Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தாலாட்டும் தென்றல் 13....

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 13.

சபா கேட்ட தொனி மற்றவர்களை வியப்பிலும் ஆத்திரத்திலும் ஆழ்த்தியது. குணா பேசினார்.

"என்ன இப்படிக் கேக்குறீங்க? கல்யாணம் முடிஞ்சு மூணு மாசம் கூட ஆகாத நிலையில உங்க தங்கச்சி என் மச்சான் கூட சண்டை போட்டுக்கிட்டு வந்துட்டா. அவளுக்கு புத்தி சொல்லி புருஷன் வீட்டுக்கு அனுப்புறதை விட்டுட்டு என்ன பிரச்சனைன்னு கேக்குறீங்க?" என்றார். அவர் குரல் அமைதியாக இருந்தாலும் எகத்தாளம் இருந்தது.

கொஞ்சம் கூட தன் நிலையில் இருந்து நகரவில்லை சபா. மாணிக்கமும், முத்துவும் சேர்ந்து கொண்டார்கள். ஆனாலும் நிதி பொறுமையை இழக்கவில்லை.

"மச்சான்! அன்னைக்கே நான் மாணிக்கம் மச்சான் கிட்ட என் நிலையைச் சொன்னேன். அவரும் ஏதோ கோவத்துல தங்கச்சியைக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாருன்னு தான் நெனச்சேன். ஆனா அவ ஊருக்கு வந்து பத்து நாளைக்கு மேல ஆகப்போகுது. நான் ஆபீசைப் பாப்பேனா? வீட்டை கவனிப்பேனா? சொல்லுங்க" என்றான் நிதி தன்மையாக.

"இதைப் பாரு நிதி! என் தம்பி அங்க நடந்ததை எல்லாம் விலாவாரியா எங்கிட்ட சொல்லிட்டான். வீட்டு வேலை செய்யச் சொன்னியாம், சமைக்கச் சொன்னியாம். இதெல்லாம் என்ன?" என்றான் சபா.

பொங்கி வந்த சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள் சங்கரி. ஆனால் நிதியின் தமக்கை அகிலா கோபப்பட்டாள்.

"என்ன பேசுறீங்க? ஒரு பொண்ணை வீட்டு வேலை செய்யச் சொல்றது அவ்வளவு பெரிய குத்தமா? நல்லா இருக்கே நியாயம்?" என்றாள்.

அவளை முறைத்தான் மாணிக்கம். முத்து "ஹூம்" என்றான். அவர்களைக் கையமர்த்தி விட்டுப் பேசினான் சபா.

"நான் கல்யாணம் பண்ணும் போதே சொன்னேன்! என் தங்கச்சி செல்லமா வளர்ந்தவன்னு. அவளை ஏன் கஷ்டப்படுத்தணும்?"

"மச்சான்! என் சம்பளத்துல இப்படித்தான் வாழ முடியும்" என்றான் நிதி பளிச்சென.

"இதைத்தான் தப்புன்னு சொல்லுது தங்கச்சி. எங்க கிட்ட இல்லாத பணமா? தங்கச்சிக்காகத்தானே நாங்க சம்பாதிக்கறோம்? மாசம் இவ்வளவு குடுன்னா குடுத்துட்டுப் போறோம்?" என்றான் சபா திமிராக.

யாரும் பதிலே பேசவில்லை. அமைதியாகக் கழிந்தன சில நொடிகள். தங்களுக்குள் மெல்லப் பேசிக் கொண்டார்கள் வந்தவர்கள்.

"இதைப் பாருங்க! எந்தம்பிக்கு இதுல இஷ்டமில்ல." என்றாள் அகிலா.

"இதுக்கு இஷ்டமில்லாதவுரு ஏன் வீட்டோட மாப்பிள்ளையா இருக்க சம்மதிச்சாராம்?" என்றாள் ராணி கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல். அவளை முறைத்தான் நிதி.

"தங்கச்சி கேக்குது இல்ல? பதில் சொல்லு" என்றான் முத்து இளக்காரமாக.

"நான் பதில் சொல்லிருவேன். ஆனா உங்க தங்கச்சி தான் மாட்டுவா. பரவாயில்லையா?" என்றான் நிதி கிண்டலாக.

"என்ன? என்ன? எதுக்கு மிரட்டுற? சொல்லேன் உனக்கு தைரியமிருந்தா" என்றாள் ராணி திமிராக.

தொண்டையைக் கனைத்துக்கொண்டான் நிதி.

"மச்சான். ராணி என் கூடப் பழக ஆரம்பிச்ச நாள்ல இருந்து வீட்டோட மாப்பிள்ளையா வரதுக்கு எனக்கு இஷ்டமில்லன்னு தான் சொன்னேன். ஆனா அதுக்கு அவ முதல்ல ஒத்துக்கோ! அப்பத்தான் எங்க வீட்டுல சம்மதம் குடுப்பாங்க. அப்புறமா நாம சென்னையில வேலை கெடச்சிருச்சுனு சொல்லிட்டுப் போயிருவோம்னு சொன்னா. அதனால தான் நான் அப்படி ஒத்துக்கிட்டேன். திட்டம் போட்டதே அவ தான்" என்றான்.

இந்த விஷயம் ஏற்கனவே தெரிந்ததால் சங்கரிக்குப் பெரிதாக அதிர்ச்சி இல்லை. ஆனால் உடன் பிறந்தவர்கள் எப்படி இதனை ஜீரணிப்பார்கள்? இதற்கு அவள் அண்ணன் என்ன சொல்லப் போகிறார்? என்று காதை தீட்டி கவனித்தாள். சங்கரி தான் அசந்து போனாளே தவிர சபா அசரவேயில்லை.

"இருக்கட்டுமே! என் தங்கச்சி அப்படி சொன்னதாகவே இருக்கட்டும். அப்படி அவ ஏன் சொன்னா? எங்க மனசும் நோகக் கூடாது, நிதி மனசும் நோகக் கூடாதுன்னு சொல்லியிருக்கா. அவ உன்னை நம்புனா. ஆனா நீ? அவளை ஆசை காமிச்சுக் கூட்டிக்கிட்டுப் போயி இப்படி மோசம் பண்ணிட்டியே?" என்றானே பார்க்கலாம். சட்டென எழுந்து விட்டான் நிதி.

"மாமா! இதுக்கு மேலயும் நாம பேசணுமா?" என்றான் அக்காவின் கணவனிடம். குணா சமாதானப் படுத்தினார். பேச்சு தொடர்ந்தது.

"பழைய கதையை விடுங்க சார்! இப்ப உங்க தங்கச்சி என் மச்சான் கூட சென்னைக்குப் போகப் போறாளா? இல்லியா? இதுக்கு ஒரு பதிலைச் சொல்லுங்க" என்றார் குணா.

மூச்சைப் பிடித்துக்கொண்டு கேட்டாள் சங்கரி.

"இதைப் பாருங்க! ஒரு வார்த்தையில இதுக்கு பதில் சொல்ல முடியாது. ஏம்மா? ராணி? நீ என்ன சொல்ற?" என்றான் சபா. மற்றவர்களுக்கு முகம் கூம்பியது.

"அண்ணே! நான் வசதியா வளர்ந்தவ! என்னால அந்தச் சின்ன வீட்டுல இருக்க முடியல்ல. வேலை செய்ய முடியல்ல. என் கையைப் பாருங்க. காச்சுப் போச்சு." என்று காண்பித்தாள். எதுவும் தெரியவில்லை. என்றாலும் சபா பொங்கினான்.

"என் தங்கச்சி முடிவு சொல்லிடிச்சு. மாசம் 30,000 நான் குடுத்துடறேன். பெரிய வீடாப் பாருங்க. வீட்டு வேலைக்கு ஆள் போடுங்க. அப்பத்தான் ராணி உங்க கூட குடும்பம் நடத்த வருவா" என்றான் சபா முடிவாக. சற்று நேரம் அங்கே மௌனம் நிலவியது. குணா பேசப் போன போது நிதி வாயைத் திறந்தான்.

"மச்சான். நல்லா யோசிச்சு தான் பேசுறீங்களா? இது வெறும் 30,000 ரூவாவோட நிக்காது. சென்னையில ராணி நினைக்குறா மாதிரி எப்பப் பார்த்தாலும் ஊர் சுத்துறதுக்கும், வெளியில சாப்பிடுறதுக்கும் உங்க பணம் பத்தவே பத்தாது. உங்க தங்கச்சி ஆசைப் படுறா மாதிரி பெரிய வீடு எடுக்கணும்னா அதுக்கே மாசம் 25,000 செலவாயிரும். அப்புறம் வேலைக்கு ஆள். அதுக்கு 8000. "

"என்ன சொல்ல வரே நீ நிதி?" என்றாள் அக்கா அகிலா.

"சொல்றேன், சொல்றேன். இப்படி உங்க கிட்டக் காசு வாங்கி ராணிக்கு செலவழிக்க எனக்கு இஷ்டமில்ல. அதுவும் போக பணம் குடுக்க குடுக்கத் தேவைகள் ஜாஸ்தியாகுமே தவிர குறையாது. அப்படி பணம் வாங்கிக்கிட்டே போனா ஒரு கட்டத்துல உறவு கசந்துரும். அதுக்கு நான் தயாரில்ல. இப்பவே என்னை இப்படிப் பேசுறா உங்க தங்கச்சி. இதுல நான் பணம் வாங்கிட்டேன்னா அவ வாயில என்ன வரும்னே சொல்ல முடியாது. என்னை மன்னிச்சுருங்க" என்றான் நிதி. அவனை கை தட்டிப் பாராட்ட வேண்டும் போலத் தோன்றியதை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள் சங்கரி.

குணா தொடர்ந்தார்.

"நிதி சொல்றதும் நியாயமாத்தான் படுது. புருஷன் சம்பாதிக்குறதுக்குள்ள குடும்பம் நடத்தணும். அது தான் பெண்களுக்கு அழகு. அதை நீ நல்லாப் புரிஞ்சுக்கணும் ராணி" என்றார். அவ்வளவு தான் ஆத்திரம் தலைக்கேறியது ராணிக்கு.

"எப்பப் பார்த்தாலும் எனக்கே புத்தி சொல்றீங்களே? நிதி செஞ்சதை யாரும் கண்டுக்கவே மாட்டேங்கறீங்க! எங்க வீட்டைப் பார்த்துட்டும் இப்படிப் பேச உங்களுக்கு அசிங்கமா இல்ல? எப்பப் பார்த்தாலும் ஏன் பெண்களுக்கே புத்தி சொல்றீங்க? மனைவி ஆசைப்பட்டதை வாங்கிக்குடுக்குறவன் தான் உண்மையாக புருஷன். அதுக்கு வக்கத்தவங்க ஏன் கல்யாணம் செஞ்சுக்கணும்? பேசாம காவியைக் காட்டிக்கிட்டு சன்யாசியாப் போக வேண்டியது தானே? வந்துட்டாரு நியாயம் சொல்ல." என்றாள்.

பெரியவர்கள் முன்னால் அப்படிப் பேசாதே எனச் சொல்லக் கூட அங்கே ஆளில்லை. இன்னும் சொல்லப் போனால் சபா, மாணிக்கம், முத்து மூவருமே தன் தங்கையை ஆமோதிப்பாகப் பார்த்தார்கள். இனியும் பொறுக்க முடியாது என எழுந்து போனாள் சங்கரி.

"ராணி! நீ பேசினதை எல்லாம் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன். ஏம்மா! புகுந்த வீட்டுப் பெரியவங்களை இப்படிப் பேசுறியே? நாளைக்கே உன் வாழ்க்கை என்ன ஆகும்னு யோசிச்சியா? நீயும் நிதியும் புருஷன் பெண்டாட்டி. இன்னைக்கு அடிச்சுக்குவீங்க, நாளைக்கே சேர்ந்துக்குவீங்க. ஆனா நீ பெரியவங்களைப் பேசினது அப்படியே நிக்குமேம்மா? இது நல்லதா?" என்றாள் கொஞ்சம் கோபம் ஆத்திரம் எல்லாம் கலந்து.

ராணியின் கோபம் இப்போது அவர்களை விடுத்து சங்கரி மீது பாய்ந்தது.

"எனக்கு புத்தி சொல்லாதீங்க அண்ணி! எங்கண்ணன் உங்களை ராணி மாதிரி வெச்சுப் பார்க்குறாரு. நீங்க கேக்குறதுக்கு முன்னாடியே நகையும், சேலையும் கொண்டு வந்து கொட்டுறாரு. வீட்டு வேலைக்கு ஆள். பெரிய வீடு. இதெல்லாம் எனக்குக் கெடச்சிருந்தா, நானும் உங்களை மாதிரி ஆயிரம் பேருக்கு புத்தி சொல்லுவேன். வாயை மூடிக்கிட்டுப் போங்க" என்றாள்.

"ராணி! உங்க அண்ணியை ஏம்மா இப்படிப் பேசுற? அவளுக்குத் தெரிஞ்சதை அவ சொன்னா. இதுல இனி அவளை இழுக்காதே" என்றான் சபா.

எதிர்பாராமல் குற்றாலச் சாரலில் நனைந்தது போல இருந்தது சங்கரிக்கு. மாமியார் பேசவே இல்லை. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்திருந்த குணாவுக்கும் அகிலாவுக்கும் சங்கடம். அதே நேரம் முடிவுக்கு வர வேண்டும் என்ற எண்ணமும்.

"உங்க வீட்டுக் கதையை விடுங்க சார்! என் மச்சான் அது தான் நிதிக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க? இது அவனோட வாழ்க்கை பிரச்சனை சார்! அவனுக்கும் வயசு 28 ஆகுது. குழந்தை, குட்டின்னு பெத்து வாழ்க்கையில செட்டில் ஆக வேண்டாமா? சொல்லுங்க" என்றார் குணா தன்மையாக.

ராணியின் ஆத்திரம் இன்னமும் அடங்கவில்லை. அண்ணன் மற்றவர்கள் முன்னால் தன்னை அவமானப்படுத்தி விட்டான் என நினைத்தாள்.

"சார்! இதைப் பாருங்க! இந்தப் பேச்செல்லாம் இங்க வேண்டாம். என்னால இனிமே இவர் கூட குடும்பம் நடத்த முடியாது. அவருக்கு நான் வேணும்னு நெனச்சாருன்னா இங்க எங்க வீட்டுல வந்து இருக்கட்டும். இல்லைன்னா அத்து விட்டுட்டு போயிட்டே இருக்கச் சொல்லுங்க" என்றாள் கொடூரமாக. திக் பிரமை பிடித்து அமர்ந்திருந்தார்கள் அனைவரும். வந்தவர்கள் மௌனமாக வெளியறுவதை வேதனையோடு பார்த்தபடி இருந்தாள் சங்கரி. அவர்கள் போனதும் ராணியைப் பிடித்துக்கொண்டாள்.

"நீ என்ன இன்னமும் சின்னப்பிள்ளைன்னு உன்னை நெனச்சுக்கிட்டு இருக்கியா? அத்து விட்டிருங்க அப்படி இப்படின்னு இது என்ன பேச்சு ராணி? கொஞ்சம் கூட நல்லாவே இல்ல" என்றாள்.

"நான் வேற என்ன தான் செய்ய அண்ணி? அண்ணன் குடுக்குற பணத்தை வாங்க மாட்டேன், வீட்டோட மாப்பிள்ளையாவும் இருக்க மாட்டேன்னு சொன்னா, எனக்கு இதை விட்டா வேற வழியே தெரியலியே?" என்றாள் சாதாரணமாக.

"என்னங்க! அவ தான் ஏதோ உளறுரான்னா நீங்களும் கேட்டுக்கிட்டு இருக்கீங்க?" என்று கணவனை துணைக்கழைத்தாள்.

"இதைப் பாரு சங்கரி! எனக்கென்னவோ ராணி சொல்லுறது தான் நியாயம்னு தோணுது. இது அவ வாழ்க்கை. அவ எந்த முடிவு எடுத்தாலும் சரியாத்தான் இருக்கும். " என்று சொல்லி விட்டு சாப்பிட அமர்ந்து விட்டான். வாயே திறக்காமல் அனைவருக்கும் பறிமாறினாள் சங்கரி. வாயே மூடாமல் தான் பட்ட பாடுகளை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தாள் ராணி. கேட்கக் கேட்க உண்மையிலேயே இந்தப் பெண் புத்தியோடு தன் பேசுகிறாளா? இல்லை தெரியாமல் உளறுகிறாளா? என்ற கவலையில் ஆழ்ந்தாள் சங்கரி. இரவு கணவனிடம் பேச வேண்டும் என உறுதி எடுத்துக்கொண்டாள். அவனுக்குப் பிடித்த மயில் பச்சை நிற புடவையை அணிந்து கொண்டு காத்திருந்தாள். அவன் வந்து நல்ல மனநிலையில் இருப்பதை உறுதி செய்து கொண்டதும் பேச்சை ஆரம்பித்தாள்.

"என்னங்க! நம்ம ராணியைப் பத்தி என்ன முடிவு எடுத்திருக்கீங்க?"

"அவளுக்கென்ன? அவ பாட்டுக்கு இங்க இருக்கப் போறா! ஏன்?"

"அது இல்லீங்க! என்ன இருந்தாலும் கல்யாணம் ஆன பொண்ணு. இப்படி வீட்டுல வெச்சிருக்குறது......" என இழுத்தாற் போல நிறுத்தினாள்.

"இதுக்கு முன்னாடியே நான் சொல்லியிருக்கேன். இந்த விஷயத்துல தலையிடாதேன்னு...இப்ப என்ன வேணும் உனக்கு?"

மனதுக்குள் ஒத்திகை பார்த்ததை பேசத் தொடங்கினாள்.

"இதைப் பாருங்க! மதியம் என்னவோ நீங்க எனக்கு சேலை நகைன்னு வாங்கிக் குமிச்சதாப் பேசுனாளே? அது ஓரளவு உண்மை தான். எங்கிட்ட மொத்தம் 15 சேலை இருக்கு. அதுல 6 நான் கல்யாணமாகி வரும் போது கொண்டு வந்தது. நகை நீங்க ஒரு அட்டிகை வாங்கிக் கொடுத்தீங்க. இதெல்லாம் பெரிய விஷயம் தான். ஆனா அதே நேரம் நான் இந்தக் குடும்பப் பொறுப்பை எப்படிச் சிறப்பா செய்யுறேன்னு பார்ர்கறீங்க இல்ல?"

"உம்! பார்த்துக்கிட்டு தான் இருக்கேன். ஆனா உன் பொறந்த வீடு அப்படி! " என்றான் சாட்டையடியாக. மனதில் விழுந்த அடியை மறைத்துக்கொண்டு பேசினாள்.

"சரி! என்னை விடுங்க! நிறையப் படிச்சுக் கை நிறைய சம்பாதிக்குற பெண்கள் கூட காலையில இருந்து இரவு படுக்கப் போற வரை வீட்டு வேலைகள் செய்யுறாங்க. பக்கத்து வீட்டு தாசில்தார் அம்மாவையே எடுத்துக்குங்க. தினமும் சமைச்சு வெச்சுட்டு, புருஷனுக்கும் லன்ச் குடுத்துன்னு வேலை செய்யுறாங்க. இவ்வளவுக்கும் அவங்க ரொம்ப வசதியான குடும்பம். வீட்டுத் தலைவி கையால சமைக்கும் போது தாங்க அதுல அன்பும் அக்கறையும் இருக்கும்"

"நீ என்ன சொல்ல வரே?"

"ஏங்க உங்க துணிங்களாய் நானே தோய்ச்சு அயர்ன் செய்யுறேனே? ஏன்? உங்க சாப்பாடு நானே சமைக்கணும்னு நினைக்கறேனே ஏன்?"

"நீ சொல்றது எல்லாத்தையும் செய்யுறதுக்குத்தானே வேலைக்கு ஆள் ஏற்பாடு செஞ்சிருக்கேன். துணி வாஷிங்க் மெஷின் துவைக்கப் போகுது. அயர்ன் செய்ய தெரு முக்குல ஆள் இருக்கான். இதைப் போயி பெருசாப் பேசுற? இப்ப உனக்கு என்ன வேணும்? சேலை எடுக்கணுமா? இல்லை நகை வேணுமா? அதை நேரடியாக் கேளேன். ஏன் சுத்தி வளைக்குற?" என்றான்.

இவனோடு பேசுவதும் ஈரச் சுவரில் முட்டிக் கொள்வதும் ஒன்று. நான் என்ன சொன்னால் இவர் என்ன புரிந்து கொள்கிறார்? தங்கையை வாழ வை என்றால் எனக்கு சேலை வேண்டுமா என்கிறாரே? ஐயோ! இந்த வீடு எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது? என்று கதறினாள் மனதுள்.

"சரிங்க! நான் உடைச்சே பேசிடுறேன். நீங்க உங்க தங்கச்சிக்கு எல்லாம் வாங்கித்தரலாம். ஆனா அவ வாழ்க்கையை அதாவது புருஷனோட வாழுற குடும்ப வாழ்க்கையை வாங்கித்தர முடியுமா? அவ சின்னப் பொண்ணில்லையா?" என்றாள்.

"ஆங்! இப்பத்தான் நீ சரியா யோசிக்குற! அதைப் பத்திக் கவலைப் படாதே! எங்க மாமன் மகன், அதான் மாசி மாமா மகன், அவனைக் கூட முதல்லயே நம்ம ராணிக்குப் பார்த்தோமே? அவனுக்கு இன்னமும் கல்யாணம் ஆகல்ல. அவனையே முடிச்சிரலாமான்னு யோசிக்குறேன்" என்றான்.

கணவன் போட்ட அணுகுண்டில் தூக்கியெறியப்பட்டு கொட்டக் கொட்ட விழிந்திருந்தாள் சங்கரி.
 
போட்டானே ஒரு போடு தங்கைக்கு இன்னொரு கல்யாணம் பண்ண போறானா. ராணியும்
ஓவரா பேசிட்டா இதுயெல்லாம் எப்படிதான் சரியாகுமோ
 
சூப்பர் சபா ???
சங்கரி இந்த லூசு குடும்பத்த இனிமேலும் உன்னால திருத்தமுடியும்னு நினைக்கிற பட்டுதான் திருந்துவேன் சொல்லுதுங்க விடு விடு
 
இவங்க எல்லாம் அடிபட்டு வர ஆளுங்க. அடிபட்டு திருந்தினா உண்டு. இல்லைனா இல்லைதான்.
 
Top