Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சலசலக்கும் சொந்தங்கள்-அத்தியாயம்9

Advertisement

BelsyPrabhu

Active member
Member
சலசலக்கும் சொந்தங்கள்

அத்தியாயம் 9

அழைத்தவனுடன் அறையிலிருந்து வெளியே வந்து மாடிப்படியை அடைந்த பொழுது ஹாலில் இருந்த தன் வீட்டார் தன்னைப் பார்க்கவும், வேகமாக படிகளில் இறங்கினாள். அவர்களை நெருங்கி, “அப்பா, அம்மா, அப்பாயி, தாத்தா எல்லாரும் வந்திருக்கீங்களா, எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டு தன் அப்பாவின் அருகில் உட்காரவும், பீட்டர் வந்து, “வாங்க மாமா அத்த, நல்லாயிருக்கீங்களா தாத்தா அம்மாச்சி, இப்ப தான் வந்தீங்களா”.

ஆரோக், “வாங்க மாப்பிள்ள, இப்பதான் வந்தோம், உட்காருங்க, பாப்பா, மாப்பிள்ளைக்கு இடம் விடும்மா” எனக் கூறி நகர்ந்தமர்ந்தார். நிம்மியின் ஒருபுறம் தந்தையும் மறுபுறம் கணவனும் அமர்ந்திருந்தனர். தன் பிறந்த வீட்டு சொந்தங்கள் வந்திருப்பதை அறிந்து லீமாவும் தன் குடும்பத்தாருடன் இங்கு வந்திருந்தார். செல்லி, முன்பே தன் மூத்த நாத்தனார் வீட்டினரையும் இங்கு வரவழைத்திருந்தார்.

இராயப்பன் பொன்னுசாமியிடம், “சம்பந்தி, கிறிஸ்மஸ், நியூஇயருக்கு பேரனையும் பேத்தியையும் முறையா அழைக்கலாம்னு வந்திருக்கோம்”.

பொன்னுசாமி தாத்தா, “சந்தோஷம், சம்பந்தி, அனுப்பி வைக்கிறோம்”.

அந்தோணியம்மாள் பாட்டி, “அரையாண்டு லீவு விட்டவுடனே அனுப்பி வைச்சா நல்லாயிருக்கும்”.

ரோஸ்லின் பாட்டி, “அப்படியே செஞ்சுறலாம், சம்பந்தி” என்றவர், தன் மகளிடம், “கிரேஸ், எல்லாரும் சாப்பிட்டுதான் போகனும், வா நாம அங்க உட்கார்ந்து பேசலாம்”. உடனே கிரேஸ் கணவனையும், அத்தை, மாமாவையும் பார்க்க, அவர்கள் கண்கள் சம்மதத்தைத் தெரிவிக்கவும், தன் அம்மாவுடன் சென்றாள். இதைக் கவனித்த ரோஸ்லின், ‘என் மகள், அவர்கள் மருமகளாகவே இருக்கிறாளே, என் மகளா இல்லையோ’ என்று மருகினார். கிரேஸ் சென்றதும் லீமா தன் அம்மாவின் அருகில் அமர்ந்து பேச தொடங்கி விட்டார். நிர்மலா தன் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தவள் யார் கவனத்தையும் ஈர்க்காது எழுந்து தோட்டத்திற்கு சென்றாள். சில நொடிகளில் ஆரோக்கும் எழுந்து சென்றார். யார் கவனத்தையும் ஈர்க்காவிடிலும் அவளின் அம்மாவும் கணவனும் பார்த்தனர்.

சில நிமிடங்களில் உள்ளே வந்தவள் தனதறைக்கு சென்று விட்டாள். இடைவெளி விட்டு வந்த ஆரோக்கை, என்ன என்று கிரேஸ் கண்களால் வினவ, அவர் ஒன்றுமில்லை என தலையசைப்பதை பீட்டர் கண்டு திரும்பினால், ‘என்னவா இருக்கும், மருமக முகமே சரியில்ல, இவங்க கண்ணால பேசிக்கிறாங்க’ என நினைத்து ஆரோக்கியசாமியும் அவர்களைக் கவனிப்பதைப் பார்த்தான். அவரும் அவனைக் கண்டு கொண்டார்.

அவர் தன் மகன்புறமாக மெதுவாக சாய்ந்து, “மாப்பிள்ளைகிட்ட எதுவும் கேட்க முடியாது, ஏன்னா, அவர் மாப்பிள்ள மட்டுமில்ல சம்பந்தியும் கூட, திரும்ப எதும் பிரச்சனைன்னா வீட்டு ஆட்கள சமாளிக்க முடியாது, நீ மருமககிட்ட பேசு” எனவும் தலையாட்டி எழுந்து சென்றான்.

அறைக்குள் நுழைந்தால், அவள் இல்லை, சரி பால்கனியில்தான் இருப்பாள் என்று, பால்கனி கதவைத் திறக்க, நினைத்தது போல் அங்குதான் நின்றாள். சத்தம் போடாமல் மெதுவாக அவள் பின்னால் நின்று, “பஞ்சு மிட்டாய்” என்றான். திடீரென்று சத்தம் கேட்கவும், அவன் அழைத்தவிதம் உணராமல், ‘ஐய்யோ’ என்று பயந்து திரும்பினாள். அவள் பயத்தைக் கண்டு சிரித்தவன், “என்னடி, இப்படி பயப்படுற, கூப்டதானே செஞ்சேன்”, அவள், “திடீருனு சத்தம் கேட்டா பயப்பட மாட்டாங்களா” எனவும், “இங்க என்னதவிர யார் வரப் போறா, பயப்பட” என்றவன், அவளை நெருங்கி, முகத்தில் கிடந்த கூந்தலைக் காதில் செருகவும், நெளிந்தவளை கைப்பிடித்து அறைக்குள் அழைத்து வந்தவன் அங்கிருந்த கம்பியூட்டர் சேரில் அமர்ந்து அவளை மடியில் உட்கார வைத்தான். அவள், “நான் உட்காரல, நிக்குறேன், உங்களுக்கு கால் வலிக்கும்” என்றுரைத்து எழ போக, அவன் இறுக்கி பிடித்து கடுப்பாக, “உனக்கு பிடிக்கலன்னா சொல்லு நா விட்றேன், அதுக்காக எனக்கு காலு வலிக்கும், கை வலிக்கும்னு சொல்லி எஸ்கேப் ஆகாத”. அவள் எப்படி சொல்லுவாள், அவளுக்குதான் பிடித்திருந்தே. அமைதியாக இருந்தாள். இப்பொழுதெல்லாம் சுவாதீனமாக அவன் கைப்பிடித்து, அருகில் நெருங்கி அமர்ந்து பேசுவது நடக்கிற ஒன்றுதான்.

அவள் அமைதியாக இருக்கவும், இதுதான் சாக்கென்று அவள் கழுத்தில் முகத்தைப் புதைத்துக் கொள்ளவும், அவள் நெளிய ஆரம்பிக்க, மேலும் அழுத்தி கொள்ள, அவள்பாடுதான் திண்டாட்டமானது. சிறிது நேரத்தில் எழுந்தவன், “எல்லாரும் ஹால்ல இருக்கும் போது, நீ மட்டும் ஏன்டி இங்க வந்த, இதுக்குதானா”.

அவனை முறைத்தவள், “நான் ஏதாவது பண்ணினேன், நீங்கதானே”.

பீட்டர், “நான் என்ன செய்தேன், சும்மா இப்படி சாஞ்சு இருந்தேன்” என திரும்பி சாய்ந்தெழவும், அவள் திரும்ப முறைப்பதைக் கண்டு, கிண்டலாக, “ஊர்லே இருந்து என் மாமனாரு வந்திருக்காக, மாமியாரு வந்திருக்காக, மற்றும் தாத்தா, அம்மாச்சி எல்லாம் வந்திருக்காக, என் பொண்டாட்டி ரொம்ப சந்தோஷமா இருக்கிறதால ஸ்வீட் எடுத்து கொண்டாட போறேன்”.

நிம்மி நக்கலா, “ரூம்ல ஸ்வீட்டெல்லாம் இல்ல, கீழ போயி பாருங்க” என்றாள் அவள், “நா ஏன் ஸ்வீட்டுக்கு அலையனும், அதான் இங்க இருக்குல” எனக்கூறியவன், அவள் எங்க இருக்குனு சொல்றாங்க என்று கண்களால் தேடுவதைக் கண்டு சிரித்து, அவள் இதழை பிடித்து, ”இதுதான் ஸ்வீட்” என்று விட்டு ஸ்வீட்டை சாப்பிட தொடங்கவும், அவள் விலக, அவன் இழுக்க, பின் கணவனுடன் ஒன்றிப் போனாள்.

மெய் மறந்திருந்தவர்கள் சிறிது நேரத்தில் உணர்வுக்கு வந்தவுடன், “நம்மள யாரும் தேடுறதுக்கு முன்னாடி கீழ போகலாமாமா….” என்றவனிடம் “உங்க அம்மா என்ன ஒரு வழி செய்ய போறாங்க, நான் முன்னாடி போறேன், நீங்க பின்னாடி வாங்க” என்று விட்டு வேகமாக அறையிலிருந்து வெளியேறினாள். அவள் கிட்சனுக்கு செல்லவும், செல்லி, “எங்க போயிருந்த, எல்லாரையும் சாப்பிட அழைச்சுட்டு வா”.

அவள் சென்று அனைவரையும் அழைத்து வந்து, அவர்களும் உண்டு, திரும்பவும் ஒரு முறை வீட்டிற்கு வர அழைத்து விட்டே சென்றிருந்தனர். செல்லும் போது மாப்பிள்ளை பொண்ணை மட்டும் இல்லாமல் அனைவரும் வர வேண்டும் என சொல்லியே விடைப்பெற்றிருந்தனர்.

அவர்கள் சென்றதும், ஹாலில் இருந்த பொன்னுசாமி தாத்தா, “நிம்மிம்மா, கோவிச்சுக்க மாட்டினா, ஒன்னு கேக்கனும், கேக்கவா”

நிர்மலா, “அதெல்லாம் செய்ய மாட்டேன், சொல்லுங்க”

அங்கிருந்த வீட்டினர் அனைவரும் தாத்தாவைப் பார்க்க, அவர் நிம்மியிடம், “என்னம்மா பிரச்சனை, உன் அப்பாட்ட முகத்த தூக்கி வெச்சுட்டு இருந்த” என்றுரைக்க, ஆரோக்கியசாமி பீட்டரை பாக்க, அவன் திரும்பினால் தானே. பின்ன நான் என் பொண்டாட்டிகிட்ட கேட்க போன விஷயத்தை விட்டு வேற வேல செய்தேன்னா சொல்ல முடியும்.

நிர்மலா, “அது… அவர் நா செய்த ஒரு செயல் தப்புன்றாரு, நான் ஒத்துக்கல, அதான் பிரச்சனை, பெருசா ஒண்ணுமில்ல, அதாவது, நாங்க, கிராமத்துல விவசாயம் மட்டும் பாக்கல, கூடவே இரண்டு ரைஸ் மில்லு இருக்கு, அண்ணன் வெளிநாடு போகவும், அங்க சில சூப்பர் மார்கெட் ஆளுங்ககிட்ட ஆர்டர் வாங்கி, தினைவகைகளை ஏற்றுமதி செய்றோம். அப்ப லோக்கல்லயும் கான்ட்ராக்ட் அடிப்படையில கொடுப்போம், அதுல தான் எனக்கும் அப்பாக்கும் பிரச்சனை”.

ஜென்னி, “நிம்மி, சித்தப்பாக்கு தெரியாததா, நீ எதுக்கு அதுலெல்லாம் தலையிடுற”.

நிர்மலா, “அக்கா, நீங்க என்ன என்னெனு நெனைச்சீங்க, நா, என் அண்ணன் எல்லாம் படிக்கும் போதே, எங்க அப்பாவுக்கு ஹெல்ப் பண்ணுவோம், சொல்லப் போனா எக்ஸ்போர்ட் லைசன்ஸ் என் பேர்லதான் இருக்கு, நம்ம வீட்டுக்கு வரதுக்கு முன்னாடி நான்தான் அத முழுசா பாத்துகிட்டேன், இங்க வந்ததுக்கு அப்பறம்தான் அங்க போறதில்ல”.

ஆரோக்கியசாமி, “நீ அங்க போறதில்லனு சொல்ற, ஆனா அதுலதான் பிரச்சனைனு சொல்ற, தெளிவா சொல்லும்மா”.

நிர்மலா சம்பந்தம் இல்லாமல் திடீரென தன் பெரியம்மாவைப் பார்த்து விட்டு திரும்பி, “மாமா, எக்ஸ்போர்ட் செய்யக் கூடிய தினைவகைகளை உள்ளூர் சூப்பர் மார்க்கெட்க்கு விற்போம், அப்படி ஒருத்தவங்க தொடர்ந்து சரக்கு எடுத்துட்டு செட்டில்மெண்ட் கொடுக்கல, எங்க கல்யாணத்துக்கு முன்னாடி அக்கௌண்ட்ஸ் பாத்துட்டு அவங்களுக்கு சரக்கு அனுப்ப வேணாம்னு நம்ம எக்ஸ்போர்ட் இன்சார்ஜ்கிட்ட சொல்லியிருந்தேன், அவரும் கொடுக்கல”.

பேட்ரிக், “அவ்வளவுதான பிரச்சனை முடிஞ்சதே”

பீட்டர், “டேய், அவள முழுசா பேச விடு, நீ கன்டினியூ பண்ணு நிம்மி”.

நிம்மி, “இப்ப திரும்பவும் அவங்க அப்பாட்ட பேசி, சரக்கு கேட்கவும், இன்சார்ஜ் எனக்கு போன் பண்ணினாரு, ‘நா அவர்கிட்ட தன்மையா பேசி அனுப்பிருங்க, சரக்கு கொடுக்காதீங்கனு’ சொல்ல, அவரும் அப்படியே செய்துட்டார், ஆனா..”.

செல்லி, “என்ன ஆனா, ஆவன்னானுட்டு, விஷயத்தைச் சீக்கிரம் சொல்லு”.

நிர்மலா, “அவங்க நம்ம ஜென்சி அக்கா ஹஸ்பென்ட்டோட அண்ணன், அதுதான் பிரச்சனை, அவங்க, ஜென்சி அக்கா பத்தி பேசி, நாங்க உங்க சொந்தம்னு சொல்லிதான், சரக்கு கேட்டு இருக்காங்க, நா பண்ணத வைச்சு ஜென்சி அக்காக்கு ஏதாவது பிரச்சனை ஆகிருமோனு, அப்பா என்ட்ட சண்ட போடுறாங்க”.

பேட்ரிக், “பிஸ்னஸ் வேற, சொந்தம் வேற, ஆக்சுவலா, இதனால பிரச்சனை வந்தா அத ஜென்சிதான் சமாளிக்கனும், அதுக்கு நீ பொறுப்பில்ல”.

அக்ஸிலீயா, “நீ இவ்வளவு பொறுப்புனு தெரியல, அதவிட யாரும் சொன்னா நம்பவும் மாட்டாங்க” என்றுரைக்கவும், அனைவரும் சிரிக்க, இவள் முறைக்க, அவர் தொடர்ந்து, “பேட்ரிக் சொன்னது சரிதான், ஆமா, நீ இந்த மே மாசத்துல தான படிப்ப முடிச்சதா கேள்விட்டேன்”.

பீட்டர் இடைபுகுந்து, “அத்த, கடைசி செமஸ்டர்ல இருக்கவங்களும் டி.ஆர்.பி. எழுதலாம், அதான் நிம்மி, அதுல பாஸ் பண்ணி டிகிரி செர்டிபிகேட் வரதுக்கு முன்னாடியே வேல வாங்கிட்டா, அடுத்து படிக்கும் போதே மாமாக்கு ஹெல்ப் செய்றேனு, ரைஸ் மில்லையும் கூட பாத்துக்குவாங்க, இவளும், இவ அண்ணனும்”.

ரோஸ்லின் அப்பாயி, “ம்ம்ம்…பீட்டரு, பொண்டாட்டிய பத்தி நல்லா தெரிஞ்சு வச்சுருக்கடா, சேலையில முடிஞ்சுட்டாளா” எனக் கேட்கவும், ‘இந்த அம்மாச்சிய என்ன செய்யனு’ நிம்மி பார்க்க,

பொன்னுசாமி தாத்தா, “என் பேத்தின்னா சும்மாவா, நாங்க எல்லாம் யாரு”.

ரோஸ்லின் அப்பாயி, “அதுனால தான கேக்குறேன், இவளுக்கு எப்படி இவ்வளவு சாமர்த்தியம் இருக்குனு”.

நிர்மலா, “தாத்தா, இந்த அம்மாச்சி, ஒரு பார்ம்ல இருக்காங்க, வாய கொடுத்து மாட்டீக்காதீங்க, சொல்லிட்டேன்” எனவும் அனைவருக்கும் சிரிப்பு வந்தது.

செல்லி, உண்மையில் நிர்மலா கிராமத்து படிக்காத பெண், தன் படித்த வெளிநாட்டில் வேலை பார்த்த மகனுக்கு பொருத்தமில்லாதவள் என்று நினைத்திருக்க, அவளை பற்றி தெரிய வந்தவைகள் அனைத்தும் அவருக்கு மகிழ்ச்சியையே தந்திருந்தது. இவள்தான் சரியான பொருத்தம் எனவும் நிம்மதியடைந்தார்.

ஒருநாள் இரவு பீட்டர், “ஹே, குட்டிமா, நாளைக்கு உங்க வீட்டுக்கு போயிருவியா?”.

நிம்மி, “என்ன போயிருவியா? சார், என்ன பண்ணப் போறீங்க”

அவன், “நான் கிறிஸ்மஸ்க்கு முந்தின நாள் வரேன், நீ முன்னாடியே போய் உங்க வீட்ல ஜாலியா இரு”.

அவள் அவனை ஒரு பார்வைப் பார்த்து, “அது கிராமம், தனியா போய் நின்னா நல்லாயிருக்காது, நீங்க வந்தா நாளைக்கு, இல்ல எப்ப உங்களுக்கு வசதிப்படும்னு சொல்லுங்க, அப்ப போயிக்கலாம்”.

‘என்ன சொல்வானோ’ என்று டென்ஷனானாள். மறுவீட்டுக்கு போய் வந்தவர்கள், அதன் பிறகு இப்போது தான் போகப் போகிறார், இவன் இப்படி சொல்லவும் முகமே செத்து விட்டது அவளுக்கு.

அவள் முகத்தைப் பார்த்தவன், அருகில் நெருங்கி அவளை அணைத்துக் கொண்டு, “யார் வீட்லயும் போய் தங்கினது இல்லையா, அதான் யோசிச்சேன், இனி மேல் அதையும் பழகிக்கிறேன். உனக்கு நா கூட வரனும் அவ்வளவுதான வந்துட்டா போச்சி” எனவும் அவள் முக மலர்ச்சியைக் கண்டு, “எனக்கு ஸ்வீட் சாப்பிட மூட் வந்துடுச்சி” எனக் கண்ணடித்து ஸ்வீட்டை சாப்பிட்ட பிறகே விடுவித்தான்.

அடுத்த நாள் காலையிலே, தன் லக்கேஜ் உடன் இறங்கியவள் செல்லியிடம், “அத்த, நான் ஸ்கூல்ல இருந்து அப்படியே எங்க வீட்டுக்கு போயிடுறேன், வரட்டுங்களா” என்றுரைக்க, செல்லி, “பாத்து பத்தரமா போயிட்டு வாங்க, பீட்டரும் ஆபிஸ்லே இருந்து அங்க வரதா தான் சொல்லியிருந்தான், வீட்ல எல்லாரையும் விசாரிச்சேன்னு சொல்லு”.

“சரிங்கத்த” என்றவள் கிளம்பியிருந்தாள். அப்போது அங்கு வந்த அவளது மாமியார், “என்ன செல்லி, அப்படியே நின்று கனவு காண்றீயா?”

செல்லி, “இல்லத்த, நிம்மி, சாயங்காலம் ஸ்கூல இருந்து வீட்டுக்கு போறேன்னா, அதான்…”

செல்லி மாமியார், “அதான் நமக்கு முன்னாடியே தெரியுமே”.

செல்லி, “நம்ம வீட்ல எப்பவும் ஒரு அமைதி இருக்கும், இவ வந்த பிறகு தான் வீட்ல பேச்சு சத்தமே கேட்குது, இவ இல்லன்னா வீடு, வீடு மாதிரியே தெரிய மாட்டேங்குது, அததான், யோசிச்சேன்”.

இவர்கள் பேசியதைக் கேட்டபடி வந்த பீட்டர், “அம்மா, மருமக மேல பாசமழை பொழியிறீங்க போல, கொஞ்சம் இந்த பக்கமும் கருணைக் காட்டுங்க”.

செல்லி அவனையே தான் பார்த்திருந்தார், ஏனெனில் இவ்வாறெல்லாம் அவன் அவரிடம் இப்படி சகஜமாக பேசியதே இல்லை, ‘இப்படியெல்லாம் பேசுவானா, நமக்கு தான் நம்ம பிள்ளை பத்தி தெரியலையோ’ என வருந்தினார்.
 
Top