Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிறுகதை வானவில் வரும் வாழ்வில் மீண்டும்-(1)

Advertisement

praveenraj

Well-known member
Member
சிறுகதை வானவில் வரும் வாழ்வில் மீண்டும்-(1)

"ஹே பதுமை, என்ன சாப்பிடுற?"

அவள் நிமிர்ந்து முறைக்க,

"எங்க உன்கூடவே ஒட்டிப் பிறந்த உன் அருமை தோழியைக் காணோம்?"

"மிஸ்டர்?"

"மிஸ்டர் எல்லாம் வேண்டாம். நீ மிஸ்ஸஸ் நிதின் பிரசாத் ஆனா மட்டும் போதும்"

"மைண்ட் யுவர் லேங்குவேஜ் மிஸ்டர். இன்னொரு முறை என்னைத் தொந்தரவு செஞ்சா நான் என் டி எல் கிட்ட கம்பளைண்ட் பண்ண வேண்டி வரும்"

"உன் உதடு தான் இப்படிச் சொல்லுதே ஒழிய உன் மனசு வேற சொல்லுதே"

"அறிவில்லை உனக்கு? எப்போடா எதாவது பொண்ணு இங்க வருவான்னு அலைவீங்களா? அதெல்லாம் நல்ல குடும்பத்துல பிறந்திருந்தா..." என்று முடிப்பதற்குள் அவளே அவள் இருக்கும் இடத்தை எண்ணி பேச்சை நிறுத்தினாள். பிரபலமான மென்பொருள் நிறுவனத்திற்குள் இயங்கும் கஃபேட்டேரியா அது. அதற்குள் அங்கே இருந்தவனின் உடல் அவமானத்தில் கூசி குறுகியது.

தான் சற்று ஓவர் ரியாக்ட் செய்துவிட்டோமோ என்ற எண்ணமே அவளுக்கு அப்போது தான் எழுந்தது. இதுநாள் வரை பலமுறை அவளை அவன் சீண்டி உள்ளான் தான். ஆனால் அப்போதெல்லாம் அவளுக்கு இவ்வளவு கோவம் வந்ததே இல்லை. உண்மையில் சொல்லப்போனால் அவளுக்கு அவன் பேச்சு உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பைத் தர தவறியதே இல்லை. ஆனால் இப்போது அவள் வேறு சில எண்ணங்களில் உழன்றிருக்க வேறொருவரின் மீதிருந்த கோவம் அவன் மீது பாய்ந்து விட்டது.

இப்போது அவன் நிலையைப் பற்றி யோசிக்கையிலே அவளுக்குக் குற்றயுணர்ச்சி பெருகியது. ஐந்து ஆண்டுகளாக இந்த மென்பொருள் நிறுவனத்தில் அவன் பணிபுரிகிறான் என்றும் ஒரு ஜென்டில் மேன் என்று சொல்லும் அளவுக்கே அவன் நடவடிக்கைகள் இருக்கும் என்றும் இங்கே வந்த இந்த ஓராண்டுகளில் அவளும் பலமுறை கேள்வி பட்டு விட்டாளே? அது போக மிக கண்ணியமாகவே தன்னிடம் பிரபோஸும் செய்தான். அவ்வபோது இதுபோல் அவளை விளையாட்டுக்குச் சீண்டிப் பார்ப்பான் தான். ஆனால் அப்போதெல்லாம் அவன் செயலுக்கு இவள் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்காத காரணத்தாலே இன்று வரை அதைத் தொடர்கிறான் என்றும் அவள் அறிவாள்.மிகச் சமீபமாக தங்கள் அலுவலகம் முழுவதும் அவளை அவனோடு இணைத்துப் பேசுகிறதே. அதற்கும் கூட அவள் எந்த ரியாக்சனும் செய்யாமல் தானே இருக்கிறாள்.
நம்மை விட வலியவர்கள் நமக்குக் கொடுக்கும் இன்னல்களுக்கான எதிர் வினைகளை நம்மை விட எளியவர்களிடம் தானே நாமும் காட்டுகிறோம். அப்போது நமக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? இதோ அந்த கௌரவ் மீது காட்ட வேண்டிய கோபத்தையும் வார்த்தையையும் நிதின் மீது தானே வீனஸால் காட்ட முடிந்தது.

"ஹே வீனு, உன்ன டி எல் கூப்பிடறாரு" என்ற தோழியின் அழைப்பில் எழுந்தவள் அங்கிருந்து செல்லும் போது அனிச்சையாக நிதினின் கேபினை பார்த்தவாறு சென்றாள். ஆனால் அவன் இருக்கை காலியாக இருந்தது. மேனேஜரின் அறைக்குச் சென்றவள் பத்ரிநாத் முன்பு நிற்க,

"வாங்க வீனஸ். இப்படித் தான் பப்லிக்ல ரியாக்ட் செய்விங்களா? நான் தெரியாம தான் கேக்குறேன், ஒருவேளை உங்களுக்கு அவனைப் பிடிக்கலைனா இந்த மூணு மாசமா உங்க பின்னாடியே வரானே அப்போ அவன் கிட்டச் சொல்லியிருக்கலாம் தானே? இல்ல இந்த ஆபிஸ் முழுவதும் உங்களையும் அவனையும் சேர்த்து கிண்டல் பேசும் போதாவது ரியாக்ட் செஞ்சு இருக்கலாமே? அவனுக்குனு இந்த ஆபிஸ்ல ஒரு மரியாதை இருக்குங்க, இதை நான் அவனோட ப்ரெண்டா சொல்லல. ஒரு கொலீகாவோ இல்ல தேர்ட் பெர்சனாவோ சொல்லுறேன். அவன் முகமே சரியில்ல... போங்க" என்றான் பத்ரி, நிதினின் நெடுநாள் தோழன்.
அப்போது நீண்ட நேரமாக கதவு தட்டப்படும் ஓசையில் கண் விழித்தவள் இதெல்லாம் கனவு என்று பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு குழப்பத்தில் தத்தளித்தாள். வெளியில் சுப்பு ரத்தினம் பதட்டத்தோடு கதவைத் தட்ட, அதைத் திறந்ததும் தான் அவர் முகத்தில் ஒரு நிம்மதி இழையோடியது.

"ஏன்மா இவ்வளவு நேரம்? குரலாவது கொடுத்திருக்கலாமே? நாங்க ரொம்ப பயந்துட்டோம்..." என்றதும்,

"அம்மா எங்க?" என்றாள் வீனஸ்.

அவரோ வீல் சேரில் பதற்றத்தோடு அமர்ந்திருக்க வேகமாக அவரிடம் சென்றவள் அவர் முன் மண்டியிட்டவள் அவர் மடியில் தலைவைக்க,

"என்ன மா? ஏன் இப்படி எங்களை பதட்டப்பட வெச்சுட்ட?" என்றதும்,

"இல்லமா. நைட் தூங்க லேட் ஆகிடுச்சு. அதான். சரி வாங்க உங்களை குளிப்பாட்டிட்டு நானும் ரெடி ஆகுறேன். ஆபிஸ்க்கு லேட் ஆகுது" என்று அவரை வீல் சேரோடு தள்ளினாள் வீனஸ்.

இதையெல்லாம் ஒரு கணவனாகவும் தந்தையாகவும் பார்த்துக்கொண்டிருந்த சுப்புவுக்கு மனம் வலித்தது. இருபத்தி ஏழு வயது முடிந்து இருபத்தி எட்டாவது வயதில் அடியெடுத்து வைக்க போகும் மகளுக்கு இன்னும் திருமணம் முடியாமல் இருப்பதே அவர் கவலை. அழகில் சிறந்த, வளம் பொருந்திய ஆகிய பொருள்களை உடைய லத்தீன் வார்த்தை தான் வீனஸ். நம்முடைய சூரிய குடும்பத்தில் கூட தனியே மிளிர்ந்து காட்சியளிக்கும் காரணத்தால் தான் அந்தக் கோளுக்கு வீனஸ்(வெள்ளி) என்று பெயர் சூட்டினார்கள். சமயங்களின் நாம் சூட்டும் பெயருக்கு துளியும் பொருத்தமில்லாமல் அவர்களின் வாழ்க்கை அமையும் தானே? அது போலொரு வாழ்க்கை தான் வீனஸுக்கும்.

எல்லோரும் தான் காதலிக்கிறார்கள். ஆனால் சிலரது காதலே திருமணத்தில் இணைகிறது. திட்டமிட்டபடி நடந்திருந்தால் இந்நேரம் வீனஸும் கணவன் குழந்தை என்று வாழ்ந்திருக்க கூடும் தான். திட்டமிட்டு ஏவப்படும் சந்திரயான் போன்ற செயற்கை கோள்களே சமயங்களில் தோல்வி அடையும் போது வாழ்க்கை மட்டும் திட்டமிட்டவாறே நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? அடுத்த நொடி என்ன நிகழும் என்று தெரியாத புதிர் தானே வாழ்க்கை?

அன்னையை குளிக்க வைத்தவள் அவருக்கு உடை மாற்ற,

"என்ன முடிவு பண்ணியிருக்க வீனு?"

"நான் முடிவே பண்ணல"

"அப்பறோம் ஏன் கண்ணெல்லாம் செவந்து இருக்கு?"

"ஏம்மா உங்களுக்குத் தெரியாதா? என்னால எதையும் மறக்க முடியல" என்னும் வேளையில் அவளையும் அறியாமல் கண்கள் கலங்க,

"நீ நிதினை விரும்புறனு சொன்னதும் நானோ அப்பாவோ எதாவது ஆட்சேபனை சொன்னோமா? இல்லையே. அடுத்தடுத்து நடக்க வேண்டியதைப் பத்தி தானே முடிவு எடுத்தோம். ஆனா அவனுக்கு இப்படி..." என்றவர் பேச்சை நிறுத்த, வீனஸின் உடல் அவளையும் அறியாமல் நடுங்கியது. அதை உணர்ந்துகொண்டவர்,

"ஐஞ்சு வருஷம் ஆச்சுடா கண்ணா. நாம சென்னை வந்தே நாலு வருஷம் ஆகப்போகுது. நாங்களும் நீ இப்போ மாறுவ அப்போ மாறுவனு காத்திருந்தோம். இனிமேல் முடியாது. நீ இன்னைக்கு சாயுங்காலம் அப்பா சொன்ன பையனை மீட் பண்ணு. அண்ட் நீயா ஏதாவது கதை சொல்லி அவனை சமாளிச்சிடலாம்னு நினைக்காத. நாங்க உன்னைப் பத்தி எல்லாமும் சொல்லிட்டோம். இதைச் சொன்னா வழக்கமான அம்மா போல உன்னை பிளாக் மெயில் செய்யுற மாதிரி இருக்கும். ஆனா இது உண்மை. உனக்கே தெரியும் எனக்கு என்னவோ அல்ஸைமர்ஸ் வியாதியாம். நான் எல்லாத்தையும் கொஞ்ச கொஞ்சமா மறந்துட்டு வரேன்னு டாக்டர் சொன்னார். இல்லைனா எப்படி நல்லா இருந்த நான் திடீர்னு பாத் ரூம்ல மயங்கி விழுந்து இப்படி காலை உடைச்சிருப்பேன் சொல்லு? எந்த பேரெண்ட்சும் கொடுக்காத சுதந்திரத்தை உனக்கு நாங்க கொடுத்தோம். கொடுக்குறோம். இந்த அஞ்சு வருஷத்துல எங்களால உன்னை பிளாக் மெயில் பண்ணியாச்சும் ஒருத்தன் கையில பிடிச்சு கொடுத்திருக்க முடியாதா? இப்போ உண்மையிலே எனக்கு முடியில கண்ணம்மா. ப்ளீஸ் டா"

அவரை உடைமாற்ற வைத்து வெளியே அழைத்துவந்தவள் தன்னைத் தயார் படுத்திக்கொள்ள உள்ளே சென்றாள். ஷவரை திறந்தவளுக்கு பழைய நிகழ்வுகள் எல்லாம் கண்முன்னே வந்து சென்றது.

இன்டெர்வியுக்கு தயாரான வீனஸ் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடத்திற்கு குறித்த நேரத்திற்கும் முன்பே வந்து விட்டாள். அவளுக்கு உடலெல்லாம் படபடப்பில் இருந்தது. இளநிலை படிப்பை முடித்ததும் வெளிநாட்டுக்குச் சென்று முதுநிலை படிக்க வேண்டும் என்பது அவளது நெடுநாள் கனவு. சிறுவயதில் இருந்தே ரத்தினத்திற்கு தன்னுடைய மகளை தன் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் அமரவைக்க வேண்டும் என்று ஆசை. அதற்கேற்றவாறே சிறுவயதில் இருந்து வீனஸை மனதால் அதற்குத் தயார் படுத்தினார். கணவரின் சொல்லுக்கு மறுப்பேதும் சொல்லாத பத்மினியும் மகளுக்கு அனைத்திலும் உறுதுணையாகவே இருந்தார். எதிர்பாராமல் நிகழ்ந்த அந்த மரணம் அவள் வாழ்க்கையை முற்றிலும் புரட்டிப்போட்டு விட்டது. இன்று இந்த வேலை அவளது அன்றாட பிழைப்புக்கு மிகவும் அவசியமாகிப்போனது. அவளுடைய அதீத படபடப்பைப் பார்த்த அந்த கோ ஆர்டினேட்டர்,

"மேடம், ரிலேக்ஸ். ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க? காமா போங்க. இன்டெர்வியூவுக்கு இன்னும் அரைமணிநேரம் இருக்கு. நீங்க நாலாவது மாடிக்குப் போய் ஒரு காஃபி குடிச்சிட்டு வாங்க. கஃபே திறந்திருக்கும். ஸ்மையில் ப்ளீஸ்..." என்று நகர்ந்தவனை கண்டவளுக்கு ஒருகணம் அது தன்னுடைய தந்தையாகவே தெரிந்தது. பின் நேராக நான்காவது மாடிக்குச் சென்றவள் அங்கிருந்த கஃபேவில் ஒரு காஃபீ வாங்கி திரும்பவும் போன் பேசிக்கொண்டே அங்கே வந்த நிதின் அவள் மீது மோதவும் சரியாக இருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த காஃபி முழுவதும் அவளது வெள்ளை உடையில் அபிஷேகமாகி இருந்தது.

"அறிவில்லை? கண்ணை பொடனியிலா வெச்சிட்டு வரீங்க? நான் சென்ஸ்..." என்றவள் அப்போது தான் அந்த காஃபியின் சூடை நன்கு உள்வாங்கினாள்.

'ஐயோ' என்றவள் அலற,

"வாங்க வாங்க" என்று அவளை வாஷ் பேசின் அருகே அழைத்துச் சென்றவன் அவள் உடலின் காஃபி சிந்திய இடத்தில் தண்ணீர் தெளிக்க முயல பின் சுதாரித்து,

"வாஷ் ரூம் அங்க இருக்கு..." என்று அறையைக் காட்டினான். அவள் உள்ளே சென்று வருவதற்குள் அவளது பைலை பார்த்தவனுக்கு அவள் இன்டெர்வியூவுக்கு வந்திருப்பது தெரிய தன்னுடைய கவனக்குறைவை எண்ணி தன்னையே திட்டிக் கொண்டான்.

வெளியே வந்தவளுக்கு அத்தனை ஆத்திரமாக இருந்தது. பின்னே கறை படிந்த இந்த ஆடையில் எவ்வாறு இன்டெர்வியூ அட்டென்ட் செய்வது என்ற கோவம் அவளுக்கு. அவனை நெருங்கியவள்,

"அறிவில்லை" என்று ஆரமிக்கும் முன்னே அவள் கரம் பற்றி இழுத்தவன் லிப்டில் ஏற்றி பார்க்கிங் லாட்டுக்கு அழைத்து வந்தான்.

"என்ன பண்ற நீ? விடுடா எனக்கு இன்டெர்வியூ இருக்கு"

"என்ன கறை நல்லதா?" என்ற அவன் கேள்வியில் புரியாமல் விழித்தவளுக்கு ஒரு எள்ளல் சிரிப்பை உதித்தவன் தன்னுடைய வண்டியில் ஏற்றிக்கொண்டு டிரஸ் ஷோ ரூமை தேடிச் சென்றான். அவன் நேரத்திற்கு அருகில் எந்தக் கடையும் இல்லாமல் போக அடுத்த ஐந்து நிமிடத்தில் ஒரு கடை முன் நிறுத்தியவன் அவளை கரம் பற்றி உள்ளே இழுத்துச்சென்று அவளுக்கு ஏற்ற சுடிதாரை தேர்ந்தெடுத்தான்.

அவள் மீண்டும் ஒரு வெள்ளை ஆடையைத் தேர்வுசெய்ய இவனே ஒரு கடல் நீல நிற உடையை எடுத்து அவளை அணிந்து வருமாறு சொல்ல பிறகு ஒரு பர்தாவையும் நீட்ட அவளோ அவனை முறைத்தாள்.

"நேத்து இங்க செம மழை. வழியெல்லாம் சேறு தேங்கி இருந்ததே பாக்கலையா? ஏதாவது லாரிக்காரன் சேறு அடிச்சிட்டா திரும்ப நான் தான் பொறுப்பாகனும். போங்க... அண்ட் நமக்கு டைம் இல்ல சோ சீக்கிரம் ரெடி ஆகுங்க வீனஸ்" என்று சொல்லி அவன் பணம் செலுத்த போக வீனஸும் உடை மாற்றி வந்தாள்.

இவர்கள் மீண்டும் அங்கே செல்வதற்குள் இன்டெர்வியூ தொடங்கியிருக்க தன்னுடைய இன்ப்ளுவென்ஸ் உபயோகித்து இரண்டாம் நபராக இருந்த அவள் பெயரை பின்னால் மாற்றி இருந்தான் நிதின். அவன் வேலைசெய்யும் நிறுவனம் தான் அந்த நேர்காணலை நடத்துகிறது.
மீண்டும் படபடப்போடு அவள் நகம் கடிக்க அவளுக்கு ஒரு ஜூஸுடன் வந்தவன்,

"முதல அந்த பர்தா போட்டுட்டு இதைக் குடிங்க" என்றதும் அவனை முறைத்தவாறே அவள் ஜூஸ் பருக, தன்னுடைய கவரில் இருந்து இன்னொரு ஆடையை எடுத்து தயாராக வைத்தான் நிதின்.

"யாரும் என்னைத் தட்டி விடாம இருந்தா எனக்கு சிந்தாம குடிக்க தெரியும் மிஸ்டர். இதனால எல்லாம் தப்பு உங்க மேல இல்லைனு ஆகிடாது" என்றவள் ஜூஸ் குடித்து முடிக்கவும் அவள் அழைக்கப்படவும் சரியாக இருந்தது. உள்ளே சென்றவள் சிறிது நேரத்தில் இன்முகத்துடன் வெளியேறினாள்.

அவள் வெளியேறியதும் ஏனோ அவள் கண்கள் நிதினைத் தேடியது. ஆனால் அந்த ஹாலில் இவளைப் போன்று நேர்முகத் தேர்வுக்காகக் காத்திருந்தவர்களே காட்சியளித்தனர். அவனைப் பற்றிக் கேட்கலாம் என்று நினைத்தாலும் அவன் பெயர் கூடத் தெரியாதே என்று சோர்ந்தாள் வீனஸ். அதற்கடுத்து நாட்கள் வேகமாக நகர்ந்தது. இதோ அந்த மென்பொருள் நிறுவனத்தில் தன்னுடைய முதல் நாள் அனுபவத்தை எதிர் நோக்கி உள்ளே நுழைந்தவள் நான்காவது மாடியில் இருந்த கஃபே நோக்கி நடந்தாள். அங்கே சென்றவளுக்கு அன்றைய தினத்தின் நிகழ்வுகள் அனைத்தும் கண் முன்னே வந்து மறைந்தது. உண்மையில் அன்று நிதினின் முகத்தை அவள் லிப்டில் செல்லும் வேளையில் தான் முழுவதுமாகப் பார்த்தாள். அலைபாயும் கேசத்தோடு கூர் நாசியுடன் இரண்டு நாட்கள் ஷேவ் செய்யாத மெல்லிய ரோமங்களுடன் சராசரிக்கும் சற்று உயரமாக சற்று பூசினாற் போல் இருந்தான்.

'கறை நல்லதா?' என்று அவன் கேட்ட தொனியில் அவளுக்கு உதடு வரை சிரிப்பு எட்டிப் பார்க்கவே செய்தது. இருந்தும் அன்றைய நாளின் படபடப்பில் அதை வெளிக்காட்டாமல் இருந்தாள். அதோடு அல்லாமல் மேலே கஃபேவில் அவளுக்கு உதவுகிறேன் என்ற பேர்வழியில் அவள் ஆடையில் கைவைக்க துணிந்து பிறகு அவளது முறைப்புக்கு ஒரு மெல்லிய முறுவல் செய்ததில் அவள் உண்மையில் சொக்கித்தான் போனாள். இதோ அதே இடத்தில் அதே காஃபியோடு சில வினாடிகள் நிற்க அவளுக்குப் பின்னால் இருந்தவரின் குரலில் நிகழ்வுக்கு வந்தவள் அன்று அமர்ந்த அதே மேஜையில் அமர்ந்தாள். உண்மையில் அவன் பெயர் கூட அவளுக்குத் தெரியாது. இப்போது எதற்காக இந்த இடத்தில் அமர்த்துள்ளாள் என்றும் அவளுக்குப் புரியவில்லை. ஆனால் தற்சமயம் அவளுடைய கவலைகள் எல்லாம் மறைந்ததைப் போல் ஒரு பிரக்ஞை(awareness, conscious என்று பொருள்). அப்போது தூரத்தில் ஒலித்த அந்தக் குரலில் தனிச்சையாகத் திரும்பியவள் காற்றில் அலைபாயும் அவன் கேசத்தைத் தான் முதலில் கண்டாள்.

"ஹே நிதின் உனக்கு ஓகே வா?" என்று அவனோடு வந்த ஒரு பெண் கேட்கவும் அவனது பெயரை அறிந்துகொண்டாள் வீனஸ். 'நிதின்' என்று உச்சரிக்கையில் அவளுள் ஒரு புதுவித மாற்றம் உண்டானது.

ஏதேதோ ஞாபகங்கள் தன்னைத் தாக்க ஷவரில் நின்று கொண்டிருந்தவளோ வெளியே அழைக்கப்பட்ட குரலில் தன்னிலை அடைந்து,

"வந்துட்டேன்பா. டூ மினிட்டிஸ்" என்றவள் வேகவேகமாக உடைமாற்றி வெளியேறினாள். நீண்ட நேரம் ஷவரில் நின்றிருந்தாலும் அவள் முகம் ஏனோ தெளிவடையாமலே இருந்தது. அவள் சமையல் அறையைக் கடக்கும் வேளையில் அங்கே இருந்த லஷ்மி அக்காவைப் பார்த்து,

"என்ன டிபன் லஷ்மிக்கா?"

"இட்லி புதினா சட்னி வீனு. சாப்பிடுவ தானே?" என்றவருக்கு ஒரு புன்னகை சிந்தி நகர அவள் அறை வாயிலில் ரத்தினம் நின்றுகொண்டிருந்தார்.

"என்னப்பா?"

"அது இன்னைக்கு ஈவினிங் மீட் பண்ணுற தானே? இல்லம்மா மாப்பிள்ளை வீட்ல சொல்லணும்" என்றவரிடம் ஏனோ கோபத்தையும் பிடித்தமின்மையையும் வெளிக்காட்ட மனமில்லாமல் தன் போக்கில் ஸ்டட் மாட்டிக்கொண்டிருந்தாள். அவர் இன்னும் அதே நிலையில் இருக்கவும்,

"மீட் பண்ணுறேன். ஆனா நான் பேசிட்டு தான் முடிவு சொல்லுவேன். என்னைக் கட்டாயப் படுத்தக்கூடாது" என்றதும் சுப்புவுக்கு மெல்லிய ஏமாற்றம் தோன்றினாலும் அவள் பார்க்க ஒப்புக்கொண்டதே பெரியதாகத் தெரிய உடனே இடத்தையும் நேரத்தையும் தெரிவித்தார். அதன் பின் காலில் சக்கரம் கட்டியது போல் ஓடியவள் ஆபிசில் ஒருவித குழப்பத்துடனே வலம் வந்தாள். also read part (2)
 
Top