Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேன்மழை தூவுதடி 1

Advertisement

Shanvi

Tamil Novel Writer
The Writers Crew
மழைத்துளி 1

கோடைக்காலம் தான் ஆனாலும் அந்த இருளில் கொஞ்சமே கொஞ்சமாக ஓடிக் கொண்டிருந்த தாமிரபரணி ஆற்றோரம் அமைந்த அழகிய கிராமம். இன்னும் ஒரு மணி நேரப் பயணத்தில் குற்றாலமும் சென்று விடலாம்.

காரோட்டியும், தங்களது நெடுநாளைய குடும்ப விசுவாசியமுமான சண்முகத்துடன் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து காரில் பயணித்து வந்துக் கொண்டிருந்தான் விக்ரம். பள்ளி விடுமுறை நாட்களில் இது போன்ற சித்திரைக் கொடை விழாவிற்கு தவறாது பெற்றோரோடு வந்து சென்ற ஊர் என்பதால் பழைய நண்பர்களை காணும் ஆவலும் அவனுக்கு அதிகரித்தது.

சித்திரைக் கொடை விழாவினை நெல்லை , தூத்துக்குடி மாவட்டங்களில் மிகச் சிறப்பாக கொண்டாடுவர். அவ்வூரை பூர்வீகமாகக் கொண்டவர்கள் வெளியூர் என்றில்லாது வெளிநாட்டிலிருந்தாலும் தவறாது குடும்பத்தோடு கலந்துக் கொள்ளும் விழா என்றேச் சொல்லலாம்.

அம்மன் கோவில் அருகே காரை நிறுத்த, இறங்கிய விக்ரமிடம் ,

"சின்னவரே பள்ளிக்கூடம் படிக்கும் போது கொடைக்கு தவறாம வந்தீக… மேல படிக்க வெளியூர் போனதிலிருந்து நீங்க இங்க வரவே இல்லைங்க … "

காலில் அணிந்திருந்த ஷூ, சாக்ஸை கழற்றி காரினுள் போட்டுக் கொண்டே ,

"ம்.. ஆமா அங்கிள் இப்பவும் வர முடியுமானு தான் நினைச்சேன் , அம்மாதான் தாத்தாவும் பாட்டியும் பேரன் பேத்தினு குடும்பத்தோட இந்த விழால கலந்துக்க ரொம்ப ஆசையா இருக்காங்கனு சொன்னாங்க... அதுதான் பிரேக் எடுத்து கிளம்பி வந்துருக்கேன். ப்ராஜக்ட் முடிக்க வேண்டியிருக்கு அங்கிள் .... உடனேயேக் கிளம்பணும்." என்றவன் ,

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மன் கோவில் வாசலில் நின்று கும்பிட்டு விட்டு வந்துக் காரில் ஏறப் போனான். கோவில் திருவிழா களைப்பில் அந்த ஊரே உறங்கிக் கொண்டிருந்த இரவு ஒரு மணிக்குத் தான் விக்ரம் சண்முகத்திடம் பேசிக் கொண்டிருந்தான் .

அப்போது பின்னாலிருந்து ஒரு கரம் அவன் தோளோடு அணைக்கவும் , திரும்பிய விக்ரம் , 'மாப்ள ' என்றவாறு திலீபனைக் கட்டிக் கொள்ள ,

சண்முகம் இருவரையும் பார்த்தவர் ,

"சோக்கலிங்க பாத்துப்புட்டீக, நீங்க பேசிட்டு வீட்டுக்கு போங்க , நான் வீட்டுக்கு நடக்கிறேன்" என்றவர், அவனிடம் கார் சாவியைத் தந்து விட்டு நடக்க ஆரம்பித்தார். இருவரும் காரில் ஏறி அமர்ந்துக் கொண்டே ,

"டேய் மச்சான் அமெரிக்காலருந்து நானே சீக்கிரம் வந்துட்டேன் … உனக்கென்னடா இந்தியாவுக்குள்ளயே இருந்துட்டு வர இவ்வளவு நேரம் .

" முக்கியமான பிராஜக்ட் மச்சான். அதான்.... ஆமா என்னமோ திருவிழாவுக்கு வந்து சாமி கும்பிட வேகமா வந்த மாதிரி பேசுற … அடுத்த மாசம் கல்யாணம்… என் தங்கச்சியப் பார்க்க பறந்து வந்துட்ட… "

"போடா அந்த மங்கிய பார்க்க யார் வாரா…"

"இரு எந்தங்கச்சிட்ட சொல்றேன் … ஏம்மா உன்னைய குரங்குனு சொல்றான்னு… அப்படியே சித்தப்பா சித்திகிட்டயும் சொல்றேன் … வேற மாப்பிள்ளை பாருங்கனு … "

விக்ரம் கையை வேகமாக பிடித்துக் கொண்டவன் ,

"டேய்... மங்கி .... சாரி என் சங்கியப் போய் அப்படிச் சொல்வேனா …டங்க் ஸ்லிப் டா மச்சான்..... "

புன்னகைத்துக் கொண்ட விக்ரம் .., "சரி விட்றா… விட்றா ….அத்த நீ அனுப்புற போட்டோவெல்லாம் பார்த்து பயந்து தான் சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சிட முடிவு பண்ணிட்டாங்க…. எங்கடா பையன் வெள்ளைக்காரிய மருமகளா கூட்டிட்டு வந்துருவானோன்னு … "

"டேய் உன் தங்கச்சி அங்க படிக்கணும்னு ஆசைப்பட்டாளாம்… அதான் உங்க சித்தப்பாவும் சித்தியும் இப்படி சேஃபா கல்யாணம் பண்ணி என் கூட அனுப்பி வைக்கிறாங்கனு உனக்குத் தெரியாது... போடா…."

" அது தான் எனக்குத் தெரியுமே … ப… டி ....க்…க .... அனுப்புறாங்கனு.... அவள படிக்க விடுவியானு தான் … சந்தேகமாக இருக்கு ….அவளும் திலீபத்தான் திலீபத்தான்னு உருகுறது பார்த்தா ரெண்டு பேரும் என்ன பாடம் படிப்பீங்கனுத் தெரியாது… சீக்கிரம் தாய்மாமன் ஆக்கிருவ போல … போடா டேய்.... "

"மச்சான் உனக்கு இருபத்து நாலு வயசுதான் … உன்னை விட பத்து மாசம் பெரியவன்டா நானு ….இருபத்து ….. அஞ்சு வயசு மச்சான் … பிரம்மச்சாரியாவே அமெரிக்கால நல்ல பையனா இருக்கிறது கஷ்டமாதான்டா இருக்கு ….அதான் அம்மா அப்பா சொன்னதும் ஐயா பறந்து வந்துட்டேனாக்கும்."

" அதான் நீ பறக்கிறதுலருந்தே தெரியுதே….எனக்கு கல்யாணம் , எனக்கு கல்யாணம்னு டையலாக்கும் ..ஒரு தாலியும் மட்டும் உன் கைல கொடுத்தா சரியா இருக்கும் ... நானும் அங்க தானப் படிச்சேன் உன்னைப் பத்தி தெரியாதா என்ன" என்றுக்கண் சிமிட்ட,

"டேய் டேய் விக்கி .... அங்க சும்மா பொண்ணுங்க கைப் பிடிச்சதோட சரிடா …. நான் ப்யூர் பேச்சிலர்னு உனக்குத் தெரியாது… நீ மட்டும் என்னவாம் யார்க் கூடவும் பேசினதும்இல்ல … கைப் பிடிச்சதும் இல்லனாலும் .... சைட் மட்டும் அடிச்சுட்டு எங்க கிட்ட கமன்ட் அடிப்ப …. நான் அவங்களா பக்கத்துல உக்கார்ந்தா அமைதியா உட்கார்ந்துருப்பேன்…எந்திரிச்சா போக முடியும் … உனக்கும் எனக்கும் ….அவ்வளவுதான் வித்தியாசம்…"

வாய் விட்டுச் சிரித்த விக்ரம், "அதனால தானடா என் தங்கச்சிக்கு ஓகே சொன்னேன்.…"

"அதானே உன்னைப் பத்தி தெரியாது.... இந்த தாத்தாவச் சொல்லணும் , உன்னையும் என்னையும் ஒரே கிளாஸ்ல போட்டு … செலவில்லாம வேவு பார்க்க விட்டுட்டாரு..." என்றுச் சலித்தவனிடம் ,

"அத்தை உன்னைய லேட்டா ஸ்கூல்ல சேர்த்தாங்கனு சொல்லு... அதுக்கு ஏதோ காரணம் சொல்வாங்களே.... இந்த உச்....." என ஆரம்பித்தவன் வாயைக் கைக்கொண்டு மூடிய தீலிபன்…

"டேய் மானத்த வாங்காதடா … அம்மாதான் அடிக்கடி சொல்லிக் காட்டுறாங்கனா …. நீயுமாடா...."

பலமாக சிரித்துக் கொண்டே அவன் கையை விலக்கி ,

"ஆமா ஃபிரண்டுக்காக வெயிட் பண்ணுவனு தெரியும் … ஆனா இவ்வளவு நேரமாவா… நம்ப முடியலயே … "

"அது… மச்சான் …டைமிங் மாறுதா அதுனால சரியா தூக்கம் வரல ... அதோட நேத்து நைட் கரகாட்டம் டா … அத பார்க்க வந்தேன் ..சரி நீ வந்துட்டு இருக்கனு அப்படியே கோயில் பக்கமா உக்காந்துட்டேன்...."

"அதச் சொல்லு …. டான்ஸ் பார்க்க வந்தனு… " என தலையைப் பின்னால் சரித்து சிரித்தவனை தோளில் தட்டி ,

"டேய் டேய் ராத்திரில இப்படி சிரிக்காதடா… சரி சரி எங்க வீட்டு முன்னால இறக்கி விடு… காலையில … இல்ல இல்ல மத்தியானம் பாப்போம்.... நீயும் தூங்கு… நானும் தூங்கப் போறேன்." என்றவன் அவர்கள் வீட்டின் முன் இறங்கிக் கொள்ள , அந்தத் தெருவின் கடைசியில் ஒரு பெரிய கருங்கல் சுவரால் எழுப்பப்பட்ட சுற்று சுவரின் வாசலருகே சென்று ஹாரன் அடிக்க , அங்கு இருந்த காவலாளி வந்து கதவைத் திறந்து விட்டார்.

உள்ளே கொண்டு வந்துக் காரை நிறுத்தவும் , வாசற் கதவு திறக்கவும் சரியாக இருந்தது. அவனம்மா லதா தான் கதவைத் திறந்தார்.

"ம்மா … இன்னும் தூங்கலயா நீங்க , நான் தான் வந்ததும் ஃபோன் பண்றேனு சொன்னேன்ல "

"ராஜா... உங்க அப்பா சித்தப்பா எல்லாம் லேட்டா தான் பா வந்தாங்க .. ஏதோ கலை நிகழ்ச்சியாம், அப்படியே தூக்கம் போச்சு ....சரி நீ சாப்பிட்டியா… இல்லைனா சொல்லு தோசை ஊத்தறேன் , வெறும் வயித்துல படுக்கக் கூடாது … "

"ஃபிளைட்ல ஒரு பிரட் சாண்ட்விச் சாப்பிட்டதுதான்… மும்பைலருந்து சென்னை , சென்னைலருந்து தூத்துக்குடி , அங்கே இருந்து திருநெல்வேலி … அப்புறம் நம்ம ஊர் வரவே அரை மணி நேரம் ….ரொம்ப டயர்டா இருக்குமா …. நான் இருக்குற டயர்டுக்கு டிரஸ் கூட மாத்தாம அப்படியே பெட்ல விழுந்துரலாம் போல இருக்கு .... ப்ளிஸ் மா போய் படுக்குறேனே "

"சாண்ட்விச் என்னப் பத்தும். கிட்டதட்ட மூணு நாலு மணி நேரம் ஆச்சு.... நான் போய் தோசை சுடுறேன் . கை மட்டும் கழுவிட்டு சாப்பிடு அப்புறம் டிரஸ் மாத்திக்கலாம் ...." என்று விட்டு கிச்சனுக்குள் நுழைந்தார்.

பின்னாடியே வந்தவன் , " Mother is always…. a mother தான்…..முடிஞ்சா தோசை சுட்டு டேபிள்ல வைங்க , இல்லைனா பரவால்லமா காலைல சாப்பிட்டுக்கிறேன்."

அம்மாவின் பின்புறம் நின்று தோளைப் பிடித்தவனிடம் ,

"அம்மா எப்பவும் பிள்ளைங்களுக்கு அம்மாதானப்பா .. போய் கை கழுவு….உங்கப்பாவும் தாத்தாவும் வேற உன்னைய இன்னும் காணோம்னு தேடிட்டே இருந்தாங்க...."

"… அச்சோ இது வேறயா …ம்மா.... ம்மா ப்ளிஸ் .. நான் டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு சாப்பிட்டுக்கிறேன் …அப்புறம் அம்மா …அப்பா சித்தப்பால்லாம் என்ன கலை நிகழ்ச்சிக்குத் தெரியுமா போனாங்க… நம்ம கிராமத்து ஸ்பெஷல் கரகாட்டம் …."

" கரகாட்டத்துல அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு.... ஓ இந்தப் பானைத் தட்டு மேலல்லாம் ஏறி ஆடுவாங்களே அதுவா…. வருஷா வருஷம் நைட் இந்த ஆம்பிளைங்க மட்டும் போறாங்க ..அப்ப நானும் போயிருப்பேனே … வர்றேன்னதுக்கு வேண்டாம்னுட்டாரு...."

பலமாகச் சிரித்தவன் , " ம்மா நீங்க ஒரு ஸ்கூல் கரஸ்பான்டன்ட்னு சொல்றதே வேஸ்ட் … "

"இப்ப இந்தச் சிரிப்பு எதுக்குனு சொல்லு , வெளிய தான் நான் கரஸ்பான்டன்ட் அது இது எல்லாம் , வீட்ல உன் அம்மா , உங்கப்பாவுக்கு மனைவி அதோட திருநெல்வேலி பக்கத்துல இருக்கிற கிராமத்து பெரிய மனிதர் திருவாளர் விக்கிரமராஜா திருமதி சங்கர வள்ளிக்கு மருமகதான்."

அப்போதும் சிரித்துக் கொண்டே , " எங்கம்மாவ எனக்குத் தெரியாதா... மை க்யூட்… இன்னசன்ட் மம்.."

"நீ போய் டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா , காலைல சாப்பிடறானாம் காலைல… நான் உங்கப்பாகிட்டயே கேட்டுக்கிறேன் அது என்ன ஸ்பெஷல் கரகாட்டம்னு..." என்றவர் தோசை சுட ஆயத்தமாக, தன் பைகளை எடுத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே ,

"அப்பா மாட்டிக்கிட்டீங்களா …ஏன்டா இப்ப வாரங்கிற கேள்விலருந்து நான் தப்பிச்சேன்." என்றவாறு படியேறி, அவன் அங்கு வந்தாலே தங்கும் அந்த அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றான்.

"வாவ் ….அம்மா ஏசி போட்டே வச்சுட்டாங்களா … சித்திரை கொடை .. சித்திரை கொடைனு தாத்தா வெயில்ல வேக வச்சிருவாரே… " நினைத்தவாறே டீ ஷர்டை மட்டும் கழட்டிப் போட்டுவிட்டு , லைட் போடப் போனவன்… பின் வேண்டாம் என்ற முடிவுடன் , கட்டிலில் அவன் சொன்னது போலவே தொப்பென்று கட்டிலில் விழுந்தான்.

"ஆ… " என்ற அலறலில் வேகமாக எழ முற்பட… அதில் படுத்திருந்தவளும் எழ முயற்சி செய்ய , மொத்தத்தில் இருவராலுமே எழ முடியவில்லை"

"ஏய் எருமை மாடே எந்திரி டா"

" என்ன எரும மாடா.. நீ தான் எரும மாடு மாதிரி இருக்க , யாரு பூசணி நீ , என் ரூம்ல என் கட்டில்ல வந்துப் படுத்துருக்க "

அவள் மேல் படுத்துக் கொண்டேக் கேட்க , மெத்தையின் மென்மையைக் காட்டிலும் மென்மையாக இருந்த அவளது மேனி விக்ரமின் வெற்றுடம்பில் ஏதோ பாய்ச்ச , அவளோ அவனது நெஞ்சில் சதைப் பகுதியை கிள்ளிக் கொண்டே ,

" என்ன பூசணியா … நீ தான் டா யானைக்கணம் கனக்கிற… முதல்ல என் மேல இருந்து இறங்கு டா … " என்றவாறே அவனைத் தள்ளி விட்டு கட்டிலிலிருந்து இறங்கியவள் , ஒரு த்ரீ ஃபோர்த் நைட்பேன்ட்டும் சட்டையும் அணிந்திருந்ததால் , தோளை விட்டு சற்று நழுவியிருந்த டாப்ஸை சரி செய்தவாறே ,

" நீ தான் சங்கீதா அண்ணியும் , வித்யாவும் சொல்லிட்டு இருக்கிற விக்ஸ்டப்பாவா…. அவங்க ரெண்டு பேரும் கொடுத்த பில்டப்ல நானும் ஏமாந்துட்டேன்....ஷ்… ஆ… என் கை மேலயே வந்து விழுந்துட்டியே விக்ஸு …. வலிக்குது…."என அழுவது போல் பேசியவள்,

"அத்தைதத …." என்றுக் கத்தி அழைத்துக் கொண்டே மூடியிருந்த அறைக் கதவைத் திறந்து கெண்டு வெளியேற அறை வாசலில் கால் வைக்க , அவனும் மெத்தையை விட்டு இறங்கியவன் கட்டிலில் அவிழ்த்துப் போட்ட டீ ஷர்டை அணிந்துக் கொண்டே இரண்டெட்டிலேயே அவளைப் போக விடாது கைப் பிடித்து ,

"ஏய் பம்ப்கின்… ஷ்..... அழாதே... தெரியாம பட்டுருச்சு. ஆமா யார அத்தை சொல்ற … எங்கம்மாவையா , எங்க சித்தியையா … யாராயிருந்தாலும் அவங்ககிட்ட என்ன சொல்லப்போற ...."

முறைத்துக் கொண்டே , " நீ மேல விழுந்து கையப் பாரு…அத்தைக் கிட்ட காட்டப் போறேன்" என்றவள் அது வீக்கமாகிக் கொண்டு இருப்பதைக் காண்பிக்கவும் ,

" நான் உன் மேல விழுந்ததையா…. ஆளு சைசுதான் மைதா மாவு மலை மாதிரி பெரிசா இருக்க…. மூளையே இல்லயா உனக்கு … இப்படி ரூமுக்குள்ள நாம இருக்கிறதப் பார்த்தாலோ கேட்டாலோ எல்லாரும் என்ன நினைப்பாங்க … " என்றுப் பேசிக் கொண்டிருக்கும் போதே அவனது அம்மாவும் சித்தியும் மாடியேறி வருவது தெரியவும் , அவளுடன் அவனும் அறையை விட்டு வெளியேறி கையை பட்டென்று விட்டான்.

அவர்களைக் கண்டதும் , "அத்தை.... நீங்க என்ன சொன்னீங்க , அண்ணியும், வித்யாவும் லைட் ஆஃப் பண்ணதும் அவங்க ரூமுக்கு நானே வந்துக் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னீங்கள்ல… இப்பப் பாருங்க இந்த விக்ஸ் டப்பா என் மேல விழுந்து கையே வீங்கிப் போச்சு …."

" என்ன விக்ஸ் டப்பா விழுந்து கைவீங்கிப் போச்சா " என்றுக் கேட்ட விக்ரமின் சித்தியும் , அவளின் அப்பாவின் தங்கையுமான அத்தை பரணி கேட்கவும் ,

விக்ரமுக்கு சிரிப்பையும் , அவளுக்கு கோபத்தையும் அடக்க முடியவில்லை. அவள் கடுப்பாக ,

"அத்…தை " எனக் கத்த ,விக்ரமோ அவளை முந்திக் கொண்டு ,

"சித்தி இவ விக்ஸ்டப்பா மேல விழுந்து அது உடையாம இருந்தா தான் அதிசயம்… " என்று "கிண்டல் செய்தவனிடம் ஏதோ சொல்ல வந்தவளைத் தடுத்தவன் ,

"நான் ரூமுக்குள்ள வரவும் படக்குனு பேலன்ஸ் இல்லாம எந்திரிச்சா… அது….. "என்ன சொல்ல என்றுத் திணறியவன் , " டென்ஷல்ல விழுந்துட்டா.."

" என்ன டென்ஷனா " என்று அவளும்,

"பாப்பா நீ டென்ஷன் ஆனியா .... " என்று பரணியும் ஒன்றாகக் கேட்டனர்.

இப்போது விக்ரமும் அவன் அம்மாவும் புரியாது ஒருவரை ஒருவர் பார்க்க ,

"இல்ல எங்க பாப்பா டென்ஷனையே டென்ஷன் ஆக்குறவ ...." எனப் புன்னகைக்க ,


"அத்த..." என்று செல்லம் கொஞ்சி, அவனை முறைத்து
நல்லா சொல்லுங்க அத்தை …. எனக்காவது டென்ஷனாவது..." என்று முகத்தை தாடையில் வெட்டியவள் குதிரைவால் கொண்டை துள்ளப் பேச… அவளின் தாடையைப் பிடித்து,

"சாரி டா கொஞ்சம் கண் அசந்துட்டேன்....வாம்மா மருந்துப் போடலாம் .. " என்றுக் கைப்பிடித்து அழைத்துச் சென்ற பரணியுடன் அவளும் செல்லவும் ,

அம்மாவிடம் திரும்பியவன் , "யாரும்மா இந்த யானைக் குட்டி , சித்திக்கிட்ட ஓவராக் கொஞ்சுது...." என்றுக் கடுப்பாக

"ச்சூ… அப்படிலாம் சொல்லாதப்பா…. உங்க சித்தியோட அண்ணன் பொண்ணு , பேரு..... தெரியலேயேப்பா , வந்ததிலிருந்து பரணி பாப்பானு தான் அதிகமாக் கூப்பிடுறா … சின்னவ வருனு சொல்றா.... பரணிக்கிட்டதான் கேட்கணும். சரி நீ போய் படு … பெரியவ அமெரிக்கா போறா இல்லையா அது சம்மந்தமா ஏதோ எழுதுறாளாம் .. இவளுக்கு லைட் இல்லனா தான் தூக்கம் வரும்னு உன் ரூம்ல நீ வர வரை படுக்க சொல்லிருக்கா பரணி … உன் கார் சத்தம் கேட்டதும் எழுந்து வந்தா.... பாவம் சின்னப்புள்ள கைவீங்கிருச்சு …. ஆமா அதென்னப்பா விக்ஸ்டப்பா விழுந்து வீங்கிருச்சுங்கிறா…. "

"ம்மா....அவதான் லூசு மாறி உளறிட்டுப் போறா... இதுல நீங்களுமா .... நீங்க அப்பா கிட்டப் போய் ஸ்பெஷல் கரகாட்டம்னா என்னனு கேளுங்க , குட் நைட்… " என்றவனிடம் ,தட்டையும் தண்ணீரையும் தந்து விட்டுச் சென்றார். வாங்கிக் கொண்டவன் , அறைக்குள் நுழைந்துக் கொண்டே,

" என்ன சித்திக்கு அண்ணன் பொண்ணா , அப்ப திலீபனுக்கு சித்தப்பா பொண்ணா…. அவன் யாரப் பார்த்தாலும் மாமா , பெரியப்பா , சித்தப்பானு கூப்பிடுவான் .. இதுல திருவிழாவுக்கு ஒரு கும்பலே அங்க இருப்பாங்க … இவ எந்த சித்தப்பா பொண்ணோ…" மனதினுள் நினைத்து தோளை குலுக்கிக் கொண்டவன் சாப்பிடாமலே படுத்துக் கொண்டான்.

உறங்கிக் கொண்டிருந்தவன் காதினுள் ஏதோ ஊர்வது போல் தோன்ற இமைகளைப் பிரிக்கவே சிரமபட்டவன் காதினுள் விரல் விட்டு தட்டிவிட முயல ,

"ஏய் அண்ணா எந்திரி எந்திரி ….போதும் தூங்குனது .. தாத்தாவும் பாட்டியும் உன்னைய தேடிட்டே இருக்காங்க, எல்லாரும் உனக்காக தான் வெய்டிங் … வா வா ரெடியாகு…."

" கீது .. விது ப்ளீஸ் கொஞ்ச நேரம் கழிச்சு எந்திரிக்கிறேனே… " என்று விட்டு வசதியாகக் குப்புறப் படுத்து தலையணையில் முகம் புதைத்துக் கொண்டவனிடம் ,

" ண்ணா , மணி பதினொன்னு ஆகப் போகுது , கோயிலுக்குப் போகணும் சீக்கிரம் எந்திரி ....."

"அண்ணிவாங்க நாம முதல்ல போகலாம்… திலீபண்ணா , உங்கண்ணி இன்னும் கிளம்பலயானு ஃபோன்ல கேக்குறாங்க… "

அவள் குரல் கேட்டது தான் தாமதம் வேகமா எழுந்து வாசலுக்கு முதுகு காட்டி அமர்ந்தவன் , " இந்த பம்ப்கின் இங்க தான் இருக்கா ,கை கைனு அலறிச்சு…"

நினைத்துக் கொண்டு இருக்கும் போதே திரும்பிப் பார்க்க , அவள் நகர்ந்திருந்தாள் .

"கீதும்மா யாரு உன்னை அண்ணினுட்டுப் போறது" எனத் தெரியாதது போல் கேட்க ,

"யாரா... பெரியம்மா உங்கிட்ட சொல்லல...நைட் அவ கை மேல வந்து விழுந்து கைய வீங்க வச்சுருக்க , உடையாததுதான் மிச்சம். இதுக்கே அவ வீட்லப் பெரிசா கட்டுப் போட்டு விட்டுருக்காங்க … "

அசடு வழிந்தவன் , "அந்த லூசு சொல்லிருச்சா… சொல்லாதனு சொன்னேன்...."

"ரூமுக்குள்ள வந்து எங்ககிட்ட மட்டும் தான் சொன்னா.... நாங்க தான் வேற யார்கிட்டயும் சொல்லதனு சொல்லி வச்சுருக்கோம். இல்ல ஊருக்கே டமாரம் அடிச்சிருப்பா..." என்ற சங்கீதா நகர ,

"ண்ணா அவள லூசுனலாம் சொல்லாத … ரொம்ப நல்ல பொண்ணு… அக்கா வா நாம கிளம்புவோம்" என்ற வித்யா , சங்கீதாவையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.

"வருஷத்துக்கு ஒரு தடவ தான் இவங்க இங்க வரதே….இப்ப வந்து பத்து நாள்தான் ஆகுது. அதுக்குள்ள பம்ப்கினுக்கு இவ்வளவு சப்போர்ட்டா…" புலம்பியவாறே குளித்து முடித்து கீழே வந்தவன் அவன் தாத்தா விக்கிரமராஜா , பாட்டி சங்கர வள்ளி , அவன் அப்பா செல்வராஜ் , சித்தப்பா இன்பராஜ் என நடுக் கூடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களிடம் சென்றான். அவனது தாத்தா ,

"பேரா… உனக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கிறோம் .. இப்ப நம்ம குடும்பத்துல ஒரே ஆண் வாரிசு நீ தான , கோவில்ல பூஜைக்கு ஏற்பாடு பண்ணியிருக்கு , முடிஞ்சா வேட்டிக் கட்டிட்டு வா… இல்லைனாலும் பரவாயில்ல … நாங்க முன்னப் போறோம். நீ சாப்பிட்டுட்டு அம்மாவ கூட்டிக்கிட்டு வந்துரு" என்றவாறு கிளம்பிச் சென்றனர்.

சென்று டைனிங் டேபிளில் அமர்ந்தவன் அருகில் வந்த அவனது தந்தை செல்வராஜ்… அவனது முதுகில் தட்டி ,

"விக்கி அம்மாகிட்ட என்னடா சொல்லிவச்ச… காலையிலருந்து ஸ்பெஷல் கரகாட்டத்துக்கு என்னைய ஏன் கூட்டிட்டுப் போகலனு கேட்க்கிறாடா…. "

"ப்பா அவங்க கேட்கணும்னு தானே சொல்லியே வச்சேன்...." என்றுக் கண்ணடிக்க, அவனிடம் , "மகனே" என்று ஏதோ சொல்ல வர , இன்பராஜ் அருகில் வரவும் ,

"ம்… சரி கிளம்பி வா " என்று விட்டுக் கிளம்ப , இன்பராஜும் விக்ரமிடம்,

" மை டியர் சன்… உங்க சித்திக்கிட்ட எங்கள போட்டுக் கொடுத்திட்டியே … மருமகளும் … மருமகனும் வர்ற வரை எங்களையும் இளமையா இருக்க விடுப்பா....."

"இன்பா … உனக்கும் இதே நிலை தானா…." என்ற செல்வராஜ் வாய் விட்டு சிரிக்க ஆரம்பிக்க , அதற்குள் லதாவும் பரணியும் அவனுக்கு சாப்பாடை எடுத்து வர ,

" லதா அவனச் சீக்கிரம் கிளப்பிட்டு வா " என்றவாறு கிளம்பி விட்டனர்.

"விக்கி அடுத்த வருஷம் எங்களையும் கூட்டிட்டுப் போகச் சொல்லியிருக்கோம் பா" என்றவாறே பரணி அவனுக்கு தட்டில் உணவுப் பரிமாற ஆரம்பிக்க ,

விக்ரமிற்கு சிரிப்பை அடக்க முடியாது சிரிக்க ஆரம்பிக்க ,

"ஷ் .... மெதுவா புரையேறப் போகுது" என்ற பரணியிடம் ,

"அத்தை பெரியம்மா இந்த டிஷ் கொடுத்து விட்டாங்க , அவங்க மருமகனுக்கு ரொம்ப பிடிக்குமாம் " என்ற வரு ஒரு ஹாட் பாக்ஸைத் தர ,டேபிளில் அமர்ந்திருந்தவன் பின்னால் அவள் நின்றிருந்ததால் இப்போதும் அவள் குரல் மட்டுமே கேட்டது.

" ராணி தான …அவ அண்ணன் மகனுக்கு பிடிச்சதெல்லாம் கொண்டு வந்து அடுக்கிடுவாளே.... இந்தாப்பா உங்கத்தை கருப்பட்டி பணியாரம் தந்துருக்கா சாப்பிடு" என லதா வாங்கி அதை அவன் தட்டில் வைத்தார். திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற விக்ரம் திரும்பிப் பார்ப்பதற்குள் , அவள் அந்த அறையை விட்டு வெளியேறி விட்டாள்.

"இதென்ன பம்க்கின்னப் பார்க்க தோணிட்டே இருக்கு ... " தலையை உலுக்கிக் கொண்டவன் சாப்பிட்டுவிட்டு அம்மா சித்தியோடு கோவிலுக்குச் சென்றான்.

இன்று அவர்களது பூஜை என்பதால் அனைவரும் சந்நிதானத்தின் முன் கண்மூடி நிற்க, விக்ரம் "கண்ல ஒத்திக்கோ " என்ற லதாவின் குரலில் கண்களைத் திறக்க , விழி திறந்தவனின் எதிரில் அழகிய ரோஜா வண்ண சுடிதாரில் தோள் வரை மட்டுமே இருந்த கூந்தலில் மல்லிகைப் பூச்சூடி , ஒரு கையில் எலாஸ்டிக் பேன்டேஜ் கட்டுடன் கரங்களைக் குவித்து விழி மூடி …தன் தங்கைகளோடும் .. இன்னும் சில இளம் பெண்களோடும் நின்றவளைப் பார்த்தவன் ஒரு நொடி அசந்துதான் விட்டான். அவள் முகத்தையும் ஆடையின் நிறத்தையும் ஒப்பிட்டால் .. ஆடையின் நிறம் தோற்றுத்தான் போகுமோ ….

"என்னடா இது… பம்கின் இப்படி காஷ்மீர் ஆப்பிள் போல பளபளனு இருக்கா… விக்கிரமா சம்மர்ல சன்கிளாஸ் பேடாமையே கண்ணு குளு குளுனு தான் இருக்கு …. "

" தங்கச்சி ஃபிரண்ட்ஸ் எல்லாம் தங்கச்சியா தான் பார்த்தேன்.. இவள அப்படிப் பார்க்கத் தோணலயே…. ஒரு வேளை மாமா பொண்ணுன்னு அப்படித் தோணுதோ.."

எதிரில் அவனது மாமா முறையுடைய நிறையப் பேர் இருக்க ,

"இவ எந்த மாமா பொண்ணு தெரியலயே … ஸ்கூல் படிக்கும் போது ஆளுக்கொரு பொண்ணுங்கள உச்சிக் குடுமிப் போட்டு தூக்கிட்டு வருவாங்க …எந்த மாமாவா இருந்தா என்ன .... மாமா பொண்ணு ... சைட் அடிச்சிட்டுப் போவியா … இதுல எந்த மாமா பொண்ணு இவனு ஆராய்ச்சிப் பண்ணிட்டு ....." என்று அவனுக்கவனே சொல்லி சிந்தித்துக் கொண்டும் சிரித்து கொண்டும் இருந்தவன், விழி அகற்றாது அவளையேப் பார்த்துக் கொண்டு இருக்க,

"பேரா" என்ற தாத்தாவின் அழைப்பு தான் அவனை இயல்புக்கு கொண்டு வந்தது.

'தூவிய தேன் மழையில் முதல் துளியும் அமிர்தமாய்…."

தூவும் ......
 
உங்களுடைய "தேன்மழை
தூவுதடி"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ஷான்விசரண் டியர்
 
Top