Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுட்டும் விழிச் சுடரே,அத்தியாயம்-6

Advertisement

Bhavatharini

Tamil Novel Writer
The Writers Crew
HeWnBRoY0DO2hEUm1QgDYmzJPqr8tOfdi-qkhNUbFchcAajm5Adj48sV-vdbcR6VKgn-ekJNSH9vyhNoebus2BQlQ5uiPZ3dGAGHHs52c4QFF1_YZ6AuiIuAGcYQ-Z3zMDrjXjqo



அன்புள்ள தோழர்களே!

உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி!.

படித்து கருத்துகள் கூறிய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி!. உங்களது மேலான கருத்துகளை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.



சுட்டும் விழிச் சுடரே,அத்தியாயம்-6..

கல்லூரியில் முதலாம் ஆண்டு இறுதி பரிட்சை எழுதி, அனைவரும் ஒருவருக்கொருவர் விடைபெற்று அவரவர்கள் ஊருக்குப் போக முடிவு செய்தனர். வெளியூரிலிருந்து வந்து தங்கி படிப்பவர்கள் பெரும்பாலும் கல்லூரியிலிருந்து, பேருந்து நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து அவரவர் ஊருக்கு போவதுதான் வழக்கம்.

யாழினியும் அவ்வாறே கல்லூரியிலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு கிளம்பினாள். மேல்நிலைப் பட்டதாரி என்பதால் கல்லூரி விடுதியில் கெடுபிடி மிகவும் கிடையாது. விடுமுறை விடும் நாட்களில் அவர்களே பதிவேட்டில் கையெழுத்து இட்டு ஊருக்குச் செல்லலாம். செய்முறை தேர்வு, ஆண்டுத்தேர்வு என்று அவளிடம் பேசுவதற்கோ, சரியாகப் பார்ப்பதற்கோ நேரம் கிடைக்காததால் இன்று அவளுடன் மல்லூர் வரை செல்வது என்று முடிவு செய்திருந்தான் அகிலன்.

கல்லூரி நிருத்தத்திலிருந்து, பேருந்து நிலையம் வரை செல்லும் பேருந்தில் மாணவர்கள் பலரும் இருந்ததால், அவரவர்கள் நண்பர்களுடன் பேசி, சிரித்துக்கொண்டு பேருந்து நிலையம் வரை சென்றனர். பேருந்து நிலையம் வந்தவுடன் அனைவரும் விடைபெற்று பிரிந்து சென்றனர். அகிலன், யாழினியின் பின்னால் பேருந்து நிற்கும் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.

திரும்பி பார்த்த யாழினி "என்ன இந்தப்பக்கம்? உனக்கு பஸ் ஆபோஸிட் பக்கத்தில் தானே நிற்கும்" என்று கேட்டாள்.

'உன்னுடன் வரட்டுமா? என்று இவளிடம் கேட்டால், எப்படியும் ஒத்துக்கொள்ள மாட்டாள், மகாராணி என் அண்ணன் அங்க நிற்பாங்க, இங்க நிற்பாங்க என்று அளந்து விடுவாள், கடைசியா வரவேண்டாம்ன்னு வேறு கூறுவாள், அதனால அவளிடம் கேட்கவே வேண்டாம்' என்று யோசித்த அகிலன்,

யாழினியிடம் "எனக்கு நாமக்கல் வரைக்கும் ஒரு வேலை இருக்கு, அதான் வரேன். நாமக்கல் பஸ்ல ஏறுவதுக்கு கூட, உன்கிட்ட பர்மிஷன் கேட்கணுமா" என்றான். நாமக்கல் செல்லும் பஸ் அனைத்தும் மல்லூர் வழியாகத்தான் செல்லும். அதனால் மல்லூர் என்றால் அதற்கும் இரண்டு கேள்வி கேட்பாள் என்று, முன்னெச்சரிக்கையாக நாமக்கல் என்று கூறிவிட்டான்.

'என் மனதை இவன் படித்து விட்டானோ' என்று ஒரு நிமிடம் திகைத்துப் போனாள்.' இருந்தாலும் மறு நிமிடம் எனக்காக வருகிறானா இல்லை உண்மையாகவே வேலை இருக்குமா' என்று யாழினிக்கு தோன்றியது.

"என்ன வேலை?" என்றாள் மெலிதான சந்தேகத்துடன்.

"உனக்கு சொன்னா புரியாது, புரிஞ்சுக்க மாட்ட, அதனால நீ அமைதியா வா." என்று அவளிடம் இருந்து பையை வாங்கிக்கொண்டு, இருவர் மட்டும் அமரும் இருக்கையில் பையை வைத்தான்.

வேறுவழியின்றி பின்தொடர்ந்து சென்றாள்," மேடம், உள்ள போய் உட்காரலாம்" என்றான் நக்கலாக.

"ஓகே! இன்று முடிவு பண்ணிவிட்டான் போலும், இன்னைக்கு எத்தனை தடவை வம்புக்கு வருவானோ தெரியல" என்று புன்முறுவலுடன் தலை ஆட்டியபடி உள்ளே சென்று அமர்ந்து கொண்டாள்.

அவனும் அருகில் அமர, அந்த நெருக்கம் நண்பனை தாண்டி, ஏதோ ஒரு உணர்வு அவளுக்கு உதிர்க்கத்தான் செய்தது.

'இவன் அருகில் இருக்கும் பொழுது அறிவு மந்தமாக வேலை செய்கிறது, இந்த பித்த மனம் என்னையே தோற்கடிக்க முயற்சி பண்ணுகிறது.' என்று மனதோடு சண்டை போட்டுக்கொண்டிருந்தாள் யாழினி.

அவளருகில் அவனுது உள்ளமும், உணர்ச்சி வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் சிறு துரும்பானது. அவள் மனதின் போராட்டத்தையும் புரிந்து கொண்டவன், இருவர் நிலைமையை சகஜமாக்க முதலில் அகிலனே பேச ஆரம்பித்தான். "யாழினி லீவுல என்ன பண்ணுவ? ” என்று கேட்டான்.

"நான்... என்ன பண்ணுவேன் என்று இழுத்து... சும்மா எங்க அண்ணிகிட்ட கதை பேசிட்டு இருப்பேன். எங்க பெரிய அண்ணன்கிட்ட ஒர், இரண்டு வார்த்தை தான் பேசிவேன். ஆனால் சின்ன அண்ணனும் நானும்தான் ஒருவர் மீது ஒருவர் விழுந்து சண்டையிட்டு கொள்வோம். இரண்டு நாட்கள் பேசிப்போம், மூன்றாவது நாள் பேசமாட்டோம். திரும்ப பேச ஆரம்பிக்கும் போதே சண்டையோடு தான் ஆரம்பிப்போம். உன்னையும் என்னையும் மாதிரி." என்று கூறிக்கொண்டிருக்கும் போதே,

பெண்கள் பொதுவாக மனதிற்கு பிடித்தமானவனை தந்தையுடனும், சகோதரனுடனும் ஒப்பிட்டுக்கொள்ளுவது வழக்கம். இதை அறியாத அகிலன்

"வேண்டாம். நீ உன் அண்ணனை மட்டும் பேசு. நம்பளை பத்தி வேண்டாம்." ’இவ ஏதாவது லூசு மாதிரி அடுத்து தன்னை அண்ணன் மாதிரி என்று சொல்லிட போறா' என்ற பயம் அவனுக்கு.

உதட்டை சுளித்து காண்பித்து விட்டு தொடர்ந்தாள் யாழினி "அந்த சண்டையில் எங்க அம்மாவுக்குதான் பிரஷர் ஏறிவிடும். என்னதான் சண்டை போட்டாலும் வீடுன்னா அது ஒரு தனி சந்தோசம்தான். இந்த லீவுல எங்க அம்மா, என்னை சமைக்க கத்துக்கிட்டே ஆகணும் என்று சொல்லி இருக்காங்க! அதனால சமையல் செய்யாமல் எப்படி ஏமாத்தினேன் என்று அடுத்த தடவை பார்க்கும் போது சொல்லுறேன்." என்று அடுக்கிக்கொண்டே போனாள்.

அவள் பேசும்போது, கூடவே சேர்ந்துப் பேசும், அந்த காதோரம் ஆடும் தோடு, சன்னல் காற்றில் அவனைத் தொடும் அவளது கூந்தல், கண், இதழ் என்று அனைத்தையும் ரசிக்க பிடித்ததால், அடுத்த கேள்வியையும் கேட்டான்.

"உனக்கு உங்க அண்ணிய ரொம்ப பிடிக்கும் என்று சொல்லுவியே, இப்ப எப்படி இருக்காங்க?" என்றான் காதல் மொழி பேசத்தெரியாத அகிலன்.

"இதெல்லாம் உன்கிட்ட சொல்லியிருக்கேனா, எப்போ சொன்னேன், சொன்னதை நானே மறந்துட்டேன்" என்றாள்.

"மறக்கிற நாளா அது! " என்று அவளைப் பார்க்க, வெட்கத்தில் கன்னம் சிவந்து ,'ச்சை, நானே வாய்விட்டு மாட்டிக்கிறேன்' என்று பேச்சை சட்டென்று மாற்றினாள்.

"அது...அண்ணி நல்லா இருக்காங்க, இப்போ கன்சீவாக இருக்காங்க, இன்னொரு அஞ்சு, ஆறு மாசத்துல எங்க வீட்டுக்கு ஒரு குட்டி பாப்பாவோ, பையனோ வரப்போறாங்க. ஆனா எங்க அண்ணன் அண்ணிய, அவங்க அம்மா வீட்டுக்கு கல்யாணம் ஆனதில் இருந்தே ஒரு நாள்கூட தங்குகிற மாதிரி அனுப்பினதே இல்லை. கேட்டால் அங்க வசதி இல்லை, பார்க்க ஆளு இல்ல, இப்படி எதையோ சொல்லுகிறார். எங்க அண்ணிக்கு அவங்க வீட்டுக்கு போகலாம்னு இருக்கு, ஆனா அண்ணன் மேல இருக்கிற பாசத்துல, பரவாயில்லை என்று இங்கேயே இருக்காங்க. சிலநேரம் பார்க்க ரொம்ப பாவமாக இருக்கும்" என்றாள்.

அகிலனும் "ஓ அப்படியா!, பெண்டாட்டிய உயிராக நினைத்தால், பிரிந்து இருக்கிறது வலிதானே!, நானாக இருந்தாலும் பிரிந்து இருக்க முடியுமா என்று தெரியல " என்றான்.

' மனதிற்குள் இந்த இரண்டு மாசம் உன்னை பிரிவதையே எனக்கு கடுமையாக இருக்கும்போது, கல்யாணத்துக்கு அப்புறம் உன்னை விட்டு மாச கணக்குல எப்படி இருக்க முடியும்' என்று நினைத்துக்கொண்டான். ஒரு நிமிடம் அகிலனுக்கு அவனது எண்ண ஓட்டத்தை நினைக்கும் பொழுது சிலிர்ப்பாக இருந்தது. 'நான் எப்பொழுது யாழினியை காதலியிலிருந்து, மனைவியாக யோசித்தோம்' என்று அவன் முகத்திலும் அந்த கல்யாண வெட்கமும், பூரிப்பும் அப்பட்டமாக தெரிந்தது.

பேசிட்டு இருந்தவன் திடிரென்று ஏன் அமைதியாகி விட்டான், என்று திரும்பிப் பார்த்தவள் அகிலனின் முகம் எதையோ யோசித்தபடி இதழோர புன்னகையுடன், அவன் கண்ணில் தெரிந்த வெட்கத்தையும் பார்த்து அவளுக்கும், அவன் உள்ளத்தின் எண்ண காந்தங்கள் மனதை தொட்டது. "என்ன, சிரிச்சிட்டு இருக்க? அப்படி என்ன யோசனை? உனக்கும் கல்யாணமாகி, குழந்தையைப் பார்த்துக்கிற மாதிரி யோசிச்சு பார்த்தியா. கொஞ்சம் ஸ்லோவா போங்க சார். பொண்ணு எப்படி, அழகா இருப்பாங்களா? கல்யாணத்துக்கு என்னையெல்லாம் கூப்பிடுவீங்களா? ' என்று கேள்விக் கணைகளை அடுக்கடுக்காக தொடுத்தாள்.

’மனதை சரியாக வரி விடாமல் படிக்க தெரிந்தவளுக்கு அதில் வரும் பெண்மட்டும் யாரென்று தெரியாதோ ! திருட்டு கள்ளி' என்று மனதிற்குள் திட்டியபடி,

"நீ இல்லாமல் கல்யாணம் எப்படி?” என்றான் இரு அர்த்தம் சேர்த்து.

யாழினிக்கு, அகிலனின் உள் மனதின் அர்த்தம் தெளிவாக புரியாததால், புரிந்துகொள்ள தயாராக இல்லாததால்," நீ கூப்பிடாவிட்டாலும் நான் வருவேன். என்னை எப்படியெல்லாம் நக்கல் பண்ற. உனக்கு வருகிற அந்த அருக்காணிய, மக்கு பிள்ளையை பார்க்க கண்டிப்பா வருவேன்." என்றாள்.

"என் அழகு அருக்காணி, பயங்கர புத்திசாலி, ஆனா கொஞ்சம் மக்கு, இல்லைன்னா புரிந்தும் புரியாத மாதிரி இருப்பியா?" என்றான் அகிலன்.

"என்னது?" என்றாள் அதட்டும் தோரணையில்.

"உன்னையா சொன்னேன். என் அருக்காணிய தான் சொன்னேன்" என்றான் பதிலுக்கு.

அவளும் பதிலுக்கு ஏதோ கூற வாயைத் திறக்க, அதற்குள் யாழினியின் அறிவு முந்திக்கொண்டு 'சரி, பேச்சை மாற்று என்றது' "முதல்ல படிச்சு வேலைக்கு போகிற வழியை பாரு, அப்புறம் பார்த்துக்கலாம்" என்றாள் பொதுவாக.

'நம்ப மனசு புரிஞ்சுக்கிட்டு சொல்கிறாளா! இல்லை புரியாமல் பேசுகிறாளா! ஒன்னும் தெரிய மாட்டேங்குது. கடவுளே, காப்பாத்து!' என்று குழம்பி கடவுளிடம் முறையிட்டான் அகிலன்.

இதில் அந்த தனியார் பேருந்தில் பாடிய எஸ்.டி.கே ஒலி அமைப்பில் ஏ.ஆர்.ரஹ்மானின் காதல் பாடல்கள் ஒரு புறம் இவர்களை முழுவதுமாக வதைத்தது.

மெதுவாக அவன் கொண்டுவந்த சாக்லேட்டை எடுத்து அவளிடம் நீட்டினான். கண்ணை விரித்து, உதட்டை குவிழ்த்து, ஒரு புருவத்தை உயர்த்தி 'என்ன' என்பது போல் கேட்டாள்.

காதலை சொல்ல வந்தவன், இவள் முகத்தில் இத்தனை செய்கையை பார்த்து, சொக்கி மயங்கியே போனான் என்று தான் கூற வேண்டும். உள்ளுக்குள் இருக்கும் வார்த்தை உதட்டை விட்டு வெளிவராமல் போக, இந்த சந்தோஷத்தை கெடுக்கவும் மனமில்லாமல், "ஒன்னும் இல்ல! சும்மா வாங்கினேன், குடுக்கலாம்னு தோணுச்சு! நீ தான் பிரண்ட் என்பாயே" என்று ஏதோ உலறிகொட்டி மழுப்பினான்.

யோசிக்கும் முன்பே உன்னை

நேசித்து விட்டேன்

இன்று யோசிக்கிறேன்

ஏன் நேசித்தேன் என்று இல்லை

எப்படி உன்னிடம் என் காதலை

சொல்வதென்று!


'பரவால்லையே உனக்கு இப்படியெல்லாம் கூட தோன்றுமா! ரொம்ப தேறிட்ட, சொந்த காசை போட்டு சாக்லேட் வாங்கி வந்திருக்க" என்றாள் யாழினி, மறுப்பு ஏதும் கூறாமல் இனிப்பை வாங்கிக்கொண்டாள். நண்பன் என்று ஒத்துக்கொண்டதில் அவளின் மனமும் நிதானத்திற்கு வந்தது.

நடத்துனர் வந்ததும், அகிலன் 'நாம தனித்தனியா டிக்கெட் எடுத்தா பார்க்கிறவர்கள் தப்பா நினைப்பாங்க, அதனால டிக்கெட்டை நீயே எடுத்திரு" என்றான் கண்ணடித்தபடி.

"அடப்பாவி, இது டூ மச்!", முகத்தில் குத்துவதை போல் செய்கை செய்து விட்டு இரண்டு டிக்கெட் எடுத்தாள்.

இருவருக்குமே காதல் மொழி பேசுவதை விட ஒருவரை ஒருவர் வம்பிழுத்து கொள்வதிலே தான் விருப்பம் அதிகம். இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும்போது அடுத்த மூன்று, நான்கு பேருந்து நிறுத்தத்தை தாண்டி ஒரு முதுமையான தம்பதியினர் பேருந்தில் ஏறினர். அவர்கள் ஏறுவதற்கு முன்னரே பேருந்தில் அனைத்து சீட்டும் நிரம்பியிருந்தது. பேருந்தில் இருந்த சிலர் யார் இடம் கொடுப்பார்கள் என்பது போல் ஒருத்தர் முகத்தை, ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள். ஒரு சிலரோ அவர்கள் ஏறியதே தெரியாததுபோல் சன்னல் பக்கம் திரும்பிக் கொண்டார்கள். சிலபேர் தூங்குவது போல் கண்ணை மூடிக் கொண்டனர். அகிலனுக்கு மனம் பொறுக்காமல் எழுந்து முதியவரை கூப்பிட்டு அமரச் செய்தான். யாழினியும் எழுந்து கொண்டு இடம்விட்டாள். இருவரும் நன்றி என்பது போல் தலையசைத்துவிட்டு அமர்ந்து கொண்டனர்.

அகிலனுக்கு ஏதோ மனது நெருட, "ஸாரி! பாவமா இருந்தது. அதான் எந்திரிச்சிட்டேன்." என்றான்.

அவன் தன்னை தவறாக நினைத்துக்கொண்டான் என்று "ஓ! நாங்கல்லாம் ராட்சசியோ! பரிதாபப்படுவது உங்களுக்கு மட்டும்தான். எங்களுக்கெல்லாம் வராதோ?" என்றாள்.

" அடேங்கப்பா! கோபத்தை பாரு, உன்னைக் கேட்காமல் எழுந்து, உன்னையும் எழுப்பி விட்டேனோ என்று நினைத்தேன்,"

"ஆனா, கோபத்துலயும் அழகா தான் இருக்க" என்று காதில் மெதுவாக கூறினான் அகிலன்.

உன் பார்வைகள் போதுமடி

உன் புன்னகை போதுமடி

மயங்கி மனதை

உன்னிடம் இழந்தேனேடி

உயிருடன் உறவாட வழி கூறடி!


அவளுக்கு உள்ளுக்குள் ஜிவ்வென்றிருந்தது அவனது வார்த்தை. 'கடவுளே பஸ் சீக்கிரமா எங்க ஊருக்கு போகணும், இல்லையென்றால் என் பேச்சை நானே கேட்காமல் நடக்கிற மாதிரி ஆகிடும். கடவுளே! ஃப்ளீஸ் காப்பாத்து' என்று இந்த முறை யாழினியின் மனது கடவுளிடம் பிராத்தனை செய்தது.

அடுத்த இரண்டு நிறுத்தத்திற்கு பிறகு வேறு இருவர் இறங்க, அந்த இருக்கையில் சென்று அமர்ந்தனர். பேருந்து ஓட்டத்தில் சில இடங்களில் ஒருவரை ஒருவர் தெரியாமல் இடித்துக்கொள்ள நேரிட்டது.

யாழினி திரும்பி முறைத்து விட்டு "இடிக்காம உட்காரு" என்றாள்.

”பெரிய அழகி! உன்னை இடிக்கிறாங்களாக்கும்" என்று கூறிவிட்டு முகத்தை திருப்பி கொண்டான்.

அவள் சிறு புன்னகையுடன் அவனது செல்ல கோபத்தை பார்த்து ரசித்தபடி 'அழகன்டா நீ' என்று மனதிற்குள் கூறிக் கொண்டாள்.

இவர்களது செல்ல சண்டையின் அடுத்த கட்டத்தை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். விரைவில் அடுத்த அத்தியாயத்தை வெளியிடுகிறேன்.

தொடரும்.....
 
Last edited:
Top