Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நலங்கிட வாரும் ராஜா - 5

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 5

“மது... மதுஸ்ரீ... நிஜமாவே நீதானா.. ஓ!! காட் தேங்க்ஸ் எ லாட்.. இப்.. இப்போதான் நான் நினைச்சேன், நீ இப்போ என்கூட இருந்தா ரொம்ப பெட்டரா பீல் பண்ணுவேன்னு. பாரு நீயே என் கண் முன்னாடி நிக்கிற.. ” என்று அவள் கரங்கள் பிடித்து மொழிந்தவனின் புன்னகை முகம் இன்றும் கூட அவள் இதழில் சிரிப்பை மலரச் செய்தது.

இது நடந்து நாட்கள் மூன்றானாலும், அதன் பாதிப்பு இன்னும் குறையவில்லை. எதிர்பார்த்து ஏற்பாடு செய்து சந்திப்பதை விட, இப்படி எதிர்பாரா நேரத்தில் நிகழும் சந்திப்புகள் தான் அதிகம் சுவையானவை.

கண்ட உடனே கண்கள் விரிந்து, இதயம் துடிப்பது ஒருமுறை நின்று, எடுத்ததுமே என்ன பேசுவது, ஏது பேசுவது என்றெல்லாம் மூளை வேலை நிறுத்தம் செய்து, இப்படியான உணர்வுகள் இருவருக்குமே புதிது தான்.

ஆனால் முதலில் தெளிந்தது மதுஸ்ரீ தான். காரணம் அவன் அமர்ந்திருந்த விதமும், அவர்கள் சந்தித்த இடமும். உடல்நலம் எதுவும் சரியில்லையோ என்றே எண்ணி பதற்றமாய் அவனிடம் சென்றாள், ஆனால் அவனோ மகிழ்ந்து போயல்லவா அவளை கண்டான்.

இன்னும் கூட அவனது பார்வை மதுவிற்கு கண் முன்னே வந்து போனது. வாழ்வில் சில நேரம் சின்ன சின்ன பாராட்டும், மெச்சுதலும் வாழ்வை இன்னும் அழகாக்கும். அதை போலவே, நீ எனக்கு அத்தனை முக்கியம் என்று ஒரு உறவுக்கு உணர்த்துவதும்.

அதை எழிலரசன் அவனது கண்களாலேயே அவளுக்கு உணர்த்திவிட பூரித்து தான் போனாள் மதுஸ்ரீ.

“என்.. என்ன சொல்றீங்க...” என்று உதடுகள் லேசாய் நடுங்க கேட்டவளை, தன்னருகே அமரவைத்தனுக்கு அப்பொழுதுதான் அங்கே சோபனா என்ற ஜீவனும் இருப்பது தெரிந்தது.

மதுஸ்ரீயும் அவளை கெஞ்சலாய் ஒரு பார்வை பார்க்க, “நான் மாத்திரை வாங்கிட்டு அங்க முன்னாடி இருக்கேன். சீக்கிரம் வந்து சேரு..” என்று முறைத்தபடி தான் சென்றாள் சோபனா.

சோபனா சென்றதும், எழிலரசனோடு சென்று வேதாச்சலத்தை பார்த்துவிட்டு, இரண்டொரு வார்த்தை பேசி நலம் விசாரித்துவிட்டு, பேசியபடியே இருவரும் மீண்டும் வெளியே வந்து அமர்ந்தனர். மதுஸ்ரீயை கண்டதும் எழிலின் தாத்தாவிற்கு அத்தனை மகிழ்ச்சி. அது அவரது முகத்தில் அப்படியே பிரதிபலித்தது.

தான் ஒருத்தி வந்தது இந்த இரு ஜீவன்களுக்கும் அத்தனை மகிழ்வா?? என்று தோன்றியது. தன் ஒருத்தியின் வருகை இவர்களுக்கு இத்தனை இதமென்றால், வாழ்நாள் முழுவதும் இவர்களோடு இருந்தால் தானுமல்லவா மகிழ்ச்சியாய் இருப்பேன் என்று நினைக்க தோன்றியது அவளுக்கு.

“என்ன மது, என்ன யோசனை...???” எழிலின் கேள்வி அவள் காதுகளில் விழுந்தாலும் மனதை எட்டவில்லை, என்னென்னவோ சிந்தனை அவளது மனதில் ஊர்வலம் நடத்த,

“மது... மதுஸ்ரீ..” என்று லேசாய் அவளை உலுக்கினான்.

“ஹா...!!! என்ன சொன்னீங்க??” என்று விழிகள் விரித்தவளை காண அவனுக்கு சிரிப்புதான் வந்தது.

“என்ன...?? என்ன சிரிப்பு...??”

“நத்திங்.. அப்படி என்ன யோசனை..??”

“ம்ம் சும்மாதான் சொல்ற மாதிரி ஒண்ணுமில்ல... சரி, சோபனா காத்துட்டு இருப்பா, நான் கிளம்பவா..??”

போகவே மனமில்லாமல் கேட்கும் குரல் அவனுக்கு புரியாதா என்ன?? ஆனாலும் வேண்டுமென்றே, “ஹ்ம்ம் சரி கிளம்புறதுனா கிளம்பு...” என்றான் கெத்தாய்.

அவளுக்கு சப்பென்றானது. இப்படியொரு சந்தர்ப்பம் இனியொரு முறை கிடைக்காதே.

“ஹ்ம்ம் தாத்தாக்கு எப்பவும் இப்படி ஆகுமா??” என்று எழுந்தபடி கேட்க, அவன் பேச ஆரம்பித்ததில் தன்னையும் அறியாமல் மீண்டும் அமர்ந்திருந்தாள்.

“எப்பவும் இல்ல, ரொம்ப ரெஸ்ட்லெஸா இருந்தா இப்படி ஆகும். என்னால தனியா சமாளிக்க முடியலை மது. என்னவோ இத்தனை நாள் இல்லாம மனசளவுல ரொம்ப வீக் ஆன மாதிரி ஒரு பீல். முன்னெல்லாம் ஒரு வைராக்கியம் இருக்கும். எந்த சூழ்நிலையிலும் தனியா சமாளிக்கலாம்னு.. ஆனா இப்போ அப்படி முடியாதுன்னு தோணுது..”என்றவனின் குரலில் என்ன உணர்ந்தாளோ,

“கவலை படாதீங்க.. எல்லாம் சரியாகும்...” என்றவளுக்கு சோபனாவின் அழைப்பு அவள் கையில் இருந்த அலைபேசியில் ஒலிக்க,

“இதோ வந்துட்டேன் டி...” என்று பதிலளித்தவளை, சற்றே நிறுத்தி வைத்தான் எழில்.

“நேரமாச்சுங்க... இன்னும் கொஞ்ச நேரமான எங்க ஊருக்கு பஸ் கிடைக்காது...” என்றவளின் கண்களும், குரலும், எனக்கு போகவே பிடிக்கவில்லை என்று அழகாய் வெளிக்காட்டியது.

“ஹ்ம்ம் இது உன் போனா மது...??” என்றான் அவள் கைகளையே பார்த்து. ஏனெனில் அவள் வீட்டு சூழலில் மதுவிற்கு என்று தனியே செல்போன் எல்லாம் வாங்கி கொடுத்திருப்பர் என்று அவனால் நினைக்கவும் முடியவில்லை.

அவன் கேட்ட தொனியே அவளுக்கு அவன் கேட்கும் அர்த்தம் புரிய, “இல்.. இல்லை இது வீட்ல இருக்குற போன்தான்.. அப்பா, அண்ணா, லட்சுமிக்கு எல்லாம் தனி போன் இருக்கு. இது வீட்ல எனக்கும் அம்மாக்கும் இருக்கட்டும்னு வாங்கினது...” என்றாள்.

ஒருவேளை இது அவளது தனிப்பட்ட உபயோகத்திற்கு என்றால் எழிலுக்கு மகிழ்வாய் இருந்திருக்குமோ என்னவோ, ஆனால் அவனது முகத்தையே பார்த்திருந்த மதுவிற்கு என்ன தோன்றியதோ, “இது எப்பவும் என்கிட்டதான் இருக்கும்.. ” என்றாள் புன்சிரிப்போடு.

“ஓ!! சைலெண்ட்டா விளையாடுராளா..!!!” என்று எண்ணியவன், ஒன்றும் கூறாமல், அவளிடமிருந்த அலைபேசியை வாங்கி, தன் எண்ணிற்கு ஒரு முறை அழைப்பு விடுத்தது துண்டித்துவிட்டு அவளிடமே கொடுத்தான்.

அவன் செய்வது எல்லாம் அவளுக்கு புரியாமல் இல்லை. ஆனால் அவள் வீட்டில் தனியே எல்லாம் அவனோடு அலைபேசியில் பேசிட முடியாதே. மிஞ்சி போனால் அவளது அக்காக்கள் தவிர இந்த அலைபேசிக்கு யாரும் அழைக்க மாட்டார்கள், இதில் எழிலின் அழைப்பை எப்படி ஏற்பது, என்ற குழப்பம் மேலோங்க, கலக்கமாய் அவன் முகம் பார்த்தாள்.

“கவலைப்படாத, தினமும் பேசனும்னு எல்லாம் உன்னைய டென்சன் பண்ணமாட்டேன், உனக்கு அங்க எதா எமர்ஜென்சியான சூழ்நிலை வந்தா எனக்கு காண்டாக்ட் பண்ணும்ல. அதுக்கு தான். மத்தபடி உனக்கு பேசனும் போல இருந்த மெசேஜ் பண்ணு.. போதும்.. வீட்ல இருக்கவங்களையும் ரொம்ப டென்சன் பண்ணிக்க வேண்டாம்.. சரியா...” என்றவனின் வார்த்தைகளில் ஆயிரம் ஆறுதல்களை உணர்ந்தாள்.

எத்தனை அழகாய் அனைத்தையும் புரிந்து, அனைவரின் மனநிலையும் மனதில் வைத்து யோசிக்கிறான். இதை ஏன் தன் வீட்டினர் துளி கூட செய்யமாட்டேன் என்கிறார்கள். மனதில் ஆற்றாமை தோன்ற, மீண்டும் சோபனா அழைத்தாள்.

இதற்குமேல் இருந்தால் சரிவராது என்றெண்ணிய எழிலும், “சரி நீ கிளம்பு மது.. எதுனாலும் எனக்கு கூப்பிடு.. எந்நேரம்னாலும் சரி.. நான் தினமும் நைட்டு தூங்கும் போது மெசேஜ் பண்றேன்.. கவலை படாத.. உங்கப்பாட்ட பேசிருக்கேன். அவரும் யோசிப்பாரு...” என்று அவளோடு நடந்தபடி பேசியவனை பார்த்தபடியே நடந்தவள் ‘அப்பாவிடம் பேசினேன்’ என்ற வார்த்தையில் அப்படியே நின்றுவிட்டாள்.

“அப்பாட்ட பேசினீங்களா...???” என்று அதிர்ச்சி பாவனை காட்ட,

“ஆமா மது, பேசியிருக்கேன். நீயும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத.. சரி இப்போ நீ கிளம்பு...” என்று மேலும் தாமதிக்காமல் அவளை சோபனாவோடு அனுப்பி வைத்தான்.

வீட்டிற்கு வந்து சேரும் வரைக்கும் சோபனா திட்டியபடியே தான் வந்தாள். ஆனால் அவள் திட்டியதெல்லாம் மதுஸ்ரீக்கு உரைக்கவில்லை என்று இப்பொழுதும் அவள் அன்று நடந்ததை எண்ணி சிரித்துக்கொண்டிருக்கும் போதே தெரிந்தது.
எழிலரசன் சொன்னது போலவே தினமும் உறங்கும் நேரம் மெசேஜ் செய்வான். கண்ணே மணியே என்று காதல் வசனம் பேசிக்கொள்ளவில்லை. இருவருமே தங்களின் வயதுக்கு ஏற்ப நடந்துக்கொள்ள, இருவருக்குமே புரிதல் அதிகமானது.
நாட்கள் இப்படியே கடந்து செல்ல, எழிலுக்காக தினமும் வேண்டிக்கொண்டாள் எனலாம்.

இதில் மிகவும் நொந்துப்போனது பாக்கியம் தான். தன் பிள்ளைகள் அனைவரிடமும் இடி வாங்கினார். திருமண விசயமாய் என்ன பேசினாலும் மதுஸ்ரீ தன் முடிவு இதுதான் என்பதை திரும்ப திரும்ப கூற, ஒருநாள் ஸ்ரீதரன் வீட்டில் தன் தந்தையோடு சண்டையிட தொடங்கினான்.

ஏனோ தங்கையிடம் இதைப்பற்றி நேருக்கு நேர் பேசிட அவன் மனம் துணியவில்லை.

“என்னப்பா இப்படியே எத்தனை நாளைக்கு சும்மா இருக்கிறது.. மதுக்கு என்ன தெரியும். எதோ வீம்புல பேசிட்டு இருக்கா.. நீங்க தரகர் கிட்ட பேசுங்க.. நமக்கு தெரியாதா அவளுக்கு எப்படிப்பட்ட வாழ்கை அமைச்சுக் குடுக்கனும்னு..” என்று கோவமாய் பேசியவனை சமாளிக்கவே பெற்றவர்களுக்கு பெரும்பாடாய் ஆனது.

அப்போது தான் கந்தவேலு, எழில் வந்து தன்னை சந்தித்ததையும், தன்னிடம் பேசிய விசயங்களையும் கூற, சரியாய் அதே நேரம் சுபஸ்ரீயும் அவள் கணவனும் வந்தனர்.

இது ஒன்றே போதாதா பிரச்சனை பற்றிக்கொண்டு எரிய..

“அப்போ நான் அன்னிக்கு அவ்வளோ சொல்லியும் நீங்க யாரும் என் பேச்சுக்கு மரியாதை குடுக்கலைல.. பாத்துக்கிறேன்...” என்று மணிகண்டன் கத்திவிட்டு செல்ல,

ஓய்ந்துபோய் அமர்ந்துவிட்டார் கந்தவேலு..

மகனுக்கும் மருமகனுக்கும் இடையில் சிக்கிக்கொண்டு முழிப்பது போதாது என்று, மகளின் மனதில் இருக்கும் ஆசை வேறு அவரை போட்டு பாடாய் படுத்தியது.

எழிலின் நிறைகள் அனைத்திற்கு முன்னும் அவன் காலில் இருக்கும் பிரச்சனை ஒன்றுமே இல்லை என்பது போல் தோன்றியது. அதுவும் கூட எப்படியும் சரியாகிவிடும் ஒன்றுதானே என்று எண்ணிய மனதை, மீண்டும் அவர் புதல்வனே தொல்லை செய்தான்.

“பாத்தீங்களா ப்பா. அந்த குடிகாரனுக்கு குடுக்கனும்னு எவ்வளோ சவடாலா பேசிட்டு போறார்னு.. ஒத்துக்கிறேன் ப்பா, மது கல்யாணத்துக்கு முன்னாடி நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்புதான். ஆனா அதுக்காக அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு குடுக்கனும்னு எனக்கும் எண்ணம் இருக்காதா...”

அவன் சொல்வதும் சரிதான்.

ஆனால் அனைத்திற்கும் மீறி மது விரும்பிவிட்டாளே..

நடக்கும் அனைத்தையும் மதுஸ்ரீ பார்த்துக்கொண்டு தான் இருந்தாள். அவளது மனவுணர்வுகள் சொல்லி மாளாது. அண்ணன் சொல்வது சரிதான், தந்தை தயங்குவது சரிதான். வீட்டினர் சொல்லும் கரணங்கள் அனைத்தும் சரிதான். ஆனால், இத்தனை சரிதானுக்கும் தாண்டி அவளது மனதில் எழிலரசன் அல்லவா சிம்மாசனமிட்டு இருக்கிறான்.

ஒருமுறை அவனுக்கு அழைத்து இதையெல்லாம் கூறிவிடலாமா என்று தோன்றிய மனதை கடினப்பட்டே அடக்கினாள். தேவையில்லாமல் எழிலரசனை சஞ்சலப்படுத்த கூடாது. தன்னை மீறி வீட்டில் எந்த முடிவும் எடுத்திட முடியாது என்ற எண்ணம் மனதில் மின்னல் வெட்ட இன்னும் பொறுமையை கடைபிடித்தாள்.

ஆனால் எழிலரசன் ஒன்றும் சும்மா இருக்கவில்லை. மெல்ல மெல்ல மிக நிதானமாய் கைகளை நகர்த்தினான். அதன் முதல் படிதான் தங்கள் ஹோட்டலுக்கு கந்தவேலு மூலமாகவே சரக்குகளை தருவிக்க ஏற்பாடு செய்திருந்தான். இதன்பொருட்டு கந்தவேலுவை அடிக்கடி சந்தித்தான். பேசினான்.

மதுவின் திருமண விசயத்தை பற்றி தயங்காமல் மனதில் இருப்பதை கந்தவேலு அவனிடம் ஆலோசிக்கும் அளவிற்கு அவரை மாற்றியிருந்தான்.

மதுவின் குடும்பத்தில் அவனுக்கு உதவக்கூடிய இன்னொரு ஆள் பாஸ்கர். கஞ்சன் என்றாலும் மற்ற விசயங்களில் சற்று புரிதல் உள்ள ஆள் என்று முதல் நாளே அவனுக்கு தோன்றியது. அடுத்த முயற்சி பாஸ்கர் என்று முடிவெடுத்தான். பாஸ்கர் வேலை செய்வது ஒரு கூட்டுறவு வங்கியில். ஆகையால் அங்கேயே சென்று அவனை காண்பது என்று முடிவெடுத்துக்கொண்டான்

“ஹலோ சார்.. எப்படி இருக்கீங்க..?? என்னை அடையாளம் தெரியுதா ??? ” என்று சிரித்தபடி தன் முன்னே வந்தவனை கண்ட பாஸ்கருக்கு முதலில் குழப்பம், பின்னே லேசான அதர்ச்சி என்று தோன்றினாலும், அவனும் புன்னகையோடு தான் பதில் கூறினான்.

“வாங்க.. வாங்க.. உங்களை மறக்க முடியுமா... எப்படி இருக்கீங்க?? என்ன இந்த பக்கம்..??”

“ஒரு லோன் விசயமா வந்தேன் சார்.. பார்த்தா நீங்க இருக்கீங்க.. சரி நமக்கு தெரிஞ்சவராச்சேன்னு உங்ககிட்ட ஒரு வந்தேன்..”

“லோனா....???!!!!”

பாஸ்கருக்கு இந்த மாதம் மட்டுமே குறைந்தது ஒரு மூன்று பேரை லோனுக்கு பிடிக்கவேண்டிய நிலை. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று வெகுவாய் கணக்கு போட்டது அவனுள்ளம்.

“ஆமா சார். எங்க ஹோட்டலுக்கு பக்கத்து இடம் ஒன்னு வருது.. வாங்கலாம்னு ஒரு எண்ணம். அதான் லோனுக்கு ஏற்பாடு செய்யணும்.. உங்களை கேட்டா விவரம் தெரியும்னு சொன்னாங்க..” என்று தன்மையாய் பேசியவனை பார்த்தவனுக்கு, ஏனோ ஒரு நல்ல அப்பிப்ராயம் ஏற்பட்டது.

மேற்கொண்டு இருவரும் இதை பற்றி பேசி, என்னென்ன டாகுமென்ட்ஸ் தேவை, என்றெல்லாம் பேசி ஒருவழியாய் லோனுக்கான ஏற்பாடும் ஆனது.

“ரொம்ப தேங்க்ஸ் சார்.. தெரிஞ்சவங்க இருந்தா ஒரு நிம்மதி பாருங்க..” என்று கிளம்பியவன் மீண்டும் ஒரு நன்றியை உரைக்க,

“அட அதெல்லாம் இருக்காட்டுங்க.. சரி உங்க கல்யாண விஷயம் என்னாச்சு...??” என்றான் பாஸ்கர்.

“வாங்களேன் சார் ஒரு காபி சப்பிட்டிட்டே பேசுவோம்..” என்று எழில் அழைக்க, “ஆகா தேவையில்லாமல் இருபது ருபாய் செலவளிப்பதா..” என்று தோன்றியது அவனுக்கு.

அவனோ தயங்கி நிற்க, “வாங்க சார்.. எனக்கு இவ்வளோ ஹெல்ப் பண்ணியிருக்கீங்க, உங்களுக்கு ஒரு காபி கூட வாங்கி குடுக்கலைனா எப்படி??” என்று விடாது அழைத்துச்சென்றவன், தன் திருமண விசயத்தையும் பேசிட தவறவில்லை.
ஆக, பாஸ்கரும் லேசாய் எழில் பக்கம் சாய தொடங்கினான்.

இப்படியாக எழில் ஒவ்வொரு படியாய் முன்னேற, ஒரேதாய் சறுக்கி விழுகும் சந்தர்ப்பமும் வந்து சேர்ந்தது. மதுஸ்ரீயின் ரூபத்தில்.

அன்று பொழுது விடிந்ததில் இருந்தே மதுவின் மனது அடித்துக்கொண்டது. எழிலுக்கு எதுவுமா என்று தோன்ற, யாரும் அறியாமல் அவனுக்கு அழைத்து பேசிவிட்டே வைத்தாள். அவனோ எதோ தங்கள் பழைய நிலம் விசயமாய் ஊருக்கு செல்வதாகவும், அங்கே போன் சிக்னல் கிடைக்காது என்றும், தானே வந்து இரவு பேசுவதாகவும் கூறிவிட்டு தான் சென்றான்.
தன்னறையை சுத்தம் செய்து கொண்டிருந்தவளை அலைபேசி சத்தம் அழைக்க, ஒருவேளை எழிலாய் இருக்குமோ என்ற ஆவலோடு எடுத்தால் அது சுபஸ்ரீ பெயரைக் காட்டியது.

“என்னக்கா...??!!!”

“மது அம்மா இருந்தா குடு டி.. சீக்கிரம்...” என்றவளின் குரலிலோ அத்தனை பதற்றம்.

“என்னக்கா என்னான்னு சொல்லு.?? அம்மா காய் வாங்க போயிருக்கு.. என்ன பிரச்சனை..??”

“மது, எங்க மாமியாரும், உன் மாமாவும் கிளம்பி அங்கதான் வராங்க டி. நான் எவ்வளோ தடுத்து பார்த்தேன் என்னால முடியல. ஏன் கொழுந்தனுக்கு கேட்க வராங்க. உனக்கே தெரியும்ல, எங்கத்தை பேசினா எப்படி பேசுவாங்கன்னு. கண்டிப்பா பேசியே இதுக்கு அப்பாவ சரி சொல்ல வச்சிடுவாங்க. போதும் டி நான்இந்த குடிகாரன கல்யாணம் பண்ணி வாழ்றதே.. எதையாது செஞ்சு இதை நிறுத்திடு மது...” என்ற சுபஸ்ரீயின் குரலில் அத்தனை வேதனை.

இவளுள்ளும் இத்தனை எண்ணங்களா?? என்று நினைக்க தோன்றியது மதுவிற்கு.

“என்னகா சொல்ற....???!!!!”

“நான் சொல்றதை சொல்லிட்டேன். இதுக்கு மேல உன் சாமர்த்தியம். அம்மாகிட்ட சொல்லிடு... ” என்று அவள் அழைப்பை துண்டிக்க, இவளுக்கோ இருதயம் பந்தயக் குதிரை ஆனது.

என்ன செய்வது???? இது ஒன்றை தவிர வேறு எதுவும் அவளுக்கு தோன்றவில்லை. எழிலுக்கு அழைத்துப்பார்த்தாள் எந்த பயனும் இல்லை. மணிகண்டனின் அன்னையை பற்றி நன்கு தெரியும். எப்படியும் பேசி கந்தவேலுவை சம்மதிக்க வைத்துவிடுவார்.

“கடவுளே ஒருநல்ல வழி காட்டுப்பா..” என்று வேண்டிக்கொண்டு இருந்தவளுக்கு சிறிது நேரத்தில் வெளியே பேச்சுக்குரல் கேட்டது.கந்தவேலுவிடம் வருவதை தெரிவித்துவிட்டே தான் வந்திருப்பார்கள் போல. அவரதும் குரலும் கேட்டது.
இப்பொழுது வெளியே செல்வதா வேண்டாமா என்று யோசனையில் இருந்த மதுவிற்க்கு மனதில் சட்டென்று எண்ணம்.

சுபஸ்ரீயின் மாமியாரோ அத்தனை அழகாய் கந்தவேலு பேசுவதை எல்லாம் சமாளித்து தான் சொல்வதையே சொல்லிக்கொண்டு இருந்தார்.

கந்தவேலு தன்மையாகவே பேச, “அட இருக்கட்டுங்க சம்பந்தி, நான் நேரா மதுக்கிட்டயே பேசுறேன்.. சுபஸ்ரீ என்ன சந்தோசமா பிழைக்கலையா??” என்று கூறியபடியே “மது மது....” என்று அழைத்தபடி வந்தார்.

அவரது பின்னாடியே வந்த கந்தவேலுவும், பாக்கியமும் கூட மதுவின் அறையை பார்த்தவர்களுக்கு அத்தனை அதிர்ச்சி..
 
:love: :love: :love:

என்னாச்சு??? மது எஸ்ஸாகிட்டாளா???

எழில் moves (y)(y)(y)
அதுவும் அந்த காபிக்கு 20 ரூபாய் :p:p:p இப்படியும் இருக்காங்க.......
அண்ணனுக்கும் மாப்பிள்ளைக்கும் என்ன வேண்டுமாம்???
அப்பா strongகா பேசலைனா இப்படித்தான் தடியெடுத்தவனெல்லாம் தண்டல் காரன் ஆகிடுவான்.....
 
Last edited:
Top