Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுட்டும் விழிச் சுடரே,அத்தியாயம்-4

Advertisement

Bhavatharini

Tamil Novel Writer
The Writers Crew
viHZLxcRKWpQ63GvYGnEjRNUEpAd23Ov0NU_4SjYixXS7g9ziEeumdmhqOUAO0I2gNGq5xiCIo3EjhnHphE2aTA1P8ufNjB0QKJV614pViSACBk_zOcnJPLFEvrqdh-OWGpnBcw2



அன்புள்ள தோழர்களே


உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி! இது என் முதல் கதை என்பதால் எழுத்து நடையில் பிழை இருக்கலாம். உங்களது கருத்துகளை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அது மேலும் என்னை எழுத ஊக்கப்படுத்தும்.



சுட்டும் விழிச் சுடரே,அத்தியாயம்-4..

முதல் முத்தம், அதுவும் தன் மனதை தொட்டவளுக்கு தந்ததை நினைக்கும் பொழுது பல வருடம் கழித்து இன்றும், இப்பொழுதும் அகிலனின் மனம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. மனம் அலைகடல் போல் ஆர்பரித்தது.

உன் இதழ் பட்டு


மயங்கித்தான் போனது

என் மனம்…

என் உறக்கத்தை இரையாக்கி

கொல்கிறது


உன் நினைவு...


கோல் கொண்டா கோட்டையின் உச்சியை பார்க்க சென்றவர்கள், திரும்பவர ஆரம்பித்திருந்தார்கள். பேருந்தில் ஏறி அனைவரும் தங்கும் விடுதிக்கு திரும்பினர். அவளுடைய நினைவில், அகிலனின் மனம் மிகவும் சலித்துப் போய் இருந்தது. 'யாழினிக்கு என் நினைவு இருக்குமா, நான் மட்டும் ஒரு நிமிடம் கூட மறக்க முடியாமல் தவிக்கிறேனே' என்று எண்ணி பெருமூச்சுவிட்டான்.

அடுத்த நாள், அகிலன் நண்பர்களிடம் "நீங்கள் எல்லாரும் போய்ட்டு வாங்க. எனக்கு கொஞ்சம் தலைவலியா, டையர்டா இருக்கு" என்று கூறி அடுத்த இரண்டு நாட்களுக்கு அவளுடைய நினைவுகளை மேலும் அதிகப்படுத்தாமல் இருக்க அறையிலேயே இருந்து கொண்டான்.

ஹைதெராபாத் சுற்றுலா முடிந்து அனைவரும் சென்னை திரும்ப முடிவுசெய்தார்கள். பேருந்தில் வரும்போது அகிலனுடைய நண்பன் செல்வம், அகிலன் அருகில் அமர்ந்து கொண்டான். "என்ன மாப்பிள, ரொம்ப சோர்வா தெரியிற, இதுக்கும் நீ எங்கேயும் பெருசா வரல்ல! ரூமே கதின்னு இருந்துட்ட" என்று கேட்டான்.

எதையும் எப்பொழுதும் வெளியில் சொல்லாத அகிலன் "ஒன்னுமில்ல, அதான் முன்னாடியே தலைவலி, உடம்பு சரியில்லன்னு சொன்னேனே" என்றான்.

அகிலனும், செல்வமும் ஒரே நாளில் தற்போதுள்ள அலுவலகத்தில் சேர்ந்தவர்கள். முதலில் அகிலன் தனியாக வீடு கிடைப்பதற்கு முன், செல்வத்துடன் தான் தங்கியிருந்தான். அகிலன் ஒரு பெண்ணை காதலித்ததும், அவளிடம் தற்போது தொடர்பில் இல்லை என்றும் அவனுக்கு தெரியும். அகிலனும், செல்வமும் நல்ல நண்பர்கள். அகிலனிடம் யாழினியை பற்றி கேட்டு வருத்தப்பட வைக்க மனமில்லாத காரணத்தால் இதுவரை எதுவும் கேட்காமலே இருந்தான் , கேட்டாலும் கூறமாட்டான் என்பதும் தெரியும். ஆனால் இந்த சுற்றுலாவில் அவன் மிகவும் சோர்வாகவும், கவலையாகவும் இருந்ததை பார்க்க முடியவில்லை.

சாதாரணமாக அகிலன் எதையும் வெளி காண்பித்து கொள்பவன் கிடையாது, சமயம் கிடைக்கும் போது மற்றவர்களை நக்கல், நையாண்டி செய்பவன். யாழினியுடன் சேர்ந்து சுற்றிய இந்த இடம் அகிலனை காதல் பிடிக்குள் சிக்கி திணறச் செய்தது. உலகம் கசந்து போனது உணவை போலவே. சிறு சிறு நக்கல் பேச்சும், புன்னகையும் புதைந்து போனது.

"மாப்பிள, எனக்கு உன்ன பத்தி தெரியும். உனக்கு தலைவலி எல்லாம் இல்ல. உண்மைய யாருக்கிட்டயாவது சொல்லுடா, இங்க ஹைதெராபாத்தில் எங்கேயாவது அந்த யாழினியை பார்த்தியா?" என்று செல்வம் நேரடியாக கேட்டான்.

அகிலனுக்கும் யாரிடமாவது தன்னுடைய மனதில் இருப்பதை கூறினால், சிறிது பாரம் குறையும் என்று தோன்றியது.

செல்வத்தின் நச்சரிப்பில் "அதெல்லாம் இல்லடா, நாங்க கல்லூரி படிக்கும்போதே இங்கே டூர் வந்திருக்கோம். அவ்வளவுதான்" என்றான் அகிலன்.

" ஓ! அதான் மாப்பிள்ளைக்கு அவங்க நினைப்பு எகிருடுச்சோ!. அதுசரி அவங்க இப்போ எங்க தான் இருக்காங்க? அப்படி என்னடா உங்களுக்குள்ள பிரச்சனை?" என்றான் செல்வம்.

"அவங்க இப்ப எங்க இருக்காங்கன்னு தெரியாது. கல்யாணம் ஆச்சான்னு கூட தெரியல." என்றான் அகிலன் வெளியில் சாதரணமாக ஆனால் மனதில் வேதனையுடன்.

"டேய் மாப்ள! இது ரொம்ப ஓவர்டா! எதுவுமே தெரியாமலா இன்னமும் போற இடமெல்லாம், கனவு கண்டுகிட்டே வர்ற. முடியலடா சாமி." என்றான் செல்வம்.

"இல்லடா ஒவ்வொரு நாளும் அவள் நியாபகம் வரக்கூடாது என்றுதான் போராடுறேன். ஆனா ஏதோ ஒன்னு என்னை சுற்றி நடப்பது அவளை நியாபகப்படுத்திக்கொண்டே இருக்கு. அவளோடு இருந்ததை விட இப்போதான் ரொம்ப அதிகமா நேசிக்கிறேன். தண்ணி போடுறவன் கூட ஆல்கஹால் மறுவாழ்வு மையம் போய் சரி பண்ணிடலாம், ஆனா இந்த லவ் பண்ணி அதையே யோசிக்கறவன் எந்த மறுவாழ்வு மையத்துக்கு போய் சரி பண்றதுன்னு தெரியல மச்சி. வெளியே சொல்லவும் முடியல, விட்டு விலகவும் முடியல." என்று மனக்குமுரளை கூறினான் அகிலன்.

செல்வம் ஒரு யதார்த்தவாதி, எதையும் பெரிதாக மனது வரை எடுத்துக் கொண்டு சிரமப்பட மாட்டான். அகிலனும் அவ்வாறே, யாழினி அவனை விட்டு விலகும் வரை.

"இதெல்லாம் நல்லா விவரமா பேசு, ஆனா பாதி நேரம் கனவு கண்டுக்கிட்டு சிரிக்கிறது, அந்த தலகாணிக்கு மட்டும் வாய் இருந்தா அது தூக்கில் தொங்கி இருக்கும். இப்படியே போச்சுன்னா கன்பார்ம் நீ அவ்வளவு தான்." என்றான் செல்வம் கிண்டலாக.

"உனக்கு என்ன தெரியும் காதலை பத்தி, அவளை நினைப்பதும் மனதுக்கு சுகமே! அவள் நினைவில் என் நொடிகளும் அழகாய் கரைகிறதே" என்றான் அகிலன்.

"அப்போ கம்முன்னு நினைச்சுகிட்டே வாழ்க்கையை சந்தோசமா ஓட்டு. அத விட்டு அப்புறம் எதுக்கு அப்பப்போ சோககீதம் வாசிக்கிறீங்க சார். இது இல்லைன்னா வேற ஒன்னு, லைஃப ஈஸியா எடுத்துக்க மாப்பிள, எவ்வளவுதான் எண்ணைய தடவிக்கிட்டு உருண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்" என்றான் செல்வம் அவன் மீது இருந்த அக்கறையில்.

"மொக்கை போடாத!. எழுந்து போடா" என்றான் அகிலன் கடுப்பாக. மேலும் கோவமாக "நேரம்டா நீயெல்லாம் அட்வைஸ் பண்ற அளவுக்கு என் நிலைமை இருக்கு. ஒரு ஆணியும் தேவையில்லை. நானே என் பிரச்சனைய பார்த்துக்குறேன். நீ போய் உன் வேலைய பாரு." என்று அகிலன் பதிலுக்கு எகிறினான்.

கொஞ்சம் அளவைத்தாண்டித்தான் பேசிட்டோமோ "ஐயா சாமி சாரிடா, என்ன நடந்துன்னு சொல்லு. என்னால ஏதாவது வகையில ஹெல்ப் பண்ண முடியுமான்னு பார்க்குறேன்." என்றான் செல்வம் பவ்யமாக.

அகிலன் தன்னை பற்றி தேவை இல்லாத விசயங்களை மற்றவர்களிடம் சொல்பவன் அல்ல. அதனால் அவனிடம் விஷயம் வாங்குவது என்பது அசாதாரணம். செல்வத்திற்கும் இது நன்கு தெரிந்ததே. அகிலனின் மனமும் இந்த வலியில் இருந்து விடுபட விடை தேடி அலைகிறது, கடலில் தத்தளிக்கும் சிறு படகு போல். அதனால் அகிலன் தன் யாழினியை பற்றி நண்பனிடம் கூற முற்பட்டான்.

சில சமயங்களில் நம் மன ஓட்டத்தை மனதில் போட்டு குழப்பிக் கொள்வதை விட அங்கு நடந்ததை வெளிப்படையாக வாய்விட்டு வார்த்தைகளாக கோர்க்கும் போது பிரச்சனைக்கான விடையை ஓரளவு உணர முடியும்.

கேட்பவர்கள் உண்மையாக உதவ வேண்டும் என்ற மனநிலையில் இருந்தாலும் நாம் கூறுபவனற்றை நாம் நினைக்காத வேறொரு கோணத்திலும் யோசிக்க வாய்ப்புள்ளது. சில பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வும் கிடைக்கலாம்.

இங்கு செல்வமும் அகிலன் படும்பாட்டை கண்டு அவன் மீது கொண்ட நட்பின் காரணமாக அவனை இதிலிருந்து மீட்டு எடுக்கவே எண்ணினான். என்ன நடந்தது என்று தெரியாமல் அவனால் எதுவும் யூகிக்க முடியவில்லை. அவனை நச்சரித்தாவது அவனுடைய கடந்த காலத்தை பேச வைக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.

அகிலன் சிறிது யோசனைக்குப் பிறகு அவன் மன ஓட்டத்துடன் சேர்த்து நடைந்ததை கூற ஆரம்பித்தான்.

அன்று, சுற்றுலா முடிஞ்சு நேராக பேருந்து காலேஜுக்கு போனது. யாழினிக்கு கால் அடிபட்டு இருந்ததுனால அடுத்த நாள் யாழினி பர்மிஷன் போட்டு ஊருக்கு போறதா, அவள் தோழிகள் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அதை கேட்ட அகிலனின் மனம் அவளை பார்க்க துடித்தது.

அகிலனும் பசங்க கிட்ட ஒரு பைக் வாங்கிட்டு, பஸ் ஸ்டாப்ல இருந்து கொஞ்ச தூரத்துல வெயிட் பண்ணிட்டு இருந்தான். அவர்களுடைய கல்லூரி டவுனில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளி உள்ளது. கல்லூரியில் இருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கும் பேருந்து நிருத்தத்திற்கு அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்து வரும். அவள் ஹாஸ்டலில் இருந்து பேருந்து நிருத்தத்திற்கு வந்ததும், அகிலன் எதேச்சையாக வந்த மாதிரி காமிச்சுக்கிட்டு,
அவகிட்ட போய்," எதுக்கு இங்க நிக்குற? காலேஜ் போகல?" என்று கேட்டான்.

"இல்ல கால் கொஞ்சம் வலியா இருக்கு, அதான் ஊருக்கு போயிட்டு வரலாம்னு" என்றாள் யாழினி.

ஓ, அப்படியா! நான் டவுனுக்கு தான் போறேன். உனக்கு ஆட்சேபனை இல்லன்னா, ட்ராப் பண்றேன்?" என்றான் சாதாரணமாக , உள்ளுக்குள் அவளுடன் பைக்கில் போகும் சுவாரஸ்யத்தை நினைத்துக்கொண்டு.

ஆனால் யாழினி "தேங்ஸ் அகிலன், பைக்கெல்லாம் வேண்டாம். பரவாயில்லை பஸ்லியே போய்க்கிறேன்" என்று கூறிவிட்டு, பேருந்துக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

"பெரிய மகாராணி, இவங்களுக்கு தனியா பல்லக்கு வருமாக்கும்" என்று முணுமுணுத்துக்கொண்டே கோவமாக பைக்கை முறுக்கினான். ஒருபுறம் கேட்டவுடன் யாழினி விரவில்லை என்றால் யாருடனும் போகும் பழக்கம் இல்லாதவள் என்பது திருப்தி அளித்தாலும், மறுபுறம் ஓசி பைக், காலேஜ் பர்மிஸ்ஸன் அத்தனையும் வீணாவதை எண்ணி அகிலனுக்கு கடுப்பாக இருந்தது. வேகமாக போனாலும் சிறிது தூரம் சென்ற பிறகு, மனம் பொறுக்க மாட்டாமல் அங்கே ஒரு மரத்தின் மறைவில் நிறுத்திவிட்டு, மீண்டும் பேருந்து நிருத்தத்திற்கு வந்தான்.

"ஏன்? என்னாச்சு? நீ போகல ?" என்றாள் யாழினி.

"இல்ல. போகும்போது நீ என்ன திட்டினியோ தெரியல, டயர் பஞ்சர் ஆயிடுச்சு! அதனால தான் அங்கு மரத்தடியில் நிறுத்தி இருக்கிறேன். என் தலையெழுத்து நானும் பஸ்ல தான் வரணும் " என்றான். யாழினிக்கு உள்ளுக்குள் அவன் கூட வருவது சந்தோசமாக தோன்றினாலும், எதுவும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் உதட்டை சுளித்து காமித்துவிட்டு நின்றுகொண்டாள்.

அகிலன் மனதினில் ‘அழகுடி நீ, உன் உதட்டு சுழியில் சிக்கி தவிக்கிறேன்’ என்று எண்ணிக்கொண்டே, “ஊருக்கு போய்ட்டு எப்போ வர” என்றான்.

இப்போ அதை தெரிஞ்சு என்ன பண்ண போற. ” என்றாள் துடுக்காக.

திரும்பி வரும் போது மேள தாளத்துக்கு சொல்லி மாலை மரியாதையெல்லாம் பண்ணலாம்னு தான் கேட்டேன்.” என்றான் அகிலன் அவனின் பாணியில்.

அவனின் நக்கலை ரசித்தபடி “மேள தாளத்தோடு நிறுத்திக்கோ! அதுக்கு மேல தாலி...” என்று ஆரம்பித்தவள் ஏதோ தப்பாக கூறுகிறோமோ என்று எண்ணி மேலும் வார்த்தை வெளியில் வராமல் தடுக்க பற்களால் கீழ் உதட்டை கடித்துக்கொண்டாள்.

என்னது! என்ன சொன்ன? பார்த்து ரொம்ப கடிச்சு ரத்தம் வந்துற போகுது” என்று போகிற, வருகிற வண்டியை பார்த்துக்கொண்டே கேட்டான் அகிலன்.

பார்க்காத மாதிரியே பார்ப்பாங்க போல, இந்த கலைய எங்கதான் கத்துக்குவாங்களோ என்று எண்ணிக்கொண்டே ”அதெல்லாம் ஒண்ணுமில்லை, கால் வலி சரியானதும், நாலு நாள்ல வந்துருவேன். சரி, நீ காலேஜ்க்கு போகாம, டௌன்ல என்ன வேலை” என்றாள் அவனை பார்த்துக்கொண்டே.

’ஐயோ! எதை கேட்க கூடாதுன்னு நினைக்கிறமோ அதை தான் கேட்பாங்க போல், இதுக்கு என்ன சொல்லுறது’ என்று யோசித்துக்கொண்டே இருக்கும் போது பேருந்து வர ,’அப்பாடா தப்பிச்சோம்’, “யாழினி, பஸ் வருது பாரு ,அதவிட்டு என்னை பார்த்துகிட்டே இருக்க” என்றான் அகிலன்.

ஆமா, பெரிய ஆணழகன் தனியா சிக்கினா நல்லா வெச்சு கலாய்க்க வேண்டியது” என்று முணுமுணுத்துக்கொண்டே பேருந்து வந்ததும், கால் வலியால் தடுமாறியபடி ஏற முயல, இவள் அனுமதியின்றி பையை வாங்கிக் கொண்டு, கையையும் பிடித்து மேலே ஏற்றினான். பேருந்து நிலையத்தில் இல்லாமல் கல்லூரி நிறுத்தத்தில் ஏறியதால் சிறிது கூட்டமாகவே இருந்தது. நாகரிகம் கருதி இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக பேருந்து நிலையம் வரை சென்றனர்.

அங்கு இறங்கியதும் அவன் மல்லூர் போகிற பேருந்தை பார்த்து யாழினியை ஏற்றிவிட்டான். அவள் இருக்கையில் அமர்ந்த பின் குனிந்து அவளிடம் "யாழினி, நானும் கூட வரட்டுமா?" என்றான் அவள் காதோரம் மென்மையாக.

அவளுக்கு உள்ளுக்குள், அவனது வார்த்தை ஜில்லென்று தலைவரை ஏறியது, மனதிற்குள் ஏதோ ஒரு உருண்டை அழுத்தியது போல் கனத்தது. இதை சிறிதும் எதிர்பார்க்காத யாழினி முகம் சிவந்துபோய், என்ன சொல்வது என்று அவள் மூளை ஆணையிடுவதற்கு முன் உதடுகள் படபடக்க, தானாகவே அவள் பிறந்து வளர்ந்த வளர்ப்புமுறை, அவனை "வா" என்று அழைக்க மறுத்து, "அதெல்லாம் வேண்டாம். நான் பாத்துக்குறேன். அண்ணன் அங்க பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணுவாங்க." என்றாள் படபடவென்று.

அவன் பையை சீட்டில் வைத்துவிட்டு இறுக்கமான முகத்தோடு கிளம்பினான்.

யாழினிக்கும் மனதிற்குள் ’வரட்டுமான்னு கேட்டவனை, அப்போ வேண்டாம்னு சொல்லிட்டு இப்ப மனசு கடந்து அடிச்சுக்குது. இது என்ன மாதிரியான நிலைமை. என்னை எதுக்கு கேட்கணும்? பஸ்ல இருக்கிற 40 பேரும் என்னை கேட்டுட்டா வராங்க. உண்மையிலே வரணும்னு நெனச்சுருந்தா கேக்காமலே வந்துருக்கணும். பஸ்ல ஏறி உட்கார்ந்து இருந்தா, நான் என்ன பஸ்ஸே என்னுதுன்னா சொல்ல முடியும்’ என்று அவனை கடிந்துக்கொண்டாள்.

ஒரு பெண்ணோ/ஆணோ அவர்களுடைய மனது எப்பொழுதும் தன்னை அறியாமல் மனதிற்கு நெருக்கமான அன்புக்குரியவர்களையே குறை கூறும். தான் வார்த்தையால் வெளிக்கூறாதவற்றையும் அவர்களுடைய மனதிற்குள் புகுந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும். இங்கு யாழினியின் மனமும் அவ்வாறே எதிர்பார்த்தது.

காதலில் மௌனமும் சுகம்!


கன்னத்தின் முத்தமும் சுகம்!

காரணமேயில்லாமல் …


காதலனை திட்டுவதும் சுகமோ!


அகிலனுக்கோ, ’நான் கேட்டும், வர வேண்டாம்னு உன்னால் எப்படியடி சொல்ல முடிஞ்சுது. எனக்கு ஏன் ‘உன்னுடைய வேண்டாம்' என்ற வார்த்தை இந்த அளவுக்கு மனசை காயப்படுத்துகிறது. எனக்கு உன் மேல் இருப்பது காதலா இல்ல கிரஷ்ஷா என்று அவனையே கேட்டு கொள்ள, ’காதல்’ என்று அழுத்தமாக உரைத்தது அவன் ஆழ்மனது. ஒருபக்கம் தனக்கு ஏற்பட்ட மனமாறுதலை நினைத்து பூரிப்பாக இருந்தாலும், மறுபக்கம் அவளுக்கு நம்ம மேல ஒரு பெரிய அபிப்ராயம் இல்லையோ ’ என்றும் தோன்றியது.

ஒருத்தி ஒருவனுக்குள் ஊடுருவ, அவனுக்குள் விரும்பி கிடப்பதை உணர்ந்தால் போதும். அவளின் துடுக்கான பேச்சும், பாராமுகமும், ஆண்களிடம் அளவோடு நடந்து கொள்வதும், அவன் இதயம் அவளின் வசிப்பிடமாய் போனது . அவளே அறியாமல் அவனுக்குள் பரவிகிடந்தாள்.

பெண்ணின் காதல், தவம் இருந்து பெற்றால் மட்டுமே சுகம். அகிலனின் இந்த தவம், சுகத்தை தந்ததா? பின் வரும் தொடர்களில் காணலாம்.



தொடரும்…...
 
Last edited:
பவதாரினி சிஸ், யாழினிக்கு என்ன ஆச்சு என்று இந்த அத்தியாயத்திலும் சொல்லவில்லை, இப்போ என் தலைக்கு என்ன ஆகப் போகிறது என்று எனக்கும் தெரியவில்லை........???????‍♀️?‍♀️???
 
பவதாரினி சிஸ், யாழினிக்கு என்ன ஆச்சு என்று இந்த அத்தியாயத்திலும் சொல்லவில்லை, இப்போ என் தலைக்கு என்ன ஆகப் போகிறது என்று எனக்கும் தெரியவில்லை........???????‍♀️?‍♀️???
ஹா..ஹா.. அதற்கு இன்னும் சில அத்தியாயம் உள்ளது. சீக்கிரமே சொல்லிவிடுகிறேன் dear.. thanks for reading continuously .
 
ஹா..ஹா.. அதற்கு இன்னும் சில அத்தியாயம் உள்ளது. சீக்கிரமே சொல்லிவிடுகிறேன் dear.. thanks for reading continuously .
(y)(y)(y)
 
Top