை செய்வதையே யோசித்திருப்பார்.

ஆனால் அஸ்வினுக்கு உண்டான அந்த போதை பழக்கம் அப்படிப் பட்டது அல்ல. அதனால் முருகானந்தத்திற்கு தெரியாமல் போய்விட்டது.
அவன் ‘புகழ் மற்றும் பெருமை(தற்பெருமை)’ என்ற போதைக்குதான் அடிமை ஆகியிருந்தான்.

சிறுவயது முதலே அவனை சுற்றியிருந்த உறவினர்கள் அனைவரும் அவனைப் புகழ்ந்து, பெருமைப்பட பேசி பேசியே அவனின் அந்த போதைக்கு வித்திட்டார்கள்.

சிறு குழந்தைகளை பெற்றவர்கள் மற்றும் சுற்றத்தார் புகழ்வது வழமை தான். ஆனால் குழந்தைகளின் தவறுகளையும் சுட்டிக்காட்டி அவர்களை நல்வழி படுத்துவதும் பெரியவர்களின் கடமை தானே..

அதை செய்ய தவறியிருந்தார்கள் முருகானந்தம் மற்றும் அவர் குடும்பத்தினர்.

அவரின் அக்காவோ ஒருபடி மேலே சென்று அவன் கைகளில் தாரளாமாக பணத்தை கொடுத்து பழக்கியிருந்தார்.

முருகானந்தம் கண்டித்ததற்கு, ‘நம்ம அஸ்வினு தாய் இல்லா புள்ளைப்பா.. அந்த ஏக்கம் அவனுக்கு எப்பவுமே வந்துடக்கூடாது.. அவன் என்ன தப்பாவா செலவழிக்க போறான்..? போன தடவ நாம குடுத்த பணத்தைக் கூட அவனோட பிரண்டுக்கு தான் பீஸு கட்டியிருக்கான்..!! உனக்கு தான் அது தெரியுமே!!நம்ம கிட்ட எதையுமே அவன் மறைக்க மாட்டான் முருகா..!! அவன் சொக்கத் தங்கம் முருகா..!!’ என்று சொல்லி அஸ்வினின் கன்னத்தில் முத்தமிடுவார் முருகானந்தத்தின் அக்கா.

விளைவு ‘நண்பர்கள்’ என்ற பெயரில் சேர்ந்த ஜால்ராக் கூட்டம்.

அவனின் குறைகளை, தவறுகளை எடுத்துக்கூறும் நண்பர்களை ஒதுக்கிவிட்டு அவனுக்கு ஜால்ரா அடிக்கும் கூட்டத்தினரை மட்டும் நண்பர்களாக பாவித்தான் அஸ்வின்.

புகை, மது மற்றும் மாதுவை சுவைக்க அவனின் ‘தற்பெருமை’ போதை இடமளிக்கவில்லை.. அதனால் அவனுக்கு அவனின் ஜால்ரா கூட்டத்தினரிடம் நல்லபெயர்(?) கிடைத்தது.

அஸ்வினின் கைகளில் தாராளாமாக புரண்ட பணம், அவன் கூட்டத்தினரின் எல்லாவித கெட்ட பழக்கத்திற்கும் பயன்பட்டது.. அதனாலும் அவனின் நற்பெயர்(?) மற்றும் புகழ் அந்த கூட்டத்தினரிடம் உயர்ந்தது..

(இவர்களை நண்பர்கள் என்று என்னால் கூற முடியவில்லை.. நல்ல நட்புக்கு அழகு தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களை நல்வழி படுத்துவது தானே!!)

அந்த கூட்டத்தினர் சுவைக்கும் புகை, மது மற்றும் மாதுவை அருகில் இருந்து பார்க்கும் வக்கிர குணம் அவனுக்கு தலை தூக்கியது..

அவற்றை சுவைப்பதைவிட இப்படி மற்றவர்கள் சுவைப்பதை அருகில் இருந்துப் பார்ப்பது அவனுக்கு மிகுந்த போதையை கொடுத்தது அவனுக்கு.
இவையெல்லாம் வீட்டினர்க்கு தெரியாமல் அவர்களின் முன் நல்லப் பிள்ளையாக நடந்துக்கொண்டான்.

கல்லூரிப் படிப்பு முடிந்து வேலை நிமித்தமாக பெங்களூர் சென்றது இன்னும் வசதியாய் ஆகிற்று அவனுக்கு..

அங்கும் அவனுக்கு ஜால்ரா கூட்டம் தானாக சேர்ந்தது என்று கூறுவதை விட அவனாக சேர்த்துக்கொண்டான் என்று சொல்வதே உண்மையாக இருக்கும்.

நவ நாகரீகமான அந்த நகரம், அவனின் வக்கிர குணத்தையும், தற்புகழ்ச்சி மற்றும் தற்பெருமை என்ற போதைகளையும் மிக அதிகப் படுத்தியிருந்தது.

முருகானந்ததிற்கு இவனின் குணம் தெரியாமல் போனதால் தமயந்தியை இவனுக்கு மணமகளாக பேசி முடித்திருந்தார்.

அவனின் ஜால்ரா கூட்டம், ‘இதுவரை நாங்கள் அனுபவித்ததை பார்த்திருந்த நீ, இனிமேல் நேரடியாகவே அனுபவிக்கலாம், அதுவும் லைசென்சுடன்!!’ என்று அவனின் போதைக்கு தூபமிட்டனர்.

பெண் பார்க்கும் போது, அவனை ஒரேடியாக புகழ்ச்சியின் போதையில் தள்ளியது மற்றும் அவனின் ஜால்ரா கூட்டத்தினரின் ஊக்குவிப்புகள் மட்டும் தான் தமயந்தியை திருமணம் செய்வதற்கு அவனை சம்மதம் சொல்ல வைத்தது.

திருமணத்திற்கு முதல் நாள் நடந்த பார்ட்டியில் மது போதையில் இருந்த அஸ்வினின் ஜால்ரா கூட்டத்தினர், கல்யாணப் பெண்ணையும் பெண்ணின் குடும்பத்தையும் தகாத வார்த்தைகளால் குறை கூறி கேலிப் பேசி சிரித்தது அஸ்வினிற்கு தலை குனிவாக இருந்தது..

அவன் அவளை திருமணம் புரிவதால் அவனுக்கு இருக்கும் புகழ் மிகவும் குறைய போவது போல் பேசியதை மிகுந்த அவமானமாக கருதினான் அஸ்வின்.

எப்போதுமே தன்னை எல்லோரும் புகழ்ந்து பேச வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் அவன், அன்றைய நாயகனான தன்னை மணக்க இருப்பவள் இவ்வளவு கேலி கிண்டலுக்கும் ஆளாகியபின்னும் அவளை மணப்பதைப் பற்றி நிறைய சிந்தித்தான்..

ஆனாலும் சுயநலவாதியாக சிந்தித்து அந்த திருமணத்தை செய்துக்கொண்டான்.

திருமணத்தின் போது நேரம் ஆக ஆக அவன் கூட்டத்தினரின் கேலி, கிண்டல்களால் கோபத்தின் எல்லையை அடைந்திருந்தான் அவன்.
தமயந்தி முதலிரவு அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டதும் அவனின் கோபம் வெளிப்பட்டது.

அதுவரை குடும்பத்தினர் முன் போட்டிருந்த நல்ல பையன் வேஷத்தை கலைத்து. மிக கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி, தமயந்தியின் குடும்பத்தையே ஆடிப்போக செய்திருந்தான் அந்த முட்டாள்.

இவற்றையெல்லாம் முருகானந்தம் அஸ்வினை அடித்து தெரிந்துக்கொண்டு இருந்தார்.

எல்லாவற்றையும் சுந்தரத்திடமும் தமயந்தியிடமும் சொன்னவர், மீண்டும் சுந்தரத்தின் கைகளைப் பிடித்துக்கொண்டு மன்னிப்பு கேட்டார்.

பின் எழுந்து நின்று தமயந்தியிடம் ஒரு கவரை நீட்டினார். தமயந்தி அதை வாங்காமலே ‘என்ன இது?’ என்பது போல் அவரைப் பார்த்தாள்.
“என் பையன திருத்தறது எல்லாம் நடக்காத காரியம்மா..!! அவன் எங்க கையை மீறி எங்கயோ போய்ட்டான்..!! என்னை மன்னிச்சுடும்மா..! இது நீங்க கல்யாணத்துக்கு செலவழிச்சதுக்கான செக்..!!” என்று அவர் கொடுத்த கவரில் இருந்து எடுத்துக் காண்பித்தவர் மேலே தொடர்ந்தார்.

“இது என் சொத்துல உனக்கு ஒரு பங்கு கொடுத்து இருக்கேன்.. அதோட பத்திரம் தான் இது..” என்றார் முருகானந்தம்.

“உன்னோட பொருள் எதுவும் அங்க இல்லைமா.. ஏதாவது இருந்தா சீக்கிரம் கொடுத்தனுப்பிடுறேன்..” என்றவர் கைகூப்பியபடியே தமயந்தியிடம் மேற்கொண்டு பேசலானார்.

“அம்மா தமயந்தி..!! எங்க குடும்பத்தை சபிச்சுடாதம்மா!! இனிமே எல்லாம் எங்க குடும்பம் தழைக்குங்கற நம்பிக்கை எல்லாம் எனக்கு இல்லை.. ஆனா போற காலத்துலயாவது நிம்மதியா போய் சேரலாம் ன்னு தான் சபிச்சுடாதேன்னு கேக்கறேன்..என் பையனை பத்தி நானே போலீஸ் கிட்ட சொல்லிட்டேன்.. முன் ஜாமீன் வாங்கிட்டு தான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனேன்.. பெத்த பாசம் தான்மா!! என்ன செய்யறது?
அவனை வளர்க்கும் போது, நல்லது கெட்டத நேரடியா சொல்லி தராம, அடுத்தவுங்க நம்மள பத்தி தப்பா பேசறதுக்கு இடம் கொடுத்துடாதன்னு சொல்லி சொல்லி வளர்த்ததால் அவனுக்குள் இப்படி ஒரு வக்கிர குணம் வளரும்ன்னு நான் கனவுல கூட நினைச்சுப் பார்த்ததில்லை..!!” என்று கண்ணீர் விட்டார் முருகானந்தம்.

“அவன் கிட்ட உன் வாழ்க்கைக்கு மேற்கொண்டு எந்தவித பிரச்சினையும் ஏற்பட்டு விடக் கூடாதுன்னு அவன் கிட்ட விவாகரத்து பத்திரத்துல கையெழுத்து போட வச்சுட்டேன்.. போலீஸ்காரங்க மற்றும் என்னோட வக்கீலு முன்னாடி தான் அந்த தறுதலை இந்தப் பத்திரத்துல கையெழுத்து போட்டான்.. அதனால இனிமே உனக்கோ இல்லை உங்க குடும்பத்துக்கோ எங்களால எந்த பிரச்சினையும் வராதும்மா தமயந்தி..
அவனையும் இந்த ஊரை விட்டே துரத்திட்டேன்.. நானும் கூடிய சீக்கிரம் ஊரை விட்டு போய்டுவேன் மா.. நீ இனிமே சந்தோஷமா அமோகமா இருப்பே தமயந்தி..!! என்ற முருகானந்தத்தை விரக்தி புன்னகையுடன் பார்த்தாள் தமயந்தி.

“நான் கொஞ்சம் பேசலாமா?” என்ற தமயந்தியை, சுந்தரம் ‘வேண்டாம்’ என்பது போல் கை பிடித்து தடுத்தார்.

ஏனென்றால் அவள் குரலில் விரக்தியுடன் கலந்து கோபமும் இருந்தது.. ஏற்கனவே நொந்து இருக்கும் முருகானந்தத்தை மேற்கொண்டு நோகடிக்க அவருக்கு விருப்பம் இல்லை.. பையனைப் பற்றி சரியாக விசாரிக்காமல் திருமணத்திற்கு ஒத்துக்கொண்ட மடத்தனத்தை நினைத்து சுந்தரம் மிகவும் நொந்துக்கொண்டார்.

“அப்பா கண்டிப்பா உங்க வளர்ப்பு தப்பாகாதுப்பா.. அதனால எனக்கு பேச ஒரு சந்தர்ப்பம் கொடுங்க..!!” என்ற குட்டுடனே ஆரம்பித்தாள் தமயந்தி..

“சரிம்மா தமு..!” என்று சுந்தரம் முடித்துக்கொண்டார்.

“சார்..! இந்த செக்கோ இல்லை சொத்துகளோ எதுவுமே எங்களுக்கு வேண்டாம்.. நீங்களும் பணத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கறீங்க!!
ம்ம்!! என் குடும்பம் முழுவதும் நிம்மதியை இழந்து தவிக்கறோமே.. அதை இந்தப் பணத்தால திருப்பிக் கொடுக்க முடியுமா? சொல்லுங்க சார்..!!” என்ற தமயந்தியை கண்களில் பெருகிய நீருடன் பார்த்தார் முருகானந்தம்.

“தமயந்திம்மா உங்க சோகம் எனக்கு புரியாமல் இல்லைமா.. ஆனா என்னோட ஆத்ம திருப்திக்காக மட்டும் தான் இந்தப் பணத்தை கொடுக்கறேன்.. என் பையன் செய்த இழி செயலுக்காக நீங்க பணத்தால நஷ்டம் அடைஞ்சுடக் கூடாதுன்னும் தான் இந்த சொத்துக்களை உன் பேருக்கு எழுதி வைத்தேன் மா..!! என்னை மன்னிச்சுடும்மா..” என்றார் முருகானந்தம்.

“ஆனா எனக்கு இந்த பணமோ சொத்தோ எதுவுமே வேண்டாம்..கூடவே இந்த திருமணத்திற்காக வாங்கிய எந்த பொருளும் எனக்கு வேண்டாம்.. எங்க வீட்டில் எனக்காக வாங்கியதையும் சேர்த்து தான் சொல்றேன்.. தயவு செஞ்சு அதையெல்லாம் எடுத்துட்டு போய்டுங்க..
அதே மாதிரி, வீடியோ, போட்டோ இப்படி எதுவுமே எங்க கண்ணுக்கு தெரிய விட்டுடாதீங்க.. ஏற்கனவே நாங்க ஏற்பாடு செஞ்சிருந்த வீடியோ கடைல என் கல்யாணத்தையே புல்லா டெலிட் செய்ய சொல்லிட்டேன்.. நீங்களும் அதே மாதிரி சொல்லிடுங்க ப்ளீஸ் சார்..!! என்று கைகூப்பி வேண்டினாள் தமயந்தி.

“நானும் ஏற்கனவே அவங்கக்கிட்ட பிரிண்ட் போட வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்,, முடிஞ்சா டெலிட் பண்ணவும் சொல்லிட்டேன் தமயந்தி.. எங்களால உன் வாழ்க்கைக்கு இனிமே எந்தவித இடையூறும் ஏற்படாது மா.. நீ இந்த பணத்தை மட்டும் வாங்கிக்கிட்டா போற காலத்துல நிம்மதியா போவேன் மா..” என்றார் முருகானந்தம்.

“ரொம்ப நன்றி சார்..!! இந்தப் பணத்தை என்னால வாங்கிக்க முடியாது.. அதை நீங்க என்ன செஞ்சாலும் எனக்கு கவலையில்லை..” என்றவள்.. விவாகரத்துப் பத்திரத்தை தவிர மற்ற அனைத்தையும் கிழித்து எறிந்தாள்.

“பெரியவங்க நீங்க கொடுத்ததை கிழிச்சதுக்காக என்னை மன்னிச்சுடுங்க.. என்னால இதை ஏற்றுக்கொள்ளவே முடியலை..
என் மாமா மற்றும் பெற்றவர்களின் வேண்டுதல் தான் என் வாழ்க்கையை காப்பாற்றி இருக்குன்னு உறுதியா நம்பற எனக்கு இந்தப் பணத்தை எடுத்துக்க மனசு வரலை.” என்றாள் தமயந்தி.

“நீ என்னமா சொல்லற.. எனக்கு புரியல?” என்றார் முருகானந்தம்..

“வக்கிர குணம் படைத்த உங்க பையன் என்ன வேணும்னாலும் என்னை செய்திருக்கலாம் சார்..!! அதாவது என்னை விபச்சாரியா ஆக்கியிருக்கலாம்ன்னு சொல்றேன்..!!” என்றவளை ஓங்கி அடித்தார் சுந்தரம்.

“தமு என்ன வார்த்தைம்மா சொல்லற?”

“அப்பா உண்மை தானேப்பா.. வக்கிர குணம் ஒருவனை எந்த அளவிற்கு வேணும்னாலும் அழைத்து செல்லுமே..!! பெரியவங்க முன்னாடி இந்த வார்த்தையை சொன்னது தப்பு தான்.. அதுக்கு என்னை மன்னிச்சுடுங்க.. ஆனா நான் சொல்வது உண்மை தானேப்பா..!! இதில் இருந்து என்னை காப்பாற்றியது உங்க எல்லோரோட வேண்டுதல் மட்டும் தான்ப்பா..” என்று சுந்தரத்திடம் சொன்னாள் தமயந்தி கண்களில் பெருகிய கண்ணீருடன்.

தமயந்தியை தோளில் சாய்த்துக்கொண்ட சுந்தரத்தின் கண்களிலும் கண்ணீர் பெருகியது.

இவற்றையெல்லாம் அழுதபடியேப் பார்த்திருந்த முருகானந்தம், மீண்டும் ஒருமுறை அவர்களிடம் மன்னிப்பு கேட்டு அங்கிருந்து சென்றார்.

முருகானந்தம் மேற்கொண்டு என்ன செய்தார்.. அஸ்வின் என்ன ஆனான்.. என்பதையெல்லாம் தமயந்தி குடும்பத்தினர் ஆராயாமல் அவர்களின் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

நளனின் அம்மா தமயந்தியைப் பெண் கேட்கும் போது தான் அவர்களைப் பற்றி நினைத்தாள் தமயந்தி. இதையெல்லாம் மீனாட்சியும் சுந்தரமும், விசாலம் மற்றும் நளனிடம் சொல்லி முடித்தனர்.
 
Top