Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேன்மழை தூவுதடி 4

Advertisement

Shanvi

Tamil Novel Writer
The Writers Crew
மழைத்துளி 4

ஆதியின் முத்தம் தந்த சிலிர்ப்பில் உடல் நடுங்க நின்றவள் , தன்னைச் சமன் செய்துக்கொண்டு அமைதியாக நிற்க , அவனேப் பேச ஆரம்பித்தான்.

"அப்போ கார்ல உன்னைக் கிஸ் பண்ணேனே….அது......" என்றவன் , இப்போது அவளை சட்டென்று இடக்கையால் இடுப்போடு அணைத்து , வலக்கையால் அவள் தாடையைப் பிடித்து … பெருவிரலால் அவள் உதடுகளை அளந்தவன் ,

"அப்பவும் இங்க கிஸ் பண்ண தான் வந்தேன் … அது ஜஸ்ட் மிஸ்...." என்றவன் , அவளை மெல்ல விடுவித்து , கைகளை கட்டிக் கொண்டு விளக்குகளால் இருளிலும் ஜொலித்துக் , கம்பீரமாக நின்றுக் கொண்டிருந்த வள்ளுவரைப் பார்க்க ஆரம்பித்தான்.

"அம்மா சொல்லிருப்பாங்க நினைக்கிறேன் … நான் … நான் மாலைப் போட்டு ஐயப்ப விரதம் இருக்கலைனாலும் , என்னோட ஃபிரண்ட்ஸ் … ம்ம் இப்பக்கூட கீழப் பார்த்தியே வேந்தன் .. அவன் என்னோட காலேஜ் மேட் தான் .. அப்புறம் இந்த ப்ராஜக்ட் ஆரம்பிச்சதுலருந்து என் கூட தான் இருக்கான் … அவன் அப்புறம் இங்க வேலை செய்றவங்க நிறைய பேர் இந்த சீசன் விரதம் இருப்பாங்க … அவங்க முன்னாடி நானும் சுத்தமா இருக்கணும்னு …. புரியும்னு நினைக்கிறேன்" என்றவன் மறுபடியும் அவள் புறம் திரும்பி ,

"நானும் சாதாரண மனுஷன் தானே… எந்தப் பொண்ணையும் காதலிச்சது இல்லனாலும் ….சைட்க் கூட அடிச்சிருக்க மாட்டேன்னு நினைக்கிறியா …." எனக் குறும்புச் சிரிப்போடு புருவம் உயர்த்திக் கேட்க ,அவளோ கண்களை அகல விரித்து அவனைப் பார்க்க ,

"வா….வ்.. உனக்கு பியூட்டிஃபுல் ஐஸ் ... .."பட்டென்று விழிகளைத் தாழ்த்திக் கொண்டவளிடம், புன்னகைத்துக் கொண்டே …

"கல்யாணம் பண்ணி வொய்ஃப இப்படி கைகட்டி சும்மா பார்த்துக்கிட்டு இருக்கிற அளவுக்கு நான் நல்லவன்லாம் இல்லத் தெரியுமா ….பேட் பாய் … கண்டது கேட்டது இதெல்லாம் எப்படினு தெரிஞ்சுக்கணும்ன்ற ஆர்வம் இருக்கிற சாதாரண மனுஷன்… எங்கம்மா அப்பா வேற என்னைய ரொம்ப நல்ல பையனா வளர்த்துட்டாங்க … இதெல்லாம் தெரிஞ்சுக்க வொஃய்ப் வரட்டும்னு வெய்ட் பண்ற அளவுக்கு நல்லப் பையனா ......" என்று நெருங்கி அவள் முகம் பார்க்க....

முகம் சிவந்து போனவள் அறைக்குள் செல்லத் திரும்ப ,

"என்னையப் போய் இப்போ கல்யாணம் பண்ணுனு சொன்னதும் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகிட்டேன்.... ரெண்டு நாள் முன்னாடி தான் உன்னையப் பார்த்துருக்கேன்...." அப்படியே திரும்பாது நின்றுக் கொண்டிருந்தாள்.

" உன்னைய லவ் பண்றேன்னு என்னால நிஜமா சொல்ல முடியாது …. ஆனா உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு …. உனக்கும் என்னையப் பிடிக்கலாம் சூழ்நிலை நம்மள இணைச்சிருச்சு ....சோ நார்மல் லைஃப்ல நாமளும் என்டர் ஆகலாம்னு நினைக்கிறேன்.... நம்ம ஊர்ல நிறைய கல்யாணம் ஒருத்தருக்கொருத்தர் பிடிச்சிருக்கானு தெரியாம பெரியவங்க சொல்றதுதானக் கேட்கிறாங்க ….அது போல தான் நம்ம கல்யாணமும்னு நினைச்சுக்குவோம்… "

அறையினுள் நுழைந்தவன்அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த அவர்களது குடும்பப் புகைப்படம் அருகில் வந்து பார்த்துக் கொண்டே ,

"எங்கம்மா சொல்லுவாங்க .. எங்க தாத்தா, அதாவது எங்கம்மாவோட அப்பா , பொண்ணுங்க படிக்கணும்னு படிக்க வச்சாலும் , கல்யாணம்னு வர்றப்போ எங்கப்பாவோட ஃபோட்டோவக் கூட காட்டலயாம்..... கல்யாணம் முடிஞ்சு மாப்பிள்ளை வீடு வந்த பிறகும் ,வேட்டி சட்டைல எல்லா அண்ணன் தம்பிங்களும் ஒரே மாதிரி இருக்க அழுகையே வந்துருச்சாம்.... யார் தாலி கட்டுனதுனுத் தெரியாம "அவளிடம் திரும்பி ,

"நாங்கக் கூட கேட்போம் … நீங்க தாலி கட்டும் போது நிமிர்ந்து முகத்தை பார்கலாயானு….அதுக்கு முதல்ல பயம் இருந்தது ….அவர் கைய பிடிச்சு என் கைல வச்சதும் வெக்கம் வந்து நிமிர முடியலனு சொல்வாங்க… " சொல்லிவிட்டுச் சிரித்தவன் ,

"நல்ல வேளை நீயாவது என் முகத்தை பார்த்தியே ...." என்றுப் புன்னகைத்தான்.

"ஆனா எங்கப்பா அம்மா போல ஒரு லவ்வபிள்….க்யுட் கபிள் பார்க்க முடியாதுனு தான் சொல்வேன்....அது போல ஒரு வாழ்க்கைய தான் நாமளும் வாழனும்னு ஆசைப்படுறேன்.... இப்ப அவசியமில்லாத கேள்விதான்… இருந்தாலும் கேட்கிறேன்.. என்னைய உனக்கு பிடிச்சிருக்கா " என்று கண்களில் கனவு மின்ன ரசனையோடும் புன்னகையோடும் சொல்லிக் கொண்டே , அவள் முன் வந்து நின்றவன் அவள் கலங்கிய விழிகளைப் பார்க்க ,

" ஹேய்... என்னாச்சு …இப்ப அவசியமில்லாத கேள்விதான்… இருந்தாலும் கேட்கிறேன்.. என்னைய உனக்கு பிடிச்சிருக்கா, நீ கண் கலங்கிறதப் பார்த்தா …ஒரு வேளை கட்டாயத்துல … "

தலையை இல்லை என்பது போல் மெதுவாக அசைத்தவள் ,

"என்னைய உங்களுக்கு பிடிச்சிருக்கு சொன்னீங்க தானே.... அது போல எனக்கும் உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு , ரொம்ப ரொம்ப .... பிடிச்சிருக்கு..." என்று விழிகளில் நீர் தேங்க வாயசைத்துக் கொண்டே …. சைகையாலும் கைகளை விரித்தவளின் அருகில் புன்னகையோடு நெருங்க , ஒரடி பின்னால் நகர்ந்தவள்….

"விரதம்னா நீங்க எப்படி இருப்பீங்க ....."
"அது ....." என்றவன் அவளைப் மென்னகையோடு,

"ம்... நான் ஸ்மோக் பண்ண மாட்டேன்.... ஏன்னா எனக்கு ஸ்மெல் ஒத்துக்கல, ஸ்கூல் டேஸ்ல ஃபிரண்ட்ஸ்க் கூட ட்ரை பண்ணிப் பார்த்துத்துட்டு விட்டுட்டேன்..... ஆனா ட்ரிங்ஸ் ....." என்றவன் , விரிந்த புன்னகை ஒன்றைத் தந்து அவள் விழிகளை அசைய விடாது செய்ய ,

ஆனால் அந்த வார்த்தையிலயே விழிகளை வேறு புறம் கொண்டு சென்றவளிடம்,

"அந்தப் பழக்கம் இருக்கு … ஆனா அப்பப்போ பார்ட்டி, மீட்டிங்னு , இப்படி ஃபிரண்ட்ஸா சேர்ந்தா உண்டு … ஆனா எல்லாமே லிமிட் தான்... உனக்கு பிடிக்காதுதான்… ஆனா இனி தொட மாட்டேன் , அப்படி இப்படினு எல்லாம் என்னால சொல்ல முடியாது …. எனக்கே என்னைக் கன்ட்ரோல் பண்ணத் தெரியும் …. புரிஞ்சுப்பனு நினைக்கிறேன்.... " என்றதும் தலையாட்டியவளிடம்,

"ஆன்.... இது ஏன் சொல்ல வந்தேன்னா , இதெல்லாம் அவங்க கோவிலுக்குப் போய்ட்டு வர்ற வரை நிப்பாட்டிடுவேன். சாப்பாடும் அப்படித்தான் … கொஞ்சம் கடவுள் நம்பிக்கை உண்டுங்கிறதால யாரையும் காயப்படுத்தாம பேசுறது… இப்படி இதெல்லாம் ஃபாலோ பண்ணுவேன். இப்ப கல்யாணம் வேற பண்ணியாச்சு …. சோ உடல், மனம் ரெண்டும் சுத்தமா இருக்கணும்னு நினைக்கிறேன்.... என்னைப் பொறுத்த வரைக்கும் இப்படி விரதம் இருக்கிறதுதான்…" என்றுப் புன்னகைத்தவனின் அருகில் வந்து ஒரு அழகான புன்னகையை உதட்டிலும் கண்களிலும் காட்டி , அவனுக்கு புரியும் என்ற நம்பிக்கையில் ,

"நானும் விரதம் இருக்கிறேன் … உங்களுக்காக.... உங்களோடு சேர்ந்து … எனக்கும் சில கட்டுப்பாடுகள் போட்டுக்கிறேன். .... எந்த வகையிலும் உங்கள டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்….உங்க ஃபிரண்ட்ஸ் கோயிலுக்குப் போய்ட்டு வர்றவரைக்கும் … "

"ஹேய் .. என்னப் இப்படி சொல்ற … கட்டாயம் கிடையாது....வே .."

அதற்குள் அவன் உதடுகள் மேல் இவளது வலது கையின் வெண்டைப் பிஞ்சு விரல்கள் இருந்தன. தலையைப் பேசாதே என்பது போல் அசைத்து ,

"உங்கள எனக்கு கொடுத்த கடவுளுக்கு நானும் நன்றி சொல்லிக்கிறேன் ….குட் நைட்" என்று வாயசைத்தவள் … கையை எடுத்து விட்டு , அழகாகப் புன்னகைத்துக் கொண்டே அவனைச் சுற்றிக் கொண்டு கதவருகேச் சென்றாள்.

அவளது விரல்களின் மென்மையில் தன்னை மறந்து அவளையேப் பார்த்துக் கொண்டிருக்க ,கரம் விலகவும் உணர்வுக்கு வந்து … பலத்த சிரிப்போடு,

" நிஜமாவா…. ரெண்டே நாள்ல எனக்காக விரதம் இருக்கிற அளவுக்கு என்னைப் பிடிச்சிருச்சா என்ன… அப்படி என்ன பிடிச்சது என்கிட்ட" என்றுப் புன்னகைக்க ,

இப்போது அவன் விழிகளோடு தன் விழிகளை நன்கு கலக்கவிட்டவள் , நீர் கோர்த்த விழிகளாலயே , "ஆம்" எனத் தலையசைத்து ,

"இப்ப நீங்க சொன்னீங்க தானே… என்னைப் பிடிச்சிருக்குனு.. ஏன் என்னைப் பிடிச்சது … "

"அது… ஏன் ….இப்படிலாம் கேட்டா எனக்குச் சொல்லத் தெரியாது " எனப் புன்னகைக்க , அவளும் புன்னகையோடு ,

"என்னைய மட்டுமல்ல .. உங்கம்மாவ உங்களுக்கு ஏன் பிடிக்கும்னு உங்ககிட்ட கேட்டா காரணம் சொல்வீங்களா … இல்லைதானே.. அது போல தான் எனக்கும் ....."ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தவனிடம் ,

"ஒருத்தரை ஏன் பிடிக்கலனு சொல்ல காரணங்கள் இருக்கலாம் … அதுக்கு ரெண்டு நாள் இல்ல ரெண்டு மாசம் , ரெண்டு வருஷம் கூட டைம் எடுத்துக்கலாம்….. ஆனா ஏன் பிடிச்சதுனு சொல்ல காரணங்கள் தேவையில்லயே … அப்ப ரெண்டு நாள் என்ன ரெண்டு செகண்ட் கூடப் போதும் தானே.... " பேசக் கஷ்டப்பட்டு அவள் சைகையாலும் குரலை அதிகமாக ஒலி எழுப்பவும் முயற்சித்ததாலும் மூச்சு வாங்க நின்றவளின் தோள்களைத் தொட்டு ,

" ரிலாக்ஸ் … ரிலாக்ஸ் ... " என சமாதானப் படுத்தியவாறே ,

"என்னடா இது ரெண்டே நாள்ல என்னைய ரொம்ப பிடிச்சிருக்குங்கிறா … எனக்காக விரதம்லாம் இருக்கிறேன்ங்கிறா ….ம்மா பதி பக்தில நீங்க தோத்துட்டீங்க உங்க மருமககிட்ட " என நினைத்துக் கொண்டே , அவள் கன்னத்தில் கை வைத்து மென்மையாகத் தட்டிப் புன்னகையோடு, "குட் நைட் " என்று விட்டு அவனறைக்குச் சென்றான்.

ஆதி சென்றதும் கதவை அடைத்து அதன் மேல் சாய்ந்து நின்றவள் அப்படியே தரையில் அமர்ந்து முழங்காலைக் கட்டிக் கொண்டு அதில் முகம் புதைத்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள். இத்தனை நாட்களாக நெஞ்சில் இருந்த பாரம் இறங்கி மனம் காற்றில் பறப்பது போல் இருந்தது .

அவளது மகிழ்ச்சியை வாய் திறந்து யாரிடமாவது சொல்ல வேண்டும் போல் இருக்க , துப்பட்டாவால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே , மொபைலை எடுத்து டையல் செய்தவள்…. பின் மணிப் பார்க்க அது இரவு ஒன்று என்பதைக் காட்டவும். சட்டென்று கட் செய்தவள், முத்த ஸ்மைலிகள் சிலவற்றை வாட்ஸப்பில் அனுப்பினாள்.

பின் அவன் நின்ற அவர்கள் குடும்ப புகைப்படம் முன்பு நின்று ஆதியையே விழியகற்றாது பார்த்தவள் , தன் மொபைலில் அவனை மட்டும் போட்டோ எடுத்துக் கொண்டாள். எவ்வளவு நேரம் மொபைலில் அதைப் பார்த்துக் கொண்டேப் படுத்தாளோத் தெரியாது … கதவு வேகமாகத் தட்டப்படும் சத்தத்தில் தான் விழித்தாள்.
அரக்கப்பறக்க எழுந்தவள் கதவைத் திறக்க , அலுவலகம் செல்லும் உடையில் கையில் ஒரு காஃபி கோப்பையுடன்,

"தேங்க்ஸ் " என்றான். "ஏன் " என்பதாக விழித்தவளிடம் ,

" கதவு லாக் பண்ணல … அதுக்குத் தான் " என அழகாக சிரிக்க , பதில் புன்னகையைத் தந்துக் கொண்டே தலையைத் திருப்பி சுவற்றைப் பார்க்க அது காலை பதினொன்றைக் காட்டிக் கொண்டிருந்தது.


திரும்பி அவனைப் பார்த்து "சாரி ரொம்ப நேரம் தூங்கிட்டேன்" என்று வாயசைப்பாலும் சைகையாலும் சொல்ல , அதுவும் அவள் கண்கள் மூடித் திறந்த அழகில் லயித்தவன் , அறையினுள் வந்துக் கொண்டே ,

"நானும் இப்போதான் எழுந்தேன் …. சாரி … நான் சென்னை வந்துட்டு ரெண்டு நாள்ல திரும்பிருவேன்னு எந்த வேலையையும் நிப்பாட்டல … எல்லாம் பிரேக் இல்லாம போய்ட்டுருக்கு …. இதெல்லாம் யோசிச்சு தான் நான் இப்போ கல்யாணம் வேண்டாம் சொன்னது.

பகல்ல உனக்கு துணையா வேந்தன் வொஃய்ப் இருப்பாங்க.... இவ்வளவு நாள் லேட் நைட்ல தான் வருவேன். இனி உனக்காக கொஞ்சம் முன்னாடியே வாறேன். … "இவன் பேசப்பேச ஒரு வித அவஸ்தையாக தலையாட்டிக் கொண்டிருந்தவளிடம் ,

"என்னாச்சு... " எனப் புருவம் சுருக்கி கேட்க , அவன் பின்னால் எக்கிப் பார்க்க , அவனும் என்னவென்று திரும்பிப் பார்க்க , அதற்குள் குளியலறைக்குள் நுழைந்து விட்டாள்.

அவள் அவஸ்தைக்கான காரணம் புரிந்துக் கொண்டவன் முறுவலித்துக் கொண்டே கதவைச் சாத்திவிட்டு சென்றான்.

கீழே டைனிங் டேபிளில் அமர்ந்து கைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தவன் அருகில் அழகிய பிங்க் நிற சில்க்காட்டன் புடவையில் வந்து நின்றவளைக் கண்டவன் , இமைக்கவும் மறந்து பார்த்துக் கொண்டிருக்க ,

"சாப்டீங்களா" என்றுக் கேட்டவளிடம்,

"ரொம்ப அழகா இருக்க... " என்றான்.

முகம் சிவந்த போதும், ஒற்றை விரலை உதட்டின் மேல் வைத்து கரம் கூப்பி இறைவனை ஞாபகபடுத்தி விட்டு ராகவி கொண்டு வந்து வைத்துவிட்டுப் போன உணவுப் பதார்த்தங்களை பரிமாறலானாள்.

"ஓ.... சாரி .. நீ சாப்பிடு … பெரும்பாலும் பிரேக்ஃபாஸ்ட் நானே செஞ்சு சாப்பிட்டுக்குவேன்… மற்ற நேரம் எல்லாம் ஆஃபிஸ்ல தான் .... அம்மா வீட்ல சமைக்க ஆள் ஏற்பாடு பண்றேன்னாங்க... நாந்தான் வேண்டாம் சொல்லிட்டேன். பெரும்பாலும் தூங்க மட்டும் தான் இங்க வர்றதே …வீடு க்ளீன் பண்ண மட்டும் இப்ப ஆட்கள் வருவாங்க.. இனி நீ எப்படி செய்யறியோ அப்படி .. இன்னும் ஆறு மாசம் தான் அதுக்கப்புறம் நம்ம வீட்டுக்குப் போயிடலாம் … இது நம்ம ஃபார்ம் ஹவுஸ்தானே … "

அவன் சொன்னதற்கெல்லாம் தலையாட்டியவளிடம்,

" இப்படித் தலையாட்டாதே சத்தம் கம்மியா வந்தாலும் ஏன் சத்தமே வரலனாலும் நீ பேச ட்ரைப் பண்ணு ஒகே … "

தலையாட்டப் போனவள் "சரி" என அவனைப் பார்த்துச் சொல்ல , விரித்து விடப்பட்டிருந்த நீளக் கூந்தலிலிருந்து நீர் அவள் முதுகையும் புடவையையும் நனைக்க ஆரம்பித்தது… எழுந்து லேப்டாப்பை பையில் வைத்து தோளில் போட்டுக் கொண்டவன் , அவள் அருகில் மிகவும் நெருங்கி வந்து ,

" தலைய நல்லா துவட்டிக்கோ, என்னோட ரூம்ல …ம் .... இல்ல நம்ம ரூம்ல ஹேர் டிரையர் இருக்கும் யுஸ் பண்ணிக்கோ .... நான் வாறேன்…."

அவன் எழவும் அவளும் எழுந்திருந்ததால் மிக நெருக்கத்தில் நின்றவனிடம் உடலும் மனமும் தடுமாறவும் ,

" இதை தள்ளி நின்னே சொல்லியிருக்கலாம்..." என்று நினைக்க…

நடக்க ஆரம்பித்தவன் திரும்பி அருகில் வந்து "தள்ளி நின்னே சொல்லிருக்கலாம்னு தோணுதோ "

அவள் கண்கள் விரியப் பார்க்க , "என்னோட அசிஸ்டென்ட் ஒரு பொண்ணு என் பக்கத்துல வரும் போதெல்லாம் … ம்ஹா" என்று கண்கள் மூடி மூச்சை இழுத்தவன் ,

"இந்த ஸ்மெல் தான் வரும் … நீயும் அந்த சோப்பு ஷாம்பூ தான் யுஸ் பண்றப் போல...." என்றுக்கண் சிமிட்ட ,

விரிந்திருந்த கண்கள் இப்போது சுருங்கி அவனைப் பார்ப்பதை தவிர்க்க , மறுபடியும் அருகில் நெருங்கியவன் , அவள் காதருகே குனிந்து ,

" கை கால்கள் அசைவு கொடுக்கிறதுதான் டான்ஸ்னு நினைச்சுட்டு இருந்தேன் …. இல்ல கண்களும் நாட்டியம் ஆடும்னு உன்கிட்டதான் தெரிஞ்சுக்கிறேன்.... லவ்லி ஐஸ் …. அப்புறம் என்கிட்ட லேடி ஸ்டாஃப்ஸ் யாரும் கிடையாது.... அப்படியே இருந்தாலும் வேலையைத் தவிர வேற எதுலயும் இதுநாள் வரை கவனம் சிதறனுதேக் கிடையாது….உன்னோட நயன நாட்டியம் பார்க்க சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்…. நினைச்ச மாதிரியே ரொம்ப ரொம்ப ரொம்ப அழகாயிருக்கு ... " என்று ரசனையாகப் புன்னகைத்துவிட்டு கிளம்பிக் காருக்குச் சென்றவனையே வைத்தக் கண் வாங்காதுப் பார்த்துக் கொண்டிருக்க….

காரினுள் ஏறியவன் மறுபடி இறங்கி அவளருகில் வர … கண்களைச் சிமிட்டிக் கொண்டவளிடம்….

"அது …சாரி …நாம அறிமுகம் ஆகி மூணு நாள் தான் ஆச்சு.... எனக்கு உன் ஃபோன் நம்பர் தெரியல.... நம்ம வீட்ல யார்கிட்டயும் கேட்டு வாங்கினா பல கேள்விகள் வரும் .. அதுதான் காலைல உன்னைக் கூப்பிட கதவைத் தட்ட வேண்டியாதாகிருச்சு .... "

கையை நீட்ட , "என்ன " என்பதாக விழித்தவனிடம் , பதில் சொல்லாது அவன் சட்டையிலிருந்து உரிமையாக அவளே மொபைலை எடுத்து அவள் எண்ணுக்கு டயல் செய்துக் கொடுத்தாள். அவளது இதழ் விரியாத புன்னகையில் மெய் மறந்து நின்றவன், மொபைலை வாங்கிக் கொண்டே,

"அப்புறம் இன்னொன்னுக்கும் சாரி கேட்டுக்கிறேன்….நீ ட்ரைனிங்ல இருந்த சொன்னாங்க... என்ன ட்ரைனிங்… என்ன படிச்சிருக்க , இல்ல படிச்சிட்டுருக்கியா … இல்ல … வேலைப் பார்க்குறியா..."

இப்பொழுதும் அவனை இமைக்காதுதான் பார்த்தாள் … ஆனால் அதில் என்னைப் பற்றி எதுவுமே தெரியாதா என்ற ஏக்க கேள்வி தான் இருந்தது. எப்போதும் போல் அவள் கண்களைப் படித்தவன் , அவளருகில் நெருங்கி வந்து சேலை முந்தியைப் பற்றியிருந்த அவளது மென்கரத்தினைப் பற்றிய தன் திடகரங்களுக்குள் பொதிந்தவன் ,

"நாம நிறையப் பேசணும் , ஆனா எனக்கு இப்ப நேரமே இல்ல … இந்த ப்ராஜக்ட் என்னுடைய நெடு நாள் கனவுடா.... என் கவனம் எல்லாமே அதுலதான் … அதுனாலதான் நமக்கு கல்யாணம்னு முடிவானப் பிறகுக் கூட உன்னையப் பத்தித் தெரிஞ்சுக்கனும்னு ஆர்வம் வரல ..... அதுக்கு பதிலா இங்க என்ன நடக்குது அப்படிங்கிற எண்ணம் தான் ..... ப்ளீஸ் என்னைப் புரிஞ்சுக்குவனு நினைக்கிறேன்…." நேரம் பார்த்து விட்டு அவள் கையை தட்டிக் கொடுத்து ,

"நைட் பேசுவோம்" என்று விட்டுச் சென்றான். மனம் சுணங்கினாலும் அவன் கொடுத்த விளக்கத்தில் அவன் குணமே அதுதான் என்பதைப் புரிந்துக் கொண்டாள்.
போர்டிக்கோ வாசலில் நின்று அவன் கார் மறையும் வரையும் பார்த்தவள் உள்ளே நுழையப் பார்க்க ,

"த்தா " என்ற மழலையின் குரலில் திரும்பிப் பார்க்க , வேந்தன் ராகவியின் பதினோரு மாதக் குழந்தை ஸ்ருதி அழகான தளிர் நடையில் இவளை நோக்கி வந்துக் கொண்டிருந்தாள்.

மலர்ந்த முகத்தோடு அருகில் சென்று "அத்தை சொல்றீங்களா … நீங்க அத்தை சொல்றீங்களா...."காற்றாக மட்டுமே வந்தக் குரலில் கொஞ்சியவளைப் பார்த்த ராகவி , சங்கடத்தோடு…

"சாரி அண்ணி … இப்ப காலைல தான் அண்ணன் சொன்னாங்க… " என்று அவளுக்கு சைகையோடு புரிய வைக்க , அவள் கையைப் பிடித்துக் கொண்ட அமிர்தா ,

"எனக்குப் பேச்சு தான் சத்தம் கம்மியா வரும் … காது நல்லா கேட்கும் … " என்று ராகவியின் முகம் பார்த்து நிறுத்தி நிதானமாக புன்னகையோடுச் சொல்ல.. அதைக் கேட்ட ராகவி ,

"ஓ... அப்படிங்களா ….அப்போ சரி … இங்க வேலைக்கு வர்ற ஸ்டெல்லா அக்காவும் ,வரதண்ணா அம்மாவும் தான் நான் பேசுறத கேட்கிறதுக்கு… ஏன்னா வேற லேடீஸ் இங்க இல்லயே … ஆனா ஸ்டெல்லாக்கா வேலைய முடிச்சிட்டு போயிருவாங்க , லஷ்மி ஆன்டி டீவி சீரியல் பார்ப்பாங்க … இப்ப நீங்க வந்துட்டீங்க … நீங்களாவது நான் பேசுறத கேட்க இருக்கீங்களே அது போதும் எனக்கு …."

இப்படிப் பேசும் ராகவியை அமிர்தாவிற்கு பிடித்துப் போனது.புன்னகையோடு அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவளிடம் ,

அப்புறம் அண்ணி நாங்க அன்னைக்கு சென்னைக்கு வந்தப்போ பொண்ணு பின்னாடி உங்களையும் பார்த்தோமே … நீங்க ரொம்ப அழகுனு பேசிக்கிட்டோம் … ஆனா ஆதி அண்ணா கல்யாணம் பண்ணியே கூட்டிட்டு வருவாருனு நாங்க எதிர்பார்க்கவே இல்ல … " இப்படியாக ராகவியுடனும் அவள் குழந்தையுடனும் பொழுதைக் கடத்தியவளுக்கு , அவளது அப்பாவிடமிருந்தும் ,தோழியிடமிருந்தும் வாட்சப் மெசேஜ் வந்திருந்தது.

இருவருக்கும் புன்னகையோடு மெசேஜிலயே பதிலளித்தவளுக்கு மாமியாரின் அழைப்பு வரவும், காதில் எடுத்து வைத்தவளுக்கு எதிர் முனையில் பேசியவர்களுக்கு பதிலளிக்க முடியாது கண்ணீர் வர ஆரம்பித்தது. சட்டென்று அழைப்பைத் துண்டித்து விட்டு மெசேஜ் செய்தாள்.

குழந்தையை உறங்க வைப்பதற்காக ராகவி சென்று விட .. மூன்று மணியளவில் அமிர்தாவின் கைப்பேசியில் ஆதியிடம் இருந்து அழைப்பு வந்தது ,

ஆங்கில முதல் எழுத்து மட்டுமே ஒளிர்ந்த மொபைலை ஆர்வத்துடன் எடுத்துக் காதில் வைக்க ,

"நெட் ஆன் பண்ணி வீடியோ கால் வா", தன்னைப் புரிந்துக் கொண்ட கணவனின் அன்பில் நெகிழ்ந்தவள் ,

அவன் சொன்னதை உடனேச் செய்தாலும் வீடியோவில் அவன் முகம் காணச் சற்று நாணமாகவே இருக்க … அதைக் காட்டாது … போனைப் பார்க்க , திரையில் வந்தவன் ,

"சாப்டியா" … "ம்... நீங்க " என்பதாக தலையாட்ட , " நீங்க சாப்டீங்களா "என்பதை சைகையாலும் கேட்க ..

"வாயால பேசு.... அதுக்குத்தான் வீடியோ கால் வரச் சொன்னேன் "

"ஓகே.. நீங்க சாப்டீங்களா"

"ம்.... சாப்பிட்டேன்… அப்புறம் அம்மா போன் பண்ணி இன்னைக்கே ஆஃபிஸ் வந்துட்டியானு திட்டு … உன் கூட இருக்கணுமாம் .. என்னைப் பேசவே விடாம திட்டிட்டு உன்கிட்ட பேசுறேன்னு சொன்னாங்க … பேசினாங்களா..."

அவன் பேசப் பேசமுகம் சுருங்கிக் கொண்டே வந்தவள் , "ஆம்" என்பதாக தலையாட்டும் போதே தன்னை மீறி கண்களில் நீர் வந்து விட , போனைக் கட் செய்தவள் , "சாரி" என்ற மெசேஜைத் அனுப்பி விட்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

மறுபடி மறுபடி அவன் அழைக்க , கண்களை நன்கு துடைத்து விட்டுக் கேமராவில் முகம்காட்ட ,

"அழுகுறியா..."

"இல்லை" எனும் போதே கண்ணீர் வந்து விட , வேகமாக திரும்பப் போனவளிடம் ,

"ம்ஹும் முகத்தைக் காட்டு … புரியுது அம்மா உன்கிட்ட பேசியிருப்பாங்க அதுதானே..... அவங்களுக்கு நியாபகம் இருந்திருக்காது … மறந்திருப்பாங்க .. அதுக்குப் போய் அழுவியா… நீ எதுவும் யோசிக்காம …முக்கியமா அழாம இருப்பியாம்… நான் சீக்கிரமா வீட்டுக்கு வந்து உன்னை வெளிய அழைச்சிட்டுப் போவேனாம். " எனச் சிறுக் குழந்தைக்குச் சொல்வது போல் சொல்ல ,

முகத்தில் முறுவல் தோன்ற அவனிடம் பேசிவிட்டு கைப்பேசியை வைத்தவள் , கணவனின் வரவை ஆவலுடன் எதிர்ப்பார்த்து தன்னை அலங்கரித்துக் கொண்டாள்.

இனிமையாக தூவும் .....
 
Top