Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தாலாட்டும் தென்றல் 7....

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 7.

வீட்டில் கலவரம் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓடி விட்டது. சபா சங்கரியோடு முகம் கொடுத்தே பேசவில்லை. "உன் தங்கச்சியா இருந்தா நீ இப்படி பட்டும் படாம இருந்திருப்பியா? என்ற ஒற்றைக் கேள்வியோடு முடித்துக்கொண்டான். தலையில் அடித்தாற் போலிருக்க சங்கரி தன்னை ஆமையாகச் சுருக்கிக் கொண்டாள். அண்ணி தான் அவசரப்படாதேன்னு சொன்னாங்க. நீங்க தாராளமா மாப்பிள்ளை பார்க்கலாம். எனக்குப் பிடிச்சிருந்தா கட்டிக்கத் தடையில்லை என ராணி சொல்லவே நிலைமை கொஞ்சம் சரியாது. சபா, முத்து, மாணிக்கம் என அவர்களுக்குத் தெரிந்த இடங்களில் மாப்பிள்ளை பார்த்தார்கள். சண்முகம் எதிலுமே பட்டுக்கொள்ளவில்லை. தங்கம்மாளுக்கோ தன் அண்ணன் மகனைக் கட்டவில்லை என்ற கோபம். ராணி எப்போது தன்னை மாட்டி விட்டாளோ, அப்போதே அவளிடம் பேசுவதைக் குறைத்துக்கொண்டாள் சங்கரி. ஆனால் ராணி அப்படி இருக்க விடவில்லை. சுற்றுச் சுற்றி வந்தாள். சமையல் கற்றுக் கொண்டாள்.

"அண்ணி! என் மேல உங்களுக்குக் கோபம் போகல்ல இல்ல?" என்றாள்.

"உன் மேல எனக்கென்னம்மா கோபம்?"

"நீங்க சும்மா சொல்றீங்க? என் காதல் உங்களுக்குத் தெரியும்னு சொன்னது தானே கோபம்?"

மௌனம் சாதித்தாள் சங்கரி. அவள் முகத்துக்கு நேராக வந்து நின்று கொண்டாள் ராணி.

"அண்ணி! நான் செஞ்சது தப்புத்தான் தான். ஆனா ஏன் செஞ்சேன்னு தெரியுமா?"

"சொல்லு"

"நம்ம வீட்டுல அம்மா, அப்பா அண்ணனுங்க எல்லாருக்கும் உங்க மேல ரொம்ப நம்பிக்கை. நீங்க எந்தத் தவறும் நடக்க விட மாட்டீங்கன்னு அவங்களுக்குத் தெரியும். என் காதல் உங்களுக்குத் தெரியும்னு நான் சொன்னதால அவங்க நான் தப்பு எதுவும் செய்யல்ல, நடக்கல்லன்னு நம்புனாங்க. உண்மையிலேயே நான் தப்பு செய்யல்ல அண்ணி" என்றாள் முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு.

சட்டென சிரித்தாள் சங்கரி. மனதின் பாரம் காணாமல் காணாமல் போய் விட்டது.

"எதுக்கு சிரிக்கறீங்க?" என்றாள் சலுகையாக மேலே சாய்ந்து கொண்டு. நாத்தியின் தலையை வருடிக் கொடுத்தாள் சங்கரி.

"நீ ரொம்பச் சின்னப்பிள்ளைன்னு எல்லாரும் நினைக்கறாங்க. ஆனா நீ எவ்வளவு விவரமா யோசிக்குற? சரி, நானே கேக்கணும்னு நெனச்சேன். அந்தப் பையனை நீ காதலிக்குறியா இல்லியா?"

"காதல்னா என்ன அண்ணி?"

"நான் என்னத்தைக் கண்டேன்? ஏதோ சினிமாவுல நாடகத்துல காட்டுறாங்க. ஒருத்தி ஒருத்தனை மனசால நெனச்சுட்டா அவனைத்தவிர வேற யாரையும் கட்டிக்க மாட்டான்னு. அதான் காதல்னு நான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா நீ சொல்லுறது வித்தியாசமா இருக்கே?" என்றாள்.

அண்ணியை ஏற இறங்கப் பார்த்தாள். சமையற்கட்டில் அவர்கள் இருவரையும் தவிர யாருமில்லை. நெருங்கி வந்து அண்ணியைக் கட்டிக்கொண்டாள்.

"நீங்க கேப்பீங்கன்னு நெனச்சேன் அண்ணி. நான் சொல்லுறது உங்களுக்குத் தப்பா தோணுச்சுன்னா என்னைக் கண்டிங்க"

"முதல்ல சொல்லு"

"காதல் புனிதமானது அப்படி இப்படின்னு சொல்றதுல எனக்கு நம்பிக்கை இல்லை. என்னைப் பொறுத்தவரை என் வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும். நிறையப் பணம் வேணும் அதே நேரத்துல அன்பும் ரொம்ப நிறைய வேணும். என்னால சில வசதிகளை விட்டுக்கொடுக்கவே முடியாது. இப்படி இருக்கும் போது நான் எவனையாவது கண்மூடித்தனமா காதலிச்சு, வீட்டுல இருந்து வெளியேறி...சின்ன வீட்டுல எல்லா வேலையும் செஞ்சுக்கிட்டு கஷ்டப்பட எனக்கு இஷ்டமில்ல. அதனால தான் அப்படிச் சொன்னேன்" என்றாள்.

சங்கரிக்கு ஒரே வியப்பு. இந்த பதில் அவள் ஓரளவு எதிர்பார்த்தது தான் என்றாலும் ராணியின் புத்திசாலித்தனத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. எத்தனை இளம் பெண்கள் காதல் என்ற பெயரில் ஏமாந்த்திருக்கிறார்கள்? கஷ்டப்பட்டிருக்கிறார்கள். கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்? ஆனால் இன்றைய மாறி வரும் தலைமுறை எத்தனை தெளிவாக சிந்த்திக்கிறது? ராணியைப் போல அனைவரும் சிந்தித்தால் நன்றாகத்தான் இருக்கும்.

"என்ன அண்ணி? அப்படியே சிலை மாதிரி நின்னுட்டீங்க?

"ஒண்ணுமில்ல! ஒரு வேளை உன் அண்ணன், நீ சொன்னா மாதிரியே மாப்பிள்ளை பார்த்துட்டா என்ன செய்வே?"

ஒரு கணம் தயங்கியவள் பேசினாள்.

"நிச்சயமா பின் வாங்க மாட்டேன் அண்ணி. நிதியை விட அண்ணன் பார்த்த மாப்பிள்ளை எல்லா வகையிலும் மேலானவர்னா அவரைக் கட்டிக்கத் தயங்க மாட்டேன்." என்றாள் உறுதியான குரலில்.

ஆனால் அப்படி நடக்க வாய்ப்பில்லை போலத்தான் தெரிந்தது. ஒரு மாதத்துக்கும் மேலாகத் தேடியும் அனைவருக்கும் பிடித்த மாதிரியான மாப்பிள்ளை அமையவே இல்லை. இறுதியில் சபா தான் சொன்னான்.

"இப்படி நாம கஷ்டப்பட்டு தேடுறதை விட, அந்தப் பையன் அதான் அருள் நிதி பத்தி விசாரிச்சுப் பார்க்கலாம்னு தோணுது. நீ என்ன சொல்ற சங்கரி?" என்றான்.

"உங்க இஷ்டம்!"

"ஏன் இப்படி பதில் சொல்ற? ராணி வாழ்க்கையில உனக்கு அக்கறை இல்லியா?"

"கட்டாயம் இருக்குங்க! ஆனா இதெல்லாம் ரொம்பப் பெரிய முடிவு. இதை நீங்க எடுக்குறது தான் நல்லது"

"சரி! நாளைக்கே நான் பேசிடறேன்"

சொன்னபடியே செய்தான். அருள் நிதியின் வீட்டு விலாசம் கேட்டு வாங்கி அவர்களைப் பற்றி விசாரிக்கச் சொன்னான். இது தெரிந்தும் தெரியாதது போல நடந்து கொண்டாள் ராணி. விசாரித்த வரையில் அவர்கள் குடும்பம் நல்ல விதமாகவே தெரிந்தது. அப்பா இல்லை. அக்காக்கள் மூவர். மூவருக்குமே திருமணமாகி விட்டது. வயதான தயாருடன் நிதி தனியாக வசிக்கிறான். அது அவர்களது சொந்த வீடு. சமீபத்தில் தான் அவனுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்திருக்கிறது. என்ற விவரங்கள் கிடைத்தன. அதோடு பையனுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை என்பது அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்தது. பேசாமல் அவள் ஆசைப்பட்ட படி அந்தப் பையனையே ராணிக்கு முடித்து விடுவது என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் சில முட்டுக்கட்டைகள் இருந்தன.

முதல் முட்டுக்கட்டை அவன் தயார். வயதானவள், மகனோடு தான் வாழ ஆசைப்படுவாள். அவனை வீட்டோடு வைத்துக்கொண்டால் அவன் அன்னை எங்கே இருப்பாள்? அதோடு அவன் வீட்டோடு மாப்பிளையாக இருக்க சம்மதிப்பானா? என்ற கேள்வியும் வந்தது. எல்லாவற்றையும் தீர்த்துக்கொள்ள அருள் நிதி வீட்டுக்கு அழைக்கப்பட்டான். அவனோடு அவன் தமைக்கையர், தாய் என ஒரு கூட்டமே வந்தது. சம்பந்திகள் என்பதால் கொழி அடித்துக் குழம்பு வைத்தாள் சங்கரி. பிரியாணி ஏன் செய்யவில்லை என முகத்தைத் தூக்கிக் கொண்டாள் ராணி. சிறு பெண், தானாகவே சரியாகி விடுவாள் என நினைத்து விட்டு விட்டாள் சங்கரி. சம்பந்திகளிடம் பேசும் போது கட்டாயம் சங்கரியும் உடன் இருக்க வேண்டும் என சபா சொல்லி விட்டதால் சமையற்கட்டு வேலையை சீக்கிரமே முடித்துக்கொண்டு வந்தாள்.

சரியான நேரத்துக்கு அவர்கள் வந்து விட்டனர். தமக்கைகளையும், தாயையும் பார்த்தால் பாவமாக இருந்தது. பெரிய வீட்டுக்கு வருகிறோம் என கொஞ்சம் பதட்டத்துடனே தான் இருந்தனர். அருள் நிதியும் பயத்தோடு அமர்ந்திருந்தான். சபா பெரிய மனித தோரணையோடு அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தான். சண்முகமும், தங்கம்மாளும் யாருக்கு வந்த விருந்தோ? என பேசாமல் அமர்ந்திருந்தனர். முத்துவும், மாணிக்கமும் அண்ணன் பேசட்டும் எனக் காத்திருந்தனர். சங்கரி வந்த உடன் பேச்சை ஆரம்பித்தான் சபா.

"இதைப் பாருங்க! எங்க தங்கச்சி உங்க தம்பியை ஆசைப்பட்டுட்டான்னு தான் நாங்க இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறோம்."

"ரொம்ப மகிழ்ச்சிங்க" என்றாள் மூத்த அக்கா அமுதா.

"ஆனா! எனக்கு சில நிபந்தனைகள் இருக்கே? அதைக் கேட்டுட்டுச் சொல்லுங்க" என்றான் சபா மீண்டும் தோரணையாக.

"சொல்லுங்க"

"எங்க தங்கச்சி இந்த வீட்டை விட்டுட்டு வர மாட்டா. அதனால மாப்பிள்ளை தான் இங்க வரணும். அதாவது கொச்சையா சொன்னா வீட்டோட மாப்பிள்ளை. நீங்க அடிக்கடி வந்து பார்த்துக்கலாம், அதுக்கு நாங்க தடை சொல்ல மாட்டோம்" என்றான்.

சங்கரிக்கு வந்தவர்களைப் பார்க்க பாவமாக இருந்தது. என்ன இருந்தாலும் மகனைப் பெற்றவர்கள். இப்படியா பேசுவது? என எண்ணிக் கொண்டாள். ஆனால் அவர்கள் அதைப் பற்றிக் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. அமுதா தன் கணவனைப் பார்த்தாள். அவரோ வீட்டின் விட்டத்தில் ஏதோ புதையல் இருப்பது போல அதையே பார்த்துக்கொண்டிருந்தார். இளையவள் கலைவாணி. அவள் தரையை வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளது கணவனோ அவளை விட்டுப் பார்வையை அகற்றவே இல்லை. பாவம் அந்தத் தாய். மூன்றாவது அக்கா அகிலா அவள் தான் சங்கரியை பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் ஏதோ பேச விரும்புவது போலவும் ஆனால் தயங்குவது போலவும் பட்டது சங்கரிக்கு.

"எனக்கு சம்மதம் தான். நீ என்னக்கா சொல்ற?" என்றான் அருள் நிதி.

"அவசப்படாதப்பா! வீட்டுக்குப் ப்போயி நாம கூடிப் பேசி அப்புறமா முடிவு சொல்லுவோம்" என்றாள் அகிலா.

"இதுல யோசிக்க என்ன இருக்கு? என் வருங்காலம் பிரகாசமா இருக்கணும்னா நான் இதை செஞ்சு தான் ஆகணும்." என்றான். அவனை அறையலாமா? என்றிருந்தது சங்கரிக்கு.

"மாப்பிள்ளைக்கு அவசரம். ஆனா சார்! இது சட்டுன்னு முடிவு பண்ற விசயம் இல்லை. ஏன்னா, இப்ப என் மாமியார், அதாவது கலைவாணியோட அம்மா நிதி கூடத்தான் இருக்காங்க. அவங்க எப்படித் தனியா இருப்பாங்கன்னு யோசிக்கணும் இல்ல?" என்றார் கலைவாணியின் கணவர் பூபதி.

"அதைப் பத்தி எங்களுக்குத் தெரியாது. எங்க நிபந்தனை இது தான். நீங்க தாராளமா வீட்டுக்குப் போய் பேசிட்டுச் சொல்லுங்க" என்றான் சபா. அவன் குரலில் ஆணவம் இருந்த்தோ எனக் கவலைப் பட்டாள் சங்கரி.

"ஏன் மாமா? அம்மா எனக்கு மட்டும் தானா? கலைக்கும், அமுதாக்காவுக்கும் அகிலாவுக்கும் அம்மா இல்லையா? ஏன் எங்கம்மா உங்க வீட்டுல இருந்தா என்ன குறைஞ்சு போயிரும்?" என்றான் அருள் நிதி. வயதான அந்த அன்னையின் முகம் சுருங்கி விட்டது. கண்களில் நீர் வரட்டுமா? வேண்டாமா? என்றது. இவன் என்ன ஆண்மகன்? பெற்ற அன்னையை விட பெண் வீடே சொர்க்கம் எனத் தோன்றுமா? இவனா ராணியைக் காலம் முழுக்க வைத்துக் காப்பாற்றப் போகிறான்? என எண்ணிக் கொண்டாள் சங்கரி.

"அமுதா, கலை., அகிலா..என்னைப் பத்திக் கவலைப் படாதீங்கம்மா! எனக்கு உங்கப்பா வெச்சுட்டுப்போன வீடு இருக்கு. அதுல நான் வாழ்ந்துப்பேன். ஒரு போர்ஷனை வாடகைக்கு விட்டா, காசுக்குக் காசும் ஆச்சு, துணைக்குத் துணையும் ஆச்சு. நிதி என்ன ஆசைப் படுறானோ அப்படியே நடக்கட்டும்" என்றாள் தளர்ந்த குரலில். அவள் காலில் விழுந்து வணங்க வேண்டும் போல இருந்தது சங்கரிக்கு. என்ன ஒரு அன்பு மயமான மனது? தன் மகன் நன்றாக இருக்கட்டும் என்பதற்காக தன்னைத் தனிமைப் படுத்திக்கொள்ள சம்மதித்திருக்கிறார்களே? என்று எண்ணிக் கொண்டாள்.

அதன் பிறகு சூழ்நிலை கலகலப்பானது. முத்து, அனைவரையும் அழைத்துப் போய் வீட்டைச் சுற்றிக் காட்டினான். மாணிக்கம் அவர்களிடம் தங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது எனவும், அவர்கள் நினைத்தால் என்னென்ன செய்ய முடியும் என்பதைப் பற்றியும் பீற்றிக் கொண்டிருந்தான். இவற்றில் பட்டும் படாமலும் இருந்தார்கள் அகிலாவும் கலையும். மதிய உணவை சுவைத்து உண்டு விட்டுக் கிளம்பியது அந்தக் குடும்பம். சம்பிரதாயத்துக்கு பெண் வீட்டார் ஒரு முறை சென்று அவர்கள் வீட்டைப் பார்த்து விட்டால் திருமணத்துக்கு நாள் குறித்து விடலாம்.

அடுத்த வாரத்திலேயே மாப்பிள்ளை வீடு பார்க்கச் சென்றார்கள். அங்கேயே எல்லாம் பேசி முடித்து முஹூர்த்ததுக்கும் நாள் குறித்தாயிற்று. இன்னும் ஒரே மாதத்தில் திருமணம். இந்த நிலையில் தான் சங்கரி ராணியோடு பேச வேண்டும் என முடிவெடுத்து அவளை அழைத்துக்கொண்டு பக்கத்து சிவன் கோயிலுக்குச் சென்றாள்.
 
Nidhi nee rumba nalla paiyan da rani ara loose na ivan um loose ah irukane, inda loose enna pesa poralo idula theliva irukardu sankari dan nice update dear thanks.
 
நிதி நல்ல விவரம்....ஆனா ராணிய நம்பி கல்யாணத்துக்கு ஒத்துக்கிறத பார்த்தா பாவமா இருக்கு....இதையும் பாதிலயே கூட நிறுத்துனாலும் நிறுத்துவா...
 
நிதி நல்ல விவரம்....ஆனா ராணிய நம்பி கல்யாணத்துக்கு ஒத்துக்கிறத பார்த்தா பாவமா இருக்கு....இதையும் பாதிலயே கூட நிறுத்துனாலும் நிறுத்துவா...

இந்தக் காலத்துப் பசங்க எல்லாம் நல்ல விவரம் தான்.
 
Nidhi nee rumba nalla paiyan da rani ara loose na ivan um loose ah irukane, inda loose enna pesa poralo idula theliva irukardu sankari dan nice update dear thanks.
இதுல ராணிக்குத் தான் ரொம்ப நல்லா சிந்திக்கறோம்னு நெனப்பு வேற! எங்கே போயி சொல்ல?
 
Top