Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுட்டும் விழிச் சுடரே,அத்தியாயம்-5

Advertisement

Bhavatharini

Tamil Novel Writer
The Writers Crew
H8mJ38phTLCHXZt2IkVZShK8C4X6IHWdcQKUALYrTq4sF2FKQ2xzs7t3F8i_iFb0U8BQIZoytEOw2umO369RaWSZEj6ifnGmVz_Sd5om2oOz8oma2T9c7qTYBDw4JReCBk09LiIu


அன்புள்ள தோழர்களே!

உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி!.

படித்து கருத்துகள் கூறிய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி! உங்களது மேலான கருத்துகளை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அது என்னை எழுத மேலும் ஊக்கப்படுத்தும்.



சுட்டும் விழிச் சுடரே,அத்தியாயம்-5..


அடுத்த இரண்டு நாட்களுக்கு யாழினி இல்லாத வகுப்பு அகிலனுக்கு வெறுமையாக இருந்தது. கடிகார முள் அவனை நேரம் கடத்தாமல் காயப்படுத்தியது. ஏதையோ இழந்தது போல் மனம் கிடந்து அல்லாடியது. ஊருக்கு போன யாழினி திங்கள்கிழமை மீண்டும் கல்லூரிக்கு வந்தாள். அகிலன் வருவதற்கு முன்னதாகவே யாழினி வகுப்பிற்கு வந்திருந்தாள், மஞ்சளும், ஆரஞ்சும் கலந்த சுடிதாரில் மிகவும் அழகாக தோன்றினாள். அகிலன் உள்ளே நுழைந்து அவளைப் பார்த்ததும் அவனுடைய முகம் பிரகாசமானது.

யாழினியை கடந்து அவன் இருக்கையை நோக்கி செல்லும் போது ,அகிலன் ஒரு தலையை சாய்த்து, அவளுடைய கன்னத்தை பார்த்து "யாழினி, குட் மார்னிங்" என்றான்.அவள் கன்னத்தில் இட்ட அச்சாரம் இன்னமும் நினைவில் உள்ளது என்று உணர்த்துவது போல் இருந்தது அவனது செய்கை.

அவளுக்கும் அவன் செய்கையின் அர்த்தம் புரிந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் சிறிதாக தலையை மட்டும் அசைத்தாள்.

அவள் அருகில் இருந்த தோழி கவிதா, யாழினியிடம் "என்னடி ,பசங்களோட மட்டும்தான் பேசுவேன்னு சத்தியம் பண்ணிட்டு வந்த மாதிரி, பொண்ணுங்களைப் பார்த்தாலே பதினாறு அடி தள்ளி போவாரு, இப்போ குட் மார்னிங்கலாம் சொல்லுறாரு. அதுவும் உனக்கு மட்டும் ஸ்பெஷல்லா" என்றாள்.

கவிதா ஒரு வெகுளித்தனமான பெண். ஆனால் அவளிடம் ஒரு விஷயத்தை கூறுவது அந்த கல்லூரி முழுவதும் கூறுவதற்கு சமம். அதனால் எப்பொழுதும் யாழினி கவனமாக பார்த்துதான் வார்த்தையை வெளியிடுவாள். யாழினிக்கு, கவிதாவுடன் சேர்த்து இன்னும் மூன்று நெருங்கிய தோழிகள் உண்டு. எங்கு சென்றாலும் ஐவரும் சேர்ந்துதான் செல்வார்கள்.

இன்னொரு தோழியான சாரதா என்னும் சாரா, "ஆமாம்டி அதிசயம் நடக்குது. பசங்க நாங்க கெத்துன்னு சுத்துவானுங்க! நம்பளை எல்லாம் யாருன்னே தெரியாத மாதிரி போவானுங்க", என்று அவளும் கவிதாவுடன் சேர்ந்து கேட்டாள்.

யாழினிக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் "அது… அதெல்லாம் அப்போ, இப்போ அகிலனுக்கு என்னை பார்த்தால் ஒரு மரியாதை, ஒரு பயம்ன்னு வெச்சுக்குவேன்" என்றாள் கிண்டலாக.

உடனே கவிதா, அகிலனிடம் திரும்பி "உங்களுக்கு யாழினியை பார்த்தால் பயமா இல்ல மரியாதையா" என்றாள்.

இதை சிறிதும் எதிர்பார்க்காத யாழினி "நான் போயும் போயும் உன் கிட்ட சொன்னேன் பாரு, என் புத்தியை நானே அடிச்சுக்கணும்" என்று கவிதாவின் தொடையில் நறுக்கென்று கிள்ளினாள்.

"ஆஆ... இருடி உன் சந்தேகத்தை கேட்டுறலாம்" என்றாள் கவிதா.

அகிலன் சிறுபுன்னகையுடன் யாழினியை ஒரு பார்வை பார்த்துவிட்டு "பயம்தான். அவங்களை நினைத்தாலே மனசு படபடன்னு துடிக்குதே" என்று நெஞ்சில் கை வைத்து காண்பித்தான்.

அவன் கூறுவதின் அர்த்தம் புரிந்து வெட்கத்தில் முகம் சிவந்து, அதை யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக எதையோ தேடுவது போல் கீழே குனிந்து கொண்டாள். அதன்பின் ஆசிரியர் வர வழக்கம் போல் வகுப்பு தொடங்கியது.

மாலையில் வழக்கமாக கல்லூரி விட்டதும் வகுப்பிலிருந்து பெண்கள் முதலில் சென்று விடுவார்கள். ஆண்கள் சிறிது நேரம் அரட்டை அடித்துவிட்டு கடைசியாகத்தான் வகுப்பை விட்டு நகர்வார்கள். அன்றும் அவ்வாறே யாழினியும், கவிதாவும் சேர்ந்து பேசிக்கொண்டே வெளியேறினார்கள். யாழினிக்கு மனதில் ஏதோ தோன்ற, கதவை கடக்கும்முன் வகுப்பை திரும்பி பார்க்க கண் தானாக அகிலனின் பக்கம் பார்த்தது, அகிலனின் பார்வையும் அவள் பாதையில் நிலைத்திருக்க, விடைபெறும் விதமாக தலையாட்டினாள். அகிலனும் பதிலுக்கு அதற்காகவே காத்திருந்தது போல் மெல்லியதாக கையசைத்து விடை கொடுத்தான். இது இருவருக்கும் அன்னிச்சையாகவே நடந்தன.

பேரின்பம் வேண்டாம்

சிறு சிறு கண் அசைவு போதும்

என் சிந்தைக்குள் நீ வந்துவிடுகிறாய்

அழியாத ஓவியமாய்!


அடுத்தடுத்த நாட்களிலும் அகிலன் ’குட்மார்னிங்’ சொல்வதும், மாலையில் யாழினி தலையசைத்து விடைபெறுவதும் இருவருக்கும் வழக்கமானது.

முதல் செமஸ்டரில் யாழினி எண்பது விழுக்காடுக்கு மேலும், அகிலன் ஐம்பது விழுக்காடும் பெற்றிருந்தார்கள். அதிலும் அகிலன் ஒரு பாடத்தில் தோல்வி (அரியர்) அடைந்திருந்தான். யாழினி தன்னுடைய மதிப்பெண் தந்த சந்தோசத்தை விட, அகிலன் ஒன்றில் மதிப்பெண் குறைந்தது அவள் மனதிற்கு வேதனையை அளித்தது. யாழினியிடம் அவளுடைய தோழிகள் மற்றும் வகுப்பில் இருந்த சில தோழர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அகிலனுக்கும் தன்னுடைய தோல்வியை விட யாழினி அதிகம் பெற்றது, சந்தோஷத்தின் உச்சியில் இருந்தான். அவனுடைய மதிப்பெண் இழப்பு சற்றும் அவனை பாதிக்கவில்லை.

மதிய உணவு இடைவேளையில் வகுப்பிற்கு வெளியில் வராண்டாவில் நின்றுயிருந்த அகிலன், தோழிகளுடன் சென்று கொண்டிருந்த யாழினியிடம் "யாழினி!" என்று பெயரிட்டு அழைக்க, அவளுடைய தோழிகள், "இவனெல்லாம் பேசுறதே உலக அதிசயம், பேசிட்டு வா, நாங்க போறோம்" என்றார்கள் யாழினியின் காதோரமாய்.

அவர்கள் நகர்ந்ததும் ,"கங்கிராஜுலேசன்! ஐ அம் ரியலி சோ ஹேப்பி!" என்று அகிலன் கையை நீட்டினான்.

இதற்கு முன்னரே அவனுடைய கையை பிடித்திருக்கிறாள் என்றாலும், அது அவனாக பிடித்தது. யாழினிக்கு தானாக கை மேலெழும்ப யோசித்தது.

அவள் தயங்குவதை பார்த்து "கங்கிராஜுலேசன்னு சொன்னேன், சந்தோசத்துல காது கேட்கலியா?" என்றான்.

"தேங்க்ஸ்!" கையை நீட்டி குழுக்கியவள், ஆனால் முகத்தில் வருத்தத்துடன்,

"எனக்கு மகிழ்ச்சி இல்லை. இவ்வளவு மார்க் வாங்கியும், உன்னோட பெயில் மார்க் எனக்கு உறுத்தலா இருக்கு. ஒழுங்கா நீ எக்ஸாம் பண்ணியிருக்கலாம் . படித்து ஒரு நல்ல வேலைக்கு போக முடியவில்லை என்றால் எதுவுமே இல்லை." என்றாள் யாழினி சிறிது கடுமையாக. ஆனால் அகிலனுக்கோ தனக்காக வருந்தும் கண்ணை, அந்த உள்ளத்தை, ரசித்தபடி புன்னகையுடன் நின்றான். இவள் கூறும் எந்த வார்த்தையும் அவன் காதில் எட்ட கூடவில்லை.

அவனது புன்னகையை பார்த்து "உனக்கு கஷ்டமாக இல்லையா?" என்றாள்.

"இல்ல, நீ அதிக மார்க் வாங்கின சந்தோஷம்தான் இருக்கு." என்றான். அது மேலும் அவளை சங்கடப்படுத்த, யாழினியின் முகம் வாடுவதை கண்டு,

"சரி விடு, நெக்ஸ்ட் செமஸ்டர்ல சேர்த்து பாஸ் பண்ணிடுவேன். பண்ணலைன்னா அப்போ கேளு!"என்றான்.

"கேக்குறதென்ன, அடியே விழும் " என்று ஒரு கையை உயர்த்தி செய்கை காண்பித்தாள்.

உனக்கு இல்லாத உரிமையா என்னவளே என்று மனதில் எண்ணிக்கொண்டே அவளை சகஜமாக்க பேச்சை மாற்றினான், "காலேஜ்ல மகாராணி கிட்ட தனியா பேசவே முடிய மாட்டேங்குது. எப்போ பார்த்தாலும் ஃபைவ் ஸ்டார் குரூப்புன்னு சொல்லிட்டு சேர்ந்தே இருக்குறது." என்றான் அகிலன்.

"நாங்களாவது அஞ்சு பேரு தான், நீ ஒரு பெரிய கேங்க் சேர்த்துக்கிட்டு கடைசி டெஸ்கில் உட்கார்ந்துகிட்டு, ரவுடி மாதிரி பண்ணிட்டு இருக்கீங்களே அதை என்ன சொல்லுறது" என்றாள் யாழினி பதிலுக்கு.

"யாரு நாங்களா ரவுடி, நீங்கதான். அது சரி, எப்பொழுதுமே அஞ்சுபேரும் சேர்ந்து ஊரு கதையை அடிச்சுகிட்டு, ஒரு பசங்களைக் கூட விடாமல் கிண்டல் செய்துகிட்டு சுத்திகிட்டு இருப்பீங்க. அப்புறம் நீ மட்டும் எப்படி அவர்களைவிட மார்க் அதிகமா வாங்கினாய்? சரியான பிராடு நீ!." என்றான் அகிலன்.

"ஆமாம். என்ன கதை அடிச்சாலும் மார்க் வாங்கினோம் இல்ல. உங்களை மாதிரியா! நாங்களாம் பிறக்கும்போதே அறிவாளிக!" என்றாள் யாழினி.

யாழினியின் தோழிகள் திரும்பி வருவதைப் பார்த்த அகிலன், "உன் ஸ்டார் எல்லாம் வருது, மூன் காணோம்னு தேட போகுதுங்க, கிளம்பு காத்து வரட்டும், உன் மிச்ச அறிவை நாளைக்கு பார்த்துக்கிறேன்" என்றான் நக்கலாக.

"உதட்டை சுளித்துக் காமித்து விட்டு, எனக்கு தேவைதான், " என்றாள் பொய் கோபமாக.

"இதுக்காக தான் சொன்னேன்" என்றான் அகிலன்

"எதுக்காக, என்ன கடுப்பு ஏத்தவா?" என்றாள் யாழினி.

"இல்ல, இப்போ ஒன்னு செஞ்சு காமிச்சியே! அதுக்கு," என்றான் கள்ளச் சிரிப்புடன்.

"உனக்கு என்னை வம்பிழுக்கலைன்னா தூக்கம் வராதா? ஆனால் இந்த உலகம் உனக்கு பேசவே தெரியாதுன்னு நம்புது" என்றாள்.

“ஆமாம்! உன்னை பார்த்தா, வம்பிழுத்தால் தான் தூக்கம் வருது, என்ன பண்ணட்டும்?“ என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கேட்டான் அகிலன்.

" திமிரு கொஞ்சம் அதிகம் உனக்கு." என்று மீண்டும் கோவத்தில் உதட்டை வலதுபுறம் சுழித்த அவளுக்கு அவன் முன்னர் கூறியதன் அர்த்தம் விளங்க, தலையில் அடித்துக்கொண்டே நகர்ந்தாள்.

இருவரும் அதிகம் பேசிக்கொள்ளாமல் இருந்தாலும் ஒருவரை ஒருவர் மனதளவில் நெருக்கமாக உணர்ந்தார்கள். மற்றவர்கள் அளவில், அகிலன் பெண்களில் அவ்வப்பொழுது யாழினியிடம் மட்டும் பேசுவான். இவர்கள் இருவரையும் நண்பர்களாக கூட யாரும் யோசித்தது இல்லை. அந்த அளவிலே இவர்களது சம்பாஷணை இருந்தது.

நாட்கள் நகர நகர கல்லூரியில் அடுத்த செமஸ்டருக்கான பரிட்சை இன்னும் ஓரிரு மாதத்தில் வந்தது. அனைத்து ஆசிரியர்களும் மாறி மாறி இடைவெளி இல்லாமல் வகுப்பு எடுக்க ஆரம்பித்தார்கள். மீதி இருக்கும் நேரமும் ப்ராஜெக்ட், பிராக்டிகல் என்று அனைவரும் ஓட ஆரம்பித்திருந்தார்கள்.

அசைன்மென்ட் எழுதாமல் ஓரிருமுறை அகிலன் எழுந்து நிற்க, யாழினிக்கு மனம் கேட்காமல், அகிலனைப் பார்க்கும் போது," அசைன்மென்ட் கூட எழுத மாட்டியா? அதுலயும் கூச்சமே இல்லாம அவார்டு கொடுக்கிற மாதிரி கூட்டமா எந்திரிச்சு நின்னுக்கிறீங்க? " என்றாள் கோவமாக.

'நீ இவ்வளவு உரிமையா திட்டுறதா இருந்தா, திட்டும் உன் அழகை பார்க்க இன்னும் எத்தனை தடவை வேணும்னாலும் எழுந்து நிற்கலாம் ' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு மெல்லிய புன்னகையுடன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

எதிர்த்து நின்று நேருக்கு நேர்

மல்லுக்கட்டும் வீம்புக்காரி...!

உன் கண்களில் தெறிக்கும் அந்த திமிரில்

நான் விழுந்தேனடி..! ஒருநாள்

என்னில் உன்னை விழ வைக்கிறேன்...


அவன் புன்னகையை பார்த்து, இப்போ எதுக்கு என்னை பார்த்து சிரிக்கிற?"என்றாள்.

"இல்ல, உனக்கு என் மேல் எவ்வளவு உரிமைன்னு நினைச்சேன்" என்றான்.

"பிரன்ட்ஸ் யாரா இருந்தாலும் இப்படி தான் கேட்டிருப்பேன்" என்றாள் வெகுளித்தனமாக.

"வளர்கின்ற செடியின் கொழுந்தை நறுக்கியது போல் இருந்தது அவளுடைய "நண்பன்" என்ற வார்த்தை. இன்னும் தன்னை காதலனாக பார்க்காமல் நண்பன் என்று கூறியது அகிலனுக்கு வெறுப்பை உண்டாக்கியது.

"பிரன்ட்ஸ்லாம் இப்படி பேசுனா, திருப்பி அடிச்சுருவேன்" என்று கடுப்பாக கூறிவிட்டு கிளம்பினான்.

"கொஞ்சம் ஓவரா வஞ்சித்துவிட்டோமோ! " அவனது கோவத்தை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அன்றும், அடுத்த நாளும் பலமுறை யாழினி திரும்பி பார்த்தும் அவள் பார்வையை அவன் நிராகரித்தபடி நண்பர்களிடமே பேசிக்கொண்டிருந்தான்.

யாழினிக்கு நீ அடிச்சே இருந்துருக்கலாம் அகிலன். உன் பாராமுகத்தை பார்க்கும் சக்தி எனக்கில்லை. தன்னுடைய 'நண்பன்' என்ற வார்த்தைதான் அவனை விலக்கிவைத்தது என்று யாழியினால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனிடம் சென்று மன்னிப்பு கேட்கவும் அவளது பெண்மை இடம் கொடுக்கவில்லை.

தான் அசைன்மெண்ட் எழுதும்போது அவனுக்கும் எழுதி அதை அவனுடைய டெஸ்கின் கீழ் வைத்து விட்டு சென்று விட்டாள் யாழினி. அதை பார்த்த அகிலன் 'பாவம் என் கண்மணி, இரண்டு நாளாக தடுமாறுகிறா, உன்னை வெறுப்பதுபோல் இருப்பது எனக்கும் வலியே, இது காதல் என்று புரியாமல் ஏனடி என்னையும் சேர்த்து வஞ்சிக்கிறாய்..!! '.

நீ இமைக்காமல்

பார்த்தநொடிகளில்

எழுதாத பல கவிதைகளை


ரசிக்கிறேன்

உன் விழியில்...


அகிலன் யாழினியிடம் சென்று "இனிமேல் நீயே அசைன்மெண்ட் எழுதிடு, அதான் உனக்கு பனிஷ்மெண்ட்" என்றான் கெத்து குறையாமல்.

அவன் பேசியதே போதும் என்று இருந்தது யாழினிக்கு. "திமுருடா உனக்கு, பனிஷ்மெண்ட் தர்றதுக்கு நான் என்ன பண்ணுனேன். எல்லாம் என் நேரம்! எனக்கும் ஒரு நாள் கிடைக்கும் அப்போ பார்த்துக்கிறேன்" என்று முணுமுணுத்தாள்.

"என்னது?" என்று கேட்டான் அகிலன்.

"ஒன்னுமில்ல. பார்க்கலாம்." என்றாள்.

யாழினி இயல்பாகவே மிகவும் நன்றாக படிப்பாள். அவளுக்கு படித்து ஏதாவது ஒரு வேலைக்கு போக வேண்டும் என்பது அவளுடைய லட்சியம். அகிலன் படிப்பில் மோசம் இல்லை என்று தான் கூற வேண்டும்.

யாழினியோட அப்பா அவகிட்ட எப்பொழுதுமே ஒரு விஷயத்தை அழுத்தமாக சொல்லுவதுண்டு, "ஆணோ இல்லை பெண்ணோ படிக்கிற வயசுல ஒழுங்கா படிக்கணும். படிச்சு முடிச்ச உடனே ஒரு வேலைக்கு போற அளவுக்கு தன்னுடைய திறமையை வளர்த்துக் கொள்ளனும். சொந்தக் கால்ல நின்றால் தான் சுற்றத்தார்களும் உறவினர்களும் மரியாதை கொடுப்பார்கள்" என்று அடிக்கடி கூறுவார்.

"அதுவும் பெண்ணாக இருக்கும் பட்சத்தில் திருமணமான பிறகு வேலைக்கு போகலாம், போகாமலும் இருக்கலாம். திருமண வாழ்வில் வசந்தமும் வீசலாம், எப்பொழுது வேண்டுமானாலும் அது புயலாகவும் மாறலாம். வசந்தத்தை வரவேற்கும் உள்ளம், புயலையும் தாங்கும் அளவுக்கு தைரியமாக இருக்கணும். அதுக்கு உன்னுடைய இந்த படிப்பு ரொம்ப அவசியமாக இருக்கும்." என்று கூறிதான் அவருடைய உறவினர்கள் வேண்டாம் என்று கூறியும் பெண்ணை மேற்படிப்பிற்காக கல்லூரிக்கு அனுப்பினார். அதனால் என்னவோ யாழினியும் வெகு சிரத்தையுடன் படிப்பில் கவனம் செலுத்தினாள்.

மனதிற்கும் எப்பொழுதும் ஒரு கடிவாளம் இட்டு கொள்வாள். ஆனால் இப்பொழுதெல்லாம், அவ்வப்பொழுது அகிலனின் முகம் வந்து அவள் மனதின் கடிவாளத்தை தகர்த்து எறியத்தான் செய்தது. ஒவ்வொரு முறையும் அவள் அறிவுக்கும், மனதிற்கும் இடையே பெரிய போராட்டமே நடந்தது. அவளுடைய அறிவு அவளுக்கு எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டே இருந்தது, " அகிலன் வந்து உன்கிட்ட லவ் பண்றேன்னு ஒருநாளும் கூறவில்லை. யாழினி! நீ, உன் கனவுலகத்தை விட்டுட்டு, நிஜத்துக்கு வா. அவன் உனக்கு ஒரு நல்ல பிரண்ட் மட்டும் தான். அதைத்தவிர ஏதாவது யோசிச்சு மனச குழப்பி உன் படிப்பை கெடுத்துக்காதே. உங்க அப்பாவோட கனவையும் தொலைத்து விடாதே. உன் கனவும் அதுதான். 'என்று அவளே அவளுக்குள் மீண்டும் மீண்டும் கூறி காதலை வளரவிடாமல் தவிர்த்து, தவித்துக் கொண்டிருந்தாள். தன்னையே அவள் ஏமாற்றியும் கொண்டிருந்தாள் என்று கூட கூறலாம்.

அகிலனின் கம்பீரமும், பெண்களிடம் வலிந்து பேசாத குணமும், அவன் செய்யும் நக்கலும், அனைத்தையும் தாண்டி அவனது பார்வையில் தெரிந்த காதலும் அவளுக்குள் அவன் முழுவதுமாக வராமல் தடுத்தாலும், அகிலனுக்கான சிறிய வசிப்பிடம் அவளது உள்ளத்தில் இருந்தது. ஆனாலும் அவனுடைய உறவுக்கு அவள் வைத்த பெயர் தோழன் / உயிர்த் தோழன் அவ்வளவே!.

பாசம்/காதல் என்பது

ஒரு சிறந்த பரிசு

அதை அள்ளி கொடுத்தாலும்

பெற்றாலும்


ஆனந்தமே...!

தோழனை காதலனாக யாழினி மனது ஏற்றதா? அகிலன் அவனுடைய காதலை வெளிப்படுத்தினானா? யாழினி இப்போது எங்கே? வரும் தொடரில் காண்போம்.

தொடரும்.....
 
Last edited:
முதலில் நட்பில் தொடங்கி, காதலில் முடிகிறது.... எல்லாம் அப்படிதான், நடத்துங்க நடத்துங்க.........அருமை சிஸ்.:D?
 
Last edited:
முதலில் நட்பில் தொடங்கி, காதலில் முடிகிறது.... எல்லாம் அப்படிதான், நடத்துங்க நடத்துங்க.........அருமை சிஸ்.:D?
மிக்க நன்றி. யாழினி காதலை முழுவதுமாக இன்னும் உணரவில்லை தோழி. :love:
 
Top