Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேன்மழை தூவுதடி 3

Advertisement

Shanvi

Tamil Novel Writer
The Writers Crew
மழைத்துளி 3

விக்ரம் குடும்பத்தார் கோவிலில் பூஜைகள் முடிந்து வீடு திரும்ப காரில் ஏறிக் கொண்டு இருந்தனர் .இருள் சூழத் துவங்கிய மாலை நேரம் பெரியவர்கள் வண்டிக் கிளம்பியதும் ,விக்ரம் ஓட்டி வந்த காரில் ஏறப் போன சங்கீதாவிடம் ஓடி வந்த வரு ,

"அண்ணி… திலீபண்ணா இதை உங்க கிட்டத் தரச் சொன்னாங்க " எனச் சிறிய அட்டைப் பெட்டியைத் தந்து விட்டுச் சென்றாள். அதைப் பிரிக்காமலயே சங்கீதா தள்ளி நின்றுக் கொண்டிருந்த திலீபனை வெட்கத்தோடு திரும்பிப் பார்க்க, அவளை விழிகளால் ''வா " என்பது போல் திலீபன் சைகை காண்பித்தான்.அருகில் நின்றிருந்த விக்ரமை சங்கீதாப் பார்க்க,

தங்கையிடம் "போ " என்று அவளை அனுப்பி விட்டு , மொபைலை எடுத்து திலீபனுக்கு அடித்து , "டேய் தாத்தா பார்த்தாங்க அவ்வளவுதான் … இருட்ட வேறப் போகுது... சீக்கிரம் பேசிட்டு அனுப்பு" என்றவன் வித்யாவிடம் ,

" விது நீ கார்ல உக்காரு நான் அத்தைக் கிட்ட ஒரு நிமிஷம் பேசிட்டு வாறேன் "

அவன் செல்லும் போது அங்கே ஓரமாக இருந்த அரசமரத்தடி திண்ணையில் பாய் விரித்து நான்கைந்து இளம் பெண்களை அமர வைத்து சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார் ராணி.

" பொண்ணு இல்ல பொண்ணு இல்லனு ஊர்ல உள்ள எல்லா பொண்ணுங்களையும் சீராட்டுறதே அத்தைக்கு வேலையாப் போச்சு... "மனதினுள் சொல்லிக் கொண்டவன் , அருகில் சென்று ,

"அத்த எனக்கில்லையா...." என்றவாறு அந்த உயரத் திண்ணையில் அவரருகில் அமர ,

" என் மருமவனுக்கு இல்லாததா இந்தப்பா… " என கையிலிருந்த சாப்பாட்டை மருமகன் வாயில் வைத்தார்.

" காலையில பணியாரம் சாப்டியாப்பா… குமார் நீ இராத்திரி நேரங்கழிச்சு தான் வந்தன்னு சொன்னான்."

"சாப்பிட்டுட்டுத்தான் வந்தேன் அத்த" என்றவனுக்கு விக்கல் எடுக்க ஆரம்பிக்கவும் ,

"அம்மு அத்தானுக்கு தண்ணிக் கொண்டு வாம்மா … "அவர் செல்லவும் அதில் அமர்ந்திருந்த பெண்களுள் ஒருவள் தண்ணீர் பாட்டில் ஒன்று எடுக்கச் செல்ல , அவனது அத்தையையும் அவன் மாமா அழைக்கவும் ,

"ஒன்னு எடுத்து தரச் சொன்னாரு …இதோ வாறேன்… ராஜா உட்காரு… பாப்பா நீயும் இரும்மா" என்றவர் வருவையும் விக்ரமையும் அமரச் சொல்லிவிட்டு மற்ற பெண்களை அழைத்துச் சென்றார்.

"ஏய் தக்காளி..பாக்க பீப்பா மாதிரி இருக்க … உன்னையப் போய் எங்கத்த, சித்தி எல்லாரும் பாப்பானு கூப்பிட்டுட்டு இருக்காங்க.... இதுல இத்துனூண்டு வீக்கத்துக்கு உன் சைசிலயே பெரிய கட்டு….இதுல நான் மேல விழுந்தேன்னு யாருகிட்டயும் சொல்லாதனு சொன்னா என் தங்கச்சிங்க கிட்ட சொல்லி என் மானத்த வாங்கி வச்சுருக்க...."

"ஏய் விக்ஸ்டப்பா… என்ன சும்மா என்னைய அது இதுனு சொல்லிட்டு இருக்க... " என்று கையை உயர்த்திக் கேட்க

"ஏய் இப்படி கை நீட்டி… மரியாதை இல்லாம பேசுற வேலையெல்லாம் வச்சுக்காத … மூஞ்சிலயே குத்தினேன் பேச வாயே இருக்காது …. " என கை முஷ்டியை குத்துவது போல் காட்ட ....

"பெரியம்மா... இந்த விக்…" என்றுக் கத்தி அழைத்து ஏதோ சொல்ல வர , பட்டென்று அவள் பின்னந்தலையில் இடக்கையையும்… வாயில் பேச முடியாதபடி வலக்கையையும் வைத்தவன் ,

"ஷ்….லூசா நீ பார்த்தா விது செட் போல தான் இருக்க … உன் நல்லதுக்குத் தானே சொன்னேன்.... எல்லார்கிட்டயும் சொல்ற விஷயமா இது.... ரூம் குள்ள தனியா ஒரு வயசு பொண்ணு மேல ஒரு வயசு பையன் விழுகிறது சாதாரண விஷயம் கிடையாது… " என அவள் முகம் அருகில் மெதுவாக சொன்னாலும் … அதில் அப்படி ஒரு கோபம் இருந்தது.

மிக அருகில் அவள் விழிகளைப் பார்த்தவன் , "பம்கின் போல சைஸ்ல பெரிசா இருந்தாலும் இந்த டிரஸ்ல பார்க்க நல்லா கும்முனு அழகா வேற இருக்க … மாமா பொண்ணுதானனு சும்மா விளையாட்டா வம்பிழுத்தா நீ இப்படி அத்தையக் கூப்பிட்டு கலாட்டா பண்ணுவியா... "

மிரண்டப் பார்வை பார்த்தவள், அவன் கையை விலக்கப் பார்க்க , பட்டென்று கையை எடுத்தவன் அவள் முகம் பார்க்க , அவள் வாயைச் சுற்றி இவனதுக் கைத்தடம் அப்படியே பதிந்திருந்தது.

"அச்சச்சோ இப்ப என் கை வேற பதிஞ்சிருச்சா... என் கைத்தடம்னு சொல்லி … இதுக்கும் ஆர்பாட்டம் பண்ணிராத… பாப்பானு கூப்பிட்டா நீ சின்ன பாப்பா வா… இப்படி கம்ப்ளைன்ட் பண்ணிட்டு இருக்க." என்று எழுந்து சுற்றி முற்றிப் பார்த்து விட்டு அந்த மரத்தடியில் மறுபுறம் இருந்த பிள்ளையார் முன்பு வைக்கப்பட்டிருந்த சந்தனத்தைக் கையில் அள்ளி வந்தான்.

அதற்குள் இவ்வளவு நேரம் வாயை மூடி வைத்திருத்ததால் மூச்சுக்கு சிரமம் உண்டாக … மூச்சு விட்டு சமன் செய்துக்கொண்டிருந்தவள் அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுக்கப் போக ,

விக்ரம் அந்த பாட்டிலை ஒரு கையில் எடுத்துக் கொண்டான். இருமிக்கொண்டே அதை வாங்கப் போக , தன் கையிலிருந்த சந்தனத்தை அவள் கன்னம் இரண்டிலும் மென்மையாகத் தேய்த்தவன் ,

" இப்படி சிவந்திருச்சு… கன்னத்தைப் பார் பட்டர்பன் போல நல்ல சாஃப்ட் ..அப்படி என்னதான் சாப்பிடுறியோ .....ம்... ம் இப்ப ஒன்னும் தெரியல … நான் தான் பூசினேன்னு யாருகிட்டயும் சொல்லிராத… கஷ்டம் எனக்கில்ல உனக்குத்தான்… புரிஞ்சுக்கோ .. " என்றவன் ,அவள் கைப் பிடித்து தண்ணீர் பாட்டிலை வைத்து விட்டுச் சென்றான்.

இருபாலர் படிக்கும் பள்ளியில் தான் பயின்றாள், ஆண் பிள்ளைகள் அருகில் அமர , அவர்களோடு பேசி சிரித்து விளையாட என்றிருந்தவளுக்கு அவனது இந்தச் செய்கை எதையோ உணர்த்தியது... அண்ணனுக்கு செல்லத் தங்கையாக , அப்பாவிற்கு செல்ல மகளாக வலம் வந்தவள் விக்ரமின் கன்னத் தொடுகையில் தன் உடலிலும் மனதிலும் ஏதோ ஓர் புதுவித மாற்றத்தை உணர்ந்தாள்.

எந்தப் பெண்களையும் கவர்ந்து விடும் விக்ரமின் தோற்றம் தந்த மாற்றமா, தனக்குச் சமமாக வாயாடினாலும் உனக்காகத்தான் சொல்கிறேன் என்ற வார்த்தை தந்த மாற்றமா , நெருக்கத்தில் நின்று தன் இதழ் தொட்ட , கன்னம் தொட்ட அவன் ஸ்பரிசம் தந்த மாற்றமா தெரியவில்லை …. இப்படி அவன் பேச்சும் … பார்வையும் அவளை ஏதோ செய்ய….அப்படியே அசையாது நின்று அவன் போவதையேப் பார்த்திருந்தவளுக்கு , தன் உடல் ஏன் இப்படி நடுங்குகிறது என்றுப் புரியவில்லை.ஆனாலும் அவளது மனது மட்டுமன்றி உடலும் அவனைப் பார்த்த முதல் நாளே மாற்றத்தை உணர்ந்தது.

ஆனால் எதனால் இந்த மாற்றம் என்பதை பதின்பருவ மங்கையான அவளறியவில்லை. அவளறியும் போது அவனங்கில்லை....

கன்னத்தை துப்பட்டாவால் வேகமாகத் தேய்த்துக் கொண்டே , தண்ணீரைப் பருகியவளுக்கு , அந்த சந்தன வாசம் ஒத்துக் கொள்ளாது தலை சுற்ற , " பெரியம்மா " என்று அழைத்துக் கொண்டேச் சென்றாள்.

அவளைப் பார்த்த அவளது பெரிய தந்தையின் மனைவியும் ,விக்ரம் தந்தையின் உடன் பிறந்த தங்கையுமான ராணி ,

" என்ன ராசாத்தி முகமெல்லாம் சந்தனம் பூசியிருக்க… அந்த வாசனை உனக்குத்தான் ஒத்துக்காதே …" என்றவாறே மூச்சு வாங்கியவள் முகத்தை புடவையால் துடைக்க … அதற்குள் அவளுக்கு தலை சுற்றி வாந்தி வருவது போல் இருக்க , இருளில் ஒரு ஓரமாக இருந்த மரத்தடிக்குச் சென்று சாப்பிட்ட அத்தனையும் வாந்தி எடுக்க ஆரம்பித்தாள்.

அவளோடு சென்ற ராணி " ஒத்துக்காதத ஏன் மா முகத்துல தடவிக் கிட்ட ".அதற்குள் அங்கு அருகில் வந்த வயதான அந்தக் கிராமத்துப் பெண்மணி ,

" என்னத்தா உன் கொழுந்தன் மவளுக்கு கல்யாணம் ஆகிருச்சா என்ன .... மசக்கைல வாந்தி எடுக்கிற மாதிரி ஒமட்டிக்கிட்டு இருக்கா … "

"பேச்சித்தை என்னப் பேசுறீங்க …. சின்னபுள்ளய போய் ... புள்ளைக்கு இங்கன செய்யற சாப்பாடு ஒத்துகிட மாட்டிக்குது ... பாவம் அங்க ரொட்டியா சாப்பிட்டுட்டு இருக்கும் …." அவர்கள் அருகே வாய் கொப்பளித்து விட்டு வரு வந்துக் கொண்டிருக்க,

" என்னமோ நீ சொல்ற …. நல்லா பூசுனாப் போல இருக்கா.... நானும் வந்ததிலருந்துப் பார்க்கிறேன்.. சினிமாக்காரி போல கையில்லாத சட்டையும் … முட்டி வரைக்கும் தான் பாவாடை போலவும் உடுப்பு உடுத்திட்டு இருக்கா.... இந்த காலத்து புள்ளைக … அதுவும் அது தில்லில இருந்து வந்துருக்கு …." என்று தாடையில் இடித்துக் கொண்டு சென்றார்.

அவர் போனதும் , தன் தாடையை இடித்துக் கொண்டு , அவர் நின்ற இடத்தில் இருந்த மண்ணை எடுத்து மகளின் தலையைச் சுற்றி எறிந்தவரிடம் ,

"பெரியம்மா உடுப்புனா என்ன.... "

" அப்படினா டிரஸ் மா….. "

"ஓ...." என்றவள் தன்னைக் குனிந்துப் பார்த்துக் கொண்டு ,

"கேஷூவல் டிரஸ் தானப் போடுறேன். இவங்க ஏன் இப்படி சொல்றாங்க..." என நினைத்தவள் , பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்த ராணியிடம் ,

"அப்ப மசக்கைனா என்ன பெரியம்மா…. எதுவும் பெரிய டிசீஸா...." எனக் கேட்ட குழந்தை மனமும் முகமும் கொண்டவளை ஆயாசமாகப் பார்த்தவர் , அவள் கன்னத்தில் கை வைத்து ,

"பச்சபுள்ளய என்னப் பேசிட்டுப் போறாங்க … வாயிருக்குங்கிறதுக்காக என்ன வேணா பேசலாமா.. நீ வாம்மா வீட்டுக்குப் போய் உடம்பு கழுவி கருப்பட்டி காப்பிக்குடிச்சா தெம்பா இருக்கும் …."

" பெரியம்மா சொல்லுங்க … நான் தேர்ட் லாங்வேஜ் தமிழ்தான் படிச்சேன் …. ஆனாலும் இந்த ஊர்ல பேசுறது நிறைய எனக்குப் புரியல … ஸ்கூல்ல அதிகமா இங்கிலீஷ்ல பேசினாலும் வீட்ல அப்பா தமிழ்ல தான் பேசுவாங்க.... ஆனாலும் நிறைய புரியல...."

"அது…. ஒன்னுமில்லமா வயிறு வலியான கேட்கிறாங்க" என்றவர் அவளை அதற்கு மேல் அவளிடம் வேறு பேசி வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

"உனக்கு புரியாம இருக்கிறதே நல்லதுமா… " என்று அவர் எண்ணிக் கொண்டாலும் , இரவில் அவள் உறங்குவதற்காக விக்ரம் வீட்டிற்குத் தான் திலீபனால் அழைத்து வரப்பட்டாள்.

விக்ரமின் தாத்தா விக்ரமராஜாவின் தங்கை மகன் சரவணனுக்குத் தான் தன் மகள் ராணியை மணம் செய்துக் கொடுத்திருந்தார். தங்கை மகள் பரணியை இளைய மகனுக்கு மணம் செய்து வைத்திருந்தார்.

ராணியின் குடும்பம் பெரியக் கூட்டுக் குடும்பம், அங்கு வருவயதுடைய பெண் பிள்ளைகள் அதிகம் இல்லை என்பதால், இங்கு வந்த இந்த பத்து நாட்களாக பரணி தன் சின்ன அண்ணன் மகளை தன் வீட்டிற்கு உறங்குவதற்கு அழைத்துக் கொண்டார்.

அன்றும் அப்படித்தான் அங்கு வந்த வருவை அழைத்துப் போக வாசலுக்கே வந்த பரணி தன் மருமகனைப் பார்த்து ,

"மருமகனே உள்ள வாங்க...."

" இருக்கட்டும் அத்த.... விக்ரம் இப்ப வருவான் … நானும் அவனும் நைட் கோயில்ல நடக்கிற ஃபங்ஷனுக்கு போறோம்" எனும் போதே விக்ரம் வீட்டினுள் இருந்து வெளியே படியில் இறங்கி வந்துக் கொண்டிருந்தான்.

பரணி திலீபனிடம் பேசிக் கொண்டிருக்க வரு ஒரு த்ரீ ஃபோர்த் நைட் டிரஸுடன் வீட்டினுள் படியேறிக் கொண்டிருந்தாள்.

கைப்பேசியைப் பார்த்துக் கொண்டே கீழிறங்கியவனுக்கு, எதிரே வந்தவளின் முட்டிக்கு கீழ் தெரிந்த வாழைத்தண்டுக் கால்கள் கண்ணில் பட , நிமிர்ந்தவன் ,

"அதான … நேத்தும் இது போல டிரஸ் தான போட்டிருந்தா…." என நினைத்துக் கொண்டேத், தன்னைத் தாண்டிச் சென்றவளை ,

" ஏய் பம்கின்… நில்லு … என்ன டிரஸ் இது... "

"ஏன் இந்த டிரஸ்க்கு என்ன ... சும்மா எல்லாரும் என் டிரஸ்ஸயேப் பேசுறீங்க" என முறைத்துக் கொண்டு கேட்டவளிடம், அவளை மேலிருந்து கீழாகக் கையை காண்பித்து ,

"ம்...டிரஸ்ஸுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.... டிரஸ்ஸும் நல்லாருக்கு , ஏன் உனக்குமே நல்லாதான் இருக்கு … ஆனா....ஊருக்குத் தகுந்த டிரஸ் பண்ண மாட்டியா … இது பட்டிக்காடு.. இங்க எல்லாரும் முழுசா உடம்ப மறைச்சிட்டுத்தான் அதிகமா டிரஸ் போடுவாங்க.... இப்படி டிரஸ் பண்ணினா எல்லாரும் உன்னைய தான் உத்து உத்துப் பார்ப்பாங்க.... நீ வேற நல்லா ' கும்' முனு இருக்க... " என அவள் உடலைக் கிண்டல் செய்ய ,

" இங்க பாரு நான் என்ன டிரஸ் போடணும்னு எனக்குத் தெரியும் .... நீ உன் வேலையப் பார்த்துட்டுப் போ...."

"ஏய் மரியாதையாப் பேசுனு அப்பவே சொன்னேன் … இப்பவும் உன் நல்லதுக்குத் தான் சொல்றேன்" எனக் கோபமாகப் பேச ,

" என்ன என் நல்லதுக்கு… என் நல்லதுக்கு… அப்பவும் இப்படிப் பேசி என் முகமெல்லாம் சந்தனம் பூசிட்ட … எனக்கு அந்த ஸ்மெல் ஒத்துக்காம ஒரே வாமிட் … அந்தப் பாட்டி மசக்கைனு ஒரு டிஸீசானு கேட்டுட்டுப் போறாங்க...." எனவும் ,

" என்ன …என்ன… நீ மசக்கையானு கேட்டாங்களா....." என்றவன் சத்தமாக சிரிக்க ஆரம்பித்து விட்டான். அவனது சிரிப்பில் திலீபனும் பரணியும் அவர்களைப் பார்க்க ,

"உன் உடம்ப பார்த்தா எனக்கே அந்த டவுட் தான்… இதுக்குத் தான் ஊரப் பொறுத்து நாம இருந்துக்கணும்கிறது …. உன் வயிறு சைஸ் பார்த்தா ஒன்னு இல்ல ரெண்டு இருக்கும் போல …" என்று கேலி செய்து சிரித்துக் கொண்டே… படியிறங்கி திலீபனிடம் செல்ல ,

அவன் தன்னை ஏதோ கேலி செய்து சிரிக்கிறான் என்பது புரிபட அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டு நின்றவளை,

"வா பாப்பா போகலாம்" என்ற பரணி அவள் கைப் பிடித்து அழைத்துக் கொண்டு வீட்டினுள் சென்றார்.

"என்னடா இப்படி சிரிக்கிற, கோபப்படுற மாதிரி என்னவோ சொல்லி கிண்டல் பண்ணிருக்க … என் தங்கச்சி உன்னை முறைச்சிட்டுப் போறா பார்…."

"ம் … சொல்லித்தான் ஆகணுமா…. "

"ஏன் சொல்லேன்…"

"ம் உன் தங்கச்சிக்கிட்ட ஐ லவ் யூ னு சொன்னேன் … அதுக்கு முறைக்கிறா…. அவ நம்பல போல…. நீ நம்புறியா…. " என்று வாய்க்குள் புன்னகையை அடக்கிக் கொண்டுக் கேட்க ,

"ம்.... அடடா .. இத நான் நம்பனுமா... படிப்பு … லட்சியம்னு கட்டிட்டு அழுறவன்.. ஐ லவ் யூ சொல்லிருப்பனு.... அது மட்டுமில்ல அவக் குணத்துக்கு இப்படி முறைச்சிட்டு நிக்க மாட்டா .. உன் மண்டைய பிளந்துட்டுத்தான் நிப்பா..... அப்படியே சொல்லியிருந்தாலும் உன்னைய மாதிரி சாமியாருக்கெல்லாம் என் தங்கச்சிய நான் கட்டித் தர மாட்டேன் பா"

"டேய் நான் ஆசாமி டா ...." அதற்குள் சங்கீதா திலீபனுக்கு ஃபோன் செய்ய …

"மச்சான்… அங்க ஜன்னல் வழியா என்னையப் பார்த்துட்டேயிருக்கா என் மங்கி...."

"கீது…" என விக்ரமும் திரும்பி மாடியைப் பார்க்க , விக்ரம் சட்டையைப் பிடித்து இழுத்த திலீபன்..

"டேய் … மூட்டி விட்டுறாத வா போகலாம் … போய் சிலம்பு பிராக்டிஸ் பண்ணுவோம் … ரொம்ப நாளாச்சு … நாளைக்கு புரோக்ராம் டா" என்றழைத்துக் கொண்டு சென்றான்.

வருவோ விக்ரம் பேசிச் சிரித்ததை யோசித்துக் கொண்டே பரணிக் கேட்ட கேள்விகளுக்கு தலையசைத்துக் கொண்டு வந்தாள்.

"தூக்கம் வருதாமா … சரி போ போய் படு… நாளைக்கு காலையிலயே அரவிந்த் வந்துருவான்னு அண்ணன் ஃபோன் பண்ணாங்க" என்றவர் அவளை மகள்களின் அறைக்கு அனுப்பி விட்டுச் சென்றார்.

வித்யா ஃபோனில் ஏதோ கேம் விளையாடிக் கொண்டிருக்க , சங்கீதா பால்கனியில் நின்று ஃபோன் பேசிக் கொண்டு இருந்தாள். சங்கீதா உள்ளே வரவும் ,

"அண்ணி இந்தாங்க அண்ணா கொடுத்தாங்க .. " என அவளிடம் ஒரு பையை நீட்ட ,

அவள் தந்த பையிலிருந்த பார்சலை வாங்கிய சங்கீதா நாணப் புன்னகையோடு மறுபடியும் பால்கனி சென்று விட்டாள்.

"ஏய் வரு நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன் ,அப்படி என்னடி திலீப் அத்தான் தாறாங்க.... அக்கா சிரிச்சுக்கிட்டே தனியா போய் பிரிச்சுப் பார்க்கிறாங்க … என்கிட்ட காட்டுறதேயில்ல...."

"எனக்கும் தெரியாது.... அவங்க லவ்வர்ஸ் கிஃப்ட் கொடுத்துக்கிறாங்க… நமக்கும் லவ்வர் கிடைச்சா இப்படி கிஃப்ட் கிடைக்கும் … அப்ப தெரிஞ்சுக்குவோம்"

அவள் வாயை மூடிய வித்யா , "ஷ் .... அப்படியெல்லாம் பேசாத யாரும் கேட்டா அவ்வளவுதான்.... "அவள் கையை வேகமாக எடுத்து விட்டவள்,

"ஏய் என்ன எல்லாரும் என் வாய வாய மூடுறீங்க" எனக் கோபமாக கேட்க ,

" எல்லாரும்னா யாரு..."

"விக் .... " என அவன் பெயரைச் சொல்லப் போனவள் , அவன் சொன்னது நியாபகம் வர , பேச்சை நிறுத்திவிட்டு ,

"அது ..... அம்.. அம்மு " எனத் திணறியவள் ,

"சரி விடு … அண்ணிக்கு கிஃப்ட் தந்துவிடும் போதெல்லாம் திலீபண்ணா நம்ம ரெண்டு பேருக்கும் டெய்லி டெய்ரி மில்க் தாறாங்க ... நாம அதை மட்டும் பார்ப்போம்…இரு ரெண்டு பேரும் சாப்பிடலாம்...." என்றவாறு ஒரு சாக்லேட்டை வித்யாவிடம் தந்து விட்டு , மற்றொன்றை சாப்பிட்டுக் கொண்டே ,

" வித்யா … மசக்கைனா என்ன.."

"ஏன் இப்ப யாரு மசக்கையா இருக்கா... உனக்கு அர்த்தம் தெரியரதுக்கு.... " என அவளும் சாக்லேட்டை சுவைத்துக் கொண்டே கேட்க ,

"ம்... நான் தான் ...." என்று வரு சொன்னது தான் தாமதம் , சாப்பிட்டுக் கொண்டிருந்த சாக்லேட் வாயில் அப்படியே இருக்க , வருவின் வயிற்றைப் பார்க்க … "

"என்னடி நீயும் இப்படிப் பார்க்க " என்றவள் கோவிலில் விக்ரம் செய்ததை சொல்லாது, சந்தன வாசனை ஒத்துக் கொள்ளாது வாந்தி எடுத்ததையும் அந்த பாட்டி சொன்னதையும் சொல்ல சொல்ல வித்யாவிற்கு சிரிப்பை அடக்க முடியாது புரையேற ஆரம்பித்துவிட்டது.

பக்கத்திலிருந்த தலையணையை எடுத்து வித்யா முதுகில் அடித்தவள் ,

" என்ன அர்த்தம்னு சொல்லிட்டு சிரிடி … " என்றுக் கடுப்பாக சொல்ல ,

"கூ… கூ... கூகுள்ல பார்க்கலயா … "

" பெரியம்மா வயித்து வலினு சொன்னாங்க … ஆனா உங்க அண்ணாவும் சிரிக்கிறாங்க , நீயும் சிரிக்கிற ...."

"எங்கண்ணன்ட்ட வேற சொன்னியா…. " என வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தவளை, மேலும் தலையணையால் அடித்தவள்,

"நீ இப்போ சொல்லல….எங்கண்ணன்கிட்ட இருந்து நான் படிக்க வாங்கி வச்ச நோட்ஸ்லாம் தரமாட்டேன் போ...."

"நீ தரலனா போ… நான் உங்கண்ணன்கிட்டயே நேரே கேட்டு வாங்கிக்குவேன் … நாளைக்கு காலையிலயே கோலப்போட்டிக்குப் போகணும் … நீயும் தான போடப் போற , வா சீக்கிரம் படுக்கலாம் என்றவள் சாக்லேட்டை சாப்பிட்டு விட்டு படுத்துக் கொண்டாள்.

உள்ளே வந்த சங்கீதா என்னவென்றுக் கேட்க ,

"அண்ணி நீங்களாவது சொல்லுங்களேன் …" என்றவள் சங்கீதாவிடம் கேட்க , அவள் சிரித்துக் கொண்டே அதற்கான அர்த்தம் சொல்லியவள் ,

"நாம சிட்டிலயே வளர்ந்துட்டோம் வரூ… அதனால நமக்கு நிறைய விஷயங்கள் சாதாரணமா இருக்கும் .... நாம நல்லா இருந்தாலும் ஏன்னு கேட்க மாட்டாங்க … நல்லா இல்லைனாலும் ஏன்னு கேட்க மாட்டாங்க … அவங்க அவங்க வேலையப் பார்த்துட்டு போய்ட்டே இருப்பாங்க.... இங்க எல்லாம் இப்படித்தான் சின்ன சின்ன விஷயங்களையும் நோட் பண்ணுவாங்க வரூ.... சில சமயம் நமக்கு அது சந்தோஷமாவும் இருக்கும் ... சில சமயம் அது வெறுப்பாவும் இருக்கும்.அதுனால இதையெல்லாம் கண்டுக்காத …. நேத்துக் கூட நீ அண்ணன் உன் மேல விழுந்துட்டாருனு எங்க கிட்ட சொன்னது போல வெளிய யாருகிட்டயும் சொல்லாதனு சொன்னது இப்படி யாராவது ஏதாவது பேசிருவாங்கனு தான்.... சரி படு…நேரமாகிருச்சு.. ரங்கோலிப் போடுறதானே .. " என்றுப் படுத்துக் கொண்டாள்.

" ம் ஆமாம் அண்ணி " என்றவளும் வித்யா அருகில் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

ஆனால் உறக்கம் வராது புரண்ட வருவுக்கோ கோபம், ஆத்திரம் , அவமானம் அழுகை எல்லாம் ஒன்றுக் கூடி வந்தாலும் விக்ரமின் ஞாபகம் அதிகமாகவே வந்தது. அதுவும் அவன் அவள் வயிற்றைப் பார்த்து ஒன்றல்ல இரண்டு என்றதை நினைத்து கேவல் வெடிக்க , அருகில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் உறக்கம் கெட்டு விடுமோ என்று பயந்து அந்த அறையிலிருந்த பால்கனிக்குச் சென்று நின்றுக் கொண்டாள்.

அவள் கண்களைத் துடைத்துக் கொண்டே பால்கனியிலிருந்து அறையினுள் செல்லும் வழியில் இருந்த அலங்கார கண்ணாடி தடுப்பில் வெளியிலிருந்து வந்த வெளிச்சத்தில் தன் உருவத்தைப் பார்த்தவளுக்கு இத்தனை நாள் தோன்றாத தன் புறத்தோற்றம் அவளை மனம் கலங்கச் செய்தது.

உள்ளே சங்கீதா தனிக் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தாள். தன் அண்ணனுக்கு மனைவியாகப் போகிறவள் என்று மட்டுமே இத்தனை நாள் மனதில் வைத்துப் பழகிக் கொண்டிருந்தவளுக்கு அவளது புறத்தோற்றம் அந்த இருளிலும் புன்னகையை தந்தது. தன் அண்ணன் அருகில் தேவதையாகத்தான் தெரிவாள் . உடலில் தேவையற்ற சதைகளின்றி அதிலும் இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என்பதாலோ என்னவோ முகமும் பொலிவுடன் வசீகரமாக இருந்தது. சங்கீதாவிற்கு இணையான அழகில் வித்யாவும்.

" என் உடம்பு மட்டும் ஏன் இப்படி குண்டாகிருச்சு ….விக்ஸ்டப்பா வேற என்னைய ரொம்ப கிண்டல் பண்ணுது…" என நினைத்தவளுக்கு மறுபடியும் அழுகை வர , கீழே வெளிக் கதவு திறக்கும் சத்தம் கேட்க எட்டிப் பார்க்க விக்ரம் உள்ளே வந்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

கோபமும் அதிகம் வர அவனிடம் சென்று சண்டைப் போட வேண்டும் என்ற எண்ணம் தோன்ற அறைக்கதவைத் திறந்துக் கீழே செல்ல முடிவெடுக்க , லதாவின் குரல் கேட்டது. உடனே அங்கு செல்லும் முடிவைக் கைவிட்டவள் அறையினுள் வந்துப் படுத்துக் கொண்டாள்.

லதா விக்ரமிடம் , "உங்க அத்தை வீட்ல கல்யாணத்துக்கு எல்லாரும் வர ஆரம்பிச்சுட்டாங்க. நாளைக்கு திருவிழா கடைசி நாள். அதுக்கடுத்த நாள் ஒரு விருந்துக்கு ஏற்பாடு பண்ணிருக்காங்கப்பா.கீதாவை தவிர நாம எல்லோருமே போகணுமாம்...."

"ம்மா… இதுக்குத் தான் சொன்னேன் … நான் கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்னாடி வாறேன்னு … இப்ப பாருங்க படிச்சு முடிச்சதும் வந்த நல்ல ஆஃபர்… அடிக்கடி பெர்ஸனலா வந்துட்டுப் போனா எப்படி மா...."

"ஒரு நாள் தானேப்பா… வேற எதுக்காவது உன்னை டிஸ்டர்ப் பண்ணோமா இல்லைதானே ... அண்ணனா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணு ராஜா.. நம்ம சொந்தக்காரங்கதான் இருந்தாலும் ஒரு சொல் அடுத்தவங்க பேசினாலும் உன் தங்கச்சிக்குத் தான் கஷ்டம் … ப்ளீஸ் புரிஞ்சுக்கோ...."

"ம்மா..."

" அம்மாவுக்காக ராஜா ..... ஒரு நாள் தானே.... நாளைக்கு கிளம்புறத நாளைக் கழிச்சு நைட் கிளம்புற அவ்வளவுதான்…" எனவும் , யோசித்தவன் ,

"ம்…ஓகே மா… அப்போ தூத்துக்குடிலருந்து ஃபிளைட்ல போறத கேன்சல் பண்ணிட்டு மதுரைலருந்து புக் பண்றேன்…" என்றவன் அறைக்குச் சென்று சிலம்பு பயிற்சி செய்த உடல் அலுப்பில் , விளையாட்டாகப் பேசுவதாக நினைத்து சிறு பெண்ணின் மனதைக் காயப்படுத்தியதுக் கூடத் தெரியாமல் நன்கு உறங்க , காயம் பட்டவள் வெகு நேரம் கழித்து தான் உறங்கினாள்.
தூவும் ...
 

Advertisement

Top